குறுங்கதை: கோரண்டைன் கட்டில்

குறுங்கதை: கோரண்டைன் கட்டில்

“வேலைக்குப் போக முடியல… அடுத்த ஒரு வருசத்த எப்படிச் சமாளிக்கப் போறேனு தெரில… அவுங்கத்தான் இப்போ வீட்டு வேலைக்குப் போய்கிட்டு இருக்காங்க…இந்தக் கோவிட் கொல்லுது ராஜு…”

சட்டென விழிப்பு. நேற்றிரவு முனியாண்டி அண்ணனுடன் வெகுநேரம் பேசிக் கொண்டிருந்ததன் காட்டம் கனவு வரை வந்து சேர்ந்திருந்தது. இரண்டடுக்குக் கட்டிலில் நான் மேலே படுத்திருந்தேன். காலை எழுவதற்கு அலாராமெல்லாம் தேவையில்லை. ஒவ்வொரு கட்டிலிலிருந்தும் சப்தம் பெருகி உருவாக்கும் வளையத்தில் நாமே எழுந்து கொள்ள நேர்ந்துவிடும். அதையும்விட ஒலிப்பெருக்கியில் அறிவிப்புகள் சதா கேட்டுக் கொண்டே இருக்கும். அதைக் கேட்டுப் பயந்து அலறியடித்துக் கொண்டு எழுந்த நாள்களும் உண்டு. மூக்கில் எந்த வாசனையும் நுகர முடியாது என்பதால் பக்கத்துக் கட்டில்களுக்குக் கீழே கழற்றி அலங்கோலமாய்க் கிடந்த காலணிகள் காலணிகளாக மட்டுமே தெரிந்தன. அறுநூறுக்கும் மேற்பட்டோர் குவிந்து கிடக்கும் மண்டபத்தில் நுகர்வு புலன் இல்லாமல் இருப்பதும் வசதியாகவே தெரிந்தது.

ஓரத்திற்கு நகர்ந்து கீழேயுள்ள கட்டிலைக் குனிந்து பார்த்தேன். காலியாக இருந்தது. முனியாண்டி அண்ணன் அநேகமாக விரைவாக எழுந்து கழிப்பறைக்குச் சென்றிருப்பார். கூட்டம் அலைமோதுவதில் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது என்பது அவருக்கு இரவெல்லாம் உறுத்தலாக இருந்திருக்கும்.

“எப்படா வீட்டுக்குப் போகணும்னு இருக்கு, ராஜு… என் பையன் சின்னவன் ராத்திரினா என்னத்தான் தேடுவான்…”

அவருக்கு இங்கு யாரும் நட்பில்லை. வந்த சில நாள்களில் என்னிடமே தயங்கித்தான் பேசத் துவங்கினார். மலாய்க்காரர்களும் சீனர்களும் கலந்திருந்த மண்டபத்தில் தமிழர்கள் சிலர்தான் அங்குமிங்குமாக இருந்தார்கள். எந்நேரமும் தரையையும் சிலிப்பரையும் பார்த்துக் கொண்டிருப்பார். பேசும்போது மட்டும் நிமிர்ந்து பார்ப்பார்.

ஒரு மணி நேரத்தைக் கடந்தும் அண்ணன் வரவில்லை என்றதும் எழுந்து கழிப்பறை பக்கம் போனேன். குரல்கள் சூழ்ந்து அனைத்துத் திசைகளையும் அடைத்துக் கொண்டிருந்தன. பேச்சொலிகளின் நர்த்தணம் சூழ நடுவில் நடந்து சென்றேன். எங்குத் தேடியும் அண்ணனைப் பார்க்க இயலவில்லை. மீண்டும் கட்டிலுக்கு வந்து பார்த்தேன். நான் பரபரப்பாக இருந்ததைப் பார்த்த பக்கத்துக் கட்டில் மலாய்க்காரர் அழைத்தார்.

முனியாண்டி அண்ணனுக்கு இரவெல்லாம் மூச்சிரைப்பு வந்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்கள் என மலாய்மொழியில் சொன்னார். அசதியில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த எனக்கு எதுவுமே தெரியவில்லை என நினைத்தபோது குற்றவுணர்ச்சியாக இருந்தது. பிழைக்க வாய்ப்புண்டா எனக் கேட்டேன்.

“உயிர்வளி குறைந்துவிட்டதாம்…ரொம்ப துடித்துவிட்டார்…” என மீண்டும் அவர்தான் அலுப்புடன் கூறினார். அண்ணனின் கட்டிலில் அமர்ந்தேன். தலையணைக்குப் பக்கத்தில் ஒரு துண்டு தாளில் அவருடைய மனைவியின் அழைப்பேசி எண்ணை எழுதி வைத்திருந்தார்.

“உன்னைப் பலமுறை அழைத்தார்… அந்தச் சத்தத்தில்தான் நானும் எழுந்துவிட்டேன்…” என அவர் மலாயில் கூறியது என் காதில் விழத் தயங்கிக் கொண்டிருந்தது.

-கே.பாலமுருகன்

About The Author