குறுங்கதை : கொரோனாவும் மாரிமுத்துவும்

 

 

நான் கோரோனா கிருமி பேசுகிறேன். இப்பொழுது மாரிமுத்துவின் தொண்டைக்குள் இருக்கிறேன். நான் இங்கு வந்து இரண்டு மணி நேரம் ஆகிவிட்டன. மாரிமுத்துவின் உடலில் வெற்றிக்கரமாக நுழைந்த கடைசி கிருமி நான். நான் உள்ளுக்குள் வந்த கதையைச் சொல்லிவிட நினைக்கிறேன்.

இன்று சரியாக மதியம் 12.35க்கு ஜாலான் பெலக்காங் உணவகத்தில் மாரிமுத்து ‘ரொட்டி சானாய்’ சாப்பிட்டுக் கொண்டிருந்தார். இன்று இரவு நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவு பிரப்பிக்கப்படலாம் என்று அங்கிருந்தவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்டதும் சற்றுப் பரப்பரப்பானார். வீட்டில் அடுத்த சில நாள்களுக்கு மட்டுமே சமையல் பொருள்கள் இருப்பதை அரற்றிக் கொண்டிருந்த மனைவியின் முகம் ஞாபகத்திற்கு வரக் கடைசித் துண்டைப் பிய்த்து வாயில் அதக்கிக் கொண்டே எழுந்தார்.

அப்பொழுதுதான் எனது சில சகோதரர்கள் அவரின் உள்ளங்கைகளில் தாவிக் கொண்டனர். பின்னர், சந்தைக்கு விரைந்த அவரிடம் நான் ஒரு வெளிநாட்டவரின் கைகளிருந்து இருவரும் கைக்குலுக்கும் கணத்தில் அவர் விரல் இடுக்கில் புகுந்து கொண்டேன். என்னுடன் சேர்த்து அவருடைய வலது கையில் மொத்தம் 15 கொரோனாக்கள் இருந்தோம். நான் சற்று சாமர்த்தியமானவன். மெல்ல நகர்ந்து அவருடைய விரல் நுனியில் காத்திருந்தேன். எந்நேரத்திலும் அவர் கண்களையோ அல்லது மூக்கையோ தொடுவார் அடுத்த கணமே அவர் சுவாச நுழைவாயில் நுழைந்து உள்ளே சென்றுவிடத் தயாராக இருந்தேன்.

பொருள்களையெல்லாம் வாங்கிக் கொண்டு வீட்டைச் சென்றடைந்தார். நாங்கள் அனைவரும் அவர் வலது கையில் பத்திரமாக இருந்தோம். என் சகோதரர்களுக்கு ஒரே குதுகலம். வீட்டில் நிறைய பேர் இருப்பார்கள் என அவர்களுக்குக் கொண்டாட்டம் தாள முடியவில்லை. மாரிமுத்து வீட்டின் உள்ளே நுழைவதற்குள் அவருடைய அப்பா வெளியில் வந்து எதையோ சுட்டிக் காட்டினார். ஞாபகம் வந்த மாரிமுத்து வீட்டின் நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த ஒரு நீல வாளியிலிருந்து ‘மஞ்சள் கலந்த நீரில்’ கால்களையும் கைகளையும் கழுவினார். அந்த மஞ்சள் நீர் பட்டதும் சகோதரர்கள் அனைவரும் எரிச்சல் தாங்க முடியாமல் கதறினர். நான் மட்டும் விரலில் ஏறி நகத்தில் ஒளிந்து கொண்டதால் தப்பித்து விட்டேன்.

தப்பித்தோம் பிழைத்தோம் என நானும் எனது இன்னும் இரண்டு சகோதரர்களும் மட்டுமே மாரிமுத்துவின் கையில் எஞ்சியிருந்தோம்.

“கைய நல்ல கழுவுனீங்களா? சும்மா தண்ணிய அள்ளி தெளிச்சா போதுமா? போய் சவர்க்காரத்துல கழுவுங்க…” என்றது மாரிமுத்துவின் மனைவியின் குரல். எனக்கும் என் சகோதரர்களுக்கும் அவரின் மனைவியின் மீது கடும்கோபம் எழுந்தது. இப்பொழுது என்ன செய்வது? மாரிமுத்து கைகளைக் கழுவ குழாயிடம் சென்று கொண்டிருந்தார். இனி நமக்கு வாய்ப்பில்லை என்று சோகத்தில் ஆழ்ந்து கொண்டிருந்தபோது சட்டென்று மாரிமுத்து தன் வலது கையை எடுத்து நெற்றியைத் துடைத்தார். கிடைத்த வாய்ப்பை வீணாக்காமல் அடுத்த நொடி நெற்றியின் மீது பாய்ந்து வழிந்து சறுக்கிக் கொண்டே அவர் மூக்கின் மீது சரிந்து சந்தில் நுழைந்தேன். அவர் மூச்சின் பிறப்பிடம் தேடி அடுத்து நகர வேண்டும். அவருடைய நுரையீரலை அடைய எனக்கு எப்படியும் நான்கு நாட்கள் எடுக்கும். வசதியாக தொண்டைக்குள் சரிந்து மாரிமுத்துவின் சதையில் படுத்துக் கொண்டேன். சுகமான சூழல் என்னைச் சூழ்ந்தது.

மாரிமுத்து கைகளைக் கழுவும்போது எனது இன்னபிற சகோதரர்கள் மாண்டார்கள். எப்படியும் நான் மட்டும் சாமர்த்தியமாகத் தப்பித்துக் கொண்டதை நினைத்துப் பெருமிதம் கொண்டேன். வெளியில் இருந்த வெப்பத்தால் வாடிக் கொண்டிருந்த எனக்கு இப்பொழுது மாரிமுத்துவின் உடலில் இருந்த குளிர்ந்த தன்மை இதமாக இருந்தது.

ஆம். இப்படித்தான் நான் மாரிமுத்துவின் உள்ளே நுழைந்தேன். எனது பிறப்பின் யதார்த்தமே மனிதர்களின் நுரையீரலை அடைந்து பூர்த்தி பெறுவது மட்டுமே. நானும் 14 நாட்களில் இறந்துவிடப்போகும் ஓர் அற்ப கிருமி மட்டுமே. ஆனால், இறப்பதற்கு முன் மனித உயிர்களைப் பலி வாங்கிய பின்னரே மறைவோம்.

“ப்பா… அம்மா இந்த உப்புத் தண்ணியில வாயைக் கொப்பளிக்கச் சொன்னாங்க!” என்றது மாரிமுத்துவின் மகனின் குரல். எழுந்து அக்குவளையில் இருந்த நீரைப் பருகி தொண்டைக்குள் கொண்டு வந்து நிறுத்துகிறார்.

என்னைச் சூழ்ந்துகொண்ட அவ்வுப்பு நீர் சதையோடு ஒட்டிக் கொண்டிருந்த என்னை அடித்து நகர்த்துகிறது. அத்தனை பலம் கொண்ட அந்நீரில் நான் மெல்ல மூழ்குகிறேன். எனது மூச்சுத் திணறுகிறது. உலகத்தின் மிக நுண்ணிய உயிரான நான் சரியாக மாலை 2.40க்கு மாரிமுத்துவின் தொண்டைக்குள்ளேயே இறக்கப் போகிறேன்; இறந்து கொண்டிருக்கிறேன்.

-கே.பாலமுருகன்
Stay safe From Covid-19.

About The Author