தாரை தப்பட்டை: ஓங்கி ஒலிக்க முடியாத அடித்தட்டு கலை
100% பாலாவின் வழக்கமான படம். கொஞ்சமும் தன் பாணியைக் காலத்திற்கேற்ப உருமாற்றிக் கொள்ளாத பிடிவாதமான படைப்பாளியின் அரதபழமையான கதை. குரூரமான மனித வதை எல்லோருக்கும் உளவியல் ரீதியில் ஏற்புடையதல்ல என்பதாலேயே தாரை தப்பட்டை மக்கள் மத்தியில் கவனம் பெறவில்லை.
கரக்காட்டக்காரர்களின் விளிம்புநிலை வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது ஆறுதல். இத்தனை கொடூரமான மனிதர்களை பாலாவினால் மட்டுமே காட்ட முடியும் என நினைக்கிறேன்.
மையக் கதை, தன்னையே காதலித்து வாழ்ந்த கரக்காட்டக்கார சூராவளியை ஒரு அயோக்கியனுக்குத் திருமணம் செய்து வைத்த பிறகு அவள் வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. கதாநாயகன் இறுதியில் வழக்கமான ஆக்ரோஷத்துடன் தீயவர்களைக் கொடூரமாகக் கொலை செய்கிறார். கிருஷ்ணர் நகராசூரனை அழிப்பதைப் போல; இராமர் இராவணனை அழிப்பதைப் போல். தீயவர்களை அழிப்பதில் புராணக் காலத்து முறையைத்தான் சில படங்கள் பின்பற்றி வருகின்றன. அதில் பாலாவும் விதிவிலக்கு அல்ல.
ஆறுதல்: இளையராஜாவின் நிதர்சனமான இசை. வறண்டுபோன அடித்தட்டு இசைக்கலைஞர்களின் சன்னமான அழுகையை இளையராஜாவின் இசையில் கேட்க முடிந்தது.
பலம்: வழக்கமான வெட்கம், அச்சம் போன்ற இழிவுகள் திணிக்கப்படாமல் ஆணுக்கு நிகரான கதாப்பாத்திரத்தை வரலக்ஷ்மி ஏற்றுள்ளார். படத்தின் முதல் பாதியில் கதையைத் தூக்கி நிறுத்துவதே அவர்தான். இரத்தமும் சதையுமாக வலிமையுடன் கரக்காட்டம் ஆடி வியக்க வைக்கிறார். சபாஷ் வரலக்ஷ்மி.
கே.பாலமுருகன்