அனுபவ பத்தி: நல்லவனாக இருப்பது எப்படி?

5ஆம் ஆண்டு படிக்கும்போதெல்லாம் வருடத் தொடக்கத்திலேயே எப்படி நல்லவனாக இருப்பது எனத் தெரிந்து கொள்ளும் முயற்சியில் இறங்கினேன். காலையில் எழுந்ததும் இன்று பள்ளியிலேயே நான் தான் மிகச்சிறந்த நல்லவனாக இருக்க வேண்டும் என சாமியை வேண்டிக்கொள்வேன். இன்று முதல் நான் நல்லவன் என்பதால் இரண்டுமுறை பல் துலக்கினேன். நல்லவர்களுக்குப் பல் பளிச்சென்று இருந்தால்தான் கவர்ச்சியாக இருக்கும்.

 

நான்குமுறைக்கும் மேல் கண்ணாடியைப் பார்த்து சிரித்து வைத்தேன். மூன்றுமுறை முட்டிகாலிட்டு சுவரைப் பார்த்து கடவுளை நினைத்து வணங்கினால் எல்லாம் பாவமும் மன்னிக்கப்படும் என ஏதோ ஒரு கோவில் பூசாரி சொன்னதாக பார்த்திபன் சொன்னதை அப்படியே நம்பியிருந்தேன். வீட்டுக்கு வெளியே வந்ததும் அன்று வீசியது புதிய காற்றேதான். உற்சாகமாக அன்று முழுவதும் நல்லவனாக இருக்கப் போகும் நாளை நினைத்து மகிழ்ச்சியுடன் பேருந்துக்காகக் காத்திருந்தேன். பேருந்தில் ஏறியதும் ஒரு நல்லவன் செய்யக்கூடியது என்னவாக இருக்கும்? ‘முள்ளு தலை மணியம்’ என இதுநாள்வரை கேலி செய்து தீர்த்த பேருந்து ஓட்டுனரைப் பார்த்து மரியாதையாக வணக்கம் சொல்லியாக வேண்டும். முடிந்தவரையில் அவரின் தலை முடியைப் பார்க்கவே கூடாது. அடுத்ததாக சக மாணவர்கள் நின்றிருக்க நேர்ந்தால் அவர்களுக்கு இருக்கையைக் கொடுத்துவிட்டு நான் நிற்க வேண்டும்.

 

எல்லோருக்கும் அன்று அமர்வதற்கு இடம் இருந்ததால் நான் நல்லவனாக இருப்பதற்கான சந்தர்ப்பங்கள் உருவாகவே இல்லை. பேருந்தைவிட்டு இறங்கும்போது வரிசை முட்டிக்கொண்டு திணறியது. உடனே அன்று புதிதாய் எனக்குள் பூத்திருக்கும் நல்லவன் அவன் வேலையைச் செய்யத் துவங்கினான். வரிசையை நேர்ப்படுத்திவிட்டு பிறகு வரிசைக்குப் பின்னால் நின்று கொண்டு அவசரமில்லாமல் இறங்கிய என்னை மணியம் அண்ணன் ஆச்சர்யமாகப் பார்த்தார் அவருடைய விநோதமான பார்வை என்னைக் கூச்சப்படுத்தியது. நல்லவனாக இருக்கும்போது கொஞ்சம் வெட்கமும் வரும் என நினைத்துக்கொண்டேன்.

 

நல்லவனாக இருப்பவனின் உடை எப்படி இருக்க வேண்டும் எனத் தெரியுமா? Complete uniform with tie. வெள்ளைக்காரத் துறை போல கழுத்துப் பட்டையைச் சுத்தமாக அணிந்துகொண்டிருக்க வேண்டும். கழுத்துவரை பொத்தான் கண்டிப்பாக அணியப்பட்டிருக்க வேண்டும். என் பள்ளியில் அப்பொழுது பல நல்லவர்கள் அப்படித்தான் இருந்தார்கள். 4 ஆம் ஆண்டு படித்த சமயத்தில் 20க்கும் மேற்பட்ட எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்களைப் புத்தகத்தில் எழுதி மனப்பாடம் செய்து ஒப்புவித்த அனுபவம் இருப்பதான் அன்று நான் ஒரு நல்லவனாக இருக்க அது பெரிதும் உதவியது.

 

வகுப்பிலும் சிற்றுண்டி சாலையிலும் சிலருக்குக் கேட்கும்படியே பாடினேன். அப்படிப் பாடும்போது என் புருவம் சுருங்கி கண்கள் மூடும். அது நல்லவர்களுக்கான முகப்பாவனை என நினைத்துக்கொள்ளலாம். தத்துவப்பாடல்களைப் பாடும் பெரிய மோட்டர் பசுபதி அண்ணன் அப்படித்தான் செய்வார். அவரின் வெளுத்த முகத்தில் அவர் கண்கள் மூடி முகப்பாவனையை மாற்றுவதைப் பார்த்திருக்கிறேன்.

 

குறிப்பாக அன்று முழுவதும் கெட்ட வார்த்தைகள் பேசிவிடக்கூடாது என்பதில் குறிக்கோளாக இருந்தேன். நல்லவர்கள் பேசும்போது குரல் கம்மியாக ஒலிக்க வேண்டும். பண்பான வார்த்தைகளையே பயன்படுத்த வேண்டும். ஒருமுறை ஆசிரியரிடம் கேட்டப்போது அவர் அப்படித்தான் சொன்னார். வேண்டுகோள் வாக்கியத்தைத் தவிர நல்லவர்கள் வேறு எதையும் பயன்படுத்தி பேசக்கூடாதாம். என்ன கொடுமை என்றால் அன்று பிடிக்காதவனிடமெல்லாம் அடிப்பணிந்து போக வேண்டியதாகப் போயிற்று. அன்றைய தினத்திற்கு முதல்நாள் பெண் பிள்ளைகள் முன்பே என் மூக்கைப் பிடித்து இழுத்த தர்மேந்திரனைப் பார்த்து “சாப்பிட்டியா தர்மேந்திரன்?” எனக் கேட்க நேர்ந்தது. கொஞ்சம் கொஞ்சமாகச் சுற்றியுள்ள மாணவர்கள் என்னைக் கடுமையாகக் கேலி செய்யத் துவங்கினார்கள். கேலி செய்யபடும்போது நாம் சாந்தமாக இருந்தால் நல்லவனாகி விடலாம் எனப் பொறுமையாகவே இருந்தேன்.

 

ஆங்கில வகுப்பு முடிவடைந்ததும், அடுத்த பாடத்திற்கு ஆசிரியர் வரவில்லை. பின் வரிசையில் அமர்ந்திருந்த நான் ஆசிரியர் இல்லாத போது புத்தகம் படிக்கும் நல்லவனாக மாறியிருந்தேன். வகுப்பறை என்பதும் ஒரு சமூகம்தானே. ஆகையால் நல்லதுக்கு எதிரான கலகக்காரர்கள் அங்கும் இருக்கவே செய்தார்கள். மூன்று வகுப்பு நண்பர்கள் எனக்கு முன் வந்து நின்று புத்தகத்தைப் பிடுங்கியும், சட்டைக் காலரை இழுத்தும் எனது நல்லவனாக இருக்கும் திட்டத்தைக் களைத்தார்கள். கோபம் வந்ததும் ஒரே ஒரு கெட்ட வார்த்தைதான். உடலிலிருந்து ஏதோ கழன்று வீழ்ந்தது போல இருந்தது. காலையிலிருந்து நான் போர்த்தியிருந்த ஒரு வேடம் அவிழ்க்கப்பட்டது.

 

அதன் பிறகு பலமுறை பல வருடங்கள் இப்படி நல்லவனாக ஆகப் பார்த்து நான் செய்யும் நடவடிக்கைகள் மாறிக்கொண்டே வந்ததே தவிர ஒரு முழுநாளில் எப்படி நல்லவனாகவே வாழ வேண்டும் எனத் தெரியவில்லை.  இப்படித்தான் நல்லவன் ஆகும் முயற்சியிலேயே கிடப்பேன். இப்பொழுதும் கேள்வி எழுகிறது, எது நல்லது? யார் நல்லவர்? நல்லவர்களின் முகப்பாவனை எப்படி இருக்கும்? நல்லவர்கள் என்ன செய்வார்கள்? நல்லவர்கள் சாந்தமாகப் பேசுவார்களா? என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்களின் இயல்பில் நல்லது கெட்டது என அனைத்தையும் மீறி வேறொன்றும் இருக்கவே செய்கிறது. அதைத்தான் அடுத்ததாகத் தேடிக் தேடிக் களைக்கிறேன்.

 

கே.பாலமுருகன்,  May 2010

About The Author