ஒளி என்பது வெளுப்பான இருட்டு- கே.பாலமுருகனின் சிறுகதைகள் விமர்சனம்

         ருள் என்பது குறைந்த ஒளி என்கிற பாரதியின் கூற்றை முற்றமுழுக்க மறுதலிப்பவராய் தெரிகிறார் பாலமுருகன். அவரைப் பொறுத்தவரை ஒளி என்பதேகூட வெளுப்பான இருட்டுதான் போலும். ஆமாம், அவருக்கு பூமியே ஒரு இருளுருண்டையாகத்தான் தெரிகிறது. எனவே அவரது கதையுலகமும் இருளுக்குள் தான் இயங்குகிறது. இருட்டு இருட்டு என்று இருட்டைப் பற்றியே இத்தனைக் கதைகள் எழுத முடியுமா என்கிற மலைப்பு ஒருபுறமிருக்க அதைப் பற்றி இன்னும் சொல்லிமுடிக்கவில்லை என்கிற ஒரு துயரத்தோடுதான் அவரது ஒவ்வொரு கதையும் முடிந்திருக்கிறது என்பதைத்தான் கவனப்படுத்தி சொல்லவேண்டியிருக்கிறது.

       ருளுக்குள் நுழைகிறபோதான தத்தளிப்பு, சற்றே பழகிய பின் கண்களுக்குப் புலப்படுகிற மங்கலான உருவங்கள், அவற்றின் நடமாட்டங்கள், முழுப் பரிமாணத்தில் தெரிந்துகொள்ளவியலாத அவற்றின் மீதான பயம் பரவசம் என்பவையெல்லாம் ஏற்கனவே வெளிச்சம் என்கிற ஒன்றை அறிந்திருப்பவருக்குத் தானேயொழிய பாலமுருகனின் கதைமாந்தர்களுக்கல்ல. ஏனென்றால் அவர்கள் வெளிச்சம் என்பதை வாழ்நாளில் ஒருபோதும் கண்டவர்களல்ல. எனவே அவர்கள் இருளில் பிறந்து இருளிலேயே வளர்ந்து வாழ்ந்து அதிலேயே மடிந்து ஆகக்கடைசியில் அந்த இருளுக்குள்ளேயே புதைந்தும் போகிறவர்களாக இருக்கிறார்கள். வெளிச்சத்துக்குள் நுழையும் தருணங்களில்கூட அதுதான் வெளிச்சம் என்பதை முன்பின் அறிந்திராத காரணத்தால் அவர்கள் கூசும் கண்களை மூடி அவ்விடத்தை இருளாலடித்து தமக்கிசைவாக்கிக் கொண்ட பின்பே இயல்புநிலைக்குத் திரும்புமளவுக்கு அவர்கள் இருள்வயப்பட்டிருக்கிறார்கள்.

 

கிட்டாதாயின் வெட்டெனவோ சட்டெனவோ மறந்துவிட அவர்களொன்றும் துறவிகளல்ல. வெளிச்சத்தின் மீதான அவர்களது தணியாத ஆவல் அது கிடைக்கவே போவதில்லை என்பதனால் தீராப்பகையாகவும் மாறிவிடுவதில்லை. ஆனால் அவர்களது பிரார்த்தனைகள் ஒளியுமிழும் தேவதைகளை எதிர்பார்த்தல்ல. மஞ்சள் வண்ண இருளைப்போல எப்போதும் அணையாத தீப்பந்தங்களையும் மண்ணெண்ணெய் விளக்குகளையுமே வேண்டுதலாய் கொண்டிருக்கின்றனர். அவர்களது அதிகபட்சக் கனவான ஜெனரேட்டர் விளக்குகளும்கூட கருமையாய் ஒளிர்பவை என்பது புனைவல்ல, வாழ்க்கை. ஆமாம், அவர்களது வாழ்க்கை இருள்மயமானது. அந்த இருளின் வயது இரண்டு நூற்றாண்டுகள்.

2.

‘உலகெங்கும் தமிழர்கள் இருக்கிறார்கள், மலேசியாவில் மட்டும்தான் வாழ்கிறார்கள்’ என்று ஒருமுறை அண்ணா சொன்னாராம். எப்படி வாழ்கிறார்கள் என்று அவரும் சொல்லவில்லை, ஏனோ அவரிடம் யாரும் கேட்கவுமில்லை. கை தட்டுவதற்கே நேரம் போதாதபோது கேள்வியாவது பதிலாவது? ஆனால் பாலமுருகன் தன் கதைமாந்தர்கள் வழியே இந்த கேள்விகளையும் பதில்களையும் முன்பின்னாகவும் அடுக்குகள் மாற்றியும் முரணொழுங்கிலும் சொல்ல முயன்றிருக்கிறார்.

தமிழ்நாட்டின் இண்டுஇடுக்கு சிற்றூர்களைச் சேர்ந்த எளிய மனிதர்கள் நாகை, ராமேஸ்வரம், தூத்துக்குடி போன்ற துறைமுகங்கள் வழியே உலகின் 40க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பிரிட்டிஷாராலும் பிரான்சினராலும் கொண்டு செல்லப்பட்ட வரலாற்றுடன் பின்னிப் பிணைந்ததுதான் மலேசியத்தமிழரது வரலாறும். அப்படியான மலேசியத் தமிழரது வரலாற்றின் மிகத்தொடக்ககால உளவியல் போக்குகளின் வகைமாதிரிகளே பாலமுருகனின் கதைமாந்தர்களாக இருக்கிறார்கள்.

இந்தியாவைப் போலவே மலேசியாவையும் காலனியாகக் கொண்டிருந்த பிரிட்டிஷார் அங்கு ரப்பர் தோட்டங்களை உருவாக்கவும், தோட்டங்களையும் துறைமுகங்களையும் இணைப்பதற்கான சாலைகளையும் பாலங்களையும் நிர்மாணிப்பதற்காகவும் இங்கிருந்து உழைப்பாளிகளை கொண்டு சென்றனர். எங்கு கோண்டுபோய் சேர்க்கப்போகிறார்கள் என்கிற விவரமே தெரியாமல் கப்பலுக்குள் அடைபட்ட அந்தக்கணத்தில் மனதிற்குள் ஏற்பட்ட வெறுமையும் நிச்சயமற்றத்தன்மையும் அவர்களது மனதில் என்றென்றைக்குமான இருளாக கவிந்திருக்கிறது. பக்கத்து ஊரைக்கூட பார்த்திராத அவர்கள் நாடுகடந்து கடல் தாண்டி மலேய மண்ணில் மனிதச்சுவடே அதுவரை பட்டிராத பாகங்களிலெல்லாம் தமது முதலடிப் பதித்திருக்கின்றனர். கண்ணுக்கெட்டியவரை காடாகிப் பரந்திருந்த அந்நிலப்பரப்பில்தான் இனி என்றென்றைக்கும் தாங்களும் தங்களது சந்ததிகளும் கிடந்தழியப் போகிறோம் என்றுணர்ந்தவர்கள் கண்ணில் அன்றைக்கு அப்பிய இருள் இன்னும் விலகவேயில்லை என்பதற்கான எழுத்தாவணங்களில் ஒன்றாக பாலமுருகன் கதைகளையும் சேர்த்துக் கொள்ளலாம். (‘கதவச் சாத்துடி கண்ணு கூசுது’ என்று வெளிச்சத்தைக் காண்பதற்கு அஞ்சி ஒரு கதையில் முறையிடுகிறவனும், அம்பாம் பாசா தோட்டத்து இருளுக்குள் புழங்கியே பழகிவிட்டதால் நகரத்து தங்கும் விடுதியறையில் விளக்குகளை அணைத்துவிட்டு இருளுக்குள் படுத்து நிம்மதியடைகிறவனாக இன்னொரு கதையில் வருகிறவனும் ஒரே மனநிலையின் இருவேறு பிரதிகள்).

 

விலங்குகளின் இடமான அடர்க்காடுகளுக்குள் மனிதர்கள் நுழையும்போது உயிராபத்திலிருந்து தற்காத்துக்கொள்வதுதான் முதற்பெரும் சவால். அதிலும் அங்கேயே நிரந்தரமாய் வசிக்க நேரும்போது இந்த சவாலும் ஒவ்வொரு கணத்துக்குமானதாய் மாறிவிடுகிறது. எனவே அவர்கள் விலங்குகள் ஏறிவர முடியாத உயரத்திற்கு தரையில் மரத்தூண்களை நட்டு அவற்றின்மீது பரண்போன்ற கொட்டகைகளை அமைத்து வசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். முன்னிரவில் கொளுத்தப்படுகிற தீப்பந்தங்களையும் மண்ணெண்ணெய் விளக்குகளையும் விடியவிடிய எரியவிடுமளவுக்கு எண்ணெய் வளப்பமோ பொருள்வளப்பமோ அற்ற அவர்கள் இருளைப் போர்த்திக்கொண்டு நசநசக்கும் வியர்வையோடு விடிவதற்காக பதுங்கியிருந்திருக்கிறார்கள். விடிந்தால் மட்டுமென்ன, இரவின் மிச்சம்போல இருண்டுகிடக்கும் காடுகளுக்குள் புகும் அவர்களுள் எத்தனையோ பேர் ஒவ்வொரு நாளும் காணாமல் போயினர். ஆமாம் காடுகள் மனிதர்களை தின்று கொழுத்தன.

அச்சம் எப்போதும் இருக்கத்தான் செய்கிறது, அதற்காக அடங்கிக்கிடந்துவிட முடிகிறதா என்ன? அந்த மக்கள் காடுகளுக்குள் அலைகிறார்கள். காடுகாடாக அலைகிறார்கள். தங்களது மரணத்தை தாங்களே தேடியலைவதுபோல இருக்கிறது அவர்களது அலைச்சல். காடுகள் வழிகளை மறக்கடித்து அவர்களை எங்கோ திசைமாற்றி கூட்டிப் போகின்றன. இப்படி மயக்கி கூட்டிப்போவதற்கென்றே பேய்களும் முனிகளும் மோகினிகளும் காடுகளுக்குள் வெவ்வேறு ரூபங்கொண்டு அவர்களை பின்தொடரவும் முன்வந்து மறிக்கவும் காத்திருக்கின்றன. ஆனாலுமென்ன, அவ்வளவு சேட்டைகளையும் கட்டுப் படுத்தவும் விரட்டியடிக்கவும் அங்கு திருநீறுடன் ஒரு சாமியாடி காத்திருக்கிறார். மட்டுமல்ல, வழிதப்பி அல்லாடுகிறவர்களை தானே வழியும் துணையுமாக வந்து பத்திரமாய் வீடு கொண்டு சேர்த்துவிட்டு மாயமாய் மறைந்துவிடுகிற நல்ல ஆவிகளும் காடுகளுக்குள் இருக்கத்தான் செய்கின்றன. காணாமல் போனவர்கள், காணாமல் போக்கடிக்கப்பட்டவர்கள், தூக்கத்திலேயே கொல்லப்பட்டவர்கள், காட்டு/நாட்டு விலங்குகளுக்கு இரையாகிப்போனவர்கள், சயாம் மரண ரயில்பாதை அமைக்க தூக்கிச் செல்லப்பட்டவர்கள், வெள்ளை வேன்களில் பிடித்துச் செல்லப்பட்டவர்கள், ஒரிஜினல் மற்றும் போலி என்கவுண்டர்களில் போட்டுத்தள்ளப்பட்டவர்கள், பதுங்குக்குழிகளிலேயே புதைந்துபோனவர்கள் என்று பலவந்தமாக உயிர் பறிக்கப் பட்டவர்கள் மீது இரக்கக்கொண்ட மக்கள் அவர்களை ஆவிகளாக்கி தம்மோடு சேர்த்துக் கொள்கின்றனர்.

ஒரு மர்மத்தின் விடையாக இன்னொரு மர்மம் அல்லது ஒரு மர்மத்தை இன்னொரு மர்மமே வந்து விளக்கிவிடுவது போன்று தெரிந்தாலும் ஆகக்கடைசியில் காட்டுவாழ்க்கை மர்மங்களாலேயே சூழப்பட்டதாய் இருக்கிறது. இருள் ஏற்படுத்திய மரணங்களையும் மரணங்கள் ஏற்படுத்திய இருளையும் எதிர்கொள்ளும் வகையறியாது அல்லது அதையே இயல்பாக ஏற்றுக்கொண்ட தோட்டக்காடுகளுக்குள் தனது பால்யத்தை கழிக்க நேர்ந்த பாலமுருகனின் ஆழ்மனப்பதிவுகளே இத்தொகுப்பின் கதைகளாக வெளிப்பட்டுள்ளன. இருளில் தொலைந்தவர்களின் துர்க்கனவுகள் என்ற ஒரு கதையைத்தான், இருளினை இழையிழையாகப் பிரித்தும் கோர்த்தும் காட்டுவதுபோல 12 கதைகளாக அவர் எழுதிப் பார்த்திருப்பதாக தோன்றுகிறது. ஒவ்வொரு கதையிலும் வெவ்வெறு இடத்தில் நின்றுகொண்டு அவர் தன் கதையைத்தான் சொல்லிக் கொண்டிருந்திருக்கிறார் என்பதற்கான தடயங்கள் கதைக்குள்ளேயே இருக்கின்றன. பழைய பட்டணத்தின் மரணக்குறிப்புகள் என்ற இத்தொகுப்பின் கடைசிக்கதையில் தனது தந்தையின் பெயரை நேரடியாக குறிப்பிடுவதை ஒரு துப்பாக வைத்துக்கொண்டு இந்தக் கண்ணியை பிடிக்கமுடியும். ஆனால் அவ்வாறான யூகங்களை விடுத்து கதைகளை அதனதன் அளவில் தனித்துப் பார்த்தாலும் காடன்றி வேறொன்றறியாத சிறார்களின் உலகே அவரது கதைகளாகி இருப்பதையும், அவர் கதைகளுக்கு வெளியே தன்னை நிறுத்திக் கொள்ள தொழில்நுட்பரீதியாக எவ்வித முனைப்பும் கொள்ளவில்லை என்பதை அறிய முடியும்.

உடும்புக்கார தாத்தா, நல்லம்மா பாட்டி, சைக்கிளில் உட்காரவைத்துக்கொண்டு காடு சுற்றும் தாத்தா, விளக்கைப் பற்றியே பினாத்திக் கொண்டு செத்துப்போகிற அம்மாச்சி பாட்டி, ஊரடங்கின பின்பு கிணற்றோடு பேசுகிற தாத்தா, அந்தக் கிணற்றை எட்டிப் பார்க்கவும் அனுமதிக்காத பாட்டி என்று வருகிறவர்களை கதாபாத்திரமாக குறுக்குவதா கதையாக விரிப்பதா? பாட்டிகளும் தாத்தாக்களும் கதைசொல்லும் இயந்திரங்களல்ல, அவர்கள்தான் கதைகளாக இருக்கிறார்கள் என்று படிக்கத் தெரிந்திருக்கிறது பாலமுருகனுக்கு.

3.

தோட்டக்காடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் இடைத்தங்கல் முகாம்களைப் போன்ற கம்போங் / கம்பத்தில் (கிராமங்கள்) தமிழர்களின் வாழ்க்கை மேலும் சிக்கலானதாகவும் சவாலானதாகவும் மாறுகிறது. தோட்டக்காட்டிலிருந்து விடுபட்டு விட்டார்கள் என்றாலும் மரணமும் இருளும் காணாமல் போதலும் அவர்களை நிழலெனத் தொடர்வது குறித்த பதற்றம் கதைகளுக்குள் இருக்கிறது. அவர்களைப் பொறுத்தவரை புலப்பெயர்வும் முற்றுப்பெற்றுவிடவில்லை. பூர்வீகத்திலிருந்து பெயர்ந்துவந்த அவர்கள் இன்னமும் நிலைகொள்ளவியலாமல் மலேசியா முழுக்க அலைந்து கொண்டே இருப்பது குறித்த துயரம் கதைகளுக்கிடையேயான பொதுத்தன்மையாக இருக்கிறது.

தோட்டக்காடுகளிலும் கம்போங்கிலும் சாகாமலும் தொலைந்துபோகாமலும் எஞ்சியவர்களை வரவழைத்து காணாமல் போக்கடிக்கவோ அல்லது சாகடிக்கவோ பட்டணங்கள் காத்திருக்கின்றன. மீனா அக்காவும் தனசேகர் அப்பாவும் மட்டுமா அங்க காணாமல் போகிறார்கள்? வருகிற ஒவ்வொருவரும் காணாமல் போகிறார்கள் அல்லது இயல்பு திரிந்து வேறொன்றாகிறார்கள். மனநலம் குன்றியவர்கள், பாலியல் தொழிலாளர்கள், மொடாக்குடியர்கள், பிச்சைக்காரர்கள், நம்பர் தாள் விற்பவர்கள், உறங்கும் குழந்தையை விட்டுவிட்டு அகாலத்தில் பிரியும் தந்தையர்கள், அப்பா முகம் காணும் ஏக்கத்தில் வதங்கும் குழந்தைகள், கிறுக்குத்தேவன்கள் என்று பலபக்கமிருந்து வந்து சேரும் இவர்கள் பட்டணங்களின் உதிரிகளாக உழன்றலைகிறார்கள். உடல் வளர்ச்சிக் குன்றிய பூச்சாண்டி, யார் கண்ணிலும் படாதவாறு சாத்திய அறைக்குள்ளேயே படுத்தப் படுக்கையாய் கிடக்கும் அவனது தந்தை, பஸ்கட்டணம் செலுத்தமுடியாமல் ஒளிந்துகொள்ள முயற்சித்து தவறி விழுந்து செத்துப்போகிற மாணவன், வயிற்றுக்குள் சுடுகாடு இருப்பதாய் பிதற்றுத் திரிகிற இளைஞன், கணவனின் புறக்கணிப்பை இடையறாத செல்போன் உரையாடல் வழியே கடக்க முனையும் பெண், குற்றவுணர்ச்சியில் மடிந்துகொள்ளும் அவளது கணவன் என வருகிறவர்களும்கூட அவரவர் இருப்பில் உதிரிகள்தான். இந்த உதிரிகளின் குரலாக இருந்து எழுதி தியாகச் செம்மலாகிவிடும் பேராசையற்ற பாலமுருகன் அந்த உதிரிகளில் ஒருவராக கரைந்து எழுதியிருக்கிறார். மலேயாவில் தமிழர்கள் உதிரிகள் என்றால், அந்த தமிழர்களில் உதிரிகள் எவரோ அவர்களின் கதைகள் இவை.

ஆதவன் தீட்சண்யா, 2015

யார் கொலையாளி? – பாகம் 2 ( ஒரு விசாரணைத் தொடர்)

கொல்லப்பட்டவளைப் பற்றிய விவரங்கள்:

இறந்தவரின் பெயர்: தினேஸ்வரி

இடம்: சேலாயாங் அம்பாட் அடுக்குமாடி

கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை

கொல்லப்பட்ட விதம்: மணிக்கட்டில் சிறிய வெட்டுக்காயம், தலையில் மண்டை ஓட்டில் சிறிய பிளவு (கடுமையாகத் தாக்கப்பட்டிருக்கிறார்), ஆங்காங்கே இரத்தக் கசிவு.

கொலை கண்டறியப்பட்ட நேரம்: 21 ஜூன் 2017, இரவு 8.45க்கு

கொலை செய்யப்பட்ட நாள்: கண்டறியப்பட்ட நாளில்  கொலை செய்யப்பட்டிருக்கிறார்.

கொல்லப்பட்டவரின் சில விவரங்கள்:

ஒரு தனியார் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த மாணவி. சொந்த வீடு டாமான்சாரா. இங்குக் கடந்த ஒரு வருடமாகத் தங்கிப் படிக்கிறார். தினமும் வேலைக்கு அதே கல்லூரியில் பயிலும் ஒரு மாணவருடன் செல்வாள். அவர்தான் அவளை இங்குக் கொண்டு வந்து விடுவதும்கூட. இரவில் எங்கும் வெளியில் போகும் பழக்கம் அவளுக்கு இல்லை. வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஏற்கனவே குடியிருந்த இன்னொரு பெண்ணுடன் சில கருத்து வேறுபாட்டால் தனியாகத் தங்க வேண்டிய நிலை கடந்த மார்ச் மாதத்தில் ஏற்பட்டுள்ளது.

காவல்துறை அதன் பிறகு ஒரு வாரம் தீவிர விசாரணையை மேற்கொண்டது.

தினேஸ்வரி பற்றிய முதலில் காவல் நிலையத்தில் தகவல் கூறிய பக்கத்து வீட்டு திரு.மூர்த்தியின் வாக்குமூலம்:

திரு.மூர்த்தி:

அன்றைய மதிய நேரம் இருக்கும், நான் வேலையில் அரைநாள் கேட்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். எங்கள் வீடு இரண்டாவது மாடியின் கடைசி. என் வீட்டுப் பக்கத்தில்தான் அந்தப் பெண் தங்கியிருந்தார். அமைதியான பெண் தான். ஆனால், கடந்த சில வாரங்களாக அவள் வீட்டுக்குள் கத்தும் சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்த்து. யாருடனோ கைப்பேசியில்தான் கத்திக் கொண்டிருக்கிறார் என யூகித்துக் கொண்டேன். வேறு எந்தக் கெட்டப் பழக்கமும் அவளிடம் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால், அவள் இறப்பதற்கு அன்றைய கடைசி ஒரு வாரம் மட்டும் அவள் வீட்டில் அவளுடைய வழக்கத்திற்கு மாறான சத்தம் மட்டும் விநோதமாகத் தெரிந்தது.

அவள் இறந்துவிட்ட அன்றைய நாளில் நான் வேலை முடிந்து வந்த சமயம் அவள் வீட்டுக்குள் கண்ணாடி குவளைகள் உடையும் சத்தமும் அவள் கத்தும் சத்தமும் அதிகரித்துக் கொண்டிருந்த்து. என் வீட்டில் மனைவியும் இல்லை. இருந்திருந்தால் அவளை உடனே அனுப்பி விசாரிக்கச் சொல்லியிருப்பேன். பெண் பிள்ளை தனியாக இருக்கும் வீடு என்பதால் முதலில் எனக்குத் தயக்கமாக இருந்தது.

பின்னர் மாலை 6.00 மணிக்கு மேல் ஒரு சிறிய குட்டித் தூக்கம் போட்டு மீண்டும் எழுந்தபோது பக்கத்து வீட்டில் சத்தமே இல்லை. குளித்துவிட்டு வீட்டுக்கு வெளியே வந்து பார்த்தேன். அவளுடைய வழக்கமான காலணி வைத்த இடத்தில் அப்படியே கிடந்தது. அவள் எங்கேயும் போகவில்லை என்றே தோன்றியது. ஏதோ வழக்கமான சண்டைத்தான் என அமைதியாக இருந்துவிட்டேன்.

மணி 8.00 இருக்கும் அவள் வீட்டில் விளக்கு எதுமே எரியவில்லை. வழக்கமாக அத்தனை மணிக்கு அவள் வீட்டில் இருந்தும் விளக்கேதும் போடாமலிருப்பது சற்று உறுத்தலாகவே இருந்தது. உடனே என் மனைவியை அழைத்து அந்தப் பெண் இருக்கும் வீட்டின் கதவைத் தட்டச் சொல்லியிருந்தேன். அவளும் தட்டித் தட்டிக் களைத்துப் போய் மீண்டும் வந்துவிட்டாள். எனக்கு அப்பொழுதுதான் சந்தேகம் வலுத்தது. உடனே, நானும் பலம் கொண்டு கதவைத் தட்டினேன் அப்பெண்ணின் பெயரைச் சொல்லி அழைத்தேன். அதன் பிறகுத்தான் உடனடியாகக் காவல் நிலையத்திற்குத் தொடர்புக் கொண்டேன்.

திரு.மூர்த்தியிடம் காவல்துறை எழுப்பியக் கேள்விகள்:

  1. உங்களுக்கும் தினேஸ்வரிக்கும் ஏதேனும் பேச்சு வார்த்தை இருந்ததுண்டா?

மூர்த்தி: அப்படி ஏதும் இல்லை. எப்பொழுதாவது படிக்கட்டில் சந்திக்க நேர்ந்தால் புன்னகைப்பார். அவ்வளவுத்தான்.

  1. ஒரு வருடம் பக்கத்து வீட்டில் இருந்த பெண்ணுடன் ஏன் எந்தப் பேச்சு வார்த்தையும் இல்லை?

மூர்த்தி: நாங்கள் வீட்டுக்கு வருவதே இருட்டியப் பிறகுத்தான். அந்தப் பெண்ணும் இரவில் அதில் உலாவமாட்டாள். ஆதலால், அவளைச் சந்தித்துப் பேசுவது சாத்தியமில்லாமல் போய்விட்டது.

  1. சந்தேகம்படும்படி வேறு யாரும் அவள் வீட்டுக்கு வந்ததுண்டா?

மூர்த்தி: அவளுடைய அம்மா இரண்டுமுறை வந்து தங்கியிருக்கிறார். அவள் அம்மாவுடன் ஒரு ஆள் வந்துவிட்டுப் போனார். அவர் யார் என்று கேட்கவில்லை.

  1. அவளைத் தினமும் கல்லூரிக்கு ஏற்றிச் செல்லும் பையனைப் பற்றி ஏதும் தெரியுமா?

மூர்த்தி: அந்தப் பையன் பார்க்க நல்ல பையன் மாதிரித்தான் தெரிந்தான். ஆனால், அவனுடன் ஏதும் பேசியதில்லை.

  1. தினேஸ்வரியுடன் தங்கியிருந்த மணிமாலா பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

மூர்த்தி: அந்தப் பெண் கொஞ்சம் பிரச்சனையான பெண்தான். நானே ஒருமுறை அப்பெண் குடி போதையில் படிக்கட்டில் ஏறிப் போனதைப் பார்த்துள்ளேன்.

  1. கொலை நடப்பதற்கு சில நாட்களுக்கு முன் ஏதாவது சந்தேகம்படும்படி ஆள் நடமாட்டம் இருந்ததா?

மூர்த்தி: இந்த இடத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லை; பாதுகாவலர்களும் இல்லை. பாதிக்கு மேல் காலியான வீடுகள். ஆகவே, இரவில் நாங்கள் கூட வெளியே வருவதில்லை. என்னால் அப்படியேதும் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

தினேஸ்வரி கல்லூரியில் படிக்கும் அவளைத் தினமும் ஏற்றிச் செல்லும் சரவணனின் வாக்குமூலம்:

தினேஸ்வரியை எனக்கு ஒரு வருடமாகத்தான் பழக்கம். கல்லூரியில் வைத்து அவர்தான் நான் அவர் தங்கியிருக்கும் இடத்தைத் தாண்டிப் போவதைத் தெரிந்து கொண்டு உதவிக் கேட்டார். எனக்கும் அது அத்தனை சிரம்மாகத் தெரியவில்லை. ஆகவே, ஒரு வருடமாக அவளை ஏற்றி மீண்டும் வீட்டில் விட்டுவிடுவேன்.

இரண்டு மூன்று தடவை அவளுடைய வீட்டுப் பிரச்சனையை என்னிடம் மனம் விட்டுப் பேசியிருக்கிறார். அவளுடைய அப்பா ஒரு போதைப்பித்தர் என்றும் அவரால் வீட்டில் நிம்மதி இல்லை என்றும் அவள் சொல்லியிருக்கிறாள். நிறைய தடவை அவளுடைய அம்மா அப்பாவுடன் சண்டை போட்டுவிட்டு இங்கு வந்து இவளுடன் தங்கியிருப்பதாகச் சொல்லியிருக்கிறார். ஆரம்பத்தில் ஒருசில நாள்கள் பதற்றமாகவே இருந்தாள். வீட்டில் அவளுக்கும் அவளுடன் தங்கியிருக்கும் மணிமாலாவிற்கு ஏதோ சில வாரங்களாகத் தொடர் பிரச்சனை என்று மட்டும் சொல்லியிருந்தாள். நான் கேட்கப்போக அது பெண்கள் தொடர்பான விசயம் எனச் சொல்ல மறுத்துவிட்டாள். ஒரேயொரு முறை அவளை நான் வீட்டில் இறக்கிவிட்டவுடன் அவளுடைய பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவரின் மனைவி அவசரமாக ஓடி வந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டே படிக்கட்டில் ஏறினாள். ஏன் என்று விளங்கவில்லை. நானும் அதைப் பற்றி அவளிடம் கேட்கவும் இல்லை.

மற்ற நேரங்களில் எல்லாம் காரில் ஏறினால் எதாவது சினிமா பற்றியும், கல்லூரி கதைகள் பற்றியும்தான் பேசுவாள். மற்றப்படி தினேஸ்க்கும் எனக்கும் எந்தவிதமான ஆழ்ந்த நட்போ பழக்கமோ இல்லை.

தினேஸ்வரியுடன் முதலில் ஒன்றாகத் தங்கியிருந்த தோழி மணிமாலாவின் வாக்குமூலம்:

எனக்குத் தினேஸ்வரி என்றால் மிகவும் பிடிக்கும்தான். 6 மாதம் நாங்கள் ஒரே வீட்டை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்தோம். அவளால் எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. சின்ன சின்ன சண்டைகள் வரும்தான். ஆனால், அதனை நாங்கள் பெரிதுப்படுத்திக் கொள்ள மாட்டோம்.

எனக்கு ஒரு காதலர் இருந்தார். அவர் கோலாலம்பூரில் வேலை செய்கிறார். அவரை ஒருமுறையாவது என் வீட்டுக்கு வர வைக்க வேண்டுமென ஆசைப்பட்டேன். அவளிடம் அனுமதிக் கேட்கப் போகத்தான் எங்களுக்குச் சண்டை மாட்டிக் கொண்டது. நான் இத்தனைக்கும் தங்க வைக்கும்படிக்கூட கேட்கவில்லை. அவர் காலையில் வந்து மாலையில் போய்விடுவார் என்றுத்தான் சொல்லி வைத்திருந்தேன். அதைச் சொன்னதிலிருந்து தினேஸ்வரி என்னிடம் முகம் காட்டத் துவங்கினாள். அங்கிருந்துதான் சில கருத்து வேறுபாடுகள் தோன்றின. எனக்கும் வெறுப்பாகி நான் அங்கிருந்து வேறு வீட்டுக்கு மாறி வந்துவிட்டேன்.

 

தினேஸ்வரியின் நெருங்கியக் கல்லூரி தோழி சுஜித்தாவின் வாக்குமூலம்:

 கல்லூரி வந்த நாளிலிருந்து மணிமாலாவைவிட நான் தான் அவளுக்கு மிகவும் நெருக்கம். நான் இங்குள்ள ஆள் என்பதால் அவளுடன் தங்க முடியவில்லை. ஆனாலும் கல்லூரி நேரத்தில் நாங்கள் இருவரும் ஒன்றாகத்தான் இருப்போம். அவள் வீட்டுப் பிரச்சனைகளை எப்பொழுதும் என்னிடம் சொல்வாள். வீட்டில் அப்பாவினால் ஏற்பட்ட கடன் தொல்லைகள் பற்றியும் அவளுக்கும் மிரட்டல் வந்திருப்பதாகவும் சொல்லி அழுதும் இருக்கிறாள். என்னால் அப்பொழுது அவளுக்கு மன ஆறுதல் மட்டுமே சொல்ல முடிந்தது. அவள் இறப்பதற்குக் கடைசி ஒரு வாரம் அவள் கலவரமாகவே இருந்தாள். வகுப்பில்கூட அவள் முகம் ஒருவிதப் பதற்றத்துடனே இருந்தது.

சுஜித்தாவிடம் கேட்கப்பட்ட சில கேள்விகள்:

  1. அவளுக்கு வேறு யாருடனும் ஏதேனும் பிரச்சனைகள் இருந்ததாகச் சொல்லியதுண்டா?

சுஜித்தா: அவளைத் தினமும் வீட்டில் கொண்டு போய்விடும் சரவணன் பற்றி சிலமுறைகள் சொல்லி என்னிடம் கவலைப்பட்ட்துண்டு. அவர் எங்கள் கல்லூரியில் வேறு வகுப்பில் பயிலும் மாணவன்தான். அவருடைய பார்வையும் நடவடிக்கையும் சரியில்லை என்று மட்டும்தான் தினேஸ் என்னிடம் சொன்னாள். மேற்கொண்டு ஏதும் சொல்லவில்லை.

  1. மணிமாலா எப்படிப் பட்டவள்?

சுஜித்தா: மணிமாலா என் வfகுப்புத்தான். சதா கைப்பேசியில் யாருடனோ பேசிக் கொண்டே இருப்பாள். கொஞ்சம் கோபக்காரி. எடுத்தெறிந்து பேசிவிடும் பழக்கம் இருப்பதால் யாரும் அவளுடன் அவ்வளவாகப் பேச்சு வைத்துக் கொள்வதில்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 1: பக்கத்துவீட்டுக்காரர் மூர்த்தி அன்று வேலை முடிந்து வரும்போது தினேஸ்வரியின் வீட்டில் இன்னொரு வகையான ஆண்கள் அணியும் காலணியையும் பார்த்திருக்கிறார். ஏனோ காவல்துறை விசாராணையில் அதனைக் குறிப்பிடவில்லை. அந்தக் காலணி கொலைக்குப் பிறகு அங்கு இல்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 2: மணிமாலா அங்கிருந்து வேறு வீடு மாறிப்போன பிறகு பொருள்கள் எடுப்பதாகச் சொல்லி மூன்றுமுறை தினேஸ்வரியைச் சந்திக்க அங்கு வந்திருக்கிறாள். அவள் வரும்போதெல்லாம் இருவருக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்படியென்ன பிரச்சனை என்று இதுவரை விசாரணையில் கண்டறியப்படவில்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 3: தினேஸ்வரி தங்கியிருக்கும் வீட்டுக்கு மூன்று வீடு தள்ளியிருக்கும் ஒரு பெண்மணி கொலை நடந்த அன்றைய தினம் தினேஸ்வரியுடன் மதியம் வீட்டிற்குள் வேறு ஒரு பெண்ணும் நுழைந்ததாகத் தெரிவித்தார்.

சந்தேகத்திற்குரிய தடயம் 4: அன்றைய தினம் தினேஸ்வரி கல்லூரிக்கே செல்லவில்லை. ஆனால், காலையில் அவளை வழக்கம்போல சரவணன்தான் வந்து ஏற்றிச் சென்றிருக்கிறார். சரவணன் மட்டும்தான் கல்லூரிக்கு வந்ததாகக் குறிப்புகள் உள்ளன.

சந்தேகத்திற்குரிய தடயம் 5: தினேஸ்வரியின் கைப்பேசியில் ஆக்க் கடைசிவரை அவளுக்கு வந்த குறுந்தகவல்கள், புகைப்படங்கள், அழைப்புகள் பற்றிய விவரங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டிருந்தன.

சந்தேகத்திற்குரிய தடயம் 6: பக்கத்து வீட்டுக்காரர் மூர்த்திக்கும் தினேஸ்க்கும் நல்ல பேச்சு வார்த்தை இருந்துள்ளது. ஆனால், விசாரணையில் அவ்விசயம் வெளிவரவில்லை.

 

யார் கொலையாளி?

சந்தேக நபர் 1: பக்கத்து வீட்டுக்காரர் திரு.மூர்த்தி

சந்தேக நபர் 2: வீட்டுத் தோழி மணிமாலா

சந்தேக நபர் 3: சரவணன்

சந்தேக நபர் 4: அப்பாவிற்குக் கடன் கொடுத்த யாரோ…

சந்தேக நபர் 5: மர்ம நபர்

 

குறிப்பு: தினேஸ் இறப்பதற்கு முந்தைய இரவு அவளுக்குத் திடிர் கனவுகள் தோன்றி மறைகின்றன.

கனவு 1:  கருப்புநிறத்தில் ஓர் உருவம் அவள் வீட்டுக் கதவை விடாமல் தட்டிக் கொண்டிருக்கிறது.

கனவு 2: அவளுடைய ஒரு காலணி எங்கோ தொலைந்துவிடுகிறது. அதனைத் தேடி அவள் அலைகிறாள்.

கனவு 3: அவள் படுத்திருக்கும் படுக்கைக்குக் கீழே ஓர் உருவம் தன் தொலைந்த ஒரு காலணி ஜோடியைத் தேடுகிறது.

ஆக்கம்: கே .பாலமுருகன்

தொடர்புடைய பதிவுகள்:

https://balamurugan.org/2017/02/03/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-1/

சிறுகதை: சாவித் துவாரம்

முனியாண்டி வெகுநேரம் கதவையே பார்த்துக் கொண்டிருந்தார். கதவு திறக்கப்பட்டதும் காலில் விழுந்திட முடிவு செய்துவிட்டார். ஓராயி பவுடர் பூசும் சத்தம் கேட்டது. சரக் சரக் என ஒட்டத் தடுமாறும் பவுடரை முகத்தில் அவள் தேய்க்கும் சத்தம். அவளுக்குப் பிடித்தது அந்தச் சிவப்பு நிற டப்பாவில் இருக்கும் ‘பேபி பவுடர்’தான். அதைப் பூசிக் கொண்டு அவள் வெளியே வரும்போது இப்பொழுதுதான் தொட்டிலிலிருந்து எகிறிக் குதித்து நடந்து வரும் குழந்தையைப் போல தெரிவாள். அதற்கே முனியாண்டி தவம் கிடக்க வேண்டும்.

கதவைத் திறக்கும்போதே அதில் கோபம் ஓலமிட்டது. ஒரு பாதி கதவு பலகை சுவரில் மோதி கூச்சலிட்டது.

“எங்க மங்கு சாமான் கழுவியாச்சா?”

முனியாண்டிக்கு அப்பொழுதுதான் ஞாபகத்திற்கு எட்டியது. பேசனில் காலையில் சாப்பிட்ட தட்டுகள் அப்படியே ஈ மொய்க்கக் கிடந்தன. கோபத்தைத் தணிக்க வழித் தேடினால் அவளுடைய கோபம் மேலும் உச்சாணியில் போய் நின்று கொண்டதுதான் மிச்சம். முனியாண்டி சமையலறைக்கு ஓடிப் போய் தட்டுகளை எல்லாம் அவசரம் அவசரமாகக் கழுவினார்.

இன்று ஓராயிக்குப் பிடித்த ‘டோரேமோன்’ கார்ட்டூன் சரியாக மதியம் 1.00 மணிக்குப் போடப்படும். அதைச் சில வேளையில் அவள் மறந்துவிடுவாள். இன்று ஞாபகப்படுத்தி சரியான நேரத்தில் தொலைக்காட்சியைத் திறந்து அவளை மகிழ்ச்சிப்படுத்தலாம் என முனியாண்டி திட்டம் தீட்டினார். தட்டுகளை எடுத்து அடுக்கும்போது ஒரு பதற்றம் கைகளில் இருந்தது. அந்த நேரம் பார்த்து ஒரு தட்டு கீழே விழ வேண்டுமா?

ஒரு சில்வர் தட்டு கீழே விழும்போது அதன் விளைவு வெறும் சத்தம் மட்டும் இல்லை என்று அன்றைக்குத்தான் முனியாண்டிக்கு விளங்கியது.

“ஒரு தட்டு ஒழுங்கா அடுக்கத் தெரியல? என்ன மனுசன் நீ?”

இப்படியாகப் பல வார்த்தைகள் பல்லாயிரம் தட்டுகள் விழுந்து வெளிப்படும் இரைச்சலைவிட கொடூரமாகச் சீறிப் பாய்ந்து வந்தன. ஒரு கட்டம் முனியாண்டிக்குத் தலை ‘கிர்ர்ர்ர்ர்’ என அதிர்ந்தது.

மீண்டும் தட்டைக் கழுவிவிட்டு அலமாரியில் அடுக்கும்போது ஒரு குழந்தையைக் கைத்தாங்கலாகத் தூக்கும் கவனம் அவரிடம் இருந்தது. ஓராயிக்குச் சுத்தம் என்றால் மிகவும் முக்கியம். ஒரு சோற்று பருக்கையைப் பார்த்துவிட்டாலும் அவள் கத்துவாள். தரை ஈரமாக இருக்கக்கூடாது. சதா வீட்டைத் துடைத்துக் கொண்டே இருப்பாள். சட்டென்று இரவில் எழுந்து தரையைத் தடவிப் பார்த்துவிட்டு மீண்டும் உறங்கிவிடுவாள். அவளுடைய மிகப் பெரிய கவலை வீட்டின் சுத்தம் மட்டுமே. அதனாலேயே ஒரு பாயை விரித்துத் தரையில்தான் படுத்துக் கொள்வாள்.

இரண்டுமாடி வீடு. ஐந்து அறைகள். எல்லாம் விலையுயர்ந்த பொருட்கள். முனியாண்டி நடக்கும்போதுகூட ஒவ்வொரு அடியாகப் பார்த்து நிதானித்துதான் நடப்பார். சிறு அலம்பலுக்குக்கூட ஏதாவது ஒரு பொருள் கீழே விழுந்தாலும் அதன் விலை ஆயிரம் ரிங்கிட்டாக இருக்கும். ஓராயி பஞ்சு நாற்காலியின் ஓரத்தில் கவனத்துடன் அமர்ந்திருந்தாள். அது அவள் உடல் அளவிற்குக் கொஞ்சமும் பொருந்தாத பெரிய நாற்காலி. அவள் உடல் மெலிந்தவள். நிரம்ப சாப்பிட மாட்டாள். தட்டில் கால் பங்குக்கூட சோரு இருக்காது. காற்றை சுவாசித்து வாழும் ஞானி அவள். முனியாண்டியைத் திருமணம் செய்து கொண்ட நாளிலிருந்து அவள் உடல் உப்பி அவர் பார்த்ததில்லை.

இப்பொழுது தொலைகாட்சியைத் திறந்தால் ஓராயியை அதிர்ச்சியில் ஆழ்த்த சரியாக இருக்கும் என முனியாண்டி முடிவு செய்தார். வரவேற்பறைக்கு வந்ததும் தூர இயக்கியைத் தேடினார். அது அப்படித்தான் எங்காவது ஒளிந்து கொள்ளும். நாற்காலியின் அடியிலோ, மேசைகளின் இடுக்கிலோ கிடக்கும். முனியாண்டி குனிந்து நிமிர்ந்து அதைத் தேடி எடுப்பதற்குள் டோரேமோன் சூப்பர்மேன் ஆகி பறந்திருக்கும். அவதியுடன் தொலைகாட்சியைத் திறக்கும்போது ‘டோரேமோன்’ ஓடிக் கொண்டிருந்தது.

“அய்ய்ய்ய் டோரே! டோரே!” என அவள் துள்ளிக் குதித்தாள். முனியாண்டியின் முகத்தில் ஏதையோ சாதித்துவிட்டப் பூரிப்பு. ஒய்யாரமாகத் தரையிலிருந்து நாற்காலியில் அமர்ந்தார். கால் மேல் காலிட்டுக் கொண்டு பற்கள் தெரிய இழித்துக் கொண்டிருந்தார்.

“என்ன இது?” சட்டென ஓராயி அப்படிக் கேட்பாள் என முனியாண்டி நினைக்கவில்லை. முனியாண்டி கால்களை இறக்கிவிட்டு அவள் பேச்சுக்கு அடங்கினார்.

ஓராயி கைகளைத் தட்டிக் கொண்டு கார்ட்டூன் பார்த்துக் கொண்டிருந்தாள். இடையிடையே முனியாண்டியை ஓரக் கண்ணில் பார்த்துக் கொண்டாள். இன்றைய நாள் ஓராயினுடையது. நாளை முனியாண்டி. ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஒருவரையொருவர் கொண்டாடிக் கொள்வார்கள்.

ஓராயி கார்ட்டூன் பார்த்து முடிப்பதற்குள் முனியாண்டி சமையல் வேலையில் இறங்கிவிட்டார். இருவருக்கு மட்டும் என்பதால் அதிகமாகச் சமைக்க மாட்டார்கள். இரவில் மட்டுமே அனைவருக்கும் உணவைத் தயார் செய்ய வேண்டும். ஆகவே, முனியாண்டி முதலில் இரண்டு முட்டைகளை உடைத்துக் கரண்டியால் அடித்தார். சத்தம் அதிகம் வராமல் நிதானமாகச் செய்தார்.

மதிய உணவிற்குப் பிறகு ஓராயி சன்னல் கதவில் அமர்ந்து கொண்டாள். அவளுக்கு வெளி என்றால் மிகவும் பிடிக்கும். முன்பு காட்டிலும் மேட்டிலும் வேலை செய்தவள். சன்னல் கதவைத் திறந்ததும் கம்பிகளினூடாகக் காற்று ஊடுபாய்ந்து உள்ளே பரவியது. ஓராயிக்கு மனம் சில்லேன்று இருந்தது. அப்படியே சிறிது நேரம் உறங்கினாள். முனியாண்டி வேலையெல்லாம் முடிந்ததும் அவளுக்கு அருகில் அமர்ந்து கொண்டார். ஓராயி ஒரு குழந்தையாகி உறங்குவதையே கவனித்துக் கொண்டிருந்தார். கண்களைச் சுற்றிய கருவளையம் அவளுடைய கண்களுக்கு மாட்டிவிட்ட ஆபரணத்தைப் போல மின்னியது.

எப்பொழுது அசந்தார் எனத் தெரியவில்லை. கண்கள் அயர்ந்தன. முனியாண்டி ஒரு பாலைவனத்தில் இருக்கிறார். ஓராயி அதிசயமாக எப்பொழுதாவது பூக்கும் ஒரு பூவைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறாள். அவள் ஓடுவது ஒரு கானல்நீரில் கரைகிறது. பலம் கொண்டு கத்துகிறார். ஓராயி ஓராயி என மனத்தின் ஆழத்திலிருந்து குரல் எழுகிறது.

“ஏய்ய் கெழவி!”

சட்டென இருவருக்கும் விழிப்பு. முன் கதவின் சாவித் துவாரத்தில் சாவி நுழைக்கப்படும் ஓசை. ஓராயி எழுந்து வைப்பறைக்கு அருகில் இருக்கும் தன் இடத்தில் போய் அமர்ந்து கொண்டாள். தரை மட்டும் சில்லேன்று இருந்தது. தடவி பார்த்துக் கொண்டாள். கொஞ்சம்கூட ‘ஈரமில்லாத’ பல்லிங்குத் தரை.

  • கே.பாலமுருகன்

சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி ஓர் ஆய்வு

இலக்கியம் என்பது மொழியின் ஊடாக நிகழ்த்தப்படும் கலையாகும். மொழியே பிரதானமாக இருந்து இலக்கியப் படைப்புகளுக்கு வெளிப்பாட்டு தளத்தை உருவாக்குகிறது. மொழி என்பது காட்சிகளின், பொருள்களின், செயல் வடிவங்களின் பிரதிநிதியாக குறியீட்டு ஒழுங்குகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. சொல் என்பதே ஒரு பொருளைக் குறிக்கும் பொருட்டு உருவானதே. பின்னர், அப்பொருள் சார்ந்து செயல் வடிவங்களுக்குரிய சொற்கள் பிறந்தன என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அதே மொழியைக் கொண்டுத்தான் மனிதன் தன் உணர்வுகளை நூதனமான முறையில் படைப்பிலக்கியத் திறன்களோடு இலக்கியமாகப் படைக்கத் துவங்கினான்.

அத்தகைய மொழியைக் கொண்டு புனையப்படும் இலக்கியம் அம்மொழியை எப்படிக் கையாள்கிறது என்பதைப் பற்றியும் அவற்றினூடாகக் குறியீட்டு மொழி எப்படி இலக்கியத்தில் உருவாகின்றன என்பதையும் இந்த ஆய்வில் சீ.முத்துசாமி, ரெ.கார்த்திகேசு ஆகிய இரண்டு மலேசியப் படைப்பாளிகளின் சிறுகதைகளை முன்வைத்து அலசியுள்ளேன்.

குறியீட்டு மொழி

குறியீட்டு மொழி என்றால் என்ன? மொழியில் குறியீடுகளாக வந்தமைவதையே நாம் குறியீட்டு மொழி என்கிறோம். ஒன்றைக் குறிக்கும் சொல், வேறொன்றின் பிரதிநிதியாக மொழிக்குள் வரும்போது அவை புதிய அர்த்தங்களைப் பெற்று இலக்கியத்தில் மீமொழிக்கான தரத்தை அடைகின்றன. சமையலறை கலைச்சொல்லாக மட்டுமே இருந்த தீயை அறிவுக்கு நிகரான பொருளுடன் பாரதி புதிய அர்த்தத்தைக் கொடுத்துத் தன் கவிதையில் புனையும்போது தீ என்கிற சொல் மீமொழி தரத்தைப் பெற்று மரபார்ந்த பொருளிலிருந்து இலக்கியத்திற்கான குறியீட்டு மொழியாக மாறுகிறது. அத்தகைய வகையில் பல எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் மறுகண்டுப்பிடிப்பு செய்யப்பட்ட பல சொற்கள் இன்று இலக்கியங்களில் குறியீட்டு மொழிகளாகப் பாவிக்கப்பட்டு வருகின்றன.

இலக்கியம் மீமொழியில் இயற்றப்படுகின்றது என்பதில் பாரதி தெளிவாக இருந்தார். ஒரு மொழியில் ஒரு சொல் வழங்குகின்ற மரபான பொருளைப் புரிந்து வைத்திருப்பதன் மூலம் மட்டுமே அம்மொழியில் இயற்றப்படும் ஓர் இலக்கியப் பிரதியை அத்தனை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியும் எனச் சொல்ல இயலாது. அம்மொழியில் தொடர்ந்து இயற்றப்படும் இலக்கியங்களை ஆராய்வதன் மூலம் அம்மொழியின் இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் மீமொழியைக் கண்டறிந்து அதனையொட்டி விவாதிப்பதன் மூலம் குறியீட்டு மொழியின் பங்களிப்பை ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். அக்குறியீட்டு மொழிகளுடன் பழக்கமாவதன் மூலமே அம்மொழியில் எழுதப்படும் இலக்கியப் படைப்புகளை மேலும் நுண்மையாகக் கருத்துணர்ந்து கொள்ள முடியும்.

 

தொடர்புடைய ஆய்வுகள்

மீமொழி தொடர்பான ஆய்வுக் கட்டுரையை இதற்கு முன் எழுத்தாளரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நெறியாளருமான திரு.ஜெயமோகன் அவர்களே தமிழில் தெளிவாக எழுதியுள்ளார். அவர் மகாகவி பாரதியை முன்வைத்து மீமொழிக்கான பயன்கள் பற்றி எழுதியுள்ளார். அடுத்ததாக தமிழ்ச்சூழலில் படிமக் கவிஞர் எனச் சொல்லப்படும் பிரமிள் அவர்களின் சில கட்டுரைகளில் கவிதையில் குறியீடு தொடர்பான சில விளக்கங்களை அளித்திருக்கிறார். அதேபோல தென்காசி கவிஞர் கலாப்பிரியா அவர்களும் குறியீடு தொடர்பான சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

தரவுகள் சேகரிப்பு

ஜூன் 2012ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்த சீ.முத்துசாமி அவர்களின் ‘அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்’ எனும் சிறுகதை நூலையும், ரெ.கார்த்திகேசு அவர்களின் ஜனவரி 2011ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நீர் மேல் எழுத்து’ எனும் சிறுகதை நூலையையும் இவ்வாய்க்கான தரவுகளாகப் பாவித்துள்ளேன்.

 

செயலாக்கம்

குறியீட்டு மொழியைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அல்லது அம்மொழியுடன் பழக்கப்படாமல் ஒருவன் இலக்கியத்திற்கான மொழியைக் கண்டடைவதில் சிரமத்தை எதிர்க்கொள்வான் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்று எனக்குள் இருந்த பறவை பறந்து சென்றது

என்கிற ஒரு வரியில் மற்ற அனைத்து சொற்களையும்விட பறவை எனும் சொல்லை மட்டும் கூர்ந்து அலச வேண்டியுள்ளது. தமிழ்மொழியில் நன்கு புலமை பெற்ற ஒருவர் அதெப்படி ஒரு மனிதனுக்குள் பறவை குடியிருக்க முடியும்? அதெப்படி அது நம் உடலுக்குள்ளிருந்து வெளியேறி பறக்க முடியும் என்கிற கேள்விகளை எழுப்பக்கூடும். நான் முன்பே கூறியதைப் போல ஒரு மொழியில் ஒரு சொல் பூர்வீகமாக வழங்கும் பொருளை மட்டும் கொண்டு அம்மொழியில் இயற்றப்படும் இலக்கியத்தின் ஆழ்பொருளைப் புரிந்து கொள்வது கடினமாகும்.

தமிழ் படைப்புகளில் இதுவரை பறவை என்கிற சொல் எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பதை ஒரு வாசகன் உற்றாராய வேண்டியுள்ளது. அவற்றை அவனுடைய வாசிப்பின் வழியே நன்குணர முடியும். அடுத்ததாக அக்குறிப்பிட்ட படைப்பில் அச்சொல் எத்தகைய அழுத்தத்தை வழங்குகிறது என்பதை மறுவாசிப்பில் கண்டறிய வேண்டும். தொடர்ந்து இரண்டையும் தொடர்புப்படுத்தி பறவை எனும் சொல்லில் மறைந்து கிடக்கும் பொருளைத் திறந்து காட்ட வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய புரிதல் நிலையைக் கொண்டு மாறுப்படக்கூடும்.

சொல் பொருள் காலம்/சூழல்
பறவை சுதந்திரம் புதுக்கவிதைகள் தோன்றிய காலக்கட்டம்
பறவை விடுதலை உணர்வு புதுக்கவிதைகளின் மறுமலர்ச்சி

காலக்கட்டம்

பறவை அடிமைத்தனம் நவீன கவிதைகளின் காலக்கட்டம்

 

  • மேற்கண்ட அட்டவனையின்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரே சொல் பற்பல பொருள்களுடன் கவிதைகளில் புனையப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. ஒரு சொல்லை அக்கவிஞன் தேர்ந்தெடுத்து அதனைக் கவிதையில் முக்கியமான சொல்லாக/ குறியீடாக மாற்றுவதற்கு அக்காலக்கட்டத்தின் சூழலும் ஒரு காரணமாக அமைகின்றது. நாடு சுதந்திரம் அடைந்தும் சாதி, மதம், முதலாளியக் கொடுமைகள் இருந்த காலத்தில் சுதந்திரத் தாகத்தைப் புதுக்கவிதைகள் கொண்டாடின. அப்பொழுது பறவை எனும் சொல்லாக இருந்தாலும் அதைச் சுதந்திரத் தாகத்துடன் ஒரு கவிஞன் தன் கவிதைக்குள் பாவிப்பான். காலச்சூழலுக்கேற்ப ஒரு சொல் தான் கொண்டிருந்த ஒரு குறியீட்டை உதறித் தள்ளிவிட்டு இன்னொரு குறியீட்டைப் பெறுகின்றது. நவீன சூழலில் பறவை என்றால் தனக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதனின் மனத்தினைக் குறிப்பதாகச் சில கவிதைகளில் வாசிக்க நேர்கிறது. மன அகமி எனச் சொல்லக்கூடிய தனிமை, மன உளைச்சல், தாழ்வு மனப்பான்மை என மேலும் அகத்தை நோக்கி விரியக்கூடிய தன்னைத் தானே விசாரிக்கக்கூடிய நவீன இலக்கியத்தில் பறவை எனும் சொல் தன்னைத் தானே அல்லது தன் மனத்திற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் இன்னொரு தன்னைக் குறிக்கும் சொல்லாகப் பாவிக்கப்படுவதைக் கவனிக்க முடிகிறது.

 

அத்தனைகாலம் தேக்கி வைத்திருந்த

எனது மூளையில் முடங்கிக் கிடந்த

எல்லாவற்றையும் திறந்துவிட நேர்ந்தது.

அன்று எனக்குள் இருந்த பறவை பறந்து சென்றது

 

  • சல்மா தினேசுவரி, 2009

 

இக்கவிதையை முழுமையாகப் படிக்கும்போது பறவை எனும் சொல்லில் கவிஞன் காலமாற்றத்திற்கேற்ப புதிய பொருளைப் புதைக்கிறான் என்றே சொல்ல வேண்டும். அத்தனைகாலம் தன் அகத்தில் சிக்கிக் கிடந்த தன்னை ஒரு பறவையாகக் கருதுகிறான். அன்று அவற்றிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைத்திருப்பதைப் பறவை பறந்து சென்றது என்கிறான் என ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

          ‘எல்லா பறவைகளின் நிழலிலும் ஒரு காகம் இருக்கிறது

  • கலாப்பிரியா

 

தலைப்பு: அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும் (சீ.முத்துசாமி)

1970களில் மலேசிய இலக்கியத்தில் தடம் பதித்து தமிழின் மிக முக்கியமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்று மலேசிய இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்தவர் ‘மண் புழுக்கள்’ நாவலின் எழுத்தாளர் சீ.முத்துசாமி. மலேசிய நவீன இலக்கியத்தின் உந்துகோல் என்றே சொல்லலாம். அவருடைய சிறுகதை நூலைக் கொண்டு சீ.முத்துசாமி குறியீட்டு மொழியைக் கையாண்டிருக்கும் விதத்தைக் காணலாம்.

குறியீட்டு மொழிப் பட்டியல் 1

சிறுகதை: வழித்துணை

சொல்/வாக்கியம் பொருள்
இருளைப் போர்த்திப் படுத்து தூங்கும் மலைப்பாம்பாய் மலைப்பாம்பாய் எனும் சொல் இரவில் நீண்டு கிடக்கும் சாலையைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார்.
இரவின் கண்ணீர் துளிகள் இச்சொற்றொடர் முழுவதுமாக விடிந்தும் இன்னும் அகலாமல் இருக்கும் சிறிய இருளைக் குறிக்கிறது.
நிறைமாத கர்ப்பிணியின் செழுமை முழு நிலாவைக் குறிக்கிறார்

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 2

சிறுகதை: வனத்தின் குரல்

சொல்/வாக்கியம் பொருள்
இரயிலின் தாலாட்டில் தாலாட்டு என்பது இரயில் நகரும்போது ஏற்படும் அசைவை/ஆட்டத்தைக் குறிக்கிறது.
கோழித் தூக்கம் கணநிமிடத் தூக்கத்தைக் காட்டுகிறது.
பூமி பச்சை நிறத்தைப் பூசிக் கொண்டு… புற்களைக் காட்டுகிறது
வயல்வெளிகள் பூப்பெய்திய குதூகலத்தில்… இச்சொற்றொடரில் பூப்பெய்திய எனும் சொல் விளைந்த பயிர்களின் நிலையைக் குறிக்கிறது.
பறவை காற்றில் மிதந்து போனது பறத்தல் நிலையை இப்படிக் காட்டுகிறார்
காடு தொலைத்த நினைவுக்கூட இல்லாமல்… இக்கூற்றில் காடு என்பதை மனவளத்தைக் குறிக்கிறார்.
வனப்பிரளயம் மனப்போராட்டம்

 

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 3

சிறுகதை: தூண்டில் மீன்கள்

 

சொல்/வாக்கியம் பொருள்
மனச்சுவர்கள் சுவர் எனும் சொல் இவ்விடத்தில் மனத்தில் உள்ள தடைகள் எனலாம்.
எங்கள் வருகையைப் பொருட்படுத்தாமல் வேற்றுக்கிரகத்தில் இருந்த… வேற்றுக்கிரகம் என்பது அவர் வேறொரு சிந்தனையில் இருப்பதைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 4

சிறுகதை: அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்

 

சொல்/வாக்கியம் பொருள்
உறுமலுடன் சீறிப்பாய்ந்து உள்வந்து நின்றது கார். இவ்விடத்தில் உறுமல் என்பது காரின் ஒலியையும் சீறிப்பாய்ந்து என்ற சொல் வேகமாக உள்ளே நுழைவதையும் குறிக்கிறது,
தாக்குதலின் முதல் குண்டு அவளிடமிருந்து வெளிப்பட்டது. தாக்குதல் என்பது சண்டையையும், குண்டு என்பது கடுங்கோபத்தில் உச்சரிக்கப்படும் வார்த்தைகளையும் குறிக்கின்றன.
ஒருவாரமாய் மந்திர உச்சாடனமாய், வீட்டில் விரவி மனப்பாடம் ஆகியிருந்த… மந்திர உச்சாடனம்: விடாமல் கிடைத்த திட்டையும், மனப்பாடம் என்பது மனத்தில் அவ்வார்த்தைகள் பதிந்திருப்பதையும் குறிக்கிறது.
காறி உமிழும் சடங்கு சடங்கு என்பது வீட்டில் வழக்கமாக நடக்கும் சண்டையைக் குறிக்கிறது.
கால்களில் அசுரப் பசி கால்களின் வேகத்தைக் காட்டுகிறது.
தலையில் மத யானை இவ்விடத்தில் மத யானை என்பது தலைக்கணத்தைக் குறிக்கிறது.

 

 

தலைப்பு: நீர் மேல் எழுத்து (ரெ.கார்த்திகேசு)

மலேசியாவின் மூத்தப் படைப்பாளியாகத் திகழ்ந்த அமரர் முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் நல்ல விமர்சகராகவும் அறிவியல் புனைக்கதைகளில் தேர்ந்தவராகவும் அறியப்பட்டவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தகைவராவும் பதவி வகித்துள்ளார். அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார்.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 5

சிறுகதை: ஆக்கலும் அழித்தலும்

 

சொல்/வாக்கியம் பொருள்
இலக்கியக் குடுமிப்பிடி குடுமிப்பிடி என்பது வம்பு அல்லது விவாதங்களைக் காட்டுகிறது.
கலவரம் இக்கதை கலவரம் என்ற சொல்லை மனத்தில் நடக்கும் போராட்டம் எனக் குறிப்பிடுகிறது.
அழுகையின் சுருதி கூடியது சுருதி என்ற சொல் சத்தம் எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வறண்டுபோன அந்திம காலம் அந்திம காலம் என்பது வயது முதிர்ந்த நிலையைக் காட்டுகிறது.
இதுதான் தினசரி நியதி நியதி என்பது அன்றாடக் கடமை என்பதைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 6

சிறுகதை: மல்லியும் மழையும்

சொல்/வாக்கியம் பொருள்
மொட்டையாக வேண்டாம் எனச் சொல்லியாயிற்று. மொட்டை எனும் சொல் இங்கு சுருக்கமாக என்பதைக் குறிக்கிறது.
அவளுடைய சுறுசுறுப்பைப் பார்க்கும்போது உடலில் அணு உலை இருக்கலாம் என… இச்சொல் உடலில் இருக்கும் அதீதமான சக்தியைக் குறிக்கிறது.
மகிழ்ச்சியான விசயங்களை மட்டும் வடிகட்டிக் காட்டும் சித்திரங்கள் வடிகட்டி என்பது குறிப்பிட்டு எனப் பொருள் கொள்ளலாம்.
வானம் விசையைத் தட்டியதும்… விசை என்பது இவ்விடத்தில் மழையைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 7

சிறுகதை: என் வயிற்றில் ஓர் எலி

 

சொல்/வாக்கியம் பொருள்
காலம் நினைவிலிருந்து எல்லாவற்றையும் துடைத்துப் போட்டிருந்தது. துடைத்தல் என்பது இவ்விடத்தில் மறத்தல் என்பதைக் குறிக்கிறது.
வயிற்றில் உள்ள எலிக்குத் தீனி போட்டார். இவ்வரியில் தீனி என்பது மருந்தைக் குறிக்கிறது. எலி என்பது சதா துன்புறுத்தும் நோயைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 8

சிறுகதை: மௌனமாய்

 

சொல்/வாக்கியம் பொருள்
அழுகை பொங்கி நின்றது… பொங்கி என்பது வரப்போகும் அழுகையைக் குறிக்கிறது.
அவளுடைய வார்த்தைகள் மூச்சிரைத்தன. மூச்சிரைத்தன என்பது தடுமாறியதைக் காட்டுகிறது.
மனத்தில் உஷ்ணம் தாளாத வெய்யில் உஷ்ணம் தாளாத வெய்யில் என்பது மனத்தில் உள்ள கோபத்தைக் காட்டுகிறது.

 

ஒப்பீடு

இரண்டு எழுத்தாளர்களும் வயத்தால் மூத்தவர்கள் என்பதால் அவர்களின் சொற்கள் அவர்களின் புறச்சூழல் அனுபவங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதை மதிப்பிட முடிகிறது. இருவரின் வாழ்க்கையின் பின்னணியையும் ஆராயும்போது அவர்களின் இலக்கியத்திற்கான குறியீட்டு மொழிகளை அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே பெற்றிருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.

சீ.முத்துசாமி தோட்டப்புறப் பின்னணியில் வாழ்ந்தவர் என்பதாலும் அவருடைய பெரும்பாலான கதைகளில் தோட்டப்புறச் சூழல்களே பிரதானமாக வெளிப்படுவதாலும் பெரும்பாலான அவருடைய கதைகளில் அவர் பயன்படுத்தியிருக்கும் குறியீட்டு மொழிகள் இயற்கை சார்ந்ததாகவே இருக்கின்றன. மனத்தையும், எண்ணங்களையும் கூட அவர் கதைகளில் ஓர் இயற்கையின் குறியீடாகவே வந்து நிற்கின்றன.

ஆனால், ரெ.கார்த்திகேசு அவர்கள் அறிவியல் துறையில் முதுகலை முடித்தவர், மேலும் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஆகவே, அவருடைய பெரும்பாலான கதைகளில் குறியீட்டு மொழியாக அறிவியல் கலைச்சொற்கள் புது அர்த்தம் பெற்று வந்திருப்பதை அதிகமாகக் காண முடிகிறது. துடைத்தல், பொங்கி, அணு உலை என அவருடைய கதைகளில் வேறொன்றின் குறியீடாக வரும் பெரும்பாலான சொற்கள் அவர் தன்னுடைய அனுபவமிக்க அறிவியல் துறையிலிருந்தே எடுக்கிறார் எனப் புலப்படுகிறது.

ஆகவே, ஒரு குறியீட்டு மொழி என்பது இலக்கியப் படைப்புகளில் இயந்து வர அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் பின்புலம், அனுபவம், ஈடுபாடு சார்ந்தே முடிவு செய்யப்படுகிறது. ஒரு துறையில் இருக்கும் சொல்லை இலக்கியத்திற்குள் கொண்டு வந்து புதிய பொருளுடன் பயன்படுத்த அவரவரின் பின்புலமும் முக்கியப் பங்கை வகிக்கிறது. ஜெயமோகன் தரிசனம் என்கிற சொல்லைத் தன் சிறுகதையில் பாவிக்கிறார். தரிசனம் என்பது ஆன்மீகச் சொல்லிலிருந்து சிறுகதைக்குள் வேறொரு பொழிவுடன் கொண்டு வரப்படுகிறது என்று அர்த்தப்படும். கடவுளின் தரிசனம் என்றிருந்த சொல் வாழ்க்கையின் தரிசனமாக இலக்கியத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. இலக்கிய வெளியில் கதைக்களத்தின் கூர்மையை மேலும் ஆழமாக்கிக் காட்டவும், சூழ்நிலையை வேறொரு மொழியில் சொல்லி வளப்படுத்தவும் குறியீட்டு மொழிகள் உதவுகின்றன என்பதைச் சீ.முத்துசாமி கதைகளிலும் ரெ.கார்த்திகேசுவின் கதைகளிலும் பார்க்க முடிகிறது.

  • ஆக்கம்: கே.பாலமுருகன்
  • UPSI, பல்கலைக்கழகத்தில் நடந்த மொழியியல் உலக மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை

 

 

மேற்கோள் நூல் பட்டியல்

  • சீ.முத்துசாமி. (2012). அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும். சென்னை, சிவா பதிப்பகம்.
  • ரெ.கார்த்திகேசு. (2011). நீர் மேல் எழுத்து. கோலாலம்பூர், உமா பதிப்பகம்.
  • ஜெயமோகன் அகப்பக்கம்: நவீனக் கவிதைகள் ஏன் புரிவதில்லை? : http://www.jeyamohan.in/8156#.WMuBTG996M9

கேலி வதையின் உச்சநிலை – ஆபத்தும் களையப்படுதலும்

கடந்த 2015ஆம் ஆண்டில் மட்டும் பள்ளிக்கூடங்களில் சுமார் 3000 கேலி வதை பிரச்சனைகள் ஏற்பட்டதாகத் தகவல் கூறப்படுகிறது. (http://smasanews.com/index.php/semasa/item/372-3-000-kes-buli-di-sekolah-direkod-pada-2015)

 

கடந்த ஜூன் 6ஆம் திகதி இரவு கேலி வதையின் கொடூரமான முகம் இன்னொரு உயிரைப் பறித்துவிட்டது. 18 வயது ஆகிய நவீன் என்கிற இளைஞர் ஐந்து பேர் கொண்ட இன்னொரு இளைஞர் கூட்டத்தால் கடுமையாகத் தாக்கப்பட்டு, குதத்தின் வழியாக போத்தல் சொருகப்பட்டு துன்பப்படுத்தப்பட்டுள்ளார். மூளை சாவு அந்த இளைஞருக்கு மட்டுமல்ல என்றே நினைக்கத் தோன்றுகிறது. இதுபோன்ற வன்கொடுமையாளர்கள் உருவாகக் காரணமாக இருக்கும் அனைத்து சூழலையும் முன்வைத்து சிந்திக்கும்போது மூளை சாவு அந்த ஒரு பையனுக்கு மட்டும் நிகழவில்லை என்றே சொல்லலாம். சமூகத்தில் மிச்சமாய் இருப்பதாக நாம் கனவு கண்டு கொண்டிருக்கும் மனிதநேயத்திற்கும் மூளை சாவு ஏற்பட்டுவிட்டது.

நவீன் என்கிற அவ்விளைஞரை விடாமல் தலைக்கவசத்தால் தாக்கியவர்கள் அவருடைய எதிரிகள் அல்லர்; அவருடன் ஒன்றாகப் பள்ளியில் படித்தவர்கள் என்பதுதான் கேட்கச் சங்கடமாக இருக்கிறது. படிக்கும் காலத்திலேயே பள்ளியில் நவீனைக் கேலி வதை செய்யும் பழக்கம் அக்குழுவிற்கு இருந்ததாகக் கண்டறியப்பட்டுள்ளது. அத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் அவர்கள் மாறாமல் அதே கேலி வதை செய்யும் உணர்வுடன்தான் இருந்திருக்கிறார்கள் என்றால் இவ்விடயத்தில் யாரைக் குற்றம் சொல்வது? அத்தனை கொடூரமான மனம் படைத்த இயந்திரங்களைத்தான் உருவாக்கிக் கொண்டிருக்கிறோமோ என வருந்த வைக்கிறது.

கேலி வதை எப்படி உருவாகிறது?

தன்னைவிட பலவீனமானவர்களிடம் காட்டப்படும் அயோகியத்தனம்தான் கேலி வதை. தன் பலத்தைத் தன்னைவிட பலம் கொண்டவர்களிடம் காட்டும் வக்கற்றவர்களின் செயல்தான் கேலி வதை. அல்லது கூட்டமாகச் சேர்ந்துவிட்ட சிலர் ஒரு தனியனிடம் காட்ட முயல்வதையும் அப்படி வகைப்படுத்தலாம். இயல்பாகவே ஒருவனைப் பிடிக்காமல் போக பல உளவியல் காரணங்கள் சொல்லப்பட்டாலும், பிடிக்காமல் போனதை முன்வைத்து அவனைப் பகையாகப் பார்க்கும் 70% சதவீதம் ஆட்கள் அவர்களை நோக்கி கேலி வதையை நிகழ்த்துகின்றனர். இதற்கு முன்பு பலகலைக்கழகங்களில் கேலி வதையினால் தற்கொலை முயற்சி செய்ய முயன்றவர்களையும் தற்கொலை செய்து கொண்டவர்களை நாம் அறிவோம். இருந்தபோதும் கல்விக்கூடங்களில் ஏன் கேலி வதை செயல்களை நிறுத்த இயலவில்லை என்கிற கேள்வியே உருவாகிறது.

கேலி வதைக்கான துவக்கம்: அப்பாவின் பெயரைக் கிண்டலடித்தல்

வகுப்பில் அப்பாவின் பெயரைக் கிண்டலடிப்பதிலிருந்து கேலி வதை மெல்ல தலை தூக்கும். எப்பொழுதுமே அப்பாவின் பெயரை யாராவது கிண்டல் செய்தால் நமக்கு மிகவும் உணர்ச்சிவயமிக்க எதிர்ப்புணர்வு ஏற்படும். அதனைச் சீண்டிப் பார்க்கவே அப்பாவின் பெயரை வைத்துக் கிண்டல் செய்யும் ஒரு பழக்கம் ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளிகள் காணப்படுகின்றன. இதுவே நாளடைவில் கேலி வதையின் உச்சத்தை நோக்கி நகர்கிறது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். உங்கள் பிள்ளைகள் பள்ளியில் பிற மாணவர்களின் பெயர்களைக் கேலி செய்வது, பிறரின் அப்பாவின் பெயரைக் கிண்டல் செய்வது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகத் தெரிந்தால் தயவு செய்து அதனை ஒரு சாதாரண பிரச்சனையாகப் பார்க்க வேண்டாம். அப்பொழுது அதுவொரு நகைச்சுவையான விசயமாகத் தெரிந்தாலும் நாளடைவில் உங்கள் பிள்ளைகளால் பிறர் உயிருக்கும் ஆபத்து வரலாம் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்பாவின் பெயரைக் கிண்டலடிப்பதன் வாயிலாக ஓர் ஆபத்தான பகைமை உணர்ச்சி அவர்களுக்கிடையே எழுகிறது. அதுவே வன்முறைக்கு இட்டுச் செல்கிறது.

உடல் சுபாவங்கள்/ பழக்கங்களை முன்வைத்த கேலி வதை

பெண் தன்மை அதிகம் கொண்டிருக்கும் ஆண்களையும், ஆண் தன்மை அதிகம் கொண்டிருக்கும் பெண்களையும் கிண்டல் செய்யத் துவங்குவதும் கேலி வதைக்கான ஆரம்பம்தான். வகுப்பில் அத்தகைய மாணவர்கள் இருப்பின் அவர்களைக் கீழ்மையாக நடத்துவது நம் பிள்ளைகள்தான் என்றால் நம்ப முடியுமா? எங்கிருந்து அவர்கள் இதனைக் கற்றுக் கொண்டார்கள்? ‘பொட்டை’, ‘ஒம்போது’ என அவர்களைக் கேலியாக அழைப்பதன் முதலே இதுபோன்றவர்கள் கேலி வதை செய்வதற்குத் தயாராகிவிட்டனர் என்றே பொருள்படும். மற்ற உயிர்களின் சுபாவங்களை விமர்சிக்கவோ கேலி செய்யவோ நமக்கு உரிமை இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

குழுமனப்பான்மையின் விளைவு

வகுப்பில் மாணவர்கள் தங்களின் சிலரை நண்பர்களாகவும் மற்ற சிலரை எதிரிகளாகவும் வகுத்துக் கொள்வதும் கேலி வதைக்கு வழிவகுக்கும். இதுவே குழுமனப்பான்மையை உருவாக்கி அவனுக்கு ஒவ்வாத குழுவைத் தீவிரமாக எதிர்க்கவும் செய்யும். ஒருவேளை எதிரணி குழுவிலிருந்து ஒருவன் மட்டும் மாட்டிக் கொண்டால் அவனைக் கேலி வதை செய்யத் துவங்குவார்கள். அது மிகவும் ஆபத்தான வன்முறையாக வெடிக்கும். அல்லது அக்குழு இக்குழுவைச் சேர்ந்த மாணவர்களைத் தனியாகச் சந்திக்கும்போது தன் பழியைத் தீர்த்துக் கொள்ள முற்படுவார்கள். இதை ஆரம்பத்திலேயே தவிர்க்காவிட்டால், பழித் தீர்க்கும் உணர்வு மாணவர்கள் மனத்தில் ஒரு பழக்கமாகப் பதிந்துவிடும்.

எப்படிக் களைவது?

கேலி வதை தொடர்பான பிரச்சனையை நாம் ஒரு குற்ற செயலாக மட்டும் பார்க்கக்கூடாது. உளச்சிக்கல் தொடர்பாகவும் விரிவான உளவியல் ஆய்வாகவும் நாம் சிந்திக்கத் துவங்கினால்தான் அதனுடைய வேர்களைக் கிள்ளி எறிய முடியும். பலவீனமானவர்களைக் கீழ்மையாக நடத்தும், பலவீனமானவர்களிடம் வீரத்தைக் காட்ட முயலும், தனக்குக் கீழாக ஒருவன் மீது  வன்முறையைக் கட்டவிழ்த்துவிடுவதுதான் ஆண்மை என நினைத்துக் கொண்டிருக்கும், ஒரு ஆபத்தான பாரம்பரியமிக்க உணர்வை நம் மாணவர்களின் மத்தியிலிருந்து அகற்ற வேண்டும். அத்தூய்மைப்படுத்தும் நடவடிக்கையையே வீட்டிலிருந்து தொடங்குவதல் வேண்டும்.

பிற உயிர்களின் வேற்றுமைகளை அகவுணர்களை மதித்தல்

சக மனிதர்களை விரோதியாகப் பாவிக்கக்கூடாது என்கிற போதனையைச் சலிக்காமல் சொல்லிப் பழக்கப்படுத்த வேண்டும். கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பிடிக்காவிட்டாலும்கூட இன்னொருவனைக் காயப்படுத்தும், மனதளவில் துன்பப்படுத்தும் அதிகாரம் நம்மிடம் இல்லை என வலியுறுத்த வேண்டும். மேலும், மனிதர்களின் வேற்றுமை குணம் உள்ளவர்கள் இருப்பார்கள்; அனைவரிடமும் சமரசமாகப் போக முடியாவிட்டாலும், அவர்கள் மீது வன்முறையைக் காட்டுவது; நிகழ்த்துவது கோழைத்தனம் எனத் தொடர்ந்து விடாமல் வீட்டிலுள்ள பிள்ளைகளிடம் சொல்லுங்கள். அவர்கள் மனத்தில் அன்பை விதையுங்கள்; பகைமையை அல்ல.

அரவாணிகள்/திருநங்கைகள் சக மனிதர்கள்தான் என ஆழப்பதித்தல்

நாம் வாழும் சமூகத்தில் திருநங்கைகள், பாலியல் தொழிலாளிகள், சிறார் தொழிலாளிகள், ஏழை எளியவர்கள், மாற்றுத் திறனாளிகள்,  பெண் தன்மை அதிகம் கொண்ட ஆண்கள், இப்படிப் பற்பல மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பெற்றோர்கள் வீட்டில் பிள்ளைகளிடம் மனம் திறந்து பேச வேண்டும். அவர்கள் யாவரும் பிறப்பாலும் சூழ்நிலையாலும் அப்படியாக்கப்பட்டவர்கள்; அவர்கள் மீது வெறுப்பை உண்டாக்கிக் கொள்ளக்கூடாது என அவர்களின் அகக்கண்களைத் திறந்துவிடுங்கள். இதுபோன்ற ஆட்களைச் சமூகத்தில் கவனிக்கும்போது சில பிள்ளைகள் அவர்களை அசூசையாகப் பார்க்கப் பழகிக் கொள்வதால்தான் தான் கல்விக் கற்கும் இடங்களில் அதுபோன்ற சுபாவங்களை ஒத்திருக்கும் சக நண்பர்களை இழிவாக நடத்த முயல்கிறார்கள் என சொல்லலாம்.

இவ்விரண்டையும் முதல் கட்டமாக ஒவ்வொரு பெற்றோர்களும் அமல்படுத்தினால் மட்டுமே, தன் ஒரே மகனை இழந்துவிட்டு அழும் நவீன் என்கிற இளைஞரின் தாயாரைப் போன்ற இன்னொரு தாயின் கண்ணீர் இம்மண்ணில் விழாது. தொடர்ந்து சிந்திபோம்; விவாதிப்போம்.

-கே.பாலமுருகன்

 

 

சீ.முத்துசாமி என்கிற மலேசிய நவீன படைப்பிலக்கியத்தின் குரல்

மலேசிய நவீன இலக்கியத்தின் தனித்துவமான படைப்பிலக்கியத்தின் குரல் சீ.முத்துசாமியினுடையது என்பதை அவருடன் பழகிய நாட்களிலும் அவருடைய சிறுகதைகளை வாசித்த போதும் புரிந்துகொண்டேன். 2007 ஆம் ஆண்டில் கோலாலம்பூரில் நடந்த ஒரு நாவல் பட்டறையில்தான் சீ.முத்துசாமியைச் சந்தித்தேன். அப்பொழுது மலேசிய ஞாயிறு பத்திரிகைகளில் நான் எழுதத் துவங்கிய காலக்கட்டம் என்பதால் அவரால் என்னை அடையாளம் காண முடிந்தது.

எழுத வரும் இளையோர்களைத் தட்டிக் கொடுப்பதோடு மட்டுமல்லாமல் அவர்களின் படைப்புப் போதாமை குறித்தும் சமரசமில்லாமல் விமர்சிக்கக்கூடிய ஆற்றல் உள்ள ஒரு மூத்த எழுத்தாளராக சீ.முத்துசாமி திகழ்ந்தார். அப்படித்தான் எங்களின் உரையாடலும் ஆரம்பித்தது. என்னுடைய ‘அலமாரி’ சிறுகதையைப் பற்றி வெகுநேரம் பேசிவிட்டு மலேசிய சிறுகதை உலகில் உனக்கொரு இடம் நிச்சயம் உண்டு எனத் தோளில் தட்டிக் கொடுத்த அக்கணத்தை இப்பொழுதும் நினைவுக்கூர்ந்து உற்சாகம் பெற முடிகிறது.

வனத்தின் குரல் சிறுகதையை முன்வைத்து

மலேசிய நவீன சிறுகதைகள் பற்றி பேசவரும், விமர்சிக்க நினைக்கும் யாராகினும் சீ.முத்துசாமியின் ‘வனத்தின் குரல்’ சிறுகதை மலேசிய நவீன இலக்கியத்தில் ஒரு புதிய அலையை உருவாக்கிய சிறுகதை என்றே உணர்வார்கள். வனத்தைப் பற்றிய வர்ணனைகள் ஒர்ந்து அடர்ந்த குறியீடாக சிறுகதையில் அபாரமான தெறிப்புடன் வெளிப்படுகிறது. சீ.முத்துசாமியின் இந்தக் கதையில் ஒரு ஜென் கவிதையை போல மௌனத்துடன் படுத்திருக்கிறது காடு. வனத்தை உண்மையின் இருப்பாகக் காட்டத்துவங்கி பிறகு குரலாக, உருவமற்ற சத்தமாக கதையில் ஒலிக்கவிடுகிறார் கதையாசிரியர். பெருநகரத்தின் இரைச்சலையும் பரப்பரப்பையும் அவ்வப்போது கிண்டலடித்துவிட்டு வனத்தின் அதிசயத்தைக் கதை நெடுக வித்தியாசமான மொழிநடையில் முன்வைக்கிறார்.

வனம் அந்தக் கதையின் மையப்பாத்திரத்திற்குள் மிகவும் செழிப்பான ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. அந்த அதிசயத்தின் முன் தன்னை அதனுள் ஒரு அங்கமாக நிறுவிக்கொள்கிறான். சுகுணா மீதான காதலும் அந்த வனத்தின் ஒரு பகுதியாக நிகழ்கிறது. இறுதியில் சுகுணாவை அவன் விட்டு விலகிய பிறகு அந்த வனமும் அவனைவிட்டுப் போய்விடுகிறது. நமக்குள் புதியதொரு உறுப்புகளாகத் தோன்றும் துரோகம், வன்மம், பொறாமை, போன்ற குணங்கள் நமக்குள் இருக்கும் ஓர் அதிசயத்தக்க வனத்தை/செழிப்பை மெல்ல கொன்றுவிடுவதாக இந்தக் கதையில் நான் உணர்ந்தேன்.

சீ.முத்துசாமியின் ‘வனத்தின் குரல்’ எல்லோருக்குள்ளும் ஒரு வனம் இருக்கிறது என புதிய புரிதலை உண்டாக்குகிறது. அந்த வனம் என்பது இருப்பின் நிதர்சனம். அதற்குமேல் பரிணாமம் என்கிற தோரனையில் வசதிகளை உருவாக்கிக் கொள்கிறோம் எனவும் முன்னேற்றங்களை வடிவமைத்துக் கொள்கிறோம் எனவும் கதையாசிரியர் கதையில் குறிப்பிடுகிறார். ஒரு பொம்மைக் கடைக்குள் நுழையும் மையக்கதைப்பாத்திரம் அங்குள்ள போலித்தனங்களைப் பார்த்து வியப்படைகிறார். கரடி பொம்மைகள், சிங்கம் புலி பொம்மைகள், கிளி பொம்மைகள் என வனத்தின் பல நிசங்கள் அங்கு நகலெடுக்கப்பட்டிருக்கும். இன்னும் சில காலங்களில் அநேகமாக வனம் ஒரு வரைப்படமாக மட்டுமே அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கப்படும் என்கிற அபாயமும் உண்டு. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் அவன் இழக்கும் வனம்/செழிப்பு அவனை ஒரு இயந்திரமாக மட்டுமே செயல்பட வைக்கும். வனம் அழிக்கப்பட்டு கட்டிடங்கள் வளர்வது போல அந்தக் கட்டிடத்தின் ஒரு செங்கல் போலவே நவீன வாழ்க்கையும் அதன் அபத்தங்களும் அவனுக்குள் சொருகப்பட்டிருக்கும் என்கிற அனுமானத்தைக் கதை உணர்த்துகிறது.

ஆகையால்தான் கதையின் நகரத்தில் அலையும் அத்துனை மனிதர்களின் மீது ‘காடு தொலைத்த நினைவு கூட இல்லாதவர்கள்’ எனும் பார்வையை முன்வைக்கிறார். பெரும்பாலும் நாம் நமக்கு நேர்மையாக இருப்பதில் தவறிவிடுகிறோம் என்கிற எண்ணம் எனக்குண்டு. வாழ்வின் சில தருணங்களில் எதை எதையோ காரணம் காட்டி நேர்மையாக இருப்பது முடியாத காரியம் என அதனைவிட்டு ஓடியிருக்கிறோம். தப்பித்தலுக்கும் வியாக்கியானம் செய்து நியாயப்படுத்தும் செயல்பாடு வேறு யாருக்குக் கைவரும், மனிதனைத்தவிர? அப்படியொரு நேர்மையை இழப்பதும் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் வனத்தை இழப்பதும் ஒருவகையில் ஒன்றையொன்று சார்ந்திருந்திருக்கிறது எனச் சிறுகதையின் மூலம் உணர முடிந்தது.

சுகுணா கதையில் சில இடங்களில் சொற்பமாக வந்துவிட்டுப் போகிறாள். ஆனால் சுகுணாவின் மூலம்தான் மையக்கதைப்பாத்திரம் தனக்குள் அடரும் ஒரு வனத்தை இழக்க நேரிடுகிறது. கதையின் தொடக்கத்திலிருந்து அவருக்குள் உருவாகும் வனம் குறித்த பிரமை, பிரமிப்பு எல்லாம் கதையின் இறுதியில் உடைக்கப்படுகிறது. மறுவாசிப்பிற்குப் பிறகு வேறு ஏதும் திறப்புகள் ஏற்பட வாய்ப்பை தனக்குள் வைத்திருக்கும் நல்ல கதை என்பதில் மறுப்பில்லை.

வனம் என்கிற குறியீட்டிற்கும் மனதிற்கும் நெருக்கமான ஒப்புவமை சொல்லப்பட்டிருப்பது போல தோன்றும். “காடு குறித்த பிரக்ஞை பூர்வமான விழிப்பு, எந்தப் புள்ளியில் தொடக்கம், என்பதைத் திட்டவட்டமாக நினைவு கூர இயலவில்லை” எனும் இடத்தில் மனம் என்கிற ஒரு அந்தரங்க பிரக்ஞை இருப்பது குறித்து எப்பொழுது நாம் அறிந்திருப்போம் அல்லது உணர்ந்திருப்போம்? திட்டவட்டமாகக் கூற முடியாதுதானே. ஒருவேளை முதல்முறை காதல் செய்யும்போது மனதின் இருப்பை நாம் உணர்ந்திருக்கக்கூடும். இந்தக் கதையில் வரும் மையக்கதைப்பாத்திரமும்  முதல் காதலை மனதிற்குள் பதியம் போட்டப் பிறகுத்தான் வனத்தை உணர்கிறான்.

 

பேருந்தில் போய்க்கொண்டிருக்கும் மையக்கதைப்பாத்திரம் இரயில் பயணம் குறித்து மனப்பதிவையும் காட்சிப்பதிவையும் விவரிக்கும் இடங்கள் முக்கியமானவை. சீ.மூத்துசாமியின் அடர்த்தியான விரிவான மொழி சிறுகதைக்கு உகந்ததாக தனித்துவமாக விளங்குகிறது. நான் சிறுவயதில் அம்மாவுடன் அதிகமான இரயில் பயணங்களில் நாட்களைக் கழித்ததுண்டு. அத்துனைத் தூரமான பயணங்கள் இரயிலில் மட்டுமே சாத்தியம். தூரப்பயணங்கள் அதுவும் இரயிலில் பயணிக்கும்போது வனத்தை அளக்கவும் தரிசிக்கவும் வாய்ப்பாக அமையும். நகரத்தில் வாழ்ந்து பழகியவர்களுக்கு 3 நாட்களுக்கு மேல் வனத்தில் இருப்பதே பெரிய கொடுமையாகவும் அசௌகரிகமாகவும் அமைந்துவிடுவதுண்டு. ஆனால் இரயில் பயணங்கள் வனத்தில் வெகுகாலம் இருந்துவிட்ட களைப்பையும் அனுபவத்தையும் தரவல்லது என்றே நினைக்கிறேன்.

இச்சிறுகதை மேலும் பல சலனங்களைக் கொண்டிருக்கிறது. வெவ்வேறான வாசிப்பில் வெவ்வேறான விமர்சனங்களின்போது இந்தப் பார்வை மேலும் விரிவடையும். இந்தச் சிறுகதையை வாசிப்பதற்கு முன்பதாகவே ஜெயமோகன் எழுதிய ‘காடு’ நாவலை வாசித்துவிட்டுதால், வனம் குறித்த குறிப்புகள் இடம்பெறும் இடங்களிலும் வர்ணனைகளிலும் மனம் இயல்பாகப் பொருந்தி கொள்கிறது. சிறுகதைக்குரிய அத்துனைக் கச்சிதங்களும் தாராளமாக இடம்பெற்றுள்ளன. சீ.மு-வின் வனத்தின் குரலை வாசித்து முடித்தப்பிறகு மனிதனின் மனம் இயற்கையின் முன்வைக்கப்பட்ட ஒரு துண்டு மரம் போல  என ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி சொன்ன குறிப்பு ஞாபகத்திற்கு வருகிறது. மனித உணர்வுகள் மரத்தின் வேர்களாக அலைந்து திரிந்து ஊடுருவி ஒரு நேசத்தை நோக்கி, உயிர் வாழ்தலுக்கான போராட்டத்துடன் பாய்கிறது.

கே.பாலமுருகன்

2009ஆம் ஆண்டில் எழுதப்பட்ட விமர்சனம், மறுபிரசுரம்

 

 

சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என பகல் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் மழையுடன் சபரிநாதன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைவிட இளையவரான சபரிநாதனை அவர் வீட்டில் வைத்து நான், செல்மா, யவனிகா, கோணங்கி என நால்வரும் சந்தித்தோம். அப்பொழுது கோணங்கி மிகவும் உற்சாகத்துடன் சபரிநாதனின் ‘களம் – காலம் – ஆட்டம்’ எனும் கவிதை நூலைக் கொடுத்தார்.

இலக்கியத்தின் மீதான நாட்டம் காரணமாக மூன்றுமுறை தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் வீடு வீடாகத் தேடி அலைந்தவன் நான். என் விடுமுறை காலம் மிகவும் குறுகியதுதான். ஆனாலும், மலேசியாவிலிருந்து தனியாகப் புறப்பட்டு 30க்கும் மேலான எழுத்தாளர்களை அவர்கள் ஊரிலேயே சென்று சந்தித்துள்ளேன். அதே துடிப்புடன் சபரிநாதனை அப்பொழுது பார்க்க நேர்ந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவருடன் தொடர்பில்லை என்றாலும் அன்று ஒரு தம்பி கிடைத்தான் என்ற மனநிலையுடன் தான் அந்த மழைநாளை நினைவுக்கூர்ந்துவிட முடிகிறது.

சபரிநாதனின் கவிதையில் இருக்கும் சொற்பிரயோகம் மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தக்கூடியது. அம்மாச்சி தன் கால்களின் மீது என்னைக் குப்புறப்போட்டுக் கதை சொல்லத் துவங்கும் அந்த நாட்களைச் சட்டென மனத்தில் ஊர்ந்திடச் செய்யும் அளவிற்கு அக்கவிதை தொகுப்பில் சில கவிதைகளைக் குறிப்பிடலாம். அவை கதையைப் போன்று ஒலிக்கும் கவிதைகள்.

காலத்தைக் கடத்திக் கொண்டு வரும் சொற்கள் அவை. அச்சொற்கள் அனைத்தையும் திரட்டி ஒரு காலத்தை உண்டு செய்யும் வித்தை சபரிநாதனின் கவிதைகளால் முடிகிறது. ஒரு பகற்கனவில் தோன்றும் நித்தியமற்ற உடைந்து சிதறி பின் கூடிநிற்கும் நடையாய் சபரிநாதன் தனக்கென ஒரு களத்தைக் கவிதையில் உருவாக்குகிறார்.

எனினும்

அப்பா எப்பொழுதுமே நம்ப முடியாதவராக இருந்தார்

வரும்போது திண்பண்டங்கள் குறிப்பாக ஓமப்பொடியும்

கடுப்பட்டிமிட்டாயும் வாங்கி வருபவராகவும்

மார்க் அட்டைகளோடு போகும்போது

சாமியாடியாக மாறுபவராகவும்

 

என அப்பாவைப் பற்றி சித்திரம் அவரின் மொத்த வாழ்வின் மிச்சங்களையும் எச்சங்களையும் ஊடுபாய்ந்து சொல்லிச் செல்லும் இடத்தில் அகநோக்குடைய கவிதைகளாக அவை பிரவாகமெடுத்துக் கொள்கின்றன. இதுபோன்று வாழ்வையும், திணையேக்கங்களையும், உறவுகளையும் அகநோக்குடன் மீட்டுணர்ந்து சொல்ல நேர்கிற இடங்களில் அவருடைய மொழி தன் கால்களை நீட்டி வழிக்கொடுத்து மிக நெருக்கத்துடன் கட்டியணைக்கிறது. சபரிநாதன் தன் காலத்தின் அனைத்து வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்வதற்கான சூட்சமம் இதுவே எனக் கருதுகிறேன். முதலில் ஒரு கவிஞன் அகநிலையிலிருந்து பேசக்கூடியவனாக இருந்தால் மட்டுமே கவிதை கூர்மைப்பெறும். நுணுக்கமான சொல்லாடல்களை அடையும். பாடுப்பொருள்களை உருவாக்கிக் கொண்டு வாழ்க்கைக்கு வெளியிலிருந்து கூவும் போக்கு சபரிநாதன் கவிதைகளில் இல்லை.

தமிழ் சூழலில் நிச்சயம் சபரிநாதனின் கவிதைகள் தனித்த இடம் பெறும். மேலும் அவருக்கு குமரகுருபரன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள் சபரி.

  • கே.பாலமுருகன்

தாவரங்களின் நாவும் மனித தற்கொலைகளும் – The Happening

அம்மா தினமும் காலையில் எழுந்தவுடன் வீட்டின் எதிர்புறத்தில் இரும்பு கதவில் ஊர்ந்து கிடக்கும் கொடியைப் பார்த்துக் கொண்டிருப்பார். ஒவ்வொருநாளும் அதன் அளவு நீண்டு கொண்டே இருக்கும். அதனைப் பார்த்தப்படியேதான் எங்களின் காலை பொழுதுகள் விடியும். கொடி ஊர்வதைப் போல எங்களுக்குள் வீட்டைச் சுற்றியிருக்கும் தாவரங்கள் மீதான அன்பும் ஊர்ந்து ஊறிக் கிடக்கின்றன.

அப்பா கொண்டு வந்து சேர்த்த செடிகளில் வர்ணங்கள் எப்பொழுதும் வேறுவேறாகத்தான் தெரியும். காலையில் பார்க்கும்போது இருந்த வர்ணம் மாலையில் சூழலுக்குத் தகுத்தமாதிரி மங்கிப் போயிருக்கும். தாவரங்கள் சூரியன் மறைந்த பிறகு தற்காலிகமாக தற்கொலைச் செய்து கொள்கின்றன. தூரத்திலிருந்து எங்கள் வீட்டைப் பார்ப்பவர்கள் அது வீடென்பதைக் கிரகித்துக் கொள்ள கொஞ்சம் தடுமாறிவிடுவார்கள். அந்த அளவிற்குப் பூச்செடிகளும் இரும்பு கம்பிகளில் வேலிகளில் என்று ஊடுருவி பரவிய கொடிகளும் தனது இருப்பைப் பலப்படுத்தி வைத்திருந்தன.

சிறுவயதிலிருந்து தாவரங்கள் அடர்ந்த சூழலில் வாழ்ந்ததால், அந்த வாழ்தலில் கிடைத்த அனுபவத்துடன் இயற்கையின் மேலான பரிவு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருந்தது. அன்மையில் பார்த்த the happening என்ற திரைப்படம் தாவரங்கள் மீதான அக்கறையையும் அன்பையும் சிறிதளவு அசைத்துப் பார்த்துவிட்டது என்றே கூறவேண்டும். வெறும் திரைப்படம்தானே என்று அவ்வளவு எளிதாக அந்தத் திரைப்படத்தில் வெளிப்பட்ட மனித மனநிலைகளை ஒதுக்கிவிட இயலவில்லை.

தாவரங்கள் மனிதர்களின் மீது ஏற்படுத்தும் வன்முறையை மிகவும் முரண்பாடான சூழலில் உலகப் பார்வையை ஈர்க்கும் வகையில் தயாரிக்கப்பட்ட படம்தான் M.Night shyamalan அவர்களின் the happening திரைப்படம். இவரின் பெரும்பாலான படங்களில் நீண்டு கிடக்கும் கதைக்கான களம் இருண்மையைச் சார்ந்ததாகவே இருக்கின்றன. சில படங்களில் மிகவும் ஆழமான குறியீடுகளை இருண்மை பாணியில் சொல்ல முயற்சித்ததால் சாமன்ய இரசிகர்களுக்குக் கதைக்கான மூலக் கரு விளங்காமலே போய்விடுகிறது. இருந்தபோதும் the happening திரைப்படம் கொண்டு வரும் செய்தி தாவரப் பிரியர்களுக்கும் இயற்கையைச் சுரண்டும் ஏகாத்திபத்திய வளர்ச்சி நிறுவனங்களுக்கும் பெரிய மிரட்டலையே ஏற்படுத்தியுள்ளது.

நாம் புறக்கணிக்க முயலும் ஒன்று நம் வளர்ச்சிக்காகக் கொன்று குவிக்கப்படும் ஒன்று இந்தப் பூமியிலிருந்து நம்மை அப்புறப்படுத்த காற்று வழி மரணமாக வருவதை மிகவும் அபூர்வமாக இந்தப் படத்தில் M.Night Shyamalan பதிவுச் செய்துள்ளார். நீயு யோர்க்கிலுள்ள சென்ரல் பார்க்(central Park) எனும் ஒரு பூங்காவில் நடமாடிக் கொண்டிருக்கும் மனிதர்களின் இருப்பு திடீரென்று இயக்கம் இழந்து சிலையாகிறது. மரத்தின் அடியிலுள்ள இருக்கையில் அமர்ந்திருக்கும் இரு பெண்களின் உரையாடல் தடைப்படுகிறது. பக்கத்தில் அமர்ந்திருக்கும் பெண் ஏதேதோ உலறுகிறாள், பிறகு சுயமிழந்து தலையிலுள்ள பின்னை உருவி கழுத்தில் சொருகிக் கொள்கிறாள். அதன் பிறகு சிலையாகிய மற்றவர்களின் மனநிலையும் அதேபோல் பாதிக்கப்பட்டு உள்ளார்ந்த நிலையில் அவர்களுக்குள் பெரிய பிரளயம் ஏற்பட்டு சொந்தமாகத் தற்கொலை செய்து கொள்கிறார்கள். தன்னைக் காயப்படுத்திக் கொள்ள துடிக்கிறார்கள். ஒவ்வொரு உடலாக மண்ணில் சாய்கின்றன. அடுத்து வரும் காட்சியில் உயரமான கட்டடத்திலிருந்து ஒவ்வொருவராகக் குதிக்கிறார்கள். கீழே விழுந்து சிதறும் அவர்களின் உடல்கள் திடீர் பீதியையும் குழப்பத்தையும் ஏற்படுத்துகின்றன.

முதலில் இது தீவிரவாதிகளால் தொடுக்கப்படும் இராசயண வெடிக்குண்டு (airbomp chemical toxin) எனக் கருதப்பட்டாலும் படத்தின் நடுப்பாகத்தில் இது தாவரங்கள் வெளிப்படுத்தும் ஒருவகையான chemical response என்று வரையறுக்கப்படுகிறது. எங்கெல்லாம் மனிதக் கூட்டங்கள் நிரம்பி வழிகின்றனவோ அங்குதான் முதலில் இந்தக் காற்று பரவி முதலில் அவர்களின் பேச்சில் குழப்பத்தை ஏற்படுத்துகிறது(confuse of speak) பிறகு அவர்களின் கவனம் நிலை தப்புகிறது(lost direction) இறுதியாக அவர்கள் மன ரீதியில் பலவீனப்படுத்தப்பட்டு தம்மைத் தாமே அழித்துக் கொள்கிறார்கள். சாலையில் போய்க் கொண்டிருக்கும் கார்கள் நின்று விடுகிறது. அதிலிருந்து வெளியேறும் ஒவ்வொருவரும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்வதும் கண்ணாடியில் மோதி முகத்தைச் சிதைத்துக் கொள்வதும் என தற்கொலைகள் வினோதமாக நிகழ்கின்றன.

அந்தத் தாவரங்களின் தீயக் காற்று பரவும் நகரங்கள் அடையாளம் காணப்படுவதால் ஒருசிலர் அங்கிருந்து கிளம்பி வேறு திசையை நோக்கிப் புறப்படுகிறார்கள். அந்தக் குழுவில் இந்தப் படத்தின் கதாநாயகனான mark wahlberg (அறிவியல் ஆசிரியர்) அவனுடைய மனைவியும் நண்பனின் பிள்ளையும் இடம் பெறுகிறார்கள். அந்தக் குழுவில் இவர்கள் மட்டுமே கடைசியில் உயிர் தப்பிக்கிறார்கள். முழுக் கூட்டமாக நகர்வதால் அந்த விஷக் காற்று நம்மை தாக்கிவிடுகிறது என்பதால் இரண்டு குழுக்களாகப் பிரிந்து ஓடுகிறார்கள். மனித நடமாட்டம் அதிகமில்லாத சூழலில் மட்டுமே தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும் என்ற புரிதலில் ஆளுக்கொரு திசையில் மறைகிறார்கள்.

அந்தக் காற்று தாக்கிய மறுகணமே துப்பாகியால் அவர்கள் சுட்டுக் கொண்டு இறப்பதை வெறும் ஒலியினூடாகச் சில இடங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. அங்கிருந்து தப்பிக்கும் கதாநாயகனும் அவனது காதலியும் ஒரு வயதான பெண்ணின் வீட்டில் அடைக்களம் பெறுகிறார்கள். பிந்தைய காட்சியில் அந்த வயதான பெண்ணும் தாவரங்களின் விஷக் காற்றால் பாதிக்கப்பட்டு தன் வீட்டுக் கண்ணாடிகளிலே மோதிக் கொண்டு இறப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

பின்னனியில் நீண்ட சோகத்தின் குறியீடாக ஒலிக்கும் வைலின் இசையுடன் தொடங்குகிற படம் அடுத்து வருக் காட்சிகளில், மனிதர்களைத் துரத்திக் அவர்களின் மூளையின் செயலைத்தளங்களை சேதமாக்கி மூளையின் முக்கியச் செயலாக்கமான பிறப் பாகங்களுக்கு தகவல் அனுப்புவதை தடைச்செய்வதாகக் கதை நீள்கிறது. விழிப்பு நிலை இழந்து தன்னைக் காயப்படுத்திக் கொண்டு (self damaging)மனிதர்கள் இறக்கிறார்கள்.கதைக்கான களம் பூங்காவில் தொடங்கி பிறகு சிறு நகரத்தில் நுழைந்து சாலை வழியாகப் பயணிக்கின்றது. சிறு நகரத்தில் இருப்பவர்கள் விஷக் காற்று பாதிக்கப்படாத இடங்களை நோக்கி ஓடுகிறார்கள். செல்லும் வழியில் மரங்களில் மனிதர்கள் தூக்கிலிட்டு சாலைகள்தோறும் தொங்கிக் கிடக்கும் காட்சி தற்கொலையின் உச்சக்கட்டத்தைக் காட்டுகிறது.

இயற்கைக்கு மனிதன் ஏற்படுத்தும் அழிவை ஒரு காலக்கட்டம்வரை ஏற்றுக் கொள்ளும் இயற்கை, திடீரென்று இரசாயண பகிர்வு வழியாக மனித அழிவை ஏற்படுத்தி தம்மைப் பாதுகாத்துக் கொள்வதைப் போல படமாக்கப்பட்டிருக்கும் இந்தத் திரைப்படத்தினூடாக தாவரங்களும் செடிக் கொடிகளும் தம்முடைய எதிர்ப்பு சக்தியை இருந்த இடத்திலேயே இப்படியான இராசயண வெளிப்பாடுகள் மூலம்தான் தெரிவிக்கிறது என்பதும் சொல்லப்பட்டுள்ளது. The happening திரைப்படத்தை நிகழ்வு சார்ந்த எச்சரிக்கையாகவே அணுக முடிகிறது. இது ஒருவகை தீர்க்கத்தரிசின முறையில் உருவாக்கப்பட்டிருக்கும் கோட்பாடாகவும் இருக்கலாம்.

இதன் மூலம் இரண்டு மனநிலைகளை உணர முடிகிறது. ஒன்று இயற்கையின் அழிவில் நமக்கெல்லாம் பங்கு இருப்பதால் இனியும் கவனமாகச் செயல்பட வேண்டும் என்பதும் மற்றொன்று வீட்டைச் சுற்றியுள்ள தாவரங்களைப் பார்க்கும்போது அவையுடன் நட்பு பாராட்டி நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதும். எங்காவது நகர மேண்மைக்காக அழிக்கப்படும் மரங்களைப் பார்க்கும்போது அது வெறும் நிகழ்வாகத் தெரிவதில்லை. ஒருநாள் the happening நிகழும் என்பதற்கான எதிர்கால குறியீடாகத்தான் அர்த்தப்படுத்திக் கொள்ள முடிகிறது. இயற்கையின் நாவு வெகுத் தொலைவில் இல்லை.

ஆக்கம்: கே.பாலமுருகன்

 

நன்றி: யுகமாயினி 2009 இதழில் பிரசுரமானது.

பேய் விடுதியில் ஒரு நாள்

நேற்று முன்தினம் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காகக் காலையிலேயே ஜாசின் நகரை வந்து சேர்ந்தேன். பரப்பரப்பில்லாத கடைத்தெருக்கள். 200 மீட்டருக்கு ஒருமுறை நாற்சந்தி வட்டம். மீண்டும் மீண்டும் தோன்றி நான்காக உடைந்து மீண்டும் ஒரு சிறிய தெருவையே காட்டி நின்றது. ஒட்டுமொத்தமாக 20 நிமிடத்திலேயே சுற்றிவிட முடிந்த சிறிய நகரம்தான். காலை உணவுக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லலாம் என முடிவெடுத்த பிறகு ஜாசின் சிறுநகரைச் சுற்றி உணவுக் கடை தேடி அலைந்தேன். திறக்கப்படாத கடைகள் ஒரு சலனமும் இல்லாமல் வெறுமனே தெரிந்தன. பசியுடன் சென்று பள்ளியிலேயே சாப்பிட்டுக் கொண்டேன். வயிறு ஒரு பக்கம் ‘புர்ர்ர்ர்ர்’ என காற்றை உள்ளிழுத்து எதையோ சமன் செய்து கொண்டிருந்தது. உரைப்பான உணவுகளை விட்டு இரண்டு மாதங்கள் ஆவதால் எனக்கு உணவு தேடுவதென்பது இப்பொழுதெல்லாம் சவாலாகிவிட்டது.

பட்டறையில் நான்கு மணிநேரம் உரையாற்றிய களைப்புடன் எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குப் போய் சேர்ந்தேன். அப்பகுதியில் இந்த ஒரு விடுதிதான் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். அறை எண் 306 கிடைத்தது. வரவேற்புப் பகுதியில் ஒரே ஒரு மலாய் பெண்மணி அமர்ந்திருந்தார். அவரும் அதிகம் பேசவில்லை. விடுதி கொஞ்சம் பழமையாகத் தெரிந்தது. பெரும்பாலும் எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது. கேரளாவில் ஒருமுறை கதவைத் திறந்ததும் கட்டிலில் விழும் அளவிற்கே மிகச் சிறிய அறையிலெல்லாம் தங்கிய அனுபவமுண்டு. ஆகவே, அப்பழமையான தோற்றம் என்னை எந்த அசௌகரிகத்திற்கும் ஆளாக்கவில்லை.

அறையைத் திறக்கும்போது உணவுக் கெட்டுப்போன ஒரு வாடை. அறைக்குள் அலசினேன். அப்படி ஏதும் தென்படவில்லை என்றாலும் இரவுவரை அந்த வாடை நீங்கவே இல்லை. சரி, அதையும் சமாளித்துக் கொள்வோம் எனறவாறு விட்டுவிட்டேன். தொலைக்காட்சி பெட்டி வழக்கத்திற்கு மாறாகக் கட்டிலிலிருந்து சற்று தொலைவாகவும் அரைப்பாதி சுவரை நோக்கியவாறும் இருந்தது. தொலைகாட்சி பார்த்துத் தொலைக்க வேண்டாம் என்பதற்காக அதை அங்கு வைத்ததைப் போல தெரிந்தது. கொஞ்சம் அசைத்து கட்டில் பக்கம் முழுவதுமாகத் திருப்பிவிட்டு, தொலைகாட்சியைத் திறந்தால் எல்லாம் ‘ஜேனல்களும்’ பொறி மிகுந்து இருந்தது. கீழே போய் புகார் செய்து யாராவது ஒருவர் வரும்வரை காத்திருந்து அதைச் சரி செய்து தொலைகாட்சியில் படம் பார்க்கும் அளவிற்கு உடலில் தெம்பு இல்லை.

சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்தேன். இரவு உணவுக்காக வெளியே போக வேண்டும் என்கிற சலிப்புடன் உறக்கம் தட்டியது. ஓர் எலி சட்டென அறைக்குள் புகுந்து பெரிதாகிக் கொண்டிருந்தது. அதன் உருவம் அறைக்கு நிகராக வளர்ந்து நின்றதும் எனக்கு மூச்சடைப்பு உண்டாகியது.  உடனே, சிரமப்பட்டு விழித்துப் பார்த்தேன். அபப்டியொன்றும் அங்கு இல்லை. வெறும் கனவுதான். ஆனால், மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. தூங்க வேண்டாமென முடிவு செய்துவிட்டு குளிக்கத் துவங்கினேன். ஆங்காங்கே கறை படிந்திருக்கும் குளியலறை. அநேகமாக இந்த அறையில் ஆட்கள் தங்கி பல மாதங்கள் ஆகியிருக்கலாம் என ஒரு நினைப்பு எழுந்தது. மீண்டும் அதே போல உணவுக் கெட்டுப்போன வாடை.

 

விடுதியைவிட்டு வெளியேறும்போது முதலில் வரவேற்புப் பகுதியில் இருந்த பெண் அப்பொழுது காணவில்லை. யாரும் இருக்கிறார்களா எனப் பார்க்கவும் எனக்குப் பொறுமை  இல்லை. வெளியேறும்போது குருவிகளின் இரைச்சல் பேரோசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. எதிரில் தெரிந்த கட்டிடங்களிலும் மரங்களிலும் ஏதோ ஒரு வகை குருவிகள் பேரோசை கேட்டுக் கொண்டே இருந்தது. எனக்கு மிகவும் நெருக்கமான ஓர் இசை அது. சுங்கைப்பட்டாணி நகரமும் 1980களின் இறுதியில் இப்படித்தான் இருந்தது. சிட்டுக்குருவிகளின் நகரம் என என்னுடைய ஒரு கட்டுரையில் இக்குருவிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். இரவு நேரத்தில் சுங்கைப்பட்டாணி ஒரு குருவிக்கூடாக மாறிவிடும். மின்சாரக் கம்பங்கள், கட்டிடங்கள் என எங்குமே குருவிகள் சூழ்ந்து கிடக்கும். அது எங்களுக்கு அசூசையாக இருந்ததே இல்லை. எப்பொழுதோ ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் அக்குருவிகள் மீண்டும் சுங்கைப்பட்டாணி நகரத்திற்கு வரவே இல்லை. அத்தனை லட்சம் குருவிகளும் எங்குப் போயிருக்கும் என யாருக்குமே தெரியாது. எங்கள் நகரமே சூன்யமாகி நின்றது. அத்தனை காலங்களுக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் அதே போன்ற ஓர் உணர்வு கிடைத்தது. சிறிது நேரம் எங்கேயும் நகராமல் அந்த இசைக்குள் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். இருத்தல் உணர்வை இழக்க வைக்கும் ஓர் இசை. குருவிகள் விநோதமானவை. எப்பொழுது ஒரு குருவியைப் பார்த்தாலும் மனம் இலேசாகும்.

எங்குத் தேடியுன் இந்திய உணவகம் தென்படவில்லை. ஒரு குறுகிய பாலத்தைத் தாண்டி அடுத்த சாலையில் ஒரேயொரு இந்திய உணவகம் அதுவும் மூடியிருந்தது. வேறு வழியில்லாமல் விடுதிக்கும் எதிர்ப்புறம் இருக்கும் ஒரு சீனக்கடைக்கு வந்தேன். பழைய தோற்றமுடைய ஒரு கடை. பலகைகளில் கருமை படிந்திருந்தது. ஊதுபத்தி வாசமும் வெள்ளை பனியன் அணிந்திருந்த அக்கடை முதலாளியும் எனக்குக் கம்போங் ராஜாவை ஞாபகப்படுத்தின. காலம் மாறிவிட்டதாக எப்படிச் சொல்கிறோம்? வெறும் எண்களை வைத்து மட்டும்தானா எனச் சந்தேகம் சூழ்ந்து கொண்டது. சாப்பிட்டுவிட்டு வெளியேறும்போது சாலையில் வாகனங்களே இல்லை. ஆச்சர்யமாக இருந்தது. குக்கிராமங்கள்கூட இவ்வளவும் சீக்கிரம் அமைதியாகிவிடாது எனத் தோன்றியது. ஏன் இங்கு இத்தனை அவசரம்? ஒரு 24 மணி உணவுக்கடைகள் கூட தென்படவில்லை.

சாலையைக் கடந்து மீண்டும் விடுதியை நோக்கி நடந்தேன். அப்பொழுது விடுதியின் முழுத் தோற்றத்தையும் பார்க்க முடிந்தது. ஒரேயொரு அறையின் விளக்கு மட்டும் திறந்திருந்தது. நான் தங்கியிருக்கும் மாடியில் எந்த விளக்கும் எரியவில்லை. அநேகமாக இந்த விடுதியில் இன்றிரவு நானும் வேறு யாரோ ஒருவரும்தான் தங்கியிருக்கிறோம் எனத் தெரிந்தது. மேலேறி என் அறையிருக்கும் மாடிக்குள் நுழைந்ததும் அங்கு ஏற்கனவே இருந்த நிசப்தம் அதை உறுதிப்படுத்தியது. ஒவ்வொரு அறையின் கதவையும் கடக்கும்போது காதுகளைக் கூர்மையாக்கினேன். அப்படியேதும் ஆள் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற விடுதிகளில் நான் தங்கியதே இல்லை. இதற்கு முன்பெல்லாம் சுற்றி யாராவது இருப்பார்கள். ஏனோ கொஞ்சம் படப்படப்பாக இருந்தது.

உள்ளே நுழைந்த பின் அறையைப் பரிசோதனை செய்ய மனம் தூண்டியது. தொலைகாட்சிக்குப் பின்னால் இருந்த திரைச்சீலையை விலக்கினேன். மேலே மூன்றடுக்குக் கண்ணாடி சன்னல் மட்டுமே. அதையும் திறக்க முடியாது. அதன் ஓரத்தில் எப்பொழுதோ புகைத்துப் போட்டிருந்த ஒரு சிகரெட் துண்டு. தொட்டுப் பார்த்தேன். சூடாக இல்லை. அப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதி. அறையில் இருந்த எல்லா பொருள்களின் மீது அந்த உணவுக் கெட்டுப்போன வாடை படிந்திருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதெப்படி ஓர் அறையில் அந்த வாடை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. மனம் என்னவோ கற்பனை செய்து பார்த்தும் பதில் பிடிப்படவில்லை. ஒருவேளை அறையை ஒழுங்காகச் சுத்தம் செய்யாமல் விட்டிருக்கலாம் எனத் தோன்றியது.

தொலைகாட்சியிலும் பார்க்க எதுவும் இல்லை. புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். இரண்டு பக்கத்திற்கு மேல் போனதும் அசதி உடலின் அனைத்துக் கதவுகளையும் தட்டத் தொடங்கியது. தூங்கலாம் என விளக்கை அடைத்ததும் தொலைகாட்சிக்குப் பின்னால் இருக்கும் சன்னலிலிருந்து மட்டும் ஒரு சிறிய வெளிச்சம். முழு இருட்டில் அதனை நன்றாகக் கவனிக்க முடிந்தது. என்னவாக இருக்கும் எனக் கற்பனை மட்டுமே செய்து கொண்டு படுத்திருந்தேன். சென்று பார்க்கத் தோன்றவில்லை. அபப்டியே விட்டுவிட்டேன். முதன்முறையாக  தனிமை உணர்வை ஏற்படுத்திய விடுதி அதுவாகத்தான் இருக்கும். அத்தனை பெரிய விடுதி; மூன்று மாடிகள் கொண்டவை; எப்படியும் 200 அறைகள் இருக்கும் போல. அப்படிப்பட்ட இடத்தில் நான் மட்டும் இருப்பதைப் போன்ற உணர்வு அசௌகரிகமாக இருந்தது. வெளியேறினாலும் போகத் திக்கில்லை. இடமும் புதிது. வெளியிலும் ஒன்றுமே இல்லை.

கண்களை மூடி உறங்கத் துவங்கினேன். எப்பொழுது நினைவு தப்பி ஆழ்ந்த உறக்கம் செல்வேன் என நினைத்துக் கொண்டிருக்கையில் யாரோ கதவைத் திறக்க முயற்சிப்பதைப் போல ஒரு நினைப்பும் சத்தமும் கேட்டது. சட்டென விழித்தேன். அப்படியொரு சத்தமும் இல்லை. விளக்கைத் தட்டாமல் மீண்டும் உறக்கத்திற்குள் ஆழச் சென்றேன். அசதி உடலைப் பின்னிக் கொண்டிருந்தது. இப்பொழுது கதவைத் திறந்து யாரோ உள்ளே வந்தார்கள். என் கட்டிலுக்கு அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். சட்டென அந்த உருவம் என் மீது பாய்ந்ததும் மீண்டும் மூச்சுத் திணறல். அதனிடமிருந்து தப்பிக்க முயல்கிறேன். கொஞ்ச நேரத்திலே அது கனவு என்றும் தெரிந்துவிட்டது. ஆனால், விழிக்க முடியவில்லை. கனவிலிருந்து தப்பித்து வெளியேற வேண்டும். உண்மையில் அறையில் யாரும் இல்லை என்பதைக் கனவிலிருந்து வெளியேறியப் பிறகுத்தான் உறுதிப்படுத்த முடியும் என நன்றாக உணர்கிறேன். மூச்சு அடைக்கிறதே தவிர ஆனால் விழிக்க இயலவில்லை.

வியர்த்த உடலுடன் கட்டிலிலிருந்து எழுந்தேன். உடனே, விளக்கைத் தட்டினேன். எத்தனை அசதியுடன் படுத்த நாட்களில்கூட தூக்கம் இந்த அளவிற்குத் தொந்தரவுக்குள்ளானதில்லை. அதுவும் இப்படி ஏதோ ஒன்று நம்மை அமிழ்த்தும் என யார் யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேனே தவிர அனுபவித்ததில்லை. அந்த அறை எனக்குச் சரியாகப் படவில்லை, அந்த விடுதியே எனக்கு ஒவ்வாததைப் போன்று தெரிந்தது. என்ன செய்வது? தங்கித்தான் ஆக வேண்டும். மீண்டும் படுத்தேன். மீண்டும் அதே போன்ற கனவுகள். மீண்டும் விழித்தெழுதல். அப்படியே ஒரு முழு இரவு நிம்மதியில்லாமல் கழிந்தது. மறுநாள் அங்கிருந்து காலையிலேயே கிளம்ப வேண்டும். ஏற்றிச் செல்ல ஆள் வந்ததும் கீழே இறங்கி சாவியைக் கொடுத்தேன். அதே மலாய் பெண்மணித்தான் இருந்தார். என்னிடம் அதிகம் பேசவில்லை.

வாகனத்தில் ஏறிச் செல்லும்போது அவ்விடுதியைக் கவனித்தேன். எல்லாம் சன்னல் துணிகளும் மூடியிருந்தன. கடைசியாக ஒரு கனவு மட்டும் ஞாபகம் இருந்தது. ஒரு பூச்சி சுவரில் ஊர்ந்து கொண்டிருந்தது. பிறகு அங்கிருந்த ஓர் அலமாரிக்குள் நுழைந்தது. மீண்டும் இன்னொரு பூச்சி சுவரிலிருந்து வெளியே வந்தது. அது குளியறைக்குள் நுழைந்தது. இப்படியே பூச்சிகள் அறை முழுவதும் சூழ்ந்து கடைசியாக என் பெருவிரலில் ஏறியது. கால்களை உதறிக் கொண்டு எழும்போது காலை மணி 6.25. அந்தக் கெட்டுப்போன உணவின் வாடை வீச்சம் அதிகரித்து வீசிக் கொண்டிருந்தது.

  • கே.பாலமுருகன்,  07 ஜூன் 2017

 

குறிப்பு: இப்பதிவில் இடப்பட்டிருக்கும் படங்கள் உண்மையானதல்ல; இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.

ஜெயமோகன் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம்- 2017

கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் கடந்த 2 ஜூன் தொடங்கி 4 ஜூன் வரை கூலிம் சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யம் மலைச்சாரல் ஆசிரமத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களும் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நவீன இலக்கியக் களம் நண்பர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலக்கியம், ஆன்மீகம், தத்துவம்,உளவியல், வாசிப்பு என்கிற வகையில் தொடர்ந்து கலந்துரையாடல், சந்திப்புகள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். அவ்வரிசையில் இவ்வாண்டும் நவீன இலக்கிய முகாம் இரண்டாவது முறையாகக் கூலிம் கெடாவில் நடைபெற்றுள்ளது. 91 பங்கேற்பாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

 

முதல் நாள் முகாமில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் நவீன தமிழ் சிறுகதைகள் பற்றி உரையாற்றினார். ஒரு சிறுகதைக்குரிய வடிவ ரீதியிலான கட்டமைப்புகள் தொடர்பாகவும் உலகின் சிறந்த சிறுகதைகளைக் கூறி அதன்வழி ஒரு சிறுகதை முடிவெனும் இடத்தில் எப்படி வாசக உள்ளீட்டை ஏற்படுத்துகிறது என விரிவான முறையில் பேசினார். முதல் அமர்வே வந்திருந்த வாசகர்கள், பங்கேற்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும். அடுத்த அமர்வில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் சங்க இலக்கியத்தில் வாழ்வியல் கூறுகள் எனும் தலைப்பில் பேசினார். நாஞ்சில் வட்டார வாழ்வியலை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு எழுத்துலகத்திற்குள் வந்த நாஞ்சில் நாடன் அவர்கள் சங்க இலக்கியத்தில் நன்கு தேர்ச்சியுடைய பேச்சாளராகவும் இருந்தார். வாழ்க்கையோடு மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் உரையாற்றினார்.

 

 

மாலை 7.00 மணிக்குப் பொது அமர்வு நடத்தப்பட்டது. கூலிம் வட்டார நண்பர்கள், எழுத்தாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இப்பொது அமர்வில் கலந்து கொண்டனர். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இலக்கியத்தின் பயன் மதிப்பு தொடர்பாக உரையாற்றினார். ஏன் இலக்கியம் அவசியம் என்கிற வகையில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது. இலக்கியத்தின் பயன் குறித்து தமிழ் சூழலில் மட்டும்தான் கேள்விகள் எழுந்த வண்ணமே இருப்பதாகவும், மற்ற மொழியிலோ இத்தகைய கேள்விகளுக்கு எந்த எழுத்தாளரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை எனக் கூறித்தான் அவருடைய மிகவும் ஆழமான உரையைத் தொடர்ந்தார்.  இரவில் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் இலக்கிய அவதாணிப்புகள் என்கிற தலைப்பில் கூர்ந்த கவனிப்பு, விவரிப்பு சிறுகதைகளில் எத்தனை அவசியம் என அவருடைய வாசிப்பனுபவத்தை முன்வைத்து பேசினார்.

 

மறுநாள் காலையில் இந்தியப் பண்பாட்டு சித்திரம் என்கிற தலைப்பில் ஜெயமோகன் அவர்களின் நண்பர் ராஜமாணிக்கம் அவர்கள் உரையாற்றினார். சிற்பக் கலைகள் பற்றிய விரிவான தேடலும் ஆய்வும் உள்ளடங்கிய பேச்சாக அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழின் இலக்கியமும் ஆன்மீக சிந்தனைமரபும் என்கிற தலைப்பில் மீண்டும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விரிவாகவும் தத்துவார்த்தமாகவும் இரண்டிற்கும் உள்ள தொடர்புகளையொட்டி பேசினார். பின்னர் காலை 11.30க்கு நாஞ்சில் நாடன் அவர்கள் நாட்டார் வாழ்வியல் உறவுகளும் உணவுகளும் என்கிற தலைப்பில் பேசினார். இவ்வமர்வு அனைவரையும் அவர்களின் தோட்டப்புற வாழ்க்கைக்குத் திரும்ப கொண்டு சென்றுவிட்டது எனப் பல பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

      

அன்றைய இரவில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழின் சிறந்த நாவல்கள் பற்றி உரையாற்றினார். முதலில் எது நாவல் என விளக்கிப் பேசும்போது பல கோணங்களில் நாவலை அணுகிப் பார்க்கும் திறனைப் பங்கேற்பாளர்கள் மத்தியில் உருவாக்கினார் என்றே சொல்ல வேண்டும். மேலும், தமிழில் அறியப்பட்டிருக்கும் முக்கியமான சில நாவல்கள் பற்றியும் பேசினார். இம்முகாமின் வழி பலவிதமான விவாதங்களினாலும் குழப்பங்களினாலும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எழுத்துக்கும் மத்தியில் விழுந்து கிடந்த இடைவெளி குறைக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

இம்முகாம் நவீன இலக்கியக் களத்தின் இரண்டாவது முயற்சி என்பதால் ஆரம்பத்திலிருந்தே இம்முகாம் குறித்த கலந்துரையாடல்கள், சந்திப்புகள், திட்டமிடல் நடந்து கொண்டே இருந்தன. பிரம்மாநந்த சுவாமி அவர்களின் வழிகாட்டலாலும் மலேசியாவில் இலக்கியத்திற்கு ஒரு களமாக இருந்து செயல்பட்டும் வருவதாலும் இம்முகாம் வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.

 

(குறிப்பு: முகாமில் பேசப்பட்ட உரைகள் விரைவில் காணொளி வடிவத்திலும் எழுத்து வடிவத்திலும் இத்தலத்தில் பகிரப்படும்)

எழுத்து: கே.பாலமுருகன்

நவீன இலக்கிய முகாம் 2: சில புகைப்படங்கள்