புதிய பிரதமருக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோள் கடிதம்
‘முதலாவதாக நம் நாட்டின் புதிய பிரதமருக்கு ‘அன்னையர் தின வாழ்த்துகள்’ -ளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்நாட்டிற்கு நீங்கள் ஓர் அன்னையாக இருந்து எங்களை அரவணைக்க வேண்டும் என்று பெரிதும் விரும்புகிறோம்.’
புதிய ஆட்சியைத் தொடங்கியுள்ள, புதிய மலேசியா உருவாக்கத்திற்கு வித்திட்டு அரசியல் மறுமலர்ச்சியை உண்டாக்கிய நாட்டின் ஏழாவது பிரதமருக்கு ஓர் ஆசிரியரின் வேண்டுகோளாக இதனை முன்வைக்கிறேன். இது ஒட்டுமொத்த ஆசிரியர்களுக்கான குரலாகவும் எனக்குள் பலநாட்களாக சலனமுற்றுக் கொண்டே இருக்கின்றது. அதனை வெளிப்படையாக எவ்வித தயக்கமும் இன்றி வெளிப்படுத்துவதற்கான ஓர் ஆரோக்கியமான அரசியல் சூழல் இப்பொழுதுதான் உருவாகியிருப்பதாக நம்புகிறேன்.
- கருத்து சுதந்திரம்
கடந்த பல ஆண்டுகளாக மலேசியாவில் கருத்து சுதந்திரம் என்பது பெயரளவில் மட்டுமே இருந்து வந்திருக்கிறது. நடைமுறையில் மக்களின் எவ்விதமான கருத்துகள் மீதும் அத்துமீறலான அரசியல் அதிகாரம் செயல்பட்டுக் கொண்டே வந்திருப்பதுதான் உண்மை. அப்படிக் கருத்து சுதந்திரத்தோடு எழுதிய பலர் கைதாகியிருப்பது அதற்கொரு எடுத்துக்காட்டாகும். அதோடுமட்டுமல்லாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான கருத்து சுதந்திரத் தடையை ஆரோக்கியமற்றதாக கருதுகிறேன். எல்லா துறையையும் ஒட்டி சுதந்திரமாகப் பேசக்கூடிய குரல் ஆசிரியர்களுடையதாக இருந்தால்தான் அடுத்த தலைமுறையை உருவாக்கும் பணியை நாங்கள் விரிவான தளத்தில் மேற்கொள்ள முடியும். எங்கள் குரல்வளையை இதுநாள் வரையில் மிதித்துக் கொண்டிருந்த அதிகாரங்களை அகற்ற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசின் நடவடிக்கைகளை, திட்டங்களை ஆரோக்கியமான முறையில் ஒரு குடிமகன் என்கிற வகையில் விமர்சிக்கக்கூடிய சுதந்திரம் எங்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அத்தகையதொரு சூழல் இருந்தால்தான் ஆசிரியர்களின் உரிமை குரல் இச்சமூகத்தை ஆரோக்கியமான திசையில் வழிநடத்தக்கூடியதாக இருக்கும். சமூகம் ஆசிரியர்களை நம்புகிறது; அரசு ஆசிரியர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்பதே வேண்டுகோள்.
2. அரசியல் ஈடுபாடு
ஆசிரியர்கள் வெளிப்படையாக அரசியல் பேசக்கூடாது, அரசியல் நடவடிக்கைகளில் ஈடுப்படக்கூடாது என்கிற ஒரு மிரட்டல் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறது. ஆசிரியர்கள் நடுநிலையானவர்களாக இருத்தல் வேண்டும் என்கிற குரல் எழும்போதெல்லாம், அப்படியென்றால் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சிகள் ஒட்டி எவ்வித கருத்தையும் வெளிப்படையாக முன்வைக்கும் சுதந்திரம் எங்களுக்கு இல்லாமல் இருந்தது ஏன்? நடுநிலை என்றால் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என பாராபட்சமில்லாமல் தங்களின் அரசியல் கருத்துகளை முன்வைக்கும் சுதந்திரத்தைத்தானே குறிக்கிறது? சிந்தனையாற்றல் உள்ள ஆசிரியர்களின் மனங்களை இதற்கு முந்தைய அரசு கட்டிப்போட்டு ஒரு பயத்திற்குள்ளே ஆழ்த்தியுள்ளது. ஆகவேதான், நடந்து முடிந்த தேர்தலில் தைரியமாக ஓட்டுப் போடும் தன் உரிமை குறித்து அவர்கள் ஓர் அச்சத்தோடும் தயக்கத்தோடும் இருந்தார்கள். நான் எதிர்க்கட்சிக்குத்தான் ஓட்டுப் போடுவேன் என்று சொல்வதற்குக்கூட தயங்கினார்கள். இத்தடையை நீங்கள் மறு ஆய்வு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கற்றல் கற்பித்தலுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படாத, பணியை முன்னிலைப்படுத்தக்கூடிய வேளையில், அரசியல் குறித்தும் தங்களை ஈடுப்படுத்திக் கொள்ள ஒரு தளம் எங்களுக்கு வேண்டும். குறிப்பாக தேர்தலின்போது நாங்கள் யாருக்கு ஓட்டுப்போட வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் இனி இருக்கக்கூடாது என்பதுதான் முதன்மையான கோரிக்கையாகும்.
3. பணியிட சிக்கல்கள்
ஆசிரியர்கள் எதிர்நோக்கும் பணியிட சிக்கல்கள் குறித்து விரிவான ஆய்வை அரசாங்கத் துறைகளில் மேற்கொள்ள வேண்டும் என்று பெரிதும் எதிர்ப்பார்க்கின்றோம். இங்குப் பெற்றோர்கள் ஆசிரியர்களைப் பகையாக நினைத்தல், பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உருவாகும் சிக்கல்கள், ஆசிரியருக்கும் தலைமைத்துவத்திற்கும் உருவாகும் பிரச்சனைகள் என்று பலவகைகளிலான உள்சிக்கல்கள் இத்துறையில் இருப்பதாக பலத்தரப்பட்ட கருத்துகளும் புகார்களும் உள்ளன. அறிவைப் போதிக்கும் ஆசிரியர்களுக்கு இவ்விதமான சிக்கல்களால் ஏற்படும் மனத்தடைகள் மாணவர்களைப் பாதிக்கும் என்று யாரும் விளங்கிக் கொள்வதே இல்லை. ஆகவே, அரசாங்கத் துறைகளில் நிலவும் பணியிடச் சிக்கல்கள் குறித்து மேலதிகாரிகளுக்கோ அல்லது குறிப்பிட்ட தலைமைத்துவங்களுக்கோ, அல்லது ஆசிரியர்களுக்கோ மத்தியில் ஒரு கலந்துரையாடல் அரங்குகளை ஏற்படுத்தினால் இப்பிரச்சனையை ஒருங்கிணைத்துக் களைய ஏதுவாக இருக்கும் என்பது ஒரு வேண்டுகோளாக முன்வைக்கிறேன். ஆயிரம் புகார்களோடு திரியும் எங்கள் மனங்களை ஆற்றுப்படுத்தினால்தான் புதியதொரு தலைமுறை உருவாக்கத்தில் நாட்டின் கொள்கைக்கேற்ப சிறந்து செயல்பட முடியும். இதில் தனிப்பட்டு யாரையும் குறை சொல்வதற்கில்லை; நல்லாசிரியர்களும், நன் தலைமைத்துவங்களும் நிரம்பிய இவ்வாசிரியர் துறையில் நிலவும் கருத்தொருமையில்லாமை, பகைமை, எதிர்ப்புணர்வு போன்றவற்றை களைந்தால் இத்துறை மேலும் மிளிர்ந்து நிற்கும் என்பதே எங்கள் கருத்தாகும்.
4. வேலை மாற்றம்
சொந்த ஊர்களுக்குத் திரும்ப முடியாமல், கணவன், மனைவியைப் பிரிந்து, குடும்பத்தை விட்டு வெகு தொலைவில் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசியர்களை மீண்டும் அவர்களின் ஊர்களில் உள்ள பள்ளிகளில் பணியாற்ற ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும். பல வருடங்களாக மாறி வருவதற்காகப் பற்பல முயற்சிகளை மேற்கொண்டு, அவர்களைச் சந்தித்து, இவர்களிடம் கெஞ்சி சிரமப்பட்டுக் கொண்டிருக்கும் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கான உரிமை மறு ஆய்வு செய்யப்பட்டு இன்றைய அரசு எல்லாருக்கும் நடுநிலையான ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். வேலைக்குச் சென்று உடனே மாற்றம் கேட்பவர்களைவிட பல வருடங்களாகக் குடும்பங்களைச் சொந்தங்களைப் பிரிந்திருக்கும் ஆசிரியர்களை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். பலர் வீட்டிலிருந்து 100 கிலோ மீட்டர் வரையில் தினமும் பயணப்படுபவர்களும் நம்மிடையே உண்டு என்பதுதான் வருத்தமான செய்தியாகும். அவர்களால் எப்படி நிம்மதியாகப் போதிக்க முடியும் என்பது ஒரு கேள்வியாக முக்கியத்துப்படுத்த வேண்டும்.
5. வேலைப்பழு
இன்றைய ஆசிரியர்கள் எதிர்நோக்கும் தலையாய சிக்கல் வேலைப்பழுவே. ஒரே ஆசிரியர் வகுப்பாசிரியராகவும் இருப்பார்; முதன்மைப் பாடங்களைப் போதிப்பவராகவும் இருப்பார்; அவரே மற்ற முக்கியமான கடமைகளுக்கும் தலைமை வகிப்பார்; ஒருவரே 20க்கும் மேற்பட்ட கோப்புகளை நிர்வகிப்பவராகவும் இருப்பார்; இத்தனைக்கும் மத்தியிலும் ஆண்டிறுதியில் அனைத்து மாணவர்களையும் சிறந்த தேர்ச்சிப் பெற வைக்க வேண்டும் என்கிற அழுத்தமும் கூடி நிற்கும். அப்படி தேர்ச்சியில் சிக்கல் ஏற்பட்டால் மேலதிகாரிகள் தொடங்கி, பெற்றோர்கள்வரை பலருக்கும் அதே ஆசிரியர்தான் பதில் சொல்லவும் வேண்டும். இதுபோன்ற நிலையில் எங்களுக்கு இரண்டு கைகளை மட்டும் கொடுத்த இறைவனின் மீதுதான் கோபம் ஏற்படும். இத்தகைய நிலையில் ‘போதிப்பதுதான்’ எங்களுடைய முதல் வேலை என்கிற வகையில் மற்ற வேலைகளின் மூலம் ஏற்படும் அழுத்தத்தைக் குறைக்க நீங்கள் ஓர் ஆய்வை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து ஆசிரியர்களின் சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன். கடந்த காலங்களில் நிறைய புது திட்டங்கள், ‘ஆன்லைன் வேலைகள்’ என்று கணக்கில்லாமல் குவிந்து கொண்டே இருந்தன. ஒரு திட்டத்தை முழுமையாக உள்வாங்கிக் கொள்வதற்கு முன்பாகவே இன்னொரு திட்டம் வந்து காத்திருக்கும் சூழல் பல நெருக்கடிகளை உண்டாக்கின. அதனையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மேற்கண்ட ஐந்து கோரிக்கைகளும் இத்தனை ஆண்டுகளில் பலரின் மனத்திற்குள் ஒரு புலம்பலாக ஒரு புகாராக வெளிப்படுத்த முடியாமல் திணறிக் கொண்டிருந்தவை ஆகும். உங்கள் ஆட்சியில் கருத்து சுதந்திரமும் நாட்டு மக்களின் நலனும் முதன்மை பெறும் என்கிற தீர்க்கமான நம்பிக்கையில் இக்கோரிக்கைகளை முன்வைத்துள்ளேன். இதனை இந்நாட்டின் குடிமகன் என்கிற உரிமையில் எழுதி முடிக்கின்றேன். நன்றி.
-கே.பாலமுருகன், ஆசிரியர்.
குறிப்பு:
இதனை மலாய்மொழியில்/ஆங்கில மொழியில் மொழிப்பெயர்க்க ஆர்வமுள்ள தன்னார்வ ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், நண்பர்கள் என்னை நாடலாம். ஒரு கைத்தட்டினால் ஓசை வராது. நான் முன்வைத்திருக்கும் இக்கோரிக்கைகளுடன் உங்களுக்கும் உடன்பாடு இருந்தால் இது ஆசிரியர் வர்க்கத்தின் குரலாக மாற்ற முன்னெடுங்கள். மறுமலர்ச்சி நம் மனங்களில் உருவாக வேண்டும்.
S.Manisilvam
Memang bagus. Saya sokong penuh