அக்கரைப் பச்சை – 3 (சிங்கப்பூர் சிறுகதைகள் விமர்சனம்) சித்ரா ரமேஸின் ஒரு நாள் ராணி- ஒப்பனைகள் நிரம்பிய வாழ்க்கை

 

‘தனியுடமை சமூகத்திற்குள் வந்து அதன் ஆதிக்கம் தொடர்ந்து அதிகரிக்கும்பொழுது, உடைமையைப் பெற மனிதர் அலையும்போது, இதன் காரணமாக ஊருக்குள்ளும், உறவுக்குள்ளும் முரண் அதிக்கரிக்கிற போது சிக்கல் புறத்தில் மட்டுமல்லாமல் அகத்திற்குள்ளும் பாதிப்பை ஏற்படுத்தும்’ – கோவை ஞானி (தமிழ் மெய்யியல் அன்றும் இன்றும்)

சிங்கப்பூரில் கடந்த 22 ஆண்டுகளாக வசித்து, தமிழ் இலக்கியம் சார்ந்தும், கல்வியியல் சார்ந்தும் ஒரு புது இரசனை உருவாக்கத்தில் தன்னை முழுவதுமாக ஈடுப்படுத்தி, வாசகர் வட்டத்தின் வழியாகத் தன்னை ஆர்வமிக்க ஓர் இலக்கிய செயல்பாட்டாளராக மாற்றிக் கொண்ட ஒரு கதைச்சொல்லித்தான் சித்ரா ரமேஸ். அவருக்கும் எனக்குமான நட்பு 2007ஆம் ஆண்டிலிருந்து என் முதல் சிங்கை வரிகையிலிருந்தே தொடங்குகிறது. அப்பொழுது புதிய எழுச்சியுடன் எழுதிக் கொண்டிருந்த சிங்கை எழுத்தாளர்களின் வரிசையில் சித்ரா முக்கியமான இடத்தில் திகழ்ந்தார். அவருடைய இரண்டாவது சிறுகதை தொகுப்பான ‘பறவை பூங்கா’-வைக் கடந்தாண்டு படித்துவிட்டு அதைப் பற்றி ஒரு தொடர் எழுதலாம் என்கிற திட்டம் எண்ணத்திலேயே காலாவதியாகியிருந்தது. இதுபோன்று நிறைய எண்ணங்களுக்கு என் மனத்தில் கல்லறைகளே எழுப்பிவிட்டேன். ஏதோ ஒரு உரசல், சந்திப்பு, திறப்பு அதனை உடைத்து ஒழுகவிடும்.

ஒரு விமர்சகன் வாசகனாக இருந்து ஒரு கதையைத் திறக்கிறான். அவனுடைய வேலையே திறப்பதுதான். அத்திறப்பு எத்தனை வலுவானது என்பது இதற்குமுன் எத்தனை கதைகளைத் திறந்து விவாதித்துள்ளான் என்கிற அனுபவத்திலிருந்தும் மதிப்பிடலாம். அப்படித் திறக்கையில், கதவின் ஓரம் கீச்சிடுவதுதான் அக்கதையின் மொழி. திறக்கப்படும் அக்கதவின் தோற்றம்தான் கதையின் வடிவம். கதவைத் திறக்க இலாவகமாக வழிவிடும் கைப்பிடித்தான் கதைக்கான உயிர். இதுபோல சில படைப்பிலக்கியத்தன்மைகள் சாத்தியப்பட்டால்தான் ஒரு கதைக்கான திறப்பு விமர்சன உலகில் பெரும் கூச்சலை உண்டாக்கும். அக்கூச்சல் எல்லா திசைகளிலும் திரண்டு கிடக்கும் அமைதியை, மௌனத்தைக் களைக்கும். திறப்பதற்குரிய சாத்தியப்பாடுகளே இல்லாத கதைகள் மௌனமாக மீண்டும் மூடப்பட்டுவிடும். அதனால்தான் ஒரு கதை இயற்றப்பட்டும் அக்கதை குறித்தான மௌனம் விமர்சன சூழலில் தொடர்ந்து நிலவுகிறது என்றால் அக்கதை திறப்புக்குரியது அல்ல என்பதை ஒரு படைப்பாளன் புரிந்துகொண்டு மீண்டும் படைப்பதில் தன் கூர்மையை அதிகரிக்க வேண்டும்.

தனியுடமை சமூகத்தின் வாழ்வியல் சிக்கல்

சித்ரா ரமேஸ் அவரிகளின் ‘ஒரு நாள் ராணி’ சிறுகதை அது தொட்டிருக்கும் வாழ்க்கை அளவில் மிக முக்கியமான கதையாக இருக்கிறது. கடந்த காலங்களில் சிங்கை இலக்கியம் விளிம்புநிலை வாழ்க்கையைப் பற்றி குறைவாகத்தான் பதிவாக்கியுள்ளது என்கிற விமர்சனம் 2015ஆம் ஆண்டில் ஒரு நூல் வெளியீட்டில் முன்வைக்கப்பட்டிருந்தது. ஆனால், சித்ராவின் இச்சிறுகதை முழுக்கவும் விளிம்புநிலை வாழ்க்கையைத்தான் பதிவாக்கியுள்ளது. வாழ்க்கையின் துரத்தலில் பெண்கள் சென்றடையும் நிலைகளை சித்ரா கதையில் காட்டியுள்ளார். குடும்பமாக வாழும் ஒரு வீட்டில் தனி அறை எடுத்து வாழ்வதில் தனித்து வாழும் பெண்களுக்கே ஏற்படும் சிக்கல்களை ஓரளவிற்குப் பேசியிருக்கிறார். ஆண் துணை இல்லாமல் வாழும் பெண்கள் எத்தனை வயதிற்குரியவர்களாக இருந்தாலும் மெல்ல அவர்கள் மீது படரும் சமூகத்தின் கீழ்மைமிக்க அதிகாரத்தின் குரல்கள் இக்கதையில் ஒலிக்கின்றன.

 

என்றாலும், திறப்பிற்கு வேண்டிய இன்னும் சில விசயங்களை அவர் இக்கதையில் கூர்மைப்படுத்தியிருக்கலாம் அல்லது ஆழமாக்க வாய்ப்பிருக்கிறது என்கிற எண்ணங்கள் தோன்றின. இருப்பினும் நல்ல கதைச்சொல்லி என்கிற அளவில் சித்ரா இக்கதைக்குள் வாசகனின் ஊடாட்டத்தை சாத்தியமாக்கியுள்ளார். உள்ளே நுழைந்து சுவாசிப்பதற்கான இடைவெளியைக் கதையில் சித்ரா தாராளமாகவே உருவாக்கியுள்ளார்.  முகப்பூச்சு இக்கதை நெடுக அழகியலும் அறுவறுப்பும் கலந்த ஒரு வகையான வாசணையை உருவாக்குகிறது. அதுவே இக்கதை நகர்வதற்குரிய வாய்ப்பையும் கொடுக்கிறது.

கோவை ஞானி சொல்வதைப் போல தனியுடமை குறித்த பிரக்ஞை சமூகத்துள் ஆதிக்கத்தை அதிகரிக்கும்பொழுது எல்லோரும் பொருளாதார அவலநிலைக்குத் தள்ளப்படுகிறோம். ஒருவர் மீது ஒருவர் ஏறி உடமையைப் பெறுவதில் ஆக்ரோஷம் கொள்கிறோம். பெருநகர் வாழ்க்கையின் ஒரு மைய வேதனை இது. அதற்குள்ளாகத் தள்ளப்படும் ஒரு சூழலில் இரு பெண்களை மட்டும் கொண்டிருக்கும் அக்குடும்பம் அலைக்கழிப்புகளுக்குள்ளாகிறது. வாழ்க்கைக்குள்ளேயே தொடர்ந்து துரத்தப்படுகிறார்கள். மனம் அலைந்து சோர்கிறது. அங்கிருந்து கதையில் வரும் பேபி ரோஸ் இன்னொரு இடத்தை கண்டடைகிறாள். தமிழிலக்கியத்தில் அதிகம் பேசப்படாத பிறர் பார்வையில் மிகவும் குரூரமாகத் தெரிய வாய்ப்புள்ள ‘பிணங்களுக்கு அலங்காரம்’ செய்யும் தொழிலுக்குள் வருகிறாள். அதிகம் பேசப்படாத அபூர்வமான இவ்வாழ்க்கையைச் சித்ரா மேலும் அழுத்தமாகவும் ஆழமாகவும் பேசியிருக்கலாம் என்றே தோன்றியது. ஒரு சில இடத்தில் இச்சிறுகதை அது குறித்த சிறு தாக்கத்தை ஏற்படுத்தாமலில்லை. இருப்பினும் இதுபோன்ற வாழ்க்கையைப் பேசும்போது மொழியும் கொஞ்சம் அடர்ந்து வெளிப்பட்டிருக்க வேண்டும். சித்ரா ஒரு நல்ல கதைச்சொல்லி என்பதற்கு ஆதாரமே அவருடைய அருகில் அமர வைத்து இலாவகமாகவும் நெருக்கமாகவும் கதையைக் கடத்திச் செல்லும் மொழி பிரயோகங்கள்தான். ஆனால், யாரும் பேச மறுக்கும் இத்தகைய இருண்ட கதைக்களத்திற்கு அதே மொழி இன்னும் வேறு மாதிரி அடர்ந்து வெளிப்பட்டிருக்கலாம் என்றும் தோன்றியது.

அழகும் இழிவும்

அழகு அல்லது அலங்காரம் என்பதுதான் என்ன என்கிற மிகப்பெரிய கேள்வியை உருவாக்கி நம் மனங்களை இக்கதை நெருடுகிறது. நாள் முழுக்க முகப்பூச்சுப் பூசிக் கொண்டும், தன்னை எப்பொழுதும் அலங்காரம் செய்து கொண்டும் இருந்த ஒரு அக்காவை என் வாழ்நாளில் என்னால் மறக்கவே முடியாது. அவர் கொஞ்சம் மாநிறம். ஆனால், அவருடைய சிரிப்பு அத்தனை உண்மையானதாக இருக்கும். அதுவே அவருக்கு அழகாகவும்கூட இருந்திருக்கலாம். எது அழகு எது அழகில்லை என முடிவு செய்ய நாம் யார்? ஆனால், அந்த அக்காள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு ஏதும் போகாமல் வீட்டிலேயேதான் இருந்தார். நான் அவ்வீட்டிற்கு அவருடைய தம்பியுடன் விளையாடுவதற்காகச் செல்வேன். நாள் முழுக்க அந்த அக்கா அறையில் இருக்கும் கண்ணாடி முன் தான் அமர்ந்திருப்பார். அவரிடம் நிறைய அலங்காரப் பொருட்கள் இருக்கும். தொடர்ந்து தன் முகத்தை அலங்கரித்துக் கொண்டே இருப்பார். முகப்பூச்சு அவர் முகத்தில் மினுமினுத்துக் கொண்டே இருக்கும். தன்னை முற்றிலுமாக அலங்காரத்தின் வழியாக மாற்ற அவர் முயன்று கொண்டே இருந்தார். அப்பொழுது எனக்கு அது குறித்து எந்தக் கருத்தும் இல்லை. அவர் என்ன ‘மேக்காப் பைத்தியமா?’ என்று மட்டும் கேலி செய்வோம்.

ஆனால், அந்த அலங்காரத்தின் பின்னே எத்தனை ஆழமான கண்ணீர் இருந்திருக்கலாம்? தன்னை யாரோ அழகில்லை என்று சொன்ன வார்த்தைக்காக அவர் பல ஆண்டுகள் அலங்காரத்திலேயே தன்னைத் தொலைத்திருந்தார் என்று பிறகுத்தான் எனக்குத் தெரியும். யார் அழகைத் தீர்மானிப்பது? அதுவரை அழகு குறித்து இச்சமூகத்திற்கு இருந்த பண்பாட்டு மதிப்பீடுகளை, பிறகு உருவான அழகு தொடர்பான கம்பெனிகள் மெல்ல உருகுழைத்து மாற்றியமைக்கின்றன. அழகைத் தீர்மானிப்பதில் இயற்கையோடு மட்டும் உழன்று கொண்டிருந்தவர்கள் , மஞ்சள் அரைத்துப் பூசிக் கொண்டிருந்த பெண்களின் அகங்களில் விகாரமான ஓர் உந்துதலை ஒப்பனைகளின் பால் ஈர்த்துச் சென்றவை பன்னாட்டு அழகியல் வியாபார நிறுவனங்களே என்றும் குறிப்பிடலாம். பின்னர் அலங்காரப் பொருட்களை நம்மிடம் திணித்துவிட்டு ‘சிவப்புத்தான்’ அழகு என்று சொல்லும் முதலீட்டு வியாபார நிறுவனங்களின் உள்ளீடு அழகு தொடர்பான தாகத்தைக் கூட்டியது என்றும் சொல்லலாம்.

யார் அழகை முடிவு செய்வது? செத்த பிணம்கூட அழகாகத்தான் இருக்க வேண்டும் என இச்சமூகம் நம்மைக் கட்டமைத்து வைத்திருக்கிறது. அலங்காரம் நம் வாழ்நாள் முழுவதும் நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. முதுமை எய்வதில் நமக்கொரு நடுக்கத்தை அளிக்கிறது. அதனாலேயே பன்னாட்டு நிறுவன்ங்களின் முகப்பூச்சி போன்ற அலங்காரப் பொருட்களின் பின்னே ஓடிக் கொண்டிருக்கிறோம். பிணங்களுக்கு அலங்காரம் செய்யும்போதெல்லாம் பேபி ரோஸ் அழகு என்பதற்கான அர்த்தங்களை விழுங்கி விழுங்கி சலித்திருப்பாள். முகப்பூச்சியின் மீது அவளுக்கொரு தீராத வெறுப்பின் வாசனை உருவாகியிருக்கும். அவள் முற்றிலுமாகத் தன்னை ஒப்பனை செய்வதிலிருந்து விலக்கியிருப்பாள். இப்படி அக்கதைக்குள் நுழைந்து பல கதவுகளைத் திறக்கிறேன். எல்லாமே அழகு என்பது என்ன எனும் வினாவை நோக்கியே என்னை இழுத்துச் செல்கின்றன.

புபென் கக்கரின் சிறுகதை

புபென் கக்கர் 1934 தொடங்கி 2003 வரை ஓவியத் துறையிலும் இலக்கியத்திலும் தனக்கான ஆழமான அடையாளங்களைப் பதித்த குஜராத் எழுத்தாளர். மும்பையின் நடுத்தர வர்க்கக் குஜராத் வாழ்க்கையை அம்மொழியிலேயே ஒலித்தக் குரல். மும்பையின்  சிவப்பு விளக்குப் பகுதியான ஃபாக்லண்ட் சாலையை அடுத்த கேட்வாடித் தெருவில் அவரது இல்லம் இருந்ததாகவும் அவருடைய இளமை பருவம் தொடங்கி இறக்கும்வரை அதுதான் அவருடைய வாழ்விடமாக இருந்ததாகவும் எம்.ஜி சுரேஸ் குறிப்பிடுகிறார். அவ்வாழ்க்கைக்குள் மெல்ல மேற்கத்திய பொருட்கள் நுழைந்து இந்தியத் தன்மையுடன் வாழ்ந்த அவர்களின் வாழ்க்கை எப்படி மாறுபட்டு போனதைப் பற்றி அவருடைய சிறுகதைகள் பேசியிருக்கின்றன. அவற்றுள் குறிப்பிடத்தக்க சிறுகதை ‘போரன் சோப்’ ஆகும். ஒரு மேற்கத்திய சோப் இறுகிபோயிருக்கும் தனக்குள்ளே நசுங்கி குறுத்துப் போயிருக்கும் காமத்தை மீட்பதாக மிகவும் குறியீட்டுத்தன்மையுடன் ஆழமாகப் பேசும் சில கதாபாத்திரங்களை முன்வைத்துப் பேசிய சிறுகதையாகும். உடல் குறித்த இந்தியத் தன்மைகளையும் அதற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் காமத்தையும் விவரிப்பதாக அக்கதை அமைந்திருக்கும். அதே போல அவருடைய இன்னொரு சிறுகதை பக்கத்து வீட்டுக்காரியிடமிருந்து ஒரு மேற்கத்திய சவர்க்காரத்தை இரவல் வாங்கி அன்றைய நாளில் அக்குடும்பமே அச்சவர்க்காரத்தைப் பயன்படுத்தி முடித்துவிடுகிறார்கள் என்று இருக்கும். இந்திய வாழ்வியலில் ஏற்படும் சிறு கலப்புகள் எப்படி அவர்களின் அகத்திற்குள் முரண்களை உருவாக்குகிறது என்பதை மிக விரிவாகப் பேசுபவை புபென் கக்கரின் சிறுகதைகள் ஆகும்.

அதுபோன்ற ஒரு வித்தியாசமான கதைக்களத்தைத் தன் படைப்பில் எடுத்திருக்கும் சித்ரா அதன் ஆழத்தைத் தேடி இன்னும் பயணிக்க வேண்டும். ஒரு பொதுமனிதன் சந்திக்க மறுக்கும் மிகவும் குரூரமான அழகியல் தொடர்பான முகங்களைக் காட்டக்கூடிய எழுத்து சித்ராவிடம் உள்ளதாக இந்தவொரு சிறுகதையை முன்வைத்தே அறிய முடிகிறது. அதன் ஆழத்தை அவர் இன்னும் விரிவாக்கிக் கொள்ளும்போது சிங்கை நவீனப் படைப்பாளிகளில் இலக்கியத் தளத்தில் புதிய பாதிப்புகளையும் பாய்ச்சல்களையும் உருவாக்கும் இடத்தில் மிளிர்வார் என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

பேபி ரோஸ் ஒரு கனவு காண்கிறாள். அக்கனவில் அவளுடைய அம்மா முகப்பூச்சியைப் பூசிக் கொண்டிருப்பதைப் போல தெரிகிறது. சட்டென கனவிலிருந்து அதிர்ச்சியுடன் மீள்கிறாள். இவ்வரி எனக்குள் ஒரு நடுக்கத்தை உண்டாக்கியது. இதுபோன்ற ஆழம் கதையில் இன்னும் குவிந்திருந்தால் இச்சிறுகதை வேறொரு பரிணாமத்தை எட்டியிருக்கும்.

மக்களுக்காகவே எழுதப்படுவதுதான் இலக்கியம் ஆகவே அது மக்களை அடைய வேண்டும் என்ற திவீரத்தை நவீன இலக்கியம் முன்னெடுத்ததால்தான் நவீன இலக்கியத்தில் சீர்த்திருத்தம், மக்களை இயக்கமாக மாற்றி முன்னெடுத்தல், அறிவுரைத்தல் போன்ற விசயங்கள் செய்யுளிலிருந்து விடுப்பட்டு உரைநடைக்குள் வெளிப்பட்டது. ஆனால், பின்நவீனம் நவீன முயற்களை மறுத்து, அது உருவாக்கும் மையவாதக் கருத்துகளையும் மறுத்து, மக்கள் வாழும் அடித்தட்டு நிலைகளையும், உள்முரண்களையும், அகச்சிக்கல்களையும் என அனைத்தையுமே இலக்கியத்திற்குள் உட்படுத்தியது. சித்ராவின் இச்சிறுகதை அவ்வகையில் அது பேச விளைந்திருக்கும் வாழ்க்கையின் பொருட்டு, பின்நவீன சிறுகதைக்கான அம்சங்கள் உடைய படைப்பாக முன்வைக்கலாம். ஒப்பனைகளின் அபத்தங்களைப் பேசும் ஒப்பனையற்ற வாழ்க்கை.

கே.பாலமுருகன்

அக்கரைப் பச்சை – 2 (சிங்கப்பூர் சிறுகதைகள் விமர்சனம்) ராம் சந்தரின் அப்புவின் கனவு: கனவுகள் கண்டு சாகும் இயந்திரங்கள்

கனவுகள் பற்றி எனக்கு எப்பொழுதும் ஒரு வியப்புண்டு. சிறுவயதில் கனவுகள் வந்துவிடும் என்கிற பயத்தில் கண்களை மூடாமல் வீட்டுத் தகரத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். கனவு நிழல் போல என் உறக்கத்தைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். எப்பொழுது அது உறக்கத்தை விழுங்கி நம் இரவை ஆட்கொள்ளும் என இன்றளவும் யாராலும் கணிக்க இயலாத விந்தையே கனவு. சிக்மெண்ட் ப்ராய்ட் கனவுகள் பற்றி சொல்லும் விளக்கம் விரிவானவை. அதுவரை மாயைப் போல தோற்றமளிக்கும் கனவுகள் பற்றி உளவியல் ரீதியில் பற்பல அர்த்தங்களை ப்ராய்டு கட்டமைக்கிறார். நடக்கக்கூடாதென்று நாம் நினைப்பவற்றை ஆழ்மனம் நடந்ததைப் போல கனவில் நிகழ்த்திக் காட்டும் வித்தையை யார் அதற்குக் கற்றுக் கொடுத்தது எனத் தெரியவில்லை. இதுவொரு உள்முரண் என்றே சொல்ல வேண்டும்.

நமக்கு மரணத்தையொட்டி தீராத பயமொன்று உள்ளுக்குள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆகவேதான், ஆழ்மனம் அப்பயத்திலிருந்து நம்மை நீக்கவோ அல்லது பழக்கப்படுத்தவோ நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் இறப்பதைப் போன்று கனவுகளின் வழியாகக் காட்டிக் கொண்டே இருக்கும். இப்படிக் கனவுகளுக்குப் பல விளக்கங்களும் சொல்லப்பட்டாலும் இலக்கியம் கனவென்பதை ஒரு குறியீடாகவே பாவித்து வருகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் கனவுகள் பற்றி பல சித்திரங்களை உருவாக்கிச் சென்றுள்ளார்கள்.

கதைக்குள்ளிருந்து கதை

ஜெர்மானிய எழுத்தாளரான பிரெட்ரிக் சில்லர் அவர்களின் சில கவிதைகள் ஜெர்மானிய பண்பாட்டுச் சிதைவுகளை அச்சமூகத்தில் பிறந்த சிறுவன் கனவு காண்பதாக அமைந்திருக்கும். அக்கனவு என்பது நிஜமான ஜெர்மானிய பண்பாட்டு அழிவுகளை முன்பே அறிவிக்கும் பொருட்டு ஓர் எதிர்க்காலக் குரலாக ஒலிக்கும். ராம் சந்தரின் இச்சிறுகதை மாய யதார்த்தவாதமாகக் கதைக்குள்ளிருந்து ஒரு வரலாற்று பின்னடைவை ஓங்கி ஒலிக்கும் களமாகவும் ஒரு வாசகன் அடையக்கூடும். இக்கதையில் வரும் அப்பு பற்பல அதிசய கனவுகளுடன் இருக்கும் சிறுவனாகவும் தனக்கென ஒரு விந்தை உலகைக் கற்பனை செய்தப்படியே இருப்பதாகவும் முதலில் தோன்றும். அடுத்த கனமே வெள்ளை யானையில் வருபவர் முன்னோர்களின் கனவுகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுப் பராமரிகப்படுவது அப்புவிடம் காட்டுவதாக கதை நகரும். இதுவொரு அரசியல் வெளிப்பாடு என்றும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். முன்னோர்கள் வெறும் கனவு காண்பவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவர்களின் மறைவிற்குப் பின்னர் அவர்களுடைய கனவுகள் கனவுகளாகவே அடைப்பட்டுக் கிடப்பது ஒரு சமூகத்தின் மிகுந்த கவலைக்குரிய பின்னடைவு என்பதே கதைக்குள் இருக்கும் கதையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.

 

அப்புவின் கனவில் எல்லாமும் குதர்க்கமாக நிஜ உலகிலிருந்து விலகிச் செல்லும் மாயையைப் போல தோற்றமளிக்கின்றன. ஒட்டகசிவிங்கி முகம் கொண்ட கழுகின் தலை என்கிற வரி கதைக்குள் வருகிற இடம் இக்கதைக்கான ஒரு சாவி என்று நினைக்கிறேன். நாம் காணும் கனவுகள் அப்படித்தான் குதர்க்கமானது. உலகம் நம்மை நம்ப வைத்திருக்கும் சிந்தைகளுக்கு அப்பாற்பட்டதாக நம் கனவுகள் இவ்வுலகத்தால், ஆள்பவர்களால் தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு உறக்கத்தில் வரும் கனவெனும் கூண்டுக்குள் அடைக்கப்படுகிறது. இப்படி நாம் காணும் அனைத்துக் கனவுகளும் கனவுகளாகவே நம் மனக்குகையில் சிறைப்படுத்தப்படுகிறது. ஒரு சிறுபான்மை சமூகத்தின் உச்சமான வெற்றியும் தோல்வியும் இதுவே. கனவுகளை உற்பத்தி செய்து அதைக் கனவுகளாகவே கொன்றுவிடும் சாபம். அச்சிறுபான்மை சமூகத்திலிருந்து வரும் ஒரு சிறுவனின் ஊடாக தன் முன்னோர்களின் கனவுகள் காட்டின் நடுவே அடைக்கப்பட்டு எதற்குமே அர்த்தமற்று பொருள்காட்சியமாக மட்டுமே காலம் முழுவதும் நினைவுகளில் நிலைத்து வருகிறது என்கிற உண்மையை மாய யதார்த்த வலைக்குள் பின்னுகிறார் ராம் சந்தர்.

‘கனவு அறைகள்’ என்கிற ஒரு மொழிப்பெயர்ப்பு சிறுகதை படித்ததாக ஞாபகம். தன் வீட்டுக்குள்ளிருந்து உறங்கி எழுந்திருக்கும் ஒருவன், அவன் வீட்டில் பல அறைகள் தோன்றியிருப்பதைக் காண்கிறான். ஒவ்வொரு அறைக்கதவையும் திறக்கும்போது அதனுள் தன்னுடைய நிறைவேறாமல்போன கனவுகள் இருக்கின்றன. இப்படியாக வீடு முழுவதும் அறைகளாகி அவனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமலேயே கதை முடிவடைந்துவிடும். ஒவ்வொரு மனிதனின் நினைவடுக்குகளிலும் நிறைவேறாத பல கனவுகள் அவனைச் சூழந்துள்ளன. அக்கனவுகளை நோக்கி அவன் உள்மனம் திரும்பும்போது வாழ்க்கையும் சமூகமும் வரலாறும் தொழில்முறையில் கனவுகளை உற்பத்தி செய்யவே நம்மைத் தூண்டிக் கொண்டிருக்கிறன எனத் தெரியும். அப்புவின் கனவு என்கிற சிறுகதையும் தொழில்முறையில் கனவுகளை உற்பத்திப்பதைக் கட்டாயமாக்கிக் காட்டுகிறது. வெள்ளை யானையில் வருபவர் தங்களின் கனவு மிருகத்தைக் காட்டும்படி அனைவரையும் நிர்பந்திக்கிறார். ஆனால், அப்புவின் மிருகம் மட்டும் அவர்களுடைய கண்களுக்குப் புலப்படவில்லை.

அப்பு என்கிற விந்தை

அப்பு எனக்கு மிகநெருக்கமான பெயர் அல்லது உருவகம் என்று சொல்லலாம். அப்பு என்கிற பெயரைக் கொண்டு சிறார் உலகை விவரிக்கும் நிறைய கவிதைகள் எழுதியுள்ளேன். ராம் சந்தரின் இச்சிறுகதை தலைப்பிலிருந்தே ஒட்டிக் கொள்கிறது. அதே போல சிறார்களின் விந்தையான உலகைக் காட்டும் பொருட்டு ‘பவித்திராவின் ஓவியக் குவளைக்குள்ளிருந்து’ என்கிற ஒரு சிறுகதையும் எழுதியுள்ளேன். அக்கதை நாம் நம்ப மறுக்கும் பல விந்தைகள் அடங்கியதுதான் சிறுவர்களின் உலகம் எனக் காட்டிச் செல்லும். அப்புவின் கனவு என்பதும் இதுவரை இச்சமூகம் கண்ட கனவுகளிலிருந்து கொஞ்சம் மாறுப்பட்டவையாக யாரிடமும் சிக்காமல் நகர்ந்து ஒளிந்து மறைகிறது. ஆனால் யாரினாலும் அதனை இவ்வுலகத்தின் கண் கொண்டு தரிசிக்க முடியாமல் அக்கனவு மீண்டும் அழிந்துவிடுகிறது.

 

இதே கதையில் ஒரு கனவு எப்படி அழிகிறது என்பதையும் ராம் காட்டி தன் சிறுகதையை முடிக்கும் இடம் முக்கியமானதாகிறது. அவன் உருவாக்கி வைத்திருக்கும் கனவு யாரினாலும் அறியப்பட முடியாமல் போய்விடுவது எத்தனை பெரிய இழப்பு? இன்று பலருடைய கனவுகளை நாம் மதிப்பதேயில்லை. பலருடைய கனவுகள் அதிகார வர்க்கத்தால் மிதிக்கவும்படுகின்றன. அப்பு கையில் இருந்த அத்தவளை மண்ணுக்குள் குதித்து மறைகிறது. கனவு அவ்விடத்தில் களைந்துவிடுகிறது. மீண்டும் அடுத்த கனவிற்காக உடனே உறக்கம் வந்துவிடுகிறது. அவ்வரிகளைப் படிக்கும்போது அச்சம் கூடுகிறது. ஒரு கனவு அழிந்தால் இன்னொரு கனவுக்கு மட்டுமே இவ்வாழ்க்கை நம்மைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. கனவுகள் அழிக்கப்படுவது தெரியாமல் நாமும் அடுத்த கனவு காணத் தயாராகும் இயந்திரம் போல ஆகிவிட்டோம் என்கிற அச்ச உணர்வை இக்கதைக் கொஞ்சம்கூட காத்திரமில்லாமல் எளிய வார்த்தை மாயங்களின் வழியாக மிக முக்கியமான அரசியலை முன்னிறுத்திச் செல்கிறது.

விந்தையிலும் விந்தை

ஒரு சிறுகதை பற்பல பாதைகளின் வழியாக அடைந்திருக்கும் எல்லையை எந்தப் பாதையினூடாக நாம் சென்றடைய போகிறோம் என்கிற ஆச்சர்யம் வாசகனாலே அறிந்து கொள்ள முடியாத அதிசயமாகும். ஒருவேளை அப்புவின் கனவில் நான் கண்டது இதுவாக மட்டும் இருக்காது. ஏதோ ஒரு கதவை நான் திறக்காமல்கூட போயிருக்கலாம். ஆனால், அக்கதவும் இன்னொரு வாசகனால் திறக்கப்பட வாய்ப்புண்டு. அப்பொழுது இக்கதையின் இன்னொரு முகம் கண்டுபிடிக்கப்படலாம். அத்தகையதொரு மாயத் தளத்தில் இக்கதையை ராம் சாமர்த்தியமாகப் புனைந்துள்ளார். கதைக்குள் கனவு மட்டுமே ஒரு நூழிலையில் பயணிக்கிறது. அதனைப் பிடித்துக் கொண்டு கதைக்குள் பயணிக்கும் நமக்கும் ஒரு கனவு வருகிறது. அக்கனவிலிருந்து இன்னொரு மாயக் கரத்தைப் பற்றி ஒரு வெள்ளை யானையின் பின்னால் போகக்கூடும்.

 

கதையின் மற்ற கூறுகள்
சிறுகதையின் மொழி, ராம் சந்தருக்கு மிகவும் அதிசயமாக வாய்த்திருக்கிறது. அவருடைய வேறு சில சிறுகதைகளையும் வாசிக்க நேர்ந்தால் மட்டுமே உறுதியான ஒரு புரிதலுக்குள் வர முடியும் என நினைக்கிறேன். குழந்தையின் கையில் கிடைத்திருக்கும் களிமண்ணைப் போல அதன் வழியாகப் பல உருவங்களை இயற்றியபடியே செல்லும் வித்தையான மொழியை இக்கதையில் கையாண்டுள்ளார். மாய யதார்த்தவாதக் கதைகளில் இத்தகைய குறியீட்டு மொழிகளே இலாவகமாகக் கதைக்கு உயிரளிக்கக்கூடியதாக இருக்கும். எம்.ஜி சுரேஷ் அவர்களின் சில சிறுகதைகளில் இத்தகைய மொழிக்கூறுகளையும் வாசித்திருக்கலாம். அவருடைய ‘கனவுலகவாசியின் நனவுலகக் குறிப்புகள் முதலான சிறுகதைத் தொகுப்பும்’ என்கிற நாவலில் இத்தகைய மொழியை முழுக்க வாசிக்க நேர்ந்த அனுபவத்தால் ராமின் மொழியைச் சுலபமாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனாலும், இத்தகைய பூடகமான மொழி கொஞ்சம் பிசகினாலும் இறுக்கமாகிவிடும். அதனுள் ஒரு பொதுவாசகனால் நுழைந்து அனுபவிக்க முடியாமல் போய்விடும். ராம் அதனைக் கச்சிதமாகவே பாவித்துள்ளார். இருண்ட மொழி என்று சொல்ல முடியாத அளவிற்கு ஆங்காங்கே கொஞ்சம் வெளிச்சத்தையும் பரப்பியுள்ளார். அதுவேகூட அவருடைய மொழியைக் கொஞ்சம் பலவீனமாக்குவதையும் தவிர்க்க முடியவில்லை. பெரும்பாலும் மாய யதார்த்தவாத/ குறியீடுகளின் வழியாகக் கதைக்களத்தை உருவாக்கி நகர்த்திச் செல்லும் கதைகளுக்கே உரிய மொழிநடை இச்சிறுகதையில் ஓரளவிற்கு மட்டுமே கைக்கூடியுள்ளது.

தன் கதைக்குள் ஒரு கனவை வைத்து அதனுள் வேறொரு கதையை வைக்கும் உத்தி இச்சிறுகதைக்குச் சிறப்பாக அமைந்தாலும் இது யாருக்காகச் சொல்லப்பட்ட கதை என்பதில் குழப்பம் வராமலில்லை. இக்கதையின் மையத்தில் நிழலாடும் இறுக்கங்களை உடைக்கும்போது ராம் மிகுந்த உழைப்பைக் கொடுத்துள்ளார். அதனால்தான் என்னவோ சிறுகதை சிறுவர்களுக்குச் சொல்லப்படுவதைப் போன்ற ஓர் எளிய தோற்றத்தையும் கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் மிகுந்த வலியைச் சுமந்திருப்பதைப் போன்று கணத்தைக் கொண்டுள்ள சிறுகதை, அதன் கூறுமுறையில் எதையோ இழந்திருப்பதைப் போல ஒரு மாயயையும் உருவாக்காமலில்லை என்றே தோன்றுகிறது. இதனை ஒரு தேர்ந்த வாசக மனநிலையிலிருந்தே பதிவு செய்கிறேன். ராம் இச்சிறுகதையை மேலும் ஆழமாக்கியிருக்க முடியும் என்றும் அதனை மொழியிலும் சிறுகதை கூறுமுறையிலும் கூடுதல் கவனத்தைத் திரட்டும்போது அதற்கான வழியை அவராலேயே கண்டடைய முடியும் என்றும் தோன்றுகிறது.

குறியீடுகளை மொழிப்பெயர்ப்பது

இச்சிறுகதையை வாசிக்கும் பொதுவாசகர்கள் பலரும் கவனச் சிதறலுக்கு ஆளாகி மையத்தைத் தேடி அலைந்து களைத்து மீண்டும் மறுவாசிப்பு செய்து குறியீடுகளை உடைத்து ஒரு உருவகத்தை அடையும் உழைப்பிற்குள்ளாகுவார்கள். அல்லது மறுவாசிப்பு செய்யாமல் கிடைத்ததைக் கொண்டு தனக்கான ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்வார்கள். அல்லது புரியவில்லை என ஒதுக்கிவிட்டு இது நிஜ உலகைப் பற்றி பேசவில்லை எனப் புறந்தள்ளியும் விடுவார்கள். நிஜ உலகிற்கும் கதைக்கும் நடுவே ராம் ஒரு பாலத்தைப் புதைத்திருக்கிறார். அதனைக் கண்டையை நாம் தடுமாறுவோம் என்கிற தயக்கத்தில் அவரே ஆங்காங்கே வெளிச்சத்தை மெல்ல பரப்பியுள்ளார். இதுபோன்ற கதைகளுக்கே உரிய உழைப்பை அக்கதை வாசகனிடமிருந்து கோரியே தீரும். அதனைப் பற்றி எழுத்தாளன் கவலைப்படத் தேவையில்லை.

வெள்ளை யானை, யானையில் வருபவர், விந்தையான மிருகங்கள், தவளை, கனவுகள் என இக்கதையில் வரும் யாவுமே வெருமனே வரவில்லை. அவை யாவும் குறியீடு என்பதனை ஒரு வாசகன் புரிந்துகொள்ள அவனுக்கு பரந்த வாசிப்பே அவசியம் என நினைக்கிறேன். அதனைப் பற்றி ராம் இக்கதையில் பட்டிருக்கும் அக்கொஞ்சம் கவலைக்கூட அடுத்தமுறை வேண்டாம் என்றே நினைக்கிறேன். குறியீடுகளின் வழியாகப் பயணிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போதே இது வாசகனுக்குப் புரியாமல் போய்விடுமோ என்கிற தயக்கத்தையும் ஓர் எழுத்தாளன் துறந்துவிட்டால்தான் இவ்வடிவத்திற்கு ஏற்ற சிறுகதை, அதனுடைய கூறுமுறை, அதனுடைய மொழி என்கிற அளவில் ஒரு சிறந்த படைப்பை வழங்கிட முடியும்.

அப்புவின் கனவு இதுபோன்ற ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளின் ஆக்கம் தொலையும் துர்நிகழ்வுகளையும் அதே போல காலம் காலமாகக் கனவுகள் கண்டு பின்னர் மறைந்து, பின்னர் மீண்டும் கனவுகள் காண மட்டுமே வந்து சேரும் அடுத்த தலைமுறை என சில நாடுகளில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் அவலங்களைச் சொல்ல முனைந்துள்ளது. அதனைக் கொஞ்சும் மொழியில் மிகவும் அழகியல் நிரம்பிய வார்த்தைகளில் அடுக்கிக் காட்டியுள்ளதே இக்கதையின் சிறப்பும்கூட என்று சொல்லலாம்.

இச்சிறுகதை வெறுமனே ஒரே வாசிப்பில் கடந்து விட முடியாத ஒரே காரணத்திற்காக ராமைப் பாராட்டியே ஆக வேண்டும். ராமின் மாயக் கரத்திலிருந்து இன்னும் பல சிறுகதைகளை எதிர்ப்பார்க்கிறேன். அது மாய யதார்த்தவாத கதையாக இருந்தாலும், யதார்த்தக் கதையாக இருந்தாலும், சிங்கப்பூரின் புதிய கதைச் சொல் முறைகள் ராமின் படைப்புகளிலிருந்து இனி வரும் என நம்பலாம்.

  • கே.பாலமுருகன்

அக்கரைப் பச்சை – 1 (சிங்கப்பூர் சிறுகதை விமர்சனம்) அழகுநிலாவின் விரல்

அகநாழிகை இதழின் ஆசிரியரும் அகநாழிகை பதிப்பகத்தின் பதிப்பாளருமான எழுத்தாளர் பொன். வாசுதேவன் அவர்கள் ஜூலை 2017ஆம் ஆண்டில் சிங்கப்பூர் தமிழ்ச் சிறுகதைகள் சிலவற்றை ‘அக்கரைப் பச்சை’ என்கிற தலைப்பில் தொகுத்து வெளியீட்டுள்ளார். தற்சமயம் சிங்கையில் தீவிரமாக எழுதி வரும் நண்பர்களின் பலரின் சிறுகதைகளைத் தொகுப்பில் கண்டதும் ஆர்வம் மேலிட்டது. சமீபத்தில் சிங்கையில் வெளிவந்த இத்தொகுப்பின் வழியாக சிங்கப்பூர் நவீனத் தமிழ்ச் சிறுகதைகள் குறித்த ஒரு விரிவான விமர்சனக் கருத்தாக்கத்தை உருவாக்கிக் கொள்ள முடியும் என நம்புகிறேன். ஒரு காலக்கட்டத்தில் ஒரு நாட்டில் வெளிவரும் இதுபோன்ற தொகுப்புகள் அக்காலக்கட்டத்தின் இலக்கியத் திறனாய்வுக்கும் விமர்சனங்களுக்கும் ஏற்புடையதாகும். குறிப்பாக, அந்நாட்டு இலக்கியப் படைப்புகளை அணுக நினைக்கும் விமர்சகர்களுக்குத் தொகுப்புகளே சிறந்த தடத்தைக் காட்டக்கூடியதாகும். ஆகவே, தொகுப்பாளன் என்பவர் இலக்கியத்தை மட்டும் தொகுக்கவில்லை, அந்நிலத்தின் இலக்கிய நகர்ச்சியையும் அடைவையும் சேர்த்தே தொகுக்கும் பணியை ஏற்றுக்கொள்கிறார் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். தொகுப்பது என்பது கவனத்தோடும் அக்கறையோடும் செய்ய வேண்டிய பணியாகும். இத்தொகுப்பில் உள்ள சிறுகதைகள் ஒவ்வொன்றையும் வாசகப் பார்வையுடன் அணுகி விமர்சிக்கும் பொறுப்பையும் ஏற்றுக் கொள்வதன் வழியாக ஒரு தொகுப்பின் அவசியத்தையும் கருத்துரைக்க வாய்ப்புக் கிட்டும்.

ஒரு நிலத்தின் இலக்கியம் அதே நிலத்தில் எப்படிக் காலாவதியாகிறது? இச்சிந்தனை பலருக்கும் எழுவதில்லை. விமர்சகர்களும் ஒரு சிறுகதை வெளிவரும் காலக்கட்டத்தைப் பொருட்படுத்தத் தவறுவதால் அதுபோன்ற விமர்சனங்கள் தொடர்பாக அவநம்பிக்கைகளும் தோன்றுகின்றன. எடுத்துக்காட்டாக, 1990ஆம் ஆண்டு எழுதப்பட்ட ஒரு சிறுகதையை உருவி எடுத்து 2017ஆம் ஆண்டில் வைத்து இதெல்லாம் என்ன சிறுகதை? கொஞ்சம்கூட நவீனத்தன்மைகள் வெளிப்படவில்லை என நாம் எவ்வளவுத்தான் கதறினாலும், 1990ஆம் ஆண்டில் அந்நிலத்தில் நவீன இலக்கியம் குறித்தான பிரக்ஞை, வாசிப்பு போன்றவையின் தாக்கத்தையும் இருப்பையும் ஒரு விமர்சகன் கவனித்தில் கொள்ள வேண்டியப் பொறுப்புடையவனாகின்றான்.

அடுத்து, 2017ஆம் ஆண்டில் நவீன இலக்கியம் தொடர்பான அத்தனை வெளிபாடுகளும், ஆழமான வாசிப்பும் அந்நிலத்தில் நிகழ்ந்து கொண்டிருக்கையில் அதே நிலத்தில் வாழும் ஓர் எழுத்தாளன் எந்தவித புறத்தாக்கங்களுக்கும் அகத்தாக்கங்களுக்கும் ஆளாமல் மூளையைக் கழற்றி ஒரு நூற்றாண்டுக்கு முன்புள்ள இலக்கியப் போக்கிலேயே தக்க வைத்துவிட்டு, எழுத பேனாவை எடுக்கும்போதே அவ்விலக்கியம் காலாவதியாகிவிடுகிறது என்பதனை விமர்சகர்கள் முதன்மைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஓர் இலக்கியம் ஏன் பழமையாகின்றது என்கிற கேள்விக்கும் அதே பதில்தான். பக்கத்து வீட்டில் இருப்பவன் ஜெயமோகன், மாப்பாஸன் என வாசிக்கையில், அடுத்த வீட்டில் இருப்பவன் ‘அட்டா பொன்னியின் செல்வன் தான் நான் கடைசியாக வாசித்த மிகச் சிறந்த எழுத்தாளர்’ என்று சொல்லிவிட்டு அவர் ஒரு சிறுகதை எழுதினால் உங்களுக்கு என்ன தோன்றும்?

இன்னொரு வகையினரையும் நாம் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியுள்ளது. சமீபத்தில் வெளிவந்த புதிய படைப்புகள்வரை வாசித்து அதனை விமர்சிக்கக்கூடியவர்களாக இருப்பினும் அவர்களின் எழுத்தில் அதற்குரிய தாக்கத்தையும் மாற்றத்தையும் காண முடியாது. ஆகவே, இவ்விருவகையினரும் ஒரு நிலத்தின் இலக்கியத்தை இன்னமும் காலாவதியான புட்டியில் அடைத்துப் பாதுகாத்து வருபவர்கள் என்று சொல்லலாம். அவர்கள் ஆபத்தானவர்கள் அல்லர். இலக்கியத்தை நேசிப்பவர்களாகவும் இலக்கியத்தின் மீது பற்றுடையவர்களாகவும் திகழ்வார்கள். ஆனால், அடைப்பட்ட அப்புட்டியலைப் பார்த்துப் பழம்பெருமைகளில் குளிர்காய்ந்தே காலத்தை நகர்த்துவார்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் இலக்கியத்தின் இருப்பிடம் மாறாது. அங்கேயே ஒரு கோட்டையைக் கட்டி மாலை மாட்டிவிட வேண்டியதுதான். பிற்காலத்தில் மணிமன்றம் ஆகிவிடும். நம் இலக்கிய நோக்கம் அதுவல்ல. நகர்ச்சியும் எழுச்சியும் கொண்டவையாக, நீரோட்டத்தைவிட ஆக்ரோஷம் கொண்ட காட்டாறைப் போல காலத்தை விரட்டிக் கொண்டு ஓட வேண்டும்.

அழகுநிலா நல்ல சிறுகதை எழுத்தாளராக உருவாகிக் கொண்டு வரும் இக்காலக்கட்டத்தில் எல்லோரையும் போல அவரை வெறுமனே புழக வேண்டும் என்பதற்காக இவ்விமர்சனத்தை நான் முன்னெடுக்கவில்லை. நீரின் மேற்பரப்பில் மிதந்து கொண்டிருக்கும் குச்சிகள், இலைகளைக் களைந்து ஆழத்தின் தெளிவைக் காட்ட வேண்டும் என்பதே நோக்கமாகும். இவ்விமர்சனம் அவரின் ஒட்டு மொத்த கதைகளின் மீதானது அல்ல என்பதை ஆரம்பத்திலேயே தெளிவுப்படுத்திக் கொள்கிறேன். அக்கரைப் பச்சையை நோக்கி மட்டுமே இக்கொடி பச்சை ஊர்கிறது.

அழகுநிலாவின் இச்சிறுகதை எனக்கு இருவகையான பார்வைகளை உண்டாக்குகிறது. ஒன்று, அவர் இச்சிறுகதையில் பேசும் கதைக்களமும் ஆனந்தி அக்காவைப் பற்றிய சித்திரங்களும் அவரைச் சுற்றி மேலெழும் வாழ்க்கையையும் பலமுறை பலகதைகளில் வாசித்தவையாக முதல் வாசிப்பிலேயே தோன்றியது. இலக்கிய வாசகனாகப் படிக்கத் தொடங்கும்போதே எனக்கு மனச்சோர்வு உண்டாகிவிடுகிறது. ‘நொஸ்தோலோஜியா’ என்கிற பிரிவேக்க உணர்விலிருந்து தொடங்கும் இச்சிறுகதை ஆனந்தி அக்காவின் மீது முழுமையாகக் குவிகிறது. ஓர் எழுத்தாளனாக இருந்து இக்கதையை நான் சிந்திக்கவில்லை. அப்படிச் சிந்தித்தால் இக்கதையை என் பாணியில் எப்படி எழுதியிருக்கலாம் என்பதிலிருந்து விமர்சனம் தடம்புரண்டுவிடும். நான் முழுக்க முழுக்க வாசிப்பை ஆதாரமாகக் கொண்டு இலக்கியத்திற்குள் உலாவுபவன். ஆகையால், வாசகன் என்கிற நிலையிலிருந்தே இத்தொகுப்பிலுள்ள அழகுநிலாவின் விரல் சிறுகதையை அணுகியிருந்தேன்.

‘அது சிரிக்கறப்ப எங்க குலசாமி புள்ளபூச்சி அம்மன் செல மாதிரியே இருக்கும்’ என்ற வரியைப் படிக்கும்போதே மனம் நெருடுவதைத் தவிர்க்க முடியவில்லை. இவ்வரியில் இருக்கும் அத்தனை சொற்களும் பழமையானவை. சினிமாக்களில்கூட இதுபோன்ற சொற்களை நாம் கேட்டிருக்கக்கூடும். ஒரு நவீன எழுத்தாளர் முதலில் தவிர்க்க வேண்டியவையாக இதுபோன்ற ‘கிளிஷேவான’ உவமைகள்தான் என்று நினைக்கிறேன். இதே அழகுநிலாவின் களம் இதழில் வெளிவந்த ‘விலக்கு’ சிறுகதை முற்றிலுமாக நவீன சமூகத்தின் குரல்களைப் பதிவு செய்வதாக அமைந்திருந்தன. அழகுநிலாவின் சிறுகதைகள் இதுபோன்று அல்லது இதைவிடவும் இன்னும் முன்னகர்ந்து சமூகத்தின் ஆழ்மனத்தின் நுண்ணிய குரல்களைப் பதிவு செய்வதாக அமைதல் வேண்டும் என்றே வாசிக்கும்போது தோன்றியது. சிங்கையின் பலத்தரப்பட்ட மனிதக் குரல்களில் சிக்கிக் கிடக்கும் ஈரங்களைப் பதிவு செய்யக்கூடிய ஆற்றல்மிக்க எழுத்துநடையும் கூர்மையும் கணிவும் நிலாவிடமுண்டு.

இதே சிறுகதையில் மேலத்தெரு ஆளுங்க, கீழத்தெரு ஆளுங்க, தராதாரம் என இன்னும் சில குறியீட்டு சொற்களின் வழியாக சாதி வேறுபாட்டுணர்வு மனித மனங்களில் மாறாமல் புதைந்திருப்பதையும் அழகுநிலா காட்டுகிறார். கதையில் சட்டென திறக்கும் இவ்விடம் கதைக்குப் புத்துயிர் வழங்குகிறது. கதை எதை நோக்கி நகர்கிறது என்கிற போக்கிடம் தெரியத் துவங்கியது. கீழ்த்தெரு, மேல்த்தெரு என்கிற பிரிவினை மலேசியத் தோட்டப்புறங்களிலும் இருந்திருப்பதை சீ.முத்துசாமியின் ‘மண் புழுக்கள்’ நாவலை வாசிக்கும்போது உறுதிப்படுத்த முடியும். இதையே மலேசியாவில் கீழ் லயம், மேல் லயம் என்று சொல்வார்கள். மேல் லயத்தில் உள்ளவர்கள் இச்சாதி பிரிவினர் என்றும் கீழ் லயத்தில் வாழ்பவர்கள் சாதியில் குறைந்தவர்கள் என்றும் நாட்டுக்குள் கொண்டு வரப்படும்போதே ஏற்கனவே அவர்களுக்குள் இருந்த சாதி உணர்வுகள் தக்க வைக்கப்பட்டிருப்பது தெரிகிறது. இதனால் ஏற்படும் சிக்கல், பிரிவினைகள், பிரிவினை தொடர்பான மாற்றங்கள், சாதியால் உண்டாகும் கலவரங்கள் என பற்பல சிறுகதைகள், நாவல்களில் சில பகுதிகள் என பேசப்பட்டுள்ளன.

இருப்பினும் இச்சிறுகதை எடுத்துக் கையாண்டிருக்கும் சாதி தொடர்பான அவதானிப்புகளிலும் ‘சொல்லியதை மீண்டும் சொல்லல்’ போன்ற உணர்வே மேலிடுகிறது. சாதி விட்டு சாதி திருமணம் செய்து கொண்டு ஊரைவிட்டு ஓடி, பின்னர் ஏமாற்றப்பட்டு அப்பெண் ஊரின் எல்லையில் தனிமையில் வாழ்ந்து சிரமப்படுவது என மீண்டும் மீண்டும் கேட்ட, பார்த்த, படித்த ஒன்றாகவே இருக்கின்றன. இப்படிக் கதைநெடுக இதுபோன்ற எண்ணங்கள் வந்து குவிகின்றன. அழகுநிலா இதனை ஒரு சவாலாகக் கொண்டு களைய வேண்டும். இமையம் எழுதிய ‘பெத்தவன்’ சிறுகதையும் இதுபோன்ற சாதி தொடர்பான சிக்கலை மையமாகப் பேசியது. ஆனால், அக்கதை கூறுமுறையிலும், வடிவத்திலும், மொழியிலும் மாறுப்பட்டிருந்தது.

இச்சிறுகதையின் கடைசி காட்சி மிக முக்கியமானவை. அக்கடைசி காட்சியினாலேயே இச்சிறுகதை நிற்கிறது என்று சொல்லலாம். அதற்கு முந்தைய வாசிப்புவரை ஏதோ பழைய சிறுகதையை வாசித்துக் கொண்டிருக்கிறோம் என்று தோன்றும் உணர்வைத் தடுக்க முடியாமல் தடுமாறும்போது அக்கடைசி காட்சியும் முடிவும் கொஞ்சம் தெம்பை அளிக்கிறது. ஒரு சிறுகதை முடியும் புள்ளியில் தன்னை மீளுருவாக்கம் செய்து கொள்ளும் வித்தையை அழகுநிலா நன்கு அறிந்துள்ளார். பலரின் சிறுகதைகள் முடிவினாலேயே புறந்தள்ளப்பட்டுள்ளன. அழகுநிலாவின் விரல் சிறுகதை அதன் முடிவினாலேயே மனத்தில் ஒரு சிறு அசைவை உண்டாக்கிச் செல்கிறது. ஓர் ஆக்கத்தின் அழகு இதுவாகக்கூட இருக்கலாம்.

விரல் என்பதே இங்குச் சிறுமையில் மின்னும் ஒரு துளி வெளிச்சம் என்று அக்கடைசி காட்சியினூடாக உருவகித்துக் கொள்ளலாம். அதே முடிவைக் கொண்டு கீழ்த்தெரு மக்கள் ஒன்றும் பயனற்ற எலும்பற்ற வெறும் சதை பிண்டமாக ஆறாம் விரலாக வாழ்கிறார்கள் என்றும் ஒரு வாசகன் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளலாம். இப்படிப் பல திறப்புகளின் முன்னிறுத்தும் சாத்தியம் கொண்ட சிறுகதையின் முடிவுக்காக விரல் சிறுகதை குறிப்பிடத்தக்க எளிய சிறுகதையாக வாசிப்பிற்கு முன்னிறுத்தலாம். ஆனாலும், மொழி, கதைக்களம், அதனை முன்னெடுக்கும் விதம், சொற்கள் என இன்னும் பல வகைகளில் அழகுநிலா இச்சிறுகதையைச் செம்மைப்படுத்த வேண்டியக் கடப்பாட்டையும் கொண்டுள்ளார்.

அழகுநிலாவின் விரல் அத்தனை எளிதில் சமரசமாகக்கூடியதல்ல. உமது விரல்கள் இன்னும் பல ஆழமான, காலத்தால் அழியவே முடியாத பல ஆக்கங்களைத் தரவல்லன. அழகுநிலாவின் இதற்கு முந்தைய பல சிறுகதைகள் தரமானவையும் உள்ளன என்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். இவ்விமர்சனம் ‘விரல்’ சிறுகதையை முன்வைத்து மட்டுமே.

இப்பொழுது ஒரு சிறுகதையை எழுத பேனாவை எடுக்கும் யாராகிலும் நமக்கு முன்னே பல்லாயிரம் கோடி கதைகள் உலகப் பரப்பில் குவிந்து கிடக்கின்றன என்பதை நினைவில் கொண்டிருக்க வேண்டும்.

கே.பாலமுருகன்

 

சிறுகதை: இரண்டு கிலோ மீட்டர்

சீன மதுபான கடையில் இருக்கும் பூனை அந்த வெற்றிடத்தில் வந்து நின்று மண்ணில் எதையோ தேடிக் கொண்டிருந்தது. புதிதாகப் பார்க்கும் யாவருக்கும் அல்லது அப்பொழுதுதான் அவ்விடத்திற்கு வரும் யாவருக்கும் பூனை இரையைத் தேடிக் கொண்டிருப்பதாகத் தோன்றலாம். மோட்டாரில் வந்து நின்ற எனக்கும் அவ்வெற்றிடம் சட்டென கவனத்தை ஈர்த்தது.

தைப்பூசம் நடக்கும் முருகன் கோவிலுக்கு முன்னே இருக்கும் நாற்சந்தி சாலையிலிருந்து இறநூறு மீட்டர் தள்ளிப் போய் நின்றாலோ, தெற்கில் அமைந்திருக்கும் முருகவேல் சாப்பாட்டு கடையிலிருந்து வெளியாகும் யாராக இருந்தாலும் இருபது மீட்டர் தொலைவில் இருக்கும் வளைவில் வந்து நின்றாலோ, வடக்கில் இருக்கும் சீனக் கம்பத்திற்குள்ளிருந்து அரக்கப் பரக்க வெளிவந்து திணறும் யாராக இருந்தாலும் 50 மீட்டரில் லாவகமாக வாயப் பிளந்து பெரிய சாலைக்கு அனுமதிக்க வந்து நின்றாலோ, அங்கொரு நீலம் மங்கிய ஓரிரு எழுத்துகள் காணாமல் போய்விட்ட பழைய சாலை வழிகாட்டிப் பலகை பட்டணத்திற்கு ‘இரண்டு கிலோ மீட்டர்’ தூரம் இருப்பதாக நாள் முழுக்க வெந்து நனைந்து வெளுத்து வெம்பிக் காட்டிக் கொண்டிருக்கும்.

அந்த ‘இரண்டு கிலோ மீட்டர்’ பலகை பலருக்கு மிகவும் நெருக்கமானது; ஆபத்தானதும்கூட. தைப்பூசத்திற்கு வரும் யாராக இருந்தாலும் பெரும்பாலும் காவடிகளை வேடிக்கைப் பார்க்க அந்த இரண்டு கிலோ மீட்டர் பலகை நடுவில் இருக்கும் கம்பியில்தான் ஏறி நிற்பார்கள். அதில் ஒரு பத்து பேர் ஏறி நின்று தொலைவை வேடிக்கைப் பார்க்க முடியும். ஆகவே, யார் அவ்விடத்தை முதலில் அபகரித்துக் கொள்கிறார் எனும் போட்டி தைப்பூசத்தின் போது வழக்கமாகும். வீட்டை விட்டுப் போகும்போதே “சீக்கிரம் போய் அந்த ரெண்டு மைல் பலகைலெ எடத்த பிடிச்சிகுங்கடா,” எனப் பலர் சொல்லிக் கேட்டிருக்கலாம்.

கருப்பு வெள்ளை சாயம் பூசப்பட்டிருக்கும் இரண்டு பெரிய இரும்புகள் அப்பலகையைத் தாங்கிப் பிடித்திருக்கும். அவ்விரும்புகள் அங்கு ஓடும் பெரிய கால்வாய்க்கு மிக அருகிலேயே இலேசாக மண்ணைத் துலாவிக் கொண்டு நிற்கும். வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது கால அளவைக் கணிக்க முடியாத ஏதோ ஒரு நாளிலோ அந்த இரும்புகளுக்கு மட்டும் சாயத்தைப் புதுப்பித்துவிட்டுப் போயிடுவார்களே தவிர அச்சாலை பலகையில் எப்பொழுதோ விழுந்து காணாமல் போய்விட்ட எழுத்துகளை இன்னமும் யாரும் சரிசெய்யவில்லை.

“SUNG I P TANI – 2KM’

மேலேயுள்ள வார்த்தைகளைப் புதிதாக யாரும் இங்கு வந்தால் மட்டுமே தட்டுத் தடுமாறி வாசிப்பார்கள். மற்றப்படி அங்கே இருப்பவர்களுக்கு அது ‘சுங்கை பட்டாணி’த்தான். நீலம் வெளுத்துப்போன சாலை வாகனங்களின் தூசுப் படிந்த சதுர வடிவத்திலான அப்பலகை பழையதாகிவிட்டதைப் பற்றி யாருக்குமே கவலை இருந்ததாகத் தெரியவில்லை.

சிலசமயங்களில் அது குழந்தைகளின் இடமாகவும் மாறிப் போய்விடும். எப்பொழுதாவது அவ்விடத்தைக் கடக்கும்போது அந்தப் பலகையின் அடியில் குழந்தைகள் அமர்ந்து கொண்டு விளையாடுவதையும் பலரும் பார்த்திருக்கிறார்கள். கால்களைக் பலகையின் ஓரத்தில் இருக்கும் கால்வாயில் தொங்கவிட்டுக் கொண்டு சாலையில் போகும் வரும் வாகனங்களைக் கணக்கிடாத பிள்ளைகளே இல்லை எனலாம். அவ்வறிப்பு பலகையைத் தாங்கி நிற்கும் கருப்பு வெள்ளைக் கம்பியில் ஏதேதோ கிறுக்கி, சுரண்டி விளையாடிக் கொண்டிருப்பதை யாரும் தடுத்திருக்க மாட்டார்கள்.

பின்னொரு நாளில் அவ்வறிப்புப் பலகையில் அந்த ‘இரண்டு கிலோ மீட்டர் வார்த்தை’ இருக்கும் இடத்தை மட்டும் விட்டுவிட்டு கெட்ட வார்த்தைகளைச் சாயத்தால் அடித்திருந்தார்கள். அங்கிருக்கும் இளைஞர்கள், அல்லது முருகவேல் கடைக்கு வந்துவிட்டுப் போகும் ‘கேங்’ ஆட்கள் என யாராவது அதனைச் செய்திருக்கலாம். நீலப் பலகைக்கு ஏற்றவாறு கருப்பு சாயத்தால் அவ்வார்த்தைகள் பொறிக்கப்பட்டிருந்தன. பாதைசாரிகளுக்கு மேற்கொண்டு வாழ்க்கை தத்துவங்களைப் போதிக்கும் வகையில் அவ்வார்த்தைகள் அப்படியே நிலைத்து நின்றன. யாரும் அதனைப் பற்றி பொருட்படுத்தவதாக இல்லை. பார்க்கும் யாவரின் மனத்தையும் உறுத்தும் மிகமோசமான கெட்ட வார்த்தைகள் பற்றி யாரும் எந்தக் கவலையும் படாதாது அவர்களுக்கே ஆச்சர்யமாக இருந்திருக்கலாம்.

அந்த அறிவிப்புப் பலகையிலிருந்து பட்டணம் மட்டும் இரண்டு கிலோ மீட்டர் அல்ல. அங்கிருந்து இரயில் நிலையம் சரியாக இரண்டு கிலோ மீட்டர்தான். அதே போல இந்தியர்களின் சுடுகாடும் அங்கிருந்து போனால் இரண்டு கிலோ மீட்டர்தான். அதேபோல வடக்கிழக்கில் போனால் பொது மருத்துவமனையும் அதே இரண்டு கிலோ மீட்டர்தான். அங்கிருக்கும் ‘சிவப்பு விளக்கு சாலை’யும்கூட இரண்டு கிலோ மீட்டர்தான். இரவில் மட்டும் துளிர்த்தெழுந்து நடுநிசியில் மீண்டும் ஆள் அரவமில்லாமல் கரைந்து காணாமல் போய்விடும் வெறும் காட்டு மரங்களும் ஆளில்லாத பழைய பலகை வீடுகள் அடங்கிய சாலையும் அங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர்தான். இப்பலகையை இங்கு நடும்போது இவையெல்லாமும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்றாலும் ஆச்சர்யமான ஓர் இருப்பு. இந்த இரண்டு கிலோ மீட்டர் பலகை அத்தனை கச்சிதமாக அமைந்து நின்றது.

பிறகொரு நாளில் காணாமல்போன ஒரு வயதான தாடி தாத்தாவும் அந்தப் பலகையின் கீழ்தான் படுத்து உறங்கியிருக்கிறார். ஒரு வெள்ளைச் சாக்குப் பையைக் கையுடன் வைத்துக் கொண்டு நாளெல்லாம் போத்தல்களைக் குப்பைத் தொட்டிகளிருந்து சேகரித்து அதனைச் சீன இரும்புக் கடையில் விற்று விட்டு அன்றைய நாளுக்குத் தேவையான உணவை மட்டும் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு இரவில் இரண்டு கிலோ மீட்டர் பலகைக்குக் கீழ் அடைக்கலமாகிவிடுவார் என அங்கிருக்கும் எல்லோருக்கும் தெரியும். சிலர் அவரை அங்கிருந்து அடித்துத் துரத்தும்போது கெட்டியாக அப்பலகையின் இரும்பைப் பிடித்துக் கொண்டு போராடுவதையும் பார்த்திருக்கிறேன். ஒரு குழந்தையைப் போல பிடிவாதமாக அவர்களின் இழுப்பிற்கு வராமல் முரடு பிடிப்பார்.

அச்சாலை பலகையின் ஓரம் கடந்த மாதம் நடந்த ஒரு சாலை விபத்து திருப்புமுனையாக அமைந்துவிட்டது. சிவப்பு விளக்கு சாலையிலிருந்து வேலை முடிந்து சீனக் கம்பத்து வழியாக உள்ளே இருக்கும் தன் வீட்டுக்குச் சைக்கிளில் போய்க்கொண்டிருந்த இடதுப்புறத்தில் ஒரு கொண்டை போட்டிருந்த பெண்மணி சரியாக இரவு மணி 11.35க்கு அப்பலகையின் ஓரம் வந்து நின்றாள். அங்கிருந்து சாலையைக் கடக்க எண்ணியவள், சட்டென ஓர் அழைப்பேசி வர, அழுகையும் கோபமும் நிறைந்த குரலில் அவள் மறுவார்த்தைகள் பேசிக் கொண்டே கவனத்தைத் தவறவிட்டாள். சீன மதுபான கடையின் வாசலிலிருந்து போதையுடன் வெளியேறிய கிழட்டுப் பூனை சாக்கடையின் ஓரம் வந்து அப்பலகையில் மாதக்கணக்கில் தொங்கிக் கொண்டிருந்த கெட்ட வார்த்தைகளை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தது. வேலை முடிந்து அரைத் தூக்கத்துடன் தள்ளாகிக் கொண்டே முருகவேல் சாப்பாட்டுக் கடையிலிருந்து வெளியேற ஒரு மோட்டாரோட்டி அப்பலகை இருக்கும் சாலைக்குள் வந்து அப்பெண்மனியை மோதினான். அதைக் கண்ட கடை முதலாளி முருகவேல்க்குக் கண்கள் விரிந்தன.

இப்பொழுது அப்பலகை அங்கில்லை. அடித்து முக்கால்வாசியைப் பெரிய கால்வாயில் இறக்கிவிட்டார்கள். மோட்டாரோட்டிக்கும் அப்பெண்மணிக்கும் என்னவாயிற்று என்கிற செய்தி கிடைக்கப் பெறாவிட்டாலும், அப்பலகை அங்கில்லாமல் போனதற்கு அவ்விபத்துதான் காரணம் என முருகவேல் கடைக்கு வரும் எல்லோரும் பேசிவிட்டுப் போவார்கள். அவ்வருடம் தைப்பூசத்தின்போது குழந்தைகள் பெரியோர்கள் என எல்லோரும் வெறுமனே நின்று கொண்டு காவடிகளைப் பார்க்கச் சிரமப்பட்டுக் கொண்டிருந்தார்கள். முருகவேல் கடையில் சண்டையிட்டு கோபத்துடன் வெளியே வந்து எத்தி உதைக்க அங்கு ஒன்றுமே இல்லாததால் இளைஞர்கள் விரைந்து வெளியேறி மறைந்தனர்.

இலேசாக மழைத் தூரத் துவங்கியிருந்தது. மீண்டும் அவ்வெற்றிடத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன். இங்கிருந்து இரண்டு கிலோ மீட்டர் தூரத்தில் இப்பொழுது புதியதாக ஒரு பெரிய பேரங்காடியும் கட்டப்பட்டிருந்தது. எல்லோரும் இவ்வெற்றிடத்தை ஒரு கணம் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பா உயிரோடு இருந்தபோது மாலையில் வேலை முடிந்து முருகவேல் கடையில் சாப்பிட்டுவிட்டு எனக்காக இதே ‘இரண்டு கிலோ மீட்டர்’ பலகையின் ஓரம்தான் வந்து நிற்பார். நான் தாமதமாக வந்தாலும் அன்று கடையில் பேசிய அரசியல் நிலவரங்களை உற்சாகத்துடன் சொல்லிக் கொண்டே வருவார். எல்லாவற்றுக்கும் தூரம் இரண்டு கிலோ மீட்டர்தான் என நினைக்கத் தோன்றியது.

  • கே.பாலமுருகன்