இலக்கியம், விமர்சனம் மற்றும் இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்கும் இடையிலான தொடர்பும் முரணும் – 2
‘ஒரு படைப்பின் உண்மையை நோக்கி விவாதிப்பதுதான் விமர்சனம்’ – கா.நா.சு
இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்குமான ஓர் அத்தியாவசிய புரிதல் உருவாகியே ஆக வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறோம். புதிதாகத் தமிழ் இலக்கியத்தை வாசிக்கத் துவங்கும் வாசகனை நோக்கியே கறாராக விவாதிக்க வேண்டிய சூழலில் விமர்சனம் குறித்த என்னுடைய இரண்டாவது கட்டுரையை எழுதுகிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் சிங்கை இலக்கியம் குறித்து எழுப்பிய கடுமையான விமர்சனங்களின் (என்பதைவிட சமரசமற்ற விமர்சனம் என்றே சொல்லலாம்) தொடர்ச்சியாக விமர்சனத்தின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம், கலந்துரையாடல்கள், கட்டுரைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறன. விமர்சனம் என்பது மிகையுணர்ச்சியுடன் ஒரு படைப்பைப் புகழ்ந்து பேசுவது என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் மனங்களிலிருக்கும் புராதன எண்ணங்களைக் களையெடுத்தல் வேண்டும்.
விமர்சனக் கலை
ஒரு தனித்த படைப்பு அல்லது ஒரு தனிமனித அகத்தின் வெளிப்பாட்டிலிருந்து உதித்து அதற்கான ஒரு கலைவடிவத்தைக் கண்டடைந்து சமூகத்தை நோக்கி வெளிப்படும் படைப்பு சமூகத்தின் மதிப்பீடுகளுக்குள்ளாகின்றது. அச்சமூகம் என்பது மிக மரபான பண்பாட்டு நிறுவனம். நுகர்வு கலாச்சாரத்தின் இயக்க நியாயங்களுடன் செயல்படும் சமூகம் என்கிற அந்நிறுவனம் கூட்டாக இயங்கும்போது, அதன் இயங்குத் தளத்திற்கு வந்து சேரும் அனைத்தையும் தராசில் வைக்கும். அதுவே மதிப்பீட்டிற்கான நிலையை அடைகிறது. வாழ்க்கையின் இயக்கத்தையும் அது சார்ந்து வெளிப்படும் கலைகளையும் அளக்கவும், சுவைக்கவும், நிறுக்கவும் சமூகம் மதிப்பீடு என்கிற ஓர் அளவுக்கோலை உருவாக்கி வைத்திருக்கிறது.
பின்னர் உருவான அறிவுத்தளம் அதனை விமர்சனம் எனக் கண்டறிந்தது. பிறகு, கல்வி உலகம் அதனைத் திறனாய்வு என வகுத்துக் கொண்டது. தற்சமயம் விமர்சனம் என்பதை ஒரு நுகர்வு வெளிப்பாடாகப் புரிந்து கொள்ள இயலாது. சமூகமும் கல்வி உலகமும், விமர்சனம் குறித்து ஏற்கனவே உருவகித்து வைத்திருக்கும் அத்தனை விளக்கங்களிலிருந்தும் அதனைத் தாண்டியும் விமர்சனம் என்பதை மறுகண்டுபிடிப்பு செய்ய வேண்டியுள்ளது.
இலக்கியம்
காலம் ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கிறது. காலம் அளக்க முடியாத ஒன்று. காலத்தை அளக்க மனித வாழ்க்கையும் பண்பாட்டு மாற்றங்களையும் ஆராய வேண்டியுள்ளது. கால மாற்றத்தைப் புரிந்து கொள்ள வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. காலம் மாறும்போது வாழ்க்கையும் அதற்கு நிகராக மாறுகிறது. கால மாற்றத்தை வாழ்க்கையினுடாகவே கணிக்க முடியும் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆகவே, இலக்கியம் என்பது காலமாற்றத்திற்குள்ளாகும் வாழ்க்கையும் அதனூடாக மாறும் மதிப்பீடுகளினால் எழும் முரண்களையும் பதிவு செய்தலே ஆகும் என அவர் குறிப்பிடுகிறார். இலக்கியம் என்பதன் மீதான கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அத்தனை இலட்சியவாத அந்தஸ்த்துகளுக்கு எதிரான ஒரு புரிதல் இது. அதன் ஒருமையிலிருந்து பிரியும் எத்தனையோ கிளைகளுக்குள் இலக்கியம் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட முடியும்.
என் தாத்தா காலத்திலிருந்த உலகம் என் அப்பா காலத்திற்கு மாறும்போது பண்பாட்டு, அரசியல், சமூகம், கல்வி, மதிப்பீடு ஆகிய பற்பல மாற்றங்களை எதிர்க்கொள்கிறது. அதன் புதிய திறப்புகளினால் உருவாகும் அகவெழுச்சி, முரண் உணர்வுகள், உறவு சிக்கல்கள் என இன்னும் பலவற்றினூடாக இலக்கியம் ‘பதிக்கும் தடமாக’ மாறி செயல்படுகிறது. இலக்கியம் என்பதை வரலாற்றைப் பதித்தல் எனச் சொல்லிக் கேட்டிருப்போம். எது வரலாறு? இப்பொழுதிருக்கும் காலத்திற்கு முந்தைய காலத்தைத்தான் வரலாறு என்கிறோம். இப்பொழுது நடப்பது வரலாறு இல்லை. ஆனால், காலம் மாறும்போது இக்கணம் வரலாறாகிறது. ஆகவே, கால மாற்றத்தைப் பதிவு செய்தல் என்பதே இலக்கியத்தின் இயல்பு.
இலக்கியம் என்பது மனித உணர்ச்சிகளின் உச்சக்கணங்கள்தானே? என்று சில தீவிர விமர்சகர்கள் சொல்லியும் கேட்டிருப்போம். காலம் மாறும்போது உருவாகும் வாழ்க்கை, அரசியல், சமூகம், குடும்பம், கல்வி ஆகிய மாற்றங்கள் மதிப்பீடுகளை மாற்றுகிறது. மதிப்பீடுகளின் மாற்றங்களினால் மனித மனம் உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள்ளாகின்றது. அவ்வுணர்ச்சியின் ஆழத்தைப் பற்றி பேசும் வடிவமும் இலக்கியம்தான். ஆனால், அதற்குண்டான ஆதாரமாக இருப்பது மாறிக் கொண்டே இருக்கும் காலமாகும். ‘காலமாகி நிற்கும் அனைத்தைப் பற்றியும் பேசும் ஒரு மகத்தான கலைத்தான் நாவல்’ என ஜெயமோகன் சொல்வதையே ஒட்டுமொத்த இலக்கியத்திற்குமான புரிதலாக ஏற்றுக் கொள்ளலாம்.
இலக்கிய விமர்சனம்
விமர்சனக் கலை என்பதை நுகர்வு கலாச்சாரத்தை வளர்த்தெடுத்த சமூகம் பின்னாளில் கண்டுபிடித்த ‘கலைகளை அளக்கும் ஓர் அளவுக்கோல்’ எனப் புரிந்து கொண்டோம். ஆனால், அதன் கட்டாயம் என்ன? ஏன் விமர்சிக்கிறோம்? சமூக இயங்குத் தளத்தில் அதன் செயற்பாடு ஒரு சமூகத்தாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தை நோக்கி விரியும் எதையுமே விமர்சிக்க வேண்டும் என்கிற கடப்பாடு சமூகத்தின் நுகர்வுத்தளத்தில் நிச்சயப்பட்டுள்ளது. ஆகவே, ஒரு தனிமனிதனை ஏன் விமர்சிக்கிறாய் எனக் கேட்கும் உரிமை நமக்கில்லை. அவனும் இந்தச் சமூக நியாயத்திலிருந்து செயல்படுகிறான். அதனால் விமர்சிக்கவும் செய்கிறான். ஆனால், இது விமர்சனத்தைப் பற்றிய ஓர் ஆரம்பநிலை புரிதல்.
விமர்சனம் சமூக அக்கறைமிக்கது; சமூகத்தை இயக்கவல்ல கலைகளை விமர்சித்து அதன் தரத்தைத் தீர்மானிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது என்று பின்னாளில் விமர்சனம் குறித்த அனுபவம் விரித்துக்கொள்ளப்பட்டது என்றே சொல்ல வேண்டும். கா.நா.சு இலக்கிய விமர்சனத்தின் அவசியம் அதன் கூர்மையான விவாதத்திலிருந்து துவங்குகிறது என்கிறார். ‘ஒரு படைப்பின் உண்மையை நோக்கி விவாதிப்பதுதான் விமர்சனம்’ என்கிறார். இப்படியே விமர்சனம் மீதான புரிதல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கால மாற்றத்திற்கேற்ப விரிவாக்கிக் கொள்ளப்பட்டது.
காலம் மட்டும் மாறவில்லை என்றால் எந்தப் படைப்பையும் நம்மால் அளக்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்படும். கல்கி காலமொன்று இருந்ததானாலேயே, ஜெயகாந்தன் காலப்படைப்புகளின் திறப்புகளைப் பற்றி பேச முடிகிறது. புதுமைப்பித்தனையும் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனையும் புரிந்து கொண்டு விமர்சிக்க கால மாற்றம்தான் உதவுகிறது. கல்கியின் காலமும் புதுமைப்பித்தனின் காலமும் ஒன்றல்ல. அதே போல புதுமைப்பித்தனின் காலமும் எஸ்.ராவின் காலவும் ஒன்றல்ல. விமர்சனத்திற்கு/ ஒப்பீட்டு மதிப்பீடுகள் செய்வதற்குரிய எளிய வசதியை உருவாக்கித் தருவது கால மாற்றம்தான். கால மாற்றத்தைப் புறத்தில் வைத்துப் பார்க்கும் பழக்கம் இருக்கும்வரை நான் சொல்ல வரும் இவ்விடயத்தை உட்புகுத்திப் புரிந்து கொள்ளல் கடினம்தான்.
அதே போல சுயப்படைப்புகளாயினும் காலமாற்றத்திற்கேற்பவே விமர்சித்துக் கொள்ள முடிகிறது. நான் ஐந்து வருடங்களுக்கு முன் எழுதிய சிறுகதைகளையும் அதன் மொழியையும் இப்பொழுது விமர்சிக்க கால மாற்றம்தான் உதவுகிறது. ஆனால், வாசிப்பின் ஆழம் நிகழாதவரை காலம் மாறினாலும் நம் புரிதல் மாறமல் நின்றுவிடும் அபாயமும் உண்டு.
இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்குமான முரண்கள்
கலை என்பது வெளிப்பாட்டுத் தன்மை மிக்கது. அதில், இலக்கியம் பதிவு செய்யும் தன்மை கொண்டது. மொழிகளின் ஊடாகப் பயணிப்பவை. அதனாலேயே அதிகமான வாசகப் பங்கேற்பைக் கோருபவை ஆகும். விமர்சனம் அப்பதிவுகளை ஆராய்ந்து விவாதிக்கிறது. படைப்பினுள் ஒளிந்திருக்கும் உண்மைகளைச் சமூகப் பார்வைக்குக் கொண்டு வருகிறது. ஒரு படைப்புப் பதிவு செய்யத் தவறியதைக் கண்டறிந்து கொண்டு வந்து நிறுத்தும் தன்மை உடையது விமர்சனம்.
- படைப்பிற்குக் கடவுளாகுதல்
படைப்பை விதைக்கும் எழுத்தாளன் அப்படைப்பு முளைத்துத் துளிர்விடும் கணங்களில், சூரிய ஒளியை யாசித்து வெளிப்படும் கணங்களில், அதற்கு வேலியிட்டுப் பாதுகாக்க முனைகிறான். சமூகம் அதை நோக்கித் திரண்டு வருகையில் முற்றுகையிட்டு உரிமை கொண்டாடுகிறான். அதில் பூக்கும் ஒரு பூவை அளக்க முனைபவர்களின் மீது கோபம் கொள்கிறான்; முளைத்து மரமாகும் அப்படைப்பிற்குத் தான் கடவுளாக மாறி நிற்கின்றான். இன்றைய பல எழுத்தாளர்களின் மனநிலை இதுதான். விமர்சனத்தை எதிர்க்கொள்ள முடியாமை. முளைத்து வெளியில் தலையை நீட்டி விட்டாலே அது பொது விமர்சனத்திற்குரியது என்கிற எதார்த்தத்தை உணர மறுக்கிறார்கள். ஆகையால், இதுபோன்ற மனமுடைய படைப்பாளர்களினாலேயே இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்கும் இடையேயான உறவில் சிக்கல் உண்டாகின்றது.
- பொன்னாடைகளைப் போல போர்த்தப்படும் விமர்சனத்தின் போலி முகம்
பின்னாளில் விமர்சனம் என்பது நூல் வெளியீடுகளில் பயிற்சியற்ற விமர்சகரால் மொன்னையாக்கப்பட்டது. விமர்னத்திற்கென போலி முகம் இக்காலத்தில்தான் உருவானது. விமர்சனம் என்றால் பாராட்டுவது என்கிற ஒரு புரிதல் சமூகத்தில் பரவலாக அறியப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்படும் விமர்சகர்கள் கிளி பிள்ளைப் போல பாராட்டுவதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டார்கள். பல நூல் வெளியீடுகளில் இதுவொரு சடங்காகப் பின்பற்றப்பட்டது.
1980களில் கூலிமில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் சிங்கை இளங்கோவன் தன் விமர்சனக் கட்டுரையைப் படைத்தது குறித்து இன்றளவும் யாரேனும் ஒருவர் நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பதற்குக் காரணம் அன்று வழக்கத்தில் இருந்த விமர்சன சடங்கிற்கு எதிரான அவர் வழங்கிய விமர்சனப் போக்குத்தான் காரணம்.
கறாரான விமர்சனத்தை முன்வைக்கும் ஒருவன் விரோதியாகப் பாவிக்கப்படுவதற்கும் நூல் வெளியீடுகளில் உருவான இத்தகைய போலியான விமர்சனப் புரிதல்தான் முக்கியமான காரணமாகும். பாராட்டுதல் என்பது வேறு. விமர்சனத்தில் பாராட்டு என்பது ஒரு சிறிய பங்களிப்பு மட்டுமே. விமர்சனத்தின் உச்சமான செயற்பாடு புகழ்வதல்ல.
- தொடரும்
கே.பாலமுருகன்