சிறுகதை: இறைச்சி

அப்பா இறைச்சிகளை கம்பியின் நுனிகளில் மாட்டிக் கொண்டிருக்கிறார். பன்றி, கோழி, ஆடு, மாடு என்று அத்தனை இறைச்சிகளும் வரிசையாகத் தொங்கிக் கொண்டிருக்கின்றன. அடுத்து டைகரின் வாயில் ஒரு நீண்ட இரும்பு கம்பியைச் செருகி அதன் இறைச்சியையும் வரிசையில் மாட்டுகிறார். கண்கள் குரூரமாக வாயில் இரத்தம் சொட்ட அப்பாவிற்குப் பின்னால் நான் நின்று கொண்டிருக்கிறேன். அடுத்து கம்பியைச் செருக நான் வாயைப் பிளக்கிறேன்.

“பட்டர்வெர்த்…!!!”

விரைவு இரயில் வாயைப் பிளந்து பயணர்களை வெளியே கொட்டிக் கொண்டிருந்தது. தம்பி எழுந்து கீழறங்க நானும் தூக்கத்தில் ஏற்பட்ட அரைமயக்கத்துடன் எழுந்து பின் தொடர்ந்தேன். அங்கிருந்து இறங்கி ஒரு நூறு மீட்டர் நடந்து கட்டிடத்தின் முன்னே வந்து சேர்ந்தோம். பக்கத்தில் நிற்கும் என் தம்பியிடமிருந்து ஒரு முத்தம் கிடைத்தால் நான் இங்கேயே சாகத் தயார் என்பதைப் போல நின்றிருந்தேன். உடலின் மொத்த இறுக்கமும் வயிற்றில்தான் இருந்தது. உயிரை வயிற்றுப் பகுதியில் வைத்து அழுத்திக் கொண்டிருப்பதாக உணர்ந்தேன். கட்டிடத்தின் நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தவர்கள் என்னையே பார்ப்பது போன்று பிரமை. எப்படியும் அதிக நேரம் இல்லை. இன்றுடன் இதுபோன்ற எண்ணமெல்லாம் முடிந்துவிடும்.

அவ்வுயர்ந்த கட்டிடத்தின் பத்தாவது தளத்தை நோக்கி மின்தூக்கி மேலேறிக் கொண்டிருந்தது. அவமானம் மிச்சமாய் உடலிலும் மனத்திலும் நெளிந்து மனத்தை வேரறுத்துக் கொண்டிருந்தது. தம்பியை விட்டுச் சற்றுத் தள்ளி நின்று கண்ணாடி சுவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் கண்களை எதிர்க்கொள்ள அத்தனை சாதூர்யமோ அல்லது சக்தியோ இருக்கிறதா என்று தெரியவில்லை. கைகள் தளர்ந்து கொட்டிவிடுவதைப் போன்று பிடிமானமற்று உடலில் தொங்கிக் கொண்டிருந்தன. எதையாவது இறுக்கமாகப் பிடித்துக் கொண்டால் போதுமானது எனத் தோன்றியது. கண்ணாடி சுவரில் தெரிந்த என் உடலின் மீது பல்லாயிரக் கைகள் படர்ந்து கொண்டிருந்தன. உடலும் மனமும் குறுகின.

மின்தூக்கி மேலே சென்றடையும்வரை தம்பி ஏதும் கேட்டுவிடக்கூடாது என உறுதியாக இருந்தேன். நேற்றிலிருந்து அவன் என்னிடம் ஏதும் பேசவில்லை. எல்லாவற்றையும் அமைதியாகக் கவனித்துக் கொண்டு மட்டுமே இருக்கிறான். உடைத்துச் சுக்குநூறாக்கிவிடும் ஒரு பிரச்சனையின் முன் சலனப்படாமல் நிற்பதற்கு ஏதேனும் வழிகள் உண்டா என்பதை மட்டுமே மனம் தேடிக் கொண்டிருந்தது. உடலில் இருந்த உதறல் இன்னும் ஓய்ந்தபாடில்லை. மாரியம்மா பாட்டி  உயிரோடிருந்திருந்தால் ‘வாடி கண்ணு என் அம்மா…தாயீ’ என்று கட்டியணைத்து அவர் மார்பில் புதைத்திருப்பார். அது அத்தனை ஆறுதலாக இருந்திருக்கும்.

தம்பி வயதில் என்னைவிட ஐந்தாண்டுகள் சிறியவன். என்னைவிட நல்ல உயரம். அப்படியே அவன் தோளில் சாய்ந்து கதற வேண்டும் என்றுகூடத் தோன்றியது. காலையில் அப்பாவின் மீது இதே எண்ணம் இருந்தது. கால்கள் சிறுத்து கைகள் சுருங்கி மீண்டும் சிறுமியாகி அம்மாவின் மடியில் விழுந்திட மனம் ஒவ்வொரு கணமும் துடித்துக் கொண்டிருந்தது. வெட்கப்பட்டு குறுகி நிற்பதற்குத்தான் இத்தனை ஆண்டுகள் காத்து மெல்ல மெல்ல வளர்ந்து நிற்கின்றேனா என்கிற கேள்விகள் வட்டமிட்டுக் கொண்டிருந்தன. மூளை கனத்து வீங்கி சுமையாகிக் கொண்டிருந்தது.

அப்பா இந்நேரம் என்ன நினைத்துக் கொண்டிருப்பார்? மாஜு பாசார் எனும் சந்தையில் இறைச்சிக் கடையொன்றில் வேலை செய்கிறார். மதியம் 1.00 மணி வரை கோழிகளை வெட்டித் துண்டுகளாக்கிக் கட்டிக் கொடுக்கும் வேலை. கடந்த எட்டு ஆண்டுகளாக அதே வேலைதான். தினக்கூலி. ஒரு நாளில் எப்படியும் முப்பது கோழிகளைத் துண்டுகளாக்கிவிடுவார். மாஜூ பாசாரில் எல்லப்பன் என்றால் சிலருக்கு மட்டும்தான் தெரியும். அதிலும் சிலர் வெகுநேரம் சிரமப்பட்டு முயன்று பின்னர் நினைவுக்கூர முடியாமல் “தத்தாவ் லா!” என்று சொல்லிவிடும் அளவில் மட்டுமே அப்பா.

அப்பாவிற்கு அவ்விடத்தில் தெம்பளிக்கும் ஒரே விடயம் அம்மோய்தான். அம்மோய் அப்பா வேலை செய்யும் கடைக்குப் பக்கத்தில் பன்றி இறைச்சி வெட்டுபவள். இரண்டு கடைக்கும் நடுவில் கம்பிகளான தடுப்பு மட்டுமே. இரண்டு கடைகளுக்கும் பொதுவான நாதமாக வெட்டுச் சத்தங்கள்தான் கேட்கும். இடதுபுறத்தில் ஒரு வெள்ளை நெகிழி விரிப்பைக் கட்டிக் கடையை மூட முயன்ற முதலாளியின் முயற்சி தோற்றுப் பாதியிலேயே அரையுங்குறையுமாகத் தொங்கிக் கொண்டிருக்கும். அதிலும் கோழி இறைச்சின் சதைத் துண்டுகள் தெறித்துக் கழுவியெடுத்துப் பின்னர் பட்டுப் பட்டுப் படர்ந்து பழுத்து வெள்ளை நிறம் நாளடைவில் பழுப்பாகியிருந்தது. அதன்பிறகு அதை எத்தனைமுறை கழுவினாலும் பழைய நிறத்திற்கு வராது என அப்பாவே சபிக்கத் துவங்கிவிட்டார். ஆனால், ஒவ்வொருமுறையும் அதைக் கழுவு என்பதே முதலாளியின் அலம்பலாக இருக்கும் என்பார். அப்பா வீட்டிற்கு வந்ததும் அன்று அம்மோயுடன் நடந்த சாகசப் போரைப் பற்றி மட்டுமே அம்மாவுடன் சுவாரஸ்யமாகப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார். நானும் தம்பியும் அறையிலிருந்து அதனை ஒட்டுக் கேட்போம்.

“இன்னிக்கு அம்மோய் அசந்துட்டா என்கிட்டெ… அப்படியே ஜக்கு ஜக்குன்னு நாலு கோழியெ வெட்டித் பேசன்ல தூக்கிப் போட்டென்… ஒன்னுகூட மிஸ் ஆகல… ஏய் அப்பா மச்சாம் மச்சான்னு அவளே வாயப் பொளந்துட்டா…”

“ஆமாம்… பெரிய சாகசம்தான்…!” என அம்மா அலுத்துக் கொள்வதும் நிகரான நகைச்சுவை யுத்தமாக இருக்கும்.

கடையில் நடந்ததை அப்படியே செய்து காட்டும்போதுதான் அப்பா தனித்துவமாக மாறிவிடுவார். அம்மோய் எப்படிப் பார்த்தாள் இவர் எப்படிக் கோழியை உரித்தார் என்று இறைச்சிக் கடையை மறு உருவாக்கம் செய்து வீட்டினுள்ளே கொண்டு வந்துவிடுவார். கவுச்சி வாசம் வீசாத குறை மட்டுமே எஞ்சியிருக்கும். மற்றப்படி கோழித்துண்டுகளும் அம்மோயும் வீட்டில் உலாவிக் கொண்டிருப்பார்கள்.

கோழிகளின் தோலை உரித்தப் பின்னர் நீர்த்தொட்டியில் கழுவ வேண்டும். நீர்த்தொட்டி இரும்புக் கம்பி தடுப்பில்தான் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அது அப்பாவிற்கு அம்மோயைக் கவனிக்கவும் கண்களில் சைகைக் காட்டவும் மிகப் பொருத்தமான தருணம் என்று அப்பாவே பெருமைப்பட அம்மாவிடம் சொல்லி வெறுப்பேற்றுவார்.

“உங்களுக்கு இந்த அம்மோய் கத சொல்லலன்னா முடியாதுதானெ…? பார்த்து அவக்கூட ஓடிப் போய்ராதீங்க…” என்று அம்மா சிலுப்பிக் கொள்ளும்போது அப்பா அம்மோயை மேலும் வர்ணிக்கத் துவங்கிவிடுவார். தம்பியும் நானும் அறைக்குள் சிரிப்பை அடக்கப் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வோம். எப்படியும் இறுதியில் அப்பாவின் சம்பாஷணைகளின் தொடர்ச்சியை அறுத்து முடிவுக்குக் கொண்டு வருவது தம்பியின் எம்பித் தாவிக் காட்டிக் கொடுத்துவிடும் சிரிப்புத்தான். அவனால் ஓரளவிற்கு மட்டுமே சிரிப்பைக் கட்டுப்படுத்த இயலும். கண்களில் நீர்க் கசியத் துவங்கியதும் வயிற்று வலியும் எடுத்துவிடும். ஆகக் கடைசியாக தரையில் விழுந்து சிரித்துச் சுவரோரம் ஒட்டிக் கொள்ளும்போது சத்தம் வெடித்துவிடும். அதுதான் அவனின் எல்லை. அதற்கு மேல் அவனுடைய சிரிப்பலைகள் அதிகமாகி சத்தமாகச் சிரித்துவிடுவான்.

அவ்வளவுத்தான். அதுவரை அம்மாவுடன் துள்ளலாகப் பேசிக் கொண்டிருந்த அப்பா தனது பேச்சை நிறுத்திவிடுவார். அவருக்குத் தெரிந்த உலகில் நாங்கள் இருவரும் படிப்பாளிகள் மட்டுமே. படிப்பதைத் தவிர வேறு எதையும் செய்ய எங்களுக்கு உரிமையும் இல்லை. அவர் பார்க்கும் நேரம் அல்லது அவர் வீட்டில் இருக்கும் நேரம் நாங்கள் மேற்கொள்ளும் எவ்வித நடவடிக்கைகளும் படிப்பைச் சார்ந்து மட்டுமே இருக்க வேண்டும் என்பது வீட்டின் எழுதப்படாத உத்தரவு.

“நான் படிப்பில்லாம சுத்தன இடம் இல்ல. சீனன்கூட நாய் மாதிரி திரிஞ்சன். வீட்டு வேல செஞ்சன்… போர்மேன் கடையில ஸ்பானர் எடுத்துக் கொடுக்கர வேல செஞ்சன்… கம்போங் ராஜால தட்டுக் கழுவற எல்லான்னா இப்பக்கூட வேடிக்கயா சிரிப்பாய்ங்க… சொல்லிட்டன். ஒழுங்கா படிச்சமா நல்ல மார்க்கெடுத்தமா… அரசாங்க வேலைல உக்காந்தமான்னு இருக்கணும்…”

அப்பா எங்களைப் பார்த்து நேரிடையாகப் பேச மாட்டார். அம்மாவிடம் சொல்வதைப் போன்று அதே அறிவுரைகளை எங்களிடம் கடத்திக் கொண்டிருப்பார். கேட்டுச் சலித்து அதன் அடுக்கு மாறாமல் மீண்டும் ஒப்புவிக்கவும் இயலும். தம்பி அளவிற்கு எனக்குப் படிப்பும் ஏறவில்லை என்பதுதான் அவரின் உச்சமான எரிச்சல். வெட்டுக் கத்தியில் பட்டுச் சிதறும் இறைச்சித் துண்டுகளைப் போல அவர் வார்த்தைகள் மனத்தில் தெறிக்கும்.

 

“நான் கை வச்சன் அப்புறம் வேற மாதிரி போய்ரும்… ஒழுங்கா இருந்துக்க சொல்லு,”

எனக்கு அப்பாவின் அதிகப்பட்சமான வசையின் ஆழம் தெரியும். மிரட்டலின் கடைசி தொனியில் அதற்குமேல் எம்ப முடியாமல் தடுமாறுவதின் அறிக்குறியாய் தொண்டையைச் செருமுவார். பிறகு, வெளியில் இருக்கும் டைகரிடம் விளையாடச் சென்று விடுவார். டைகர் அவர் மீது பாய்ந்து முகத்தை நக்கும். மெல்ல சாந்தமாகிவிடுவார். எங்கள் நாக்குகளுக்கு இல்லாத பலம் டைகரின் நாக்கிற்கு இருந்தது.

தம்பி அப்பாவின் சின்ன சின்ன அதட்டலுகெல்லாம் பயந்து அறைக்குள் முடங்கிவிடுவான். அவர் பேச்சு சத்தத்ததை உற்றுக் கேட்டு அவர் எங்கு இருக்கிறார் எங்கு நகர்கிறார் என்று அறைக்குள்ளிருந்து அலசி ஆராய்ந்துவிட்டு அவர் அறைக்குச் செல்வதையும் மோப்பம் பிடித்து அறிந்துவிடுவான். அதன் பின்னர், ஓடிப் போய் அம்மாவிடம் கேட்க வேண்டியதையும் கேட்டு அடம் செய்ய வேண்டியதையும் சாப்பிட வேண்டியதையும் திருட்டுத்தனமாக தொலைக்காட்சியில் சத்தமில்லாமல் அவசரத்திற்குக் கிடைக்கும் நிகழ்ச்சியைப் பார்த்துவிட்டும் அறைக்குள் வந்து மீண்டும் அடங்கிவிடுவான்.

எனக்கு அப்பாவின் குரல் எல்லாத் திசைகளிலிருந்தும் கேட்பதாக மட்டுமே தோன்றும். ஒரே தொனியில் ஒரே பாய்ச்சலில் ஒரே அலையில் வீடு முழுவதும் பரவியிருந்தது. அத்தகைய மனநிலைக்கு வருவதற்கு என் வயதும்கூட காரணமாக இருக்கலாம். எஸ்.பி.எம் முடிக்கும்வரை அப்பாவுடன் உண்டான போராட்டம் மிக நீளமானது.

“பொம்பள பிள்ளயா இது? அங்க ஸ்கூல் பஸ்த்தோப்ல எவன் கூட நின்னு பேசிக்கிட்டு இருந்துச்சி கேளு… இப்ப எனக்குத் தெரிஞ்சாகணும்…”

இன்றும் ஞாபகமுள்ள இரவு அது. நான் அறையில் அப்பொழுதுதான் அறிவியல் பாடம் தொடர்பான குறிப்புகள் எழுதலாம் என்று புத்தகத்தையும் சிறிய நோட்டையும் எடுத்து மேசையில் வைத்துக் கொண்டிருந்தேன். அன்று தாமதமாக உள்ளே வந்தவரின் கேள்வி அத்தனை காட்டமாக இருக்கும் என்று நான் எதிர்ப்பார்க்கவில்லை. இதெல்லாம் புதிதல்ல என்று தெரிந்தும் அக்கேள்வி கோபத்தைக் கிளறியது.

“இப்ப சொல்ல சொல்லு… அவன்கூட என்ன பேச்சு? படிச்சி கிழிச்சிட்ட மாதிரி… இதெல்லாம் தறுதலத்தான்… வேற என்ன…?”

அம்மாவிடம் பதில் இருக்காது என்று எனக்குத் தெரியும். அப்பாவைக் கத்தவிட்டு இறுதியில் சாப்பாட்டை எடுத்துப் பரிமாறத் துவங்கிவிடுவார். உணவின் முன் உணர்வுகளும் சோம்பிவிடும். அதுவும் அன்று அம்மா ‘மீன் கிச்சாப்’ செய்திருந்தார். அப்பாவிற்குப் பிடித்தமானது.

“ம்மா… யேன் கூட்டாளிங்கக்கூட பேசக்கூடாதா?”

முதன்முதலாய் 15ஆவது வயதில்தான் எதிர்த்துப் பேசத் துவங்கினேன். பிறகு அதுவே வாடிக்கையாகவும் ஆகிவிட்டது. முதலில் அப்பாவிற்கு நான் எதிர்த்துக் குரல் எழுப்பியது அதிர்ச்சியளித்திருக்கும். இரண்டு நாள் வீட்டில் அவருடைய சத்தமே இல்லை. இரவெல்லாம் தூங்கவில்லை என்றுகூட அம்மா புலம்பிக் கொண்டிருந்தார். அதன் பிறகு அம்மாவிடம் கேட்பதாக எனது கேள்விகளையும் கோபத்தையும் அப்பாவிற்குக் கொண்டு சேர்க்கும் அவருடைய உத்தியையே கைவரப் பெற்றேன்.

“எதிர்த்துக்கிட்டு மட்டும் வந்துரும்… அடுத்தவன் பார்த்துச் சொல்றான்… பிள்ளயோட ஒழுக்கத்த மத்தவன் பேசக்கூடாது…”

“பாக்கற பார்வையில சுத்தம் இல்லன்னா எல்லாமே தப்பாத்தான் தெரியும்… மனசுல அழுக்கு இருந்தாதான அத வெளிலயும் கொட்டுவோம்…”

அன்றைய நாள் விவாதம் இப்படி அறைக்கும் அறைக்கும் வெளியேயுமாக நீண்டு எப்பொழுது ஓய்ந்தது என்றெல்லாம் தெரியவில்லை. அவர் முதலில் தூங்கினாரா அல்லது நானா என்று கூடத் தெரியவில்லை. ஆனால், அதன் பிறகு அவர் கவனமெல்லாம் தம்பியின் மீது மட்டுமே இருந்தது. என்னைப் பற்றி அவர் பேசுவதையும் சாடுவதையும் மெல்ல குறைத்துக் கொண்டார். அவரின் சுவர் இறுகியது. வீட்டிலிருந்தும் அவர் உலகத்தில் நான் பிரவேசிக்கவில்லை. அப்பா என்பது எனக்கொரு சுவராக மட்டுமே தெரியத் துவங்கியது. அப்படியாகவே அவரை ஏமாற்றிப் பெற்ற திருப்தியில்லாத எஸ்.பி.எம் முடிவுகளைக் கொண்டு மேற்கொண்டு எதையும் செய்ய முடியாமல் தவித்துக் கிடைத்த வேலைகளில் சேர்ந்து இப்படியாக ஐந்தாண்டுகள் வந்தடைந்துவிட்டன. எனக்கிருக்கும் ஆறுதல்கள் அம்மாவிற்குப் பிறகு சிவசங்கரியும் பாலகுமாரனும்தான். நாவல்கள் நிரம்பிய அறையே எனக்கான மனக்கிடங்கு.

அன்று காலை விடியும்வரை மெத்தையில் மிதப்புடன் படுத்திருந்தேன். தம்பித்தான் அலறியடித்துக் கொண்டு அறைக்கு ஓடிவந்தான். முகநூலில் என்னுடைய நிர்வாணப்படங்கள் பகிரப்பட்டிருப்பதாகக் காட்டினான். அவன் கைகள் நடுங்கின. யாரிடமோ எங்கோ அவமானப்பட்டு அழுது முடிப்பதற்குள் வீடு வந்தவனின் முகம் காட்டிக் கொடுத்துவிட்டது. படாரென்று கட்டிலிலிருந்து எழுந்து அவன் காட்டிய முகநூலைப் பார்த்தேன். ஏதோ ‘சமூக டைகர்ஸ்’ என்று பெயரிட்ட முகநூல். நடிகைகளின் நிர்வாணப் புகைப்படங்களும் இன்னும் என்னைப் போல பல பெண்களின் நிர்வாணப் புகைப்படங்களும் நிறைந்திருந்த முகநூல். காலை 7.45க்குப் பகிரப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரம் மட்டுமே ஆகியுள்ளது. அதற்குள் 700 பேரால் பகிரப்பட்டு எப்படியும் ஆயிரத்தைத் தாண்டிய சமூகக் கொந்தளிப்புக் கருத்துகள். எனக்கு என்ன நேர்ந்து கொண்டிருக்கிறது என்பதைச் சுதாரித்துக் கொள்ளும் முன்பே தலை சுற்றியது. மயக்கம் சூழ்ந்து கொண்டது. சில மணி நேரங்களுக்குப் பின்னர் அப்பா கத்திக் கொண்டே வீட்டிற்குள் வந்தார். எப்படியும் அவருக்கும் செய்தி கிடைத்திருக்கும்.

“அப்பவே சொன்னென் எந்தப் பையனையும் நம்பாதன்னு…ஓ! அவன் என் கூட்டாளி… இவன் என் கூட்டாளின்னு இளிச்சா? இப்பப் பாத்தீயா? அவ்ளத்தான் இனிமே வெளில தலை காட்ட முடியாது. சாவ வேண்டியதுதான்…”

அப்பா தலையில் அடித்துக் கொண்டார். ஓங்கி நெஞ்சில் குத்திக் கொண்டார். கோபத்தின் உச்சம் சென்றால் அவர் தன்னைத் தானே தாக்கிக் கொள்வார். சிலசமயம் தொப்பியைக் கொண்டு தன்னையே அடித்துக் கொள்வார்.

“துண்டு துண்டா வெட்டிப் போட்டுருவன் சொல்லு…”

அவருடைய வார்த்தைகள் என்னை ஒன்றுமே செய்யவில்லை. மரத்துப் போய் அறைக்குள் அமர்ந்திருந்தேன். அம்மா பதறியடித்துக் கொண்டு அப்பாவையும் என்னையும் மாறி மாறித் தேற்ற முயன்று தோற்று ஓரிடத்தில் அமர்ந்துவிட்டார். அழைப்புகள் பெருகி மின்னூக்கமில்லாமல் அடைந்துவிட்ட கைப்பேசியின் திரை நொறுங்கியிருந்தது. வேலையிடத்துத் தோழிகள், உறவுக்காரர்கள் எனக் கணக்கில்லாமல் பலரின் அழைப்பிற்கு நான் பதிலளிக்கவே இல்லை.

“அது அவ இல்லங்க… எவனோ வேணும்னே போட்டோவ ஒட்டி எடிட் செஞ்சிருக்காங்க… அதான் கூட்டாளிங்க வந்து சொல்லிட்டுப் போனாங்க. அந்தப் பேஸ்புக்குல எல்லாரும் ரிப்போர்ட் செஞ்சிட்டாங்களாம்…இவனுங்களுக்கு இதே வேலத்தான்…போட்டவன விட இத எல்லாத்துக்கும் அனுப்புறானுங்க பாரு… அவனுங்கள செருப்பால அடிச்சாதான் என்ன?”

அப்பா வெட்டிப்போட்டக் கோழியைப் போல அசைவில்லாமல் கிடந்தார். ஒரு துடிப்பும் இல்லை. கண்கள் எதிரிலிருந்த நாற்காலியின் கால்களை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்தன. கண்கள் மேலேறவில்லை.

“ங்க… போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணிடலாம்…துர அதான் சொன்னான். அவுங்க சைட்டுல போய் ரிப்போர்ட் பண்ணிட்டாங்களாம்… ஆனாலும் நம்ம கண்டிப்பா செஞ்சாகணுமா… இன்னிக்குப் போலிஸ்ல ரிப்போர்ட் பண்ணிட்டு நாளைக்கு ஏதோ இந்த இண்டர்னெட் சைட் ஏதோ ஒன்னு இருக்காம்… என்னடா அது?”

அம்மா அமைதியில் உறைந்திருந்த தம்பியிடம் கேட்டுவிட்டு அவன் முகத்தைப் பார்த்தார். அவனுக்கும் கண்கள் வீங்கியிருந்தன.

“சூருஹான்ஜெயா கொமுனிக்காசி மல்த்திமெடியா…” என்று உச்சரித்துவிட்டு மீண்டும் மௌனமானான்.

“ஆங்ங்… அதான்… நாளைக்கு அவன் கூட்டிட்டுப் போவான்… இன்னிக்குப் போலிஸ்ல ரிப்போர்ட்… நீங்க…”

அப்பா எழுந்து வீட்டிற்கு வெளியில் வேலிக் கம்பியில் உலர்ந்து கொண்டிருந்த தன் நெகிழி ஆடையை எடுத்து மோட்டாரின் முன் வக்குளில் வைத்தார். சந்தைக்குச் செல்லப் போகிறார் என்பதற்கான சமிக்ஞை அது. இந்நேரம் சந்தை அடைக்கப்படுவதற்குத் தயாராகியிருக்கும். எதிலிருந்தோ தப்பிக்க நினைக்கிறார் என்பது புரிந்தது.

“போலிஸ்ல போய் அதயே ரிப்போர்ட் பண்ண சொல்லு. அவன் கேக்கற கண்ட கேள்விக்கு என்னால பதில் சொல்ல முடியாது… அதுக்கு கோழிக் கத்தில நாக்க அறுத்துக்கிட்டுச் சாவலாம்…”

மோட்டார் வக்குளில் வைத்திருந்த வெட்டுக் கத்தியை எடுத்துச் செய்தும் காட்டினார். மொத்த கோபத்தையும் அவமானத்தையும் கண்கள் தாங்கிக் கொள்ள முடியாமல் சிவந்திருந்தன. அம்மாவிற்கு அவர் மீது சந்தேகம் வலுத்தது. குடிப்பழக்கம் இல்லாத அப்பா கோபத்தாபங்களைக் கொட்டித் தீர்க்கும் இடம் வீடும் அம்மாவும்தான். அவராகவே ஓய்ந்துவிடுவார். இப்பொழுது அழுத்தப்பட்டுள்ள கோபத்தை முழுவதும் கொட்டாமல் வேலைக்குச் செல்பவரை அரைமனத்துடன் அனுப்பவும் மனமில்லாமல் தவித்தார்.

“தோ பாரு. அது அவ போட்டோவா இல்ல இது போய் ப்ரண்டுக்கு அனுப்பி அவன் வெளியாக்கன போட்டோவா எனக்கு அதுலாம் தெரில… அத கண்டுபிடிக்கறதும் உன் கர்ப்பப் பையத் தோண்டி வெளிய எடுத்துப் பாக்கறதும் ஒன்னுத்தான். ஒவ்வொருத்தன் வீட்டக் கதவத் தட்டி அது என் பிள்ள இல்ல… அவ நல்ல பிள்ளன்னு சொல்ல முடியாது… அந்தப் பொழப்புக்குப் பேசாம குடும்பத்தோட வெஷத்த குடிச்சி சாவலாம்…”

அதுவரை கண்களின் ஓரங்களில் தேங்கிக் கிடந்த சோகம் சட்டென உடைந்தொழுகியது.

“வாயக் கழுவுங்க… எவனோ செஞ்சதுக்கு இவ என்னா பண்ணுவா? அவனுங்களுக்கு நல்ல சாவு வராதுங்க… கடவுள் இப்பக் காட்ட மாட்டாரு…” என்று அம்மா வலது காலைத் தரையில் ஓங்கியடித்துக் கத்தினார். கண்கள் ஆக்ரோஷமாக மாறியிருந்தன.

வாய்விட்டு அழமுடியாமல் உள்ளுக்குள் அடக்கி வைத்திருந்த சோகத்தின் கேவலை மேலும் உள்ளுக்குள் அதக்கினேன். வெடித்துச் சிதறினால் நான் உடைந்துவிடுவேன் என்கிற அச்சம். எனது முகநூல் கணக்கை மூடிவிட்டப் பிறகு கொஞ்சம் நிம்மதி நிலவினாலும் இந்நேரம் யாருடைய பசிக்கு நான் தீனியாகி கொண்டிருக்கிறேன் என்று நினைக்கும்போது மனம் பதறியது. உடல் முழுவதும் ஆயிரம் கைகள் விரல்களால் என்னைச் சுரண்டிக் கொண்டிருப்பதைப் போன்று சிலிர்த்தது.

“ஆரம்பத்துல போட்டோவ போட்ட எக்கோன்லேந்து பேஸ்புக்கு எல்லாத்தயும் நீக்கிருச்சி… ஆனா…அதுக்கப்பறம் ஷேர் பண்ணவங்க… இன்னும் சில பேஜஸ்… ரிப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்கோம்… மல்த்திமீடியான்னா உடனே எல்லாத்தயும் ப்ளோக் பண்ணிருவாங்க. ஒரு ரிப்போர்ட் மட்டும் செஞ்சிருங்க. போகும்போது போலிஸ் ரிப்போர்ட் கொண்டு போங்க…”

துரை மாமா மீண்டும் அம்மாவிடம் பேசிவிட்டு வைத்தார். அவருக்குத் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சில நண்பர்கள் இருந்தார்கள். அவர்களின் ஆலோசனையின்படியே மாமா எங்களுக்குத் தகவல் தெரிவித்துக் கொண்டிருந்தார். அப்பா வைத்திருந்த கத்தியைப் பார்த்ததும் அதனுள் இல்லாமல் போன ஒரு பளபளப்பை நானே கற்பனை செய்து கொண்டேன். கழுத்தைக் கொண்டு போய் அக்கத்தியின் கூர்மையில் உரச வேண்டும் என்று தோன்றி கொண்டிருந்ததை என்னால் தடுக்க முடியவில்லை.

“பாட்டி… உன் சீனிக்குட்டிய பார்த்தீயா? எதுக்குமே புன்னியம் இல்லாமல் போய்ட்டென்… நீ போன இடத்துக்கே என்னயும் கூட்டிட்டுப் போய்டு…” சுவரில் ஒட்டியிருந்த பாட்டியின் படத்தின் முன் மண்டியிட்டுச் சத்தமும் வெளியே போய்விடாமல் புழுங்கினேன்.

அப்பா மோட்டாரை வேகமாகத் தள்ளியதில் அது முன்கதவில் மோதியிருக்கக்கூடும். கோபத்தில் வெளிப்பாடாய் ஒலித்தது.

“அவளுக்குத்தான் தெரியும் எது உண்ம எது பொய்ன்னு…முடிஞ்சா நான் வர்றதுக்குள்ள…” ஏதோ முணுமுணுத்துவிட்டு சொல்ல வந்ததை அவருக்குள்ளே வைத்துக் கொண்டார்.

அப்பொழுதுதான் ஓடிச் சென்று அப்பாவைக் கட்டியணைத்து அழவேண்டும் என்று மனம் ஏங்கித் தவித்தது. முழந்தாளிட்டு கழுத்தை வலதுபக்கமாய் வைத்து அப்பாவைச் சன்னலிலிருந்து பார்த்தேன். அதுவொரு இறக்கமான சன்னல். மோட்டாரில் ஏறி வீட்டிலிருந்து ஒரு பெருஞ்சத்ததுடன் கிளம்பிப் போய்க் கொண்டிருந்தார். கண்களில் பெருமளவு பெருகி பெருகி வழிந்த கண்ணீர்ப்பரப்பில் அப்பா மிதந்தவாறு மறைந்தது இப்பொழுதும் மனத்தை அழுத்துகிறது.

மின்தூக்கியிலிருந்து வெளியேறி வந்தமர்ந்தும் மனத்தின் படப்படப்பு அடங்கவில்லை. வயிற்றில் கசிந்துகொண்டிருந்த ஒருவகையான திரவம் மேலும் எரிச்சலை உண்டாக்கியது. கைகளின் உதறலை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருக்க இரு தொடைகளுக்கும் நடுவே விட்டு மூடிக் கொண்டேன். அது குளிர் என்று எதிரில் அமர்ந்திருந்த மலாய்க்காரத் தம்பதிகள் நினைத்திருக்கக்கூடும். அவர்களின் முகத்தைப் பார்க்கத் திராணியில்லை. அவர்களும் என் நிர்வாணப்படத்தைப் பார்த்திருப்பார்களா? நிர்வாணம் மதம் இனத்தைத் தாண்டியதாயிற்றே. அதற்கு எவ்வித மொழியும் தேவையில்லை. கண்கள் மட்டும் போதும்.

சற்று நேரத்தில் அங்கு வந்த அதிகாரி விவரத்தைக் கேட்டறிந்து கொண்டு பாரம் ஒன்றனையும் கொடுத்து நிரப்பச் சொன்னார். தம்பி அவனுக்குத் தெரிந்த முகநூல் கணக்குகளின் பெயர்களையும் தனியார் பக்கங்களின் பெயர்களையும் பட்டியலிட்டு படங்கள் உள்ள இணைய முகவரிகளையும் இணைத்து எழுதிக் கொண்டிருந்தான்.

“பலேக் ரூமா ஹந்தார் இமேயில் லின்க் லின்க் இனி லகி சென்னாங்…” என்று புன்னகைத்தவாறே அவ்வதிகாரி கூறினார். அப்புன்னகை மருந்திற்குக்கூட எங்களிடம் இல்லை என்பதும் அவரால் உணர முடிந்தது. ஏனோ அங்கிருக்கும் வரை கைகளின் நடுக்கத்தை என்னால் கட்டுப்படுத்த இயலவில்லை. உடலின் எல்லா பகுதிகளையும் மூடிய ஒரு தடிமனான போர்வைக்குள் ஒளிந்து கொள்ளத் தோன்றியது.

வெளியில் வந்து தம்பியுடன் மீண்டும் இரயிலில் ஏறினேன். அவன் கைகளைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன். அது அவனுக்கு ஏதும் சங்கடத்தை உருவாக்கிவிடுமோ என்கிற பயமும் இருக்கவே செய்தது. அதுவரையிலுமே அவன் என்னிடம் ஒரு வார்த்தை ஏதும் கேட்கவுமில்லை. ஏதாவது கேட்டாலும் மனத்திலுள்ளத்தைக் கொட்டிவிடலாம் என்று காத்திருந்தேன். இறுக்கமான உடலுடனே இருந்தான்.

“அது உங்க அக்காவா?”

“அது உங்க அக்காதானடா…?”

“உங்க அக்காவா அது? என்னடா எல்லா குரூப்லயும் வந்துகிட்டு இருக்கு…”

“தனேஸு உங்க அக்காவாடா… என்கிட்ட அந்தப் போட்டோஸ் இருக்கு. அனுப்பி விடட்டா…?”

“டேய்… உங்க அக்கா மருந்து குடிச்சிக்கப் போவுது பார்த்துக்கடா…”

தம்பி இப்படி எத்தனைக் கேள்விகளை எதிர்நோக்கியிருப்பான். ஒவ்வொரு கேள்விகளுக்கும் முன் அவன் எப்படிக் கூனிக் குறுகியிருப்பான். என் கைப்பேசியைத் தரையில் எரிந்து உடைத்ததும் அவன் தான். வெளி உலகத்தின் குரூரமான சபலங்களின் எந்தச் செய்தியும் என்னை வந்து சேர்ந்துவிடக்கூடாது என்கிற அவனின் முயற்சி எதுவரை என்று எனக்குத் தெரியவில்லை. உலகமே ஒரு பெருத்த கண்ணாகி என்னைக் கவனித்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது. உடல் உறுப்புகளை அறுத்து இது வெறும் சதைத்தான் என்று கத்த வேண்டும் எனத் தோன்றியது.

“என் சீனிகுட்டி அழகு… சிரிச்சா கன்னத்துல குழி விழும்… என் தாயீ…”

கண்களை மூடி பாட்டியின் முகத்தையும் அம்மாவின் முகத்தையும் நினைவில் நிறுத்தி அழுத்தத்திலிருந்து தப்பிக்க முயன்றேன்.  இன்றிரவு முடித்துக் கொள்ள மனத்தைத் தயார்ப்படுத்திக் கொண்டிருந்தேன். அப்பா வீடு வருவதற்குள் நான் இருப்பது என்னை மேலும் அவமானத்தின் ஆழத்திற்குத் தள்ளிவிடும்.

“அவளுக்குத்தான் தெரியும் எது உண்ம எது பொய்ன்னு…முடிஞ்சா நான் வர்றதுக்குள்ள…”

மீண்டும் மீண்டும் அப்பாவின் இறுகிய சுவர் எழுப்பிய ஒலி மனத்தில் அதிர்ந்து கொண்டிருந்தது. அச்சுவரில் முட்டி மோதி இரத்தம் கசிய அதை அப்பா இரசிக்க நான் மடிய வேண்டும். உடலில் ஓடும் அத்தனை இரத்தமும் அவருடையது. அதை அவர் முன்னே காணிக்கையாக்கிவிட்டு மடிந்தொழிய வேண்டும். இதற்குமேல் வேறெதுவும் என்னை ஆற்றுப்படுத்தாது என்று உறுதியானேன்.

தம்பியும் நானும் வீட்டை வந்தடைந்ததும் அம்மா வெளியில் உட்கார்ந்திருப்பது தெரிந்தது. வெளுத்தக் கைலி மெலிந்த உடல். அம்மாவிற்குச் சோகத்தைத் தாங்கிக் கொள்ள முடியாத மன அமைப்பு. அப்பாவின் கோபங்களுக்கு முன்னே பதற்றமில்லாமல் நிற்கும் அம்மாவிற்குத் துயரத்தைத் தாங்கும் சக்தி இல்லை. பாட்டி, தாத்தாவின் மரணங்களின்போது மற்ற எல்லோரையும்விட அம்மாவுடனேயே இருந்தது நான் மட்டும்தான். இன்றிரவு எனது மரணத்தின் முன்னே அவர் எப்படிச் சமாளிப்பார் என்பது மட்டுமே சட்டென பெருத்த கவலையாகி போனது.

அறைக்குள் சென்றதும் கதவைத் தாழிட்டுக் கொண்டு தலையணையில் முகம் புதைந்து அழத் துவங்கினேன். உள்ளுக்குள் இருக்கும் அரூபமான சோகங்களைக் கண்ணீராக மாற்றிவிடுவதன் மூலம் அழுத்தங்களைச் சமாளித்துவிடலாம் என்று யார் யாரோ கற்றுக் கொடுத்து ள்ளார்கள்தான்.

“அழுந்துரு பிள்ள. எப்பல்லாம் சோகம் மனச அழுத்துதோ அப்ப அழுந்துரு. அழறதுக்கு ஏன் வீம்பு? மனசு குழந்த மாதிரி… அழுந்துட்டு ஒரு மிட்டாய் கொடுத்தா சரியாயிரும்…” என மனம் தொடர்ந்து இன்னொரு குரலாக மாறி தேற்றிக் கொண்டேயிருந்தது.

தலையணையில் வெளிப்பட்ட என் சத்தத்தைக் கேட்டறியும் கூர்மை தம்பிக்கு வாய்த்திருந்தது. அடுத்த இரண்டு நிமிடங்களில் கதவைத் தட்டினான். நேற்றிலிருந்து மௌனித்திருந்த அவன் காட்டிய முதல் எதிர்வினை இது. கதவைத் தட்டும் சத்தம். முகத்தைத் துடைத்துக் கொண்டு கதவைத் திறந்தேன். உள்ளே வந்தவன் கட்டிலுக்குப் பக்கத்தில் இருந்த மேசையில் மடிக்கணினியை வைத்துவிட்டு அதை முடுக்கினான். பின்னர், அவனுடைய முகநூல் கணக்கில் ஏதோ எழுதி பதிவிட்டுக் கொண்டிருந்தான். அவன் தட்டச்சு செய்யும் வேகத்தில் பதற்றமும் பரித்தவிப்பும் தெரிந்தன. அன்று காற்றுகூட ஏதோ பதற்றத்துடன் தான் வீசிக்கொண்டிருந்தது. கண்கள் மெல்ல மங்கின. காட்சிகள் குறுக்கு வெட்டாக ஓடிச் சிதறின. எங்கோ தவறிக் கொண்டிருப்பதைப் போன்று தோன்றியது.

இப்பொழுது அப்பா தூக்கில் தொங்கிக் கொண்டிருக்கிறார். அம்மா அவருடைய கால்களைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக்கிறார். சட்டென தம்பியும் துரை மாமாவும் வீட்டைக் கழுவிக் கொண்டிருக்கிறார்கள். அப்பாவின் கால்கள் என் தலைக்கு மேல் ஆடிக் கொண்டிருக்கின்றன. அக்காலிலிருந்து கோழியின் வெட்டிச் சிதறிய துண்டுகள் சொட்டுகின்றன. அப்பா தலை அறுந்து தொங்கும் கோழியைப் போல கழுத்தை இடதுபக்கமாக வளைத்து என்னைப் பார்க்கிறார். அவர் கண்களிலிருந்து இரத்தம் பெருகி வழிகின்றன.

“மோய்… எழுந்துரு! ஒன்னுமே சாப்டல…”

அம்மாவின் குரல் தூரத்தில் ஒலித்துப் பின்னர் நெருங்கிக் கேட்டதும் சட்டென விழிப்பு. உடலில் பயமும் வியர்வையும் சேர்ந்து வழிந்து கொண்டிருந்தன. அன்னாந்து உத்தரத்தைப் பார்த்தேன். தகரச் சட்டங்களும் இலேசான இருளும் மட்டும் வியாபித்திருந்தன. தம்பி மேசையின் மீது தலையைச் சாய்த்துத் தூங்கிக் போயிருந்தான். மணி 7.30 ஆகியிருந்தது. அப்பா வரும் நேரம். இந்நேரம் நான் செத்திருக்க வேண்டும். ஓர் அற்பத் தூக்கம் என் திட்டத்தைக் கெடுத்துவிட்டது. ஆனாலும் உறங்கிப் போவதற்கு முன்புள்ள மனநிலையைத் தூக்கம் கட்டிக் காப்பாற்றியது. சாவதைத் தவிர வேறு முடிவு மேன்மையானதாக இருக்காது. ஒரு விடியலைச் சமாளித்துக் கடப்பதற்குள் ஏற்பட்ட தவிப்புகள் மனத்தில் இன்னமும் உறைந்திருந்தன.

பள்ளியில் உடன் படித்த நண்பர்கள், போதித்த முன்னாள் ஆசிரியர்கள், உறவுக்காரர்கள், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் என எல்லோரின் முகமும் தோன்றி மறைந்து கொண்டிருந்தன. இன்னும் சிறிது நேரத்தில் தம்பி எழுந்துவிடுவான். அவன் சென்ற பிறகு மாய்த்துக் கொள்ள அம்மாவின் புடவையையும் தயார் செய்து கொண்டேன். தலையணைக்கு கீழ் முதலிலிருந்து பத்திரமாக உள்ளது. எடுத்து மேலே குறுக்காக ஓடும் சட்டத்தில் மாட்ட வேண்டும். அச்சட்டம் தடிமனானது. தாங்குவதோடு என் உடல் உதறி துடிக்கும் அசைவுகளின் அதிர்வுகளையும் காட்டிக் கொடுக்க வாய்ப்புக் குறைவு. அப்படி வீட்டு உத்தரம் அதிர்ந்து காட்டிக் கொடுத்தாலும் கதவை உடைத்துக் கொண்டு தம்பி வருவதற்குள் நான் செத்திருப்பேன். இந்த உலகம் என்னை என்ன நினைக்கும் என்கிற நினைப்பெல்லாம் மறந்து; அப்பா வரும்போது வெறும் உடல் மட்டும் தொங்கிக் கொண்டிருக்கும். அதுதானே அவருக்கும் வேண்டும்.

ஆக, நான் சாவதைப் பற்றி எனக்கே வருத்தமில்லை. தம்பி மெல்ல சிணுங்கினான். எழுவதற்கான சமிக்ஞை அது. கொஞ்சம் சத்தமாகவே இரும்பினேன். அவனின் நினைவை மீண்டும் அவ்வறைக்குக் கொண்டு வர உதவும். மேலும் சத்தமாக இரும்பினேன். சட்டென எழுந்து நிமிர்ந்தான். கழுத்தில் வலி ஏற்பட்டிருக்கலாம். இரண்டு பக்கமும் சுலுக்கெடுக்கும் வகையில் அசைத்துவிட்டு அறையிலிருந்து எழுந்தான். அப்பொழுதும் என்னிடம் ஒன்றும் பேசவில்லை.

அவன் வெளியேறவும் அப்பாவின் மோட்டார் சத்தமும் வீட்டிற்கு வெளியில் கேட்டது. அப்பா சந்தையில் வேலை முடிந்ததும் பிறகு ஒரு மோட்டார் பழுதுபார்க்கும் பட்டறைக்குப் போய்விடுவார். அங்கிருந்துவிட்டுத்தான் வருவார். இன்றாவது அவர் விருப்பத்தை நிறைவேற்ற நினைத்த என் திட்டங்கள் பலிக்காமல் போய்விட்டது. அவர் வீட்டினுள் வரும் தருணம் என் கால்கள் அந்தரத்தில் தொங்கிக் கொண்டிருந்திருக்க வேண்டும். ஏமாற்றத்துடன் அம்மாவின் புடவையை வெளியில் எடுத்தேன். கட்டிலின் மீதேறி நின்று கொண்டேன். சட்டத்தின் உயரத்தை எட்ட இது போதுமான வசதியைக் கொடுக்கும். பலம் கொண்டு புடவையை வீச வேண்டும். பின்னர் இரு பக்கமும் வந்து தொங்கும் புடைவயின் இரு நுனிகளையும் இணைத்துச் சுருக்குப் போட்டு மேலேற்றி சட்டத்தோடு இறுக்க வேண்டும். அல்லல்பட்டுக் கொண்டிருந்த மனத்தை நிதானப்படுத்தினேன்.

“எங்க அவ? இன்னும் ரூம்புலயா இருக்கா?”

என்று அப்பா அதட்டிக் கொண்டே உள்ளே வந்தார். கதவு தட்டும் சத்தம்.

“ஏய் கனிஷா… கதவ தொற…!”

அப்பா. அவரேதான். நெடுநாளுக்குப் பின்னர் முதன்முறை என் பெயரைச் சொல்லி அழைத்துக் கேட்கும் தருணம். இருப்பினும் சாகாமல் இருப்பது அவருக்கே துயரத்தை மேலும் கூட்டிவிடும். என்ன செய்வது? இதுவரை என் அறைக்கதவைத் தட்டாத கைகள் அதிவேகத்துடன் தட்டிக் கொண்டிருந்தது. மனம் பதறியது. சட்டென புடவையைக் கீழே இழுத்துக் கட்டிலுக்கடியில் தூக்கியெறிந்துவிட்டுக் கதவைத் திறந்தேன். ஒருவேளை அவரே கூட என்னை வெட்டிச் சாகடிக்கும் வெறியுடன் வெளியில் நின்று கொண்டிருக்கலாம்.

“ஏய்! என்னா? உலகம் அழிஞ்சிருச்சா? இல்ல நான் செத்துட்டன்னா? இங்க வா…”

வெளியே இழுத்துக் கொண்டு போனார். அப்பாவின் முரடான கைகளுக்குள் என் கை. தடிமனான அந்த விரல்கள், தோல் தடித்துச் சொரசொரப்பாக இருந்த அந்தக் கைகள், கவுச்சி வீச்சம் உச்சத்தில் இருந்த அந்தக் கைகளுக்குள் இருந்தேன். வெளியே மரக்கட்டையொன்றில் தோலுரிக்கப்பட்ட மூன்று கோழிகள் கிடந்தன. அப்பா என் கையில் வெட்டுக் கத்தியைக் கொடுத்தார்.

“இந்தா! உனக்கு எவ்ள வெறி இருக்குமோ எனக்குத் தெரில. இந்தக் கத்தியால இந்தக் கோழிங்கள வெட்டிப் பொளந்து எடு பிள்ள… தோ! இந்த உலகமே உன் கண்ணு முன்னத்தான் இருக்கு. வெட்டு… நல்லா வெட்டு… எல்லாம் செதறட்டும்… கோபம்… வெறி… அவமானம்… வெக்கம்… எல்லாம் செதறட்டும். எல்லாம் வெறும் சதைங்கத்தான்…வேற ஒரு மண்ணும் இல்ல… வெட்டிட்டு உள்ள வா…”

அப்பா கையில் கொடுத்த கத்தியிலிருந்து ஒழுகி ஒட்டியிருந்தது வெறும் இரத்தமாக மட்டுமே தெரியவில்லை.

“என் தாயீ… என் சீனிகுட்டி அம்மாடி… ஒடியா… ஒடியா…” மாரியம்மா பாட்டியின் சத்தம் காதின் ஆழத்தில் சன்னமாகக் கேட்டது.

செந்நிறமாகி வானம் இருண்டது.

“யம்மாடி… இன்னிக்கு அந்த அம்மோய் என்ன பார்த்துக் கண்ணடிச்சா தெரியுமா?” என்று அப்பா அம்மாவிடம் கிண்டலடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்து கொண்டிருந்தார்.

அதுவரை தேக்கி வைத்திருந்த அத்தனை உணர்வலைகளுடன் கீழிருந்த இறைச்சிகளை வெட்ட வெட்டுக் கத்தியைப் பலங்கொண்டு ஓங்கினேன். தோலுரிக்கப்பட்ட இறைச்சிகள் என் முன்னே நிர்வாணமாய் கிடந்தன.

 

-ஆக்கம்: கே.பாலமுருகன்

About The Author