பீப் பாடல் பற்றி நடிகர் சிம்புவுடன் ஒரு நேர்காணல்

(இது முழுமைப்பெற்ற நேர்காணல் கிடையாது. எழுதிக் கொண்டிருக்கும்போதே யாரோ திருடி வெளியிட்டது)

கபாளி: வணக்கம் சிம்பு. தற்சமயம் நீங்கள் பீப் பாடல் குறித்த சர்ச்சையில் சிக்கி சின்னாம்பின்னமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

05-1423135990-silambarasan-still-from-idhu-namma-aalu-movie-140592333990

சிம்பு: ம்ம்ம் எனக்கு இது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். தூய வடிவமான இதற்கு முந்தைய தமிழ் சினிமாவின் புனிதங்களையும் தூய்மையே வடிவமான இந்தத் தமிழ் சமூகத்தையும் என் பீப் பாடல் ஒன்று சேதப்படுத்தியிருப்பதை அறிகிறேன். அதற்காக வருந்தவும் செய்கிறேன்.

கபாளி: உங்களின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு ஓர் அழிவையும் இழிவையும் தேடித் தந்துவிட்டதாக நிறைய சக நடிகர்கள் விமர்சிக்கிறார்களே?

சிம்பு: அது முற்றிலும் உண்மை. கடந்த பத்து வருடங்களில் 150% மிகவும் உன்னதமான போக்கில் போய்க்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் கட்டமைப்பு எனது பீப் பாடலால் பெரிதும் சிதைவிற்குள்ளாகியிருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை.

கபாளி: ஆமாம், உண்மையே சந்தானம் போன்ற தமிழ் நகைச்சுவை நடிகரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிம்பு: அவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பே உண்டு. குறிப்பாகத் தமிழ் சினிமாவின் வசனப் புனிதங்களைத் தொடர்ந்து பாதுகாத்து வருவதில் திருவள்ளுவருக்கு இணையாகத் தமிழ்ச் சமூகம் அவரைப் பாராட்டி வருவதை அறிகிறேன்.

கபாளி: ரெண்டு என்ற படத்தில் அவர் பேசிய வசனம்கூட பிரசித்திப் பெற்றவையாயிற்றே?

சிம்பு: ஆமாம். அப்படத்தில் அவர் ஒரு வசனத்தைச் சொல்வார். ‘அத்தைக்கு அட்டைப் போயிருச்சி மாமாவுக்குக் (பீப்) போயிருச்சி” எனச் சொல்லாமல் சொல்லி அந்த ஒரு வார்த்தையின் சந்தத்தில் தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய உன்னதமான ஓர் உணர்வை விதைத்திருக்கிறார். அதற்கு ஒரு விழாவே எடுத்திருக்க வேண்டும்.

கபாளி: ஆகையால்தான், உங்கள் பீப் பாடலுக்குச் செருப்படி தருவதற்குத் தயாராக இருந்த மாதர் சங்கங்கள் இதுநாள் வரை சந்தானத்தின் இரட்டை அர்த்த வசனங்களுக்குக் கொதித்து எழாமல் அமைதி காத்து வந்திருப்பது தெரிகிறது.

சிம்பு: ஆமாங்க. சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘நானும் ரௌடித்தான்’ படத்தில் உள்ள வசனங்கள் யாவும் சங்க இலக்கியத்தின் தரத்திற்கு இருப்பதால் கைத்தட்டி சிரித்துவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். அதுவும் குறிப்பாக ‘நான் அவனைப் போடுவேன், நீ இவளைப் …..” அப்படி அந்தக் கணம் அதனைப் பீப் செய்து 100 நாள் ஓடி தமிழ்ச் சமூகத்தில் எந்த அதிர்வலையையும் உருவாக்காமல் வெற்றிப் பெற்றுவிடுகிறது நானும் ரௌடித்தான்.

கபாளி: நீங்கள் பீப் செய்ததற்கு அவர்கள் பீப் செய்யாமல் இரட்டை அர்த்ததுடன் ஆபாசம் பேசுவதற்கும் என்ன வித்தியாசம் சிம்பு?

சிம்பு: ஐயோ என்னாங்க பேசுறீங்க? அது இரட்டை அர்த்தம் கொண்ட வசனம். மறைக்கப்படும் இடத்தில் ஓர் ஆன்மீகமே இருக்குங்க. சந்தானம், எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி எல்லோரும் ஆன்மீகவாதிகள். ஒழுக்கத்தை மட்டுமே பேணிக் காத்து வந்த தமிழ்ச் சமூகத்தின் போற்றுதலிலேயே வளர்ந்து தடித்தவர்கள். அவர்களின் மீது குற்றம் சாட்டலாமா?

கபாளி: ஆமாம். மும்தாஜ் விஜய் ஆடிய கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாலா கண்டப்படி கட்டிபிடிடா’ பாடலுக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லையே?

சிம்பு: என்னங்க பேசுறீங்க? அது சாமி பாட்டுங்க. அதை எப்படிக் கண்டிக்க முடியும்? உங்களுக்குக் கொஞ்சம் கூட இதற்கு முன் இருந்த தமிழ் சினிமாவின் புனிதம் குறித்துத் தெரியவில்லையே?

கபாளி: மன்னிக்கவும் சிம்பு. அப்பாடலைச் சமூகம் இரகசியமாக அங்கீகரித்து நான்கு அறைக்குள் இரசித்துத் தொலைந்ததை நான் அறியாமல் இருந்துவிட்டேன். அப்படியென்றால் நீங்கள் பீப் பாடல் எழுதியதையொட்டி யாரைத்தான் குற்றம் சுமத்த வேண்டும்?

சிம்பு: சுகன்யாவின் தொப்புளில் விஜயகாந்த் பம்பரத்தை விட்டப்போது அக்காட்சி தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சிறியவர்களைப் பாதிக்கவில்லை என உறுதியளிக்க முடியுமா? அல்லது அக்காட்சி பெண்களின் தொப்புள்கொடி உறவைக் கேவலப்படுத்துவதாக யாரும் உணரவில்லை எனச் சொல்ல முடியுமா? அல்லது மலேசியாவிற்குப் பேட்டிக் கொடுக்க வந்த விக்ரம் தன் படத்திலுள்ள ‘மியாவ் மியாவ் பூனை’ என்கிற பாடல் (நிற்க, இப்பாடலில் சிரேயா துண்டைக் கட்டிக் கொண்டு ஆடுவார்) குழந்தைகளுக்கான பாடல் எனச் சொல்லும்போது அவரை நேர்காணல் கண்டவர் அப்பாவியாய் தலையாட்டும்போது இச்சமூகம் விழித்திருக்க வேண்டும் அல்லவா?

கபாளி: இது உங்களை நியாயப்படுத்துதைப் போல இருக்கிறதே சிம்பு?

சிம்பு: நான் என்னை நியாயப்படுத்தவில்லைங்க. இத்தனை காலம் புனிதமான போக்குடன் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவின் அலையைத் திசைத்திருப்பிவிட்ட குற்றவாளி என்றே சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

கபாளி: சொல்லுங்க சிம்பு. அடுத்து தமிழ் வசனங்களின் வழியாக எப்படி ஆபாசத்தைத் தூண்டும் சொற்களை ஒளித்து வைப்பது பற்றி சந்தானம் பேச வருகிறார். சீக்கிரம் சொல்லிவிடுங்கள்.

சிம்பு: பீப் பாடல் என்பதன் மூலம் நான் சிறுநீர்தான் கழித்திருக்கிறேன். ஆனால், நான் சிறுநீர் கழித்தது தங்கத் தட்டில் இல்லை; சாக்கடையில்தான் எனச் சொல்லிக் கொண்டு விடைப்பெறுகிறேன். நன்றி.

(குறிப்பு; சிம்பு எனும் அப்பெயரை இன்றைய தமிழ் சினிமாவின் கண்டிக்கத்தக்க ஒரு போக்காக மாற்றிக்கொள்ளவும். இந்தப் புனைவில் சிம்பு நேர்காணல் செய்யப்படவில்லை. ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் பார்ப்பவனைச் சினிமா தனது கமர்சியல் போக்கால் முட்டாளாக்கிக் கொண்டிருப்பதை எல்லோரும் உணர வேண்டும். சிம்புவின் பீப் பாடல் ஒன்றைக் கொண்டு குதித்து ஆர்பாட்டம் செய்யும் நாம் இதைவிட மோசமான கருத்தியல் ரீதியில் ஆபத்தான எத்தனையோ விசயங்கள் அடங்கிய தமிழ் சினிமாக்களை நம் வீட்டினுள்ளே விட்டுவிட்டோம்.)

– எல்லாம் சினிமாவும் குழைந்தைகளைப் பாதிக்கும் எனப் பயப்படுவது அபத்தமாகும். நம்மைத் தாண்டி எந்தச் சினிமாவும் சிறுவர்களை அடைய வாய்ப்பில்லை.

– கெட்ட வார்த்தை மட்டும்தான் நம் சிந்தனையைப் பாதிக்கிறதா? எதையுமே சிந்திக்க விடாமல் நம்மை முட்டாளாக்கும் சினிமா அதைவிட ஆபத்தானது என்பதைக் கருத்தில் கொண்டு சமூக அக்கறைமிக்க சினிமா உருவாவதை இனி கவனப்படுத்த வேண்டும்.

ஜகாட் திரைப்படம் – புத்தகப் பரிசினை வெல்லும் வெற்றியாளர் – 1

ஜகாட் திரைபடத்திற்கான புத்தகப் போட்டியில் பங்குப் பெற்று நூல்களைப் பெறவிருக்கும் ச.நாகேன் தோழரின் கருத்து:

1870 மலாயாவிற்க்கு இந்தியர்கள் சஞ்சி கூலிகளாக வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதையச் சூழலில் சாதி கொடுமைகளால் இனத்துக்குள்ளேயே பிளவுபட்டுக் கிடந்த இந்தியர்களுக்கு ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பின்னடைவான காலம் அது. 1930 இரப்பர் தோட்டங்கள் தோன்றியப் பின்னரும் கூட சாதி வாரியாக வீடுகள் பிரிக்கப்பட்டு வேலைகளும் வழங்கப்பட்டன. சாதி கொடுமைகளுக்கு அப்பாற்ப்பட்டு, ஒரளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் 1980களின் இறுதிகளில் பெரும்பான்மையான இரப்பர் தோட்டங்கள் தூண்டாடுதலுக்கு பலியாகின, இக்காலட்டத்தில்தான் இந்தியர்களின் நிலை ஒரு இருண்ட பகுதியானது. அதைத்தான் ஜகாட் திரைபடத்தில் காட்டப்படுகிறது. நகரமுன்னோடிகளாக (தனா ஹாரம்) மறுபிரவேசம் பெற்றனர். தொழில், கல்வி, சுகாதாரம், வழிபாட்டு தாளங்கள் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் இந்த தனா ஹாரம் வாழ்க்கையில் மறுக்கபட்டு, வாழ்க்கையை நகர்த்துவதே நரகவேதனையானக் காலக்கட்டம்.

10523157_10204046588145095_5599896183013882887_n

ச.நாகேன், சோஷலிஸ்ட் கட்சியில் தீவிரமான ஈடுபாடு கொண்ட இளைஞர். மலேசியாவின் படைப்புகளை ஆதரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
முயற்சி செய்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள். மலேசியாவின் இருண்ட காலத்தை அறிவிக்கும் ஜகாட் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட்டீர்களா? உடனே சென்று பாருங்கள். உள்ளூர் படைப்புக்கு நாம் ஆதரவு கொடுப்பதன் மூலம் நம் கலையை நாம் வாழ வைக்க முடியும். போட்டிக்கான கேள்விகள் நாளையும் தொடரும்.

கே.பாலமுருகன்