சிறுகதை – நெருப்பு

‘பெக்கான் லாமா’ மணியம் வெண்மை படிந்திருந்த அவனது நாக்கை வெளியே நீட்டிச் சீன கடைக்கு வெளியே மேசைகளை அடுக்கிக் கொண்டிருந்த தவுக்கானிடம் காட்டிவிட்டு ‘கீகீகீகீ’ எனக் கத்திக் கொண்டே சாலையின் மறுபக்கம் தெரிந்த சந்தில் நுழைந்து ஓடினான். அந்தக் குறுகலான பாதைதான் ஜாலான் பெக்கான் லாமா. அங்குள்ள  குடியிருப்புப் பகுதிப் புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டி வாழ்பவர்களின் இடம். வீட்டின் பின்பகுதிகளை வரிசையாக அலங்கரித்து நின்ற இருப்பக்கத் தகர வெளிக்கு நடுவே ஓர் இருளில் புதைந்திருக்கும் சாலையில் மணியம் எங்குப் படுத்தாலும் யாரும் கண்டுகொள்ள வழியில்லை.  தவுக்கானிடம் சாப்பாடு கேட்டு வெகுநேரம் கத்திக் கொண்டிருந்துவிட்டு பொறுமையிழந்து  நாக்கை வெளியே காட்டிப் பழித்துவிட்டு மீண்டும் பசியுடன் அச்சிறிய சாலையின் இருளுக்குள் ஓடிவிட்டான். அவன் நகரத்தில் இப்படித்தான் சுற்றியலைந்துவிட்டுத் தன் ஒட்டுமொத்த வெறுமையையும் ஒரு பாவனையாக வெளிப்படுத்திவிட்டு ஓடிவிடுவான். அப்பொழுதுதான் சாப்பாட்டுக் கடை  திறந்து அரை மணி நேரம் ஓடியிருந்தது.

தவுக்கான் கடைக்கு வெளியே வாசலில் தோரணம் போல வரிசை பிடித்திருக்கும் பெருநாள் அலங்கார விளக்குகளில் எரியாமல் இருக்கும் விளக்குகளை நோட்டமிட்டான். அவ்விளக்கைச் சுற்றி இருக்கும் சிவப்புக் காகித அட்டை கம்பியால் பின்னப்பட்டிருக்கும். ஏணியை எடுத்து அதற்கு மேலே நடுவில் கையைவிட்டு விளக்கைச் சுழற்றி வெளியில் எடுத்து மாற்றிவிட நினைத்தான். அப்பொழுதுதான் வினோத் கடைக்கு வெளியே மணியத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருப்பதைத் தவுக்கான் பார்த்தான். ஏதோ திட்டி அவனை உள்ளே கடைக்குள் விரட்டினான்.

வினோத் கடைக்குள் வந்து நாற்காலியில் அமர்ந்து கொண்டான். ஆச்சி கடை மெல்ல உயிர்ப்படைந்து கொண்டிருந்தது. தவுக்கானின் முகத்தில் திட்டுத் திட்டாக வெள்ளை படர்ந்திருக்கும். அது வினோத்திற்கு ஓரு ஓவியம் போலக் காட்சியளிக்கும். தவுக்கான்  பேசும்போது மூக்கு அதிரும். வார்த்தைகளை உடனே அடுக்கிப் பேசமாட்டான். உளறி உளறி அதனுள் சரியான சொல்லினைத் தேர்ந்தெடுத்து மலாய்மொழியில் அவன் பேசும்போது வேடிக்கையாக இருக்கும். ஆச்சியைப் போலச் சரளமான மலாய்மொழிப் பேச்சு அவனுக்கில்லை என்பதாலே சுராயாவிடமோ வினோத்திடமோ “ஓய்ய்ய்ய்! ஓய்ய்ய்ய்க்க்க்க்!” என அதட்டி ஒலி மட்டுமே எழுப்புவான். அப்படி ஒலி எழுப்பும்போது அவனுடைய இயலாமை கண்களில் குரூரமாக மாறியிருக்கும். சொல்லத் துடித்து வெளியே வராமல் போகும் சொல்லின் காத்திர மிகுதி அது.

ஆச்சி கடையைச் சுற்றி நான்கு சிறிய கடைகள் வைத்திருப்பவர்களும் தங்களின் வியாபாரத்தைத் துவங்க ஆயத்தமாகிக் கொண்டிருந்தார்கள். கையடக்கத்திலான சிறிய டப்பாவில் பச்சை மிளகாயை வெட்டி அதனுள் கிச்சாபை ஆச்சி ஊற்றிக் கொண்டிருந்தார். பின்னர், வினோத்தான் அதனை ஒவ்வொரு மேசையின் நடுவிலும் வைக்க வேண்டும். அவனுக்கான வேலை இன்னும் சிறிது நேரத்தில் துவங்கிவிடும் என்பதால் வேடிக்கையை விரிவுபடுத்தினான்.

சரோஜா அக்கா மீ கோரேங் பிரட்டுவதற்கு அடுப்பைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார். வினோத் கருஞ்சட்டிக்குக் கீழ் ஊசலாடிக் கொண்டிருக்கும் நெருப்பையே வெகுநேரம் கவனித்துக் கொண்டிருந்தான். சுராயா அவனை வழக்கமான இடத்தில் உட்காரும்படி கூறிவிட்டுப் குழாயடிக்குப் போய்விட்டாள். அவன் ஐந்து நிமிடம் அங்கு அமர்ந்திருப்பான், பின்னர் ஆச்சி கூப்பிட்டால் போய்விட வேண்டும். அதுவரை ‘கொய் தியோ’ சமைத்துக் கொண்டிருக்கும் ஆ மேங் தாத்தா நெருப்பையும் சட்டியையும் கொண்டு இலாவகமாக விளையாடும் அதிசயத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். அந்நெருப்பைக் கவனிப்பது அவனுக்கு வாடிக்கை. சட்டியிலுள்ள கொய் தியோ எகிறிக் குதித்து நெருப்புடன் விளையாடிக் கொண்டிருந்ததை உன்னிப்பாய்க் கவனித்தான். சட்டியை ஆ மேங் தாத்தா தூக்கி அதனுள் இருக்கும் கொய் தியோவை மேலெழும்ப வைத்து நெருப்பைச் சுற்றிச் சட்டியை வட்டமிட்டு மீண்டும் அடுப்பில் வைக்கும்போது ஓர் ஆச்சரியமான நடனம் முடிவடைந்ததைப் போன்று இருக்கும்.

இந்த நகரத்தில் கொய் தியோ உணவை இலாவகமாகச் சமைப்பவர்கள் பெரும்பாலும் இரண்டாம் தலைமுறைச் சீனர்கள் வந்துவிட்டார்கள். கெப்பிட்டல் திரையரங்குத்துக்குப் பின்னால் சாலையோர வண்டியில் மிகப் பிரபலம் வாய்ந்த சுவையான கொய் தியோ சமைத்துக் கொண்டிருந்த தொப்பைக் கிழவன் இறந்ததும் அவனுடைய மகன் சமைக்கும் கொய் தியோவில் அந்தப் பழைய ருசி இல்லை என்று பலரும் அங்கிருந்து ஆ மேங் தாத்தாவின் கைப்பக்குவத்தைத் தேடி இங்கு வந்துவிட்டார்கள் என்பதால் எப்பொழுதும் ஆச்சி கடையில் கூட்டம் அலைமோதும். இவருக்கும் எப்படியும் எழுபது வயதிருக்கும் என்று சுராயா சொல்லி வினோத் கேட்டதுண்டு. அதே போலச் சரோஜா அக்காவும் முன்பு கம்பத்தில் இட்லிக் கடை வைத்திருந்தவர். பக்கத்தில் இருந்த தொழிற்சாலை ஒன்றில் நிறைய தமிழர்கள் வேலை செய்ததால் காலையில் பசியாறைக்கு அவரது இட்லிதான் அவர்களுக்கு விருந்து. ஆனால், நிலப்பிரச்சனையில் அத்தொழிற்சாலை அடைப்பட்டதும் சரோஜா அக்காவின் வியாபாரம் படுத்துக் கொண்டது. பிறகுதான் ஆச்சி கடையில் வாடகைக்கு இடம் பிடித்து இப்பொழுது இந்தியர்களின் வரவையும் இக்கடைக்கு ஊக்கப்படுத்த ஓயாமல் மீ கோரேங் பிரட்டும் கைப்பக்குவத்திற்கு மாறிவிட்டார்.

வினோத்தின் அழுப்பு ஆ மேங் தாத்தாவின் உற்சாகத்தைப் பார்த்ததும் மெல்ல மறைந்துவிடும்.  அவனுடைய விளையாட்டுகள் ஆரம்பிக்க இன்னும் சில நிமிடங்கள் மட்டுமே மிச்சம் இருந்தன. நாற்காலியிலிருந்து எழுந்து கடையெங்கும் பரவியிருந்த கரண்டியும் குச்சியும் போடும் சத்தங்களைக் கூர்ந்து கேட்டான். சத்தம் அலையலையாய்க் கூடியும் சிறுத்தும் எழும்பி அவ்விடத்தை ஒரு சீன கூத்திற்குள் ஆழ்த்திக் கொண்டிருந்தது. முகமெல்லாம் வெள்ளைப் பவுடர் பூசிக் கொண்டு குறுக்கு வெட்டான நீள்தாடி வைத்திருக்கும் ஒருவர் கையில் பெரிய வட்டமான சிங்குச்சாவைக் கொண்டு வந்து இரண்டையும் ஒன்றோடொன்று இடித்து எழுப்பும் கூத்தின் இசையைப் போலக் கடை மாறிக் கொண்டிருந்தது என வினோத் நினைத்துக் கொண்டான். பெரும் பரபரப்பான சாலையோரத்திலுள்ள கடை. வாகனங்களின் ஹார்ன் சத்தமும் எப்பொழுதும் உடன் இசைத்துக் கொண்டே இருக்கும். எல்லாவற்றுக்கும் மத்தியில் கிறங்கிக் கொண்டிருக்க, அதற்குள் நான்கு அழைப்புகள் ஆச்சியிடமிருந்து வந்துவிட்டன.

வரிசை பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்த குண்டு விளக்குகளின்  சூட்டால் முகத்தில் ஒழுகத் துவங்கிய வியர்வையை ஆள்காட்டி விரலால் வழித்து மீண்டும் அவ்விளக்குகளை  நோக்கி உதறினான். பின்னர், அந்த விளக்குகளின் உள்ளே எரியும் மஞ்சள் ஒளியைக் கவனித்தான். அதுவும் ஒரு நெருப்பைப் போலத் தெரிந்தது. கடைக்குள் இடம்போதாதால் கடையை விரிவாக்கி வெளியிலும் மேசைகள் போடப்பட்டிருந்தன. ஆச்சி இம்முறை வேகமாகக் கத்தினாள். ஆள்களின் பேச்சொலிகளும் தலைக்கு மேல் இருக்கும் வெற்றிடத்தில் விசிறிக் கொண்டிருக்கும் காற்றாடிகளும் ஆ மேங் தாத்தாவின் சட்டி போடும் ஆர்பாட்டமும் என அனைத்தையும் தாண்டி இடைஞ்சல்களுக்கு மத்தியில் சுருண்டு சரியாக வினோத்தின் காதில் ஒலித்தது.

மேரி ஒரு கையில் ‘கொய் தியோ’ சூப்பையும் இன்னொரு கையில் ‘ஜப்பனிஸ் தவ்வையும்’ எடுத்துப் போகையில் ஏற்பட்ட சமன்நிலை தடுமாற்றத்தால் ‘கொய் தியோ’ சூப் இலேசாக ஊற்றி அது தரையில் வடிந்தது. அதை ஆச்சி பார்க்காததால் மேரி அக்காள் தப்பித்தாள். வினோத் ஓர் இராணுவ வீரன் தனது மேல் அதிகாரியின் முன் நிற்கும் நிகரான தோரணையில் ஆச்சியின் முன்போய் நின்றான். கையில் வைத்திருந்த ஈரத்துணியுடன் ஆச்சி முறைத்துக் கொண்டிருந்தாள். இருளடைந்த இரண்டு குண்டு விளக்குகள் அவளுடைய இரு கன்னங்களாகத் தொங்கிக் கொண்டிருந்ததையும் வினோத் கவனித்தான். அதை ஓங்கி அடித்தால் சட்டென எரியும் என்றும் யூகித்துக் கொண்டான். ஆச்சியின் சுருள் முடி விறைத்திருந்தது. அந்த முடிக்கற்றுகளின் விளிம்பில் வண்ண வண்ணக் கிளிப்புகளைக் கொண்டு அலங்கரித்திருந்தாள். அது வினோத்திற்கு நகைப்பை உண்டு செய்து கொண்டிருந்தது. வேடிக்கை பார்ப்பதும் கற்பனை செய்வதும் அவனுக்கு யாரும் கற்றுக் கொடுக்காத திறன். அவள் அதட்டும்போது முகத்திலுள்ள அனைத்து உறுப்புகளும் கழன்று விழுவதைப் போலக் குலுங்கி அதிர்ந்தன.

“பெர்கி புவாட் கெர்ஜா…!” என்கிற அவளுடைய வழக்கமான கட்டளை அக்கடைக்கு வந்த வாடிக்கையாளர்களைப் போல ஆர்ப்பரித்து அடங்கி எங்கேயோ போய் அமிழ்ந்தது. வினோத்திற்குத் தெரிந்த மலாய் வார்த்தைகளில் அவையே மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தன. யாராவது மலாயில் ஏதாவது திட்டினாலும் உடனே “பெர்கி புவாட் கெர்ஜாலா!” எனச் சிரித்துக் கொண்டே பதில் சொல்வான். ஆச்சி அக்கடையில் வேலை செய்யும் யாவரிடமும் அச்சொற்களை மட்டுமே சொல்லிக் கொண்டே இருப்பாள். ஆகையால், அச்சொற்களுக்கு ஏதோ சக்தி இருப்பதாக வினோத் நம்பினான். ஆச்சி பார்க்காத சமயத்தில் அங்குள்ள பூனைகளிடமும் மேரி அக்காவிடம் அந்த வார்த்தையைச் சொல்லி ஆச்சியைப் போலவே கண்களைப் பெரிதாக்கிக் காட்டுவான்.

வினோத் ஈரத்துண்டை எடுத்துத் தோளில் போட்டுக் கொண்டு முதலில் அம்மாவைத் தேடினான். ஆள்கள் வெளியேறுவதும் உள்ளே நுழைவதும், அழைப்பதும், திட்டுவதும், சாப்பிடுவதுமாக இருந்த அக்கடையில் சுராயா எங்கிருக்கிறாள் என அவ்வப்போது தேடிக் கொள்வது அவனது முதல் விளையாட்டு. தூரத்தில் எப்பொழுதாவது சுராயா தட்டுகளை மேசையில் அடுக்குவதற்கு வருவாள். அல்லது தட்டுகளைக் கழுவியெடுத்து அதனை வைக்க சிறிது நேரம் எழுந்து நிற்பாள். கைமுட்டிவரை சவர்க்கார நுரை சில இடங்களில் வெண்பஞ்சைப் போல ஒட்டியிருக்கும். அதுவொரு அபூர்வக் காட்சி. எப்பொழுது நிகழும் என வினோத்திற்கு ஓரளவிற்குத் தெரியும்.

முகத்தில் தீப்புண் காயங்களுடன் பளிச்சென்று சிரிப்புடன் தெரியும் சுராயாவின் முகம் வினோத்திற்குத் தனித்துவமானது. எச்சத் தட்டுகளை அதிகநேரம் காக்க வைக்கக்கூடாது என்பது ஆச்சியின் கட்டளைகளுள் ஒன்று. இல்லையென்றால் மீண்டும் “பெர்கி புவாட் கெர்ஜாலா!!!” என்று சுருதி சேர்த்துக் கத்துவாள். ஆகவே, அம்மாவைப் பார்த்துக்கொள்ள இயலவில்லை என்றாலும் மேசையைத் துடைப்பதில் வினோத் உன்னிப்பாக இருப்பான்.

தட்டுகள் எடுக்கப்பட்டதும் காலியாக இருக்கும் மேசையின் மீது தோளில் உள்ள துண்டை எடுத்து இடப்பக்கம் வலப்பக்கம் என விலாசுவான். அது சுராயா வீட்டில் துணி துவைக்கும் உத்தி. அதே போலத் துணி துவைப்பதாக நினைத்து மேசையைத் துணியாள் அடிப்பதைச் சுராயா பார்த்துவிட்டாள்.

“அங்க பாரேன் என் பையன… மேசையில துணி துவைக்கறான்…”

அதனைக் கேட்டு மேரியும் சிரித்துக் கொண்டாள்.

வினோத்தின் கண்கள் சுராயாவை நோக்கி அலையவிட்டவாறு கைகள் தட்டுகளைச் சேகரிக்கும். அம்மா அவனைப் பார்த்ததும் ஒரு மெல்லிய சிரிப்புச் சிரிப்பாள். அது வினோத்திற்குக் குதூகலத்தைத் தூண்டிவிடும். சுராயா 1994இல் வீட்டு வேலைக்காக மலேசியா வந்தாள். பின்னர், முதலாளி கொடுமையால் யோவாத்தா தோழிற்சாலைக்கு ஆப்பரேட்டர் வேலைக்குப் போய்விட்டாள். அங்குத்தான் வினோத்தின் அப்பா சுப்ரமணியம் அவளுக்குப் பழக்கமானான். இரண்டு வருடத்தில் வினோத் பிறந்தான். அவனுக்கு இரண்டு வயதிருக்கும்போது சுப்ரமணியம் சிங்கப்பூருக்கு வேலைக்குப் போவதாக இருந்தது. அங்குச் சென்று ஆறு மாதங்களில் கனவுந்து மோதி இறந்துவிட்டான்.

சுராயா மீண்டும் யாருமில்லாத நிலைக்குள் தள்ளப்பட்டாள். வினோத்தையும் முறையாகப் பதியாமல் அவனுக்கும் பிறப்புப் பத்திரம் தொடர்பான சிக்கல், பள்ளிக்கூடம் சேர்த்தல் என்று அலைந்து திரிந்தாள். சுப்ரமணியம் வீட்டார் உதவிக்கு வரவில்லை. இருவரையும் கைவிட்டுவிட்டார்கள். இப்பொழுதுவரை சுராயாவிற்கு வினோத் மட்டுமே ஆறுதல். விரைவில் மீண்டும் வினோத்துடன் இந்தோனேசியா போய்விடலாம் என்றுகூட திட்டம் வைத்திருக்கிறாள். ஆனால், அங்குச் சென்றால் தலைவிரித்திருக்கும் கடன்களை நினைத்து மனத்தை மாற்றிக் கொள்வாள். அப்பொழுதெல்லாம் என்னவென்று கேட்பது போலப் புருவத்தை உயர்த்தி வினோத் பாவனையிலேயே கேட்பான். அவள் மனம் இலேசாகிவிடும். சுராயாவின் முன் பல் வரிசை உதடுக்கு வெளியில் இருக்கும். எப்பொழுதும் சிரிப்பதைப் போன்றே தெரிவாள். சிரிக்காத நாளிலுங்கூட அவள் முகம் சிரித்தப்படிதான் இருக்கும். அதனாலேயே வினோத்தைச் சமாளித்து அவனுடைய பல கேள்விகளையும் அடக்கக் கற்றிருந்தாள்.

வினோத் மேசையிலிருந்த தட்டுகளைச் சிலவற்றை எடுத்து அடுக்கிக் கொண்டான். அதனை மேரியக்காவிடம் கொடுத்துவிட வேண்டும். வினோத் ஒவ்வொரு தட்டுகளுக்கும் பெயர் வைத்திருக்கிறான். அம்மாவிடம் அதனைச் சொல்லி அவன் கிண்டல் செய்வதுண்டு. சிலர் கீரைகளைச் சாப்பிடாமல் ஒதுக்கியிருப்பார்கள். பெரும்பாலும் அதுபோன்ற மிச்சத் தட்டுகளை வினோத் உடனே எடுத்துவிட மாட்டான். கீரைகளைத் தட்டைச் சுற்றி வைத்து அழகு படுத்துவான். அதற்குப் பெயர் பச்சைத் தட்டு. உடல் குதறப்பட்டு வெறும் முள்ளுடன் இருக்கும் மீன்கள் அல்லது எலும்புடன் இருக்கும் கோழிகள் உள்ள தட்டை அவன் ‘ஆப்பரேஷன் தட்டு’ என்பான். அறுவைச் சிகிச்சை முடிந்து மீன் இறந்துவிட்டதாக சுராயாவிடம் சொல்லிவிட்டுச் சிரிப்பான். “மா… ஆப்ரேஷன் சக்சஸ். உங்களுக்கு ஒரு மீன் பொறந்திருக்கு…” எனச் சொல்லும்போது சுராயாவும் மேரியும் சிரித்துச் சிரித்துக் கண்களில் நீர் வடிப்பார்கள்.

கோழி சூப், பன்றி சூப், கொய் தியோ சூப்புக்குக் கொடுக்கப்படுவதைக் குண்டுத் தட்டு என்பான். “கும்முன்னு இருக்கற தட்டுல எனக்குச் சூப்பு கொடுமா…” என்று இரண்டு கைகளையும் விரித்துக் காட்டுவான். உணவுத் தட்டுகள் வாழ்க்கைக்கான ஆதார வடிவம் என்பதைப் போல அதனைச் சிலசமயங்களில் தலை மேல் வைத்துக் கொண்டு நடந்து காட்டுவான். மேரியும் சுராயாவும் அதனைப் பார்த்துக் கிண்டலாகச் சிரிக்கும்போது, “சாப்படற சாப்பாட்டையும் அந்தச் சாப்பாட்டைப் போட்டுச் சாப்டற தட்டையும் விடைக்கக்கூடாதுமா…” என்று சிரிக்காமல் நகைச்சுவை செய்வான். ஆனால், அப்பொழுதெல்லாம் அவனுக்குப் பசி பெரிய பூதமாக வயிற்றுக்குள் உலாவிக் கொண்டிருப்பதும் சுராயாவுக்குத் தெரியும். இடையில் பசியென்று எதாவது வாயில் போட்டுக் கொள்வதை தவுக்கானோ ஆச்சியோ பார்த்துவிட்டால் அதற்கும் கத்துவார்கள். சிலசமயம் காற்சட்டைப் பாக்கெட்டில் மிட்டாய்களை ஒளித்து வைத்து அதனை யாருக்கும் தெரியாமல் வாயில் போட்டுக் கொள்வான்.

கடையின் நடுப்பகுதியில்  நீண்டு வளர்ந்திருக்கும் மாமரத்திற்குக்  கீழுள்ள மேசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டே ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த ஒரு குடும்பத்தை வினோத் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தான். இப்படிக் கடைக்கு வருபவர்களை வேடிக்கைப் பார்த்து அவர்களுடன் இணைவதும் அவனுடைய இன்னொரு விளையாட்டு. இதுபோல யார் கடைக்கு வந்தாலும் அவர்களின் குடும்பத்தில் ஓர் ஆளாகத் தன்னைக் கற்பனை செய்து கொண்டு விளையாடுவான். அவர்களைப் பார்த்துச் சிரிப்பான். மேசையில் தலையைக் கவிழ்த்து மீண்டும் தலையைத் தூக்கி அவர்களைப் பார்த்துச் செய்கைகள் செய்வான். சிலர் அவனைக் கண்டு சிரிப்பார்கள். சிலர் அவனைக் கண்டுகொள்ளவே மாட்டார்கள். அக்குடும்பத்தில் வினோத்தைப் போலவே ஒரு சிறுவன் இருந்தான். உருவத்திலும் வினோத் மாதிரியே சிறுத்துத்தான் இருந்தான். அவனுக்கு மட்டும் மூன்று நாற்காலியை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கிக் கொஞ்சம் உயரமாக்கி அமர வைத்திருந்தார்கள். அவனுடைய அம்மா, தாத்தா அவனுக்குச் சோறு ஊட்டும்போது வினோத் அதனைப் பார்த்துக் கைத்தட்டினான். பின்னர், உறிஞ்சிக்குழாயை எடுத்து அதில் நீரைச் சிறுக உறிஞ்சி அதனை அவன் வெளியே துப்புகையில் அவன் தாத்தா அவன் தலையில் தட்டும்போது வினோத் சிரித்தான். அவர்கள் சாப்பிடும் விதவிதமான ஒவ்வொரு சாப்பாட்டையும் வினோத் தொலைவிலிருந்தே ருசி பார்த்தான். அவற்றை அப்படியே விழுங்கி அதன் ருசியைக் கற்பனையின் உச்சத்தில் வைத்து மகிழ்ந்தான்.  பிறகு, எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வெளியே போகும்போது வினோத்தின் கவனமும் அவர்களுடன் சிறிது நேரம் போய்விட்டுக் கடைக்குத் திரும்பியது.

மீண்டும் குண்டு விளக்கு வெளிச்சத்தில் அவர்கள் என்ன சாப்பிட்டார்கள் என்று யூகிக்க முடியாத அளவிற்குச் சிதறிக் கிடக்கும் மிச்சத் தட்டுகளை எடுத்துக் கழுவும் இடத்திற்கு முன் உள்ள பெரிய வாளியில் வைக்கச் சென்றான். அதற்கு முன்பாகத் தட்டிலுள்ள மிச்ச உணவுகளைக் குப்பைத்தொட்டியின் விளிம்பில் வைத்துத் தட்டினான். அதுவொரு சிறிதுநேரத் தாளம். சுராயாவிற்கு ஒரு சமிக்ஞை என்றுகூட சொல்லலாம். வேண்டுமென்றே பலமுறை தட்டி அம்மாவிற்கு மட்டுமே விளங்கும் ஒரு இராகத்தை உண்டு செய்வான். தட்டுகளைக் கழுவிக் கொண்டிருக்கும் சுராயா முகத்தில் தெறித்திருக்கும் சவர்க்கார நுரைகளை ஓரம் தள்ளிவிட்டு எழுந்து குப்பைத்தொட்டி இருக்கும் பக்கம் பார்ப்பாள். அந்த ஒரு தரிசனத்திற்காக வினோத்திற்குத் தட்டுகளைத் தட்டுவது மிகப் பிடித்தமானதாகும்.

சில சமயங்களில் அப்படித் தட்டும்போது தட்டுகள் குப்பைத் தொட்டியிலேயே விழுந்து விடுவதுண்டு. யாரும் பார்க்கும் முன்பே வினோத் சட்டென எடுத்துவிடுவான். அப்படிப் பெரும்பாலான தட்டுகள் குப்பைத் தொட்டியில் விழுந்தவை என்று சொன்னால் அப்பெருமை வினோத்தையே சேரும். இம்முறை தட்டித் தட்டிப் பார்த்தான். மிச்சங்கள் அனைத்தும் கொட்டியும் அம்மா தலை தூக்கவே இல்லை. தட்டுகளை வாளியில் போட்டுவிட்டு மீண்டும் மேசைப் பக்கம் ஓடினான். மேசையைத் துடைக்கும் முன்பே அடுத்த வாடிக்கையாளர்கள் வந்து உட்கார்ந்துவிட்டால் அவனுக்குத் திட்டு நிச்சயம். நினைத்ததைப் போலவே ஓர் இளம் ஜோடிகள் அம்மேசையில் வந்து அமர்ந்திருந்தனர். வினோத் சிரித்துக் கொண்டே அவர்களிடம் போனான்.

“வோய் இனி மச்சாம் கெர்ஜாக்கா?” என்று மேசையின் ஓரத்தில் இருந்த ஒரு சிறிய முள் துண்டைக் காட்டிக் கத்தினான். வினோத் அம்முள் எப்படி அவன் எடுத்துப் போன தட்டிலிருந்து கீழே விழுந்திருக்கும் எனத் திகைத்தான். வலது கையில் இரண்டு தட்டுகள், இடது கையில் ஒரு தட்டும் ஒன்றோடு ஒன்று அடுக்கப்பட்ட சில குவளைகள் போக, ஒரு தட்டின் மேல் மேசையிலிருந்து வழித்தெடுக்கப்பட்ட மிச்ச மீதிகள் அடங்கிய அவனுடைய ஈரத்துண்டு. அதிலிருந்து எப்படி ஒரு சிறிய முள் தப்பித்துக் குதித்திருக்கும் என்று மேசையைக் குறுகுறுவென்று பார்த்தான்.

“வோய் அப்பா தெங்கோக்?” என்று அவன் மீண்டும் கத்தியபோது வினோத் திரும்பி ஆச்சி இருக்கும் இடத்தைப் பார்த்தான். ‘கொய் தியோ’ புகையில் அவள் தெரியவில்லை. உடனே அந்த மீன் முள்ளைக் கையில் எடுத்துக் கொண்டு அவ்விடத்தை விட்டு நகர்ந்தான். இருப்பினும், அந்த இளைஞன் மீண்டும் ஏதோ திட்டுவது கேட்டது. வினோத் அம்முள்ளை உற்றுக் கவனித்தான். சாப்பிட்டுப் போட்ட மீனின் உடலிலிருந்து வெகு இயல்பாகக் கீழே விழுந்துவிடக்கூடிய ஒரு ஆகச் சிறிய முள். சுண்டு விரலில் பாதிகூட இல்லை. வினோத் அவர்கள் அமர்ந்திருந்த மேசைக்கு மேல் தொங்கிக் கொண்டிருந்த மஞ்சள் விளக்கைப் பார்த்தான். அது ஆடாமல் அசையாமல் அதே சமயம் குறைந்த வெளிச்சத்தை மட்டுமே கக்கிக் கொண்டிருந்தது.

வினோத்திற்குக் கோபம் வந்தால் உடனே பழிவாங்கிவிடுவான். அங்கு அதுவும் அவனுக்கொரு விளையாட்டுத்தான். அவ்விளைஞன் ஆர்டர் செய்திருந்த கொய் தியோ சூப்பை மேரிதான் எடுத்து வந்து கொண்டிருந்தாள். இடையில் அவளை நிறுத்தி வினோத் அந்தச் சூப்பை வாங்கிக் கொண்டான். மேரிக்கு அவன் சில சமயங்களில் இதுபோன்ற உதவிகளைச் செய்வதுண்டு. மேரியும் அவன் ஒருவனால் சமாளிக்க முடியாதபோது மேசைகளைத் துடைப்பதுண்டு. கொய் தியோ சூப்பில் ஒரு மீன் முள் இருப்பது தெரியாமல் அவ்விளைஞன் ருசித்து அதனை உறிஞ்சும்போது வினோத் சத்தமாக “பெர்கி புவாட் கெர்ஜாலா!” என்று சொல்லிக் கொண்டே சிரித்தான். இரவுக் காற்றில் மேசைகளில் போர்த்தப்பட்டிருந்த துணிகள் படபடத்து மீண்டும் அடங்கின.

ஒருமுறை மேரி தவறுதலாக ஈரத்துணியை மேசையிலேயே வைத்துவிட்டாள். அம்மேசைக்கு வந்தவன் அவளுடைய முகத்தில் அத்துணியை விட்டடித்துவிட்டான். வினோத் அவனைச் சாமர்த்தியமாகப் பழிவாங்கினான். பல மேசைகளைத் துடைத்து ஈரப்பதத்துடன் இருந்த அத்துணியை வினோத் நன்றாகப் பிழிந்தான். பிழியும்போது அதற்குக் கீழாக அம்மேசைக்குப் போகவிருந்த கோழி சூப் மங்கு இருந்ததைப் பற்றி அவ்வாடிக்கையாளனுக்கும் தெரியாது. மேரிக்கும் தெரியாது. கடையை மூடும்போது மேரியிடம் அதனைச் சொல்லி இருவரும் ஆச்சி வந்து கத்தும்வரை சிரித்துக் கொண்டிருந்தார்கள். அன்று யார் அவனிடம் கத்துகிறார்களோ அவர்கள் அனைவரும் அக்கடையில் மிகவும் பிரபலமான கொய் தியோ சூப்பின் மூலமே பழிவாங்கப்படுவார்கள். இத்திறனைக் கைவரப் பெற்றிருந்த வினோத்தால் தினமும் அவனிடம் கத்தும் ஆச்சியை மட்டும் ஒன்றுமே செய்ய முடியவில்லை. அவள் கடையை மூடும்வரை எதுமே சாப்பிட மாட்டாள் என்பதாலேயே தொடர்ந்து வினோத்திடமிருந்து தப்பித்துக் கொண்டிருந்தாள்.

சட்டென்று வினோத்திற்குத் தெரிந்த வகுப்பு நண்பன் குடும்பத்தோடு கடைக்குள் நுழைந்தான். அவனைப் பார்த்ததும் வினோத்திற்கு ஒரே மகிழ்ச்சி. ஓடிச் சென்று அவர்கள் அமர்ந்திருந்த மேசையைச் சுத்தம் செய்தான். அவன் வகுப்பு நண்பன் அவனைப் பார்த்துக் கண் சிமிட்டினான். கையில் இருந்த ஈரத்துண்டைக் கொண்டு நாற்காலியையும் துடைத்துவிட்டுச் சிரித்தான்.

“ஏன்டா ஸ்கூலுக்கே வர்றது இல்ல?” என்று அவன் கேட்பான் என்று வினோத் எதிர்ப்பார்க்கவே இல்லை. அவனுக்குள் மகிழ்ச்சி பெருகெடுத்து முகத்தில் கொப்பளித்தது. ஆனால், அவனுடைய அப்பாவின் முகத்தில் வினோத்தைப் பார்த்ததும் அவ்வளவாக ஈயாடவில்லை. அவனை மேலும் கீழுமாகப் பார்த்தார். வினோத் சிரித்துக் கொண்டே தன் ஈரத்துண்டைக் காற்றில் சுழற்றினான். அதிலிருந்து ஈரத் துளிகள் காற்றில் கலந்து சிதறின.

“போய் வேலைய பாருடா… ஆளயும் மூஞ்சயும் பாரு…” என்று நண்பனின் அப்பாவும் அதையே சொன்னார்.

“ஆளைப் பாரு மூஞ்செ பாரு.. ஆளைப் பாரு மூஞ்செ பாரு…” என அதனை ஒரு பாடலைப் போலப் பாடிக் கொண்டே வினோத் இன்னொரு மேசைக்கு ஓடினான். சுராயா கொடுத்த ஒரு ரொட்டித் துண்டை அங்குத் தேடினான். அவன் பசி தாங்க மாட்டான் என அவளுக்குத் தெரியும் என்பதால் இரவிலேயே ஒரு ரொட்டித் துண்டை வாங்கி அவனுக்குக் கொடுத்துவிடுவாள். அவன் பசிக்கும்போது அதனைத் தேடுவான். நினைத்த மாதிரியே அக்கடையில் இருக்கும் ஒரு பூனை ரொட்டியைத் தூக்கிக் கொண்டு போயிருந்தது. வினோத் மேசைகளுக்கு அடியில் அப்பூனையைத் தேடி அலைந்தான். ஆள்கள் உட்கார்ந்திருக்கும் மேசையின் துணியைத் தூக்கியும் பார்த்தான். சிலர் அவனை அசூசையாகப் பார்த்தார்கள். சிலர் திகைத்தனர். அவர்கள் அப்படிப் பார்க்கும்போது, “மியாவ்வ்வ் மியாவ்” என்று பூனை மாதிரி செய்து காட்டி அதனை விரட்டுவதைப் போல “சூச்சுச்ச்சு” என்று அதட்டுவான்.

ஆள் இல்லாத ஒரு மேசையின் கீழ் வினோத் தேடிக் கொண்டிருந்த பூனை அவனுடைய ரொட்டியின் நெகிழிப்பையைக் கீறிக் கொண்டிருந்தது. அவனைக் கண்டதும் ரொட்டியைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வேறுபக்கம் திரும்பி பையுடன் போராட ஆரம்பித்தது. வினோத் கையில் இருக்கும் துண்டைத் தூக்கி வீசியதும் பூனை அலறிக் கொண்டு வெளியேறி எதிரில் இருந்த ஒரு மேசையில் தாவிக் குதித்தோடியது. அம்மேசையில் ‘தே ஓ’ குடித்துக் கொண்டிருந்த ஒரு சீன பாட்டி ஏதோ கெட்ட வார்த்தையில் கத்தினார். ஆச்சி அங்கிருந்து பார்த்தாள். அவளுக்கு ஏதும் சரியாகப் புரியாமல் போயிருக்கலாம். மீண்டும் தன் கையில் இருந்த விசிறியை முகத்தின் வலப்பக்கத்தில் ஆட்டத் துவங்கினாள்.

அடுத்தடுத்து நிறைய பேர் வரத் துவங்கியதும் வினோத் மேசையை மும்முரமாகத் துடைத்தான். அவனுக்கு வலது கையில் உள்ள எழும்பு பலவீனமானது. சிறு வயதில் அக்கையில் ஏற்பட்ட எழும்பு முறிவுதான் காரணம். அவனால் இரண்டு கையால் ஒரே நேரத்தில் வேலையைச் செய்ய இயலாது. ஒரு கை வேலை செய்து கொண்டிருக்கும்போது இன்னொரு கை ஓய்வாக இருந்தால் மட்டுமே அவனுக்குச் சமன்நிலை கிடைக்கும். இல்லையென்றால் தட்டுகளைக் கீழே போட்டுவிடுவான்.

கடை எவ்வளவு சத்தமாக இருந்தாலும் சுராயா அதையெல்லாம் தாண்டி ஏதாவது தட்டுகள் கீழே விழுகிறதா என்று மட்டுமே கூர்ந்து கேட்டுக் கொண்டிருப்பாள். இந்தோனேசியாப் பெண்களின் உடலுக்கென்று ஒரு வலிமை இருக்கிறது. அவர்களால் வீட்டு வேலைகளில் எவ்வளவு நேரம் வேண்டுமென்றாலும் உழைக்க முடியும். சலித்துக்கொள்ளாத ஒரு பழக்கம் செயற்கையாகவோ இயற்கையாகவோ அவர்களிடம் இருந்தது. சுராயா தன் உடலின்  மொத்த அசைவுகளையும் தட்டுகளைக் கழுவுவதிலேயே குவித்திருப்பாள். ஆனால்,  மனமெல்லாம் மேசை மேசையாக அலைந்து கொண்டிருக்கும். வினோத் தட்டுகளைப் போட்ட கதை கொஞ்சம் வேடிக்கையானது. ஒருமுறை பெரிய தவுக்கான் குழாயடியிடம் வாளியைக் கழுவிக் கொண்டிருக்கும்போது நிறைய தட்டுகளைக் கையில் கொண்டு போன வினோத் தடுமாறி அதனை அவன் தலையிலும் முதுகிலும் போட்டதும் சுராயாவும் மேரியும் வாளியில் தேங்கியிருந்த தண்ணீரை அடித்துக் கொண்டு சிரித்தார்கள். கிச்சாப், மிளகாய் சாறு என வண்ணமயமாய்ப் பெரிய தவுக்கான் தெரியும்போது  ஈரப்பாவடையுடன் நின்றிருந்த மேரிக்குக் கால்கள் மகிழ்ச்சியில் துள்ளின. அந்தக் கோட்டானுக்கு இப்படி ஏதும் நடக்காதா என்று அவளும் சுராயாவும் ஏங்காத நாள் இல்லை. வினோத்தைத் துரத்திக் கொண்டு ஓடிய தவுக்கானை ஆச்சிதான் நிறுத்தினாள்.

கீறல்கள்  பட்டுப் பட்டுப் பழுப்படைந்த தட்டுகளைக் கழுவித் தேய்த்து அதனை அடுக்கித் தூக்கிக் கொண்டு மேலே எழுந்து வைத்துவிட்டுக் கொஞ்சம் கால்களை உதறி முதுகை வளைத்து நெட்டெடுத்தாலும் பெரிய தவுக்கானுக்குப் பொறுக்காது. மீண்டும் அவள் உட்கார்ந்துவிட வேண்டும். அதிக நேரம் இப்படி வெறுமனே நிற்பதை அங்கிருக்கும் அவன் விரும்பமாட்டான். தவுக்கான் ஆச்சியின் மூத்த மகன். உண்மையான பெயர் தௌ காங், ஆனால் நாளடைவில் ‘தவுக்கான்’ என்றானது. கடையை அவர்கள் இருவரும்தான் கவனித்துக் கொள்கிறார்கள். உடல் வலி என்று சுராயாவும் மேரியும் கொஞ்சம் ஓய்வெடுத்தாலும் அங்கிருந்து நெகிழிக்குழாயின் வழியாக நீரை வேண்டுமென்றே அவர்கள் மீது பாய்ச்சுவான். அதுவும் சுராயாவின் உடை ஈரத்தால் ஒட்டிப்போகும்போது அதனை ஆர்வத்துடன் கண்காணிப்பான்.

“ஓய்ய்ய்ய்க் புவாட் கெர்ஜாலா!” என்று அவர்களைப் பார்த்துப் பின்னர்த் தெரியாததைப் போல  வேலை மீதான அக்கறைத் தொனியுடன் கத்துவான். சுராயா முடியைக் குட்டையாக வெட்டியிருப்பாள். தட்டுகளைக் கழுவும்போது வசதியாக இருக்கும் என்றுதான் அவள் முதுகுவரை இருந்த தலைமுடியை வெட்டிக் கழுத்து நடுப்பகுதிவரைக்கும் வைத்துக் கொண்டாள். கால்களை அகட்டி அவளுடைய நீண்ட பாவாடையைக் கக்கத்தில் செருகவிட்டுப் பச்சைப் பஞ்சால் ‘சரக் சரக்’ என்று தட்டுகளைத் தேய்க்கும்போது பெரிய தவுக்கான் அவளை மட்டுமே கூர்ந்து கவனித்துக் கொண்டிருப்பான். அது அவளுக்கும் தெரியும். வினோத்தும் பெரிய தவுக்கான் மீது ஒரு கண் வைத்திருப்பான். மிச்சமாய் இருக்கும் ஆரஞ்சு பழத்தை அவன் மீது விட்டடித்துவிட்டுத் தெரியாததைப் போல மேசையைத் துடைக்க ஆரம்பித்துவிடுவான். தவுக்கான் சுற்றும் முற்றும் பார்த்துவிட்டுக் கெட்ட வார்த்தையில் ஏதோ கத்துவான். யாரைத் திட்டுகிறான் என்று யாருக்குமே தெரியாது. முகம், காது எல்லாம் சிவந்து நிற்கும். “ஓய்ய்ய்ய்!!!!” என்றவாறு கத்துவான்.

சில சமயங்களில் சுராயா கால்வாயின் மீதுள்ள இரும்பின் மேல் பெரிய பேசனை வைத்துத் தட்டுகளைக் கழுவிக் கொண்டிருக்கும்போது சாக்கடை அடைப்பைச் சரிசெய்வது போல அவளிடம் வந்து நின்று கொண்டு பேசனையெல்லாம் தள்ளி வைத்துவிட்டுச் சாக்கடை தடுப்பிரும்பைத் தூக்கி ஓரத்தில் வைத்துவிட்டுக் குச்சியால் குப்பைகள் அடைப்புகளைத் தள்ளிவிடுவான். அதுவே சாக்காக வைத்துச் சுராயாவை உரசிக் கொண்டிருப்பான். அவள் தூரம் தள்ளிப் போகத் தடுமாறுவாள். சாப்பிட வந்தவர்கள் யாராவது பார்த்தால் அசூசையாக உணர்வார்கள் என்பதாலே அவள் தனது அசௌகரிகங்களைப் பொறுத்துக் கொள்வாள்.

சரியாகப் பத்து மணிக்கு மேல் வேலை செய்பவர்கள் அனைவருக்கும் சமைத்து ஒரு பெரிய தட்டில் வைத்துவிடுவார்கள். இன்று நாசி கோரேங் சுடச்சுடக் காத்திருந்தது. வினோத் பாதி உறக்கத்தில் ஒரு மேசையில் உட்கார்ந்திருந்தான். அவனுக்குப் பசி முற்றிப் போயிருக்கக்கூடும். மேசையில் இருந்த நீருக்கு விரலால் கால்வாய் வெட்டி அதனை விளிம்புவரை ஓடவிட்டு மீண்டும் பிடித்துக் கொண்டிருந்தான். ஆள்கள் குறைந்து ஒன்றிரண்டு பேர் வீட்டிற்கு எடுத்துச் செல்ல உணவை வாங்கிக் கொண்டிருந்தார்கள். ஆச்சி அயர்ந்து தெம்பில்லாமல் அமைதியாகிவிட்ட சாலையைப் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அங்கு வைக்கப்பட்டிருந்த உணவைச் சுராயாவும் வினோத்தும் சாப்பிடத் தொடங்கினார்கள். வினோத் தன் இரு கை விரல்களையும் பார்த்தான். ஈரம் பட்டுப்பட்டு விரல்கள் வெளுத்துச் சுருங்கித் தோல்கள் கோடு கோடாய்த் தெரிந்தன. அவற்றைத் தேய்த்துத் தேய்த்து விளையாடிக் கொண்டிருந்தான். விரல்கள் அப்படி மாறும்வரை காத்திருந்து பின்னர் அதனை வருடித் தேய்த்து விளையாடுவான். அக்கடையில் அவனுடைய கடைசி விளையாட்டு அதுதான். ஆ மேங் தாத்தா தன்னுடைய அடுப்பில் சோர்ந்துபோய் மௌனமாக அசைந்து கொண்டிருந்த நெருப்பை அணைக்கத் தயாரான நேரம் சுராயாவும் வினோத்தும் கடைக்கு வெளியில் வந்தார்கள். நடந்து போகும் தூரமே வீடு. இருவரும் அச்சாலையில் நடக்கத் துவங்கினார்கள்.

“ம்மா… இன்னிக்கு என் கூட்டாளி கடைக்கு வந்திருந்தான் குடும்பத்தோட… அப்பறம் ஒரு வெள்ளி கொடுத்தான், அவுங்க அம்மா கொடுக்கச் சொன்னாங்கனு… நான் தெரியாம வாங்கிட்டன்… என்னை ஏசுவியா?”

“பரவாலடா வச்சுக்கோ… ஆரஞ்சுப் பழம் வாங்கிக்கலாம்…”

“எதுக்குமா? தவுக்கான அடிக்கியா? சரோஜா அக்காவ அடிக்கியா?”

“தவுக்கான் சரி… ஏன்டா சரோஜா அக்கா?”

“அவுங்க என்ன எத்தறாங்கமா… அன்னிக்கு ஒரு நாள் தொடையில கிள்ளனாங்க… நேத்து பின்னால எத்துறாங்க…” எனக் கூறிக்கொண்டே பிட்டத்தைக் காட்டினான்.

“ஐயோ! ஆமாம்… அதான் என் பிள்ளையோட அழகு கொறைஞ்சிருச்சி…”

எனச் சிரித்துக் கொண்டே அவனுடைய பிட்டத்தைச் சுராயா தடவிக் கொடுத்தாள். சிரிப்பொலியுடன் ஒரு சிறிய இருளில் இருவரும் மறைந்து கொண்டிருந்தனர்.

  • கே.பாலமுருகன்

*“வோய் இனி மச்சாம் கெர்ஜாக்கா?” – “இப்படித்தான் வேலை செய்வீயா?

*கொய் தியோ, நாசி கோரேங் – ஒரு வகை உணவு.

*“வோய் அப்பா தெங்கோக்?” – என்ன பாக்கறே?

*பெக்கான் லாமா – பழைய பட்டணம்

2017-ஆம் ஆண்டின் சிறந்த தமிழ்ப்படங்கள் ஒரு பார்வை

2017ஆம் ஆண்டில் நாம் பார்க்கத் தவறிய அல்லது பார்த்தும் மீட்டுணராமல் போன  சிறந்த தமிழ்ப்படங்கள் 25-ஐ இப்பதிவில் குறிப்பிட்டுள்ளேன். கடந்து போய்விட முடியாத நல்ல சினிமாவின் ஆழ்மன குரலை மறுமுறை கேட்கும்போது ஏற்படும் இரசனை மாற்றம் அலாதியானது.

tamil movies countdown 2017: 1st place: Aruvi

மனித மனங்களின் ஈரத்துள் உறையும் வாழ்க்கை 

Arun Prabu Purushothaman இயக்கத்தில் வெளிவந்த இவ்வாண்டின் தமிழ் சினிமா சூழல் மட்டுமல்லாமல் 60க்கும் மேற்பட்ட உலகத் திரைப்பட விழாக்களிலும் மிகுந்த கவனத்தையும் வரவேற்பையும் பெற்றிருக்கும் தரமான படம். அருவி என்கிற பெண்ணைச் சுற்றி நிகழும் ஒடுக்குமுறைகள், அவமானங்கள், சட்ட ஒழுங்கின் அத்துமீறல், அதிகாரத்தின் வன்மம், சமூக புறக்கணிப்புகள் என நவீன வாழ்வின் சிதறுண்டுபோன விளிம்பு வாழ்நிலைகளை ஓங்கி ஒலிக்கும் நல்லதொரு முயற்சி ‘அருவி’. ஒரு புதுமுக இயக்குனர், புதுமுக நடிகை ஆனால் தமிழ் சினிமாவில் மறுக்க முடியாத தாக்கத்தை உருவாக்கியுள்ளார். எளிய மனிதர்களின் குரல், அருவி. இவ்வாண்டின் முதல் இடத்தைப் பெறுகிறது.

 

Tamil top movies countdown 2017: 2nd place: Vikram Vedha

தொன்மக் கதைக்குள் ஒலிக்கும் நவீன சமூகத்தின் துரோகக் குரல் 

Pushkar-Gayathri இயக்கத்தில் வெளிவந்த இவ்வாண்டின் மிகச் சிறந்த படம் ‘விக்ரம் வேதா’ ஆகும். கதை அமைப்பும், திரைக்கதை அமைப்பும் ஒரு தொன்ம விக்ரமாதித்யன் வேதாளம் என்கிற பழங்கதையிலிருந்து நவீன வாழ்க்கையின் சரடுகளைச் சொல்லும் வகையில் வித்தியாசமான முறையில் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு அறிவார்ந்த திரைக்கதை அமைப்பு என்றே வியக்க வைத்தது. தன்னைச் சுற்றி நிகழும் துரோகங்களை நோக்கி கதாநாயகன் கேள்விகளை எழுப்பியவாறே செல்ல, கதையில் வரும் இன்னொரு கதாபாத்திரம் அதற்கான முடிச்சவிழ்ப்புகளை நிகழ்த்திப் பதிலளித்துக் கொண்டே வருகிறது. இக்கதையை விகரமாதித்யன் வேதாளம் பாணியில் சொன்னதுதான் மிகச் சிறந்த முயற்சியாகும். சினிமா மட்டுமே தன் சமூகம் மாற்றத்தையும் அழிவையும் வளர்ச்சியையும் உடனுக்குடன் காட்சி ஊடகத்தின் வழியாக மக்களிடம் வெகு சீக்கிரம் பரப்பி தாக்கத்தை உருவாக்க முடிந்த கலை வடிவம். அவ்வகையில் விக்ரம் வேதா, தமிழ் சினிமாவின் வளர்ச்சியையும், இரசனை மாற்ற பெருங்குரலையும் பதிவு செய்கிறது. மாதவன், விஜய் சேதுபதி இரு துருவங்களைப் போல நடிப்பில் யதார்த்தத்தை வெளிப்படுத்திருப்பது படத்திற்குக் கூடுதல் பலம் ஆகும்.

 

Tamil top movies countdown 2017: 3rd place: 8 Thottakal

மூன்றாம் நிலை:எட்டுத் தோட்டாக்கள் – தரமான தமிழ்ப்படம்

Sri Ganesh இயக்கத்தில் வெளிவந்த இப்படம் இவ்வாண்டின் 3ஆம் நிலையை எட்டுகிறது. மிகவும் யதார்த்தமான, கொஞ்சம்கூட சமரசமில்லாமல் கதைக்கேற்ற திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. ஒரு காவல்துறை அதிகாரியின் துப்பாக்கி காணாமல் போய்விடுகிறது. அத்துப்பாக்கியில் எட்டுத் தோட்டாக்கள் இருக்கின்றன. அக்காவல் துறை அதிகாரி(கதாநாயகன்) துப்பாக்கியைத் தேடி அலைகிறார். சென்னையின் சமூக அடித்தட்டு இருளில் உழன்று கொண்டிருக்கும் பல குற்றவாளிகளைச் சென்று சந்திக்கிறார். துப்பாக்கியும் கைமாறி மாறி இறுதியில் வங்கியைக் கொள்ளையடிக்கத் திட்டம் போட்டிருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் கையில் போய் சேர்கிறது. அவர் ஏழு முறை அத்துப்பாக்கியைப் பாவிக்கிறார். அதில் பாவமறியாத ஒரு குழந்தையும் இறக்கிறது. கதாநாயகனும் எம்.எஸ் பாஸ்கரும் குற்ற உணர்வில் தகிக்கிறார்கள். இறுதியில் அந்த எட்டாவது தோட்டா யாருக்கு? கதையின் உச்சம் அதுவே. மிக நேர்த்தியான திரைக்கதை அமைப்பு. கதாநாயகனுக்கு நடிப்பே வரவில்லை என்பதைத் தவிர படத்தில் வேறு குறைகள் இல்லை. குறிப்பாக, நகைச்சுவை நடிகனாகவும் குணச்சித்திர வேடமும் செய்து வந்த எம்.எஸ். பாஸ்கர் அவர்களின் வாழ்நாளில் மிகச் சிறந்த அவருடைய நடிப்பை வெளிப்படுத்திய படம் இதுவாகத்தான் இருக்கும். அநேகமாக அவருக்கு துணை நடிகருக்கான தேசிய விருதே கிடைக்கலாம். தமிழில் இதுவொரு உலகத்தன்மை வாய்ந்த நல்ல படம் என்றே சொல்லலாம். வேறு எந்த மொழியிலும் எடுக்க முடிந்தாலும் அம்மொழியில் சிறந்த கவனம் பெறக்கூடிய கதையம்சம். திரைக்கதை எழுத பயிலும் யாராகிலும் இப்பட்த்தின் திரைக்கதை அமைப்பை விவாதித்து அதிலிருந்து பலவற்றை கற்றுக் கொள்ளும் அளவிற்கான தரம் வாய்ந்ததாக இருக்கின்றது.

 

Tamil top movies countdown 2017: 4th place: Lens

2017ஆம் ஆண்டின் நான்காம் நிலை

Jayaprakash Radhakrishnan இயக்கத்தில் வெளிவந்த இப்படம் மனிதருக்குள் இருக்கும் அபத்தங்கள் அனைத்தையும் துணிச்சலுடன் பேசி நம்மைக் கதிகலங்க வைத்த படம். ஒருவன் புதுமண தம்பதியின் முதலிரவு காட்சிகளை இரகசிய கேமராவில் பதிவு செய்து அதனை ‘Porn’ அகப்பத்தில் ஏற்றிவிட்ட பிறகு அத்தம்பதி எதிர்க்கொள்ளும் அகநெருக்கடிகள், அவமானங்கள், அதன் பின்பான சமூகத்தின் அபத்தத் தாக்குதல், வக்கிர மனமுடையவர்களின் அத்தனை முகங்களையும் படம் பதிவாக்குகிறது. அவமானத்தைச் சந்திக்க நேரும் அப்பெண் தற்கொலை செய்து கொள்கிறாள். இன்றை நவீன உலகின் இன்னொரு கோரமான முகம் இது. ‘ஸ்மார்ட் கைப்பேசி’ வந்த பிறகு இனி இரகசியம் என்று ஒன்றில்லை; நீங்கள் எப்பொழுதுமே கவனிக்கப்படுகிறீர்கள் என்கிற ஓர் அச்சவுணர்வையும் நடுக்கத்தையும் இப்படம் தந்துவிட்டுப் போகிறது. படம் முடிந்து இரண்டு நாட்களாவது உங்களால் நிம்மதியாக உறங்க முடியாமல் போகலாம். உண்மைக்கு அத்தனை நெருக்கத்தில் நம்மைக் கொண்டுபோய் வைக்கிறது ‘லென்ஸ்’. பெங்களூர் உலகத் திரைப்பட விழாவிலும், டெல்லி பையோஸ்கோப் குளோபல் திரைப்பட விழாவிலும் ‘சிறந்த விருதகள்’ பெற்றதோடு பல உலகத் திரைப்பட விழாக்களில் கவனம் பெற்றது. இயக்குனர் வெற்றி மாறனே இப்பட்த்தைத் தயாரித்து வெளியீட்டுள்ளார். அறங்கள் பற்றியும், குறள் பற்றியும் பேசிக் கொண்டிருக்கும் இதே உலகில்தான் திரைமறைவில் எண்ணற்ற ‘‘Porn’ அகப்பக்கங்களில் அதிகாரப்பூர்வமாகப் பலருடைய வாழ்க்கை சீரழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதும் உண்மையே. இந்த யுகத்தின் இன்னொரு முகம் இத்தனை கொடூரமானதே. ‘லென்ஸ்’ காட்டும் உலகம் நடுக்கத்திற்குரியது.

 

Tamil top movies countdown 2017: 5th place: Teeran Athikaaram Ondru

2017ஆம் ஆண்டின் ஐந்தாம் நிலை

வினோத் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இதுவரை வந்த காவல்துறை தொடர்பான தமிழ்ப்படங்களில் மாறுப்பட்ட முயற்சியில் எடுக்கப்பட்ட படம் ஆகும். மிகவும் துணிச்சலான சினிமா என்று இன்றும் பாராட்டப்படுகிறது. மிகவும் விரிவான கள ஆய்வு செய்து தகவல் நுணுக்கங்களுடன் இக்கதையைத் திரையாக்கியிருக்கும் நேர்மை படத்திற்கு வலு சேர்க்கிறது. ராஜாஸ்தானில் வாழும் குற்றப் பரம்பரையைச் சேர்ந்தவர்களின் அச்சுறுத்தும் குற்றவியல் செயல்களை நோக்கி ஒரு தமிழ்நாட்டுக் காவல்துறை அதிகாரி விசாரித்துச் சென்று அவர்களைக் கைது செய்வதுதான் கதையாகும். ஆனால், நாற்காலியின் நுனிக்கு வரவழைக்கும் மிகுந்த பரப்பரப்பான திரைக்கதை அமைப்பே படத்தைத் தூக்கி நிறுத்துகிறது. தமிழ்நாட்டில் நடந்த உண்மை சம்பவத்தை முன்வைத்து இப்படம் இயக்கப்பட்டுள்ளது. உயிரைப் பணையம் வைத்து மிரட்டலாக இருந்த அக்குற்றவாளிகளைக் கைது செய்த தமிழ்நாட்டுக் காவல்துறை அதிகாரிகளுக்கு எந்தப் பதவி உயர்வும் இல்லாமல் ஓரங்கப்பட்ட உண்மையையும் படம் உணர்த்துகிறது. ஒரு கலை படைப்புக்குக் குறைந்தபட்சம் தான் எடுத்திருக்கும் கதையின் மீது நேர்மை இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். அந்நேர்மையின் பிரதிபலிப்புத்தான் தீரன் அதிகாரம் ஒன்று.

 

Tamil top movies countdown 2017: 6th place: kutram -23

குற்றம் 23: பெண்களின் மீதான உயிரியல் வன்முறை

அறிவழகன் இயக்கத்தில் வெளியான இப்படம் இவ்வாண்டின் யாருமே கற்பனையில்கூட நினைத்துப் பார்க்க முடியாத மருத்துவ அத்துமீறலைப் பேசிய படமாகும். உயிரியலின் மீது மனித ஆதிக்கம் எந்த அளவில் சமூகத்தையும் பெண்களையும் சிதைக்கிறது என்பதனை மிகுந்த பரப்பரப்பான திரைக்கதையின் வ்ழி சொல்லிச் சென்றுள்ளார்கள். உயிரணுக்கள் மீது ஆணாதிக்கம் என்கிற வக்கிரம் எந்தளவில் ஊடுருவி சமூக விழுமியங்கள் மீது கல்லெறிந்து சீர்குழைத்துவிடுகிறது என்பதனைத் தாங்கி நின்ற படம். அருண் குமாரின் வாழ்நாளில் சிறந்த படமாகவே அமைந்திருந்தது. தமிழ்ச் சூழலில் மிகவும் பேசப்பட்ட படமும்கூட.

 

Tamil top movies countdown 2017: 7th place: Maanagaram

மாநகரம் – விழித்திருக்கும் பெருநகர் வாழ்க்கை

லோகேஸ் கனகராஜ் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த மாநகரம் படம் இவ்வாண்டின் 7ஆம் நிலையை எட்டுகிறது. புதுமுக இயக்குனர், புதுமுக கலைஞர்களின் கூட்டணியில் உருவான இப்படம் மிகவும் யதார்த்தமாகவும் முதிர்ச்சியான திரைக்கதை அமைப்புடனும் சென்னை மாநகரத்தின் நிஜமான முகத்தைக் காட்டிய படம். ஒரு குழந்தை கடத்தல் தவறான போக்கில் போனதால் உருவாகும் சிக்கலில் சென்னையில் வாழும் சிலர் அதில் ஒன்றுக்கொன்று அவர்களுக்குத் தெரியாமலேயே இணைகிறார்கள். அங்கிருந்து திரைக்கதை மிகவும் நகைச்சுவையும், மர்மமும் கலந்து மிகச் சிறப்பாகப் படமாக்கப்பட்டுள்ளது. மாநகரங்கள் எப்பொழுதும் எதற்காகவும் தயாராகத்தான் இருக்கிறது. இதில் நல்லவர் கெட்டவர் என்றெல்லாம் நாம் தீர்மானிக்க முடியாது. அதனை அந்த மாநகரும்தான் தீர்மானிக்கும் என்பதைப் போல கதை மிகவும் இயல்பாக பின்னப்பட்டுள்ளது. ஆழமான வாழ்க்கை அனுபவமிக்க ஒருவரால்தான் தன்னுடைய முதல் படத்தையே இந்த அளவிற்கு நேர்த்தியாக உருவாக்கியிருக்க முடியும் என நினைக்கிறேன்.

 

Tamil top movies countdown 2017: 8th place: Aramm

Minjur Gobi இயக்கத்தில் நயந்தாராவின் நடிப்பில் வெளிவந்த ‘அறம்’ படம் இவ்வாண்டின் உண்மை சம்பவத்தை மையமாகக் கொண்டு அரசியல் விமர்சனத்தை முன்னெடுக்கும் படமாகும். சமூக அக்கறையுடன் எடுக்கப்பட்ட இப்படத்தில் அரசியல் விமர்சனத்தைவிட, ஆழ்துளை கிணற்றில் சிக்கிக் கொண்டு அச்சிறுமியை வெளியேற்ற அனைவரும் மேற்கொள்ளும் முயற்சிகளே கதைக்கு உயிரூட்டுவதாக அமைந்திருந்தது. விண்வெளிக்கு ரோக்கேட் அனுப்பும் அளவிற்குத் தொழில்நுட்பம் பெருகி வளர்ந்திருந்தாலும் தமிழ்நாட்டுக் கிராமங்களில் இன்னமும் ஆபத்தாக இருக்கும் ஆழ்துளை கிணற்றில் விழுந்தவர்களை மேலேற்ற எந்த வசதியுமில்லாத சூழலைப் படம் மிகவும் தீர்க்கமாகச் சாடியுள்ளது. கதாநாயகர்களைக் கொண்டாடும் இச்சமூகத்தில், கதாநாயகனே இல்லாமல் தனியொரு ஆளாக நின்று நயந்தாரா சாதித்துள்ளார். அதற்காகவே இப்படத்தைப் பாராட்டியே ஆக வேண்டும்.

 

Tamil top movies countdown 2017: 9th place: Kuranggu Bommai

நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளிவந்த ‘குரங்கு பொம்மை’ மிகச் சிறந்த உணர்ச்சி சித்திரம் என்றே சொல்ல வேண்டும். 80களில் தமிழ் சினிமாவைக் கமர்சியல் உச்சத்திற்குக் கொண்டுபோன இயக்குனர் பாரதிராஜா இப்படத்தில் நடிப்பில் ஒரு படி மேலேறிவிட்டார். ஒரு குரங்கு பொம்மை போட்ட பையைச் சுற்றித்தான் கதை ‘நோன் லீனியர்’ முறையில் வித்தியாசமாக நகர்கிறது. இடையில் துரோகம், கொலை, பிரிவு என்கிற விசயத்தில் திரைக்கதை படத்தின் தரத்தை அதிகரிக்கிறது. பாரதிராஜா தன்னைக் குமரவேல் கொலை செய்யப் போகிறான் எனத் தெரிந்த மாத்திரத்தில் அவர் பேசும் வசனம் யாராக இருந்தாலும் மனத்தை நெகிழ வைத்துவிடும். அது யதார்த்தத்தின் மிகச் சிறப்பான கணம். குரங்கு பொம்மை; நம் மனத்தை ஆட்டி வைக்கும்.

 

Tamil top movies countdown 2017: 10th place: Thupparivaalan

ஆழமான இலக்கிய வாசிப்பும், உலக சினிமா குறித்த தேடலும் உள்ள இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த ‘துப்பறிவாளன்’ படம் 10ஆம் நிலையை எட்டுகிறது. அறிவுப்பசியோடு காத்திருக்கும் கனியன் பூங்குன்றன் என்கிற தனியார் துப்பறிவாளரின் வாழ்க்கையில் ஏற்படும் திருப்பங்களே கதையாகும். ஒரு நாயின் மரணத்தைக் கண்டறிய புறப்பட்டு அன்றைய திகதியில் சென்னையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் கொடூரமான குற்றவியல் தொடர்பான மனிதர்களைச் சென்றடைவதைப் போல அமைக்கப்பட்ட வித்தியாசமான திரைக்கதையே இப்படத்தின் பலமாகும். சில வழக்கமான விசயங்கள் இருந்தாலும், ஒளிப்பதிவு, இசை, வசனம் என அனைத்திலும் கூர்ந்த கவனத்தைச் செலுத்தி இப்படத்தை மிஷ்கின் உருவாக்கியுள்ளார். துப்பறிவாளன் நமக்குள் இருக்கும் தேடலையும் துப்பறிந்து மீட்டுக் கொடுக்கிறது.

 

Tamil top movies countdown 2017: 11th place: Meesaiyai Murukku

இசையமைப்பாளர் Hiphop-தமிழாவின் இயக்கத்தில் அவருடைய வாழ்க்கை வரலாற்றையே ‘மீசையை முறுக்கு’ என்கிற தலைப்பில் படமாக்கியுள்ளார். இசையுலகைக் கொண்டாடும் 2017ஆம் ஆண்டின் ‘மேஜிக்கல்’ சினிமா என்றே சொல்லிவிடலாம். பிரபலமான நடிகர்கள் யாரும் இல்லாமல், திருப்பம், கமர்சியல் போன்ற தேய்வழக்கத் தூண்டல்கள் இல்லாமல் அத்தனை இளைஞர்களையும் சென்றடைந்து இப்படம் வெற்றிப் பெற்றுள்ளது. வழக்கமான ஒரு கதையாக இருந்தாலும், இசையின் மூலம் மட்டுமே ஒரு துள்ளலை, இரசிப்புத்தன்மையை உருவாக்க முடியும் என ஒரு படத்தின் மூலம் ஆதி அவர்கள் நிரூபித்துள்ளார். யூ-டியுப் மூலம் இன்று எண்ணற்ற கலைஞர்கள் தன் திறமையை வெளிபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். வாய்ப்பிற்காக ஏங்கும் அவர்கள் அனைவரின் சாட்சியாக ஹிப் ஹோப் தமிழா வலம் வருகிறார். இப்படத்தை இவ்வாண்டின் சிறந்த பட வரிசையில் சேர்ப்பதில் மகிழ்ச்சிக் கொள்கிறேன்.

‘ஜெயித்தாலும் தோத்தாலும் மீசையை முறுக்கு’

 

Tamil top movies countdown 2017: 12th place: Rangoon

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் வெளிவந்த ரங்கூன் படமே 12ஆம் நிலையை எட்டுகிறது. சென்னை பாரிஸ் கார்னரில் வாழும் பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்து வாழும் தமிழர்களின் வாழ்நிலையைப் பேசிய படம். பெரும்பாலும் சென்னையில் வாழும் பர்மா தமிழர்களின் வாழ்க்கையைத் தொட்டு வெளியான படங்கள் மிகக் குறைவே. அனைவரின் நடிப்பும் திரைக்கதையும் யதார்த்த நிலையில் சிறப்பாக அமைந்திருந்தன. பர்மா தமிழர்களைத் தவறான முறையில் பாவித்துக் கொள்ளும் முதலாளிகளின் அத்துமீறல்களும் படத்தில் பதிவாகியிருந்தன.

 

Top Tamil movies 2017 countdown: 13th Place: Thiruddu payale -2

சுசி கணேசன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் இவ்வாண்டின் அறிவுசார்ந்த சினிமாவிற்கான பிரயத்தனங்கள் கொண்டதாகத் தாராளமாகத் தெரிவிக்கலாம். தொழில்நுட்பம் கடவுளாக மாறிவிட்ட இன்றைய உலகில் எதுவும் இரகசியம் இல்லை என்கிற அச்ச உணர்வை ஏற்படுத்திய படம். எல்லாமும் எங்கோ பதிவாகிக் கொண்டே இருக்கிறது. முகநூல், புலனம் போன்றவற்றை சைபர் குற்றவாளிகள் எப்படிப் பாவித்து தன் காரியங்களைச் சாதித்துக் கொள்கிறார்கள் என்கிற நவீன சமூகத்தின் திரைமறைவுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் வக்கிர முகத்தை இப்படம் ஓரளவிக் காட்சிப்படுத்தியுள்ளதால் இப்படத்தைச் சிறந்த பட வரிசையில் இணைக்கிறேன். கடைசி காட்சியில் உள்ள தர்மம் மட்டுமே கேள்விக்குறியாகின்றது. மற்றப்படி இக்காலத்தின் ஆன்மாவைப் பிரதிபலிக்கும் நல்ல படைப்பு. திருட்டுப் பயலே, சைபர் திருடர்களின் உலகம்.

 

Top Tamil movies 2017 countdown: 14th Place: Oru Kidaayin karunai Manu

சுரேஸ் சங்கையாவின் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் 14ஆம் நிலையை எட்டுகிறது. முழுக்கக் கிராமப்புரத்தைக் கதைக்களமாகக் கொண்டு மனித உணர்வுகளின் ஆதாரத்திலிருந்து மனத்தை நெகிழ்த்தும் நல்ல படம். கிராமிய வாழ்க்கையின் நிதர்சனங்களையும், மண் சார்ந்த மனிதர்களையும் நிஜத்தில் கொண்டு வந்து காட்டியமைக்காக இப்படத்தைச் சிறந்த பட வரிசையில் சேர்க்கின்றேன். ஒரு கிராமமே சேர்ந்து ஒரு கொலையை மறைக்கிறது. உணர்ச்சிக் கொந்தளிப்பின் விளிம்பில் திரைக்கதை பயணிக்கிறது. பாராட்டக்குரிய இயக்கம். இவரின் நேர்மையான படைப்பிற்கு நிச்சயம் வரவேற்பை வழங்கலாம். நிலத்தின் ஆழ்மனம் ஒரு கிடாயின் கருணை மனு.

 

Top Tamil movies 2017 countdown: 15th Place: Taramani

அடுத்து 15ஆம் நிலையை எட்டும் படம் இலக்கிய வாசிப்பும் மிகுந்த கலை இரசனையுமுள்ள இயக்குனர் ராம் இயக்கிய ‘தாராமணி’ ஆகும். பெரும்பாலும், இப்படம் பார்த்தவர்கள் படம் குறித்து அதிருப்தியைத் தெரிவித்திருந்தார்கள். படமாக்கப்பட்ட விதத்திலும் நிறைய சிக்கல் இருக்கவே செய்தன. ராமின் ஓர் இலக்கியத் தொடுதல் குறைவதாகவே இப்படம் அமைந்திருந்தது. ஆனாலும், நான் பார்க்கும் கோணத்தில் நவீன சமூகத்தின் சிதைவுகளின் ஓர் குரலாக ‘தாராமணி’ முக்கியமான முயற்சியாகவே கருதுகிறேன். தனித்து வாழும் பெண்கள், கணவனை விவாகரத்து செய்துவிட்டு வாழும் பெண்கள், ஆண்கள் ஆண்களை விரும்பும் சமூகநிலை, பெண்களின் அகங்களைத் தன அதிகாரத்தால் கட்டமைக்கும் ஆண்களின் சிதறுண்ட மனநிலை என பலவகைகளில் தனிமைப்பட்டுப் போய்விட்ட பெருநகர் சிதைவுகளின் ஒரு குரலை ராம் திரையாக்க முயன்றுள்ளார். மேலும், கவனம் செலுத்தி அப்படத்தைச் செதுக்கியிருக்கலாம். இருப்பினும், ராமின் இம்முயற்சிக்கு இப்படம் நிச்சயம் 2017ஆம் ஆண்டின் சிறந்த பட வரிசையில் இணைக்கவே வேண்டும்.

 

Top Tamil movies 2017 countdown: 16th Place: Dora

டோஸ் ராமசாமி அவர்களின் இயக்கத்தில் வெளிவந்த நயந்தாரா நடித்திருந்த ‘டோரா’ படம் 16ஆம் நிலையை எட்டுகிறது. நயந்தாராவின் மிகச் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய படம். இப்படம் தேர்வானதற்கான காரணம் கதையில் இருக்கும் ஆக்கக்கரமான கலை சிந்தனையே. கார்களை வைத்துப் பலர் பல படங்கள் எடுத்திருந்தாலும் ஒரு நாயையும் காரையும் இணைத்து மிகக் கச்சிதமான ஒரு திரைக்கதையை உருவாக்கி ‘டோரா’ படத்தின் ஆழத்தில் ஒரு மனிதநேயத்தையும் விதைத்து, சிறார் பாலியல் வன்கொடுமையை நோக்கி திரையாக்கப்பட்ட விதம் பாராட்டுதலுக்குரியவை.

 

Top Tamil movies 2017 countdown: 17th Place: Aval

இவ்வாண்டு வெளிவந்த முழுக்க திகில் நிறைந்த படம். ‘கோஞ்சரிங்’ ‘இன்ஸ்டியஸ்’ போன்ற ஆங்கிலப் படம் பார்த்தவர்களுக்குத் தமிழில் அதற்கு ஈடான ஒரு பேய் படமாக ‘அவள்’ படம் மிகவும் அற்புதமான இசை, ஒளிப்பதிவு போன்றவற்றின் வழியாக நமக்கு வழங்கப்பட்டிருந்தது. சிரிப்புப் பேய்ப் படமாக வெளிவந்து கொண்டிருந்த சூழலில் நம்மை அச்சுறுத்திய ஒரு படம். உணர்வு ரீதியில் நம்மைத் திரையுடன் கலக்க வைத்ததற்காக இப்படத்தையும் சிறந்த பட வரிசையில் இணைக்கிறேன். ஒரு சில வழக்கமான விசயங்கள் சலிப்பூட்டின. பேய் என்றால் அருகில் வந்து சடாரென பயமுறுத்தும், கிரகணம் சமயத்தில் பேயின் வலிமை கூடும் போன்ற விடயங்கள் பல படங்களில் பார்த்து சலித்தவைத்தான். ஆனாலும், அவள் படத்தில் ஒலி, ஒளி, நடிப்பு, கேமரா வேலைப்பாடுகள் நம் மனத்தை அசைத்துப் பார்த்தது என்றே சொல்ல வேண்டும்.

 

Top Tamil movies 2017 countdown: 18th Place: Pandigai

அடுத்த இடத்தைப் பெறுவது, Underground Fighters Club என்கிற ஒரு கதைக்களத்தை மட்டும் நம்பி பெரோஸ் இயக்கத்தில் வெளிவந்த ‘பண்டிகை’ திரைப்படம் ஆகும். கிருஷ்ணா இப்படத்தில் வியர்வையும் இரத்தமும் சிந்தி ஒரு ஃபைட்டராக நடித்துள்ளார். ஒரு சண்டை காட்சியை மட்டும் 17 நாட்கள் படமாக்கியுள்ளார்கள். அவ்வளவுக்கும் உண்மைக்கு மிக நெருக்கமான சண்டை காட்சிகளும், அதற்கு ஊடான வாழ்க்கையையும் ஏமாற்றத்தையும் சுரண்டல்களையும் ‘பண்டிகை’ காட்டியுள்ளது. ஒளிப்பதிவு, கலை, இசை, சண்டை என அனைத்திலுமே ஒரு புதிய தாக்கத்தைத் தமிழ் சினிமாவில் ஏற்படுத்தியதற்காக ‘பண்டிகை’-யைச் சிறந்த பட வரிசையில் இணைக்கிறேன்; கொஞ்சம் அலுப்பூட்டும் திரைக்கதை அமைப்பு என்றாலும் முழுமையாகப் பல உரையாடல்களை மேற்கொண்டு கலந்தாலோசித்து இத்திரைக்கதையைப் பல தகவல்களுடன் உருவாக்கியுள்ளார்கள்.

Top Tamil movies 2017 countdown: 19th Place: Kavan

கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளிவந்த விஜய் சேதுபதி நடித்த ‘கவண்’ திரைப்படம், தொலைக்காட்சி நிறுவனங்கள் தங்களின் TRP உயர்விற்காக என்னவெல்லாம் போலித்தனங்களையும் அரசியலையும் மேற்கொள்ளும் என்கிற நிஜத்தைக் கவணால் அடித்து உடைத்துள்ளது. படத்தின் முதல் பாதியில் வெளிப்படும் தொலைக்காட்சிக்குப் பின்னால் உள்ள அரசியல் சாணக்கியங்கள் அதிர்ச்சியளிக்கின்றன. கலைக்கு ஒரு அசாத்தியமான தைரியம் உண்டு. அதிகாரங்களை எதிர்க்கும் வல்லமை கலைக்கே உண்டு. அதனை மிகவும் கமர்சியலாக, வெகுஜன மக்களை அடையும்படி சொன்னதற்காக, கவண் படத்தை 2017ஆம் ஆண்டின் சிறந்த பட வரிசையில் இணைக்கிறேன். ஆனால், படத்தின் இரண்டாம் பாதியில் வில்லனைப் பழிவாங்குதல் படலம் கொஞ்சம் அலுப்பூட்டும் வகையில் அமைந்துவிடுவதே படத்தின் பலவீனமாகும். மேலும், இசையிலும் மாற்று முயற்சிகள் வெளிப்படவில்லை. கவண் அதிகாரத்தை நோக்கியக் கல்லடி.

 

Top Tamil movies 2017 countdown: 20th Place: Vizhithiru

மீரா கதிரவன் இயக்கத்தில் வெளிவந்த ‘ஒரு நாள் இரவு பொழுதில் நடக்கும் கதைக்களம். கதை தேர்வும் கதைக்களமும் நடிகர்களின் தேர்வும் மிகக் கச்சிதமாகக் கதை போக்கின் பரப்பரப்பிற்குக்கேற்ப பொருந்தி படத்திற்கு வலு சேர்க்கும் வகையில் அமையப் பெற்றிருந்தன. மீரா கதிரவன் அவர்களின் பல நாள் உழைப்பு இப்படம். அதே போல படமும் மாநகரத்தின் ஓர் இரவில் நான்கு வகையான மனிதர்களுக்கு நிகழும் சந்தர்ப்பங்கள் அவர்களை எந்தப் புள்ளியில் இணைக்கிறது என்பதனைச் சிறப்பாகத் திரைக்கதையாக்கியிருப்பார். படத்தில் ஒளிப்பதிவும், இசையும் கதைக்கேற்ப இரவின் மௌனத்தையும் அதன் ஆழத்தில் இரையும் சத்தத்தையும் காட்சிக்குப் பலமாக இசையிலும் ஒளிப்பதிவிலும் க்லை வேலைப்பாடுகளிலும் மிகச் சிறப்பாக வெளிக்கொணர்ந்ததற்காக ஒரு வித்தியாசமான முயற்சியான ‘விழித்திரு’ படத்தைச் சிறந்த பட வரிசையில் இணைக்கிறேன். வெங்கட் பிரபு, வித்தார்த், பேபி சாரா என பலர் இப்படத்தில் சிறப்பாகப் பயன்படுத்தப்பட்டிருப்பார்கள். ஒரு நாள் இரவில் வாழும் கதாப்பாத்திரங்கள் என்பதால் அவர்களின் பின்புலம், வாழ்க்கை போன்றவற்றில் அதிகம் கவனம் செலுத்தமுடியாமல் போவதே படத்தின் கதாபாத்திரங்களின் மீது கவனம் குவிய சிரமமாக உள்ளது; அவர்களின் அவஸ்த்தைகளின் மீதும் மனம் சட்டென பதியவும் தடுமாறுகிறது. மற்றப்படி இதுவொரு நல்ல முயற்சி.

 

Top Tamil movies 2017 countdown: 21st Place: athe Kangal

ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் வருடத் தொடக்கத்தில் வெளிவந்த படம். கலையரசன் என்கிற அருமையான நடிகருக்கு மேலும் தன் நடிப்பைக் காட்டுவதற்குரிய நல்ல படம் என்றே சொல்லலாம். சமூகக் குற்றப்பிரிவுகளை மர்மத்துடன் காட்டியப் படம். ஒருவனின் வாழ்க்கையின் பார்வையில்லாத ஒரு பகுதியிலும் பார்வை கிடைத்த ஒரு பகுதியிலும் எப்படித் தன்னைச் சுற்றியுள்ளவர்களையும் உலகையும் உள்வாங்குகிறான் என்கிற அளவில் ஓரளவிற்குக் கச்சிதமான கதை அமைப்பில் காட்ட முயன்றுள்ள படம் என்பதற்காக இவ்வாண்டின் சிறந்த பட வரிசையில் ‘அதே கண்கள்’-ளை இணைக்கிறேன். அணுமானித்துவிட முடிந்த திருப்புமுனைகள் மட்டுமே இப்படத்தின் பலவீனம். ஆனாலும், நம்மைக் கோபப்படுத்தக்கூடிய கதாபாத்திரத்தில் ஸ்வதா நடித்திருப்பது கதையின் யதார்த்தத்தைப் பிரதிபலித்தது. வித்தியாசமான கதைக்களம் ஆனாலும் திரைக்கதையை மேலும் செம்மைப்படுத்தியிருக்கலாம் என்றே தோன்றியது. அதே கண்கள் நமக்குள் ஆழப்பதியும் பார்வை.

 

Top Tamil movies 2017 countdown: 22nd Place: Power Paandi

தனுஷ் இயக்கிய முதல் தமிழ்ப் படம் என்றாலும் படத்தின் ஆன்மாவாக இருந்து தூக்கி நிறுத்திய பெருமை நம் ‘அரண்மனை கிளி’ புகழ் ராஜ்கிரன் அவர்களையே சேரும். 60 வயது ஆகிவிட்ட ஒருவர் தன் முதல் காதலியைத் தேடி வீட்டைவிட்டுப் புறப்படுகிறார் எனும் கதையின் மையமே பிரமிப்பைக் கொடுக்கிறது. கமர்சியல் படங்களில் இதுபோன்ற கதை தேர்வுகளை நம்மால் பார்க்க முடியாது. அந்தத் துணிச்சலுக்காகவும் வித்தியாசமான முயற்சிக்காகவும் ராஜ்கிரனின் யதார்த்தமான நடிப்பிற்காகவும் 2017ஆம் ஆண்டின் சிறந்த பட வரிசையில் ‘பவர் பாண்டியை’ சேர்க்கிறேன்.

ராஜ்கிரனுக்கு இருந்த அதே முக்கியத்துவத்தில் கொஞ்சம் நடிகை ரேவதிக்கும் அதிகப்படுத்தியிருந்தால் அவரும் நடிப்பில் தன் ஆளுமையைக் காட்டியிருக்கக்கூடும். நம் வீட்டில் உள்ள பெரியவர்களின் சுதந்திரம் பற்றி நாம் என்றாவது கவலைப்பட்டதுண்டா? வயதாகிவிட்டால் அவர்கள் வீட்டோடு நம் காவலில் இருக்க வேண்டும் என்று மட்டுமே இருக்கும் நம் நினைப்புகளை இப்படம் அசைக்கிறது.

 

Top Tamil movies 2017 countdown: 23rd Place: Meyaatha Maan

அறிமுக இயக்குனர் ரத்ன குமாரின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இப்படம் யதார்த்த சினிமாவின் அவசியத்தை உணர்த்தியுள்ளது. பெரும்பாலும் காதல், நட்பு, உறவுகளில் சிக்கல் என்றாலே அதனை ஒரு மிகை உணர்ச்சி காவியமாகப் படைப்பதும், அல்லது தேய்வழக்கில் கதை சொல்வதும் ஒரு தீர்க்கமான ‘பார்மூலா’ ஆகிவிட்ட தமிழ் சினிமா சூழலில் முழுக்கவும் ராயப்புரத்தின் யதார்த்த வாழ்வியலுக்குள் சில இளைஞர்களின் மத்தியில் நிகழும் காதல், நட்பு போன்ற விசயங்களை இயக்குனர் படமாக்கியுள்ளார். படத்தில் வரும் தமிழ் சினிமாவில் துணைக் கதைப்பாத்திரத்தினை ஏற்று நடிக்கும் விவேக் பிரச்சன்னாவை இப்படத்தில் இயக்குனர் மிகவும் சிறப்பாக அவருடைய திறமைகளை வெளிக்கொணர்ந்து கதைக்கேற்ப பாவித்துள்ளார். மொழி, உடல் பாவனை, இசை, நடனம் என அனைத்திலும் ஒரு வாழ்விடத்தின் அசல் அனைத்தையும் திரட்டி உருவாக்கப்பட்டிருக்கும் படம். படத்தின் நீளமும் திரைக்கதையும் கொஞ்சம் அலுப்பூட்டினாலும் இவ்வாண்டின் சிறந்த முயற்சி என்றே சொல்ல வேண்டும். இசை சந்தோஷ் நாராயணன், ராயப்புரத்தின் மக்களைக் கண் முன் கொண்டு வருகிறார்.

 

Top Tamil Movies 2017 countdown: 24th Place: Velaikaaran

‘தனி ஒருவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனக்கான அடையாளத்தை உருவாக்கிய மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த பன்னாட்டு நிறுவனங்கள் தங்களின் இலாபகரமான இடங்களைத் தக்க வைத்துக் கொள்ள பயனீட்டாளர்களின் உயிர்களைப் பணையம் செய்வதையும், அதற்கு உடந்தையாக வேலைக்காரர்களை உட்படுத்தும் அரசியலையும் பேசிய படம். திரைக்கதை, இசை, இணைக் கதைப்பாத்திரங்களின் நடிப்பாற்றல் போன்றவற்றில் நிறைய சிக்கல் இருந்தாலும், மார்க்கேட்டிங்கில் எத்தனை உட்பூசல்களும் அரசியலும் அடங்கியுள்ளன என்கிற ஒரு தெளிவைப் படம் வழங்கியதற்காக, மக்களை மக்கள் விரும்பும் கலையின் மூலம் விழிப்புக்கு உட்படுத்தியதற்காக இப்படத்தை 2017ஆம் ஆண்டின் சிறந்த வரிசையில் சேர்க்கின்றேன். (சிவக்கார்த்திகேயன் பாத்திரத்திற்குச் செலுத்திய அதீத கவனத்தைப் படத்தில் வரும் தரமான துணைக்கதாப்பாத்திரங்களின் மீதும் காட்டியிருந்தால், படம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்)

 

Top Tamil Movies 2017 countdown : 25th Place: மரகத நாணயம்

ஏ.ஆர்.கே சரவன் இயக்கத்தில் வெளிவந்த இவ்வாண்டின் சிறந்த (புதையல் + நகைச்சுவை + பேய்) என அனைத்தையுமே கதைக்குத் தேவையான அளவு மட்டும் கலந்து கொடுத்து பார்வையாளர்களை மகிழ்வித்த படம். ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் போதுமான அளவில் முக்கியத்துவம் வழங்கப்பட்டதோடு அல்லாமல் மரகத நாணயத்தைப் பற்றி வரலாற்று நோக்கும் கச்சிதமாக அமைந்திருந்தது. சமூகத்தின் சிந்தனையைத் தவறான போக்கில் கொண்டு செல்லாதவரை, மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நேர்மையான நோக்குடன் வந்ததற்காக இப்படத்தைச் சிறந்த படம் வரிசையில் சேர்க்கிறேன்.

 

-கே.பாலமுருகன் 

சவரக்கத்தி – ஓர் அன்பு கத்தி- திரைப்பார்வை

மிஷ்கின் ‘மங்கா’ எனும் கதாபாத்திரத்திலும், இயக்குனர் ராம் ‘பிச்சை’ என்கிற முடித் திருத்தம் செய்பவராகவும் இரு துருவங்களில் நின்று நடித்திருக்கிறார்கள்.  புதுமுக இயக்குனர் என்றாலும் ஜி.ஆர் ஆதித்யா மிஷ்கினிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய அனுபவத்துடன் மிஷ்கின் பட சாயல் ஆங்காங்கே வியாபித்திருக்கும்படியே படத்தை உருவாக்கியிருக்க்கிறார். சினிமாத்தனங்களைப் பல இடங்களில் உதறித்தள்ளிவிட்டு தனித்துவத்துடன் ‘சவரக்கத்தி’ மனத்தில் ஆழ நுழைகிறது.

பெரும்பாலான கதாநாயக முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் கதாநாயகனை நோக்கிய துதிப்பாடல்களும் தூயக் கட்டமைப்புகளும் மட்டுமே வழக்கமான தமிழ் சினிமாவின் கூறுமுறையாக இருக்கும். ஆனால், சவரக்கத்தி கதாநாயகனைச் சுற்றி கட்டியெழுப்பப்பட்டிருக்கும் படமாக இருப்பினும், ஆண்மை பிரச்சாரமெல்லாம் ஏதும் இல்லாமல் வலிக்கும் அடிக்கும் பயந்து பிறர் காலில் விழும் ஓர் எளிய மனிதனே இப்படத்தின் கதாநாயகனாகக் காட்டப்பட்டுள்ளான். இக்கட்டுடைப்பே படத்தை வித்தியாசப்படுத்துகிறது.

ஒரே நாளில் நடக்கும் சம்பவம் என்றதுமே இது சிறுகதைக்குரிய கச்சிதம் பொருந்திய வடிவநேர்த்தியாகும். அதனைத் திரைக்கதையாக்கி தொய்வின்றி கொண்டு போனதுதான் இயக்குனரின் சாமர்த்தியம் எனலாம். மசாலா படங்களையும் தேய்வழக்குக் கதாபாத்திர மோகங்களைக் கக்கித் தள்ளும் படங்களையும், இரட்டைத்தனமான வசனங்களின் மூலம் செய்யப்படும் மூன்றாம்தர நகைச்சுவையை இரசிப்பவர்களுக்கும் ‘சவரக்கத்தி’ அவர்களின் காலாவதியான இரசனையைக் கூர்த்தீட்டும்.

இரண்டு விசயங்கள் மட்டுமே கொஞ்சம் தவிர்த்திருக்கலாம் என்று தோன்றியது. கதையின் இரண்டாம் பாதியில் திரைக்கதையில் ஏற்படும் சிறிய தொய்வும், எல்லா கதாபாத்திரங்களும் கொஞ்சம் மிகையான நடிப்பை வழங்கியிருப்பதாகத் தோன்றும் நெருடலும் மட்டுமே சரிசெய்திருக்க வேண்டியதாகப் படுகிறது.

இரண்டு வெவ்வேறான வாழ்க்கைக்குள்ளிருந்து வரும் மனிதர்கள் ஓர் எரிச்சலும் பகையும், வெறுப்பும் ததும்பும் புள்ளியில் சந்தித்துக் காரணமே இல்லாமல் ஒருவருக்கொருவர் முரண்படுகிறார்கள். பின்னர் வலியவன் எளியவனைத் துரத்துகிறான். எளியவன் வாழ்வதற்கு வேண்டி சந்தர்ப்பங்களின் எல்லா மூலை முடுக்கிலும் புகுந்து தப்பித்து ஓடுகிறான். வாழ்க்கை என்பது சதா நம்மைத் துரத்திக் கொண்டும், நாமும் பற்பல விசயங்களிலிருந்து தப்பித்துக் கொண்டிருக்கும் ஒரு நிச்சயமற்ற பந்தயம் எனப் படம் காட்டுகிறது.

இறுதியில் மிஞ்சுவது மனிதநேயமே. அதுவரை ஆக்ரோஷமாக எளியவனைத் துரத்தும் வலியவன் ஒரு சம்பவத்தினூடாக  மனத்தால் ஈரப்படுகிறான். தன் தலைக்கனத்தையும் வெறுப்பையும் வன்முறையையும் தூக்கிவீசிவிட்டு வாழ்க்கை தனக்காக வகுத்திருக்கும் எல்லையை நோக்கிக் கிளம்புகிறான். வாழ்க்கை குறித்த அருமையான சித்தரிப்பு ‘சவரக்கத்தி’.

-கே.பாலமுருகன்

ஒரு மிகப் பெரிய கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி- விசாரணைகளின் பலவீனங்கள்

 

சம்பவம் நடந்த நாள்: கடந்த ஜனவரி 24

இடம்: (இரகசியமாக்கப்பட்டுள்ளது)

நேரம்: காலை 10.00 மணி

 

இதுவொரு மிகப் பயங்கரமான கொள்ளைச் சம்பவமாகச் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. இக்கொள்ளைச் சம்பவத்தில் மொத்தம் நான்கு பேர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள். பாதிக்கப்பட்டவர்கள் ஓர் ஆள்தான்  என்றாலும் இன்றளவும் அக்கொள்ளைச் சம்பவம் குறித்துப் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

காவல்துறையினர் இதுபோன்ற ஒரு குரூரமான கொள்ளைச் சம்பவத்தைப் பார்த்ததில்லை என்றும் விசாரணையை எந்தக் கோணத்திலிருந்து தொடங்குவது என்றும் தீவிரமாகக் கலந்தாலோசித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒரு காவல்துறை அதிகாரியின் வாக்குமூலம் பின்வருமாறு:

“எனது 10 வருட வேலை  அனுபவத்தில் இதுதான் நான் கண்டு அதிர்ச்சியடைந்த ஒரு கொள்ளைச் சம்பவம் ஆகும். சமீபத்தில் ஒரு தமிழ் சினிமாக்கூட குற்றப் பரம்பரையில் கொள்ளைச் சம்பவத்தின் வன்முறையைக் காண்பித்தது. அப்படத்தைவிட பன்மடங்கு கேள்விப்படுவோருக்கு முழு அதிர்ச்சியையும் பயத்தையும் கொடுக்கக்கூடியதாக இக்கொள்ளைச் சமபவம் எப்பொழுதுமே பீதியை உண்டாக்கும் என்றே நினைக்கிறேன்”

அக்கொள்ளைச் சம்பவத்தை நேரில் பார்த்த ஒரு பெயர் குறிப்பிட விரும்பாத நபரின் வாக்குமூலம்:

“என் வாழ்நாளில் அத்தகையதொரு கொள்ளையர்களையும் கொள்ளைச் சம்பவத்தையும் நான் பார்த்ததே இல்லை. இன்னமும் என் நடுக்கம் குறையவே இல்லை. முடிந்தால் அக்கொள்ளைச் சம்பவத்தைப் பற்றி குழந்தைகளிடம் சொல்ல வேண்டாம். அக்கொள்ளையர்களுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும்”

விசாரணை மிகவும் தீவிரமாக முடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட கொள்ளையர்களைக் காவல்துறை கைது செய்தது. உண்மை சம்பவம் அவர்களுக்கு மட்டுமே தெரியும் என்பதால் நேரடி வாக்குமூலம் பெறக் காவல்துறை முடிவெடுத்தது. எல்லோரும் ஒன்று திரண்டு கொள்ளையர்களைப் பொதுமக்கள் முன்னிலையில் விசாரணைக்குட்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

கொள்ளையர்களின் பெயர்கள் பின்வருமாறு:

  1. முரளி
  2. கபிலன்
  3. குமார்
  4. வினோத் 

 

கேமரா பதிவுடன் விசாரணை தொடங்கப்பட்டது:

காவல்துறை : முரளி, நீங்கள் சொல்லுங்கள். ஏன் அதைச் செய்தீர்கள்?

முரளி: எனக்கு அது பிடிக்கல… அதான்…

காவல்துறை: ஏன் பிடிக்கவில்லை?

முரளி: அது என் கூட்டாளி இருக்கான் இல்ல? குமாரு… அவனோட…

காவல்துறை: அது எப்படி உங்களுக்குத் தெரிய வந்தது.

முரளி: அவன் தான் சொன்னான்…(சிரிக்கிறான்)

காவல்துறை: சரி, எப்படி அக்கொள்ளையை மேற்கொண்டீர்கள்?

கபிலன்: அது நான் சொல்றன். நாங்க கேட்டோம், சுபா கொடுக்கல. அப்பறம் அது சாப்ட போச்சா… அப்பத்தான் நான் போய் எடுத்தன்…

காவல்துறை: அப்படிச் செய்யலாமா?

முரளி: நான் கேட்டன் அதுதான் கொடுக்கல… அதான் அது குமாரோடையா இல்லயான்னு பாக்க எடுத்தன்…

காவல்துறை: பார்க்கத்தான் எடுத்தீர்கள் என்று எப்படி நம்புவது?

குமார்: நாங்கப் பாத்துட்டு வைக்கறதுக்குள்ள  எங்கள பிடிச்சிட்டாங்க   தெரியுமா?

காவல்துறை: இதை எப்படி நாங்கள் நம்புவது?

வினோத்: வேணும்னா சுபாகிட்ட கேட்டுப் பாருங்க…

கொள்ளையில் பாதிக்கப்பட்ட சுபா வரவழைக்கப்படுகிறாள்.

காவல்துறை: சொல்லுங்கள் சுபா, என்ன நடந்தது?

சுபா: (அழுதுகொண்டே…) என் அழிப்பானை இவனுங்கத்தான் எடுத்தானுங்க…

காவல்துறை: பிறகு என்ன நடந்தது?

சுபா: குமாரு, திரும்பி வந்து கொடுத்துட்டான். ஆனால், அதுல கொஞ்சம் பிஞ்சிருக்கு… எனக்கு புது அழிப்பான் வேணும்….(மீண்டும் அழுகை)

சுபா மீண்டும் அனுப்பப்பட்டவுடன் காவல்துறை அந்த நான்குக் கொள்ளையர்களின் முகத்திலும் கருப்புத் துணியை மூடி வெளியே கொண்டு வந்தது.

மக்கள் கூட்டம் அந்த 7 வயது நிரம்பிய கொள்ளையர்களைப் பார்வையிட அலைமோதினர். கடுமையான  காவலுடன் காவல்துறை அவர்களை வண்டியில் ஏற்றி நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்றது. குற்றவாளி கூண்டில் நிற்க வைக்கப்பட்டிருந்த அவர்கள் மீது பலர் கல்லெறிந்தனர். பலர் வசைப்பாடினர். பலர் எதிர்ப்புப் பலகையையெல்லாம் காட்டிக் கொண்டு முழக்கமிட்டனர்.

சிறிது நேரத்திற்குப் பின் நீதிமன்றத்தில் அவர்களுக்குத் தீர்ப்பு வாசிக்கப்பட்டது.

“ஏழு வயது நிரம்பிய பள்ளி மாணவர்களான முரளி, கபிலன், குமார் மற்றும் வினோத் ஆகிய நால்வரும் கடந்த ஜனவரி 24 2018ஆம் ஆண்டில் காலை 10 மணிக்கு ‘சுபா’ என்கிற அதே ஏழு வயது ஆகிய சிறுமியின் 50 சென் மதிப்புள்ள அழிப்பான் ஒன்றை எடுக்க முயன்றுள்ளனர். ஆகவே, விசாரணைக்குப் பின் குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவர்களைத் தொடர்ந்து 10 நாட்கள் கடுங்காவலில் வைத்து ரோத்தானில் அடிக்கவும், தொடர்ந்து கடுமையாகத் திட்டவும், தீர்ப்பளிக்கப்படுகின்றது’

குறிப்பு: மேற்கண்ட நீதிமன்றம் நம் வீடாக இருக்கலாம்; பள்ளிக்கூடமாகவும் இருக்கலாம். மேற்கண்ட காவல்துறை என்பவர்கள் பெரியர்களாக இருக்கலாம், பெற்றோர்களாக இருக்கலாம்… யாராக வேண்டுமென்றாலும் இருக்கலாம். தீர்ப்பு என்பது நம் மனசாட்சியின் குரலாக இருக்கலாம்.

ஓர்  அழிப்பானை எடுத்த சிறுவர்களையும் ஒரு வங்கியைக் கொள்ளையடித்த திருடர்களையும் நாம் ஒரே மாதிரித்தான் நடத்திக் கொண்டிருக்கிறோமா என்கிற கேள்வியை உங்கள் முன் சிந்தனைக்காக வைத்துவிடவே இக்கற்பனை கொள்ளைச் சம்பவம். இதை யாரையும் எந்தத் தனிநபரையும் தனி அமைப்பையும்  குறிப்பிட அல்ல.  நம் விசாரணைகளில் முறையான உளவியலும் பெற்றோரியலும் அன்பும் இல்லாதனாலேயே பெரும்பாலான சம்பவங்களுக்குக் குற்றம் என்கிற பெயரைச் சூட்டி சிறார்களைக் காயப்படுத்துகிறோம். நம் விசாரணைகளின்/ அணுகுமுறைகளின்  பலவீனங்களிலேயே ஒரு தலைமுறையின் சீரழிவு ஒளிந்துள்ளது என்பதே இப்பதிவின் எதிர்வினை.  சிறார் செய்யும் தவறுகளை அணுகும் நம் விதத்தை நோக்கி நம்மை நாமே விசாரித்துக் கொள்ள இதுவொரு சந்தர்ப்பத்தை  உருவாக்கும் எனில்…

-கே.பாலமுருகன்

சிறார் குற்றச் செயல்களும் அதன் மீதான பக்குவமற்ற விசாரணையின் விளைவுகளும்

‘குற்றவாளிகள்  உருவாவதில்லை; நாம் உருவாக்கி வைத்திருக்கும் தண்டனைகளைப் பெறுவதற்குத் தொடர்ச்சியாக நமக்கு ஆட்கள் தேவை. அதனாலேயே, தீர விசாரிக்காமல்  அவர்களுக்கு உடனடியாக ‘குற்றவாளி’ என்கிற பட்டத்தைச் சுமத்தி கூண்டில் ஏற்றி வசைப்பாடுகிறோம்.

பின்னர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டு மீண்டும் வாழ்க்கைக்குள் திரும்பிவிடுவோம். ஒருபோதும் அக்குற்றம் நிகழ்ந்ததற்கான காரணத்தைப் பற்றியும் குற்றங்களின் ஆழத்தில் கிடக்கும் வேர்கள் பற்றியும் அறிவார்ந்த கலந்துரையாடலுக்கு நாம் முன்வருவதே இல்லை. மீண்டும் ஒரு குற்றம் நிகழும்போது எல்லோரும் கிளம்பி  வந்துவிடுவோம். நமக்குத் தேவை அவ்வப்போது எங்காவது ஏதாவது நடந்து யாராவது மாட்டிக் கொள்ள வேண்டும். நம் பொழுதிற்கு அவர்கள் சிறுது நேரத் தீனி. அவ்வளவுத்தான் நமக்கும் சமூகத்தில் நடக்கும் குற்றங்களுக்குமிடையே  இருக்கும் தார்மீகமான உறவு.

சமூகத்தில் இருக்கும் ஆய்வாளர்கள், சட்ட நிபுணர்கள், உளவியாளர்கள், கல்வியாளர்கள் என ஒரு விரிவான ஆளுமை கலந்துரையாடல் மட்டுமே ஒரு சமூகத்தில் நிகழும் குற்றங்களை அதன் அடிநுனிவரை சென்று விவாதித்து அதன் சாத்தியப்பாடுகளையும் உண்மை நிலவரங்களையும் திறந்து காட்ட முடியும் என நினைக்கிறேன். அதுவரை எல்லோரும் மாறி மாறி கூச்சல் போட்டாலும் அதற்குரிய நிவாரணம் நிரந்தரமானது கிடையாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருமுறை 1996ஆம் ஆண்டில் நூலகப் புத்தகம் ஒன்றை எடுத்ததற்காக என் வகுப்பு நண்பன் ஒருவன் அன்றைய சிறப்பு சபைக்கூடலில் வெளியே அழைக்கப்பட்டு 15  நிமிடங்கள் நிற்க வைக்கப்பட்டு அப்பொழுது இருந்த நிர்வாகத் தலைவரால்  கடுமையாக அறிவுரைக்கப்பட்டான். அவமானத்தால் கூனி குறுகி அவன் நின்றிருந்ததையும் எங்கள் யாரையும் அவனால் பார்க்க முடியாமல் தடுமாறியதையும் அந்த 15 நிமிடங்களும் நான் கவனித்துக் கொண்டே இருந்தேன். வகுப்பிலேயே கொஞ்சம் சுட்டியானவனும் கெட்டிக்காரனுமான அந்நண்பன் ஏன் இப்படிச் செய்திருக்கிறான் என்கிற குழப்பம் மட்டுமே எனக்குள் பூதாகரமாய் எழுந்தபடி இருந்தது.  அப்பொழுதுதான் இடைநிலைப்பள்ளிக்கு வந்து முதல் ஆண்டு.

அன்றைய நாளுக்குப் பின் அவன் பள்ளிக்கே வரவில்லை. வகுப்பாசிரியரிடமும் கேட்டுப் பார்த்தோம். அவருக்கும் தெரியவில்லை என்றே சொன்னார். பின்னர், அவன் வேறு மாநிலத்திற்குச் சென்றுவிட்டதாக இன்னொரு நண்பரின் மூலம் தெரிந்து கொண்டோம். அவமானம் என்பதைப் பற்றி அப்போதுவரை என்னால் உள்ளூர உணர முடியாவிட்டாலும் ஒரு வகுப்பு நண்பனின் இழப்பும் பிரிவும் அதனைக் கனமாக உணர்த்திச் சென்றது. அவனுடைய காலியாக இருக்கும் நாற்காலியைப் பார்க்கும்போதெல்லாம் அவன் எடுத்தது ஒரு கதைப் புத்தகம்தானே  என்கிற உண்மை மனத்தில் ஏதோ ஒரு குற்றவுணர்ச்சியை உசுப்பிக் கொண்டிருந்தன.

அவன் ஏன் கதைப் புத்தகத்தை எடுத்தான் என்று யாருமே கேட்கவில்லை. அவனுக்குத் தண்டனை அளிக்க வேண்டும் என்பதிலேயே எல்லோரின் கவனமும் இருந்தது. ஒருவேளை அவனை மீண்டும் சந்திக்க வாய்ப்புக் கிடைத்திருந்தால் அவன் நூலகத்திலிருந்து எடுத்த அந்தக் கதைப் புத்தகத்தின் தலைப்பை மட்டுமே கேட்க ஆவலாக இருந்தேன். நூலகம் சென்று பொறுப்பாளரிடமும் விசாரித்தும் பார்த்தேன். அவர்களுக்கும் அவன் நூலகத்திலிருந்து எடுத்தக் கதைப் புத்தகம் பற்றி வேறேதும் தெரியவில்லை. நூலகத்தில் குவிந்து கிடந்த ஏதோ ஒரு கதைப் புத்தகம் என் நண்பனின் ஆசையைத் தூண்டியிருக்கிறது. அல்லது தன் ஆயிரம் வார்த்தைக் கரங்களால் அவன் மனத்தைச் சீண்டியிருக்கிறது. எது அந்தப் புத்தகம் என்று கண்கள் அலைந்தன.

ஒருவகையில் அச்சம்பத்திற்குப் பிறகே நான் அடிக்கடி நூலகம் செல்ல ஆரம்பித்தேன். கதைப் புத்தகங்களின் தலைப்புகளைப் படிக்க மட்டும் செய்தேன். பிறகு மீண்டும் ஓய்வு மணி முடிந்ததும் வகுப்பிற்கு வந்துவிடுவேன். சிலர் ஏன் நான் அடிக்கடி நூலகம் போகிறேன் என்று கிண்டலாகக் கேட்டார்கள். என் வகுப்பு நண்பனைப் போல நானும் புத்தகம் எடுக்கத் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறேன் என்றும் கேலிச் செய்தார்கள். ஏனோ ஒருநாள் அந்தக் கதைப்புத்தகமே தன்னைக் காட்டிக்  கொடுக்கும் என்று நம்பியிருந்தேன்.

அவனுடைய அம்மா ஓர் இந்தியர் அப்பா ஒரு சீனர். ஆகவே,பள்ளியில் சீன மொழியும் தமிழ் மொழியும் பேசத் தெரிந்த ஒரே ஒருத்தன் அவன் தான். அவனுக்கு நண்பர்களும் அதிகம். எல்லாம் வகுப்பிற்குள்ளும் நுழைந்து யாரிடமாவது கதையடித்துவிட்டு வரும் நெருக்கம் கொண்டவன். மனத்திற்கு ஏதும் ஒவ்வவில்லை என்றால் சட்டென கேட்டும் விடுவான். அப்படிப்பட்ட அவன் தான் அன்று சபைக்கூடலில் தலைக் குனிந்து நின்றிருந்தான். ஒருவேளை அவனைத் தனியறையில் வைத்து அன்பாக விசாரித்திருந்தால் அவன் அவனுக்குள் தகித்துக் கொண்டிருக்கும் உண்மையைச் சொல்லியிருப்பான். தண்டனை கடுமையாக வேண்டும் என நாம் இன்னமும் பள்ளிகளிலும் எளிய மக்களிடமும்தான் சொல்லிக் கொண்டே இருக்கிறோம். தண்டனைகள் சீர்த்திருத்தப்பட்டு மறு ஆலோசனைக்குட்படுத்தப்பட வேண்டும் என்பதே இன்றைய தேவை என நினைக்கத் தோன்றுகிறது.

ஏழு வயது சிறுவன் தன் நண்பனின் பென்சிலை எடுத்துவிட்டால் அதற்கும் ‘திருட்டு’ என்றுத்தான் பெயர் வைக்கிறோம். ஏழு ஆட்கள் கொண்ட பெரிய திருட்டுக் கும்பல் ஒன்றாக இணைந்து வங்கியிலுள்ள பணத்தை எடுத்துவிட்டால் அதையும் ‘திருட்டு’ என்றுத்தான்  அழைக்கிறோம். ஆனால்,   உளவியல் ரீதியிலும்  சமூக ரீதியிலும்  ஏன் நாம் மறுபரிசீலனை செய்து நம் குற்றங்களை அணுகும் விதங்களை சீரமைக்கக்கூடாது? ஏழு வயது சிறுவனையும் ஒரு பெரிய திருட்டுக் கும்பலையும் நான் அணுகும் விதம் ஒரே மாதிரி இருப்பதில் இருக்கக்கூடிய பின்விளைவுகளை நாம் அறியாமலேயே இரண்டிற்கும் ஒரேவிதமான உணர்வெழுச்சியையும் கோபத்தையும் காட்டுகிறோம்.

வகுப்பறையில் நிகழும் அல்லது பள்ளியில் நடக்கும் அனைத்தையும் ஆலோசனைப் பிரிவுக்குக் கீழ் கொண்டு வந்து அக்கறையெடுத்து அதனை அணுகும் பக்குவமிக்க ‘கவுன்சலிங் ஆலோசகர்கள்’ ஒவ்வொரு பள்ளிக்கூடத்திலும் தீவிரப்படுத்தப்பட  வேண்டும். அவர்களுக்குச் சிறப்புப் பயிற்சி வழங்கப்பட்டு தவறுகள் செய்யும் மாணவர்களை ‘உளவியல் ரீதியில்’ அணுகி அவர்களை மீட்டெடுக்கும் பணி துரிதப்படுத்த வேண்டும். வகுப்பில் நடக்கும் ‘நடத்தை சிக்கல்கள்’ தொடர்பான விழிப்புணர்ச்சியும் அதனை ‘கவுன்சிலிங்’ ஆலோசனைப்பிரிவிடம் கொண்டு போகும் நுட்பமும்  அறிந்தவர்களாக அக்குறிப்பிட்ட ஆலோசகர்கள் திகழப்   பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.

எல்லா சம்பங்களையும் மற்ற மாணவர்கள் முன்னிலையில் விசாரிப்பதை நாம் முதலில் தவிர்க்க வேண்டும். இதுவே  வீடாக இருந்தாலும் உங்கள் பிள்ளைகளை மற்றவர் முன்னிலையில் விசாரித்து அவர்களை அவமானத்திற்குள்ளாக்கும் செயலை நாம் முற்றிலுமாகத் தவிர்க்க வேண்டும். தான் தவறு செய்துவிட்டேன் என்று உணர வைக்கும் பொருட்டு நாம் மேற்கொள்ளும் ‘திறந்த விசாரணை’ என்பது அவர்களுக்கு அவமானத்தையே தேடித் தருகிறது. குற்றத்தை அவர்களிடமிருந்து களையவதற்குப் பதிலாக நாம் அவர்களை மேலும் குரூரமான குற்றவாளியாக்கிக் கொண்டிருக்கிறோம். அல்லது தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் அளவிற்கான அகத்தூண்டலை உருவாக்கிக் கொண்டிருக்கிறோம்.

அதே போல வீட்டிலும் பெற்றோர்கள் ஒரு நல்ல ஆசிரியராக இருக்கத் தெரிந்திருக்க வேண்டும். உங்கள் பிள்ளை ஒரு தவறு செய்துவிட்டால் அவனை முதலில் பிறர் முன்னிலையில் தண்டிப்பதை நிறுத்தங்கள். அது காதைப் பிடித்துத் திருகும் எளிய கண்டிப்பாக இருந்தாலும் அதனைப் பொதுவில் செய்யாதீர்கள். எத்தனை வயதாக இருந்தாலும் சுயமரியாதை எல்லோருக்கும் உண்டு அதனைக் கற்பிக்கவும் நமக்குக் கடமை உண்டு என்பதை அறிய வேண்டும்.

வீட்டிலும் பள்ளியிலும் நாம் சிறுவர்கள்/ இளையோர்கள் மீது பாவிக்கக்கூடாத வார்த்தைகளை உங்கள் மனத்திலிருந்து நீக்கினால் மட்டுமே சிறார் குற்றச் செயல்களை மாற்றுவழியில் குறைக்க முடியும் எனக் கருதுகிறேன்.

– முட்டாள்

-திருடா

-உருப்படவே மாட்டாய்

-நீயெல்லாம் படிக்கவில்லை என்று யார் அழுதது?

-இவன் செய்திருப்பான்…

-நீயெல்லாம் பெரியாளாகி என்ன செய்ய போகிறாய்?

-உன் குடும்பமே  இப்படித்தானோ?

-ஏன் உனக்கெல்லாம் அறிவே இல்லையா? 

-ரொம்ப பேசாதே வாயை உடைச்சிருவேன்

– வாயை மூடு

– பொய் சொல்லாதே…

இப்படியாகப் பல வார்த்தைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

அவை வெறும் வார்த்தைகள் மட்டும் அல்ல. அவர்களின் உள்ளத்தைச் சீர்க்குழைக்கும் ஆயுதங்கள். நம் கையிலும் மனத்திலும் ஆயுதங்கள் ஏந்திக் கொண்டிருந்தால் நாம் தீவிரவாதிகள்தானே? ஒரேயொருமுறை ஆயுதங்களுக்குப் பதிலாக அன்பைக் கையிலெடுத்துப் பார்ப்போம். தோற்றாலும் பரவாயில்லை; முயலாமல் இருப்பதுதான் உண்மையான தோல்வி.

-கே.பாலமுருகன்