நேர்காணல் தொடர் பாகம் 4: ‘சிறுகதை எழுதுவதன் மூலம் என் கற்பனையாற்றலை வெளிக்கொணர முடிகிறது‘– இளம் எழுத்தாளர் ஹரீஷ் ஆசைத்தம்பி
இளையோர் சிறுகதை போட்டியின் வெற்றியாளர்களின் நேர்காணல் தொடர்.
‘சிறுகதை எழுதுவதன் மூலம் என் கற்பனையாற்றலை வெளிக்கொணர முடிகிறது‘– ஹரீஷ் ஆசைத்தம்பி
மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் நடத்திய இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2019-இன் வெற்றிப்பெற்றவர்களில் ஒருவர் மாணவர் ஹரீஷ் ஆசைத்தம்பி ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து இளையோர் சிறுகதைகளில் இவருடைய ‘முற்றுப்புள்ளி’ எனும் சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. பினாங்கிலுள்ள புக்கிட் மெர்தாஜாம் உயர்நிலைப்பள்ளியில் பயிலும் இவர் இலக்கியத்தில் சாதிக்க வேண்டும் என்கிற பல இலட்சியங்களோடு திகழ்கிறார்.
கேள்வி: உங்களுக்குச் சிறுகதை எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?
ஆ.ஹரீஷ்: எனது கற்பனையாற்றலை வெளிக்கொணர சிறுகதை எழுதுவது ஒரு சிறந்த தளமாக இருக்கிறது. எனது மொழித்திறனையும் சொல்வளத்தையும் பெருக்கிக் கொள்வதற்கும் சிறுகதை எழுதுவது ஒரு தூண்டுகோலாக உள்ளது.
கேள்வி: இச்சிறுகதை எழுதும்போட்டியில் பங்கெடுக்க யார் உங்களை ஊக்குவித்தவர்கள்?
ஆ.ஹரீஷ்: இப்போட்டியில் கலந்து கொள்வதற்குக் குறிப்பாக எனது ஆசிரியர் ஒரு முக்கியக் காரணமாக இருந்தார். மேலும், என் பெற்றோர்களின் ஊக்கமுட்டலும் நான் இப்போட்டியில் கலந்து கொள்ள மற்றொரு காரணமாக இருந்தது.
கேள்வி: இதற்கு முன் ஏதேனும் சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டா?
ஆ.ஹரீஷ்: நான் எனது பினாங்கு மாநில அளவில் நடைபெற்ற இன்பத்தமிழ் விழாவில் சிறுகதைக்கான போட்டியில் முதல் நிலையில் வெற்றிப் பெற்றேன். அதுமட்டுமன்றி, தேசிய அளவில் நடந்தேறிய இன்பத்தமிழ் விழாவிலும் சிறுகதை போட்டியில் ஐந்தாம் நிலையில் வெற்றிப் பெற்றேன்.
கேள்வி: இச்சிறுகதை போட்டியின் வாயிலாக என்ன எதிர்பார்த்தீர்கள்? அதனைப் பெற்றீர்களா?
ஆ.ஹரீஷ்: இதற்கு முன் நான் வெற்றிப் பெற்றப் போட்டிகளே இந்தப் போட்டியிலும் முயற்சிக்க பெரும் நம்பிக்கையாக இருந்தது. அத்தகையதொரு நம்பிக்கை இப்போட்டியின் வாயிலாக மேலும் அதிகரித்துள்ளது என்றே சொல்ல வேண்டும்.
கேள்வி: இவ்வெற்றிக்காக யாருகெல்லாம் நன்றி சொல்ல விளைகிறீர்கள்?
ஆ.ஹரீஷ்: இந்த வெற்றிக்கு முக்கியமாக என்னை இந்தப் போட்டியில் கலந்துகொள்ள ஆர்வமூட்டிய எனது ஆசிரியைக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். அதனைத் தொடர்ந்து, எனக்கு எப்பொழுதும் ஊக்கமளிக்கும் என் பெற்றோருக்கும், நண்பர்களுக்கும் இவ்வேளையில் நன்றி நவில்கிறேன்.
கேள்வி: போட்டியில் வெற்றிப் பெற்ற சிறுகதையை எழுதும் முன் ஏதேனும் பயிற்சிகளை மேற்கொண்டீர்களா?
ஆ.ஹரீஷ்: எனது சிறுகதைத்திறனை வளர்த்துக் கொள்ள நான் நிறைய சிறுகதைப் புத்தகங்கள்.படிப்பேன். நான் படித்தச் சில இலக்கிய உரைகளில் இருக்கும் அழகியப் புதிய சொற்களையும் கண்டெடுத்து நான் எழுதும் சிறுகதையில் பயன்படுத்துவேன். திரைப்படங்கள் வழியும் நான் எனது கற்பனைத்திறனை வளர்த்துக் கொண்டு அதைச் சிறுகதையில் பயன்படுத்துவேன்.
கேள்வி: இப்போட்டியில் வெற்றிப் பெற்ற உங்களின் ‘முற்றுப்புள்ளி’ சிறுகதையை எவ்வாறு திட்டமிட்டீர்கள்? அக்கதைக்கான கரு எப்படிக் கிடைத்தது?
ஆ.ஹரீஷ்: இந்தச் சிறுகதையை எழுதுவதற்கு தற்போதைய காலத்தில் இளையோர்கள் மத்தில் நடக்கும் குறிப்பாக இடைநிலைப்பள்ளி மாணவர்களிடையே நடக்கும் சம்பங்களே காரணமாகும். நான் இதுபோன்ற சிறுகதை எழுதுவதற்கு எனக்குத் தூண்டலாக இருந்தது நான் வாழும் சூழலே. இவ்வரிய வாய்ப்பிற்குத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். எழுத்து என்பது மனத்தோடு நெருக்கமானது என்பதை நான் எப்பொழுதும் உணர்கிறேன்.
நேர்காணல்: கே.பாலமுருகன்
நன்றி: தமிழ் மலர் பத்திரிகை