நேர்காணல் தொடர் பாகம் 6: ‘எனக்கான ஓர் அடையாளத்தை உருவாக்குவேன்’ – இளம் எழுத்தாளர் ஹரிசங்கர் கதிரவன்

இளையோர் சிறுகதை போட்டியின் வெற்றியாளர்களின் நேர்காணல் தொடர்

 

 ‘எனக்கான ஓர் அடையாளத்தை உருவாக்குவேன்– ஹரிசங்கர் கதிரவன்

மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் நடத்திய இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2019-இன் வெற்றிப்பெற்றவர்களில் ஒருவர் மாணவர் ஹரிசங்கர் கதிரவன் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து இளையோர் சிறுகதைகளில் இவருடைய இரசிகன் எனும் சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. மெலாத்தி இடைநிலைப்பள்ளியில் பயிலும் இவர் வாசிப்புத்தான் இவரை சிறுகதை எழுத்தாளராக உயர்த்தியுள்ளது

 

கேள்வி: உங்களுக்குச் சிறுகதை எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?

க.ஹரிசங்கர்: ஒரு வாழ்வியலை குறுகிய சித்தரிப்பின் வழி அதிக தாக்கத்தோடு பிரதலிக்கவோ உணர்த்தவோ சிறுகதையால் இயலும் என்பதால் இத்துறையில் எனக்கு ஈடுபாடு ஏற்பட்டது என்று சொல்லலாம்.

 

கேள்வி: இச்சிறுகதை எழுதும்போட்டியில் பங்கெடுக்க யார் உங்களை ஊக்குவித்தவர்கள்?

க.ஹரிசங்கர்: முதலில் என் தாய். வெறுமனே நேரத்தையும் என் திறமையையும் வீணடிக்காமல் ஏதேனும் சாதிக்க ஊக்குவித்தார். அடுத்து என் ஆசிரியர்கள். முதன்முதலில் எனக்குத் தமிழை அறிமுகப்படுத்தி இன்றுவரை தொடர்ந்து ஊக்கம் அளித்து வருகிறார் ஐயா திரு.சண்முகம் அவர்கள். ஆரம்பப்பள்ளியான தாமான் மெலாவாத்தி தமிழ்ப்பள்ளியில் திருமதி தேவி, திரு.சரவணன் மற்றும் திரு.நவீன் போன்ற ஆசிரியர்கள் என்னுள் தமிழ்பால் ஆர்வத்தை   விதைத்தனர். பின்பு இடைநிலைப்பள்ளியில் ஆசிரியர்  திருமதி பிரமிளா அவர்கள் இடைவிடாது ஊக்கம் அளித்து என்னைத் தமிழ்சார்ந்த போட்டிகளில் கலந்து கொள்ளச் செய்து தமிழ்மேல் நான் கொண்ட ஆர்வத்தை மேலும் அதிகரித்தார். மேலும், திரு.நாகேஷ் எனும் என் அண்ணன் எனக்குத் தமிழின் அருமைகளை புரியவைத்து தமிழ்மேல் என் நாட்டத்தை மேலும் வேரூன்ற செய்தார்

 

கேள்வி: இதற்கு முன் ஏதெனும் சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டா?

க.ஹரிசங்கர்: இல்லை, ஐயா. இதுதான் எனது முதல் அனுபவம் ஆகும். இனிமேல் தொடர்ந்து போட்டிகளில் கலந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் மேலோங்கியுள்ளது.

 

கேள்வி: இச்சிறுகதை போட்டியின் வாயிலாக என்ன எதிர்பார்த்தீர்கள்? அதனைப் பெற்றீர்களா?

க.ஹரிசங்கர்: எனக்கான ஓர் அடையாளத்தை உருவாக்குவதற்கான வாய்ப்பாக இச்சிறுகதை போட்டியைக் கருதினேன். அதே போல என் சிறுகதையைத் தாங்கிய புத்தகம் வெளிவரவிருப்பதால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இன்னும் இதுபோன்று சாதித்து இலக்கியத் துறையில் எனக்கான ஓர் அடையாளத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்கிற ஆவலுடன் இருக்கிறேன்.

 

கேள்வி: இவ்வெற்றிக்காக யாருக்கெல்லாம் நன்றி சொல்ல   விளைகிறீர்கள்?

க.ஹரிசங்கர்: முதலில் இறைக்கு நன்றி. பின் அனைத்து வேளைகளிலும் எனக்குப் பக்கபலமாய் இருந்து சாதிக்க முற்படுத்தும் என் தாயிற்கு நன்றி. அதுமட்டுமின்றி அளவுகடந்த அன்பையும் அரவணைப்பையும் அனைத்து வேளைகளிலும் அளித்து என்றும் நான் சாதிக்க ஊக்கம் அளிக்கும் என் தாத்தா திரு.பெருமாள் அவர்களுக்கு நன்றி. என் வெற்றிக்கு பெரும் பங்காற்றிய அனைத்து ஆசிரியர்களுக்கும் என் நன்றி.

 

கேள்வி: போட்டியில் வெற்றிப்பெற்ற  சிறுகதையை எழுதும் முன் ஏதேனும் பயிற்சிகளை மேற்கொண்டீர்களா?

க.ஹரிசங்கர்: பல நல்ல கதைக்கருக் கொண்ட திரைப்படங்களைக் கண்டு அந்தக் கதைகளில் உள்ள முக்கிய கூறுகளை உள்வாங்குவதோடு நல்ல எழுத்தாளர்களின் சிறுகதைகள் சிலவற்றை வாசித்ததுண்டு. இதுபோன்ற என் தொடர்த் தேடலே என்னைச் சிறுகதைக்குத் தயார்ப்படுத்தியது என்று சொல்லலாம்.

 

கேள்வி: இப்போட்டியில் வெற்றிப் பெற்ற உங்களின் ‘இரசிகன்’ சிறுகதையை எவ்வாறு திட்டமிட்டீர்கள்? அக்கதைக்கான கரு எப்படி கிடைத்தது?

க.ஹரிசங்கர்: என் வாழ்வில் நான் கடந்து வந்த சில  கதாப்பாத்திரங்களின் தாக்கமே இச்சிறுகதைக்கான விதைகள் எனலாம். நான் சந்திக்கும் ஒவ்வொருவரிடமும் எதனையாவது பெற்றுக்கொண்டே இருக்கிறேன். அது இடைவிடாது தொடர்ந்தால் வாழ்க்கையில் கதைச்சொல்லுதலுக்கான இடைவெளியும் இல்லாமல் தொடர்ந்து எழுதி கொண்டே இருப்பேன்.

 

நேர்காணல்: கே.பாலமுருகன்

About The Author