நேர்காணல் தொடர் பாகம் 1: ‘எழுத்து வலிமைமிக்கது என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்’ – இளம் எழுத்தாளர் லோகாசினி முருகையா

இளையோர் சிறுகதை போட்டியின் வெற்றியாளர்களின் நேர்காணல் தொடர் 1

 

எழுத்து வலிமைமிக்கது என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன்’ – லோகாசினி முருகையா

மலேசியத் தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் நடத்திய இடைநிலைப்பள்ளி மாணவர்களுக்கான சிறுகதை எழுதும் போட்டி 2019-இல் வெற்றிப்பெற்ற மாணவி லோகஷினி. தேர்ந்தெடுக்கப்பட்ட பத்து இளையோர் சிறுகதைகளில் இவருடைய சிறுகதையும் இடம்பெற்றுள்ளது. பாரிட், இஸ்காண்டர் ஷா இடைநிலைப்பள்ளியில் பயிலும் இவர் சிறுகதை எழுதுவதில் சிறுவயதிலிருந்தே ஆர்வம் கொண்டுள்ளார்.

கேள்வி: உங்களுக்குச் சிறுகதை எழுதுவதில் எப்படி நாட்டம் ஏற்பட்டது?

லோகாசினி: நான் எப்பொழுதும் நாளிதழில் வெளிவரும் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசிப்பேன். அதே சமயம் மின்னல் வானொலியில் ஒலிப்பரப்பாகும் சிறுகதைகளையும் விரும்பிக் கேட்பேன். எனக்கிருந்த இதுபோன்ற பழக்கங்கள்தான் சிறுகதை எழுதுவதில் நாட்டத்தை உண்டாக்கின என்றே சொல்லலாம்.

 

கேள்வி: இச்சிறுகதை எழுதும்போட்டியில் பங்கெடுக்க யார் உங்களை ஊக்குவித்தவர்கள்?

லோகாசினி: எனது அன்பிற்குரிய ஆசிரியர்கள்தான் அதற்குக் காரணம். திருமதி நாகராணி அவர்களும் திருமதி வாசுகி அவர்களும் தொடர்ந்து இப்போட்டியில் என்னைக் கலந்து கொள்ள ஊக்கமளித்தார்கள்.

 

கேள்வி: இதற்கு முன் ஏதேனும் சிறுகதை போட்டிகளில் கலந்து கொண்ட அனுபவம் உண்டா?

லோகாசினி: இல்லை. இதுதான் எனக்கு முதல் அனுபவம். இனி கலந்துகொள்ள வேண்டும் என்கிற ஆர்வத்தை இப்போட்டி எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.

 

கேள்வி: இச்சிறுகதை போட்டியின் வாயிலாக என்ன எதிர்பார்த்தீர்கள்? அதனைப் பெற்றீர்களா?

லோகாசினி: இச்சிறுகதை போட்டி இன்னும் பல சிறுகதைகள் எழுதி இதுபோல வெற்றிப்பெற முடியும் என்கிற தன்னம்பிக்கையை உண்டாகியுள்ளது. தமிழ் விடிவெள்ளி கற்பனையாற்றல் கழகம் நடத்திய சிறுவர் சிறுகதை போட்டியில் மிகவும் அதிகமான மாணவர்கள் கலந்து கொண்டதால் அதில் வெற்றியாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கடும் போட்டி நிலவியதாக ஆசிரியர் கே.பாலமுருகன் அவருடைய பேட்டியில் தெரிவித்திருந்ததை வாசித்தேன். ஆக, இப்போட்டியில் முதலில் நான் தேர்வாவேன் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. இப்பொழுது இவ்வெற்றி இன்ப அதிர்ச்சியை அளித்துள்ளது.

 

கேள்வி: இவ்வெற்றிக்காக யாருகென்னால் நன்றி சொல்ல விளைகிறீர்கள்?

லோகாசினி: நிச்சயமாக என் பெற்றோர்களுக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்ததாக என்னை ஊக்குவித்துக் கொண்டிருக்கும் என் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடுத்து, இப்போட்டியை நடத்தி என்னைப் போன்று இலை மறைக் காய்ப்போல மறைந்திருக்கும் பல மாணவர்களை அடையாளம் காட்டிக் கொண்டிருக்கும் ஆசிரியர், எழுத்தாளர் கே.பாலமுருகன் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கேள்வி: போட்டியில் வெற்றிப் பெற்ற சிறுகதையை எழுதும் முன் ஏதேனும் பயிற்சிகளை மேற்கொண்டீர்களா?

லோகாசினி: எனக்குத் துணையாக இருந்தது என் அயராத வாசிப்புப் பயிற்சிதான். நிறைய வகையான சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்து வருகிறேன். அதுவே எனக்கு நல்ல பயிற்சியாக அமைந்திருந்தது.

 

கேள்வி: இப்போட்டியில் வெற்றிப் பெற்ற உங்களின் ‘கை கொடுக்கும் கை’ சிறுகதையை எவ்வாறு திட்டமிட்டீர்கள்? அக்கதைக்கான கரு எப்படிக் கிடைத்தது?

லோகாசினி: கல்வியின் முக்கியத்துவம் தெரிய வேண்டிய அவசியம் இன்றைய மாணவர்களுக்கு உண்டு என்பதை நான் நன்கு உணர்வேன். அதற்கு என்னுடைய வாழ்க்கை அனுபவமே மிகச் சிறந்த சான்றாகும். ஆகவே, நான் கதையின் கருவை அடுத்த தலைமுறை மாணவர்களுக்குச் சொல்ல வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து கண்டறிந்தேன். அதன்படியே இச்சிறுகதையை எழுதினேன். இனி, தொடர்ந்து எழுதி சமூகத்தில் நன்மாற்றத்தை உருவாக்குவேன் என்று நம்புகிறேன். எழுத்து வலிமைமிக்கது என்பதை நான் நன்கு உணர்ந்துள்ளேன். இவ்வரிய வாய்ப்பிற்கு மிக்க நன்றி.

நேர்காணல்: கே.பாலமுருகன்

நன்றி: தமிழ் மலர் பத்திரிகை

About The Author