யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகளும் ஆலோசனைகளும்
வருகின்ற வியாழக்கிழமைக்குத் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கான யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகள் குறித்துப் பல்வேறான ஆருடங்களும் கருத்துகளும் வெளிவந்த வண்ணமே உள்ள இவ்வேளையில் அத்தேர்வு முடிவுகள் குறித்துச் சில முன்னேற்பாடுகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று தோன்றியதில் இக்கட்டுரை உருவாகியுள்ளது. ‘Pass vs Fail’ என்கிற இரு முனைகளுக்கும் இடையே மாணவர்களைத் துரத்தும் நாள். அதிலிருந்து அவர்களை மீட்க நாம் போராட வேண்டியுள்ளது. ஆகவே, அது குறித்து நம் அகங்களைத் திறக்க முனைகிறேன். கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் அடுத்த தலைமுறைக்கு நாம் எதைக் கொடுக்கப் போகிறோம் என்பதில் நாம் ஒன்றுப்பட வேண்டியுள்ளது.
- மனத்திடம்
எப்பொழுதுமே தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்களுக்கு ஏற்படும் பயம் உண்மையில் அவர்களுடையதல்ல. பெற்றோர்கள், உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள், எதிர்த்த வீட்டுக்காரர்கள் என இன்னும் பலர் உருவாக்கும் எதிர்ப்பார்ப்பின் விளைவுகளே மாணவர்களின் மனத்தில் பயம் என்கிற ஒரு தடுப்பை ஏற்படுத்திவிடுகிறது. வயதிற்கு மீறி ஏற்படும் அச்ச உணர்வால் அவர்கள் சூழப்படுகிறார்கள். ஒரு சிலருக்கு மாணவர்களின் தேர்வு முடிவுகள் கௌரப் பிரச்சனையாகவும் ஆகிவிடுவதால் அப்பயம் மேலும் அழுத்தமாக மாணவர்களின் மனத்தில் ஊடுபாய்ந்து கொள்கிறது. ஆகவே, பெற்றோர்கள் தயவு செய்து தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் முன் அதிகம் பரப்பரப்பையோ பயத்தையோ காட்டிக் கொள்ளாதீர்கள். நம்மை விட மனதளவில் குழந்தைகள் பலவீனமானவர்கள்; நம்மைவிட அவர்களின் பயம் ஆபத்தானது என்பதால் தேர்வு முடிவுகளைத் துணிவுடன் எதிர்க்கொள்ளும் பக்குவத்தை அவர்களிடத்தில் ஏற்படுத்தவும். யூ.பி.எஸ்.ஆர் தேர்வு என்பது வாழ்க்கையை நிர்ணயிக்கும் களம் அல்ல; ஆரம்பப்பள்ளிக் கல்வியின் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் ஒரு பகுதி மட்டுமே என மாணவர்களுக்குப் புரிய வைக்கவும். பயத்தோடு இருக்கும் மாணவர்களின் பயங்களைப் போக்கும் பொறுப்பு நம்முடையது என்று உணரக் கேட்டுக் கொள்கிறேன். வியாழக்கிழமைக்குள் அவர்களின் மனத்தைத் திடப்படுத்த முயலுங்கள். அதீதமான எதிர்ப்பார்ப்புகளை மாணவர்களின் மீது திணிக்காதீர்கள்.
2. மதிப்பீட்டின் யதார்த்தம்
ஓர் ஆண்டு முழுவதும் மிகவும் திறமையுடன் கற்கும் ஒரு மாணவன் தேர்வு நாளின்போது ஏற்படும் சிறிய தடுமாற்றம், பதற்றம், உடல்/மன நல நிலைத்தன்மை பிசகல், போன்ற பல்வேறான புறச்சூழல் தாக்கங்களால் ஏற்றம் இறக்கம் ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, ஒரு மாணவனின் முழு கெட்டிக்காரத்தனத்தை அளக்கும் கருவி ‘தேர்வு’ மட்டுமே என்கிற முடிவுக்கு வரும் பழக்கத்தை நாம் கைவிட வேண்டியுள்ளது. மதிப்பீடு என்பது ஒரு நாள் தேர்வில் நிர்ணயிக்கப்படுவதல்ல. ஆண்டு முழுவதும் அல்லது ஆறாம் ஆண்டு வரையிலும் (ஆறு ஆண்டுகள்) கண்கானிப்பு, கற்றல் நடவடிக்கையில் ஈடுபாடு, விளையாட்டு, சுறுசுறுப்பு, பங்கேற்பு என ஒரு மாணவனின் ஒட்டுமொத்த மதிப்பீட்டில் ‘தேர்வு’ ஒரு பகுதி மட்டுமே என்கிற நம் புதிய கல்வி அணுகுமுறையைப் பெற்றோர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதற்கு அப்பால் மாணவர்கள் செல்ல வேண்டிய தூரம் இன்னும் உள்ளது. அவர்களை நிரூபித்துக் கொள்ள நாம் மேலும் வாய்ப்பைத் திறக்க வேண்டுமே தவிர யூ.பி.எஸ்.ஆர் தேர்வு முடிவுகளைக் காட்டி அவர்களின் ஆளுமையைச் சுருக்கிவிடுதல் கூடாது. இங்குக் குறைந்த தேர்ச்சிப் பெறும் மாணவனுக்கு நாம் கொடுக்கும் ஊக்கம் நாளை வெற்றியாக மாறலாம்.
3. சொல் பிரயோகம்
வியாழக்கிழமை தேர்வு முடிவுகளைப் பெறும் மாணவர்களை நாம் விமர்சிக்கும்போது நாம் உபயோகிக்கும் வார்த்தைகளின் மீது கவனம் தேவை. அவர்களின் மனத்தையும் உள்ளுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ஆற்றலையும் சாகடிக்கும் சில வார்த்தைகள் ஒவ்வொரு காலத்திலும் பலர் பயன்படுத்திக் கேட்டதுண்டு.
– நான் தான் சொன்னனே நீ எங்க உருப்படப் போறேனு…
– இது எங்கத் தேரப்போது…
– அவ்ளதான் இனிமேல் நீ…
– அதான் அப்பவே சொன்னேன்டா படிச்சாதானே…
இப்படியாக இன்னும் கொடூரமான வார்த்தைகளும் உண்டு. இவ்வாண்டு நாம் நம்மை மாற்றிக்கொண்டால் என்ன? ஒரு குழந்தையின் வாழ்க்கையில் எப்பொழுது திருப்பம் உண்டாகும் என நம்மால் கணிக்கவே இயலாது. கடைசி வரிசை மாணவர்களே இன்று வாழ்க்கையில் சாதித்தவர்களாக உள்ளார்கள் என்கிற நிஜம் நாம் அறியாததா? நாம் போட்ட விதை நிச்சயம் நல்விளைவைக் கொடுக்கும். ஆனால், அதற்கான காலமும் நேரமும் நம்மால் யூகிக்க முடியாமல் இருக்கலாம். நல்வார்த்தைகள் கொண்டு அவர்களின் மனத்தைத் தேற்ற யாரும் முன்வரமாட்டார்கள். பெற்றோர்கள், நண்பர்கள், உறவினர்கள் தவிர அவர்களை யார் தூக்கி நிறுத்த முடியும்.
“சரிடா அடுத்த முறை பார்த்துக்கலாம். உன்னால முடியும்”
“கவலைப்படதேமா… இது ஆரம்பம்தான் அடுத்த பரீட்சையில நீ யாருனு காட்டு”
இப்படி நீங்கள் உதிர்க்கும் வார்த்தைகள் அவர்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போடலாம் அல்லவா? சொல்லுக்கு இல்லாத சக்தியா?
4. பத்திரிகை நண்பர்கள்
பத்திரிகை நண்பர்களுக்கும் என் வேண்டுகோள் 8ஏ என்பது மட்டுமே கொண்டாட்டத்திற்குத் தகுதியான வெற்றி கிடையாது. தேர்வில் பங்கெடுத்த அனைத்து மாணவர்களுக்கும் உற்சாகமூட்டும் பதிவுகளைக் கொண்டு வாருங்கள். வழக்கமாக தேர்வு முடிவுகள் வெளியான மறுநாள் ‘8ஏ’ கொண்டாட்டங்கள் தொடர்பான செய்திகள் மட்டுமே பிரசுரம் ஆகும். இவ்வாண்டு ஏன் நீங்கள் வரலாற்றை மாற்றியமைக்க முடியாது? மிகவும் பின் தங்கிய நிலையில் இருந்து தேர்வில் முன்னேறியிருக்கும் ஒரு பள்ளிக்கு ஒரு மாணவனை அடையாளம் கண்டு அவனைப் பேட்டிக் காணுங்கள்; அல்லது அவர்களைப் பற்றிய செய்தியைப் பிரசுரியுங்கள். இதுவரை இல்லாத ஒரு முயற்சியாக இருக்கும். வெற்றி என்பதன் அர்த்தத்தையே நாம் ‘ஏக்களை’ கொண்டாடி மறக்கடித்துவிட்டோம். சிறு சிறு அடைவுகள் கூட அங்கீகாரமின்றி அழிந்துவிடுகின்றன.
பின் குறிப்பு:
வரும் வியாழக்கிழமை வெளியாகும் தேர்வு முடிவுகள் குறித்து உங்கள் கருத்துகளை, பகிர்வுகளை வெளிப்படுத்த எனது ‘Bahasa Tamil Upsr Balamurugan’ என்கிற முகநூலின் வழியாக செய்யவிருக்கிறேன். கலந்துகொள்ள ஆர்வமும் உள்ளவர்கள் உங்கள் கருத்துகளை முன்கூட்டியே எனக்கு அனுப்பி வைக்கலாம். அதே போல தன் சுய முயற்சியால் வெற்றிப்பெற்றிருக்கும் (8 ஏக்கள் மட்டுமல்ல) மாணவர்கள் ‘http://btupsr.blogspot.com‘ என்கிற வலைத்தலத்தில் அங்கீகரிக்கப்படுவார்கள். அவர்களை நேர்காணல் செய்து பிரசுரம் செய்யவிருக்கிறேன். என் முகநூலில் தொடர்பு கொள்ளவும்.
இத்தேர்வு முடிவுகளை மட்டுமே பிராதானமாகக் கொண்டு நம்மை விமர்சிக்கும்; நம்மை பரிசோதிக்கும் மனப்பான்மைகளுக்கு எதிராக நாம் உரையாட வேண்டிய விடயங்கள் நிறைய உள்ளன. முன்பே சொன்னதைப் போல ‘தேர்வு’ என்பது கல்வியில் இருக்கும் பலவகையான மதிப்பீட்டுக் கருவிகளில் ஒன்றாகும். அது மாணாக்கரின் அறிவின், கற்றலின் முழுமையைக் காட்டிவிடாது என்பதைத் திறந்த மனத்துடன் நாம் ஏற்றுக்கொண்டு அடுத்த தலைமுறையை வடிவமைக்கும் தூரநோக்கு சிந்தனைக்கு மாறிட வேண்டும்.
– கே.பாலமுருகன்
Yogeswary
Its true sir. As a mom Im hving that prob. My daughter so worries. Even though she did well but enviromnt make her scarry. Hope u will advise her tq sir