சிறுகதை: பிளவு
அம்மா துரத்திக் கொண்டிருக்கிறார். தூரத்தில் தெரியும் கொய்யா மரத்தை அடைந்துவிட்டால் ஒரு நிழலுக்குள் பதுங்கிவிடலாம் என்று தோன்றியதில் மூச்சிரைக்க ஓடிக் கொண்டிருந்தேன். பின்னால் ஓடி வரும் அம்மாவின் உருவம் சிறுக பெருத்துக் கொண்டிருந்தது. கொய்யா மரம் மேலும் சிறுத்துத் தூரம் போய்க் கொண்டிருந்தது. காலம் ஒரு ரப்பர் மிட்டாயைப் போல நானிருந்த உலகத்தை இரு முனைகளில் இழுத்துக் கொண்டிருந்தது.
சட்டென ஒரு விழிப்பு. அதே கனவு. உடல் வியர்த்துக் கொட்டியிருந்தது. வழக்கம் போல கனவுக்குப் பிறகு உடல் வியர்த்திருப்பது நான் நிஜத்தில் ஓடியது போன்ற ஓர் உணர்வை அளித்தது. சுவரில் அப்பாவின் புகைப்படம். மேசையில் எரிந்து மங்கிப் போய்க்கொண்டிருந்த மேசை விளக்கு மட்டும் உயிரைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருந்தது. களைப்புடன் எழுந்து அவ்விளக்கை அடைத்தேன். உறக்கம் கண்களில் பசைப் போல ஒட்டிக் கொண்டிருந்தது. மீண்டும் படுக்கையில் சாய்ந்தேன்.
சில நிமிடங்களுக்குப் பின்னர் அறைக்கதவு மெதுவாகத் திறக்கப்படுகிறது. நான் படுத்திருக்கும் அறைக்குள் வந்தது அப்பாதான் என என்னால் கணிக்க முடிந்தது. அரைமயக்கத்தில் இருந்தேன். வெகுநேரம் உறங்க முடியாமல் தவித்து அப்பொழுதுதான் உறக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையில் கண்கள் செருகிக் கொண்டிருந்தன. கதவை எப்பொழுதும் பூட்டித்தான் வைத்திருப்பேன். ஆனால், இன்று அறையில் இருந்த புட்டியில் தண்ணீர் தீர்ந்துவிட்டதால் வெளியே சென்று எடுத்து மீண்டும் வரும்போது கதவைப் பூட்ட மறந்துவிட்டேன். சன்னலும் அடைக்கப்பட்டிருந்ததால் வெளியில் ஒன்றுமே தென்படவுமில்லை. மயக்கம் சூழ படுக்கையில் கிடந்தேன்.
அறைக்கு வெளியே காற்றில் அசைந்தபடியே எரிந்து கொண்டிருந்த விளக்கின் ஒளியில் அப்பாவின் உருவம் சுவரில் வரைந்த இருட்டோவியத்தை யூகிக்க முடிந்தது. அவ்வுருவம் தயங்கியவாறே உள்நுழைந்ததன் உள்ளர்த்தமும் எனக்குப் புலப்பட்டது.
“நீ செத்துரு!” என்று அப்பா கதறியவாறே ஒரு கத்தியால் எங்கோ குறிவைத்து அது தப்பி என் தொடையைக் கீறியது. சதை பிளந்து இரத்தம் வடியத் துவங்கியது. சிரமப்பட்டு எழுந்து ஓட முயன்றேன். கால் கட்டிலின் விளிம்பில் மோதி கீழே விழுந்தேன். அப்பாவின் கண்களில் குரூரம் பெருகி சிவந்திருந்தன. அவரையறியாமல் வாயில் எச்சில் ஒழுக என்னைத் தீவிரத்துடன் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். அப்பா அடுத்து என் முதுகைக் குறி வைத்தார். இம்முறை முதுகின் வலதுபுறத்தைக் கத்தி பதம் பார்த்து அரை செண்டி மீட்டர் வரை கீழிறங்கியது. முதலில் இருந்த மயக்கம் இன்னமும் அதிகரித்து கவனத்தைச் சிதறடித்தது. வலி தலைவரை ஏறி நரம்புகள் புடைக்க அழுத்தியது.
கதவோரம் வேறு ஓர் உருவம் வந்து நின்றது நிழல் அசைவில் என்னால் யூகிக்க முடிந்தது. இன்னும் சற்று நேரத்தில் என் மரணம் நிகழப் போகிறது. இத்தனை நாள் நான் சிரமப்பட்டு செய்த கனவுகள் பற்றிய ஆய்வுகள் என்னோடு அழிந்துவிடுமா? பயம் சூழ்ந்து உடல் முழுவதும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. சிறுவயதிலிருந்தே கனவுகள் எனக்குள் உண்டாக்கிய அதிர்வலைகள் எளிய காரியமல்ல. சட்டென்று அவற்றை கடக்கவும் முடியாமல் ஒவ்வொரு வயத்திலும் நான் ஸ்தம்பித்து நின்றேன். என் வயத்தையொத்த எல்லோரும் என்னைத் தாண்டி நகர்ந்து கொண்டிருந்தார்கள். ஆனால், நான் என் கனவுகளுக்குள் சிக்கிக் கொண்டே வளர முடியாமல் உள்ளாத்தால் தகித்து நின்றேன். ஒவ்வொரு கனவிலிருந்து விழித்தும் அன்றைய நாள் முழுவதும் கனவின் பாதிப்பு என்னிடத்தில் நிலைத்திருக்கும். அதனை உதற முடியாமல் மனத்திலும் உடலிலும் சுமந்து அலைவேன். இது ‘ஹிஸ்த்திரியா’ வகை நோய் என்றும் உறவுக்காரர்கள் அம்மாவைப் பயமுறுத்தினர்.
கனவில் கண்ட சிறுசம்பவம்கூட மறக்காமல் நினைவில் இருக்கும். அப்படியேதான் எனக்குக் கனவு தொடர்பான ஆராய்ச்சிகள் எப்பொழுதும் விருப்பமான ஒன்றாக மாறின. கனவுகளோடு கனவுகளைத் துரத்தி வாழத் தொடங்கினேன். கனவுக்குள் கனவைக் கூர்மையுடன் கவனிக்கும் ஆற்றல் வளர்ந்தது. சூப்பர்மேன் கார்ட்டூனுக்கு நான் அடிமையாக இருந்த ஒரு காலக்கட்டத்தில்தான் என்னைப் பாதித்த முதற்கனவு தோன்றியது. வீட்டிற்குள் வந்து என்னுடன் உரையாடிவிட்ட பிறகு சூப்பர்மேன் முதுகில் என்னைச் சுமந்துகொண்டு கம்பம், தோட்டம் எனப் பறப்பதைப் போன்று கனவு கண்டு எழுந்த அன்றைய நாள் முழுவதும் உடல் எங்கோ மிதக்கும் நிலையிலேயே இருந்தது. கனவு என்பது எனக்கு இன்னொரு உலகம் போன்றே தோன்றியது. சில நாள்கள் விட்டுப்போன இடத்திலிருந்துகூட கனவுகள் தொடர்ந்து என்னை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளன.
அம்மா என்னை ஒரு வயல்வெளியில் துரத்தி வருகிறார். தூரத்தில் தனித்த மரமாய் தெரியும் கொய்யா மரம் வரை நான் ஓடுகிறேன். சட்டென விழிப்பு. சில நாள்கள் கழித்து அம்மா விட்ட இடத்திலிருந்து மீண்டும் என்னைத் துரத்துவதைப் போன்ற கனவு. கனவில் அம்மாவின் உடை, தோற்றம் எதுவுமே மாறவில்லை. கொய்யா மரம் மட்டும் சற்று வளர்ந்து பெருத்திருந்தது. கனவுக்கும் நிஜத்திற்குமான நூதனமான சில வித்தியாசக் குறியீடுகள் இருக்கும் என்று விளங்கிக் கொண்டேன்.
“வீட்டுல ஒரே பையன்… அதனாலத்தான் இப்படிப்பட்டக் கனவுகள் வருது… வேற ஒன்னும் இல்ல…” என்று அம்மாவிடம் ஆறுதல்கள் சொல்லாதவர்கள் இல்லை. எனினும் கனவுகள் பற்றிய எனது சிந்தனைகளை என்னிடமிருந்து யாராலும் பிரித்தெடுக்க முடியவில்லை. அம்மா இரண்டுமுறை ஜாலான் பாரு முனிஸ்வரர் கோவிலுக்கும் அழைத்துச் சென்று வேண்டிக்கொண்டார். கனவில் வந்த முனிஷ்வரர் அவரது குதிரையை என்னிடம் கொடுத்துவிட்டுச் சென்றது எனக்கான ஆசீர்வாதம் என்று நான் மறுநாள் சொன்னதை அப்பா நம்பவே இல்லை. நான் பிதற்றுகிறேன்; எனக்கு மனநோய் என்று கத்தினார்.
அப்பா பல நாள் என் மீது கோபத்துடன் இருந்ததன் விளைவு இது. இன்று வெறிக்கொண்டு என்னைத் தாக்க விளைவார் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. என் ஆய்வுகள் முடியும் தருவாயில் இத்தகையதொரு தாக்குதல் என்னைச் சிதைக்கத் துவங்கியது. முதுகிலிருந்து வடிந்த இரத்தம் தரையில் இறங்கி ஓடிக் கொண்டிருந்தது. திரும்பி பக்கத்தில் இருந்த அலாரக் கடிகாரத்தை அப்பாவின் மீது ஓங்கியடித்தேன். மனம் பதறியது. மெதுவாக எழுந்து பக்கத்தில் இருக்கும் இன்னொரு அறைக்குள் இரத்தக் காயங்களுடன் நுழைந்து கதவைச் சாத்திக் கொண்டேன்.
கடைசியாக வேலை பார்த்துப் பின்னர் நிறுத்தப்பட்ட பலகை தொழிற்சாலைத்தான் என் கனவுகளைக் கூர்ந்து கவனித்து உருவங்கள் கொடுத்து உலாவவிட்ட இடம். பண்டல் கணக்கில் வந்து கட்டைகளை வைப்பறையில் போட்டுவிடுவார்கள். நானும் நண்பன் நந்தாவும்தான் கட்டிலிருந்து பிரித்துக் கட்டைகளை அடுக்குவோம். பெரும்பாலும் எனக்கான வேலை நசுங்கி, உடைந்திருக்கும் கட்டைகளைத் தனியாகப் பிரித்து இன்னொரு பேளட்டில் அடுக்கி வைக்க வேண்டும். மேலும், நான் கற்பனைவாதி என்ரு நந்தாவே கிண்டலடித்துவிட்டு என்னை ஓரிடத்தில் உட்கார வைத்துவிட்டு என்னுடைய வேலையையும் அவனே செய்வான்.
என் ஆராய்ச்சி சிந்தனைக்கு உரம் சேர்த்தவன் அவன் தான். ஒரு நாள் இரவில் அவன் செத்து அவன் வீட்டின் வரவேற்பறையில் பெட்டியில் வைக்கப்பட்டது போன்று வந்த கனவை அவனிடம் சொல்லாமல் என்னால் மூன்று நாள்கள் மட்டுமே மனத்தில் பூட்ட முடிந்தது. அதற்கு மேல் பொருக்காமல் சொல்லியும் விட்டேன்.
“டேய் கனவுல சாவற மாதிரி கனவு கண்டா ஆயுசு கெட்டின்னு அம்மா சொல்லிருக்காங்கடா…” என்று சொல்லிவிட்டுப் புன்னகைத்தான். பெரியோர்கள் போகிற போக்கில் இதைச் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று மனம் நம்பியது. எனது ஆய்வில் மனம் எதை வேண்டாமென்ரு நினைக்கிறதோ அதைக் கனவு நிறைவேற்றி விளையாடும் என்பதையே நம்பியிருந்தேன். எப்பொழுதுமே மரணம் நமக்கு வேண்டாம் என்றே மனம் விரும்பும். அந்தப் பயத்தைத்தான் ஆழ்மனம் யார் யாரோ இறந்துவிட்டதைப் போல நமக்குக் காட்டி அப்பயத்தை நீக்கப் பார்க்கும். நான் இப்படித்தான் படித்தும் புரிந்தும் வைத்திருந்தேன்.
ஆனால், எனது ஒப்பந்த தவணை முடிந்து அவ்வேலையை விட்டு வந்த ஒரு வாரத்திற்குப் பின்னர் நந்தாவும் அவன் அப்பாவும் சாலை விபத்தொன்றில் சிக்கி ஈப்போ மருத்துவமனையில் அவசரப் பிரிவில் இருப்பதாக செய்தி கிடைத்தபோது நான் உடைந்துவிட்டேன். போய் பார்க்கத் திட்டமிடுவதற்குள் அடுத்த செய்தி ஆச்சரியத்தில் விழச்செய்தது. நந்தாவின் அப்பா பிழைத்துக் கொண்டதாகவும் நந்தாவின் தலையில் ஏற்பட்ட காயத்தால் அவனைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் செய்தி வந்து சேர்ந்தது. அப்பாவுடன் அவன் வீட்டிற்குப் போயிருந்தேன். நான் கனவில் கண்ட காட்சிகள் இம்மி பிசகாமல் அங்கே நடந்து கொண்டிருந்தது. ‘தேஜாவூ’ போல அனைத்தும் மீண்டும் நடப்பதைப் போன்று நிகழ்ந்து கொண்டிருந்ததன.
அன்றைய இரவில் ஒரு கனவு. நான் வீட்டின் அறையில் இருக்கிறேன். ஒரு கை மட்டும் தரையில் ஊர்ந்து வந்து தரையை மூன்றுமுறை தட்டிவிட்டு கட்டிலுக்கடியில் போய்விட்டது. சடாரென நந்தாவைப் போன்ற ஓர் உருவம் வீட்டில் அம்மாவுடன் பேசிக் கொண்டிருக்கிறதையும் காண்கிறேன். நந்தா எரிக்கப்பட்ட மறுநாளில் ஏன் இந்தக் கனவு வந்தது என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். விடைக் கிடைக்கும்வரை மனம் ஒவ்வாமல் பதறிக் கொண்டே இருந்தது. அதன் பிறகு கனவுகள் குறித்து மூதாதையர்கள் சொன்ன அத்தனை அபிமானங்களையும் என்னால் நம்ப முடியவில்லை. கனவுக்குள் ஓர் ஆழமான அடுக்குகள் உள்ளன. அவற்றை தேடிச் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்தேன். நந்தாவின் மரணமும் கனவில் வந்து தரையைத் தொடர்ந்து தட்டிக் கொண்டிருக்கும் கையும் என்னைத் துரத்திக் கொண்டே இருந்தன.
பின்னர், தேர்ந்தெடுத்து சிலரிடம் அவர்கள் கண்ட கனவுகளின் குறிப்புகளை எழுதி அதன் தொடர்ச்சியையும் அபூர்வமான தருணங்களையும் அலசி ஒரு தொகுப்பையும் தயார் செய்து முடிக்கும் நேரமிது. இதற்காகத்தான் வீடுடன் இருந்த உறவு அறுந்து நான் தனியறைக்குள் வாழ்ந்தேன். எப்படியும் கனவுகள் பற்றி நான் வெளியீடும் ஆராய்ச்சி தொகுப்பு சிக்மன்ட் ப்ராய்ட்டுக்குப் பின்னர் தமிழில் என்னை நிலைத்திருக்க செய்யும் என்று நம்பினேன். மனித மனத்திற்கு மரணம் என்பதே இல்லை. உடலைத் தாண்டிய பின் அதுவொரு நினைவுத் தொகுப்புகளாக மாறி பிரபஞ்சத்தில் நிலைத்திருக்கும் என்கிற நான் மெல்ல கண்டறிந்த உண்மையின் ஆய்வுத் தரவுகளைக் கோர்த்துக் கொண்டிருந்தேன். அப்பாவின் 30 நாள் கனவுகளைப் பட்டியலிட்டுத் தொடங்கிய ஆராய்ச்சி இது. முதலில் அப்பாவிடமிருந்து துவங்கியது நான் செய்த மிகப் பெரிய தவறு என்பது இப்பொழுது புரிகிறது. அப்பாவின் ஆழ்மனத்தின் செயல்பாட்டை ஓரளவிற்குத் தொகுத்துப் பார்க்கவும் முடிந்தது. அவ்வாராய்ச்சித்தான் இப்பிளவிற்கும் காரணமானது.
அப்பாவின் கனவுகள்
கனவு 1 (23 ஏப்ரல் 2019)
அம்மா புத்தகம் படித்துக் கொண்டிருக்கிறார். அப்பா அம்மாவின் கால்களை அறுத்துக் கொண்டிருக்கிறார். இரத்தம் நிதானமாக ஒழுகியது. அவசரமில்லாமல் கத்தியின் கூர்முனை சதையை அறுத்து மெல்ல எலும்பை நோக்கி நகர நகர இரத்தம் பதறாமல் சிந்திக் கொண்டிருந்தது. அப்பா புன்னகைத்துக் கொண்டே பார்க்கிறார்.
கனவு 5 ( 28 ஏப்ரல் 2019)
நான் வீட்டிற்கு வெளியிலுள்ள பூங்காவில் சறுக்குப் பலகையில் விளையாடிக் கொண்டிருக்கிறேன். அம்மா பூங்காவிலுள்ள நாற்காலியில் புத்தகம் படித்துக் கொண்டிருந்தார். அப்பா தூரத்தில் புதரில் பதுங்கி பதுங்கி ஆற்றின் முகப்புவரை சென்ற பின் ஒரு முதலையைப் போல உள்ளே இறங்குகிறார்.
கனவு 10 ( 03 மே 2019)
அம்மா பிரசவ வலியில் துடிக்கிறார். நான் வயிற்றுக்குள் இருக்கிறேன். அப்பா மருத்துவமனைக்கு வெளியில் நின்று யாருடனோ சண்டையிட்டுக் கொண்டிருக்கிறார். அவர் வாயில் இரத்தம் ஒழுகுகிறது.
கனவு 15 (08 மே 2019)
வீட்டில் ஒரு தேவதை உலாவுகிறாள். பின்னர் ஆக்ரோஷத்துடன் அவள் அம்மாவின் கழுத்தை நெறிக்கிறாள். அப்பா கட்டிலுக்குக் கீழே ஒளிந்து கொண்டு கத்தியைத் தீட்டிக் கொண்டிருக்கிறார்.
கனவு 20 (13 மே 2019)
அப்பா ஒரு பாலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார். பின்னால் பலர் துரத்தி வருகின்றனர். மூச்சிரைக்க வேகமாக ஓடியும் அவரால் அப்பாலத்தைக் கடக்க இயலவில்லை. விடாமல் ஓடிக் கொண்டே இருக்கிறார். தூரத்தில் அம்மா மெதுவாக வீட்டுக்கு வெளியிலுள்ள சிறுநிலத்தில் மல்லிகை செடியை நட்டுக் கொண்டிருப்பதைப் போல தெரிகின்றது.
கனவு 25 (18 மே 2019)
மீண்டும் அப்பா கட்டிலுக்கடியில் கத்தியை மறைத்து வைக்கிறார். பின்னர், நிறைய கத்திகள் அங்கு மறைக்கப்பட்டிருப்பதைப் பார்க்கிறார். சட்டென ஓர் உருவம் வீட்டில் உலாவிக் கொண்டிருக்கிறது. அவ்வுருவம் அப்பாவைத் தூரத்திலிருந்து முறைத்துப் பார்க்கிறது.
கனவு 30 (23 மே 2019)
அப்பா தனிமையில் ஒரு கயிற்றுத் தொட்டிலில் படுத்திருக்கிறார். காற்று பலமாக வீசிக் கொண்டிருக்கிறது. காற்று அவர் இருக்கும் கயிற்றுப் படுக்கையை அசைக்கிறது. சட்டென கடல் பொங்கி எழுந்து வருகிறது. அவருக்குப் பக்கத்தில் இருக்கும் அனைத்தையும் நாசப்படுத்துகிறது.
அப்பாவின் முப்பது நாள்கள் கனவுகளைத் தினமும் கேட்டு எழுதும்போது அவர் அதைச் சொல்லிவிட்டு நிதானமாக மற்ற வேலைகளில் கவனம் செலுத்தத் துவங்கிவிடுவார். ஆனால், அவருடைய மொத்த கனவுகளையும் தொகுத்து அன்றைய இரவில் நான் அவருடைய ஆழ்மனத் தொடர்பான சில விடயங்களை அவரோடும் அம்மாவோடும் பகிர்ந்து கொண்டேன்.
“இந்த ஒரு மாத அப்பாவோட கனவுகள ஆராய்ச்சி செஞ்சி பார்த்துதல… அப்பாவுக்கு இன்னொரு பெண்ணோட தொடர்பு இருக்கு… அதனால அவருக்குள்ள பயமும் இருக்கு… கூடிய சீக்கிரம் உங்கள கொல்லவும் திட்டம் போட்டுக்கிட்டு இருக்காரு… அந்தப் பயமே அவரோட மனச அல்லல்படுத்திக்கிட்டு இருக்கு…” என்று சொன்னபோது அப்பாவின் முகத்தில் கலவரம் ஆரம்பித்தது. அம்மா நான் சொன்னது புரியாமல் திகைத்தார்.
“என்னடா உளறிக்கிட்டு இருக்க? பைத்தியம் பிடிச்சிக்கிச்சா…?”
நான் மூச்சை இழுத்து விட்டப்படி அப்பாவின் முகத்தைப் பார்த்தேன்.
“அவன் சும்மா வெளையாடறான்…” என்று பேச்சைத் திசைத் திருப்ப முயன்றார்.
“ம்மா… ஆழ்மனசு வித்தைக் காட்டற இடம்தான் கனவு… ஆக, கனவு என்பது நடந்ததோ நடக்கப் போவதோ அதெல்லாம் விட நம்ம ஆழ்மனசுல நம்ம பூட்டி வைக்கற விருப்பு, வெறுப்பு, கோபம், குமுறல், கவலை எல்லாத்துக்கும் ஒரு ரூபம் கொடுத்து ஆட்டி வைக்கற இடம்தான் கனவு…”
“ஏதோ பெரிய டாக்டர் மாதிரி பேசிக்கிட்டு இருக்காத… எதேதோ புக்கு படிச்சிட்டுக் கண்டதயும் உளறாத…” அம்மா வெடுக்கென்று கோபம் வந்தவராய் எழ முயற்சித்தார்.
“ம்மா… நான் யேன் தேவ இல்லாம பொய் சொல்றன்? அவரோட கனவுல பெரும்பாலும் உங்கள எதிராத்தான் வச்சு பாக்கராரு. உங்கள ஒரு விரோதி மாதிரி… இதுக்கும் ஆழ் மனசுக்கும் தொடர்பு இருக்கு…”
“டேய்! ஏதோ நீ கேட்டனு என் கனவுல என்ன வந்துச்சோ அத அப்படியே சொன்னன்… என் உலகமே நீங்க ரெண்டு பேர்தான். நீங்க கனவுல வராம அப்புறம் என்னா எதுத்த வீட்டுக்காரனா வருவான்?” என்றார் சற்றுக் குரலை உயர்த்தியப்படியே.
“ப்பா, எந்தக் கனவும் சும்மா வராது. எல்லா கனவுக்கும் நமக்கும் தொடர்பிருக்கு. உங்க மனசுல அம்மாவ கொன்னுரணும் இல்ல அம்மாவிட்டு ஓடிப் போய்ரணும்னு ஒரு திட்டம் இருக்கு… ஆனா அத உங்களால செய்ய முடியுமான்னு ஒரு பயமும் இருக்கு… உங்க கனவு நிஜத்துல இருக்கற உங்க திட்டத்த செஞ்சி பாக்குது…”
அப்பாவும் உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தார். “இவன் ஏதேதோ உளர்றான்… சீக்கிரம் தாமான் செஜாத்தில இருக்கற ஜோன்சன் டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போய்டு…அவருத்தான் சரிப்பட்டு வருவாரு…” எனத் திட்டிக் கொண்டே உள்ளே போனார்.
நாற்காலியை விட்டு எழுந்தேன். இப்பொழுது நடந்து கொண்டிருப்பது கனவா அல்லது இது நிஜமா என்றெல்லாம் பிரித்தறியும் மனநிலையை எப்பொழுதோ நான் இழந்திருந்தேன். பலருக்கும் தாம் கண்டு கொண்டிருப்பது கனவென்று உறங்கி எழும்வரை உணர முடியாது. அதுவரை ஏதோ நிஜம் போல நம் முன்னே அது விரிந்து நிகழ்ந்து கொண்டிருக்கும். சிலருக்கு அது கனவிலேயே மாறி மாறி பலவீனமாகிக் பிரக்ஞை காணாமல் போய் மீண்டும் உருவாகி வலுவில்லாமல் மிதக்கும். சிலருக்கு கனவு மனப்பாதிப்புகளை உருவாக்கும். அவரவர் ஆழ்மனம் பொறுத்துதான் கனவுகள் உற்பத்தியாகின்றன. பின்னாளில் எனக்கு இப்பயம் முழுவதுமாகப் பீடித்துக் கொண்டு அலைக்கழிக்கிறது.
வெளியே வந்து சத்தம் எழுப்பிக் கொண்டு நகர்ந்து கொண்டிருக்கும் வாகனங்களையும் பரப்பரப்பான ஜாலான் சுங்கை சாலையையும் பார்த்துக் கொள்ளும்போது நான் எங்கிருக்கிறேன் கனவிலா நிஜத்திலா என்கிற பிரக்ஞை திடமாக உருவாகி நம்பிக்கை அளிக்கும். சிறுவயதில் வழக்கமாகி போன ஒன்று. வீட்டிற்கு வெளியில் 200 மீட்டர் தொலைவில் தெரியும் ஜாலான் சுங்கை. கனவிலும் இதே மாதிரி வீட்டிற்கு வெளியில் வந்து சாலையைப் பார்க்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், அப்பொழுதெல்லாம் சாலை பேரமைதியுடன் காட்சியளிக்கும். அது கனவென்பது அப்பொழுது உணர்ந்தும் விடுவேன். அடுத்த கணமே சட்டென விழிப்பு வந்துவிடும். அல்லது அச்சாலை சட்டென உருமாறி ஒரு நதியாகிவிடும். இப்படி சில அடையாளங்களைத் தக்க வைத்துக் கொண்டே இரு உலகிற்குள்ளும் நான் உலாவிக் கொண்டிருக்கிறேன். அப்பா கதவை உடைத்து உள்ளே வர முயலலாம். அக்கணம் மீண்டும் எதிர்த்துப் போராட என்னிடத்தில் வலு இல்லை. கால்கள் தளர்ந்திருந்தன. இரத்தம் வடிவதிலிருந்து ஓயவில்லை. தலை சுற்றலும் அதிகமாகிக் கொண்டிருந்தது.
“டேய்! பைத்தியகாரப் பயலே… உன் உசுரு என் கையாலத்தான் போவும்…!!!” என்று அப்பா முணுமுணுப்பது கேட்கிறது. அவர் தலையைக் குறிப்பார்த்து நான் விட்டெறிந்த மேசைக் கடிகாரம் இந்நேரம் ஒரு வழி செய்திருக்கும். அவரால் எழுந்து வர நேரமாகலாம். அதற்குள் நான் என்னைத் திடப்படுத்திக் கொள்ள வேண்டும்.
சுவரோடு சாய்ந்து எதிரில் தெரியும் சன்னலைப் பார்க்கிறேன். எழுந்து சன்னலைத் திறந்து வெளியில் பார்க்க மனம் தூண்டவில்லை. வெறுமனே அமர்ந்திருந்தேன். வலி உடலில் இறுகியது. கண்கள் மங்கின. உறக்கத்திற்கோ அல்லது மரணத்திற்கோ செல்லும் இடைவெளி உணர்வு அது. கண்கள் மூடின. இருள் சூழ்ந்து நின்றது.
சட்டென அம்மா பக்கத்தில் அமர்ந்திருக்கிறார். அறையில் மேசையின் மீது தலைக் கவிழ்த்துச் சாய்ந்திருக்கிறேன். எழுதிய ஆராய்ச்சி நோட்டுகள், குறிப்புகள் எல்லாம் களைந்துகிடக்கின்றன.
“டேய்! ஐயா. இந்த ஆராய்ச்சில்லாம் வேணாம். உனக்கு இன்னும் எதிர்காலம் இருக்கு… வீணாக்கிக்காத… அம்மா உன்ன நல்ல டாக்டர்கிட்டக் கூட்டிட்டுப் போறேன். எல்லாம் சரியாயிடும்…”
அத்துடன் அம்மா கனவில் தோன்றி சொல்லும் பலநூறாவது ஆறுதல் அது. நிஜத்தில் அம்மாவின் ஆறுதல் வார்த்தைகளைக் கேட்க நான் தயாராக இல்லை என்பதால் கனவு அம்மாவுடன் இப்படியொரு தருணத்தைப் பலமுறை உருவாக்கிக் கொள்கிறது. நான் இருப்பது ஒரு கனவு. அவ்விடத்தை விட்டு எழுந்தேன்.
“நான் சொன்ன எதயாச்சம் நம்பனீங்களா? அவரு ஏதோ தப்பு செய்றாருன்னு நான் கண்டுபிடிச்சிட்டென்… இப்ப என்னக் கொலை செய்யப் பாக்கறாரு… இப்ப இந்தக் கனவுலேந்து நான் எழுந்தனா அங்க என் தலைக்கு மேல கத்தி இருக்கும்… நான் செத்துருவன்… என் இத்தன நாள் உழைப்பு எல்லாம் போச்சும்மா… நான் அப்புறம் ஒரு நினைவா மட்டுமே இருக்கப் போறன்…”
அம்மாவின் முகம் நிதானமாக இருந்தது. கனவில் நாம் நினைக்கும் போக்கில் கதாபாத்திரங்கள் இருப்பதில்லை. அம்மா மீண்டும் ஏதோ பேச முற்பட்டார். அதற்குள் அப்பா கதவைத் திறந்து உள்ளே வந்தார். “இவன் பொய் சொல்றான்!!! நம்பாத,” என்று கத்தினார். சட்டென எழுந்த கோபத்தில் மேசை மீதிருந்த கூர்மையான பேனாவை அவர் கழுத்தில் செருகினேன். இரத்தம் கொப்பளித்து வெளிவந்து கொண்டிருந்தது. இத்தனை நாள் கனவில் ஆக்ரோஷத்துடன் உலாவிக் கொண்டிருந்த அப்பா என்கிற ஆழ்மனக் கற்பனையைக் கொன்றுவிட்டேன் என்று நினைத்துக் கொண்டே வழக்கம்போல சன்னலைத் திறந்தேன்.
ஜாலான் சுங்கை எப்பொழுதும் போல வாகனங்களுடன் பரப்பரப்பாக இயங்கிக் கொண்டிருப்பது தெரிந்தது. மேலும் கூர்ந்து பார்த்தேன். சாலை பரப்பரப்பு குறையாமல் அப்படியே காட்சியளித்தன.
கே.பாலமுருகன்
Christina Mani
கனவுலகம் நமக்கு அப்பார்ப்பட்ட ஒரு விஷயம். ஆனால்… கனவுலகத்தையே மேலும் மேலும் மெறுகூட்டி ….அதையே ஆராய்ந்துப் பார்த்தால் உண்மைகள் பலப் புலப்படும் என்பதை நமக்கு எழிமையாக புரிய வைப்பது போல கதையோட்டம் அதைந்துள்ளது. ஜலான் பாரு முனிஸ்வரன்….குதிரை ….நான் சத்தமாக சிரித்தே விட்டேன். திரையரங்கம் சென்று வெகுநாட்களாகி விட்டது. அந்த ஏக்கத்தையெல்லாம் தீர்த்துவிட்டது….இறைச்சி…பிளவு…போன்ற thrilling… கதைகள்…பாலமுருகன் ஐயா நீங்கள் திரைப்படம் எடுக்கலாம்…அபார திறமை உங்களிடம் கொட்டிக்கிடக்கிறது. சபாஷ் 👌👌👌 அடுத்தக் கதைக்காக காத்துக்கொண்டிருக்கிறோம் வாழ்த்துக்கள் ஐயா👑🙏💐🍰