பேய் விடுதியில் ஒரு நாள்
நேற்று முன்தினம் யூ.பி.எஸ்.ஆர் மாணவர்களுக்குத் தமிழ்மொழிப் பயிற்சிப் பட்டறை நடத்துவதற்காகக் காலையிலேயே ஜாசின் நகரை வந்து சேர்ந்தேன். பரப்பரப்பில்லாத கடைத்தெருக்கள். 200 மீட்டருக்கு ஒருமுறை நாற்சந்தி வட்டம். மீண்டும் மீண்டும் தோன்றி நான்காக உடைந்து மீண்டும் ஒரு சிறிய தெருவையே காட்டி நின்றது. ஒட்டுமொத்தமாக 20 நிமிடத்திலேயே சுற்றிவிட முடிந்த சிறிய நகரம்தான். காலை உணவுக்குப் பிறகு பள்ளிக்குச் செல்லலாம் என முடிவெடுத்த பிறகு ஜாசின் சிறுநகரைச் சுற்றி உணவுக் கடை தேடி அலைந்தேன். திறக்கப்படாத கடைகள் ஒரு சலனமும் இல்லாமல் வெறுமனே தெரிந்தன. பசியுடன் சென்று பள்ளியிலேயே சாப்பிட்டுக் கொண்டேன். வயிறு ஒரு பக்கம் ‘புர்ர்ர்ர்ர்’ என காற்றை உள்ளிழுத்து எதையோ சமன் செய்து கொண்டிருந்தது. உரைப்பான உணவுகளை விட்டு இரண்டு மாதங்கள் ஆவதால் எனக்கு உணவு தேடுவதென்பது இப்பொழுதெல்லாம் சவாலாகிவிட்டது.
பட்டறையில் நான்கு மணிநேரம் உரையாற்றிய களைப்புடன் எனக்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விடுதிக்குப் போய் சேர்ந்தேன். அப்பகுதியில் இந்த ஒரு விடுதிதான் என்று யாரோ சொன்னதாக ஞாபகம். அறை எண் 306 கிடைத்தது. வரவேற்புப் பகுதியில் ஒரே ஒரு மலாய் பெண்மணி அமர்ந்திருந்தார். அவரும் அதிகம் பேசவில்லை. விடுதி கொஞ்சம் பழமையாகத் தெரிந்தது. பெரும்பாலும் எனக்கு அதெல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது. கேரளாவில் ஒருமுறை கதவைத் திறந்ததும் கட்டிலில் விழும் அளவிற்கே மிகச் சிறிய அறையிலெல்லாம் தங்கிய அனுபவமுண்டு. ஆகவே, அப்பழமையான தோற்றம் என்னை எந்த அசௌகரிகத்திற்கும் ஆளாக்கவில்லை.
அறையைத் திறக்கும்போது உணவுக் கெட்டுப்போன ஒரு வாடை. அறைக்குள் அலசினேன். அப்படி ஏதும் தென்படவில்லை என்றாலும் இரவுவரை அந்த வாடை நீங்கவே இல்லை. சரி, அதையும் சமாளித்துக் கொள்வோம் எனறவாறு விட்டுவிட்டேன். தொலைக்காட்சி பெட்டி வழக்கத்திற்கு மாறாகக் கட்டிலிலிருந்து சற்று தொலைவாகவும் அரைப்பாதி சுவரை நோக்கியவாறும் இருந்தது. தொலைகாட்சி பார்த்துத் தொலைக்க வேண்டாம் என்பதற்காக அதை அங்கு வைத்ததைப் போல தெரிந்தது. கொஞ்சம் அசைத்து கட்டில் பக்கம் முழுவதுமாகத் திருப்பிவிட்டு, தொலைகாட்சியைத் திறந்தால் எல்லாம் ‘ஜேனல்களும்’ பொறி மிகுந்து இருந்தது. கீழே போய் புகார் செய்து யாராவது ஒருவர் வரும்வரை காத்திருந்து அதைச் சரி செய்து தொலைகாட்சியில் படம் பார்க்கும் அளவிற்கு உடலில் தெம்பு இல்லை.
சிறிது நேரம் கட்டிலில் சாய்ந்தேன். இரவு உணவுக்காக வெளியே போக வேண்டும் என்கிற சலிப்புடன் உறக்கம் தட்டியது. ஓர் எலி சட்டென அறைக்குள் புகுந்து பெரிதாகிக் கொண்டிருந்தது. அதன் உருவம் அறைக்கு நிகராக வளர்ந்து நின்றதும் எனக்கு மூச்சடைப்பு உண்டாகியது. உடனே, சிரமப்பட்டு விழித்துப் பார்த்தேன். அபப்டியொன்றும் அங்கு இல்லை. வெறும் கனவுதான். ஆனால், மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. தூங்க வேண்டாமென முடிவு செய்துவிட்டு குளிக்கத் துவங்கினேன். ஆங்காங்கே கறை படிந்திருக்கும் குளியலறை. அநேகமாக இந்த அறையில் ஆட்கள் தங்கி பல மாதங்கள் ஆகியிருக்கலாம் என ஒரு நினைப்பு எழுந்தது. மீண்டும் அதே போல உணவுக் கெட்டுப்போன வாடை.
விடுதியைவிட்டு வெளியேறும்போது முதலில் வரவேற்புப் பகுதியில் இருந்த பெண் அப்பொழுது காணவில்லை. யாரும் இருக்கிறார்களா எனப் பார்க்கவும் எனக்குப் பொறுமை இல்லை. வெளியேறும்போது குருவிகளின் இரைச்சல் பேரோசையாகக் கேட்டுக் கொண்டிருந்தது. எதிரில் தெரிந்த கட்டிடங்களிலும் மரங்களிலும் ஏதோ ஒரு வகை குருவிகள் பேரோசை கேட்டுக் கொண்டே இருந்தது. எனக்கு மிகவும் நெருக்கமான ஓர் இசை அது. சுங்கைப்பட்டாணி நகரமும் 1980களின் இறுதியில் இப்படித்தான் இருந்தது. சிட்டுக்குருவிகளின் நகரம் என என்னுடைய ஒரு கட்டுரையில் இக்குருவிகளைப் பற்றி எழுதியிருக்கிறேன். இரவு நேரத்தில் சுங்கைப்பட்டாணி ஒரு குருவிக்கூடாக மாறிவிடும். மின்சாரக் கம்பங்கள், கட்டிடங்கள் என எங்குமே குருவிகள் சூழ்ந்து கிடக்கும். அது எங்களுக்கு அசூசையாக இருந்ததே இல்லை. எப்பொழுதோ ஒரு நாளில் அல்லது ஒரு வாரத்தில் அக்குருவிகள் மீண்டும் சுங்கைப்பட்டாணி நகரத்திற்கு வரவே இல்லை. அத்தனை லட்சம் குருவிகளும் எங்குப் போயிருக்கும் என யாருக்குமே தெரியாது. எங்கள் நகரமே சூன்யமாகி நின்றது. அத்தனை காலங்களுக்குப் பிறகு இப்பொழுது மீண்டும் அதே போன்ற ஓர் உணர்வு கிடைத்தது. சிறிது நேரம் எங்கேயும் நகராமல் அந்த இசைக்குள் என்னைத் தொலைத்துக் கொண்டிருந்தேன். இருத்தல் உணர்வை இழக்க வைக்கும் ஓர் இசை. குருவிகள் விநோதமானவை. எப்பொழுது ஒரு குருவியைப் பார்த்தாலும் மனம் இலேசாகும்.
எங்குத் தேடியுன் இந்திய உணவகம் தென்படவில்லை. ஒரு குறுகிய பாலத்தைத் தாண்டி அடுத்த சாலையில் ஒரேயொரு இந்திய உணவகம் அதுவும் மூடியிருந்தது. வேறு வழியில்லாமல் விடுதிக்கும் எதிர்ப்புறம் இருக்கும் ஒரு சீனக்கடைக்கு வந்தேன். பழைய தோற்றமுடைய ஒரு கடை. பலகைகளில் கருமை படிந்திருந்தது. ஊதுபத்தி வாசமும் வெள்ளை பனியன் அணிந்திருந்த அக்கடை முதலாளியும் எனக்குக் கம்போங் ராஜாவை ஞாபகப்படுத்தின. காலம் மாறிவிட்டதாக எப்படிச் சொல்கிறோம்? வெறும் எண்களை வைத்து மட்டும்தானா எனச் சந்தேகம் சூழ்ந்து கொண்டது. சாப்பிட்டுவிட்டு வெளியேறும்போது சாலையில் வாகனங்களே இல்லை. ஆச்சர்யமாக இருந்தது. குக்கிராமங்கள்கூட இவ்வளவும் சீக்கிரம் அமைதியாகிவிடாது எனத் தோன்றியது. ஏன் இங்கு இத்தனை அவசரம்? ஒரு 24 மணி உணவுக்கடைகள் கூட தென்படவில்லை.
சாலையைக் கடந்து மீண்டும் விடுதியை நோக்கி நடந்தேன். அப்பொழுது விடுதியின் முழுத் தோற்றத்தையும் பார்க்க முடிந்தது. ஒரேயொரு அறையின் விளக்கு மட்டும் திறந்திருந்தது. நான் தங்கியிருக்கும் மாடியில் எந்த விளக்கும் எரியவில்லை. அநேகமாக இந்த விடுதியில் இன்றிரவு நானும் வேறு யாரோ ஒருவரும்தான் தங்கியிருக்கிறோம் எனத் தெரிந்தது. மேலேறி என் அறையிருக்கும் மாடிக்குள் நுழைந்ததும் அங்கு ஏற்கனவே இருந்த நிசப்தம் அதை உறுதிப்படுத்தியது. ஒவ்வொரு அறையின் கதவையும் கடக்கும்போது காதுகளைக் கூர்மையாக்கினேன். அப்படியேதும் ஆள் இருப்பதாகத் தெரியவில்லை. இதுபோன்ற விடுதிகளில் நான் தங்கியதே இல்லை. இதற்கு முன்பெல்லாம் சுற்றி யாராவது இருப்பார்கள். ஏனோ கொஞ்சம் படப்படப்பாக இருந்தது.
உள்ளே நுழைந்த பின் அறையைப் பரிசோதனை செய்ய மனம் தூண்டியது. தொலைகாட்சிக்குப் பின்னால் இருந்த திரைச்சீலையை விலக்கினேன். மேலே மூன்றடுக்குக் கண்ணாடி சன்னல் மட்டுமே. அதையும் திறக்க முடியாது. அதன் ஓரத்தில் எப்பொழுதோ புகைத்துப் போட்டிருந்த ஒரு சிகரெட் துண்டு. தொட்டுப் பார்த்தேன். சூடாக இல்லை. அப்பொழுதுதான் கொஞ்சம் நிம்மதி. அறையில் இருந்த எல்லா பொருள்களின் மீது அந்த உணவுக் கெட்டுப்போன வாடை படிந்திருப்பதைக் கண்டறிய முடிந்தது. அதெப்படி ஓர் அறையில் அந்த வாடை முழுவதுமாக ஆக்கிரமித்துள்ளது. மனம் என்னவோ கற்பனை செய்து பார்த்தும் பதில் பிடிப்படவில்லை. ஒருவேளை அறையை ஒழுங்காகச் சுத்தம் செய்யாமல் விட்டிருக்கலாம் எனத் தோன்றியது.
தொலைகாட்சியிலும் பார்க்க எதுவும் இல்லை. புத்தகம் ஒன்றை எடுத்து வாசிக்கத் துவங்கினேன். இரண்டு பக்கத்திற்கு மேல் போனதும் அசதி உடலின் அனைத்துக் கதவுகளையும் தட்டத் தொடங்கியது. தூங்கலாம் என விளக்கை அடைத்ததும் தொலைகாட்சிக்குப் பின்னால் இருக்கும் சன்னலிலிருந்து மட்டும் ஒரு சிறிய வெளிச்சம். முழு இருட்டில் அதனை நன்றாகக் கவனிக்க முடிந்தது. என்னவாக இருக்கும் எனக் கற்பனை மட்டுமே செய்து கொண்டு படுத்திருந்தேன். சென்று பார்க்கத் தோன்றவில்லை. அபப்டியே விட்டுவிட்டேன். முதன்முறையாக தனிமை உணர்வை ஏற்படுத்திய விடுதி அதுவாகத்தான் இருக்கும். அத்தனை பெரிய விடுதி; மூன்று மாடிகள் கொண்டவை; எப்படியும் 200 அறைகள் இருக்கும் போல. அப்படிப்பட்ட இடத்தில் நான் மட்டும் இருப்பதைப் போன்ற உணர்வு அசௌகரிகமாக இருந்தது. வெளியேறினாலும் போகத் திக்கில்லை. இடமும் புதிது. வெளியிலும் ஒன்றுமே இல்லை.
கண்களை மூடி உறங்கத் துவங்கினேன். எப்பொழுது நினைவு தப்பி ஆழ்ந்த உறக்கம் செல்வேன் என நினைத்துக் கொண்டிருக்கையில் யாரோ கதவைத் திறக்க முயற்சிப்பதைப் போல ஒரு நினைப்பும் சத்தமும் கேட்டது. சட்டென விழித்தேன். அப்படியொரு சத்தமும் இல்லை. விளக்கைத் தட்டாமல் மீண்டும் உறக்கத்திற்குள் ஆழச் சென்றேன். அசதி உடலைப் பின்னிக் கொண்டிருந்தது. இப்பொழுது கதவைத் திறந்து யாரோ உள்ளே வந்தார்கள். என் கட்டிலுக்கு அருகில் இருக்கும் நாற்காலியில் அமர்ந்துவிட்டு என்னையே பார்த்துக் கொண்டிருந்தது அந்த உருவம். சட்டென அந்த உருவம் என் மீது பாய்ந்ததும் மீண்டும் மூச்சுத் திணறல். அதனிடமிருந்து தப்பிக்க முயல்கிறேன். கொஞ்ச நேரத்திலே அது கனவு என்றும் தெரிந்துவிட்டது. ஆனால், விழிக்க முடியவில்லை. கனவிலிருந்து தப்பித்து வெளியேற வேண்டும். உண்மையில் அறையில் யாரும் இல்லை என்பதைக் கனவிலிருந்து வெளியேறியப் பிறகுத்தான் உறுதிப்படுத்த முடியும் என நன்றாக உணர்கிறேன். மூச்சு அடைக்கிறதே தவிர ஆனால் விழிக்க இயலவில்லை.
வியர்த்த உடலுடன் கட்டிலிலிருந்து எழுந்தேன். உடனே, விளக்கைத் தட்டினேன். எத்தனை அசதியுடன் படுத்த நாட்களில்கூட தூக்கம் இந்த அளவிற்குத் தொந்தரவுக்குள்ளானதில்லை. அதுவும் இப்படி ஏதோ ஒன்று நம்மை அமிழ்த்தும் என யார் யாரோ சொல்லிக் கேட்டிருக்கிறேனே தவிர அனுபவித்ததில்லை. அந்த அறை எனக்குச் சரியாகப் படவில்லை, அந்த விடுதியே எனக்கு ஒவ்வாததைப் போன்று தெரிந்தது. என்ன செய்வது? தங்கித்தான் ஆக வேண்டும். மீண்டும் படுத்தேன். மீண்டும் அதே போன்ற கனவுகள். மீண்டும் விழித்தெழுதல். அப்படியே ஒரு முழு இரவு நிம்மதியில்லாமல் கழிந்தது. மறுநாள் அங்கிருந்து காலையிலேயே கிளம்ப வேண்டும். ஏற்றிச் செல்ல ஆள் வந்ததும் கீழே இறங்கி சாவியைக் கொடுத்தேன். அதே மலாய் பெண்மணித்தான் இருந்தார். என்னிடம் அதிகம் பேசவில்லை.
வாகனத்தில் ஏறிச் செல்லும்போது அவ்விடுதியைக் கவனித்தேன். எல்லாம் சன்னல் துணிகளும் மூடியிருந்தன. கடைசியாக ஒரு கனவு மட்டும் ஞாபகம் இருந்தது. ஒரு பூச்சி சுவரில் ஊர்ந்து கொண்டிருந்தது. பிறகு அங்கிருந்த ஓர் அலமாரிக்குள் நுழைந்தது. மீண்டும் இன்னொரு பூச்சி சுவரிலிருந்து வெளியே வந்தது. அது குளியறைக்குள் நுழைந்தது. இப்படியே பூச்சிகள் அறை முழுவதும் சூழ்ந்து கடைசியாக என் பெருவிரலில் ஏறியது. கால்களை உதறிக் கொண்டு எழும்போது காலை மணி 6.25. அந்தக் கெட்டுப்போன உணவின் வாடை வீச்சம் அதிகரித்து வீசிக் கொண்டிருந்தது.
- கே.பாலமுருகன், 07 ஜூன் 2017
குறிப்பு: இப்பதிவில் இடப்பட்டிருக்கும் படங்கள் உண்மையானதல்ல; இணையத்திலிருந்து எடுக்கப்பட்டவை.
Ratha kolandai
Super sir
தொடர்க தங்கள் பணி