குறுங்கதை: சுவர்களற்ற வகுப்பறை

“இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல உங்க டீச்சருக்கு?”

மகன் அப்பொழுதுதான் கூகள் வகுப்பில் நுழைந்திருந்தான். ஆசிரியரின் குரலைக் காட்டிலும் அவர் அமர்ந்திருந்த ஒரு பூங்காவின் சத்தம் இரைச்சலென கொப்பளித்துக் கொண்டிருந்தது. இடையிடையே வாகனங்களின் ஹார்ன் சத்தம்.

“இப்படின்னா பிள்ளைங்க எப்படிப் படிப்பாங்க?”

ஆள்காட்டி விரலை உதடுகளின் நடுவே குவித்து என் சத்தத்தைக் குறைக்கும்படி மனைவி எச்சரிக்கை செய்தாள். மகன் என்னைத் திரும்பிப் பார்த்துவிட்டு மீண்டும் வகுப்பில் கவனம் செலுத்தத் துவங்கினான்.

“நேத்தும் இதானே… பிள்ளைங்கள சொல்றாங்க… மைக்க அடை மைக்க அடைன்னு… சத்தமா இருந்தா எப்படிச் சொல்லித் தர முடியாதோ அப்படித்தானே சத்தமா இருந்தா படிக்கவும் முடியாதுன்னு தெரியாதா?”

கோபத்தில் கொஞ்சம் நியாயமாகவும் பேசுவது போல் தோன்றியது. அதனை அமைதியாக மனைவி ஆமோதித்தாள். நாற்காலியில் அயர்ந்து சாய்ந்தவாறே என்ன செய்வதென்று தெரியவில்லை என்பது போல் மௌனமானாள்.

“ஓகே, மாணவர்களே… இன்னிக்கு நம்ம படிச்ச வினைமரபு சொற்கள இன்னொரு முறை பார்த்துடலாமா? அப்புறம் ஆசிரியர் பயிற்சிகள் கொடுப்பன்… சரியா செய்யணும்… புரியுதா?”

அவரின் குரலைத் தாண்டி அவர் அமர்ந்திருக்கும் பூங்காவிலுள்ள மரங்களில் அமர்ந்து கொண்டு சதா கத்திக் கொண்டிருக்கும் குருவிகளின் சத்தம் சத்தமாகக் கேட்டுக் கொண்டிருந்தது.

“எங்கயாவது இது நடக்குமா? பார்க்லயா உக்காந்துகிட்டு பாடம் நடத்தணும்… நீ அவுங்க தலமை ஆசிரியருக்கு போன் பண்ணு… சொல்லிரலாம்…”

நான் அவசரப்பட்டேன். என்னால் இதனைப் பார்த்துக் கொண்டு வெறுமனே இருக்க முடியவில்லை.

“இருங்க… நான் டீச்சர்கிட்டே கேக்கறன்… யேன் அதுக்குள்ள குரு பெசார்கிட்டலாம் சொல்லணும்… நம்ம சொன்னா மாத்திக்கப் போறாங்க…”

மனைவி என்னைச் சமாதானப்படுத்த முயன்றாள். எழுந்து சென்று மகனின் பக்கத்தில் அமர்ந்துகொண்டு ஒலி விசையைத் திறந்தாள்.

“டீச்சர், மன்னிச்சிடுங்க இடையில பேசறதுக்கு… நீங்க பார்க்ல இருந்துகிட்டுப் பாடம் நடத்துறீங்கன்னு நெனைக்கறன்… ஒரே சத்தமா இருக்கு டீச்சர். பிள்ளைங்க கவனிக்க முடில… தப்பா நெனைச்சிக்காதீங்க…”

நான் புலம்பியதை அவள் புகாராக மாற்றி ஒப்புவித்துவிட்டாள்.

“ஓ, மன்னிச்சிருங்கக்கா. ஒரு வாரமா அம்மாவுக்கு வயித்த வலி… இங்க பந்தாய் ஆஸ்பித்தல்ல அட்மீட் ஆய்ருக்காங்க… அதான் அவுங்கள பார்த்துக்கிட்டு இங்கத்தான் இருக்கன்… ஏற்கனவே ஸ்கூல் இல்ல… பாடம் வீணாப்போகக்கூடாதுன்னு இங்க ஆஸ்பித்தல் பார்க்குல உக்காந்துருக்கன், அதான் போல சத்தமா இருக்கு…”

ஆசிரியை பூங்காவனம் கூகள் சந்திப்புத் தளத்திலுள்ள தன் கேமராவைத் திறந்தார். எனது மனம் சிறுத்துச் சட்டென அடைத்துக் கொண்டது.

கே.பாலமுருகன்

(மூலம்: Summit Madaan, புலனத்தில் படித்த ஓர் ஆங்கிலக் கதையை மாற்றம் செய்து தமிழில் எழுதினேன்)

About The Author