நேர்காணல் தொடர் பாகம் 5: ‘இனி இலக்கியத்தின் மீதான என் தேடல் விரிவடையும்’ – இளம் எழுத்தாளர் சிந்து சந்திரன்

இளையோர் சிறுகதை போட்டியின் வெற்றியாளர்களின் நேர்காணல் தொடர்

 

 ‘இனி இலக்கியத்தின் மீதான என் தேடல் விரிவடையும்– சிந்து சந்திரன்

மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் நடத்திய இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2019-இன் வெற்றிப்பெற்றவர்களில் ஒருவர் மாணவி சிந்து சந்திரன் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து இளையோர் சிறுகதைகளில் இவருடைய மனசாட்சி எனும் சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. சிலாங்கூர், ஜாலான் அம்பாட் இடைநிலைப்பள்ளியில் பயிலும் இவர் சிறுகதைகள் படைத்து வரலாற்றல் இடம்பெற வேண்டும் என்கிற துடிப்புடன் காணப்படுகிறார்.

 

கேள்வி: உங்களுக்குச் சிறுகதை எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?

ச.சிந்து: சிறுவயதிலிருந்து எனக்குக் கதைப்புத்தகங்கள் வாசிப்பதில் ஆர்வம் அதிகம். அதிலும் திகில் கதைகளையும் மர்மக் கதைகளையும் வாசிப்பதில்தான் அதிக நாட்டம் செலுத்தினேன். பள்ளித் தேர்வுகளில் கருத்து விளக்கக் கட்டுரைகளை எழுதுவதைக் காட்டிலும் சிறுகதைகளை எழுதுவதையே தேர்ந்தெடுப்பேன். தமிழ்மொழி ஆசிரியர்களின் பாராட்டுகளே எனக்குச் சிறுகதை எழுதும் ஆர்வத்தை மேலும் தூண்டின.

 

கேள்வி: இச்சிறுகதை எழுதும்போட்டியில் பங்கெடுக்க யார் உங்களை ஊக்குவித்தவர்கள்?

ச.சிந்து: இச்சிறுகதையின் விவரத்தை முகநூலில் பார்த்து என் அம்மா எனக்குக் கூறினார். பிறகு, என்னை இப்போட்டியில் பங்கெடுக்கும்படி எனது தாயார் ஊக்கமூட்டினார். எனது தமிழ்மொழி ஆசிரியை, திருமதி முல்லைமலர் அவர்கள் இப்போட்டியைப் பற்றிய தகவல்களைப் புலனத்தில் பகிர்ந்தார்.

 

கேள்வி: இதற்கு முன் ஏதெனும் சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டா?

ச.சிந்து: சிறுகதை போட்டியில் கலந்து கொண்டது என் முதல் அனுபவமாகும். இன்னும் பல போட்டிகளில் பங்கெடுக்க இப்போட்டி எனக்குத் தூண்டுகோலாக அமைகிறது எனலாம்.

 

கேள்வி:இச்சிறுகதை போட்டியின் வாயிலாக என்ன எதிர்பார்த்தீர்கள்? அதனைப் பெற்றீர்களா?

ச.சிந்து: இப்போட்டி என் திறமையை வெளிக்கொணர ஒரு தளமாக சிறந்த முறையில் நான் பயன்படுத்திக் கொண்டேன். தேர்ந்தெடுக்கப்பட்ட பத்துச் சிறுகதைகளில் என் சிறுகதையும் ஒன்றாகும் என்ற செய்தியைக் கேட்டவுடன் அளவில்லா மகிழ்ச்சியடைந்தேன்.

 

கேள்வி:இவ்வெற்றிக்காக யாருக்கெல்லாம் நன்றி சொல்ல   விளைகிறீர்கள்?

ச.சிந்து: எனக்குள் இந்தத் திறமையை வெளிக்கொணர செய்த ரிஞ்சிங் தமிழ்ப்பள்ளி, செமினி ஆசிரியை, திருமதி சுகந்தி அவர்களுக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். மேலும், என்னுடைய ஆரம்பப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியை, திருமதி அம்பாளுக்கும் இடைநிலைப்பள்ளி தமிழ்மொழி ஆசிரியை, திருமதி முல்லைமலர் அவர்களுக்கும் இவ்வேளையில் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். என் குடும்பத்தினருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன்.

 

கேள்வி: போட்டியில் வெற்றிப்பெற்ற  சிறுகதையை எழுதும் முன் ஏதேனும் பயிற்சிகளை மேற்கொண்டீர்களா?

ச.சிந்து: சிறுகதை எழுதுவதற்காக நான் எந்தப் பயிற்சியும் மேற்கொள்ளவில்லை. அவ்வப்பொழுது, ஆங்கில நாவல்களையும் தமிழில் சிறுவர் நாவல்களையும் வாசித்து என் கற்பனையாற்றலை வளர்த்துக் கொண்டேன்.

 

கேள்வி: இப்போட்டியில் வெற்றிப் பெற்ற உங்களின் ‘மனசாட்சி’ சிறுகதையை எவ்வாறு திட்டமிட்டீர்கள்? அக்கதைக்கான கரு எப்படி கிடைத்தது?

ச.சிந்து: என்னைச் சுற்றி நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து என் சிறுகதைகளை எழுதுவேன். மனசாட்சி சிறுகதையும் அப்படியொரு சிந்தனை தெறிப்பில் உருவான கதைத்தான். எனது திறமையை வெளிக்கொணர வைத்த தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகத்திற்குக் கோடி நன்றி. தமிழ்மொழியையும் இலக்கியத்தையும் மாணவர்கள் மத்தியில் உருவாக்குவதில் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் மிகப்பெரிய பங்காற்றியுள்ளது. முக்கியமாக ஆசிரியர் திரு.கே.பாலமுருகன் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறேன். இனி வரும் காலங்களிலும் இலக்கியத்தின் மீதான என் தேடல் விரிவடையும் என்று நம்புகிறேன்.

 

நேர்காணல்: கே.பாலமுருகன்

நன்றி: தமிழ் மலர்

About The Author