இரசனை விமர்சனம் ஓர் எளிய புரிதல்

ஒரு படைப்புடன் வாசகன் உறவுகொண்டு அவனது மனம் அடையும் உணர்வுகளை, புரிதல்களை, விருப்பங்களை, விருப்பமற்றவைகளைச் சொல்ல விளையும் இடத்திலிருந்து உருவாவதுதான் இரசனை சார்ந்த விமர்சனமாகும். பின்னர், வாசகன் அப்புரிதலை மொழியின் வாயிலாக தர்க்கம் செய்து அறிவுத்தளத்தில் நிறுவுகிறான். அது விமர்சனப்பூர்வமான ஓர் அந்தஸ்த்தைக் கொடுக்கிறது. தமிழ்ச்சூழலில் அதிகம் பேசப்பட்ட அல்லது சர்ச்சையான இலக்கிய விமர்சனங்கள் யாவும் தனிப்பட்ட இரசனையிலிருந்து உருவாகி வந்த பின்னணியைக் கொண்டிருப்பதைக் காணலாம். அதனையே நாம் இரசனை விமர்சனம் என்கிறோம். இரசனை விமர்சனத்திற்கு எப்பொழுதும் ஒரு கவனமும் மதிப்பும் இலக்கிய சூழலில் இருப்பதையும் நாம் தவிர்க்க இயலாது. படைப்பு மனம் என்பதுபோல் அது வாசக மனத்தின் எழுச்சி.

அத்தகைய இரசனை என்பது மிகவும் நுட்பமாக வாசிப்பின் வழியே இலக்கியப் பார்வையாகக் கட்டமைக்கப்பட்டுக் கொண்டவை. வாழ்வியல் அனுபவமும் வாசித்துப் பெற்ற நுண்ணுர்வும் இணைந்து உருவாக்கும் வாசக மனோபாவம் ஒரு வாசகனின் இலக்கியத்தைப் புரிந்து கொள்வதற்கான எளிய அளவுக்கோல்களாக மாறுகின்றன.

அவற்றின் வழியாகவே இலக்கியம் சார்ந்த மதிப்பீடுகளை வாசகன் தனக்குள் உருவாக்கிக் கொள்கிறான். அதுவே பிற படைப்புகளின் மீதான தமது மதிப்பீடாக முன்வைக்கப்படுகிறது. நாளையே அவை களைந்தும் அல்லது செயலிழந்தும் போக முடியும் காரணம் இவை அனைத்திற்கும் ஆதாரமாய் நிற்பது இரசனை என்கிற மனம் சார்ந்த அசைவுகள் என்பதே. நாளை அவனேகூட அதனை உதறித் தள்ளிவிட்டு அல்லது பாம்புகள் தோலுரித்து விட்டுச் செல்வதைப் போன்று நகர்ந்திட வாய்ப்புண்டு.

ஒரு படைப்பின் முன் வாசகன் அடையும் அகம் சார்ந்த ஓர் உரையாடலையே அவன் விளக்க முற்படுகிறான். அதுவே இரசனை விமர்சனமாகிறது. இத்தகைய ஒரு விமர்சனப் பார்வைக்கு அவன் எவ்வித கோட்பாடுகளையோ அல்லது ஒப்பீட்டு ஆய்வுகளையோ முன்வைக்கவில்லை. அவன் மனத்தை மட்டும் முழுவதுமாகத் திறந்து வைக்கிறான். இதுபோன்ற இரசனை விமர்சனங்களை நாம் இலக்கியத்தின் நிரந்தரமான மதிப்பீடாகக் கொள்ளுதல் சாத்தியப்படாது. அது மாற்றத்திற்குட்பட்டு நகர்ந்து கொண்டே இருக்கும்.

ஆனால், திறனாய்வு என்பதை இத்தகைய பின்புலத்தைக் கொண்டு நாம் புரிந்துகொள்ள இயலாது. அது முற்றிலும் நம் அறிவுக்குப் பயிற்சியளித்து ஓர் இலக்கியப் படைப்பை அணுகும் முறைமைகளை வகுத்துக் கொடுக்கிறது. இலக்கியத்தை ஆய்வு செய்து அணுகுவதற்கான திறன்களை அடிப்படையாகத் தொகுத்துக் கொண்டவை. முற்றிலும் இரசனை விமர்சனம் கொடுக்கக்கூடிய நெகிழ்வுத்தன்மைகளுக்கு அப்பாற்பட்டவையாக அமையக்கூடியவை. மொழி, அரசியல், கோட்பாடுகள், கூறுமுறை, பாத்திரப்படைப்பு என்கிற இன்னும் பற்பல உள்சட்டகங்களைக் கொண்டு நிகழ்த்திப் பார்த்து அறிவின் வழியே அளந்துபார்க்கக்கூடிய தன்மைகள் கொண்டவை.

திறனாய்வுக்கு இன்னும் பல மேற்கோள்கள், சான்றுகள் அவசியமாகிவிடும். மனத்தின் வழியே முன்வைக்கப்படும் மதிப்பீடுகளுக்கு இருக்கும் தளர்வு அறிவின் வழியே முன்வைக்கப்படும் மதிப்பீடுகளுக்குக் கிடையாது. திறனாய்வுக்கு நாம் ஆதாரப்பூர்வமானதொரு பின்புலத்தை முடிந்தவரை கட்டியெழுப்ப வேண்டும். அதனால்தான் ஓர் எளிய வாசகன் அவன் இரசனையினாலே ஒரு படைப்பைக் கடந்தும் ஆழ்ந்தும் சென்று புரிந்து கொள்கிறான்.

வாசிப்பைப் பன்முகமாகக் கொண்டிருக்காமல் ஒரு படைப்பை விமர்சனம் செய்ய முயல்வது ஆபத்தானதாகும். அத்தகையோரின் விமர்சனமும் ஆபத்தானதுதான். ஆழமான, விரிவான வாசிப்பின் வழியே தன் இரசனையைக் கட்டமைத்து வைத்திருப்பவனின் விமர்சனப் பார்வையும் இன்னும் வாசிப்பில் தன்னை ஆழப்படுத்திக் கொள்ளதவனின் விமர்சனப் பார்வையும் ஒன்றுபோலவே வந்து இன்று குவிந்து கிடக்கின்றன. அவற்றுள் பெரும்பாலும் ‘சிறந்த’ ‘சிறந்த’ என்ற வார்த்தை உருவாக்கும் மயக்கம் இரசனையை உருவாக்கிக் கொள்ள இலக்கிய வாசிப்பினுள் ஆவலுடன் வரும் இளைஞனுக்கு ஒரு குழப்பத்தை உருவாக்க முடியும்.

இங்குச் சிறந்தவைக்கு நாம் எந்த இலக்கணத்தையும் வகுத்து வைத்திருக்கவில்லை. அவரவர் வாசிப்பனுபவம், தேடல், அரசியல் புரிதல், அறிவாற்றல், வாழ்வனுபவம் போன்றவற்றின் அடிப்படையில் தொகுத்துக் கொள்ளப்படும் இரசனையின் வெளிப்பாடே.

ஆக, யாருடைய இரசனைக்குள்ளும் சிக்கிக் கொள்ளாமல் அதே சமயம் பொருட்படுத்த வேண்டிய இலக்கியப் பார்வைகளைக் கவனத்தில் கொண்டும் நாம் நமக்கான வாசிப்பனுபவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். யாரோ ஒரு வாசகனால் ஒதுக்கப்பட்டுவிட்ட படைப்பைத் தாமும் ஒதுக்கிவிட வேண்டும் என்று நினைப்பதும் எல்லோரும் கொண்டாடும் ஒரு படைப்பைத் தாமும் அவசரமாகக் கொண்டாடிவிட வேண்டும் என நினைப்பதும் இலக்கியத்திற்குள் பயணிக்கும் உங்களின் வாசக மனநிலையை அவை பாதிக்கக்கூடும். வாசக மனம் விரிவு பெறாமல் போய்விட வாய்ப்புண்டு. எல்லா படைப்புகளும் எல்லோருக்கும் ஒரே மாதிரியான திறப்புகளைக் கொடுப்பதில்லை.

இரசனை சார்ந்து முன்வைக்கப்படும் விமர்சனங்கள் பெரும்பாலும் சர்ச்சையில் முடிவதை நாம் அறிந்திருக்கக்கூடும். எழுத்தாளனும் வாசகனும் இரசனை சார்ந்து முன்வைக்கப்படும் மதிப்பீடுகளுள் முரண் கொள்கிறார்கள். ஒரு பொது வாசகனால் எந்நேரத்திலும் ஒரு படைப்பை நிராகரிக்க முடியும் என்பதுபோல் ஓர் எழுத்தாளனால் எந்த விமர்சனத்தையும் புறக்கணித்து நகர முடியும். ஆயினும், தான் ஒரு படைப்பை நிராகரிப்பதற்கான விமர்சனம் சார்ந்த அளவுகளை ஒரு வாசகன் முன்வைப்பது இரசனை விமர்சனத்திற்குச் செய்யக்கூடிய ஒரு நேர்மையாகவே கருதலாம். ‘சிறப்பு வாழ்த்துகள்’ எனச் சொல்லிவிட்டு ஒரு படைப்பைப் பொய்யாகப் பாராட்டுவது எத்துணைக் குறைமிக்கது என நினைக்கிறோமோ அதே போல் பிடிக்கவில்லை, இது கதையே இல்லை என்பதற்கும் ஒரு வாசகன் தன் பார்வைகளை இலக்கியப் பின்புலத்திலிருந்து முன்வைக்காமல் விடுவதும் குறையேயாகும். இத்தகைய குறைபாடுகள்தான் எழுத்தாளனுக்கும் விமர்சகனுக்கும் இடையே முரண்களை உருவாக்குகின்றன.

எழுத்தாளனே வியந்து உணரக்கூடிய விமர்சனங்கள் உள்ளன. எழுத்தாளனைவிட ஒரு விமர்சகன் ஒரு படைப்பிற்குள் திறந்து காட்டும் இடங்கள் அபூர்வமானவையாக அமைந்துவிடுவதுண்டு. எனது ‘அலமாரி’ என்கிற சிறுகதைக்கு மறைந்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு எழுதிய விமர்சனத்தை நான் இன்றும் ஆச்சரியத்துடனே அணுகுகிறேன். என் கதையை எனக்கே திறந்து அதன் புரிதலை விரிவாக்கிக் காட்டிய விமர்சனப் பார்வை அது. ஆக, ஓர் எழுத்தாளன் விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் போய்விடுவதும் சில ஆச்சரியங்களையும் திறப்புகளையும் கிடைக்கப் பெறாமல் செய்துவிடும். அதற்காக, அனைத்து விமர்சனங்களுக்கும் ஓர் எழுத்தாளன் இசைந்துகொடுக்கத் துவங்கிவிட்டாலும் சிக்கல்தான். விமர்சனத்தைக் கருத்தில் கொண்டு ஒரு படைப்பு உருவாவதில்லை.

படைப்பை முன்வைத்து உரையாடுவதற்கான சாத்தியங்களைத் தரவல்லதுதான் விமர்சனம். படைப்பு படைத்துவிட்டப் பின்னர் அது வாசகனின் உரையாடலுக்கான தளங்களுக்குள் செல்கிறது. தம்மைத் தாமே மறுகண்டுபிடிப்பு செய்து கொள்கிறது. பல புரிதல் தளங்களை அடைந்து சிலுப்பிக் கொண்டு எழுகிறது. சமூகத்தில் பலவிதமான உரையாடல்களை உருவாக்கி நகர்கிறது. உரையாடல்களிலிருந்து உப உரையாடல் என விரிந்து சென்று விவாதிக்கத் தூண்டுகிறது. இலக்கியம் தொடர்பான மதிப்பீடுகளுக்கு உயிரூட்டி தீவிரமடைய செய்கிறது. இப்படியாக பல அசைவுகளை உருவாக்க வல்லதே படைப்புகள். படைப்புகளிலிருந்து இரசனைகள் மேலெழுகின்றன; இரசனைகளிருந்து படைப்புக் குறித்த புரிதல்கள் விரிவாகுகின்றன. இவையே ஒரு காலக்கட்டத்தின் இலக்கிய மதிப்பீடுகளாகத் தொகுத்துக் கொள்ளப்படுகின்றன. நாளை இதையும் கடந்து போவோம்.

-கே.பாலமுருகன்

About The Author