நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?
சிலரிடம் ‘நீங்கள் ஏன் ஓட்டுப் போட வேண்டும்?’ என்று கேட்டவுடனே ‘எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை’ என்று ஒரே வார்த்தையில் நழுவி விடுகிறார்கள். அல்லது ‘எனக்கு அரசியல் பிடிக்காது’ என்று அலட்சியமான பதிலைக் கொண்டிருக்கிறார்கள்.
இளையோர்களிடம் அரசியல் பேச்சுகளைத் தொடக்கினால் எங்களுக்கு இன்னும் வயதில்லை என்று பயப்படுகிறார்கள்; நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்களிடம் அரசியல் உரிமையைப் பற்றி பேச்செடுத்தால் இப்பொழுதிருக்கும் வாழ்க்கையைக் கட்டமைக்கவே எங்களுக்கு நேரம் போதவில்லை என்கிற புகாரை முன் வைக்கிறார்கள். முதியவர்களிடம் அரசியல் பற்றி கேட்டால் எங்கள் காலம் முடிந்துவிட்டது என்று ஓரம் தள்ளிப் போகிறார்கள். படித்தவர்களிடம் அரசியல் பற்றி பேச முயன்றால் ‘ஐயோ நாங்கள் அரசியல் பேசவேக்கூடாது’ என்று ஒரே வார்த்தையில் முடித்துக் கொள்கிறார்கள். பணக்காரர்களிடம் அரசியல் என்று சொன்னதும் ‘எங்களுக்கு அதில் உடன்பாடில்லை, நாங்கள் யாரையும் நம்பியில்லை’ என்று ஒதுங்கிவிடுகிறார்கள். ஆகக் கடைசியாக எளிய மக்களிடம் அரசியல் பேசச் சென்றால், ‘எங்களுக்கு என்ன தருவீர்கள்?” என்று பரிதபாத்துடன் நிற்பார்கள். இங்கு அரசியலைப் புரிந்து கொள்ளவும்; அரசியல் சார்ந்த அறிவார்ந்த உரையாடலை மேற்கொள்ளவும் யாருக்கும் பொறுமையும் இல்லை; தருணமும் இல்லை; அவர்களின் வாழ்க்கையில் அதற்குரிய இடமுமில்லை. ஆனால், அவர்கள், அவர்களுடைய பிள்ளைகள், அடுத்த சந்ததியினர் என அனைவரையுமே நிர்வகிப்பது, காப்பது, வழிநடத்துவது என எல்லாமும் அரசியல் என்பதை அவர்கள் உணர்வதில்லை.
1.நேரடி அரசியல்
அரசியல் என்பதை மூன்று வகையில் பிரித்தறியலாம். முதலாவதாக, ஒரு கட்சி சார்ந்து அரசியலில் நேரடியாக ஈடுபட்டு மக்களுக்குப் பணி செய்வது. மக்களுக்கே அரசு என்கிற கொள்கையின்படி அரசியலை அவ்வாறு புரிந்து கொள்ளலாம். முதலாவது இரகத்தில் எல்லோருக்கும் ஈடுபாடு இருந்ததில்லை. மக்களில் ஒரு சிலர் மட்டுமே அரசியலில் நுழைந்து தன்னைத் தலைவனாக்கிக் கொள்கிறார்கள்.
‘எனக்கு அரசியலில் நேரடியாக ஈடுபட ஆர்வமில்லை’ என்கிற இரகத்தைச் சேர்ந்தவர்கள் மேற்கண்ட அரசியல் வகைக்குள் வரமாட்டார்கள்.
2. அரசியல் விமர்சகர்கள்
அடுத்த ஒரு வகையினர் அரசியலை விமர்சிப்பவர்கள். காலம் முழுவதும் அரசியல் நடவடிக்கைகளைக் கண்கானிக்க ஆர்வம் கொண்டவர்கள். ஆனால், இவர்களுக்கும் அரசியலில் நேரடியாக ஈடுபட ஆர்வம் இருக்க வாய்பில்லை. ஆனாலும், அரசியலில் விமர்சிப்பதன் மூலம் எப்பொழுதும் தன்னை அரசியலோடு இணைத்துக் கொள்ளக்கூடியவர்கள். இவர்களின் நுனிவிரலில் அரசியல் தகவல்கள், கோட்பாடுகள், இன்றைய நிலவரம் என அனைத்தையும் வைத்திருப்பார்கள். இவர்களிடம் கேட்டாலும் ‘அரசியலில் ஆர்வமில்லை’ என்பார்கள். ஆனால், அவர்கள் குறிப்பிடும் ஆர்வமில்லை என்பது ஒரு அரசியல் கட்சிக்குள் இருந்து கொண்டு அரசியல் செயல்பாடுகளில் ஈடுபடுவதில் ஆர்வமில்லை என்பதைக் குறிக்கிறது.
3.மக்கள்
மூன்றாவது இரகத்தைச் சேர்ந்தவர்கள் மக்கள். மக்கள் என்றால் யார்? நாம் அனைவரும் ‘மக்கள்’ என்கிற குழுமத்திற்குள் இடம்பெறுவோம். சரி, மக்கள் எனும் வகைக்கும் அரசியலுக்கும் என்ன தொடர்பு என்கிற கேள்வி எழும். நம் நாட்டு அரசியல் ஜனநாயகத்தன்மை கொண்டது என்று எல்லோரும் படித்திருப்போம். ஜனநாயகத்தன்மைக் கொண்ட அரசியல் ‘மக்களாட்சி’ முறையைப் பின்பற்றவல்லது ஆகும். அதாவது, அரசை மக்களே தேர்ந்தெடுக்க வேண்டும். நாட்டின் அரசியல் கோட்பாடுகளில் ‘மக்களாட்சி’ கொள்கையைப் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என்பதே ஒரு குடிமகனின் தலையாயக் கடமை. அதனைத் தெரிந்து கொள்வதன் மூலம் இந்நாட்டின் அரசு உருவாக்கத்தில் மக்களுள் ஒருவனான தனக்கும் சீரிய பங்குண்டு என்பதை உணர முடியும். அதனையே நாம் இவ்விடத்தில் ‘அரசியல்’ என்கிறோம். அதன் அடிப்படையிலேயே அரசியல் பேச்சுக்களைத் துவங்குகிறோம்.
இப்பொழுது சொல்லுங்கள், ‘நீங்கள் ஏன் ஓட்டளிக்க வேண்டும்?’ என்கிற கேள்விக்குப் பின்னால் எந்தத் தனிப்பட்ட அரசியல் விமர்சனமும், அரசியல் தாக்குதல்களும் இல்லை. அது மக்களாட்சியைத் தன் தேசியக் கொள்கைகளில் ஒன்றாகப் பின்பற்றும் மக்கள் உரிமை பற்றியது என்று விளங்கும். ‘எனக்கு அரசியலில் ஈடுபாடு இல்லை’ என்கிற உங்கள் புறக்கணிப்பு உங்களுக்கு அரசியலில் நேரடியாகவும், அரசியலை விமர்சிப்பதிலும் ஈடுபாடு இல்லை என்று சொல்லலாம். ஆனால், மக்கள் என்கிற முறையில் ஓட்டுரிமையைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொண்டிருக்கவே வேண்டும். அதுவும் அரசியலே.
ஆக, நாம் ஏன் ஓட்டளிக்க வேண்டும்? இது ஜனநாயக நாடு என்கிற வகையில் அரசைத் தேர்ந்தெடுக்கும் முழு உரிமையும் நம்மிடம் உள்ளது; ஆகவே, ஓட்டளிப்பதன் மூலம் ஜனநாயக சலுகையை நாம் பாவித்து நம் கடமையை நிறைவேற்றுவோம் என்கிற தன்னுணர்வு அனைத்துக் குடிமக்களுக்கும் எழ வேண்டும். அரசியலில் ஈடுபாடு கொள்வது ஓட்டுரிமையை உணர்ந்து நமக்கான தலைவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் பணியாகும் என்று உணர்வோம்.
வருகின்ற மே 9ஆம் திகதி
தூரம் கருதாமல்
நேரம் கருதாமல்
ஓட்டளிக்கச் செல்லுங்கள்.
உங்களிடைய ஓட்டு செலுத்தும் தகவல்களை அறிந்துகொள்ள கீழ்க்கண்ட முகவரிக்குச் செல்லவும்:
கீழ்க்காணும் குறும்படத்தைப் பார்க்கவும். வயதான ஒரு பாட்டியால் தன் உரிமையை விட்டுக் கொடுக்க முடியாமல் ஓட்டளிக்கச் செல்ல முடிகிறதென்றால் நாம் மட்டும் ஏன் நம் உரிமையை விட்டுக் கொடுக்க வேண்டும்?
வருகின்ற மே 9ஆம் திகதி காலை மணி 8.00 தொடக்கம் மாலை 5.00 வரையில் நீங்கள் ஓட்டளிக்கச் செல்லலாம். நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. ஓட்டளிக்கும் இடத்தினை முன்கூட்டியே உறுதி செய்து கொள்ளவும். (அகப்பக்கம், குறுந்தகவல் மூலம் அறிய முடியும்)
2. முறையான உடையை அணிந்து செல்லவும். பெரும்பாலான ஓட்டளிக்கும் இடம் பள்ளிக்கூடம் என்பதால் உடை நேர்த்தியைப் பின்பற்றவும்.
3. வாக்களிக்கும் முன் மையிடப்பட்டிருக்கும் கையில் ஓட்டுப் பாரத்தைப் பிடிக்க வேண்டாம். மை பட்டுவிட்டால் அது செல்லாத ஓட்டாகிவிடும்.
4. வாக்களிக்கும் இடத்தில் ‘அரசியல் பிரச்சாரத்தை’ மேற்கொள்ள வேண்டாம்.
நன்றி.
தேர்தல் நம் களம்
ஓட்டு நம் உரிமை.
வாழ்த்துகள்.
மக்களாட்சி முறைப்படி வெற்றி பெற்று நல்லரசை உருவாக்க அனைத்துத் தலைவர்களுக்கும் வாழ்த்துகள்.
-கே.பாலமுருகன்