கணேஷ் பாபுவின் விடுதலை சிறுகதையை முன்வைத்து- மரணத்தைத் தாண்டும் கணங்கள்
சிறுகதை சூழலில் இருவிதமான கதை போக்குகள் காலந்தோறும் பொதுமையில் ஒரு படைப்பை வகைப்படுத்தி அறிய உதவுகின்றன. மனித வாழ்வின் புறவயமான போராட்டங்களைச் சொல்வது ஒரு வகையைச் சேரும். புறத்தே நிகழும் மாற்றங்களை, கொடுமைகளை, சுரண்டல்களை, நகர்வுகளை, உறவு சிக்கல்களை என இப்படியாக வாழ்க்கையையும் அதனைச் சார்ந்திருக்கும் பலதரப்பட்ட மனிதர்களையும் காட்டக்கூடியதாகும். அடுத்ததாக, மானுடத்தின் அகவயமான போராட்டங்கள், அகம் சார்ந்த நெருக்கடிகள், மானுட உணர்வுகளின் உச்சக் கணங்கள் என ஒரு நிலத்தில் வாழும் மனிதர்களின் அகம் சார்ந்து உள்முகமாகப் பயணிக்கக்கூடிய வகையைச் சேரும்.
முன்னதாகச் சொல்லப்பட்ட வகையில் அதிகமான படைப்புகள் ஒரே கருப்பொருளில் சொல்லியதை மீண்டும் சொல்லும் பாணியில் தொடர்ந்து படைக்கப்பட்டு வந்தாலும் அது காலத்தால் நிலைப்பதற்குத் தொடர்ந்து போராடி வருகின்றன. இரண்டாம் வகையைச் சேர்ந்த சிறுகதைகள் புறக் கட்டமைப்புகளையும் மேம்போக்கான ஒப்புவித்தல் ஜோடனைகளையும் தாண்டி நமக்குள்ளே பல வாயில்களைத் திறந்துவிடக்கூடிய சாத்தியங்களையும் தருணங்களையும் உள்ளடக்கியவையாகும். கணேஷ் பாபுவின் விடுதலை என்கிற சிறுகதை இரண்டாம் வகை கதை போக்கினைப் பின்புலமாகக் கொண்டு சமக்காலத்து சூழலை ஒரு கோட்டோவியம் போல வரைந்து காட்டுகிறது.
மரணம் என்பது பேசித் தீராத அல்லது பேசித் தீர்வுக்குட்படுத்த முடியாத சிக்கலான அதியாழம் கொண்ட ஒன்றாகும். சிக்மன் பிராய்ட் மரணப் பயம்தான் ஒரு மனிதனை வாழ்நாள் முழுவதும் இயக்கிக் கொண்டிருக்கிறது என்பார். மரணத்திற்கு எதிராகத்தான் தன் பிரக்ஞையை ஆசைகளாலும் இலட்சியங்களாலும் கனவுகளாலும் மனிதன் கட்டமைத்துத் தன்னை அதற்குள் மூடி மறைத்துக் கொள்கிறான் எனக்கூட தோன்ற வைக்கும். Life Of Pie என்கிற திரைப்படத்தில் அந்த இளைஞன் 227 நாள்கள் கடலில் தனியாக ஒரு புலியுடன் மாட்டிக் கொள்கிறான். ஆனால், அவ்விடத்தில் புலி என்பது தனக்கு முன்னே விரிந்து நிற்கும் மரணம் என்கிற யதார்த்தம் என்பதை மெல்ல உள்வாங்கிக் கொண்டு அந்த மரணத்திற்கு எதிராக தனது எச்சரிக்கை உணர்வைப் பலப்படுத்திக் கொள்கிறான். அந்த எச்சரிக்கை உணர்வே அவனை அத்தனை நாள்கள் தனக்குள்ளான வாழ வேண்டும் என்கிற அகப்போராட்டத்தைத் தூண்டிக் கொண்டிருக்கிறது.
கணேஷ்பாபு தத்துவங்களை ஓர் உரையாடலாகத்தான் இச்சிறுகதைக்குள் வளர்த்துச் செல்கிறார். பௌதீகமாகவும் தத்துவமாகவும் மரணத்தையொட்டி ஒரு விவாத அலைகளை உருவாக்குகிறார். அது உரையாடல்களின் வாயிலாக வளர்கின்றன. எங்கேயும் இந்த விவாதத்திற்குப் பதில் கொடுக்க வேண்டும் என்கிற முயற்சி அவரிடம் முழுவதுமாக இல்லை என்பதே இப்படைப்பின் கலை அமைதியைப் பாதுகாத்துள்ளது. மேலும், மரணத்துடன் மனித மனம் கொள்ளும் உள்முரண்களையும் இச்சிறுகதை உரையாடி கேள்விகளையும் தோற்றுவிக்கிறது. தத்துவரீதியாக மரணத்தை மனித மனங்களுள் கட்டமைக்க முடியாதோ? எப்பொழுதும் சரவ நிச்சயத்தின் முன்னே தத்துவங்கள் தோல்வியடைந்து விடுகின்றனவா? இதில் நல்ல சாவு, கெட்ட சாவு, துக்கச் சாவு, நிறைவான சாவு என்றெல்லாம் மனித மனங்கள்தான் சுயமாக வகுத்துக் கொள்கிறதோ? எனக் கேள்விகளை இச்சிறுகதை மனத்தினுள் விட்டுச் செல்கின்றது.
மரணம் உண்மை; சர்வ உண்மை என்பதை ஏற்க மறுக்கும் மனம் மரணத்தைச் சுற்றி பல வளையங்களைக் கட்டமைத்துக் கொள்கின்றன. பிள்ளைகளை வளர்த்து, கல்யாணம் செய்து கொடுத்துவிட்டு, அதில் பேரப்பிள்ளைகளையும் பார்த்துவிட்டு இறந்து போனால் அது நல்ல சாவு என்கிறோம். அப்படியென்றால் பேரப்பிள்ளைகளைப் பார்த்துவிட்டவர்கள் சாவதற்குத் தகுதியானவர்களாகிவிடுவார்களா என்கிற கேள்வியும் உடன் எழும். அல்லது பேரன் பேத்திகள் பார்த்த பின்னரும் 100 வயதுக்கு மேல் உயிரோடு இருந்துவிட்டால் ‘இது இன்னும் செத்துத் தொலைய மாட்டுது’ என்கிற ஓர் உணர்வுக்குத் தள்ளப்படுகிறவர்களும் உண்டு. இப்படியாக மரணத்தைப் பல கோணங்களில் தர்க்கம் செய்து மனம் அதன் உண்மையிலிருந்து தப்பிக்கத்தான் முயல்கிறது. ஒருவேளை மரணத்தை வியாக்கியானம் செய்து வகுத்து அதிலிருந்து தப்பித்துவிட்டால் அதுதான் விடுதலையோ? கணேஷ் பாபு சொல்ல வரும் விடுதலை என்பது சுயத்துக்கான விடுதலையாகக்கூட இருக்கலாமோ என நினைக்கத் தோன்றுகிறது. உண்மையின் முன்னே தற்காலிகமான தப்பித்தலைத்தான் விடுதலை எனப் புரிந்து கொள்கிறோமா?
இச்சிறுகதையில் என்னைக் கவர்ந்ததாக கணேஷ் பாபுவின் கவித்துவமான மொழியைத்தான் சொல்ல வேண்டும். ஒவ்வொரு அவதாணிப்புகளையும் ஒரு கவிதையைப் போல பிரதிபலிக்கிறார். ‘நீண்ட மௌனத்திலேயே கரைந்தது பொழுது’ என சிறுகதையின் முதல் வரியே ஒரு நல்ல கவிதைக்கான வரிகளாகிவிடுகின்றது. அந்தியின் காவிநிற வானப்பின்புலத்தில் அகண்ட சமுத்திரத்தில் ஒரு சிறிய படகு, ஊதுகுழல் காற்று, அடுப்பின் அனலை எழுப்புவது போல என வரிகள் அழகியலாக விரிந்து காட்சிகளைக் கடத்துகின்றன. ஒரு நவீன கவிதை சிறுகதைக்கான தன்மைகளை ஏற்று வருவது போல, ஒரு சிறுகதை தனக்குள் கவிதைக்கான கச்சிதங்களையும் பெற்று எழுவது இயல்புதான்.
ஒரு புனைவு பல வாயில்கள் என்பார்கள். அத்தகைய வாசக இடைவெளி இச்சிறுகதையில் உரையாடல்களில் கதைநெடுக வருகின்றன. மரணம் என்கிற சர்வநிச்சயமான ஓர் உண்மையின் முன்னே உரையாடல்கள் அடிப்படைக் கேள்வியிலிருந்து வளர்ந்து ஆழமான தத்துவ விசாரணைகளாக விரிகின்றன.
‘என் நேரம் அப்படி.. கடைசியா அப்பா முகத்தப் பாக்ககூடாதுன்னு எழுதியிருக்கு போல.. பின்னால நெனச்சுக் கூடப் பாக்க முடியாதேடா. அப்பன் முகம் சாகுறப்ப எப்படி இருந்ததுன்னு?”, சொல்லிவிட்டு விசும்பத் துவங்கினான் ஜெயகுமார். இந்த வரியிலிருந்துதான் சிறுகதை மரணம் என்பதன் மீதான ஓர் அடிப்படை உணர்வை கட்டியெழுப்புகிறது. பிறகு அது நண்பர்களுக்கிடையேயான உரையாடல்களாக மாறுகிறது. மரணத்துக்கும் அப்பாவின் ஆளுமைக்கும் இடையே உரையாடல்கள் ஊடாடி அலைகின்றன. அதை நேர்த்தியாக நகர்த்திச் செல்கிறார்.
நீரைப் பற்றிப் பேசியதாலோ என்னவோ அவன் கொஞ்சம் ஆசுவாசமாக இருப்பது போலிருந்தது. இந்த வரி ஏதோ மேலோட்டமான காட்சிப்படுத்துதல் அல்ல. இது ஒரு படிமமாகவே மாறுகின்றது. நீர் என்றாலே அது அழுக்கையும் தேக்கங்களையும் போக்கி ஒரு சுமுகமான ஓட்டத்தை உருவாக்கும் தன்மை கொண்டது. எந்தவொரு இறுக்கமான சூழலையும் நெகிழ்த்திவிடும் என்பது போல இந்த வரி சிறுகதைக்குள் எழுகின்றது.
அடுத்து, கதைச்சொல்லி ஜெயக்குமாரின் ஒவ்வொரு வார்த்தைகளையும் கூர்ந்து கவனித்து அவனை மரணம் என்பது விடுதலைக்கான ஒரு வெளிப்பாடு என நம்ப வைக்கப் போராடுவது சிறுகதையின் யதார்த்தத்தைத் தக்க வைத்துக் கொண்டதில் முக்கியமான அம்சமாகப் பார்க்கிறேன். ஒருவேளை ஜெயக்குமாரின் புலம்பலாக இச்சிறுகதை விரிந்திருந்தாலோ அல்லது மரணத்தைப் பற்றிய கழிவிரக்கப் பாணியிலான வெற்றுக் கூச்சல்களாகவோ இருந்திருந்தால் இச்சிறுகதை மரணம் பற்றி கூப்பாடு போட்டக் கதை வரிசைகளுக்குள் அமிழ்ந்து காணாமல் போயிருக்கும். ஆனால், இது மரணம் என்பதையும் அதற்குள் சிக்கித் தவிக்கும் அகம் சார்ந்த உணர்வுகளையும் உரையாடுகிறது. அது தத்துவ தரிசனமாக விரியும் புள்ளிகளையும் கதைக்குள் கொண்டுள்ளன.
ஆனால், அந்தத் தத்துவ விசாரணைகளுக்கான பதில்களைக் கொடுத்துள்ளதா என்று கேட்டால், ஒருவேளை கொடுத்து நிறைவு செய்திருக்கலாம். கணேஷ் பாபு அதனைச் செய்ய வில்லை. அதுவரை அடர்ந்து விரிந்து சென்ற உரையாடல் மரணம் என்பது அப்பாவிற்கு விடுதலையாகத்தான் இருந்திருக்கும் என்கிற புள்ளியில் வந்து சேர்வது போன்று பாசாங்கு செய்து முடிவில் மீண்டும் துவங்கிய இடத்தில் வந்து ஒரு கேள்வியாக நிற்கிறது. அசோகமித்திரனின் பயணம் சிறுகதையைப் போல காட்டுவழிப் பயணம் நெடுக தன் குருவின் அனைத்து ஆன்மீகமயமான துறப்புகளும் மரணத்தை வெல்லும் வியாக்கியானங்களும் கட்டியெழுப்பப்பட்டு வந்து இறுதியில் மாயத்தன்மையுடன் மானுடத்தின் ஆதி உணர்வில் வந்து குவிந்து நமக்குள் ஆழமாக விரிந்து செல்லும் மனோபவத்தை உருவாக்கும். கணேஷ் பாபுவின் சிறுகதையும் மரணத்தின் முன் மானுட மனங்கள் எதிர்க்கொள்ளும் விவாதங்களையே நமக்குள் கடத்திவிட்டு முடிகிறது. அதையே வாசகனுக்கான ஓர் இடைவேளியாகவும் நான் பார்க்கிறேன்.
இன்னும்கூட நுண்சித்தரிப்புகள் சிறுகதைக்குள் இடம் பெற்றிருக்கலாம் எனத் தோன்ற வைத்தது. இது நடப்பது சிங்கை நிலத்தில் அதுவும் வீட்டில் தனியாக வாழ்பவன். குடியேறியவனின் வாழ்க்கை. ஜெயக்குமாரின் அந்த வாழ்க்கை இச்சிறுகதைக்குள் இன்னும்கூட சித்தரிக்கப்பட்டிக்கலாமோ என நினைத்தேன்.
மரணத்தைத் தர்க்கம் செய்து தத்துவமாக மாற்றுவதிலோ, அல்லது யதார்த்தத்தின் முன் தத்துவங்களை உடைத்துக் காட்டுவதிலோ இச்சிறுகதை கவனம் செலுத்தாமல் இவை இரண்டிற்கும் இடையில் ஊடாடும், அலைந்து கொண்டிருக்கும் புள்ளிகளை நோக்கி உரையாடியிருக்கிறது. இச்சிறுகதை எந்த மொழியில் மொழிப்பெயர்க்கப்பட்டாலும் கவனம் பெறுவதற்குரிய ஆழங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.
இச்சிறுகதையை உரையாடுவதற்குரிய தளத்தை உருவாக்கிக் கொடுத்த அழகுநிலா, ராமா சுரேஷ் அவர்களுக்கு என் நன்றி.
-கே.பாலமுருகன்