நேர்காணல் தொடர் பாகம் 3: ‘என் அம்மாதான் எனக்கு ஊக்கமாகத் திகழ்ந்தார்’ – இளம் எழுத்தாளர் ரேஷ்னாஸ்ரீ சுந்தரேசன்
இளையோர் சிறுகதை போட்டியின் வெற்றியாளர்களின் நேர்காணல் தொடர்
‘என் அம்மாதான் எனக்கு ஊக்கமாகத் திகழ்ந்தார்’ – ரேஷ்னாஸ்ரீ சுந்தரேசன்
மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் நடத்திய இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2019-இன் வெற்றிப்பெற்றவர்களில் ஒருவர் மாணவி ரேஷ்னாஸ்ரீ சுந்தரேசன் ஆவார். தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து இளையோர் சிறுகதைகளில் இவருடைய ‘எட்டாத உயரம்’ எனும் சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. தாமான் ரிந்திங் 2, பாசீர் கூடாங் இடைநிலைப்பள்ளியில் பயிலும் இவர் சிறுகதைகள் எழுதி தன் பெற்றோருக்குப் பெருமை சேர்ப்பேன் என்கிற ஆவலோடு காணப்படுகிறார்.
கேள்வி: உங்களுக்குச் சிறுகதை எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?
சு.ரேஷ்னாஸ்ரீ: சிறுகதை என்பது குறுகிய நேரத்தில் நிறைவாக படிக்கக்கூடிய ஓர் இலக்கியத்தின் சாரமாகும். ஒரு கதையைப் படிக்கும் போது அக்கதை மிக சுவாரிசியமாக இருந்தால் அக்கதையின் முடிவு அன்றே தெரிய வேண்டும் எனும் ஆவல் இருக்கும். நாவலாக இருந்தால் இது சாத்தியமில்லை. ஆனால், அதே கதையைச் சிறுகதையாக எழுதினால் அக்கதையை ஒரே நாளில் படித்து அதன் முடிவை அறிந்து கொள்ளலாம். கதைகள், நாவல்கள் தொடர் நாடகங்கள் போலானவை. சிறுகதை திரைப்படங்கள் போலானது. எனக்குத் திரைப்படம் பார்ப்பதில் அதிக விருப்பம். திரைப்படத்தின் அந்த 3 மணி நேரத்திலேயே படத்தின் தொடக்கம், திருப்புமுனை, முடிவு அனைத்தும் தெரிந்து விடும். அதே போல் தான் சிறுகதையும். இதனால் தான் சிறுகதை எழுதும் ஆர்வம் எனக்கு வந்தது.
கேள்வி: இச்சிறுகதை எழுதும்போட்டியில் பங்கெடுக்க யார் உங்களை ஊக்குவித்தவர்கள்?
சு.ரேஷ்னாஸ்ரீ: இந்தச் சிறுகதை எழுதும் போட்டியின் விளம்பரம் முகநூலில் பகிரப்பட்டது. என் அம்மா முகநூலில் அவ்விளம்பரத்தைப் பார்த்து எனக்குத் தெரிவித்தார். என் திறமையைப் பெரிதளவில் வெளிப்படுத்த ஒரு சந்தர்ப்பம் கிட்டியுள்ளது என இவ்வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டேன். என் அம்மா தான் எனக்கு ஊக்கம் அளித்து என்னை இப்போட்டியில் பங்கு கொள்ள ஆர்வம் ஊட்டினார்.
கேள்வி: இதற்கு முன் ஏதேனும் சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டா?
சு.ரேஷ்னாஸ்ரீ: இதற்கு முன் நான் ஆறாம் ஆண்டு பயிலும் போது குறியிலக்குப் பள்ளிகளுக்கு இடையிலான சிறுகதை எழுதும் போட்டியில் பங்கு பெற்று தங்கம் வென்றுள்ளேன்.
கேள்வி: இச்சிறுகதை போட்டியின் வாயிலாக என்ன எதிர்பார்த்தீர்கள்? அதனைப் பெற்றீர்களா?
சு.ரேஷ்னாஸ்ரீ: இப்போட்டியில் நான் வெற்றிப் பெற்று எனது இந்தக் கதை எழுதும் ஆற்றலின் மூலம் எனக்கும் என் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்ப்பேன் என நம்புகிறேன். என் சிறுகதையும் நூல் பிரசுரத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது என என்னும் போது எல்லை இல்லா மகிழ்ச்சி அடைகிறேன். என்னைப் போல சிறுகதை எழுத ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறேன் என எணணும் போது பெருமையாக உள்ளது.
கேள்வி: இவ்வெற்றிக்காக யாருகெல்லாம் நன்றி சொல்ல விளைகிறீர்கள்?
சு.ரேஷ்னாஸ்ரீ: என் அம்மா. ஏனென்றால் எனக்குப் போதுமான ஊக்கம் அளித்து என்னை இப்போட்டியில் பங்குகொள்ள வைத்தார். ஓர் ஆசிரியராக பணிப்புரியும் அவருக்குப் பல அலுவல்கள் இருந்தாலும் அவற்றை முடித்து விட்டு நான் கதை எழுதி முடிக்கும் வரை என்னோடு அமர்ந்து எனக்காக காத்திருப்பார். நான் முதல் முதலில் எழுதிய சிறுகதையே என் அம்மாவின் தமிழ்மொழி பாடவேளையின்போது தான்.
கேள்வி: போட்டியில் வெற்றிப் பெற்ற சிறுகதையை எழுதும் முன் ஏதேனும் பயிற்சிகளை மேற்கொண்டீர்களா?
சு.ரேஷ்னாஸ்ரீ: பயிற்சி என சிறுகதைக்குத் தனியாக நேரம் ஒதுக்கீடு செய்யவில்லை. பள்ளியின் பாடவேளையில் கொடுக்கும் படக்கட்டுரைகளின் மூலமாக சிறுகதை எழுத பழகினேன். அதைத் தவிர்த்து ஓய்வு நேரங்களில் சிறுகதைகள் வாசிப்பேன்.
கேள்வி: இப்போட்டியில் வெற்றிப் பெற்ற உங்களின் ‘எட்டாத உயரம்’ சிறுகதையை எவ்வாறு திட்டமிட்டீர்கள்? அக்கதைக்கான கரு எப்படிக் கிடைத்தது?
சு.ரேஷ்னாஸ்ரீ: நான் பள்ளியில் என் தோழர்களோடு இருக்கும் போது அவர்கள் எனக்குச் சின்ன சின்ன உதவிகள் செய்வர். அச்சமயம் நண்பர்கள செய்யும் இதே போல சிறு உதவி ஒருவரின் வாழ்க்கையை மாற்றுமா? என்ற சிந்தனையில் உதித்து இன்று ஒரு வெற்றிச் சிறுகதையாகியுள்ளது. இதுபோன்ற எத்தனையோ கதைகள் எனக்குள் இருக்கின்றன. அடுத்தத்தடுத்த வாய்ப்புகளுக்காக என் பேனா காத்திருக்கிறது. இவ்வரிய வாய்ப்பிற்குத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகத்திற்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நேர்காணல்: கே.பாலமுருகன்