அக்கரைப் பச்சை – 3 (சிங்கப்பூர் சிறுகதைகள் விமர்சனம்) சித்ரா ரமேஸின் ஒரு நாள் ராணி- ஒப்பனைகள் நிரம்பிய வாழ்க்கை

 

‘தனியுடமை சமூகத்திற்குள் வந்து அதன் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கும்பொழுது, உடைமையைப் பெற மனிதர் அலையும்போது, இதன் காரணமாக ஊருக்குள்ளும், உறவுக்குள்ளும் முரண் அதிக்கரிக்கிற போது சிக்கல் புறத்தில் மட்டுமல்லாமல் அகத்திற்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தும்’ – கோவை ஞானி (தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும்)

சிங்கப்பூரில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து, தமிழ் இலக்கியம் சார்ந்தும், கல்வியியல் சார்ந்தும் ஒரு புது இரசனை உருவாக்கத்தில் தன்னை முழுவதுமாக ஈடுப்படுத்தி, வாசகர் வட்டத்தின் வழியாகத் தன்னை ஆர்வமிக்க ஓர் இலக்கிய செயல்பாட்டாளராக மாற்றிக் கொண்ட ஒரு கதைச்சொல்லித்தான் சித்ரா ரமேஸ். அவருக்கும் எனக்குமான நட்பு 2007ஆம் ஆண்டிலிருந்து என் முதல் சிங்கை வரிகையிலிருந்தே தொடங்குகிறது. அப்பொழுது புதிய எழுச்சியுடன் எழுதிக் கொண்டிருந்த சிங்கை எழுத்தாளர்களின் வரிசையில் சித்ரா முக்கியமான இடத்தில் திகழ்ந்தார். அவருடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பான ‘பறவை பூங்கா’-வைக் கடந்தாண்டு படித்துவிட்டு அதைப் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்கிற திட்டம் எண்ணத்திலேயே காலாவதியாகியிருந்தது. இதுபோன்று நிறைய எண்ணங்களுக்கு என் மனத்தில் கல்லறைகளே எழுப்பிவிட்டேன். ஏதோ ஒரு உரசல், சந்திப்பு, திறப்பு அதனை உடைத்து ஒழுகவிடும்.

ஒரு விமர்சகன் வாசகனாக இருந்து ஒரு கதையைத் திறக்கிறான். அவனுடைய வேலையே திறப்பதுதான். அத்திறப்பு எத்தனை வலுவானது என்பது இதற்குமுன் எத்தனை கதைகளைத் திறந்து விவாதித்துள்ளான் என்கிற அனுபவத்திலிருந்தும் மதிப்பிடலாம். அப்படித் திறக்கையில், கதவின் ஓரம் கீச்சிடுவதுதான் அக்கதையின் மொழி. திறக்கப்படும் அக்கதவின் தோற்றம்தான் கதையின் வடிவம். கதவைத் திறக்க இலாவகமாக வழிவிடும் கைப்பிடித்தான் கதைக்கான உயிர். இதுபோல சில படைப்பிலக்கியத்தன்மைகள் சாத்தியப்பட்டால்தான் ஒரு கதைக்கான திறப்பு விமர்சன உலகில் பெரும் கூச்சலை உண்டாக்கும். அக்கூச்சல் எல்லா திசைகளிலும் திரண்டு கிடக்கும் அமைதியை, மௌனத்தைக் களைக்கும். திறப்பதற்குரிய சாத்தியப்பாடுகளே இல்லாத கதைகள் மௌனமாக மீண்டும் மூடப்பட்டுவிடும். அதனால்தான் ஒரு கதை இயற்றப்பட்டும் அக்கதை குறித்தான மௌனம் விமர்சன சூழலில் தொடர்ந்து நிலவுகிறது என்றால் அக்கதை திறப்புக்குரியது அல்ல என்பதை ஒரு படைப்பாளன் புரிந்துகொண்டு மீண்டும் படைப்பதில் தன் கூர்மையை அதிகரிக்க வேண்டும்.

தனியுடமை சமூகத்தின் வாழ்வியல் சிக்கல்

சித்ரா ரமேஸ் அவரிகளின் ‘ஒரு நாள் ராணி’ சிறுகதை அது தொட்டிருக்கும் வாழ்க்கை அளவில் மிக முக்கியமான கதையாக இருக்கிறது. கடந்த காலங்களில் சிங்கை இலக்கியம் விளிம்புநிலை வாழ்க்கையைப் பற்றி குறைவாகத்தான் பதிவாக்கியுள்ளது என்கிற விமர்சனம் 2015ஆம் ஆண்டில் ஒரு நூல் வெளியீட்டில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சித்ராவின் இச்சிறுகதை முழுக்கவும் விளிம்புநிலை வாழ்க்கையைத்தான் பதிவாக்கியுள்ளது. வாழ்க்கையின் துரத்தலில் பெண்கள் சென்றடையும் நிலைகளை சித்ரா கதையில் காட்டியுள்ளார். குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் தனி அறை எடுத்து வாழ்வதில் தனித்து வாழும் பெண்களுக்கே ஏற்படும் சிக்கல்களை ஓரளவிற்குப் பேசியிருக்கிறார். ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள் எத்தனை வயதிற்குரியவர்களாக இருந்தாலும் மெல்ல அவர்கள் மீது படரும் சமூகத்தின் கீழ்மைமிக்க அதிகாரத்தின் குரல்கள் இக்கதையில் ஒலிக்கின்றன.

 

என்றாலும், திறப்பிற்கு வேண்டிய இன்னும் சில விசயங்களை அவர் இக்கதையில் கூர்மைப்படுத்தியிருக்கலாம் அல்லது ஆழமாக்க வாய்ப்பிருக்கிறது என்கிற எண்ணங்கள் தோன்றின. இருப்பினும் நல்ல கதைச்சொல்லி என்கிற அளவில் சித்ரா இக்கதைக்குள் வாசகனின் ஊடாட்டத்தை சாத்தியமாக்கியுள்ளார். உள்ளே நுழைந்து சுவாசிப்பதற்கான இடைவெளியைக் கதையில் சித்ரா தாராளமாகவே உருவாக்கியுள்ளார்.  முகப்பூச்சு இக்கதை நெடுக அழகியலும் அறுவறுப்பும் கலந்த ஒரு வகையான வாசணையை உருவாக்குகிறது. அதுவே இக்கதை நகர்வதற்குரிய வாய்ப்பையும் கொடுக்கிறது.

கோவை ஞானி சொல்வதைப் போல தனியுடமை குறித்த பிரக்ஞை சமூகத்துள் ஆதிக்கத்தை அதிகரிக்கும்பொழுது எல்லோரும் பொருளாதார அவலநிலைக்குத் தள்ளப்படுகிறோம். ஒருவர் மீது ஒருவர் ஏறி உடமையைப் பெறுவதில் ஆக்ரோஷம் கொள்கிறோம். பெருநகர் வாழ்க்கையின் ஒரு மைய வேதனை இது. அதற்குள்ளாகத் தள்ளப்படும் ஒரு சூழலில் இரு பெண்களை மட்டும் கொண்டிருக்கும் அக்குடும்பம் அலைக்கழிப்புகளுக்குள்ளாகிறது. வாழ்க்கைக்குள்ளேயே தொடர்ந்து துரத்தப்படுகிறார்கள். மனம் அலைந்து சோர்கிறது. அங்கிருந்து கதையில் வரும் பேபி ரோஸ் இன்னொரு இடத்தை கண்டடைகிறாள். தமிழிலக்கியத்தில் அதிகம் பேசப்படாத பிறர் பார்வையில் மிகவும் குரூரமாகத் தெரிய வாய்ப்புள்ள ‘பிணங்களுக்கு அலங்காரம்’ செய்யும் தொழிலுக்குள் வருகிறாள். அதிகம் பேசப்படாத அபூர்வமான இவ்வாழ்க்கையைச் சித்ரா மேலும் அழுத்தமாகவும் ஆழமாகவும் பேசியிருக்கலாம் என்றே தோன்றியது. ஒரு சில இடத்தில் இச்சிறுகதை அது குறித்த சிறு தாக்கத்தை ஏற்படுத்தாமலில்லை. இருப்பினும் இதுபோன்ற வாழ்க்கையைப் பேசும்போது மொழியும் கொஞ்சம் அடர்ந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். சித்ரா ஒரு நல்ல கதைச்சொல்லி என்பதற்கு ஆதாரமே அவருடைய அருகில் அமர வைத்து இலாவகமாகவும் நெருக்கமாகவும் கதையைக் கடத்திச் செல்லும் மொழி பிரயோகங்கள்தான். ஆனால், யாரும் பேச மறுக்கும் இத்தகைய இருண்ட கதைக்களத்திற்கு அதே மொழி இன்னும் வேறு மாதிரி அடர்ந்து வெளிப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றியது.

அழகும் இழிவும்

அழகு அல்லது அலங்காரம் என்பதுதான் என்ன என்கிற மிகப்பெரிய கேள்வியை உருவாக்கி நம் மனங்களை இக்கதை நெருடுகிறது. நாள் முழுக்க முகப்பூச்சுப் பூசிக் கொண்டும், தன்னை எப்பொழுதும் அலங்காரம் செய்து கொண்டும் இருந்த ஒரு அக்காவை என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது. அவர் கொஞ்சம் மாநிறம். ஆனால், அவருடைய சிரிப்பு அத்தனை உண்மையானதாக இருக்கும். அதுவே அவருக்கு அழகாகவும்கூட இருந்திருக்கலாம். எது அழகு எது அழகில்லை என முடிவு செய்ய நாம் யார்? ஆனால், அந்த அக்காள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டிலேயேதான் இருந்தார். நான் அவ்வீட்டிற்கு அவருடைய தம்பியுடன் விளையாடுவதற்காகச் செல்வேன். நாள் முழுக்க அந்த அக்கா அறையில் இருக்கும் கண்ணாடி முன் தான் அமர்ந்திருப்பார். அவரிடம் நிறைய அலங்காரப் பொருட்கள் இருக்கும். தொடர்ந்து தன் முகத்தை அலங்கரித்துக் கொண்டே இருப்பார். முகப்பூச்சு அவர் முகத்தில் மினுமினுத்துக் கொண்டே இருக்கும். தன்னை முற்றிலுமாக அலங்காரத்தின் வழியாக மாற்ற அவர் முயன்று கொண்டே இருந்தார். அப்பொழுது எனக்கு அது குறித்து எந்தக் கருத்தும் இல்லை. அவர் என்ன ‘மேக்காப் பைத்தியமா?’ என்று மட்டும் கேலி செய்வோம்.

ஆனால், அந்த அலங்காரத்தின் பின்னே எத்தனை ஆழமான கண்ணீர் இருந்திருக்கலாம்? தன்னை யாரோ அழகில்லை என்று சொன்ன வார்த்தைக்காக அவர் பல ஆண்டுகள் அலங்காரத்திலேயே தன்னைத் தொலைத்திருந்தார் என்று பிறகுத்தான் எனக்குத் தெரியும். யார் அழகைத் தீர்மானிப்பது? அதுவரை அழகு குறித்து இச்சமூகத்திற்கு இருந்த பண்பாட்டு மதிப்பீடுகளை, பிறகு உருவான அழகு தொடர்பான கம்பெனிகள் மெல்ல உருகுழைத்து மாற்றியமைக்கின்றன. அழகைத் தீர்மானிப்பதில் இயற்கையோடு மட்டும் உழன்று கொண்டிருந்தவர்கள் , மஞ்சள் அரைத்துப் பூசிக் கொண்டிருந்த பெண்களின் அகங்களில் விகாரமான ஓர் உந்துதலை ஒப்பனைகளின் பால் ஈர்த்துச் சென்றவை பன்னாட்டு அழகியல் வியாபார நிறுவனங்களே என்றும் குறிப்பிடலாம். பின்னர் அலங்காரப் பொருட்களை நம்மிடம் திணித்துவிட்டு ‘சிவப்புத்தான்’ அழகு என்று சொல்லும் முதலீட்டு வியாபார நிறுவனங்களின் உள்ளீடு அழகு தொடர்பான தாகத்தைக் கூட்டியது என்றும் சொல்லலாம்.

யார் அழகை முடிவு செய்வது? செத்த பிணம்கூட அழகாகத்தான் இருக்க வேண்டும் என இச்சமூகம் நம்மைக் கட்டமைத்து வைத்திருக்கிறது. அலங்காரம் நம் வாழ்நாள் முழுவதும் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. முதுமை எய்வதில் நமக்கொரு நடுக்கத்தை அளிக்கிறது. அதனாலேயே பன்னாட்டு நிறுவன்ங்களின் முகப்பூச்சி போன்ற அலங்காரப் பொருட்களின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறோம். பிணங்களுக்கு அலங்காரம் செய்யும்போதெல்லாம் பேபி ரோஸ் அழகு என்பதற்கான அர்த்தங்களை விழுங்கி விழுங்கி சலித்திருப்பாள். முகப்பூச்சியின் மீது அவளுக்கொரு தீராத வெறுப்பின் வாசனை உருவாகியிருக்கும். அவள் முற்றிலுமாகத் தன்னை ஒப்பனை செய்வதிலிருந்து விலக்கியிருப்பாள். இப்படி அக்கதைக்குள் நுழைந்து பல கதவுகளைத் திறக்கிறேன். எல்லாமே அழகு என்பது என்ன எனும் வினாவை நோக்கியே என்னை இழுத்துச் செல்கின்றன.

புபென் கக்கரின் சிறுகதை

புபென் கக்கர் 1934 தொடங்கி 2003 வரை ஓவியத் துறையிலும் இலக்கியத்திலும் தனக்கான ஆழமான அடையாளங்களைப் பதித்த குஜராத் எழுத்தாளர். மும்பையின் நடுத்தர வர்க்கக் குஜராத் வாழ்க்கையை அம்மொழியிலேயே ஒலித்தக் குரல். மும்பையின்  சிவப்பு விளக்குப் பகுதியான ஃபாக்லண்ட் சாலையை அடுத்த கேட்வாடித் தெருவில் அவரது இல்லம் இருந்ததாகவும் அவருடைய இளமை பருவம் தொடங்கி இறக்கும்வரை அதுதான் அவருடைய வாழ்விடமாக இருந்ததாகவும் எம்.ஜி சுரேஸ் குறிப்பிடுகிறார். அவ்வாழ்க்கைக்குள் மெல்ல மேற்கத்திய பொருட்கள் நுழைந்து இந்தியத் தன்மையுடன் வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை எப்படி மாறுபட்டு போனதைப் பற்றி அவருடைய சிறுகதைகள் பேசியிருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சிறுகதை ‘போரன் சோப்’ ஆகும். ஒரு மேற்கத்திய சோப் இறுகிபோயிருக்கும் தனக்குள்ளே நசுங்கி குறுத்துப் போயிருக்கும் காமத்தை மீட்பதாக மிகவும் குறியீட்டுத்தன்மையுடன் ஆழமாகப் பேசும் சில கதாபாத்திரங்களை முன்வைத்துப் பேசிய சிறுகதையாகும். உடல் குறித்த இந்தியத் தன்மைகளையும் அதற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் காமத்தையும் விவரிப்பதாக அக்கதை அமைந்திருக்கும். அதே போல அவருடைய இன்னொரு சிறுகதை பக்கத்து வீட்டுக்காரியிடமிருந்து ஒரு மேற்கத்திய சவர்க்காரத்தை இரவல் வாங்கி அன்றைய நாளில் அக்குடும்பமே அச்சவர்க்காரத்தைப் பயன்படுத்தி முடித்துவிடுகிறார்கள் என்று இருக்கும். இந்திய வாழ்வியலில் ஏற்படும் சிறு கலப்புகள் எப்படி அவர்களின் அகத்திற்குள் முரண்களை உருவாக்குகிறது என்பதை மிக விரிவாகப் பேசுபவை புபென் கக்கரின் சிறுகதைகள் ஆகும்.

அதுபோன்ற ஒரு வித்தியாசமான கதைக்களத்தைத் தன் படைப்பில் எடுத்திருக்கும் சித்ரா அதன் ஆழத்தைத் தேடி இன்னும் பயணிக்க வேண்டும். ஒரு பொதுமனிதன் சந்திக்க மறுக்கும் மிகவும் குரூரமான அழகியல் தொடர்பான முகங்களைக் காட்டக்கூடிய எழுத்து சித்ராவிடம் உள்ளதாக இந்தவொரு சிறுகதையை முன்வைத்தே அறிய முடிகிறது. அதன் ஆழத்தை அவர் இன்னும் விரிவாக்கிக் கொள்ளும்போது சிங்கை நவீனப் படைப்பாளிகளில் இலக்கியத் தளத்தில் புதிய பாதிப்புகளையும் பாய்ச்சல்களையும் உருவாக்கும் இடத்தில் மிளிர்வார் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

பேபி ரோஸ் ஒரு கனவு காண்கிறாள். அக்கனவில் அவளுடைய அம்மா முகப்பூச்சியைப் பூசிக் கொண்டிருப்பதைப் போல தெரிகிறது. சட்டென கனவிலிருந்து அதிர்ச்சியுடன் மீள்கிறாள். இவ்வரி எனக்குள் ஒரு நடுக்கத்தை உண்டாக்கியது. இதுபோன்ற ஆழம் கதையில் இன்னும் குவிந்திருந்தால் இச்சிறுகதை வேறொரு பரிணாமத்தை எட்டியிருக்கும்.

மக்களுக்காகவே எழுதப்படுவதுதான் இலக்கியம் ஆகவே அது மக்களை அடைய வேண்டும் என்ற திவீரத்தை நவீன இலக்கியம் முன்னெடுத்ததால்தான் நவீன இலக்கியத்தில் சீர்த்திருத்தம், மக்களை இயக்கமாக மாற்றி முன்னெடுத்தல், அறிவுரைத்தல் போன்ற விசயங்கள் செய்யுளிலிருந்து விடுப்பட்டு உரைநடைக்குள் வெளிப்பட்டது. ஆனால், பின்நவீனம் நவீன முயற்களை மறுத்து, அது உருவாக்கும் மையவாதக் கருத்துகளையும் மறுத்து, மக்கள் வாழும் அடித்தட்டு நிலைகளையும், உள்முரண்களையும், அகச்சிக்கல்களையும் என அனைத்தையுமே இலக்கியத்திற்குள் உட்படுத்தியது. சித்ராவின் இச்சிறுகதை அவ்வகையில் அது பேச விளைந்திருக்கும் வாழ்க்கையின் பொருட்டு, பின்நவீன சிறுகதைக்கான அம்சங்கள் உடைய படைப்பாக முன்வைக்கலாம். ஒப்பனைகளின் அபத்தங்களைப் பேசும் ஒப்பனையற்ற வாழ்க்கை.

கே.பாலமுருகன்