ஜெயமோகன் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம்- 2017

கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் கடந்த 2 ஜூன் தொடங்கி 4 ஜூன் வரை கூலிம் சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யம் மலைச்சாரல் ஆசிரமத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களும் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நவீன இலக்கியக் களம் நண்பர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலக்கியம், ஆன்மீகம், தத்துவம்,உளவியல், வாசிப்பு என்கிற வகையில் தொடர்ந்து கலந்துரையாடல், சந்திப்புகள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். அவ்வரிசையில் இவ்வாண்டும் நவீன இலக்கிய முகாம் இரண்டாவது முறையாகக் கூலிம் கெடாவில் நடைபெற்றுள்ளது. 91 பங்கேற்பாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

 

முதல் நாள் முகாமில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் நவீன தமிழ் சிறுகதைகள் பற்றி உரையாற்றினார். ஒரு சிறுகதைக்குரிய வடிவ ரீதியிலான கட்டமைப்புகள் தொடர்பாகவும் உலகின் சிறந்த சிறுகதைகளைக் கூறி அதன்வழி ஒரு சிறுகதை முடிவெனும் இடத்தில் எப்படி வாசக உள்ளீட்டை ஏற்படுத்துகிறது என விரிவான முறையில் பேசினார். முதல் அமர்வே வந்திருந்த வாசகர்கள், பங்கேற்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும். அடுத்த அமர்வில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் சங்க இலக்கியத்தில் வாழ்வியல் கூறுகள் எனும் தலைப்பில் பேசினார். நாஞ்சில் வட்டார வாழ்வியலை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு எழுத்துலகத்திற்குள் வந்த நாஞ்சில் நாடன் அவர்கள் சங்க இலக்கியத்தில் நன்கு தேர்ச்சியுடைய பேச்சாளராகவும் இருந்தார். வாழ்க்கையோடு மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் உரையாற்றினார்.

 

 

மாலை 7.00 மணிக்குப் பொது அமர்வு நடத்தப்பட்டது. கூலிம் வட்டார நண்பர்கள், எழுத்தாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இப்பொது அமர்வில் கலந்து கொண்டனர். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இலக்கியத்தின் பயன் மதிப்பு தொடர்பாக உரையாற்றினார். ஏன் இலக்கியம் அவசியம் என்கிற வகையில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது. இலக்கியத்தின் பயன் குறித்து தமிழ் சூழலில் மட்டும்தான் கேள்விகள் எழுந்த வண்ணமே இருப்பதாகவும், மற்ற மொழியிலோ இத்தகைய கேள்விகளுக்கு எந்த எழுத்தாளரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை எனக் கூறித்தான் அவருடைய மிகவும் ஆழமான உரையைத் தொடர்ந்தார்.  இரவில் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் இலக்கிய அவதாணிப்புகள் என்கிற தலைப்பில் கூர்ந்த கவனிப்பு, விவரிப்பு சிறுகதைகளில் எத்தனை அவசியம் என அவருடைய வாசிப்பனுபவத்தை முன்வைத்து பேசினார்.

 

மறுநாள் காலையில் இந்தியப் பண்பாட்டு சித்திரம் என்கிற தலைப்பில் ஜெயமோகன் அவர்களின் நண்பர் ராஜமாணிக்கம் அவர்கள் உரையாற்றினார். சிற்பக் கலைகள் பற்றிய விரிவான தேடலும் ஆய்வும் உள்ளடங்கிய பேச்சாக அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழின் இலக்கியமும் ஆன்மீக சிந்தனைமரபும் என்கிற தலைப்பில் மீண்டும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விரிவாகவும் தத்துவார்த்தமாகவும் இரண்டிற்கும் உள்ள தொடர்புகளையொட்டி பேசினார். பின்னர் காலை 11.30க்கு நாஞ்சில் நாடன் அவர்கள் நாட்டார் வாழ்வியல் உறவுகளும் உணவுகளும் என்கிற தலைப்பில் பேசினார். இவ்வமர்வு அனைவரையும் அவர்களின் தோட்டப்புற வாழ்க்கைக்குத் திரும்ப கொண்டு சென்றுவிட்டது எனப் பல பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

      

அன்றைய இரவில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழின் சிறந்த நாவல்கள் பற்றி உரையாற்றினார். முதலில் எது நாவல் என விளக்கிப் பேசும்போது பல கோணங்களில் நாவலை அணுகிப் பார்க்கும் திறனைப் பங்கேற்பாளர்கள் மத்தியில் உருவாக்கினார் என்றே சொல்ல வேண்டும். மேலும், தமிழில் அறியப்பட்டிருக்கும் முக்கியமான சில நாவல்கள் பற்றியும் பேசினார். இம்முகாமின் வழி பலவிதமான விவாதங்களினாலும் குழப்பங்களினாலும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எழுத்துக்கும் மத்தியில் விழுந்து கிடந்த இடைவெளி குறைக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

இம்முகாம் நவீன இலக்கியக் களத்தின் இரண்டாவது முயற்சி என்பதால் ஆரம்பத்திலிருந்தே இம்முகாம் குறித்த கலந்துரையாடல்கள், சந்திப்புகள், திட்டமிடல் நடந்து கொண்டே இருந்தன. பிரம்மாநந்த சுவாமி அவர்களின் வழிகாட்டலாலும் மலேசியாவில் இலக்கியத்திற்கு ஒரு களமாக இருந்து செயல்பட்டும் வருவதாலும் இம்முகாம் வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.

 

(குறிப்பு: முகாமில் பேசப்பட்ட உரைகள் விரைவில் காணொளி வடிவத்திலும் எழுத்து வடிவத்திலும் இத்தலத்தில் பகிரப்படும்)

எழுத்து: கே.பாலமுருகன்

நவீன இலக்கிய முகாம் 2: சில புகைப்படங்கள்