வாழ்வினூடே கரையும் தருணங்கள் – 1: கேலியும் அப்பாவும்
பள்ளிப் பருவத்தில் அதிகம் கேலி செய்யப்பட்டது நமது அப்பாவின் பெயர்களாகத்தான் இருக்கும். கேசவன் என்கிற என் அப்பாவின் பெயரைக் கேசரி என்று கேலி செய்யும் நண்பர்கள்தான் வாய்த்திருந்தார்கள். அப்பொழுது கேலியில் மிகவும் சிறந்த இடத்தைப் பெற்றிருந்தது அப்பாவின் பெயர்களை மாற்றி உச்சரித்து நம்மை அவமானப்படுத்துவதுதான். அப்படியே குறுகிபோய்விடும் மனம்.
வகுப்பில் ஒவ்வொருவரின் அப்பாவிற்கும் இன்னொரு பெயர் வைக்கப்பட்டிருக்கும். அன்று நாம் சிக்கிவிட்டால் அந்தப் பெயரை வைத்துதான் கேலி செய்வார்கள். நம்மை அவமானப்படுத்தினாலும் தாங்கிக் கொள்ள முடியும்; ஆனால், நம்மைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு எங்கோ உழைத்துக் கொண்டிருக்கும் அப்பாக்கள் கேலி செய்யப்படுவதைச் சிலசமயங்களில் தாங்கிக் கொள்ள முடியாமல் போவதுண்டு. உச்சமான கோபத்திற்கே சென்றுவிடும் சூழலும் அமைந்துவிடும்.
அப்படியொருமுறை அப்பாவைக் கிண்டலடித்த வகுப்பு நண்பனை அடிக்கச் சென்று ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டேன். இதுபோன்ற சூழ்நிலையில் தவறு இழைத்தவனும் சேர்ந்து நம் மீது பழிப்போடுவதுதான் வேடிக்கையாக இருக்கும். நானும் அவனது அப்பாவின் பெயரைக் கேலி செய்தேன் என்று புகார் கொடுத்துவிட்டால் இருவரில் யார் சொல்வதை நம்புவது என்கிற குழப்பத்தை வெற்றிகரமாக ஏற்படுத்திவிட முடியும். தவறிலிருந்து தப்பிக்கும் சிறந்த உத்தி அது. இறுதியில் இருவரும் தண்டிக்கப்படுவதுதான் நடவடிக்கையாக இருக்கும்.
வீட்டிலிருக்கும் அப்பாகளுக்குக் கடைசிவரை தனக்கு இத்தனை கேலி பெயர்கள் உண்டு என்பது தெரியாமலேயே போய்விடும். ஆனால், எங்களோடு படித்த தோழி ஒருவள் மட்டும் அவளுடைய அப்பாவைக் கேலி செய்ததைப் பள்ளியில் மிகப்பெரிய பிரச்சனையாக மாற்றிவிட்டாள். அவளுடைய அப்பாவின் பெயர் மாணிக்கம். அப்பொழுது பாட்ஷா படம் வந்த காலக்கட்டம் என்பதால் ‘மானிக் பாட்ஷா என்று வகுப்பிலுள்ள சிலர் விடைத்ததற்காக அழுது ஆர்பாட்டம் செய்து அவளது அப்பா பள்ளிக்கு வந்து புகார் செய்யும் வரை அப்பிரச்சனையைப் பெரிதாக்கினாள். இதுபோன்று அப்பாக்களின் பெயர்களைக் கேலி செய்பவர்கள் சிலரின் மீது எனக்கிருந்த பலநாள் கோபத்திற்கு அன்றுதான் ஒரு தணிந்தநிலை ஏற்பட்டது. வகுப்பிலிருந்த ஏழு பேர் தலைமை ஆசிரியரிடம் மாட்டிக் கொண்டார்கள்.
அந்தப் பிரச்சனைக்குப் பிறகு மீண்டும் அப்பாக்களின் பெயரைக் கேலி செய்யும் போக்கு ஒரு சில மாதங்கள் இல்லாமல் இருந்தாலும் அவ்வப்போது சண்டையின்போது சில மாணவர்கள் அப்பாவின் பெயரைப் பயன்படுத்தி கேலி செய்வதை நிறுத்தாமல்தான் இருந்தார்கள். கேலி வதை இன்று பள்ளிக்கூடங்களில் பற்பல ரூபங்களில் வேட்டை நாய்களைப் போல உள்ளத்தைக் காயப்படுத்த உலாவிக் கொண்டிருக்கின்றது. ஆரம்பத்தில் அப்பாவின் பெயரை மாற்றி கேலி செய்வதில் தொடங்கும் இதுபோன்ற கேலி வதை பின்னர் வன்முறைக்கும் தூண்டுகின்றன. உள்ளத்தால் ஒருவனை அவமானப்படுத்துவது தாண்டி உடலாலும் கேலி வதைகள் எல்லை மீறுகின்றன.
ஆரம்பப்பள்ளிகளில் இதுபோன்று குடும்பத்தாரின் பெயரை மாற்றி கேலி செய்வது அல்லது மாணவர்களின் சொந்தப் பெயர்களைத் திரித்துக் கேலி செய்வது போன்றவற்றை பார்க்க/கேட்க நேர்ந்தால் உடனடியாக அதனைக் களைந்திட வேண்டும். கேட்க ஏதோ வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருந்தாலும் இதுபோன்ற கேலி வதைகள் காட்டப்போகும் அகோரமான முகங்களை இனி எப்பொழுதும் நம்மால் தடுக்க முடியாமல் போய்விடும்.
அப்பாவின் பெயர் இப்படிக் கேலி செய்யப்படுவதை நினைத்துச் சத்தமில்லாமல் அறைக்குள் அழுத நாள்கள் எனக்குள் ஏற்படுத்திய தாக்கம் இன்றும் நினைத்துப் பார்க்கும்போது வலியை உண்டாக்குகின்றன. அவமானம் என்பது அத்தனை சீக்கிரமாக நம்மை விட்டு விலகிவிடாது. அதுவும் சிறுவயதில் படும் அவமானங்கள் குழந்தைகளின் அழுகையைப் போன்று. அடம்பிடித்தாவது மனத்தினுள் தங்கிவிடும்.
-கே.பாலமுருகன்