சந்தோஷ் நம்பிராஜனின் 4டீ குறும்பட விமர்சனம் : கலை என்னை எனக்குள் தேடுவதிலிருந்து தொடங்குகிறது
விமர்சனத்திற்குப் போகும் முன்: இதுபோன்று சிறுகதைகளைச் சிங்கையில் குறும்படமாக்க வேண்டும் என்கிற தனது விருப்பத்தை 2009ஆம் ஆண்டுகளிலேயே நண்பர் நீதிப்பாண்டி(பாண்டிதுரை) என்னிடம் சொல்லிக் கொண்டிருந்தார். பல வருடங்களுக்குப் பின் அவருடைய கனவு என்றே சொல்லலாம், நிறைவேறியிருப்பதாக நான் காண்கிறேன். இக்குறும்படத்தைப் பற்றி எழுதச் சொல்லியும் சதா கேட்டுக் கொண்டிருந்தது நண்பர் நீதிப்பாண்டியே. சிங்கைக்கு வர முடியாவிட்டாலும் தொடர்ந்து சிங்கையின் கலை இலக்கிய வளர்ச்சியில் ஒரு விமர்சகனாக இணைந்திருப்பதில் மகிழ்ச்சி. – கே.பாலமுருகன்
‘எனது கலை என்னை எனக்குள் தேடுவதிலிருந்து தொடங்குகிறது’
– இயக்குனர் கிம் கி துக்
கலைப்படைப்பு, ஒரு கலைஞனின் அகத்தை நோக்கியதாக இருத்தல் வேண்டும் என்றே கலையை நேசிக்கும் எல்லா கலைஞர்களும் உதிர்த்தக் கடைசி புரிதலாக உள்ளது. அகிரா குரோசாவா தனது கடைசி படைப்பிற்குப் பின்னே நான் என்னைத்தான் தேடிக் கண்டடைந்தேன் என்கிறார். ஆக, நம்மை நாமே தேடிக் கொள்வதற்குக் கலை ஓர் அறிதல் களம். அக்களத்தினை எத்தனை நேர்மையாகப் பயன்படுத்திக் கொள்ளப் போகிறோம் என்பதில்தான் கலை மீது நாம் கொண்டிருக்கும் நேசத்தையும் காட்டும். பொறுமையும் ஆழ்ந்த ஈடுபாடும் விரிவான தேடலுமிக்க கலைஞர்களால் மட்டுமே காலத்திற்கும் மனத்தில் பதியும் ஒரு படைப்பை வழங்க முடியும். அதனால்தான் அடூர் கோபாலகிருஷ்ணன், சத்ய ஜித்ரே என்று பல இந்திய இயக்குனர்களை இன்றும் நினைவுக்கூர்கிறோம்.
தன்னுடைய சித்திரத்தின் ஊடாக இச்சமூகத்தை, இவ்வாழ்வியலை, தத்துவங்களை உருவாக்கி வைத்திருக்கும் உலகின் மிக நுண்மையான பகுதியான அகத்திற்கு இட்டுச் செல்வதாக அமைத்திருத்தல் வேண்டும். அதுவே பின்னர் கலை எழுச்சியாக வெளிப்படும். பெரும்பாலான ஒரு கலையின் தோல்விக்குக் காரணம் அப்படைப்பு புறத்தை நோக்கி விரிகிறது; ஒரு சந்தையை உருவாக்க முனைகிறது. பின்னர், மறக்கப்படுகிறது. ஒவ்வொரு படைப்பாளியும் இதனை ஒரு சுயவிசாரணையாக முன்வைத்துக் கொள்ள வேண்டும். இப்படைப்பு சமூகத்திற்கானதுதான். ஆனால், யார் அந்தச் சமூகம்? புறத்தில் இருப்பது அல்ல. நம் அகத்தில் ஒரு சமூகம் உண்டு; நம் அகத்தில் ஒரு சேகரிப்பு உண்டு; நம் அகத்தில் ஒரு வாழ்வியல் கலவை உண்டு. அதனை நோக்கியதாக இருக்கும் ஒரு படைப்பு மட்டுமே உள்ளுக்குள்ளிருந்து வெகுண்டெழுந்து புறத்தில் இருக்கும் சமூகத்தை நோக்கிப் பாய்கிறது.
‘ஆந்த்ரே தார்கோவெஸ்கி’ என்கிற பெயரை நாம் சினிமா சூழலில் மறக்கவியலாது. கலையின் மீது அரசு கொண்ட அதிகாரத்தைத் தன் படங்களின் வழியாகக் காட்டியதற்காகவே நாட்டைவிட்டுத் துரத்தப்பட்டு, குடும்பத்துடன் இருக்க முடியாமல் தனிமையில் வாடி, நோய்வாய்ப் பட்டு இறந்துபோன அவருடைய கல்லறையில் இப்படி எழுதப்பட்டிருக்கிறது, ‘தேவதைகளைத் தரிசித்த மனிதனுக்காக’ என்று. எது அத்தேவதை? கலையின் மிக நூதனமான ஓர் உச்சம் என்று சொல்லலாமா? அல்லது வாழ்வின் மிக யதார்த்தமான தரிசனங்கள் என்று சொல்லலாமா? ‘ஆந்த்ரே தார்கோவெஸ்கி’-யின் தேவதைகள் சந்தோஷ் நம்பிராஜனின் இக்குறும்படத்தில் மெல்ல எட்டிப் பார்ப்பதை உணர முடிகிறது. அத்தேவதைகளைத் தன் அடுத்த படைப்புகளில் உலா வர வைக்க முடியும் என்கிற நம்பிக்கையை தன் முதல் படைப்பிலேயே சந்தோஷ் விதைக்கிறார்.
உமா கதிர் எழுதிய ‘மார்க்கும் ரேச்சலும்’ என்கிற சிறுகதையைத் தழுவி அதனைக் குறும்படமாக இயக்கியுள்ளார் சந்தோஷ். அதனைத் தயாரித்துள்ளார் நன்கு அறிமுகமான எழுத்தாளர், கவிஞர் எம்.கே.குமார். இக்குறும்படத்திற்குத் திரைக்கதையும் உமா கதிரே எழுதியுள்ளார். இதுபோன்று இலக்கியப் படைப்புகளை முன்வைத்து இயக்கப்படும் பல சினிமாக்கள் உலகத்தர ரீதியில் கவனம் பெற்று சாதனை விருதுகளைப் பெற்றிருப்பதையும் அறிய முடியும். இலக்கியம் என்பது மிக நுண்மையான கலை வடிவம். வாழ்க்கையை அகவயப்படுத்துவதில் இலக்கியமே மிகத் துல்லியமான கலை வடிவம். அதனைக் கொண்டு ஒரு திரைப்படத்தை உருவாக்கும்போது உண்மைக்கு மிக நெருக்கத்தில் பார்வையாளனைக் கொண்டு நிறுத்த முடியும் என்று அமெரிக்க இயக்குனர் ‘மார்டின் கார்சிஸ்’ குறிப்பிடுகிறார். அவ்வகையில் சிறுகதையைக் குறும்படமாகக் கையாள்வதில் இயக்குனர் சந்தோஷ் ஓரளவிற்கான நல்ல அடைவைக் கண்டுள்ளார் என்றே சொல்ல வேண்டும்.
எல்லாமே எண்கள்தானோ என்கிற ஓர் அச்சத்தைப் படம் விதைத்திருக்கிறது. ‘கால மகாவெள்ளத்தில் நாம் எல்லோரும் அடித்துச் செல்லப்படும் வெறும் எண்கள்தான்.’ எனக்கு மட்டும் எத்தனை எண்கள் உள்ளன என்று சிந்தித்துப் பார்க்கிறேன். அடையாள அட்டை எண், அழைப்பேசி எண், வங்கி எண், வீட்டு முகவரி எண், வாகன எண், அவ்வாகனத்தின் கடனைச் செலுத்த ஓர் எண் என இப்படியாக எங்கு வாழ்ந்தாலும் எண்கள்தான் எங்குச் சென்றாலும் எண்கள்தான். நகர்மயமாக்கலின் ஒரு மிகப்பெரிய கண்டடைவுதான் எண்களின் ஊடாக மானுடத்தை வரையறுக்கும் நிலை. இதனைக் குறும்படத்தின் தொடக்கத்தில் மிகக் கூர்மையாகக் காட்சிப் பதிவுகளின் வழியாக சந்தோஷ் கட்டமைத்துள்ளார். ஒரு பெருநகர் வாசலில் ஒரு கதைக்குத் தயாராக வந்து நிற்கும் மனநிலையை இலாவகமாக உருவாக்கிவிட்டார்.
விளிம்புநிலை வாழ்க்கை
இக்குறும்படத்தில் வரக்கூடிய மார்க் என்பவர் சிங்கை பெருநகர சமூக அமைப்பில் யாரும் அறிய விரும்பாத ஒரு விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருடைய பக்கத்து அறையைச் சேர்ந்த ஓர் இளைஞன் மட்டுமே அவரைக் கவனிக்கிறான்; நட்பும் கொள்கிறான். அவனுடைய குரலிலேயே மார்க்கின் வாழ்க்கை சொல்லப்படுகிறது. பெருநகர் வாழ்க்கை என்பது முதலில் நம்மை பொருளீட்டத் துடிக்கும் ஓர் இயந்திரத்தனமான உயிரியாக்கும். பின்னர், உறவுகளற்று நம்மை தனிமையில் ஆழ்த்தும்; பொருள் ஈட்டல் மட்டுமே பூதாகரமாக மனத்திலும் செயலிலும் விஷ்வரூபம் எடுத்து நிற்கும். அத்தகையதொரு பெருநகர் வாழ்விற்குள் வேறு எதைப் பற்றியும் கவலைப்படாமல் வாழ்வின் உச்சக்கணங்களைச் சாதாரணமாக கடந்துபோக நினைக்கும் மார்க் போன்றவர்களும் இருக்கிறார்கள் என்று காட்ட முனைகிறது இக்குறும்படம்.
விளிம்புநிலை வாழ்க்கையைச் சொல்வதில் அல்லது விரிவாகக் காட்டுவதில் இரண்டு வகை உண்டு. ஒன்று, பெருநகர் வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கும் விளிம்புநிலை மனிதர்களின் அகப்போராட்டங்களைக் காட்டுவதாகும். இன்னொன்று பெருநகர் வாழ்வின் அத்தனை நெருக்கடிகளையும் அத்துனைச் சாதாரணமாகக் கடந்துபோகும் எளிய மனிதர்களின் வாழ்க்கையைக் காட்டுவதாகும். சந்தோஷ் தனது குறும்படத்தில் சிங்கை எனும் மாபெரும் பெருநகர் கூச்சல்களை மட்டுமே காட்சிப்படுத்தாமல் அதனுள் நாம் பார்க்கத் தவறும் எளிய மனங்களின் முணுமுணுப்புகளைக் காட்சிப்படுத்துகிறார். ஆகவே, இக்குறும்படம் முதலில் கதை தேர்வில் வெற்றிப்பெறுகிறது. மலேசிய இளம் இயக்குனர் சஞ்சய் பெருமாள் எப்பொழுதும் சொல்வதும் அக்கறைப்படுவதும் கதை தேர்வு பற்றித்தான். வாழும் வாழ்க்கைக்கும் நிலத்திற்கும் ஏற்ற கதை முதலில் தயாராகுவதுதான் ஒரு படத்தின் வெற்றி என்பார். அவ்வகையில் இக்காலத்திற்கேற்ற ஒரு கதையைத் தேர்வு செய்து அதனைப் படமாக்கியிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.
காட்சியமைப்பு: ஒளிப்பதிவு
காட்சி அமைப்புகள் கதைக்குப் பொருத்தமாகக் கையாளப்பட்டுள்ளன. ஆங்காங்கே சில இடங்களில் சிங்கையின் பெருநகரப் பரப்பைக் காட்டியிருப்பதும் கதைக்களத்திற்கு ஓரளவிற்கு வலு சேர்க்கிறது. குறும்படத்தின் தொடக்கக் காட்சிகளில் எண்கள் குறித்து இவ்வாழ்க்கைக் கட்டுண்டு கிடப்பதைக் காட்டும் இடம் பாராட்டுதலுக்குரியவை. மேலும், உணவுக் கடையின் விளம்பரப் பலகையில் இரு பக்கங்களிலும் மாற்றி மாற்றி ஒளிர்ந்து கொண்டிருக்கும் வண்ண விளக்குகளைக் காட்சிப்படுத்தும் விதம் என பல இடங்களில் ஒளிப்பதிவு பார்வையாளனுடன் நிறைய பேசுகின்றன.
ஆனால், இதுபோன்ற கதைகளுக்கு ‘க்ளோசாப் காட்சிகள்’ மிகவும் அவசியமாகும். இக்குறும்படம் மனித வாழ்வின் பெரும்பரப்பைக் காட்டுவதற்கு அல்ல; அப்பெரும்பரப்பில் வாழும் ஒரு மனத்தின் ஊடாக விரியும் வாழ்வின் உச்சங்களைக் காட்டுவதற்கு என்று பொருள்படுத்திக் கொள்ள முடிகிற அளவிலேயே கதையும் அமைந்துள்ளது. ஆகவே, ஒளிப்பதிவு மேலும் கூர்மையாக கதையில் வரும் மனிதர்களின் அகவுணர்வுகளை நோக்கி விரியும்படியான அழுத்தமான முயற்சிகளை மேற்கொண்டிருக்கலாம் என்று தோன்றுவதைத் தடுக்க இயலவில்லை.
மார்க் நாய்களைப் பராமரிக்கும் வேலைக்குத் தங்கியிருக்கும் இடத்தைவிட்டு நகரும் காட்சியில் மார்க்கின் முகம் நன்றாகக் காட்டப்படவே இல்லை என்பது சற்று ஏமாற்றத்தைக் காட்டியது. வாழும் இடத்தைவிட்டு வேறு சூழலுக்கு நகரும் பெருநகர் மனிதர்களின் அலைச்சலும் எதிர்ப்பார்ப்பும் தயக்கமும் கலந்த முகங்கள் இக்கதைக்களத்திற்குப் பலம் சேர்த்திருக்கும் என்று நம்புகிறேன். பெரும்பாலான காட்சிகளில் மார்க்கின் ‘Potrait’ கச்சிதமாக அமையவில்லையோ என்ற எண்ணமும் தோன்றியது. சஞ்சய் பெருமாளின் ‘ஜகாட்’ எனும் மலேசியக் குறும்படத்தில் மேசை உரையாடல் காட்சியில் ஒளிப்பதிவாளர் செந்தில் குமரன் அமைத்திருக்கும் ‘போட்ரேய்ட்’ குளோசாப் காட்சிகள் மிரட்டும் வகையில் அபாரமாக இருக்கும். குறும்படம் போன்ற சிறிய கதையாடல்களுக்கு அழுத்தமான குறிப்பாக ‘குளோசாப் காட்சிகள்’ அல்லது ‘போட்ரேய்ட்’ காட்சியமைப்புகள் மிகவும் அவசியம் என்று அறிய முடிகிறது. அதிக வசனங்கள் இன்றி நகரும் குறும்படத்தின் பலமே ஆயிரம் வசனங்களை உள்மறைத்து வெளிப்படும் காட்சிகள் மட்டுமே.
Wong Kar Wai இயக்கத்தில் 2000ஆம் ஆண்டு வெளிவந்த இதுபோன்ற பெருநகர் வாழ்வில் சிக்கித் தவிக்கும் ஓர் அழகான காதலையும் உறவையும் சொல்லும் ஹங் காங் படம் ‘In the Mood of love’ ஆகும். இப்படத்தில் பலமே ஒளிப்பதிவும் பின்னணி இசையும்தான். இப்படத்தைப் பார்த்த யாவரும் கதைக்குள் கரைந்து போவதற்கான நுட்பங்களை ஒளிப்பதிவிலும் இசையிலும் கண்டிருப்பர். பெருநகர் தனிமையின் அழகியலையும் அதன் குரூரத்தையும் இரண்டு பக்கத்து அறைவாசிகளைக் கொண்டு படமாக்கியிருப்பார். மஞ்சளும் சிவப்பும் கலந்த வர்ணத்தில் படம் முழுவதும் ஓர் உணர்வலைகளுக்கிடையே பயணிப்பது போன்ற மனநிலையை உருவாக்கும். மார்க்கும் கூட சிங்கையின் ஒரு தனிமைக்குள்ளே வாழ்கிறார். ஆனால், ஒளிப்பதிவு அத்தனிமையை மேலும் கூர்மையாக்கிக் காட்டியிருக்கலாம் அல்லது அவருக்குள் இருக்கும் காதல் மீதான ஓர் ஆழ்ந்த தேடல் என கதைக்குப் பலம் சேர்க்கும் விடயங்களின் மீது ஒளிப்பதிவு மேலும் கலைத்தன்மையுடன் முறையான வர்ணங்களுடன் குவிந்திருக்கலாம் என்று கொஞ்சம் பேராசைப்பட்டேன். அவ்வுணர்வு இக்குறும்படத்தின் மீதுள்ள அக்கறை என்றும் சொல்லலாம்.
நடிப்பு/கதைமாந்தர்கள்
மார்க் என்கிற கதைமாந்தர் அற்புதமான கண்டுபிடிப்பு. சிங்கை விளிம்புநிலை தமிழனின் உணர்வை நமக்குள் உருவாக்கும் ஒரு கதைமாந்தர். அத்தனை யதார்த்தமான நடிப்பு. வாழ்க்கை பற்றிய எந்தத் தடுமாற்றமும் அவரிடம் இல்லை. மிக நிதானமாக அனைத்தையும் கடந்து செல்லும் சாதூர்யம் அல்லது பக்குவம் அவரிடம் வெளிப்படுகின்றன. கதைமாந்தரை வடிவமைப்பதிலும் அவர்களுக்கேற்ற வசனங்களைக் கச்சிதமாக வடிவமைப்பதிலும் இப்படம் வெற்றிப்பெற்றுள்ளது. இன்னும் கூடுதலான ‘பொட்ரேய்ட்’ வகையிலான ஒளிப்பதிவு நுணுக்கங்களைச் செலுத்தியிருந்தால் ‘மார்க்’ சிங்கையின் அடுத்த பரிணாம நடிகர் என்றே அடையாளப்படுத்திவிடலாம்.
மார்க்குடன் வரும் இளைஞர் கதைமாந்தரும் தேவைக்கேற்ப பயன்படுத்தப்பட்டுள்ளார். யாருமே கதையில் உறுத்தலை ஏற்படுத்தவில்லை. ஆனால், மார்க்குக்கும் ரேச்சலுக்கும் இடையே உள்ள காதல் அதன் வெளிப்பாடுகளை மேலும் அழுத்தமாக்கியிருக்கலாம் என்று தோன்றியது. இக்குறும்படத்தின் அடுத்த முக்கியமான நகர்ச்சி ரேச்சல் மீது மார்க் கொண்டிருக்கும் காதலே. உமா கதிரின் சிறுகதையில் வெளிப்பட்ட மார்க்கும் ரேச்சலுக்கும் இடையிலான ஓர் அழகியல்மிக்க உணர்வு இக்குறும்படத்தில் கொஞ்சம் தவறியிருப்பதாக நினைக்கிறேன். மேலும், ரேச்சல் ‘கதையில் ஒரு வேண்டாத’ கதைப்பாத்திரம் போல அமிழ்த்தப்பட்டுள்ளார். ஒருவேளை அவருக்கான தேவை கதையில் அதிகம் இல்லாமல் போவதற்கு இயக்குனரிடம் ஏதேனும் காரணம் இருக்கலாம். ஆனால், உமா கதிரின் சிறுகதையைப் படிக்கும்போது ரேச்சலை என் மனத்தின் ஆழத்தில் உருவகித்துக் கொள்ள முடிந்த அளவிற்கு இக்குறும்படத்தில் அவருடைய கதைப்பாத்திரம் மனத்தில் நிலைக்கவில்லை. சிறுகதையை ஒப்பிடாமல் பார்த்தாலும் ரேச்சல் முழுமையாக வெளிப்படவில்லையோ என்றே தோன்றும்.
முடிவும் கலை உச்சமும்
இதுபோன்று பெருநகர் வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கும் சிதறடிக்கப்படும் மனிதர்கள் இறுதியில் துன்பவியல் அடிப்படையில் இறந்துவிடுவார்கள் அல்லது எதையாவது இழந்து நிற்பார்கள் என்கிற தேய்வழக்கில் படம் முடிவது கொஞ்சம் வருத்தத்தை அளித்தது. இருப்பினும், இது படக்குழுவின் முடிவு என்பதால் எனக்கு அதில் மாற்றுக்கருத்து இல்லை. ஒவ்வொரு படைப்புருவாக்கத்திலும் ஒரு கலைஞன்/படைப்பாளன் தன்னகத்தே ஒரு தேவையைக் கொண்டிருப்பார்.
ஒருவேளை மார்க் எங்குப் போயிருக்கக்கூடும் என்கிற தேடலில், பெருநகர் ஒவ்வொரு மனிதனையும் தனக்குள் ஏதோ சந்தர்ப்பத்தில் விழுங்கிக் கொள்கிறது என்கிற கவித்துவமான ஒரு முடிவைக் கொடுத்திருக்கலாம் என்று நினைக்கத் தோன்றியது. உமா கதிரின் சிறுகதை முடிவு கொடுத்த அதிர்வை இக்குறும்படம் கொடுத்திருந்தால் படத்தின் அடுத்த நகர்வு நமக்குள் ஆழ்ந்த பாதிப்புகளை உருவாக்கியிருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு கலையின் முடிவு என்பது முடிவல்ல; அது இன்னொரு தொடக்கம் என்று நம்புகிறேன். பல விமர்சகர்களும் இதனை ஆமோதிக்கிறார்கள்.
மரணம் என்பது மட்டுமே கலையின் உச்சம் அல்ல; அல்லது மரணித்தவர்களைப் பற்றி நாம் கொண்டிருக்கும் நினைவுகள் மட்டும் அல்ல. மார்க் போன்ற அடையாளமற்றவர்களின் பெரும்பாலான முடிவுகள் மரணம் அல்லது இழப்பு என்றே பல படைப்புகள் காட்டிவிட்டன. அதிலிருந்து எப்படி, எந்தப் புள்ளியில் நாம் தனித்தன்மையை ஏற்கப் போகிறோம் என்று சிந்திக்க வேண்டிய ஓர் அவசியத்தை இக்குறும்படம் நமக்குச் சவாலாக விட்டுச் செல்கிறது.
எனினும், 4டீ குறும்படம் சிங்கை மண்ணில் ஒரு முக்கியமான முயற்சியாகும். சிங்கை பெருநகரின் விளிம்புநிலை வாழ்க்கை இதற்குமுன் அழுத்தமாகப் பதிவாகாத சூழலில் சந்தோஷ் நம்பிராஜன், உமா கதிர், எம்.கே.குமார், நீதிபாண்டி போன்றவர்களின் ஆர்வமும் அக்கறையும் நிச்சயம் பாராட்டுதலுக்குரியது. இதுவேகூட சிங்கை கலைப்படத்துறையில் ஒரு புதிய திறப்பு என்றும் வகைப்படுத்தலாம். அனைத்து பெருநகர்களிலும் இதுபோன்ற சிதைவுண்ட பகுதிகள் இருக்கும் என ‘4டீ’ குறும்படம் காட்டிச் செல்கிறது.
தன் முதல் முயற்சியிலேயே யதார்த்தமான ஒரு படைப்பை வழங்கியதற்காக படக்குழுவிற்கு என்னுடைய வாழ்த்துகள். கதை தேர்வு, வசனம், பாத்திரப்படைப்பு, தயாரிப்பு ரீதியில் இக்குறும்படம் நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய படைப்பாகும்.
‘இது ஒரு இனிய தொடக்கம்தான். வியாபாரத்தின் சாதகபாதகங்களை மறந்து, சிங்கப்பூரின் முக்கிய படைப்பிலக்கியத்தின் நீட்சியாக அதனையொட்டிய குறும்படங்களும் பெரும்படங்களும் வரவேண்டியதன் தேவையையும், ஓரளவுக்கு அதைச் செம்மையாகச் செய்யமுடியும் என்பதையும் இதன் மூலம் துவக்கிவைத்திருப்பதில் மகிழ்ச்சி.’ என்கிற இக்குறும்படத்தின் தயாரிப்பாளர் நண்பர் எம்.கே.குமாரின் கருத்துடன் நானும் முழுவதுமாக உடன்படுகிறேன். இக்குறும்டம் ஒரு பொறுப்பைச் சிங்கை கலைத்துறையில் புதிய மொழியாகப் பேசிவிட்டுச் சென்றுள்ளது.
இக்குறும்படத்தைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=fvy31qmbHt0
குறிப்பு: உமா கதிரின் சிறுகதையை நான் ஏற்கனவே விமர்சனம் செய்துள்ளேன். அவ்விமர்சனத்தை இச்சுட்டியில் வாசிக்கலாம்.
//தனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் தனிமையான ஒரு வாழ்விற்குள் கதைச்சொல்லியை நுழைய விடுகிறார். இருளில் வெளிச்சத் துளியைத் தேடுவதைப் போன்று மார்க்கின் வாழ்க்கையினுள் சம்பவங்களைத் தேடி அலைகிறோம். அவர் வாழ்வினுள் எல்லாமும் வரண்டு கிடக்கின்றன.//
https://balamurugan.org/2018/09/04/மார்க்கும்-ரேச்சலும்-உம/
-கே.பாலமுருகன்