குறுங்கதை: இறைச்சி

இருண்ட அறைக்குள் இருந்த ஒன்பது பேரும் நகரக்கூடத் திராணியில்லாமல் ஒருவரையொருவர் மூர்க்கத்துடன் பார்த்துக் கொண்டிருந்தோம். இதுபோல இங்கு நிறைய அறைகள் இருந்தன.வலது மூலையில் கைகளுக்கு எட்டாத உயரத்தில் ஒரேயொரு சிறிய சன்னல் இருந்ததால் அவ்வப்போது வெளிச்சக்கீற்றுகளை கடவுளின் வருகையைப் போல அதிசயத்துப் பார்க்க முடிந்தது. உன்னதங்கள் நமக்கானதல்ல அதைத் தொட முடியாதது எவ்வளவு உண்மையென அந்தச் சிறிய சன்னல் நினைவுப்படுத்திக் கொண்டே இருந்தது.

வந்து கொண்டிருந்த சமைத்த உணவுகள் பின்னர் வெறும் இறைச்சி துண்டுகளாக மாறின. அதையும் தூக்கி உள்ளே வீசிவிடுவார்கள். பொறுமையாக இருந்தால் மிஞ்சுவது எலும்புகளாக இருக்கும் என்கிற எச்சரிக்கை உணர்வு அதீதமாகியது. பின்னர் இறைச்சி தூக்கி வீசப்பட்டதும் அதைக் கடித்துக் கிழித்து நமக்கான பாகத்தை எடுத்துச் செல்லக் கற்றுக் கொண்டோம். பசி தீராத ஓர் இருள் மிருகமாக வளர்ந்து கொண்டிருந்தது.

தேவைக்கு மிஞ்சிய பாகத்தை அபகரிக்கத் துவங்கியபோது தினமும் ஒருவன் பசியில் வாடிக் கொண்டிருந்தான். மறுநாள் அவன்தான் இறைச்சியின் மீது ஆக்ரோஷத்துடன் முதலில் பாய்வான்.

எதிர்த்துக் கேள்விக் கேட்ட ஒருவனும் வெளியில் இல்லை. இந்த எட்டுப் பேரில் நால்வர் வெளிநாட்டு ஊழியர்கள். பிழைக்க வந்த இடத்தில் முதலாளி வர்க்கத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தி மாட்டிக் கொண்டவர்கள். யார் வந்து பிடித்தார்கள்; யார் இப்படி அடைத்துள்ளார்கள் என்பது எதுவுமே தெரியாமல் ஆறு மாதங்கள் கடந்துவிட்டன.இப்பொழுது அந்த இறைச்சித் துண்டுகளும் வருவதில்லை. எத்தனை நாள்கள் பசியில் இருந்தோம் என்பதும் நினைவில் நிற்க வலுவில்லாமல் நிதானம் இழந்து கொண்டிருந்தோம்.

உடல் பலவீனமாக மனம் மிருகமாகி கொண்டிருந்தது. எனக்குப் பக்கத்தில் இருந்தவர் வயதானவர். எப்படியும் ஐம்பதைத் தாண்டியவராக இருக்கும். இங்கிருப்பவர்களில் அவருக்குத்தான் வயது அதிகம். அறப்போராட்டம் செய்தவர் என நானே வந்தபோது அவரை வணங்கியுள்ளேன். நேரத்தைக் கடத்தாமல் அவர் கைகளை இறுக்கிப் பின்பக்கம் வளைத்துத் தரையோடு அமிழ்த்திப் பிடித்துக் கொண்டேன். அறையில் இருந்த மற்றவர்கள் மெல்ல எழுந்து வரிசையாக நிற்கத் துவங்கினார்கள். அவர்களின் நாக்கிலிருந்து எச்சில் வடிந்து கொண்டிருந்தது.

-கே.பாலமுருகன்

About The Author