மழைச்சாரல் இலக்கியக் குழுவின் நல்ல முயற்சி

 

கவிஞரும் எழுத்தாளருமாகிய தோழி மீராவாணி அவர்களின் முயற்சியில் உருவானதுதான் ‘மழைச்சாரல்’ இலக்கிய வட்டம். இதுவரை வாட்சாப் மூலம் செயல்பட்டுக் கொண்டிருந்த அக்குழவின் முதல் இலக்கிய முயற்சித்தான் 27.12.2015 அன்று கோலாம்பூரில் நடந்த எழுத்தாளர்களுடனான இலக்கியக் கலந்துரையாடல் ஆகும்.

IMG-20151228-WA0012

 

மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் திரு.மன்னர் மன்னன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நாட்டின் மூத்த எழுத்தாளர்கள், இளம் எழுத்தாளர்கள், வாசகர்கள் எனப் பலர் கலந்து கொண்டதாக மீராவாணி தெரிவித்தார். சிங்கப்பூரின் இலக்கிய சூழலில் சித்ரா ரமேஸ் அவர்களின் தலைமையில்  இயங்கி வரும் சிங்கப்பூர் வாசகர் வட்டம், பாலுமணிமாறன் அவர்களின் மூலம் செயல்பட்டு வரும் தங்கமீன் வாசகர் வட்டம் போன்றவை அங்குள்ள இலக்கிய முயற்சிகளை நகர்த்தக்கூடியதாகும். அந்த வகையில் மழைச்சாரல் மலேசியாவில் உருவாகியிருப்பது மகிழ்ச்சியாகும்.

IMG-20151228-WA0011

தொடர்ந்து மலேசிய இலக்கியத்தையும் அதன் செயல்பாடுகளையும் கவனித்து வரும் பலர் இக்குழுவில் இருப்பதால் இதற்கு முன்பு இயக்கங்கள் செய்தவற்றையே முன்னெடுக்காமல் படைப்புத் தரத்தை உயர்த்தும் விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து உலக இலக்கிய வளர்ச்சியை அறிந்தவர்களாக மலேசிய இளம் படைப்பாளர்கள் திகழ வேண்டும் என்பதனைக் கருத்தில் கொண்டு தொடர்ந்து செயல்பட வேண்டும் என்பதே என் எதிர்ப்பார்ப்பு.

IMG-20151228-WA0008

மேலும் இந்த நிகழ்ச்சியில் நயனம் இதழாசிரியர் ஆதி.ராஜகுமாரன் அவர்களைப் பற்றி பிற எழுத்தாளர்கள் எழுதிய தொகுப்பும் வெளியீடு கண்டது. அந்த நூலில் அவரைப் பற்றி நான் எழுதிய கட்டுரை பின்வருமாறு:

 

நயனத்தின் ஊடாக நான் அறிந்த ஆதி.ராஜகுமாரன்

பொதுபுத்திக்குத் தெரியாத இதழியல் ஆளுமை

 

எனக்கு 14வயது இருக்கும். அப்பொழுது நான் இரண்டாம் படிவத்தில் படித்துக் கொண்டிருந்தேன். சுங்கை பட்டாணி பழைய முத்தையா கடையின் தள்ளு வண்டிக்கு மேலாகத் தொங்கிக் கொண்டிருந்தது நயனம். அப்பாவுடன் மோட்டாரில் போயிருந்தபோது அதில் இருந்த பாரதியார் படம் போட்ட நயனம் சட்டென என் கவனத்தை ஈர்த்தது. உடனே வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்ற நாளிலிருந்து நயனம் இதழின் அதிகாரப்பூர்வமான வாசகனானேன்.

அப்பொழுதிலிருந்து தொடர்ந்து ஐந்தாம் படிவம் வரை நான் ஷோபி எழுதிக் கொண்டிருந்த ‘உண்மை கதை’ தொடரை விடாமல் வாசிக்கத் தொடங்கினேன். அத்தொடரை வாசிக்கவே சைக்கிளில் சுங்கை பட்டாணிக்குச் சென்று நயனம் வாங்கத் துவங்கினேன். அப்பொழுதுதான் ஆதி.ராஜகுமாரனின் படைப்புகளும் எனக்கு அறிமுகமாயின. அதன் பிறகு எனது 24ஆவது வயதுவரை நான் நயனத்தை வாசிக்கவில்லை. மீண்டும் வாசிக்கத் துவங்கியபோது நயனம் பத்திரிகையைப் போல வரத் துவங்கியிருந்தன. என்னால் நயனம் வேறு ராஜகுமாரன் ஐயா வேறு என இன்றளவும் பிரித்து அறிய முடியவில்லை. ஒரு வகையில் எனது பதின்ம வயதில் உருவான வாசிப்பு சார்ந்த தகிப்பிற்கு நயனமும் ஆதி ராஜகுமாரன் அவர்களும் காரணமாக இருந்திருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

சில காத்திற்குப் பிறகு நான் நயனத்தில் சினிமா விமர்சனம் எழுதத் துவங்கிய காலத்தில் நானும் நாஜகுமாரன் ஐயாவும் மின்னஞ்சலின் வழி உரையாடிக் கொள்வோம். எங்களுக்கிடையில் மின்னஞ்சல் உரையாடல் ஒவ்வொரு கணமும் தீவிரம் அடைந்தது. எனது அனைத்து சினிமா விமர்சனக் கட்டுரைகளையும் அக்கறையுடன் ஒரு முழு பக்கத்தில் பிரசுரம் செய்து வந்தார். எவ்வளவு தாமதமாகப் படைப்பு அனுப்பினாலும் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்காமல் அதே அக்கறையுடன் படைப்புகளைப் பிரசுரித்து வந்தார். மலேசியாவில் சினிமாவின் மீது இத்தனை ஆழமான விமர்சனத்தை நீங்கள் மட்டுமே எழுதுகிறீர்கள் என அவர் அடையாளப்படுத்தியது எனக்குப் பெருமையாக இருந்தது. அதன் வழியே ஆதி ராஜகுமாரன் அவர்கள் நயனம் என்கிற ஜனரஞ்சகமான இதழை நடத்தி வந்தாலும் இலக்கியத்தின் மீது தீவிர புரிதல் உடையவர் என்றும் விளங்கிக் கொண்டேன். அதற்கு முன்பும் அவர் தீவிரமான இலக்கியத்தைப் புரிந்து கொள்வாரா என்ற தயக்கம் அப்பொழுது அகன்றது. ஒருவேளை நயனம் இதழ் ஆசிரியராக மட்டுமே பொதுபுத்தியால் அறியப்பட்ட ஆதி.ராஜகுமார்ன் ஐயா அவர்களுக்குள் இருக்கும் தீவிர இலக்கியத்தின் மீதான ஈடுபாடு அறிய முடிந்திருக்குமா என்பது கேள்விக்குறித்தான். நாம் உரையாடாதவரை ஒருவரை ஆழமாக உள்வாங்கிக் கொள்ள இயலாது.

அவ்வகையில் எனக்கும் அவருக்குமான உறவின் சாத்தியம் எனது அடுத்தகட்ட புரிதலிலிருந்து மேலும் நெருக்கமானது. நெருக்கம் என்றால் கோலாலம்பூர் வந்தால் அலைப்பேசியின் வழி உரையாடி சந்தித்துக் கொள்ளும் நெருக்கம் அல்ல. என் படைப்பை அவர் வாசிப்பதன் மூலம் என் மேல் அவர் கொள்ளும் நம்பிக்கையின் வேரிலிருந்து உருவாகும் நெருக்கமாகும்.

கடந்த மே மாதம் என் இரு நாவல்களைக் கோலாலம்பூரில் வெளியிட்டிருந்தேன். ஆட்கள் குறைவாகத்தான் வந்தார்கள். ஆனால், வந்தவர்கள் அனைவரும் எழுத்தாளர்களாகவும் வாசகர்களாகவும் இருந்தனர். ஆனால், என்னைப் பெரிதும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது முன்வரிசையில் வந்து அமர்ந்து நிகழ்ச்சியின் இறுதிவரை இருந்து எனக்கு ஆதரவாக இருந்த ஐயா ஆதி.ராஜகுமாரன் அவர்களின் அன்றைய வருகையே. சட்டென எங்களுக்கு மத்தியிலான உறவுக்கு அதுவே சாட்சியைப் போல அமைந்தது. பெரும்பாலும் உறவுகளைத் தக்க வைத்துக் கொள்வதில் நான் கொஞ்சம் பலவீனமானவன். ஆனால், நானும் ராஜகுமாரன் ஐயாவும் அதிகம் பேசியதில்லை. பேசாமலே ஓர் உறவை நெருங்கச் செய்ய முடியும் என்றால் அது படைப்பாளிக்கும் வாசகனுக்கும் மத்தியில் உருவாகும் சொல்ல முடியாத நூலிழை புரிதலே.

அந்த மண்டபத்தில் தன்னை எப்பொழுதும் கொண்டாடிக் கொள்ளாத ஓர் இதழியல் துறை ஆளுமையாக ஐயா ஆதி.ராஜகுமாரன் அவர்கள் எனக்குத் தெரிந்தார். எளிமையான சிரிப்புடன் சட்டென நிகழ்ச்சி முடிந்ததும் அவர் சென்றுவிட்டார். தேடினேன்; பிறகு புரிந்து கொண்டேன், இதுதான் ஆதி.ராஜகுமாரன் என்று.

  • கே.பாலமுருகன்

பீப் பாடல் பற்றி நடிகர் சிம்புவுடன் ஒரு நேர்காணல்

(இது முழுமைப்பெற்ற நேர்காணல் கிடையாது. எழுதிக் கொண்டிருக்கும்போதே யாரோ திருடி வெளியிட்டது)

கபாளி: வணக்கம் சிம்பு. தற்சமயம் நீங்கள் பீப் பாடல் குறித்த சர்ச்சையில் சிக்கி சின்னாம்பின்னமாக்கப்பட்டுக் கொண்டிருப்பதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

05-1423135990-silambarasan-still-from-idhu-namma-aalu-movie-140592333990

சிம்பு: ம்ம்ம் எனக்கு இது மிகவும் பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் இருப்பதை இங்கே பதிவு செய்து கொள்கிறேன். தூய வடிவமான இதற்கு முந்தைய தமிழ் சினிமாவின் புனிதங்களையும் தூய்மையே வடிவமான இந்தத் தமிழ் சமூகத்தையும் என் பீப் பாடல் ஒன்று சேதப்படுத்தியிருப்பதை அறிகிறேன். அதற்காக வருந்தவும் செய்கிறேன்.

கபாளி: உங்களின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு ஓர் அழிவையும் இழிவையும் தேடித் தந்துவிட்டதாக நிறைய சக நடிகர்கள் விமர்சிக்கிறார்களே?

சிம்பு: அது முற்றிலும் உண்மை. கடந்த பத்து வருடங்களில் 150% மிகவும் உன்னதமான போக்கில் போய்க்கொண்டிருந்த தமிழ் சினிமாவின் கட்டமைப்பு எனது பீப் பாடலால் பெரிதும் சிதைவிற்குள்ளாகியிருப்பதை என்னால் மறுக்க முடியவில்லை.

கபாளி: ஆமாம், உண்மையே சந்தானம் போன்ற தமிழ் நகைச்சுவை நடிகரைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சிம்பு: அவருக்கு ஒரு மிகப்பெரிய வரவேற்பே உண்டு. குறிப்பாகத் தமிழ் சினிமாவின் வசனப் புனிதங்களைத் தொடர்ந்து பாதுகாத்து வருவதில் திருவள்ளுவருக்கு இணையாகத் தமிழ்ச் சமூகம் அவரைப் பாராட்டி வருவதை அறிகிறேன்.

கபாளி: ரெண்டு என்ற படத்தில் அவர் பேசிய வசனம்கூட பிரசித்திப் பெற்றவையாயிற்றே?

சிம்பு: ஆமாம். அப்படத்தில் அவர் ஒரு வசனத்தைச் சொல்வார். ‘அத்தைக்கு அட்டைப் போயிருச்சி மாமாவுக்குக் (பீப்) போயிருச்சி” எனச் சொல்லாமல் சொல்லி அந்த ஒரு வார்த்தையின் சந்தத்தில் தமிழ்ச் சமூகத்தின் மிகப்பெரிய உன்னதமான ஓர் உணர்வை விதைத்திருக்கிறார். அதற்கு ஒரு விழாவே எடுத்திருக்க வேண்டும்.

கபாளி: ஆகையால்தான், உங்கள் பீப் பாடலுக்குச் செருப்படி தருவதற்குத் தயாராக இருந்த மாதர் சங்கங்கள் இதுநாள் வரை சந்தானத்தின் இரட்டை அர்த்த வசனங்களுக்குக் கொதித்து எழாமல் அமைதி காத்து வந்திருப்பது தெரிகிறது.

சிம்பு: ஆமாங்க. சமீபத்தில் மிகப்பெரிய வெற்றிப் பெற்ற ‘நானும் ரௌடித்தான்’ படத்தில் உள்ள வசனங்கள் யாவும் சங்க இலக்கியத்தின் தரத்திற்கு இருப்பதால் கைத்தட்டி சிரித்துவிட்டு வெளியேறிவிடுகிறார்கள். அதுவும் குறிப்பாக ‘நான் அவனைப் போடுவேன், நீ இவளைப் …..” அப்படி அந்தக் கணம் அதனைப் பீப் செய்து 100 நாள் ஓடி தமிழ்ச் சமூகத்தில் எந்த அதிர்வலையையும் உருவாக்காமல் வெற்றிப் பெற்றுவிடுகிறது நானும் ரௌடித்தான்.

கபாளி: நீங்கள் பீப் செய்ததற்கு அவர்கள் பீப் செய்யாமல் இரட்டை அர்த்ததுடன் ஆபாசம் பேசுவதற்கும் என்ன வித்தியாசம் சிம்பு?

சிம்பு: ஐயோ என்னாங்க பேசுறீங்க? அது இரட்டை அர்த்தம் கொண்ட வசனம். மறைக்கப்படும் இடத்தில் ஓர் ஆன்மீகமே இருக்குங்க. சந்தானம், எஸ்.எஸ்.சந்திரன், வெண்ணிற ஆடை மூர்த்தி எல்லோரும் ஆன்மீகவாதிகள். ஒழுக்கத்தை மட்டுமே பேணிக் காத்து வந்த தமிழ்ச் சமூகத்தின் போற்றுதலிலேயே வளர்ந்து தடித்தவர்கள். அவர்களின் மீது குற்றம் சாட்டலாமா?

கபாளி: ஆமாம். மும்தாஜ் விஜய் ஆடிய கட்டிப்பிடி கட்டிப்பிடிடா கண்ணாலா கண்டப்படி கட்டிபிடிடா’ பாடலுக்கு எந்த எதிர்ப்பும் வரவில்லையே?

சிம்பு: என்னங்க பேசுறீங்க? அது சாமி பாட்டுங்க. அதை எப்படிக் கண்டிக்க முடியும்? உங்களுக்குக் கொஞ்சம் கூட இதற்கு முன் இருந்த தமிழ் சினிமாவின் புனிதம் குறித்துத் தெரியவில்லையே?

கபாளி: மன்னிக்கவும் சிம்பு. அப்பாடலைச் சமூகம் இரகசியமாக அங்கீகரித்து நான்கு அறைக்குள் இரசித்துத் தொலைந்ததை நான் அறியாமல் இருந்துவிட்டேன். அப்படியென்றால் நீங்கள் பீப் பாடல் எழுதியதையொட்டி யாரைத்தான் குற்றம் சுமத்த வேண்டும்?

சிம்பு: சுகன்யாவின் தொப்புளில் விஜயகாந்த் பம்பரத்தை விட்டப்போது அக்காட்சி தமிழ் சமூகத்தைச் சேர்ந்த சிறியவர்களைப் பாதிக்கவில்லை என உறுதியளிக்க முடியுமா? அல்லது அக்காட்சி பெண்களின் தொப்புள்கொடி உறவைக் கேவலப்படுத்துவதாக யாரும் உணரவில்லை எனச் சொல்ல முடியுமா? அல்லது மலேசியாவிற்குப் பேட்டிக் கொடுக்க வந்த விக்ரம் தன் படத்திலுள்ள ‘மியாவ் மியாவ் பூனை’ என்கிற பாடல் (நிற்க, இப்பாடலில் சிரேயா துண்டைக் கட்டிக் கொண்டு ஆடுவார்) குழந்தைகளுக்கான பாடல் எனச் சொல்லும்போது அவரை நேர்காணல் கண்டவர் அப்பாவியாய் தலையாட்டும்போது இச்சமூகம் விழித்திருக்க வேண்டும் அல்லவா?

கபாளி: இது உங்களை நியாயப்படுத்துதைப் போல இருக்கிறதே சிம்பு?

சிம்பு: நான் என்னை நியாயப்படுத்தவில்லைங்க. இத்தனை காலம் புனிதமான போக்குடன் சென்று கொண்டிருந்த தமிழ் சினிமாவின் அலையைத் திசைத்திருப்பிவிட்ட குற்றவாளி என்றே சொல்லிக்கொள்ளுங்கள். ஆனால், கடைசியாக ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன்.

கபாளி: சொல்லுங்க சிம்பு. அடுத்து தமிழ் வசனங்களின் வழியாக எப்படி ஆபாசத்தைத் தூண்டும் சொற்களை ஒளித்து வைப்பது பற்றி சந்தானம் பேச வருகிறார். சீக்கிரம் சொல்லிவிடுங்கள்.

சிம்பு: பீப் பாடல் என்பதன் மூலம் நான் சிறுநீர்தான் கழித்திருக்கிறேன். ஆனால், நான் சிறுநீர் கழித்தது தங்கத் தட்டில் இல்லை; சாக்கடையில்தான் எனச் சொல்லிக் கொண்டு விடைப்பெறுகிறேன். நன்றி.

(குறிப்பு; சிம்பு எனும் அப்பெயரை இன்றைய தமிழ் சினிமாவின் கண்டிக்கத்தக்க ஒரு போக்காக மாற்றிக்கொள்ளவும். இந்தப் புனைவில் சிம்பு நேர்காணல் செய்யப்படவில்லை. ஒவ்வொரு காலக்கட்டங்களிலும் பார்ப்பவனைச் சினிமா தனது கமர்சியல் போக்கால் முட்டாளாக்கிக் கொண்டிருப்பதை எல்லோரும் உணர வேண்டும். சிம்புவின் பீப் பாடல் ஒன்றைக் கொண்டு குதித்து ஆர்பாட்டம் செய்யும் நாம் இதைவிட மோசமான கருத்தியல் ரீதியில் ஆபத்தான எத்தனையோ விசயங்கள் அடங்கிய தமிழ் சினிமாக்களை நம் வீட்டினுள்ளே விட்டுவிட்டோம்.)

– எல்லாம் சினிமாவும் குழைந்தைகளைப் பாதிக்கும் எனப் பயப்படுவது அபத்தமாகும். நம்மைத் தாண்டி எந்தச் சினிமாவும் சிறுவர்களை அடைய வாய்ப்பில்லை.

– கெட்ட வார்த்தை மட்டும்தான் நம் சிந்தனையைப் பாதிக்கிறதா? எதையுமே சிந்திக்க விடாமல் நம்மை முட்டாளாக்கும் சினிமா அதைவிட ஆபத்தானது என்பதைக் கருத்தில் கொண்டு சமூக அக்கறைமிக்க சினிமா உருவாவதை இனி கவனப்படுத்த வேண்டும்.

ஜகாட் திரைப்படம் – புத்தகப் பரிசினை வெல்லும் வெற்றியாளர் – 1

ஜகாட் திரைபடத்திற்கான புத்தகப் போட்டியில் பங்குப் பெற்று நூல்களைப் பெறவிருக்கும் ச.நாகேன் தோழரின் கருத்து:

1870 மலாயாவிற்க்கு இந்தியர்கள் சஞ்சி கூலிகளாக வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போதையச் சூழலில் சாதி கொடுமைகளால் இனத்துக்குள்ளேயே பிளவுபட்டுக் கிடந்த இந்தியர்களுக்கு ஆட்சியாளர்களால் ஏற்படுத்தப்பட்ட பின்னடைவான காலம் அது. 1930 இரப்பர் தோட்டங்கள் தோன்றியப் பின்னரும் கூட சாதி வாரியாக வீடுகள் பிரிக்கப்பட்டு வேலைகளும் வழங்கப்பட்டன. சாதி கொடுமைகளுக்கு அப்பாற்ப்பட்டு, ஒரளவு நல்ல வாழ்க்கை வாழ்ந்தனர். சுதந்திரத்துக்குப் பின்னர் 1980களின் இறுதிகளில் பெரும்பான்மையான இரப்பர் தோட்டங்கள் தூண்டாடுதலுக்கு பலியாகின, இக்காலட்டத்தில்தான் இந்தியர்களின் நிலை ஒரு இருண்ட பகுதியானது. அதைத்தான் ஜகாட் திரைபடத்தில் காட்டப்படுகிறது. நகரமுன்னோடிகளாக (தனா ஹாரம்) மறுபிரவேசம் பெற்றனர். தொழில், கல்வி, சுகாதாரம், வழிபாட்டு தாளங்கள் மற்றும் விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படை வசதிகள் இந்த தனா ஹாரம் வாழ்க்கையில் மறுக்கபட்டு, வாழ்க்கையை நகர்த்துவதே நரகவேதனையானக் காலக்கட்டம்.

10523157_10204046588145095_5599896183013882887_n

ச.நாகேன், சோஷலிஸ்ட் கட்சியில் தீவிரமான ஈடுபாடு கொண்ட இளைஞர். மலேசியாவின் படைப்புகளை ஆதரிப்பதில் தீவிரம் காட்டி வருகிறார்.
முயற்சி செய்த மற்ற நண்பர்களுக்கும் வாழ்த்துகள். மலேசியாவின் இருண்ட காலத்தை அறிவிக்கும் ஜகாட் திரைப்படத்தைத் திரையரங்கில் பார்த்துவிட்டீர்களா? உடனே சென்று பாருங்கள். உள்ளூர் படைப்புக்கு நாம் ஆதரவு கொடுப்பதன் மூலம் நம் கலையை நாம் வாழ வைக்க முடியும். போட்டிக்கான கேள்விகள் நாளையும் தொடரும்.

கே.பாலமுருகன்

கூமோன் – நேரமும் அறிவும் ஒரு விவாதம்

1958ஆம் ஆண்டில் ஜப்பான் ஓசாக்காவில் கூமோன் வகுப்பு அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டது. ‘தோரு கூமோன்’ தன் மூத்த மகனின் கணிதப் பிரச்சனையைத் தீர்க்கக் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த கூமோன் முறை பின்னாளில் சமூகக் கல்வியியலில் தனித்த இடம் பிடித்து உலகம் முழுவதும் 48 நாடுகளில் பரவியது. இன்று கோடிக் கணக்கில் கூமோன் நிலையங்களில் மாணவர்கள் பயின்று வருகிறார்கள்.

மலேசியாவில் நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவர்களும் மேல்தட்டு மனிதர்களும் கூமோன் நிலையங்களின் வாசலில் நின்று கொண்டிருக்கிறார்கள். இப்பொழுது கேட்டாலும் கணித அறிவிற்குக் கூமோனே சிறந்தது என எல்லோரும் சாதாரணமாக நம்புவதை உணர முடிகிறது. நாம் வாழும் காலத்தின் முடிவு செய்யப்பட்டஅறிவிற்கு அடிப்பணிவதைப் போல மக்கள் கூமோனை எந்தக் கேள்விகளுமின்றி முழுவதுமாக நம்புகிறார்கள். அறிவு சார்ந்த தர்க்கங்கள் சமூகத்தில் எழுவது மிகக் குறைவே. எல்லாம்விதமான பிரச்சனைகளையும் உணர்வு தளத்தில் வைத்துப் பேசும் சூழலில் அறிவுக்கான போர் நடைபெறுவதே இல்லை. இதுபோன்ற சமூகம் மிக இயல்பாக சுலபமாகப் புகழ்ச்சியின் கொண்டாட்டத்தின் உச்சத்தில் இருக்கும் ஒன்றிடம் சரணடைந்துவிடுவது இயல்பானதே. கூமோன் தெற்கிழக்காசியா நாடுகளில் புகுந்து தன் புகழிடத்தைத் தேடிக் கொண்டதும் இப்படித்தான் எனக் கருதுகிறேன்.

the_ultimate_kumon_review

மூன்று ஆண்டுகள் அமெரிக்காவில் கூமோன் பயிற்றுனராகப் பணியாற்றி பின்னர் அதிலிருந்து முற்றிலுமாக விலகிய காரலாய்ன் முக்கிசா அவர்கள் எழுதிய ‘The ultimate Kumon Review’ ஒட்டுமொத்தமாகக் கூமோன் கல்வி முறையைத் தர்க்கம் செய்து விமர்சிக்கும் நூலாகும். கூமோனின் நல்லது கெட்டது என்ற அடிப்படையில் அதனைத் தேர்வு செய்யலாமா வேண்டாமா எனத் தீர்மாணிக்கப் பெற்றோர்களுக்கு ஆலோசனைகளும் வழிகாட்டுதலும் வழங்குகிறார். அப்புத்தகம் பல நாடுகளில் கவனம் பெற்றவையாகும். காரலாய்ன் அவர்கள் தன் மகனைக் கூமோனில் மூன்று வருடம் படிக்க வைத்த அனுபவத்திலிருந்தும் மூன்று வருடம் கூமோன் பயிற்றுனராக இருந்த அனுபவத்திலும் இந்த நூலை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கூமோன் நம் குழுந்தைகளை என்ன செய்கிறது?

கூமோன் பயிற்சியை மேற்கொள்ளும் குழந்தைகளுக்குக் குறிப்பிட்ட நேரம் வழங்கப்படுகிறது. அந்த நேரத்திற்குள்ளேயே அவர்கள் கொடுக்கப்பட்டிருக்கும் அக்கணக்குகளைச் செய்து முடித்தாக வேண்டும். நம் தேர்வு முறை இப்படிப்பட்ட மாணவர்களை உருவாக்க முயல்வதை ஒப்பிட்டுப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. ஆறாம் ஆண்டு தேர்வில் 40 கணக்குகளைக் கொடுக்கப்பட்ட சொற்பமான நேரத்தில் செய்து முடித்தாக வேண்டும் என்பது கட்டளை ஆகும். ஆனால், பெரும்பான்மையான மாணவர்களால் அந்த ஒரு மணி நேரத்திற்குள் 40 கணக்குகளை முடிக்கச் சிரமங்களை எதிர்நோக்குவது எல்லாம் பள்ளிகளிலும் இருக்கும் ஒரு பொதுவான சிக்கலாகும். ஆக, இயல்பாகவே தேர்வு என்பது நேரம் குறித்த, நேரத்தைக் கையாளும் திறன் குறித்த தேவையை உருவாக்குகிறது.

கெட்டிக்கார மாணவர்களாக இருப்பினும் குறித்த நேரத்திற்குள் தேர்வை எழுதி முடிக்கவில்லை என்றால் புள்ளிகள் சரிய வாய்ப்புள்ளது. ஒன்றாம் ஆண்டு முதலே நேரம் குறித்த ஓர் அச்சம் இங்கிருந்து ஆரம்பமாகிறது. எனது பள்ளிப் பருவத்தில் தேர்வு மண்டபத்தின் சுவரில் தொங்கும் கடிகாரமே எனது முதல் எதிரி. பரீட்சை எழுதி முடிக்கும்வரை கடிகாரத்தின் மீது ஒரு கூடுதல் கவனம் இருக்கும். கைகளின் நடுக்கம் குறையாமலேயே தேர்வை எழுதி முடித்திருப்பேன். இளங்கலைப்பட்டப்படிப்பு வரை அது தொடரவே செய்கின்றன. எழுதி முடிக்கும்வரை நேரத்தோடு ஒரு பந்தயமே நடந்து விடுகிறது. கல்வி நேரத்தோடு பிணைக்கப்பட்டது எப்பொழுது நடந்திருக்கும்? கால சுழற்சியோடு ஒரு மிகப் பெரிய மனப்போராட்டமே நடத்திவிட்டுத்தான் ஒவ்வொரு மாணவர்களும் தேர்வு மண்டபத்தைவிட்டு வெளியேறுகிறார்கள். அறிவிலிருந்து தகவலை உருவி தாளில் கொட்டித் தீர்ப்பதற்கு நேரம் வழங்கப்படுகிறது. அந்நேரத்தின் ஓட்டத்தை/ நகர்ச்சியைக் கண்டு மனம் இயல்பாகவே பதற்றமும் நிலைதடுமாற்றமும் கொள்கிறது.

எட்டு வயது நிரம்பிய எனது உறவினர் மகள் அன்று கூமோன் பயிற்சிகளைச் செய்து கொண்டிருந்ததைப் பார்த்தேன். இடையில் அவள் என்னிடம் ஒரு வார்த்தைக்கூட பேசவில்லை. நான் கேட்டக் கேள்விக்கும் அவளிடம் பதில் இல்லை. சைகையில் காத்திருக்கும்படி சொல்லிவிட்டு எதையோ பதற்றமாகச் செய்து கொண்டிருந்தாள். அவளுடைய வலது கைக்குப் பக்கத்தில் கைக்கடிகாரம் இருந்தது. ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை பதற்றமான கண்களுடன் அக்கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். இலேசாக வியர்த்த நெற்றி, கைகளில் அவசரம் ஏற்படுத்திய நடுக்கம், அன்று அவள் எனக்கு எட்டு வயது சிறுமியாகத் தெரியவில்லை. நேரம் குறித்தான கட்டுப்பாடுகள் குழந்தைகளின் மனத்திற்குள் ஒரு கலவரத்தை ஏற்படுத்துவதை யாராவது மறுக்க முடியுமா?

ஒரு மணி நேரப் பாடத்திற்குள் அன்றைய பாட நோக்கத்தை அடைய ஓர் ஆசிரியர் உருவாக்கும் நேரப் பந்தயமும் இங்குக் கவனத்தில் கொண்டாக வேண்டும். எல்லாவற்றுக்கும் ஒரு நேர கடப்பாடு இருப்பதைத் தவிர்க்க முடியாதுதான். குறிப்பாக ஓர் ஆண்டில் ஒரு மாணவன் அடைய வேண்டிய திறன்கள் முன்பே வகுக்கப்படுவதை மேற்கோளாகக் காட்டலாம். ஆனால், அது ஆசிரியரால் தீர்மானிக்கப்படுபவை. பந்தயமாக இல்லாவிட்டாலும் திட்டத்திற்கேற்ப நகர்த்த முடிந்தவை. பரீட்சை என்பது அப்படியல்ல.

அறிவை நோக்கி குழந்தைகளைத் துரத்தும் சமூகம்

மேற்கண்ட சூழலில் கூமோன் என்பதை ஒரு நிறைவான வழிமுறை என என்னால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. அரசு தேர்வின் மூலம் உருவாக்கும் நேரம் குறித்தான ஒரு பதற்றத்தையே கூமோனும் வழங்குவதாகத் தோன்றியது. அறிவு ரீதியில் சிறுவர்களை ஒரு படி மேலே உயர்த்தப் பயிற்சியளிக்கும் கூமோன், கணிதப் பாடத்தில் வழிமுறைகளைளற்ற விரைவான பதிலளிக்கும் முறையைத் தூண்டும் உத்தியையே பிரதானமானக் கொண்டுள்ளது. உடனடியாகக் கூடுதல் அறிவைப் பெற்றுவிட குழந்தைகளைத் துரத்தும் சூழலை இலாவகமாகக் கூமோன் அமைத்துக் கொடுக்கிறது. பரிச்சார்த்த முறையில் இதனை முயன்றும் பார்க்கலாம்.

விரைவு உணைவைப் போல, விரைவு இரயிலைப் போல நகர் வாழ்க்கை எல்லாவற்றுக்கும் உடனடி தீர்வு, உடனடி வளர்ச்சி, உடனடி மாற்றம் என்பதை நோக்கியே இன்றைய வாழ்க்கைச் சூழல் விரைகிறது. இன்று விதைத்து நாளை அறுவடை செய்தாக வேண்டிய எதிர்ப்பார்ப்பையே நகர் வாழ்க்கை விட்டுச் செல்கிறது. பிள்ளைகளின் கல்வியிலும் பெற்றோர்கள் அவசரமான சூழலை நோக்கியே ஓடுகிறார்கள். தன் பிள்ளை இரண்டாம் ஆண்டிலேயே ஆறாம் ஆண்டு மாணவனுக்குரிய பாடத்திட்ட அறிவைப் பெற்றிருக்க வேண்டும் எனப் பேராசை கொள்கிறார்கள். அறிவை வற்புறுத்தி திணிப்பது ஆபத்தே.

ஒரு ஐந்தாம் ஆண்டு மாணவன் பல்கலைக்கழக மாணவர்களுக்குரிய கணக்குகளுக்கான தீர்வைச் செய்ய முடிந்தால் அவனை அதிபுத்திசாலி என சமூகம் ஆச்சர்யமாகப் பார்க்கிறது. ஆனால், தன் வயதிற்குரிய ஐந்தாம் ஆண்டு கணக்குகளைத் திறம்பட செய்ய முடிந்த11 வயது மாணவனை அவனுக்குக் கீழாக வைத்துப் பார்க்கப் பழக்குகிறது. அறிவை எதன் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்க்கிறோம்? கல்வி வரையறுத்துக் கொடுத்திருக்கும் பாடத்திட்டத்தைக் கொண்டுத்தான் அறிவையும் அறிவாளியையும் தீர்மானிக்கப் போகிறோமா? பாடத்திட்டத்தைத் தாண்டிய உலகியல் அனுபவ அறிவு குறித்தான சிந்தனைக்கு இங்கு இடமில்லாமல் போய்விட்டது.

பாடத்திட்டம் என்பது பொதுவானது. வயதையும் அந்த வயதிற்குரிய அறிவையும் உண்மையில் அத்தனை துல்லியமாக முடிவு செய்துவிட முடியாது. வயதிற்கு மிஞ்சிய அறிவுடன் இருப்பவனை உன் வயதிற்கு மீறி பேசாதே எனச் சொல்வது ஒரு பக்கமும், வயதைத் தாண்டிய கல்வியியல் தொடர்பான சிக்கலைக் களைபவனை மிகச் சிறந்த அறிவாளி எனப் பாராட்டுவது ஒரு பக்கமும் சமன் இல்லாமல் சமூகத்தில் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. ஆறாம் ஆண்டு மாணவன் பல்கலைக்கழகப் படிப்பிலுள்ள சிக்கலைத் தீர்க்க முடிந்தால் எந்தப் பக்கலைக்கழகமும் அவனுக்கு இளங்கலைப்பட்டப்படிப்பிற்கான சான்றிதழைக் கொடுத்துவிடாது என்பதையும் கவனிக்கவும்.

வாழ்க்கை குறித்து சட்டென முதிர்ச்சியான ஒரு கருத்தை முன்வைக்கும் மாணவனை வயதிற்கு மீறிய பேச்சு என மட்டுப்படுத்துவதை நானே பல சூழ்நிலைகளில் பார்த்திருக்கிறேன். அதுவே தன் வயதிற்கு மீறிய பெரும் கணக்கை ஒரு மாணவன் செய்வதை வைத்து அவன் அறிவைப் பாராட்டி மதிப்பீடுவதையும் பார்த்திருக்கிறேன். அறிவு எப்படி முடிவு செய்யப்படுகிறது? வரையறுத்து வழங்கப்பட்டிருக்கும் பாடத்திட்டத்தை ஒரு மாணவன் பின்பற்றுவதும் அதனை மிஞ்சுவதுமே அவன் அறிவைத் தீர்மானிக்கப் பாவிக்கப்படும் கருவியாகத் திகழ்கின்றன. மற்றப்படி கேட்டு வாசித்து உணரும் வாழ்க்கை/உலகியல் தொடர்பான எந்தக் கூடுதலான அறிவையும் இச்சமூகம் அங்கீகரிக்கத் தயாராக இல்லை.

கூமோன் மிக விரைவாகக் கணக்கைச் செய்யும் இயந்திரங்களை உருவாக்கித் தள்ளுவதாகவே எனக்குத் தோன்றுகிறது. இன்றைய பெருநகர் சூழலிருந்து வரும் பெற்றோர்களுக்கு இக்கருத்து முரணாகத் தோன்றலாம். ஆனால், கூமோன் கல்வி நிலையங்களில் பணியாற்றிய ஒரு அமெரிக்கர் கூமோன் குறித்துப் பெற்றோர்கள் உடனடி முடிவை எடுக்காமல் விவாதிக்கத் தூண்டும் வகையில் ஒரு நூல் எழுதுகிறார் என்றால் அதனை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்றே நினைக்கிறேன்.

எல்லோரும் ஓடுகிறார்கள்; நாமும் அதை நோக்கி ஓடுவோம் என்ற முடிவுக்கு வருவதைத் தவிர்த்து விட்டு இந்த நவீன சமூகம் வழங்கும் இதுபோன்ற விடயங்களையும் அதன் நன்மை தீமைகளையும் சமமாக உற்று நோக்கும் ஆற்றலைப் பெற்றோர்கள் பெற்றிருக்க வேண்டும். ஒரு சமூகத்தின் பெரும்பான்யையினர் ஆதரிக்கிறார்கள் என்றால் அது கட்டாயம் நம் வீட்டுப் பிள்ளைகளுக்கும் உகந்ததாக இருக்கும் எனச் சிந்திக்காமல் அதன் பின்னே ஓடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இது பந்தயம் அல்ல.

-கே.பாலமுருகன்

மலேசிய – சிங்கப்பூர் சிறுகதைகள் ஒரு வாசகப் பார்வை – தொடர் 3 சு.யுவராஜனின் அல்ட்ரோமேன்: குடும்ப வன்முறையின் வீச்சம்

‘பெண்ணினம் சார்ந்து மனித மூளை கொள்ளும் எதிர்வினைகளுக்கும் பிற ஜீவராசிகள் கொள்ளும் எதிர்வினைகளுக்கும் சம்பந்தம் இல்லை. மனித மூளை மட்டுமே பெண்ணினத்தை அடக்க முயல்கிறது’ – சுந்தர ராமசாமி (செப்டம்பர் 2002)

2002ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இடைநிலைப்பள்ளியில் ஆறாம் படிவம் படித்துக் கொண்டிருக்கும்போது நண்பர் காளிதாஸ் மூலமே அவருடைய அண்ணன் எழுத்தாளர் சு.யுவராஜன் பற்றி தெரிய வந்தது. அப்பொழுது அவர் மலாயாப்பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். ‘ஊதுபத்தி சிறுவன்’ சிறுகதையை வாசிக்கும்படி நண்பர்கள் கேட்டுக்கொண்டனர். அப்பொழுது தமிழ் இலக்கியத்திலும் வாசிப்பதிலும் கொஞ்சம் ஆர்வம் இருந்ததால் அவருடைய அக்கதையைப் படித்தேன். மொழி பற்றியோ உத்திகள் பற்றியோ எவ்வித பரிச்சயமும் பெற்றிருக்காத அக்காலக்கட்டத்தில் ‘ஊதுபத்தி சிறுவன்’ எனக்குள் பெரிய தாக்கத்தை உருவாக்கியது.

12543

அதன் பிறகு 2005ஆம் ஆண்டில் காதல் இதழ் வாசிக்கத் துவங்கியிருந்தேன். அதன் வழி சு.யுவராஜனின் தனித்துவமான எழுத்துகளை வாசிக்க முடிந்தது. மலேசியத் தமிழ் இலக்கியத்தில் ஒருவரின் மொழியாளுமையைக் கண்டு நான் பிரமித்தேன் என்றால் அது சு.யுவராஜனின் மொழியே. அப்பொழுதே சற்று மாறுப்பட்டு ஜனரஞ்சகத்தன்மைகள் இல்லாமலிருந்தது. சில காலங்கள் கடந்தே அவருடைய அல்ட்ரோமேன் சிறுகதையையும் வாசித்தேன். அப்பொழுதும் இப்பொழுதும் சு.யுவராஜனின் கதைகளில் அல்ட்ரோமேன் எனக்கு நெருக்கமானதாக உணர்ந்திருக்கிறேன்.
நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் அவர் தீவிரமான வாசிப்பின் மூலம் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் கவனிக்கத்தகுந்த அளவிலான தோட்டப்புற வாழ்வியலை மையப்படுத்தி சிறுகதைகள் எழுதிக் கொண்டிருந்தார். ஒரு முறை 2007ஆம் ஆண்டில் மாணவர்ப் பிரிவுக்காகத் தமிழ்ப்பேரவை சிறுகதை போட்டியில் எனக்கும் நண்பர் சுந்தரேஷ்வரனுக்கும் பரிசை அறிவித்திருந்தார்கள். அதுதான் சிறுகதைக்காக நான் பெறப்போகும் முதல் பரிசு. காலையிலேயே நண்பர் வினோத்குமார் மூலம் அவர்கள் தங்கியிருக்கும் அடுக்குமாடி வீட்டின் அறைக்குள் நுழைந்தபோது சு.யுவராஜன் அங்கு வரவேற்பரையின் தரையில் சிரித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். தான் தமிழ்ப்பேரவை கதை எழுதும் போட்டியிலிருந்து விலகிக் கொண்டதாகவும் அடுத்தவர்களுக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும் என்றும் பரிசும் போட்டியும் ஆரம்பநிலை எழுத்தாளனுக்கே தகும் என்றும் மிகவும் முதிர்ச்சியாக உரையாடினார். இத்தனை இளம் வயதிலேயே அவர் மிகவும் அப்பாற்பட்ட சிந்தனையைக் கொண்டிருந்தார். இவருடைய அல்ட்ரோமேன் சிறுகதை 2004ஆம் ஆண்டில் மலேசியத் தேசிய பல்கலைக்கழகத்தின் சிறுகதை போட்டியில் முதல் பரிசை வென்ற கதையாகும்.

1. அல்ரோமேன் சமூகத்தில் உருவாக்கும் தாக்கம்

சு.யுவராஜனின் அல்ட்ரோமேன் தலைப்பைப் படித்ததுமே இது என்ன கார்ட்டூன் சம்பந்தப்பட்ட மிகைகற்பனை சிறுகதையோ எனத் தோன்ற வைக்கலாம். காலம் காலமாக அல்ட்ரோமேன், பாவர் ரேஞ்சர்ஸ் போன்ற மிகைகற்பனை கதாநாயகக் / சாகச நாயகக் கார்ட்டூன்கள் சமூகத்தின் மனத்தில் விதைத்துவிட்ட மனோபாவம் அது. அதுவும் அல்ட்ரோமேன் 1960களில் அனைத்து சமூகங்களிலும் மிகவும் கவனம்பெற்ற கார்ட்டூன் ஆகும். 1966ஆம் ஆண்டில் ஜப்பானியத் தொலைக்காட்சி தொடராக அல்ட்ரோமேன் தொடங்கப்பட்டது.

கைஜு, கொட்சிலா போன்ற விநோதமான கொடூரமான ராட்சத மிருகங்களைக் கொன்று மக்களைக் காப்பாற்றும் வேலையைத்தான் அல்ட்ரோமேன் செய்யும். யுவராஜன் தன் கதைக்கு அல்ட்ரோமேன் என்ற தலைப்பைத் தேர்ந்தெடுத்ததையொட்டி உடனே ஒரு ஜனரஞ்சகமான பொதுமனத்திற்கு இக்கதை தோட்டப்புற மக்களைக் காக்கும் தெய்வமாகத் திகழும் ஒரு ரோபின் ஹூட் கணக்கில் உள்ள யாரோ ஒருவரைப் பற்றியதாக இருக்கும் எனத் தோன்ற வாய்ப்புண்டு. என்னிடமும் சிலர் இதையே கேட்டிருக்கின்றனர். ஆனால், இக்கதையில் வரும் அல்ட்ரோமேன் வேறு.

s-yuvarajan

யுவராஜன் இக்கதையின் ஊடாக தோட்டப்புறங்களில் நிகழ்ந்த குடும்ப வன்முறையைப் பேசும்பொருளாக மாற்றுகிறார். இந்திய மனங்களில் ஊறிக்கிடக்கும் ஆணாதிக்கத்திற்கு எதிரான பார்வை அவருடைய கதையில் வியாபித்து வெளிப்படுகிறது. 1996ஆம் ஆண்டிற்குப் பிறகே பெண்களுக்கு எதிரான குடும்ப வன்முறை சட்டம் தீவிரப்படுத்தப்பட்டது (Domestic Violence Act) என்றால் 1960களில் தோட்டப்புறங்களில் எந்தச் சட்டம் குறித்தும் பிரக்ஞை இல்லாமல் இருந்த இந்தியப் பெண்கள் தங்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறைக்கு எதிர்வினையாற்றாமல் அடங்கி உள்ளுக்குள் புழுங்கி தொய்ந்து சலித்துக் கிடந்தார்கள் என்கிற வேதனையையே யுவராஜன் அல்ட்ரோமேன் கதையில் முன் வைக்கிறார்.
கைஜூ, கொட்சிலா போன்ற மிருகங்கள் நம் சமூகத்தில் வன்முத்துடன் வீடுகளில் ஒளிந்திருந்த்தை அடையாளம் காட்டும் அவருடைய இக்கதையில் ஓர் அல்ட்ரோமேனையும் படைக்கிறார். ஒரு சிறுவனின் விசித்திரமான மனோபாவத்திலிருந்து அல்ட்ரோமேன் எழுந்து கொள்கிறது. இக்கதையை வாசிக்கும்போது அந்த அல்ட்ரோமேன் யாரென்று புலப்படும். நமக்கே தெரியாமல் நாம் செய்யும் கொடூரங்களுக்கு எதிராக ஒரு சிறுவன் நம் வீட்டில் திடீரென்று அல்ட்ரோமேனாக மாறி நம்மை எதிர்க்கக்கூடும்.

2. குடும்ப வன்முறையின் அரசியல்

ஓர் ஆண் தன் அதிகாரத்தையும் ஆக்கிரமிப்பையும் முதலில் மனைவியிடமிருந்தே தொடங்குகிறான். இன்றைய குடும்ப உளவியலின் வழி ஆண்களிடமுள்ள அதிகார உணரு முதலில் மனைவியிடமே உக்கிரமாகப் பிரயோகிக்கப்பட்டு பிறகு சமூகத்திற்குள் நுழைவதாகச் சொல்லப்படுகிறது. குடும்ப அதிகாரம் என்பது உடலை வதைப்பது, கொடுமைப்படுத்துவது என்று மட்டுமல்ல. மனைவிக்கும் சேர்த்து முடிவெடுப்பது, அவளுக்குத் தேவையானவற்றை முன்னின்று நிறைவேற்றுவது, குடும்ப்ப் பிரச்சனைகளுக்கு சிக்கல்களுக்கு தன் ஆளுமையின் வழியே தீர்வுக்காண முடியும் என நம்புவது முதல் எல்லாமே அதிகாரத்தின் பல வடிவங்கள்தான்.

மனைவி முழுக்கவும் தன்னைச் சார்ந்தவள் என்கிற தீர்க்கமான புரிதலை ஓர் ஆண் முதலில் இந்த ஆணாதிக்க சமூகத்தின் சடங்குகளின் வழியாகவே பெறுகிறான். அது தார்மீகமான அதிகாரமாகவும் அல்லது கொடூரமான அதிகாரமாகவும் மாற்றம் கொள்வது அவரவர் சூழலையும் மன அமைப்பையும் பொருத்தவை. ஆனால், தன் மனைவியிடம் அதிகாரத்தை இழக்கும் ஒருவன் பெரும் தடுமாற்றம் கொள்வதற்குக் காரணம் தன் அதிகாரம் எங்கோ பலவீனம் அடைந்துவிட்டதாக அவன் கருதுகிறான். அதிகாரத்தின் வழி அவன் நிறைவேற்றி வந்த கடமைகள் ஒடுக்கப்படுவதன் மூலம் தன் செயல்பாடுகளின் மீது நம்பிக்கை இழக்கின்றான். அவனது இருப்பு பெரும் கேள்விக்குள்ளாகுவதாக எண்ணுகிறான். ஆணிடம் இருக்கும் அதிகாரம் பெண்ணிடம் மாறுவதாக அச்சம் ஏற்படும் அடுத்த கணமே அமைதியிழந்து கொடூர மனத்துடன் இயங்குகிறான். யுவராஜன் கதையில் வரும் அப்பாவும் அப்படிப்பட்டவராக இருக்கின்றார். கதையில் அவரைப் பற்றிய சித்தரிப்புகள் அதிகம் இல்லையென்றாலும் ஆங்காங்கே காட்சி அடக்கத்துடன் அவர் படைப்பக்கப்படும் வித்த்திலிருந்து நம்மால் அவரின் மீதான கற்பிதங்களை வியாபித்துக் கொள்ள முடியும்.

அதிலிருந்து மீண்டு தனித்து இயங்குவதன் மூலம் ஆண் வழி சமூகத்தைச் சேர்ந்த ஒரு கணவன் தன் அதிகாரத்தின் நிலை குறித்து அச்சம் கொள்ளத் துவங்குகிறான். அதிலிருந்து தன்னை மீட்டெடுக்க வன்முறையைக் கையாள்கிறான். ஒரு குடும்ப வன்முறை இங்கிருந்து தொடங்குவதாக நினைக்கிறேன். யுவராஜன் தன் அல்ட்ரோமேன் கதையிலும் அத்தகையதொரு சூழலே அன்றைய இந்தியக் குடும்பங்களுக்குள் வெடித்துச் சிதறுவதாகக் காட்டுகிறார்.

உடல் ரீதியிலான அடக்குமுறை

இக்கதையில் வரும் அம்மா தீம்பாருக்கு மரம் வெட்டப் போகிறார். அப்பா இரவெல்லாம் குடித்துவிட்டு வந்து அம்மாவை அடிக்கின்றார். வேலைக்குச் செல்லும் பெண்களின் நடத்தையைச் சந்தேகிப்பதே இந்திய சமூகத்தில் ஆணாதிக்கத்தின் முதல் செயல்பாடு. குடும்பத் தலைவர் மட்டுமே வேலைக்குச் செல்ல வேண்டும்; பெண்கள் வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்கிற அரதபழமையான சிந்தனை ஆண் மனங்களில் படிந்து கிடப்பதால் ஏற்படும் விளைவு. அடுத்து, வேலைக்குச் செல்லும் பெண்களை உடல் ரீதியில் அடக்குவது. ஆண் தன் பலத்தைக் கொண்டு பெண் உடலைச் சிதைப்பதும் அன்றே குடும்பங்களில் ஓர் அடக்குமுறையாக இருந்திருக்கிறது. இதே பிரச்சனை 1980களில் இரவு வேலை(Night shift) வந்தபோது இதைவிட மேலாக வெடித்தது என்றே சொல்ல வேண்டும்.

மன நீதியிலான ஒடுக்குமுறை

அடுத்து, மனரீதியிலான நெருக்குதலைக் கொடுப்பதும் ஆண் ஆதிக்க சமூகத்தின் இன்னொரு அடக்குமுறையாகவும் கருதப்பட்டது. யுவராஜனின் கதையில் வரும் அம்மாவிற்கு வீட்டில் பெரிதாக எந்த உரிமையும் இருப்பதில்லை. இரவு நேரங்களில் சமையலறையின் இருட்டில் அமர்ந்து கொண்டு கூரையை வெறித்துக் கொண்டிருப்பார் என அவர் சொல்லும் வரி மனத்தை இறுக்கமாக்குகிறது. இருட்டைத் தாண்டி அதற்குள் கொல்லப்பட்ட பல உணர்வுகளுடன் தகித்துக் கொண்டிருப்பதுதான் அடக்குமுறைக்கு ஆளான பல அம்மாக்களின் உலகமாக இருந்திருக்கிறது. வீட்டைத் தாண்டி வராத அவர்களின் கண்ணீர் குரல்களை யாருமே கேட்டதில்லைத்தான். ஆண் அதிகாரம் பெண்கள் தங்களின் மனத்தைத் தானே ஒடுக்குக் கொண்டு வாழ மட்டுமே விட்டிருப்பதும் நம் இந்தியக் குடும்பங்களில் நடந்த உண்மைகளாகும்.

ஒருமுறை எல்லோரும் நாம் பார்த்த, அல்லது நம் வீட்டில் வாழ்ந்த அம்மாக்களை, பெரியம்மாக்களைப் பின்நோக்கிப் பார்த்தால், அவர்கள் உடல் ரீதியில் கொடுமைக்குட்படுத்தபடவில்லையென்றாலும் கருத்துரிமை இல்லாமல் வாயொடுங்கிப் போனவர்கள் நம்மிடையே உலா வந்திருப்பார்கள். இதுவும் ஆணாதிக்கத்தின் முகம்தான் ஆனால் குடும்ப வழக்கமாக பின்பற்றப்பட்டு வந்திருக்கிறது. இன்றளவும் அப்பாவை மீறி எந்த முடிவும் எடுக்க முடியாத பெண்கள் இருக்கவே செய்கிறார்கள்.

இத்தகைய குடும்ப சூழலில் வளரும் ஓர் ஆண் எப்படிப் பெண்களை அடக்கி ஆள வேண்டும் எனத் தன் அப்பாவிடமிருந்து கற்றுக் கொள்கிறான். அதுவே பெண்ணாக இருந்தால் எப்படி ஆண்களுக்கு அடங்கி நடந்து கொள்ள வேண்டும் எனத் தன் அம்மாவிடமிருந்து கற்றுக் கொள்கிறார். இத்தகைய கொடூரமான ஆணாதிக்கச் சிந்தனை பாரம்பரியமாகக் குடும்பங்களுக்குள்ளிருந்து விரிகிறது. அதன் நூலிழையில் ஒரு எதிர்ப்புணர்வைக் காட்டும் முயற்சியே யுவராஜனின் அல்ட்ரோமேன் ஆகும். எல்லாம் காலக்கட்டத்திற்கும் தேவையான ஒரு விழிப்புணர்வை விதைத்துச் செல்கிறது கதை. விரைவில் வெளிவரவிருக்கும் சு.யுவராஜனின் சிறுகதை தொகுப்பில் அல்ட்ரோமேன் சிறுகதையை வாசிக்கலாம்.

– கே.பாலமுருகன்

ஜகாட் திரைப்படம் – புத்தகப் பரிசு / 27.12.2015

வணக்கம்,

17-12-2

எனது அதிகாரப்பூர்வமான அகப்பக்கம் இனி தொடர்ந்து சில மாற்றங்களுடன் இயங்கும். விரைவில் பூரணமான வடிவத்துடன் செயல்படும். மலேசியாவில் தற்பொழுது வெளியாகி மக்கள் மனத்தில் இடம்பிடித்து வரும் மலேசிய இயக்குனர் சஞ்சய் அவர்களின் ஜகாட் படம் தொடர்பான புத்தகப் பரிசுப் போட்டியை அறிவித்திருந்தேன். இன்று அதற்கான முதல் கேள்வி பதிவேற்றம் செய்யப்படுகிறது. கேள்விக்கான பதிலை இங்கேயோ அல்லது முகநூலிலோ, மின்னஞ்சலிலோ நீங்கள் அனுப்பி வைக்கலாம். சிறந்த பதிலுக்கான பரிசு:

1. சாகித்ய அகாதமி பரிசு பெற்ற நூலான லா.ச.ராமமிருதம் எழுதிய ‘சிந்தா நதி’.
2. மாணிக்கவாசகப் புத்தக விருது பெற்ற கோ.புண்ணியவான் எழுதிய ‘செலஞ்சார் அம்பாட்’ வரலாற்று நாவல்

மேற்கண்ட இரு புத்தகங்களும் பரிசாக அனுப்பி வைக்கப்படும்.

ஜகாட் திரைப்படம் பற்றிய கேள்வி 1:

ஜகாட் திரைப்படம் மலேசிய இந்தியர்களின் இருண்ட பகுதியைப் பேசுகிறது என விமர்சகர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். எது அந்த இருண்ட பகுதி என ஜகாட் முன்வைக்கிறது? ( பதில் 20 சொற்களுக்கு மேற்பட்டு விரிவாக இருப்பதை வரவேற்கிறேன்)

– கே.பாலமுருகன், மின்னஞ்சல்: bkbala82@gmail.com / facebook: https://www.facebook.com/balamurugan.kesavan.7