நேர்காணல்: எனது அல்ட்ராமேன் மனதில் உள்ள தீமையை எதிர்க்கும் ஆற்றலின் குறியீடு

10154219_120401111688660_6989347643782688864_n

கே.பாலமுருகன்: உங்கள் பின்புலனைப் பற்றி சொல்லுங்கள்?
சு.யுவராஜன்: அப்பா திரு.சுப்ரமணியம் அம்மா திருமதி. கண்ணகி. 4 தம்பிகள். சிறுவயதில் பாட்டி வீட்டில் வளரும் சூழல் ஏற்பட்டது. பாட்டி தாத்தா ஸ்கார்புரோ தோட்டத்தில் இருந்தனர். தாத்தா தொழிற்சங்கவாதி. நேர்மையானவர். அவரது நேர்மையால் பாட்டி இறுதிவரை தோட்டத்தில் முற்றிய மரத்தையே வெட்ட வேண்டியிருந்தது. தாத்தா நல்ல வாசகர். நாளிதழ், நூல்கள் எனப் படித்துக் கொண்டே இருப்பார். வீட்டில் ஒரு சிறு நூலகம் இருந்தது. என் மாமாமார்களும் நல்ல வாசகர்கள். நான் இராமாயணம் மகாபாரதம் போன்றவற்றை 12 வயதிற்குள் படித்தவன். 13 வயதில் தோட்டம் மூடப்பட்டு சுங்கைப்பட்டாணியில் ஒரு மலிவு வீட்டில் குடியேறினோம்.வாழ்க்கை மாற்றம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் இந்த வயது அனுபவங்களைதான் நான் கதைகளாக எழுதியிருக்கிறேன். பிறகு மலாயாப்பல்கலைகழகத்தில் இயற்பியல் படிப்பு. பல்கலைக்கழகம் என் வாசிப்பிற்கு பெரிய தூண்டுதலாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் இருந்த தமிழ்நூலகம் நான் பெரிதும் நேசித்த இடம். 2003 மற்றும் 2004-இல் யூஎம் மற்றும் யூகேம்மில் நடந்த பேரவை கதைகள் போட்டியில் பரிசுகள் பெற்றேன். என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை இதன்வழி உருவானதுதான்.

கே.பாலமுருகன்: உங்களுக்கு முதலில் சிறுகதையில் ஆர்வம் வந்தது எப்படி?
சு.யுவராஜன்: எனக்கு நிறைய எழுதுவது பிடிக்காது. எதையும் கச்சிதமாக தேவையான சொற்களை மட்டும் பயன்படுத்தவேண்டும் என்ற சிந்தனை இருந்தது. சொற்கள் மந்திரம் போன்றவை என்றே நம்புகிறேன். ஆனால் கவிதை எனக்கு வராது என்று கண்டிப்பாக தெரிந்தது. நான் எளிதில் உணர்ச்சிவசப்படுவன் அல்ல. ஆகவே சிறுகதைகள் எழுதினேன். ஆனால் சிறுகதை என்பது சின்ன கதை அல்ல என்ற தெளிவு அப்போதே இருந்தது. நான் பல்கலைக்கழகத்தில் தமிழின் முக்கியமான சிறுகதையாளர்களான புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், கு.அழகிரிசாமி, கந்தர்வன், அசோகமித்திரன், ஜெயமோகன் என வாசித்துத் தள்ளியிருந்தேன். ஆகவே அதன் வடிவம் பற்றி தெளிவு இருந்தது. இருப்பினும் நான் மனதிலேயே நிறைய சிந்தித்துவிட்டு தேவையானதை மட்டும் எடுத்து எழுதுபவன். ஆகவே குறைவாகவே எழுதினேன்.
கே.பாலமுருகன்: நீங்கள் எழுதிய முதல் சிறுகதைக்குப் பின்னணியில் ஏதும் சுய அனுபவம் இருக்கிறதா? அதைப் பற்றி சொல்லுங்கள்
:
சு.யுவராஜன்: நிச்சயமாக சுய அனுபவம் உண்டுதான். அப்போது பேரவை கதைகள் 17 அறிவிக்கப்பட்டிருந்தது. சிவா பெரியண்ணன் தான் இயக்குனர். என்னைக் கதை எழுதச் சொல்லித் தூண்டினார். நான் மாணவப் பிரிவிற்கு ஒரு கதையும் பொதுப் பிரிவிற்கு ஒரு கதையும் அனுப்பிபேன். ஆச்சரியமாக மாணவப் பிரிவில் முதல் பரிசும் பொதுப்பிரிவில் ஆறுதல் பரிசும் கிடைத்தது. இப்போது படித்து பார்த்தால் அவை முக்கியமான கதைகளே அல்ல எனத் தெரிகிறது. என்னுடைய சிறுகதை தொகுப்பில் அவை இடம் பெறவில்லை. எனக்கு சிறுகதை எழுத வருகிறது என்பதற்கு உத்வேகத்தை அளித்ததை தவிர அக்கதைகளுக்கு வேறு எவ்வித முக்கியத்துவமும் இல்லை.
கே.பாலமுருகன்: அல்ட்ராமேன் என்கிற தலைப்பை உங்கள் நூலுக்குத் தேர்ந்தெடுக்க எது காரணமாக அமைந்தது?
சு.யுவராஜன்: ஊதுவத்திப்பையன் என்ற கதை காணாமல் போனததால்தான் இத்தலைப்பை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ஊதுவத்திப் பையன் கதையை மீண்டும் நினைவிலிருந்து எழுதி பார்த்தேன். சில தருணங்கள் போனால் போனதுதான். ஆகவே அல்ட்ராமேன் கதையைத் தேர்ந்தெடுத்தேன். அல்ட்ராமேன் நம் இன்றைய சூழலின் குறியீடு. நம் மனதில் உள்ள தீமையை எதிர்க்கும் ஆற்றலின் குறியீடு. ஆனால் என்னுடைய அல்ட்ராமேன் வெற்றி பெறுபவனாக இல்லை. ஏன் தோல்வியடைகிறான் என்பதை நீங்களே கதையைப் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

12800129_112429995819105_6757859973807322778_n

கே.பாலமுருகன்: இத்தொகுப்பில் நீங்கள் தொகுத்திருக்கும் அச்சிறுகதைகளுக்குள் ஏதும் ஒற்றுமை உண்டா?
சு.யுவராஜன்: பொதுவாக தோட்டப்புற வாழ்வு, சிறுவர்கள், அப்பா, அம்மா என்பதெல்லாம் என் எழுத்தின் பின்னணி எனலாம். ஆனால் இவை எனக்கு ஒரு ஊடகங்கள்தான். ஒரு பறவை பறப்பதற்கு சிறகை அசைப்பது போல நமக்கு எழுத சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும் பறத்தல்தான் பறவையின் இலக்கு என்பதுபோல வடிவமைதியும் கலை உணர்வும் கொண்ட கதைகளே என் இலக்கு. மேற்புரத்தில் சாதாரணமாக தெரியும் கதைகளின் அடிநாதம் வேறொரு உணர்வை, பார்வையை அளிக்க முயல்கின்றன. நல்ல வாசகர்கள் அதை உணர்வார்கள்.

கே.பாலமுருகன்: உங்கள் சிறுகதைகளுக்கு ஏதும் விருதுகள், பரிசுகள் கிடைத்ததுண்டா? நிச்சயம் அவையாவும் உங்களுக்கு ஒரு முகாந்திரமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
சு.யுவராஜன்: பரிசுகள் விஷயத்தில் நான் மிக கொடுத்து வைத்தவன். நான் முதலில் எழுதிய முதல் ஐந்து கதைகளுமே பரிசு பெற்ற கதைகள்தான். அல்ட்ராமேன், தாத்தா சாமந்தி அத்தை மற்றும் ஆகிய கதைகள் முறையே யூகேஎம் பேரவை கதை போட்டி 2003, 2004 வருடங்கள் வெற்றி பெற்றன. இப்படி நடகிறது, செம்பின் களிம்பு, அப்பாவும் நெத்திவெள்ளையும் ஆகியவை யூஎம் பேரவை கதை போட்டியில் அதே வருடங்கள் வெற்றி பெற்றன. 2010 அல்ட்ராமேன் கதைக்காக “Selangor Young talent award” விருது கிடைத்தது.2004 யூகேஎம் பரிசளிப்பு விழா என் வாழ்வில் மறக்க முடியாதது. தாத்தா சாமந்தி அத்தை மற்றும் கதைக்கு முதல் பரிசு கிடைதிருந்தது. ரெ.கார்த்திகேசு அக்கதையைச் சிறப்பாகப் பாராட்டியிருந்தார். நிகழ்ச்சி முடிந்து நிறைய மாணவர்கள் நெகிழ்வுடன் அக்கதையைப் பற்றி என்னிடம் பேசினர். கையெழுத்து எல்லாம் வாங்கினர். இதெல்லாம் எனக்குப் புது அனுபவமாக இருந்தது. சிறுகதைகள் வெறும் போட்டிக்காக எழுதப்படக் கூடாதென அன்று புரிந்தது. எழுத்து பொறுப்பையும் தேடலையும் கொண்டது. அதன் பிறகு நான் போட்டிகளில் கலந்துக் கொள்வதை நிறுத்தி விட்டேன்.

கே.பாலமுருகன்: உங்கள் சிறுகதைகளை இதற்கு முன் யாரும் விமர்சித்துள்ளார்களா? அல்லது ஆய்வு செய்துள்ளார்களா? அவர்களின் நிலைபாடுகள் உங்கள் சிறுகதை சூழலைப் பாதித்துள்ளதா?
சு.யுவராஜன்: என்னுடைய அனைத்து கதைகளைப் பற்றி விரிவான விமர்சனங்களை மா.சண்முகசிவா முன்வைத்துள்ளார். மா.சண்முகசிவா எல்லோரையும் அளவிற்கு அதிகமாக பாராட்டுவார் என்று சொல்கிறார்கள். அவ்வாறு அவர் செய்வது புதியவர்களை உற்சாகப்படுத்தவே என்பதை தெளிவானவர்கள் உணர்வர். அவரிடம் தனிப்பட்ட முறையில் அவ்வளவு சீக்கிரம் பாராட்டு பெற முடியாது. சில கதைகளைத் தவிர்த்து மற்ற கதைகளைப் பற்றி மாறுபட்ட கருத்துகளைச் சொல்லியுள்ளார். நான் தகுதியுடைய விமர்சனங்களை திறந்த மனதோடு ஏற்பேன். கே.பாலமுருகன் அல்ட்ராமேன் கதையைப் பற்றி நாளிதழில் விமர்சனம் எழுதியுள்ளார். ம.நவீன் தன் பட்டப்படிப்பிற்காக என்னுடைய சில கதைகளை ஆய்வு செய்துள்ளார்.. சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி எனக்குக் கிடைத்த ஆச்சர்யமான இலக்கிய நண்பர்.

கே.பாலமுருகன்: ஊதுபத்தி பையன், சாவி போன்ற சிறுகதைகள் பெருநகர் வாழ்வின் யதார்த்தங்களிலிருந்து உதிர்க்கும் மிகவும் நெருக்கமான குரல்களாகும். அம்மாதிரியான மனிதர்களை நேரடியாக எதிர்க்கொண்டிருக்கிறீர்களா? அவர்களைக் கவனப்படுத்த என்ன காரணம்?
சு.யுவராஜன்: சிக்கலான கேள்வி. பொதுவாக சிறுகதை என்றாலே வெளிப்படையான கருத்தைச் சொல்ல வேண்டுமென பலர் நினைக்கின்றனர். வெறுமனே கருத்தைச் சொல்ல நாம் கட்டுரை எழுதி விடலாமே. நிச்சயமாக எதோ சிக்கலைக் கதைகள் சொல்லத்தான் செய்கின்றன. ஆனால் அவை கட்டுரைபோல ஒரே தளத்தில் முடிந்து போகாமல் வேறு சில உணர்வுகளையும் சொல்ல முயல்கின்றன. இது அஞ்சல் ஓட்டம் போல. நான் சிலவற்றை கலை அம்சத்தோடு எழுதி வாசகனிடம் பேட்டனாக கொடுக்கிறேன். அவன் தன் பங்கிற்கு ஓட வேண்டும். இருவரும் வெகு தூரம் ஓடினால் சொல்ல வந்த அம்சத்தைப் பற்றி ஆழமாக சிந்தித்து இருக்கிறோம் என்று புரிந்துக் கொள்ளலாம்.
கே.பாலமுருகன்: உங்களுடைய மொழி மிகவும் யதார்த்தமான மொழி என்கிற விமர்சனம் எழுந்ததை அறிவேன். இம்மொழி உங்களுக்கு உடனே வாய்த்ததா? அல்லது எழுதி எழுதி மீண்டும் எழுதி கண்டடைந்ததா?
சு.யுவராஜன்: இது பாராட்டா இல்லை திட்டா எனத் தெரியவில்லை. என் மொழி மிக எளிமையாக சரளமாக இருப்பதாக பலர் சொல்கிறார்கள். உண்மையில் நான் சாதாரண மொழியை எழுதவில்லை. அது ஒரு பாவனைதான். நான் சிறுவயதிலேயே தமிழ் இலக்கணத்தை என் மாமா தமிழ்செல்வன் அவர்களிடம் கற்றவன். தேவாரம், திருவாசகம், நாலடியார், திருமந்திரம் என நல்ல தமிழை அறிந்தவன் தான். ஆனால் வேண்டுமென்றே “பார்த்தாயா என் மொழித் திறத்தை” என எழுதுபவர்களைப் பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது. மொழி எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை ஒரு புனைவின் சூழல்தான் தீர்மானிக்கிறது. நான் அடர்த்தியான மொழியிலும் சில கதைகள் எழுதியுள்ளேன். எப்படி இருப்பினும் மொழியைத் தேவையில்லாமல் திருகுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. நான் ஆரம்பம் முதலே இப்படிதான் எழுதுகிறேன். ஆனால் இப்போது இன்னும் செறிவாக எழுதுவதாக கருதுகிறேன். மற்றதை விமர்சகர்களும் வாசகர்களும் தான் சொல்ல வேண்டும்.

கே.பாலமுருகன்: அல்ரோமேன் சிறுகதைகள் சமூகத்திற்குள் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்?
சு.யுவராஜன்: என் கதைகள் நிச்சயம் நல்ல வாசகனிடம் ஆத்மார்த்தமாக உரையாடத் தலைப்படுகின்றன. இத்தகு உரையாடல் நடக்கும் தருணங்களில் தனி மனிதனிடம் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். சமூக மாற்றம் என்பது தனி மனிதனில் இருந்து தானே தொடங்குகிறது.
கே.பாலமுருகன்: அல்ட்ரோமேன் சிறுகதை நூலின் உருவாக்கத்தின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? யாருக்கெல்லாம் நன்றி சொல்கிறீர்கள்?
சு.யுவராஜன்: சென்ற வருடமே வந்திருக்க வேண்டிய தொகுப்பு இது. அம்மா மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். ஆனால், அது சாத்தியப்படுவதற்குள் அவர் தன் போராட்டத்தை நிறுத்திக் கொண்டார். நான் மிகவும் துவண்டு விட்டேன். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தோழி என் ஆயாசத்தை உடைத்து இதற்கான பணிகளைத் தொடங்கினார். அவருடைய தோழி பதிப்பகம் மூலமாக இந்நூலை கொண்டு வருகிறார். அப்புறம் கெடா மாநிலத்தில் உள்ள நவீன இலக்கிய சிந்தனைக் களத்தைச் சார்ந்த சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, திரு.குமாரசாமி, நண்பர் பாலமுருகன் ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்,. வெளியீட்டிற்கு இந்த அமைப்பு ஆதரவாக உள்ளது. திருமதி பாக்கியம் அவரின் வள்ளலார் சங்கத்தின் மண்டபத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். கோலாலும்பூருக்குச் சென்று விட்டப் பிறகும் பிறந்த மண்ணை மறக்காது முதல் நூலை சுங்கைப்பட்டாணியில் வெளியிடும் உங்கள் ஆர்வத்திற்கு என்னால் ஆன சிறு உதவி என பாக்கியம் அம்மா சொன்னப்போது நெகிழ்வாக இருந்தது. பெரும்பாலும் கே.பாலமுருகன் தான் கெடா நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். இவர்களுக்கு நன்றியெல்லாம் சொன்னால் என்னைத் திட்டுவார்கள். ஆத்மார்த்தமாக தழுவி கொள்வது மட்டுமே என்னால் இயன்றது.
கே.பாலமுருகன்: உங்களின் இச்சிறுகதை தொகுப்பு விரைவில் சுங்கைப்பட்டாணியிலும் கோலாலம்பூரிலும் வெளியிடப்படுவதாக அறிகிறேன். அதனைப் பற்றி விரிவாகச் சொல்லவும்.
சு.யுவராஜன்: சுங்கைப்பட்டாணியில் 26 மார்ச் 2016, மாலை 5 மணிக்கு முதல் வெளியீடு தாமான் பண்டார் பாருவில் உள்ள மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மண்டபத்தில் நடக்கவுள்ளது. தலைமையுரையை கெடா மாநில கல்வி இலாகாவின் துணை இயக்குனர் திரு.பெ.தமிழ்செல்வன் அவர்களும் சிறப்புரையை எழுத்தாளர் மருத்துவர் மா.சண்முகசிவா அவர்களும் நூலாய்வை எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களும் வழங்க உள்ளனர். கோலாலும்பூருக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்ததும் தகவல்களும் பிறகு வெளியிடப்படும். மேலதிக தகவல்களுக்கு தோழி: 019-2781413-இல் தொடர்பு கொள்ளலாம்.
நேர்காணல்: கே.பாலமுருகன்

About The Author