விமர்சனத்திற்கும் பின் நவீனத்துவத்திற்குமிடையே உள்ள தொடர்பின் அவசியங்கள் – (தொடர் 4)

அடுத்தத் தொடரில் இலக்கியத்தின் மொழிப்பயன்பாடு குறித்து உரையாடுவதற்கு முன்பாக

பின்நவீனம் என்றால் என்ன என்கிற தேடலைவிட பின்நவீனம் என்றால் இதுதான், இவ்வளவுத்தான் என்கிற அவசரமான முன்முடிவுகள் மலேசியச் சிந்தனைப்பரப்பில் நிலைத்துவிட்டது. நவீனத்துவத்தின் விளைவுகளால் உருவான ‘அதிகார மையங்கள்’, மெல்ல கண்டடையப்பட்ட பின் உருவான சிந்தனைமுறை என்கிற அளவில் பின்நவீனம் பற்றிய ஒரு தீவிரமான கலந்துரையாடல்கூட இங்குப் பரவலாக நிகழவில்லை என்பதுதான் நிதர்சனம்.

அவ்வகையில் விமர்சனம் பற்றி நாம் அக்கறையுடன் உரையாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் விமர்சனமுறையில் பின்நவீன சிந்தனை மிகவும் அவசியம் என்றே நினைக்கிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன் (2009ஆம் ஆண்டு) இங்கு உருவான பின்நவீன சர்ச்சையில் நானும் ஈடுப்பட்டிருந்தேன். ஆனால், அப்போதைய சூழலில் விவாதிக்க வேண்டும் என்கிற துடிப்பில் மட்டுமே ஆழ்ந்திருக்க நேர்ந்தது. அதன் பிறகு பின்நவீனம் குறித்த தீவிர வாசிப்பை மேற்கொண்டு கூடுதலான புரிதல் உருவான சமயங்களில் விவாதத்தில் ஆர்வமின்றி போயிற்று.

ஆகவே, விமர்சன சூழலுக்குப் பின்நவீனத்துவம் தொடர்பான சிந்தனை விரிவாக்கம் தேவைப்படும் பொருட்டு இங்குக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

 

எப்படி வெகு எளிமையாகப் பின்நவீனத்துவ சிந்தனையைப் புரிந்து கொள்ள முடியும்?

எடுத்துக்காட்டாகத் தாத்தா குடும்பத்தில் செய்து வரும் ஒரு பழக்கத்தை அப்பா எந்தக் கேள்வியும் எழுப்பாமல் செய்து வருகிறார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் கேட்டால் எந்தப் பதிலும் இருக்காது. எனக்கு முன் இருந்தவர்கள் செய்தார்கள்; ஆகவே, நானும் செய்கிறேன் என்கிற ஒரு பழமை போக்குத் தெரியும். ஏற்கனவே சமூகத்தில் கட்டமைக்கப்பட்டதை எவ்வித மாற்றமும் செய்யாமல் பின்பற்றுவதைக் காலத்திற்கேற்ற சிந்தனை புழக்கமற்ற ‘பழமைவாதம்’ எனச் சிந்தனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதையே, அப்பாவின் தம்பி தன் குடும்பத்தில் நவீன முறையில் அப்பழக்கத்தைப் பின்பற்றுகிறார் என்றால் அதை நவீனத்துவம் எனச் சொல்லலாம்.

 

தாத்தா அம்மை நோய் வந்தால் வேப்பிளையை வாசலில் கட்ட வேண்டும் ஒரு சிந்தனை கட்டமைக்கப்படுகிறது.
அப்பா அம்மை நோய் வந்தால் வேப்பிளையை வாசலில் கட்ட வேண்டும் எனச் சொல்கிறார். பின்பற்றப்படுதன்வழி அதுவொரு மரபாகின்றது.
சிற்றப்பா தன் வீட்டின் வாசலிலேயே ஒரு வேப்பிளை மரத்தை நடுகிறார். காலத்திற்கேற்ற முடிவுநவீனத்துவம்
நான் ஏன் வேப்பிளையை வாசலில் கட்ட வேண்டும் எனக் கேள்வி எழுப்புகிறேன். அதன் பதில்களை விவாதிக்கிறேன். தாத்தாவின் மரபியலை மறுக்காமல்; அதே சமயம் அதை அப்படியே ஏற்காமல் அதைப் பற்றிய ஓர் உரையாடலை உருவாக்குகிறேன். பின்நவீனத்துவம்சிந்தனை மாற்றம்

 

 

மேற்கண்ட பட்டியலைக் கொண்டு பின்நவீனத்துவத்தை அளவிடவோ அல்லது உரையாடவோ முடியாது என்பது தெரிந்ததுதான். ஆயினும், எளிய புரிதலுக்கு இதனைப் பகிர்ந்துள்ளேன். ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட மரபுகளைக் கேள்வி எழுப்பி அதைப் பற்றிய காலத்திற்கேற்ற புதிய சிந்தனையை அல்லது உரையாடலைத் துவக்கி வைக்கத் தூண்டும் வேலையைத்தான் பின்நவீனம் செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எதுவொன்று விடுதலை, புரட்சி, மாற்றம் என்கிறப் பெயரில் ஒடுக்கும் அதிகாரங்களாக மாறுகிறதோ அதைத்தான் பின்நவீனத்துவம் மறுக்கிறதே தவிர மரபை முற்றிலுமாக மறுக்கும் குணம் பின்நவீனத்துவச் சிந்தனைக்கு இல்லை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான், பௌத்த சிந்தனைக்கும் பின்நவீனத்துவத்திற்கும் பலவகைகளில் தத்துவார்த்த ஒற்றுமைகள் தோன்றுவதை உணர முடிகிறது. பௌத்தம் விடுதலைக்கான வாசல் ஆகாயத்தில் இல்லை; உன் உள்ளத்தில்தான் இருக்கிறது என்கிறது. அதையே பின்நவீனத்துவம் விடுதலை என்பதைக் கூட்டாகச் சேர்ந்து உருவாக்க முடியாது; முதலில் விடுதலை என்பது தனிமனிதனிடமிருந்து அவனைக் கட்டமைத்து வைத்திருக்கும் அடக்குமுறைகளையும் பழமைவாதங்களையும் நோக்கி உரையாடுவதன் வழி உருவாக வேண்டும் என்கிறது.

நவீனத்துவம் அனைத்தையுமே ஒரு நிறுவனமாக மாற்றி வைக்கிறது. விடுதலை, புரட்சி, பெண்ணியம், இலக்கியம், அரசியல், பண்பாடு என அனைத்தையுமே நவீனத்துவம் ஒரு குழுவாக/நிறுவனமாக அமைக்கிறது. பின்னர், அக்குழுவிற்கு, அவ்வமைப்பிற்குப் பொறுப்பேற்க ஓர் அதிகாரப் போராட்டத்தையும் உருவாக்கிவிடுகிறது. அதன்வழி மீண்டும் யாருக்குப் பதவி, யார் தலைவர் என்கிற மரபார்ந்த பழமைக்குள்ளே சிக்கி தன் முன்னெடுப்புகளைத் தொலைக்கின்றன. இதிலிருந்து மாறுப்பட்டு அதிகாரமாகும் நிறுவனமாகும் நவீனத்துவத்தின் அனைத்து விளைவுகளுக்கும் எதிராகப் பின்நவீனத்துவம் புதிய சிந்தனையைத் தோற்றுவிக்கிறது.

இலக்கியத்தை முன்வைத்து உருவாக வேண்டிய பின்நவீனத்துவ விமர்ன நிலை

எப்படி ஒரு சிறுகதையை அல்லது இலக்கியப் பிரதியைப் பின்நவீனத்துவ சிந்தனைமுறை கொண்டு விமர்சிக்க முடியும் என்பதைக் கவனிக்கலாம்.

“……..அப்பா அதட்டியதும் உடனே அம்மா அறைக்குள் நுழைந்தார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பேச்சும் இல்லை. அப்பாவின் எந்த முடிவுக்கும் பொறுப்பான குடும்பத் தலைவியாக அம்மா ஆமோதித்துவிடுவார்.”

ஒரு சிறுகதையில் மேற்கண்ட வரியை வாசிக்கும் ஒரு வாசகனுக்கு மூன்று நிலையிலான விமர்சன உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு.

ஆமாம், அப்பாத்தான் குடும்பத் தலைவர். சரியான கூற்று. ஏற்கனவே உள்ள ஆணாதிக்கத்தை ஏற்கும் பழமைவாத உணர்வு.
ஏன் அப்பாத்தான் முடிவெடுக்க வேண்டுமா? அம்மாவும் சேர்ந்து முடிவெடுக்கக்கூடாதா? இக்கூற்றைக் கொஞ்சம் வடிவமைக்க வேண்டும். நவீனத்துவ சிந்தனை –மரபைக் கொஞ்சம் வடிவமைத்துக் கொள்கிறது.
குடும்பங்களில் அதிகார சக்தியாக இருப்பது அப்பாத்தான். இது ஓர் ஆணாதிக்க சிந்தனையை வழியுறுத்தும் வரி என்பதால் இதனைக் கதையிலிருந்து முற்றிலுமாகத் தவிர்த்தல் வேண்டும். பின்நவீன விமர்சனப் பார்வை.

 

இதில் ஒரு வாசகன் எந்த நிலையிலிருந்து ஒரு சிறுகதையையும் அல்லது இலக்கியப் பிரதியையும் அணுகி தன் சிந்தனையையும் கருத்தையும் முன்வைக்கப் போகிறான் என்பதை ஆலோசித்துப் பார்க்க வேண்டும். இப்பகிர்வு வாசகனுக்குள் இலக்கியப் பிரதியைத் தாண்டிய பின் உருவாக வேண்டிய விமர்னப் போக்கின் மீது ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றிய ஒரு பார்வை மட்டுமே.

பின்நவீனத்துவம் என்கிற சொல் எதிரான ஒரு மனோநிலையை உருவாக்கிவிட்ட சூழலில் அது குறித்து இதைவிட இன்னும் ஆழமாக உரையாட வேண்டியுள்ளது. ‘சொப்பனசுந்தரியை யார் வைத்திருந்தார் எனக் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு’ நம்மை ஆட்கொண்டிருக்கும் வெள்ளைத்தான் அழகு, உயர்வு என்பதைப் போன்ற வெள்ளைமைய சிந்தனையிலிருந்தும், மேற்குல அறிவாளிகள்தான் சிறந்தவர்கள் என்கிற பின்காலனிய அடிமைப்புத்தியிலிருந்தும் விலகி நம் பண்பாட்டுக்குள்ளிருந்து நம் இலக்கியங்களுக்குள்ளிருந்து புதிய திறப்புகளை/புரிதல்களை நோக்கி சிந்திக்கத் துவங்க வேண்டும் என்கிற ஒரு நெருக்குதலை மட்டுமே பின்நவீன விமர்சனப் போக்கு வழங்குகிறது.

ஒரு பிரதியை வாசிக்கும்போது நாம் நமக்குள்ளே கேள்விக்கேட்டுக் கொள்ள வேண்டியது, இப்பிரதி ஏற்கனவே பலரால் சொல்லிச் சொல்லி சலித்த பழமையையே மீண்டும் பேசுகிறதா அல்லது அப்பழமைகள் குறித்து, மரபுகள் குறித்து விசாரணையை முன்வைக்கிறதா, மறுகண்டுபிடிப்பு செய்கிறதா என்பதுதான். அத்தகைய நிலையில் ஒரு வாசகனாக ஒரு வினர்சகனாக நாம் முன்னகர்ந்து வந்துள்ளோம் என்பதை அறிவிக்க முடியும்.

  • கே.பாலமுருகன்

(தொடரும்)