சினிமாவிற்கும் எனக்குமான இடைவெளி
முன்பெல்லாம் ஒரு திரைப்படத்தைத் திரையில் பார்த்துவிட்டு வந்ததும் அதன் நிறைகுறைகளை எழுதி முகநூலில் அல்லது வலைத்தலத்தில் பதிவேற்றம் செய்துவிடுவேன். ஆனால், இப்பொழுது அவசரம் ஏதுமின்றி மௌனமாகவே இருக்கிறேன். சில சமயங்களில் சினிமா விமர்சனம் எழுதுவது குறித்தே சோம்பல் தட்டிவிட்டது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான இரண்டு காரணங்கள் உள்ளன.
‘யூடியுப்’ திரைவிமர்சகர்கள் ஏராளமாகப் பெருகி வழிந்து கொண்டிருக்கிறார்கள். தினம் ஒரு பட்த்தை விமர்சனம் செய்து நிறைய வீடியோக்கள் மக்கள் மத்தியில் கவனமும் வரவேற்பும் பெற்று வருகிறது. சினிமாவைப் பற்றி எழுதினால் இனி யாரும் வாசிக்கப் போவதில்லை எனும் அளவிற்கு ‘யூடியுப்’ விமர்சகர்கள் லட்சத்தையும் தாண்டிய இரசிகர்களைப் பெற்றிருக்கிறார்கள்.
அவற்றுள் சமீபத்தில் விவேகம் படத்தைப் பற்றி கிண்டலடித்து ஏராளமான விமர்சனத்திற்கு ஆளான ‘ப்ளூ சட்டை மாறன்’, பிரசாந்த், பூஸ்கி, ‘இரண்டு நிமிட விமர்சனம்’, ‘ஜேக்கி சினிமாஸ்’, ‘அப்புகுட்டி ரிவீவ்’, ‘சென்னை எக்ஸ்ப்ரேஸ் டீவி’ என அடுக்கிக் கொண்டே போகலாம். மூன்று பக்கம் விமர்சனத்தைப் படிப்பதற்குப் பதிலாக இரண்டு நிமிட நகைச்சுவையும் கிண்டலும் கலந்த வீடியோ விமர்சனங்களையே மக்கள் விரும்புகிறார்கள் என்பது ஒரு சிலரைக் கேட்கும்போது அறிய முடிகிறது.
மற்றொரு காரணம், முறையாக முன்வைக்கப்படும் விமர்சனங்களை எதிர்க்கொள்வதில் இருக்கும் சுணக்கம். கிண்டல், கேலி போன்றவற்றை மீறி உண்மையான மனத்திலிருந்து இரசனையிலிருந்து வைக்கும் எதிர்ப்பார்ப்புகள் கலந்த விமர்சனங்களுக்கு ஏன் திரைப்படம் சார்ந்த நண்பர்கள் வழிவிடுவதில்லை என்கிற கேள்வியே ஒரு தயக்கத்தை உருவாக்குகிறது. பின்நவீனத்துவம் படைத்த பிறகு படைத்தவன் இறந்துவிட்டான் என்கிறது. இனி, படைப்பும் வாசகனும், பார்வையாளனும் அதனுடன் உறவாடுகிறான். அதனைச் சார்ந்த ஒரு பார்வையை, உரையாடலை, கருத்தியலை கட்டமைத்து நகர்கிறான். அடுத்து வரும் இன்னொரு பார்வையாளன், விமர்சகன் அதனையும் கட்டுடைத்துவிட்டு அடுத்தவொரு கருத்தை ஏற்றுகிறான். இதுதான் விமர்சன நகர்வு; இரசனை மாற்றத்தின் விளைவு. இதைத் தடுக்க, அல்லது கட்டுப்படுத்த நினைக்கும் எந்தக் கலை வடிவமும் பெரியளவு எழுச்சியை உருவாக்காமல் போய்விடும்.
படம் பார்த்துவிட்டு உடனடியாக அப்படத்தை விமர்சித்து, கிண்டலடித்து, தாக்கி, அவமானப்படுத்துவது விமர்சனமே கிடையாது. அதுபோன்ற இழிவான எழுத்துக்கும் நேர்மையாக சினிமா ‘டெக்னிக்கல் வேலைப்பாடுகள்’ தெரிந்த, கலை இரசனையுடன் ஒப்பீட்டு ஆய்வு மனநோக்குடன் முன்வைக்கும் விமர்சனங்களுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. நேர்மையான விமர்சனங்களைத் தடுக்காதீர்கள் என்பதுதான் என் கோரிக்கை. விமர்சனம் விமர்சனத்துடன் எதிர்க்கொள்ளப்பட வேண்டும். விமர்சனம் பகைமைகளை உருவாக்கிக் கொள்ளக்கூடாது.
இனியாவது சினிமாவிற்கும் எனக்குமான இந்த இடைவெளி குறைக்கப்படும் என நம்புகிறேன்.
- கே.பாலமுருகன்