விசாரணை – குரலற்ற மனிதர்களின் மீதான வன்முறை

Visaranai-–-The-investigation-unveiling-on-Feb-5

மிக நீண்ட இடைவேளிக்குப் பிறகு மனத்தை அதிரவைத்த திரைப்படம். நம் மனத்தை ஒரு படம் உலுக்க முடிந்தால் அதைப் படம் என்பதா அல்லது நிஜம் என்பதா? அதிகாரம் எளிய மனிதர்களை உடல்/உள ரீதியில் வதை செய்யும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுகிறது. வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் மாபெரும் கதைச்சொல்லி என்பதில் சந்தேகம் இல்லை. திரையரங்கைவிட்டு ஒரு பெரிய கூட்டமே சத்தமில்லாமல் கனத்த மனத்துடன் வெளியே வந்ததை என் வாழ்நாளில் இன்று மட்டுமே அனுபவித்தேன்.

ஈவிரக்கமற்ற அமைப்பு தன் காலுக்கடியில் எத்தனையோ குரலற்ற குரல்வலைகளை மிதித்துக் கொண்டிருக்கும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களைப் பதிவு செய்ததில் வெற்றி மாறனின் குழுவிற்கும் இப்படத்தைத் தயாரித்த நடிகர் தனுஷ்க்கும் நிச்சயம் தமிழ்ச்சமூகம் வாழ்த்தைத் தெரிவிக்க வேண்டும். மிகைக்காகச் சொல்லவில்லை, ஆழ்மனம்வரை சென்று இப்படம் நமக்குள் இருக்கும் மனிதாபிமானத்தைக் கிளறுகிறது. ஒருவனின் உடலை ஆள்வதும் அவனுடைய மூளையை ஆள்வதும் அவனுடைய சுதந்திரத்தை ஆள்வதும் மூன்றுமே வன்முறைத்தான். யாருடைய சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் அதிகாரம் செலுத்த எந்தத் தரப்புக்கும் எந்தத் தனி மனிதனுக்கும் உரிமை இல்லை. ஆனால், அந்த உரிமை மீறப்படுவதுதான் சட்டத்தைக் காக்க வேண்டிய அமைப்புகளே அதிகாரத்திற்கு விலை போவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

பிழைப்பு தேடி நாடு விட்டு நாடு போய் எளீய வேலைகளைச் செய்து வாழும் தமிழர்களின் மீது எல்லாம் அமைப்புகளும், அதிகாரங்களும் அரசும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவே முற்படுகின்றன. தமிழன் என்றால் குற்றவாளியாக மட்டுமே இருக்கத் தகுதியுடையவனைப் போல அடித்தட்டு மனிதர்களைப் பொம்மைப் போல கையாளும் காவல்துறையின் அடாவடித்தனத்தை இப்படம் மிகவும் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளது. ஒரு தேசத்தில் அத்தேசத்தின் அரசு சார்புடைய அமைப்பான காவல்துறையின் மறுபக்கத்தை இத்தனை சுதந்திரமாகப் படம் செய்ய முடியும் என்றால் அந்நாடு கலைக்குக் கொடுக்கும் சுதந்திரம் கவனிக்கத்தக்கவையாகும். மலேசியாவிலெல்லாம் இத்தனை துணிச்சலுடன் படம் எடுத்துவிட முடியாது. கருத்து சுதந்திரம் என்பது இங்கு வரையறுப்பட்டவையாகும்.

dhanush-vettrimaran-to-unleash-visaranai-tomorrow

எம். சந்திரகுமார் அவர்களின் ‘லாக்கப்’ என்ற நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாதி சந்திரகுமாரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமாகும். இப்படத்தின் இரண்டாம் பாதி வெற்றி மாறனின் கதையாகும். இருவரும் தாங்கள் மிகச் சிறந்த கதைச்சொல்லிகள் என்பதை நிரூபித்துள்ளார்கள். முதல் பாதியிலிருந்து இருந்த பரப்பரப்பு இரண்டாம் பாதியில் மேலும் கூடுவதுதான் திரைக்கதையின் பலம். பாடல் காட்சிகள் இல்லை; கதாநாயகி அலட்டல் இல்லை; கதாநாயகத்துவம் இல்லை; எரிச்சல் ஊட்டும் பன்ச் வசனங்கள் இல்லை. இது படமே இல்லை; நிஜம்; நிஜத்தின் அப்பட்டமான உருவாக்கம்.

ஆடுகளம் படத்தைவிட ஒரு படி மேலேறி நிற்கும் இப்படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பத்து வயதிற்குக் குறைவான சிறுவர்களை இப்படத்திற்கு அழைத்துப் போக வேண்டாம் என இயக்குனரே கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள். நமது கெட்டித்தட்டிப் போன மனசாட்சியை ஒரு கணம் அசைத்து மௌனமாக்குகிறது.

– கே.பாலமுருகன்