கனவுப் பாதை சிறுவர் மர்மத் தொடர்- பாகம் 1 (ஆக்கம்: கே.பாலமுருகன்)

 

எரிய மறுத்தக் கைவிளக்கை மீண்டும் உள்ளங்கையில் வைத்து இரண்டு முறை தட்டினாள். வயோதிக ஒளி மட்டுமே எஞ்சியிருந்தது. காட்டிய தூரத்தில் குறுகி இருளுக்குள் கரைந்தது.

“ஏஞ்சலா! ஏஞ்சலா!….”

திடுக்கிட்டுக் குரல் கேட்டத் திசையறியாத தடுமாறின கண்கள்.

“இல்ல! நான் துளசி… நான் துளசி…!”

சடாரென்று ஒரு விழிப்பு. துளசியின் இருள் நிலவிய அறை. எதிரில் ஒரு நிலைக்கண்ணாடி மட்டும்தான். எழுந்து நின்றால் முழு உருவத்தையும் காட்டிவிடும் நிலைக்கண்ணாடி. வலது மூலையில் துளைசியின் ஸ்டிக்கர் பொட்டுகளின் ஆக்கிரமிப்பு.

மெல்ல எழுந்து நிலைக்கண்ணாடியை நோக்கி அடியெடுத்து வைத்தாள். பாதங்கள் தரையில் அழுந்த பதறின. கைகளில் நடுக்கம். கையை விரித்து உள்ளங்கையைக் கவனித்தாள். சற்று முன்பு கனவில் கண்ட கைவிளக்கை ஏந்திக் கொண்டிருப்பது போன்றே ஒரு பிரமை. இலேசான கனம் கையில் அப்படியே நிலைத்திருந்தது.

அப்பா வாங்கிக் கொடுத்து சில மாதங்கள் மட்டுமே ஆன நிலைக்கண்ணாடியின் முன் வந்து நின்றாள். எதிரில் அவள் உருவம் தெரியவில்லை. உற்றுக் கவனித்தாள். அறையின் எந்தப் பிரதிபலிப்பும் கண்ணாடியில் தென்படவில்லை. வெறும் இருள் மட்டுமே இறுகியிருந்தது. சட்டென்று இரண்டு கைகள் அசைவதைக் கவனித்தாள். முன்னே வந்து பின்பு பின்னே நகர்ந்து கைகள் கண்ணாடியின் உள்ளே வித்தை காண்பித்துக் கொண்டிருந்தன.

துளசி அதனை ஆச்சரியம் சூழப் பார்த்தாள்.

“இது உன்னோட கைத்தான?”

திடுக்கிட்டு மீண்டும் எழுந்தாள்.

“மா… இது உன்னோட புத்தம்தான? ஏன் தம்பி வச்சிருக்கான்?”

எதிரில் அம்மா. அதே குழி விழுந்த கண்கள். இரவெல்லாம் கடைசி தம்பியுடன் போராடி தோற்ற அவருடைய உறக்கம் அப்படியே கண்களில் குற்றுயிராய் தவித்துக் கொண்டிருந்தது.

உடனே எழுந்து சென்று எதிரில் இருந்த நிலைக்கண்ணாடியைக் கவனித்தாள். எவ்வித சலனமும் இல்லாமல் அவளுடைய உருவத்தைக் காட்டியப்படி நின்றிருந்தது.

“என்ன துளசி? கேட்கறன்தான?”

“மா, நான்தான் கொடுத்தன். விட்டுருங்க. இது பழைய புக்குத்தான்…”

“சரி அப்படின்னா ஓகே. நீ யேன் பேய் அறைஞ்ச மாதிரி இருக்க?”

பதிலேதும் பேசாமல் துளசி குளியறைக்குள் நுழைந்தாள். தம்பி குளித்துவிட்டுப் போன சுவடுகளாய் தரையில் பரவியிருந்த நீர்த்துளிகள் அவளுடைய பாதங்களில் சில்லிட்டன.

அங்கிருந்த கண்ணாடியில் வெண்மைப் படர்ந்திருந்ததால் துளசியால் முகத்தைக் கவனிக்க இயலவில்லை. சற்று நேரம் கண்களை மூடினாள். கனவில் பார்த்த அவளின் முகத்தை அவளே நினைவுக்குக் கொண்டு வர முயன்றாள். தோள்பட்டைவரை மட்டுமே அலாவிக் கொண்டிருந்த குட்டையான கூந்தல் மட்டுமே ஞாபகத்திற்குள் எஞ்சியிருந்தன. எவ்வளவு முயன்றும் கனவின் ஆழத்தை வெளிக்கொணர முடியாமல் தவித்தாள்.

கண்ணாடியைக் கைகளைக் கொண்டு துடைத்தாள். வலது மூலையில் இருந்த அவளுடைய கருப்புப் பொட்டுகளையும் பார்த்தாள். கனவு மெல்ல நினைவிற்கு வந்தது. முதலில் கேட்ட ஏஞ்சலா என்கிற குரலுக்குப் பின்னர் என்ன நேர்ந்தது என்பதில் மீண்டும் குழப்பம் நிலவியது.

குளித்துவிட்டுக் கீழே வந்தும் அவள் மனம் எதிலுமே ஒட்டமுடியாமல் அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தது. பற்றில்லாத காலை உணவுக்குப் பின் அம்மாவிடம் சொல்லலாமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தாள். எப்படிச் சொல்வது? கனவென்பதை சாதாரணமான ஒன்றுத்தான், காலையில் எழுந்ததும் அதனை மறந்துவிட வேண்டும் என்பதுதான் அம்மாவின் பதிலாக இருக்கும் என்று துளசிக்கு நன்றாகத் தெரியும். பின்னர், சரி கேட்டுவிடலாம் என்று  துணிந்தாள்.

“மா… தூங்கனா கனவு வரும்தான?”

“ஆமாம். நல்ல மனசு உள்ளவங்களுக்குக் கனவே வராதாம்…”

“அப்ப நான் என்ன கெட்டவளா?”

“சின்ன பிள்ளைங்களுக்குக் கனவே வராது. உனக்கு ஏன்? என்ன பேய் கனவா?”

துளசி மௌனமானாள்.

“ராத்திரி எதாச்சம் பேய் படம் பார்த்துருப்ப. அப்புறம் கனவுல என்ன சாமியா வரும்?”

“இல்லம்மா… ஒருத்தருக்கு ஒரு கனவுத்தான வரும்? எழுந்தோன கனவு போய்ரும்…”

அம்மா அவளை வேடிக்கையாகப் பார்த்துவிட்டு, “ஆமாம் துளசி. ஒருத்தனுக்கு ஒரு கனவுத்தான் வரும். அதுல என்ன சந்தேகம்? சில சமயம் அந்தக் கனவு கோர்வையா இருக்காது… விட்டுவிட்டு இடம் மாறி ஆள் மாறி வரும்…” என்று அலுத்துக் கொண்டார்.

“தெரியும் மா. எனக்கும் அப்படித்தான் கனவு வரும். ஆனா, ஒரு வாரமா கனவுக்குள்ள நான் கனவு காண்றன்மா… கனவுலேந்து ஏஞ்சி திரும்பவும் இன்னொரு கனவுலேந்து… புரிலமா…”

“நீ ராத்திரி என்ன படம் பார்த்த? ஏன் உளறிக்கிட்டு இருக்க…?”

“மா… ஏஞ்சலான்னு யாராச்சம் உனக்குத் தெரியுமா?”

அம்மா வேலை செய்வதில் மீண்டும் மும்முரமானதால் துளசியின் கேள்வியைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. துளசி கையில் வைத்திருந்த தண்ணீருடன் வீட்டுக்கு வெளியில் வந்தாள். பாதத்தில் இன்னமும் ஏதோ சில்லின்று உரசிக் கொண்டிருப்பதைப் போலவே அவளுக்குத் தோன்றியது.

“ஏஞ்சலா! ஏஞ்சலா!”

சட்டென்று பின்னாலிருந்து பழக்கமான ஒரு குரல். துளசி திரும்பிப் பார்க்கவில்லை. ஒருவேளை இதுவும் ஒரு கனவாக இருக்குமோ என்று அஞ்சினாள். வாசல் கதவின் இறும்புப் பிடியைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

  • தொடரும்

 ஆக்கம்: கே.பாலமுருகன்

About The Author