‘தனியன்’ எனும் வேதாந்த உரைகள் தொகுப்பு நூல் வெளியீட்டை முன்னிட்டு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்களுடன் ஒரு நேர்காணல்.
தவத்திரு சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி அவர்கள் கூலிமில் தியான ஆசிரமத்தைத் தொடங்கி கடந்த 40 ஆண்டுகளாகப் பல்வேறு சமய, சமுதாய, கலை, இலக்கிய, ஆன்மீகப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றார். தான் சார்ந்த சமூகத்தை ஆன்மீகத்தின் வழி உய்வுறச் செய்ய அவர் ஆற்றிவரும் பணிகள் இவ்வட்டாரம் மட்டுமன்றி மலேசிய முழுவதும் அறிந்த ஒன்று. எதிர்வரும் 15.10.2016ஆம் நாளில் தோழி பதிப்பகம் சார்பில் அவருடைய ‘தனியன்’ வேதாந்த தொகுப்புரை நூல் சு.யுவராஜன் அவர்களால் தொகுக்கப்பட்டு வெளியீடு காணவுள்ளது.
‘வாழ்க்கை என்பது இனிமையான வாய்ப்பல்ல; அதுவொரு பொறுப்பு’ – சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி
கே.பாலமுருகன்: உங்களின் கட்டுரை நூலிற்கு ஏன் ‘தனியன்’ என்கிற தலைப்பைத் தேர்ந்தெடுத்தீர்கள்? நீங்கள் நூலின் ஊடாகச் சொல்ல வரும் தனியன் என்பவன் யார்?
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: மனிதன் என்பவன் இயற்கையிலேயே தனிமையானவன்தான். ரஜினிஸ் இதனையே ‘மனிதன் என்பவன் கூட்டம் கிடையாது; கூட்டமாக்கப்பட்டுள்ளான் என அழுத்தமாகச் சொல்கிறார். மனிதன் கூட்டமாக்கப்படுவதாலேயே அவன் தனித்தன்மைகளை இழக்க நேரிடுகிறது. ஆகையால், பற்பல மனபோராட்டங்களுக்கும் மன நெருக்கடிகளுக்கும் ஆளாகிறான். அவன் ஒரு கூட்டம் என நம்பியிருப்பதனாலேயே தொடர்ச்சியாக வாழ்நாள் முழுவதும் அலைக்கழிக்கப்பட்டு துன்பங்களுக்குள்ளாகின்றான். மனிதன் கூட்டத்திற்குள் இருப்பதில் தவறில்லை; ஆனால், தான் இயல்பாகவே ஒரு தனியன் என்கிற உண்மையை உணர்ந்தான் என்றால் அக்கூட்டத்தால் அவன் பாதிக்கப்படமாட்டான். பொதுவாகவே மனிதன் தன்னுடைய துயரங்களுக்கும் அழுத்தங்களுக்கும் யாரோ ஒருவர்தான் காரணம் என சமூகத்தை நோக்கிக் கைக்காட்டுகிறான். உண்மையில் யார் ஒருவன் தன்னுடைய துயரங்களுக்குப் பிறர் காரணமில்லை என்பதை உணர்கிறானோ அப்பொழுதே அவன் ஆன்மீகத்தின் வாசலை அடைந்துவிட்டான் என்று அர்த்தமாகின்றது. அத்தகையதொரு மனநிலைக்கு ஒரு தனிமனிதனைக் கொண்டு செல்ல வேண்டும் என்பதே ஆன்மீகத்தின் தலையாய செயல்பாடாகும்.
கே.பாலமுருகன்: அப்படி உணரும்போதே அவன் தனியனாகின்றான் அல்லவா?
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: ஆமாம். அப்படிப்பட்ட ஒரு தனியன் தான் ஆன்மீக வாழ்க்கையை வாழத் துவங்குகிறான் என அர்த்தம். அந்தத் தனியனைத்தான் நான் இந்த நூலில் குறிப்பிடுகிறேன். தான் எதிர்கொள்ளும் துன்பங்களுக்குத் தானும் காரணமில்லை; இதுவொரு நிகழ்வு என வேதாந்தம் தனியனை அடுத்த புரிதலுக்குள் கடத்திச் செல்கிறது. எப்பொழுதும் வேதாந்தம் ஒரு தனிமனிதனுக்கு இருப்புத்தன்மையைக் கொடுக்காது. பிறக்கும்போது இந்த நான் யார்? வாழ்க்கையின் அடுத்தடுத்த நிலைகளில் கணவன், மனைவி, மகன், மகள், என பலவகையான பிம்பங்கள் இந்த ‘நானின்’ மீது ஏற்றி வைக்கப்படுகின்றன. அதனையே நாம் ‘நான்’ என நினைக்கிறோம். உண்னையில் நான் என்பது ஒரு நிகழ்வு மட்டுமே. அதற்கு எந்த இருப்பும் இல்லை. இதையே சாஸ்த்திரத்தில் மாயை என்கிறோம். நான் பிறக்கும்போதே அப்பாவாகப் பிறக்க வில்லையே; அல்லது கணவனாகப் பிறக்கவில்லையே. ஆனால், அப்படி ஏற்றி வைக்கப்படும் பாத்திரங்களையே நாம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு அதனால் ஏற்படும் தாக்கங்களுக்குப் பலியாகின்றோம்; அவதிக்குள்ளாகின்றோம். மேலும், முழுமையாக அப்பாத்திரங்களாகவே மாறி நம் தனிமனித சக்திகளை அதில் விரையாமாக்கிவிடுகிறோம். அப்படியென்றால் தனியன் என்பதன் நிதர்னம்தான் என்ன? வந்துபோகும் உறவுகள், பாத்திரங்கள் ஆகியவை எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருந்தாலும் அவையாவும் ஒரு கணங்கள் மட்டுமே; அதன் பிறகு ஒவ்வொருவனும் தனியனும் தான் என்கிற உண்மையை நோக்கிப் பயணப்படுவதே நான் சொல்லும் அந்தத் தனியனின் ஆன்மீக செயல்பாடாகும்.
கே.பாலமுருகன்: உறவுகள் என்பது தனியனுக்கு ஒரு சந்தர்ப்பங்கள் என எடுத்துக் கொள்ளலாமா?
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: நம் மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களின் உரசல்களே உறவுகளை உண்டாக்குகின்றன. சமரசங்கள், நிபந்தனைகளுடனே ஒவ்வொரு உறவும் வாழ்க்கையைப் பகிர்ந்து கொள்கின்றன. இவ்வாழ்க்கை என்பது உறவுகளினுடனான ஒப்பந்தங்களே. நான் அன்பாக இருந்தால், நீயும் அன்பாக இருக்க வேண்டும். எனக்கு என் கோபத்தைக் காட்ட இடமளிக்க வேண்டும், அதே போல உனக்கு அந்த வாய்ப்பு வழங்கப்படும் என்கிற பற்பல ஒப்பந்தங்களைக் கட்டமைத்தே உறவுகள் குடும்பம் என்கிற நிறுவனத்தை அமைக்கின்றன. அதற்குள் ஒரு தனியன் சிக்கிக் கொண்டு வாழ்நாள் முழுவதும் அப்பாத்திரமாகவே மாறி தன்னுடைய தனித்தன்மையை, நான் என்கிற தன்னுணர்வை அடைய முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறான். மனிதன் இயல்பாகவே வரையறைகளால் கட்டுண்டவன் என்பதனாலேயே பல சமரசங்களுக்கு உடன்படுகிறான். அங்கிருந்து ஒருவனுக்கு விடுதலை உணர்ச்சியைக் கற்பிப்பதுதான் வேதாதந்தத்தின் திறப்பாகும்.
கே.பாலமுருகன்: .தங்களின் கடந்தகால கட்டுரைகளில் ஓர் ஆசிரியர்த்தன்மை இருக்கும். உங்களுக்கும் வாசகனுக்குமான ஓர் இடைவேளியை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், இந்தத் தனியன் நூலில் நட்புணர்வுடன் இலகுவாகப் பேசும் ஒரு மொழிநடையை என்னால் உணர முடிகிறது. இது ஒருவகையில் அகங்காரமற்ற, இடைவேளியை உடைத்துவிட்டு நெகிழ்ந்து இசைந்து மனத்திற்குள் உட்காரும் மொழிநடை. இதை எப்படிச் சாத்தியப்படுத்தினீர்கள்?
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: கடந்த பத்தாண்டுகளில் நான் நவீன இலக்கியத்தின் மிகத் தீவரமான வாசகனானேன். ஜெயகாந்தனை வாசிக்கத் துவங்கியபோதே அவருடைய ஞானத் தெறிப்பை என்னால் உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. அவர் ஒரு சீர்த்திருத்தவாதி, கருத்தியல்வாதி என்கிற பாத்திரங்களை ஏற்றி இருந்தனாலேயே அவருக்குள் இருந்த ஞானத்தை யாராலும் கண்டுகொள்ள இயலவில்லை. அவரிடமிருந்து அசோக்மித்ரன், ஜெயமோகன், சுந்தர ராமசாமி என என்னுடைய தேடல் விரிந்ததன் விளைவே இப்போது எனக்கு வாய்த்திருக்கும் மொழிநடை என நினைக்கிறேன். இலக்கியம் தனக்குள் தத்துவம், வரலாறு, ஆன்மீகம், உளவியல் என அனைத்தையுமே உள்ளடக்கி வெளிப்படுத்தும் மிகச் சிறந்த கலையாகும்.
கே.பாலமுருகன்: இலக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்குமான வேறுபாடு என்ன?
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: இலக்கியம், ஆன்மீகம் ஆகிய இரண்டுமே ஓர் அறிவுச்செயல்பாடுதான். இலக்கியம் அதனை உணர்ச்சிக்கரமாகப் பேசுகிறது. அதையே ஆன்மீகம் அறிவுப்பூர்மமாகப் பேசுகிறது. இலக்கியம் என்பது உரையாடல்; ஆன்மீகம் என்பது அறிவாடல். ஆனால், இரண்டுமே இணைகிற புள்ளி அறிவுதான். இதனைக் கருத்தில் கொண்டு என் தனியன் நூல் அதன் வாசகர்களுடன் உரையாடும்.
கே.பாலமுருகன்: ஆன்மீகத்தின் இலக்கு எது?
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: ஆன்மீகம் ஒரு தனியனிக்கு வாழ்க்கை என்பது வாய்ப்பல்ல; அதுவொரு பொருப்பு என்பதை உணர்த்தவல்லதே. ஆன்மீகம் தனிமனிதனை ஒழுக்க ரீதியில் மதிப்பிடாது. அப்படிச் செய்ய நேர்ந்தால் நான் உயர்ந்தவன் நீ தாழ்ந்தவன் என்கிற பிரிவினையை உருவாக்கிவிடும். ஆன்மீகம் அப்படிச் செய்யாது. எல்லா மனிதர்களுக்கும் அவரவர் வாழ்க்கை சூழலில் இதனையெல்லாம் கடந்து வர வேண்டும் என்கிற பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனை அத்தனியனே கடந்து வருவான். அதைக் குற்றம் சொல்லவோ; தாழ்த்திப் பேசவோ மதங்கள் வேண்டுமென்றால் அத்தகையதொரு கீழான மனநிலையைக் கொடுக்கும். ஆனால், ஆன்மீகம் அதனை அவனே கடந்து செல்லக்கூடிய விடுதலை உணர்ச்சியை அளிக்கும்.
கே.பாலமுருகன்: வேதாந்தம் என்பது வெற்று சமாதானம் என பலரால் சொல்லப்படுவதை இந்தத் தனியன் நூல் எப்படி மறுக்கும்?
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: வேதாந்தம் என்பது முழுக்க நம்மைப் பற்றி பேசுவதாகும். ஒரு தனிமனிதனைப் பற்றி தத்துவ நோக்குடன் முன்வைக்கப்படும் ஒன்று எப்படி வெற்று சமாதானமாகிவிடும்? மதங்களும் சடங்கு சம்பிராதயங்களும் கடவுளைச் சுற்றி வட்டமிடுகின்றன; ஆனால், வேதாந்தம் தன்னைச் சுற்றி வட்டமிடுகின்றது.
கே.பாலமுருகன்: இன்றைய நவீனக் காலக்கட்டத்தில் வேதாந்தம் எந்த அளவில் இளைஞர்களுக்கு முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது?
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: இன்றைய நவீன சூழலில் வாழும் இளைஞர்களுக்கு வேதாந்தம் தான் அவசியமாகிறது. அதுதான் மீண்டும் மீண்டும் தன்னைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது. சுயமரியாதையை மீட்டுக் கொடுக்கிறது. இன்றைய இளைஞர்கள் சமூதாயக் கடப்பாடுகளுக்கு முன் அடிமைப்பட்டுக் கிடக்கிறார்கள். சுய லாபங்களுக்காகவும் எலும்புத்துண்டுகளுக்காகவும் அடிமைப்பட்டுக் கிடக்கும் பல தனியன்களை மீட்டெடுக்கும் ஒரு வல்லமை வேதாந்தத்திற்கே உள்ளது.
கே: இப்போது உங்கள் ஆசிரமப் பணிகள் வேறு ஒரு பரிணாமத்தை எட்டியிருப்பதாகத் தெரிகிறதே.
சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி: 1991 வாக்கில் நாடு திரும்பியவுடன், தியான ஆசிரமத்தை நிறுவி, அங்கே ஆத்ம அறிவு எவ்வாறு முறையாகப் போதிக்கப்படுகின்றதோ, அவ்வாறு இங்கேயும் பாரம்பரிய முறைையில் அந்த ஆத்ம அறிவைக் கற்கவும் கற்பிக்கவும் முனைந்து வருகின்றோம்.
இங்கே, வேத உபநிஷத், பகவத் கீதை வகுப்புக்களோடு, நுண்கலைகளான நாட்டியம், இசை, சங்கீதம்,வாய்ப்பாடு ஆகிய வகுப்புகளும் நடந்துகொண்டிருக்கின்றன. கூலிம் வட்டாரத்தில் இருக்கின்ற தமிப்பள்ளிகள் மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் ஆன்மீக அறிவை மாணவர்கள் மத்தியில் போதித்து வருகின்றோம். நமது ஆசிரமத்தில் மாணவர்களுக்கான கூடுதல் நடவடிக்கைகள் நடத்தி வருகின்றோம்.
எதிர்வரும் சனிக்கிழமை 15.10.2016ஆம் நாளில், மதியம் 12.00 மணிக்குக் கூலிம் தியான ஆசிரமத்தின் ஸ்தாபகர் சுவாமி பிரம்மானந்தா சரஸ்வதி அவர்களின் தனியன் என்கிற வேதாந்த உரைகள் தோழி பதிப்பகத்தால் நூலாகத் தொகுக்கப்பட்டு சுங்கை கோப் ‘பிரம்ம வித்யாரண்யம்’ புதிய ஆசிரமத்தில் வெளியிடப்படவுள்ளது. இலக்கிய ஆர்வளர்கள், சமய நண்பர்கள் அனைவரையும் வரவேற்கின்றோம்.
நேர்காணல்: கே.பாலமுருகன்,
கேமரா: சு.தினகரன்