மலேசியத் தினத்தை முன்னிட்டு ஒரு நேர்காணல்- ‘ஒருவனுக்கு ஆபத்து என்றால் அவன் எந்த இனம் எனப் பார்த்துவிட்டு உதவும் பழக்கம் மலேசியர்களுக்கு இல்லை’ – கே.பாலமுருகன்

நேர்காணல்: செ.காஞ்சனா, 16.09.2016

 

3pwnrjll

காஞ்சனா: வணக்கம் ஐயா. இன்று மலேசிய தினம். எப்படி உணர்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: மிகவும் மகிழ்ச்சியான நாள். சுதந்திரத் தினம் முடிந்து சில நாட்களிலேயே அடுத்து மீண்டும் உற்சாகமான நாளாக இது அமைந்திருக்கிறது. இன்றைய காற்றில் என் முன்னோர்களின் குரலும் வியர்வையும் கலந்து வீசுகிறது.

காஞ்சனா: யார் உங்கள் முன்னோர்கள் எனச் சொல்கிறீர்கள்? உங்கள் தாத்தா பாட்டியா?

கே.பாலமுருகன்: என் தாத்தா பாட்டி என்றில்லை. இங்கு மலேசியா வந்து இப்படியொரு தலைமுறை இங்கேயே உருவாகக் காரணமாக இருந்தவர்களைச் சொல்கிறேன். எல்லாமே என் தாத்தா பாட்டிகள்தான். இதில் வேறுபாடில்லை.

காஞ்சனா: நீங்கள் ஓர் ஆசிரியர், எழுத்தாளர். உங்கள் பார்வையில் ஒற்றுமையை எப்படிப் பார்க்கிறீர்கள் எனத் தெரிந்து கொள்வதோடு எனது ஆய்விற்கும் இது உதவும். இந்த மலேசிய நாளில் மாணவர்கள் எப்படி உணர வேண்டும் என நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: வேறு என்ன சொல்லிவிட முடியும்? எல்லாரையும் போல நானும் ‘தேசப்பற்றை வளர்த்துக் கொள்ளுங்கள்’ எனச் சொல்லிவிடலாம்தான். ஆனால், அப்படியே விட்டுவிட முடியாது. உங்கள் ஆக்கச்சிந்தனையையும் ஆய்வுச் சிந்தனையையும் வளர்த்துக் கொள்ள வழிவகைகளைத் தேடுங்கள். உங்கள் திறனால் இந்த நாட்டுக்கு என்ன செய்ய முடியும் எனச் சிந்தித்துப் பாருங்கள். நீங்கள் ஒரு மலேசியர் என உணருங்கள். நம் தலைமுறையின் எதிர்காலம் இங்குத்தான் என நம்புங்கள்.

காஞ்சனா: அருமை. நம் நாட்டில் ஒற்றுமை இருக்கிறதுதானே?

கே.பாலமுருகன்: ஒற்றுமை இல்லாவிட்டால் இன்று நாம் சுதந்திரத் தினத்தைக் கொண்டாடிக் கொண்டிருக்க மாட்டோம். சுதந்திரம் பெற்ற நாட்டின் தேசிய அடையாளமாக நான் பார்ப்பது இன ஒற்றுமைகளைத்தான். எந்த நாட்டில் இன ஒற்றுமை இல்லையோ அந்த நாடு சுதந்திரம் பெறாது. புரட்சி என்பது ஒன்றுப்படுவதில்தான் பிறக்கிறது. ஆனால், பெற்ற சுதந்திரத்தை அடுத்து வரும் தலைமுறை ஒற்றுமையாய் இருந்து பாதுகாக்க வேண்டும் என்றே விரும்புகிறேன்.

காஞ்சனா: ஒற்றுமை உணர்வை எப்படி விதைக்கலாம் என நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: இப்பொழுதுள்ள மனிதர்களிடம் அதை விதைக்க நினைப்பதைவிட அடுத்த தலைமுறையான மாணவர்களிடம் இதை விதைப்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். முதலில், வேறு இனத்தைச் சேர்ந்த பெரியவர்களைப் பார்த்தால் அவர்களை ‘ ஓய் சீனா, ஓய் இந்தியா, ஓய் மெலாயு’ என இனப் பாகுபாட்டைத் தூண்டும் வகையில் அழைக்காமல் இருக்க நாம் கற்பிக்க வேண்டும். எந்த இனத்தவராக இருந்தாலும் ‘ஹெலோ அங்கிள்’ என மரியாதையுடன் பண்புடன் அவர்கள் அழைக்க நாம் ஆய்த்தம் செய்ய வேண்டும். இதுதான் ஒற்றுமை உணர்வு. இங்கிருந்துதான் தொடங்குகிறது. அதை விடுத்து என்ன தத்துவம் பேசினாலும் ஆகாது. முதலில் நம் வீட்டுச் சிறுவர்கள் இந்த நாட்டில் வாழும் சக இனத்தவர்களை எப்படி மதிக்கிறார்கள் என்பதிலிருந்து இந்த நாட்டின் எதிர்க்கால சமூகத்தைக் கணிக்க வேண்டும். வரப் போகிற காலம் உலகமயமாக்கலின் தூண்டுதல்கள் அதிகம் இருக்கப் போகிறது.

காஞ்சனா: அவர்வர்களின் பண்பாடு இதுபோன்ற பண்புகளை வலியுறுத்தியும் ஏன் இத்தகைய சூழல் என நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: நான் ஓர் ஆசிரியன், மேலும் எழுத்தாளன். சமூக ஆய்வாளன் இல்லை. இருப்பினும் எனக்குள் ஒரு விமர்சகன் இருக்கிறான். அதன் போக்கில் சொன்னால், அனைத்துமே கல்வியின் வழி, கலாச்சாரத்தின் வழி சொல்லப்பட்டுள்ளன. ஆனால், நடைமுறைப்படுத்த ஒவ்வொரு குடும்பங்களும் தனித்த பங்கை வகித்தால் ஒற்றுமைமிக்க ஓர் எதிர்க்கால சமூகத்தை இப்பொழுதைப் போலவே நிலைநிறுத்த முடியும்.

காஞ்சனா: ஒரு சிறந்த குடிமகனை உருவாக்கக் குடும்பத்தின் பங்கு அதுதானா?

கே.பாலமுருகன்: நீங்கள் கேட்கும் கேள்வி ஒரு வழக்கமான பட்டிமன்ற கேள்வியைப் போல இருந்தாலும், குடும்பமும் ஒரு நெருக்கமான பங்கை வகிக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு தனிமனிதனும் குடும்பம் என்கிற நிறுவனத்திலிருந்தே கல்வி என்கிற நிறுவனத்திற்குள் நுழைகிறான். மீண்டும் அவன் குடும்பத்திற்குள் வருகிறான். குடும்பம் என்பது அவனுக்கு ஒரு பாதுக்காப்பான பண்பாட்டு நிறுவனம். அங்கிருந்து அவன் எப்படிச் சமூகத்தோடு ஒத்து வாழ வேண்டும் என்பதைக் கற்க வேண்டும். இல்லையேல் அவன் சமூக விரோதியாகிவிடுவான்.

காஞ்சனா: இந்த இனிய நாளில் இது எங்களுக்கு ஒரு மகத்தான செய்தியாக உணர்கிறேன். மிக்க நன்றி ஐயா.

கே.பாலமுருகன்: இது மகத்தான செய்தியெல்லாம் இல்லை. ஒரு பொதுசமூகத்தின் விதிகளுக்கு உட்பட்ட கருத்துகள் தான். நான் ஆசிரியன் என்பதை மீண்டும் மீண்டும் நினைவுப்படுத்திக் கொண்டே உங்களுக்குப் பதில்களை அளிக்கிறேன்.

காஞ்சனா: அப்படியென்றால் ஓர் எழுத்தாளனாக நாட்டின் ஒற்றுமையைப் பற்றி உங்கள் கருத்தென்ன?

கே.பாலமுருகன்: அருமையான கேள்வி. சுற்றி வளைத்துவிட்டீர்கள். இனி தப்பிக்க முடியாது போல. எழுத்தாளனுக்கு ஒரு கருத்து ஆசிரியருக்கு ஒரு கருத்து என என்னால் இரண்டு மன்ங்களில் இயங்க முடியாது. ஒரு கருத்தைக் கீழே தள்ளிவிட்டு இன்னொரு கருத்தின் வழி தற்காலிகமாக வாழ முடியுமே தவிர மற்ற வித்தைகளெல்லாம் எனக்கு வராது. இருப்பினும், என் எதிர்ப்பார்ப்பாக ஒன்றைக் கூறலாம். ஒற்றுமை என்பது மனிதநேயத்துடன் தொடர்பில் இருக்க வேண்டும். ஒருவனுக்கு ஆபத்து என்றால் அவன் எந்த இனம் எனப் பார்த்துவிட்டு உதவும் பழக்கம் மலேசியர்களுக்கு இல்லை என்பதே நான் என் வாழ்நாள் அனுபவத்தில் உணர்ந்த உண்மை. இதுவே என் தேசியத்தின் மீது நான் வைத்திருக்கும் நம்பிக்கை. இது பரவலாக்கப்பட வேண்டும்; அதிகரிக்கப்பட வேண்டும் என்பதே ஒரு குடிமகனாக எனக்குள் இருக்கும் நம்பிக்கை விதை. ஒரே உள்ளம் ஒரே உணர்வு. வலி என்றால் எல்லாருக்குமே வலிதான். வலியிலும் இரத்தத்திலும் வேறுபாடுகள் இல்லை.

காஞ்சனா: உங்கள் வாழ்நாளில் கண்ட உண்மை என எப்படிச் சொல்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: சாலையில் மோட்டார் பழுதாகி நின்ற கணங்களில் உடனே மகிழுந்தை நிறுத்தி எனக்கு உதவிய இரண்டு மலாய் நண்பர்களை இன்றும் நினைவுக்கூர்கிறேன். மருத்துவமனைக்குச் செல்ல என் அப்பாவை அவர் காயங்களுடன் தூக்கி தன் காருக்குள் வைத்த என் பக்கத்து வீட்டுச் சீனரை இன்றும் மனத்தில் சுமந்து கொண்டிருக்கிறேன். கார் விபத்தாகி நடுவீதியில் நின்று கொண்டிருக்கும்போது ஓடோடி வந்து உதவிய நண்பர் ‘ஹென்ரியையும்’ டேக்சி அங்கிளையும் என்னவென்று சொல்வது? இப்படிப் பல சம்பவங்கள்; பல நிகழ்ச்சிகள். அனைத்திலும் சீனர், மலாய்க்காரர், தமிழர்கள் என நிறைந்திருக்கும் இந்த வாழ்க்கையில் நான் ஒற்றுமையை ஓர் இலட்சியமாகப் பார்க்கின்றேன். இக்கட்டான நிலையில் மனிதர்களை மதிப்பிட ஓர் இலகுவான மனம் வந்துவிடுகிறது.

காஞ்சனா: நெகிழ்ச்சியான நினைவுக்கூறல் ஐயா. மகிழ்ச்சி. என்னுடைய பயிற்றுப்பணிக்காக எடுக்கப்பட்ட இந்த நேர்காணலுக்கு உதவிய உங்களுக்கு நன்றி.

கே.பாலமுருகன்: பயிற்றுப்பணிகள் இலாப நோக்குடையது. ஆனால், அங்கு நீங்கள் பெறும் சிந்தனையை/அறிவை/அனுபவத்தை அப்படியே விட்டுவிடாதீர்கள். நன்றி. மலேசியத் தின வாழ்த்துகள்.

 

 

About The Author