அக்கரைப் பச்சை – 2 (சிங்கப்பூர் சிறுகதைகள் விமர்சனம்) ராம் சந்தரின் அப்புவின் கனவு: கனவுகள் கண்டு சாகும் இயந்திரங்கள்
கனவுகள் பற்றி எனக்கு எப்பொழுதும் ஒரு வியப்புண்டு. சிறுவயதில் கனவுகள் வந்துவிடும் என்கிற பயத்தில் கண்களை மூடாமல் வீட்டுத் தகரத்தையே பார்த்துக் கொண்டிருப்பேன். கனவு நிழல் போல என் உறக்கத்தைப் பின் தொடர்ந்து கொண்டே இருக்கும். எப்பொழுது அது உறக்கத்தை விழுங்கி நம் இரவை ஆட்கொள்ளும் என இன்றளவும் யாராலும் கணிக்க இயலாத விந்தையே கனவு. சிக்மெண்ட் ப்ராய்ட் கனவுகள் பற்றி சொல்லும் விளக்கம் விரிவானவை. அதுவரை மாயைப் போல தோற்றமளிக்கும் கனவுகள் பற்றி உளவியல் ரீதியில் பற்பல அர்த்தங்களை ப்ராய்டு கட்டமைக்கிறார். நடக்கக்கூடாதென்று நாம் நினைப்பவற்றை ஆழ்மனம் நடந்ததைப் போல கனவில் நிகழ்த்திக் காட்டும் வித்தையை யார் அதற்குக் கற்றுக் கொடுத்தது எனத் தெரியவில்லை. இதுவொரு உள்முரண் என்றே சொல்ல வேண்டும்.
நமக்கு மரணத்தையொட்டி தீராத பயமொன்று உள்ளுக்குள் வளர்ந்துகொண்டே இருக்கிறது. ஆகவேதான், ஆழ்மனம் அப்பயத்திலிருந்து நம்மை நீக்கவோ அல்லது பழக்கப்படுத்தவோ நாமும் நம்மைச் சார்ந்தவர்களும் இறப்பதைப் போன்று கனவுகளின் வழியாகக் காட்டிக் கொண்டே இருக்கும். இப்படிக் கனவுகளுக்குப் பல விளக்கங்களும் சொல்லப்பட்டாலும் இலக்கியம் கனவென்பதை ஒரு குறியீடாகவே பாவித்து வருகிறது. பெரும்பான்மையான எழுத்தாளர்கள் கனவுகள் பற்றி பல சித்திரங்களை உருவாக்கிச் சென்றுள்ளார்கள்.
கதைக்குள்ளிருந்து கதை
ஜெர்மானிய எழுத்தாளரான பிரெட்ரிக் சில்லர் அவர்களின் சில கவிதைகள் ஜெர்மானிய பண்பாட்டுச் சிதைவுகளை அச்சமூகத்தில் பிறந்த சிறுவன் கனவு காண்பதாக அமைந்திருக்கும். அக்கனவு என்பது நிஜமான ஜெர்மானிய பண்பாட்டு அழிவுகளை முன்பே அறிவிக்கும் பொருட்டு ஓர் எதிர்க்காலக் குரலாக ஒலிக்கும். ராம் சந்தரின் இச்சிறுகதை மாய யதார்த்தவாதமாகக் கதைக்குள்ளிருந்து ஒரு வரலாற்று பின்னடைவை ஓங்கி ஒலிக்கும் களமாகவும் ஒரு வாசகன் அடையக்கூடும். இக்கதையில் வரும் அப்பு பற்பல அதிசய கனவுகளுடன் இருக்கும் சிறுவனாகவும் தனக்கென ஒரு விந்தை உலகைக் கற்பனை செய்தப்படியே இருப்பதாகவும் முதலில் தோன்றும். அடுத்த கனமே வெள்ளை யானையில் வருபவர் முன்னோர்களின் கனவுகள் கூண்டுக்குள் அடைக்கப்பட்டுப் பராமரிகப்படுவது அப்புவிடம் காட்டுவதாக கதை நகரும். இதுவொரு அரசியல் வெளிப்பாடு என்றும் உருவகப்படுத்திக் கொள்ளலாம். முன்னோர்கள் வெறும் கனவு காண்பவர்களாக மட்டுமே இருந்திருக்கிறார்கள். அவர்களின் மறைவிற்குப் பின்னர் அவர்களுடைய கனவுகள் கனவுகளாகவே அடைப்பட்டுக் கிடப்பது ஒரு சமூகத்தின் மிகுந்த கவலைக்குரிய பின்னடைவு என்பதே கதைக்குள் இருக்கும் கதையிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.
அப்புவின் கனவில் எல்லாமும் குதர்க்கமாக நிஜ உலகிலிருந்து விலகிச் செல்லும் மாயையைப் போல தோற்றமளிக்கின்றன. ஒட்டகசிவிங்கி முகம் கொண்ட கழுகின் தலை என்கிற வரி கதைக்குள் வருகிற இடம் இக்கதைக்கான ஒரு சாவி என்று நினைக்கிறேன். நாம் காணும் கனவுகள் அப்படித்தான் குதர்க்கமானது. உலகம் நம்மை நம்ப வைத்திருக்கும் சிந்தைகளுக்கு அப்பாற்பட்டதாக நம் கனவுகள் இவ்வுலகத்தால், ஆள்பவர்களால் தொடர்ந்து சீர்குலைக்கப்பட்டு சிதைக்கப்பட்டு உறக்கத்தில் வரும் கனவெனும் கூண்டுக்குள் அடைக்கப்படுகிறது. இப்படி நாம் காணும் அனைத்துக் கனவுகளும் கனவுகளாகவே நம் மனக்குகையில் சிறைப்படுத்தப்படுகிறது. ஒரு சிறுபான்மை சமூகத்தின் உச்சமான வெற்றியும் தோல்வியும் இதுவே. கனவுகளை உற்பத்தி செய்து அதைக் கனவுகளாகவே கொன்றுவிடும் சாபம். அச்சிறுபான்மை சமூகத்திலிருந்து வரும் ஒரு சிறுவனின் ஊடாக தன் முன்னோர்களின் கனவுகள் காட்டின் நடுவே அடைக்கப்பட்டு எதற்குமே அர்த்தமற்று பொருள்காட்சியமாக மட்டுமே காலம் முழுவதும் நினைவுகளில் நிலைத்து வருகிறது என்கிற உண்மையை மாய யதார்த்த வலைக்குள் பின்னுகிறார் ராம் சந்தர்.
‘கனவு அறைகள்’ என்கிற ஒரு மொழிப்பெயர்ப்பு சிறுகதை படித்ததாக ஞாபகம். தன் வீட்டுக்குள்ளிருந்து உறங்கி எழுந்திருக்கும் ஒருவன், அவன் வீட்டில் பல அறைகள் தோன்றியிருப்பதைக் காண்கிறான். ஒவ்வொரு அறைக்கதவையும் திறக்கும்போது அதனுள் தன்னுடைய நிறைவேறாமல்போன கனவுகள் இருக்கின்றன. இப்படியாக வீடு முழுவதும் அறைகளாகி அவனால் வீட்டை விட்டு வெளியேற முடியாமலேயே கதை முடிவடைந்துவிடும். ஒவ்வொரு மனிதனின் நினைவடுக்குகளிலும் நிறைவேறாத பல கனவுகள் அவனைச் சூழந்துள்ளன. அக்கனவுகளை நோக்கி அவன் உள்மனம் திரும்பும்போது வாழ்க்கையும் சமூகமும் வரலாறும் தொழில்முறையில் கனவுகளை உற்பத்தி செய்யவே நம்மைத் தூண்டிக் கொண்டிருக்கிறன எனத் தெரியும். அப்புவின் கனவு என்கிற சிறுகதையும் தொழில்முறையில் கனவுகளை உற்பத்திப்பதைக் கட்டாயமாக்கிக் காட்டுகிறது. வெள்ளை யானையில் வருபவர் தங்களின் கனவு மிருகத்தைக் காட்டும்படி அனைவரையும் நிர்பந்திக்கிறார். ஆனால், அப்புவின் மிருகம் மட்டும் அவர்களுடைய கண்களுக்குப் புலப்படவில்லை.
அப்பு என்கிற விந்தை
அப்பு எனக்கு மிகநெருக்கமான பெயர் அல்லது உருவகம் என்று சொல்லலாம். அப்பு என்கிற பெயரைக் கொண்டு சிறார் உலகை விவரிக்கும் நிறைய கவிதைகள் எழுதியுள்ளேன். ராம் சந்தரின் இச்சிறுகதை தலைப்பிலிருந்தே ஒட்டிக் கொள்கிறது. அதே போல சிறார்களின் விந்தையான உலகைக் காட்டும் பொருட்டு ‘பவித்திராவின் ஓவியக் குவளைக்குள்ளிருந்து’ என்கிற ஒரு சிறுகதையும் எழுதியுள்ளேன். அக்கதை நாம் நம்ப மறுக்கும் பல விந்தைகள் அடங்கியதுதான் சிறுவர்களின் உலகம் எனக் காட்டிச் செல்லும். அப்புவின் கனவு என்பதும் இதுவரை இச்சமூகம் கண்ட கனவுகளிலிருந்து கொஞ்சம் மாறுப்பட்டவையாக யாரிடமும் சிக்காமல் நகர்ந்து ஒளிந்து மறைகிறது. ஆனால் யாரினாலும் அதனை இவ்வுலகத்தின் கண் கொண்டு தரிசிக்க முடியாமல் அக்கனவு மீண்டும் அழிந்துவிடுகிறது.
இதே கதையில் ஒரு கனவு எப்படி அழிகிறது என்பதையும் ராம் காட்டி தன் சிறுகதையை முடிக்கும் இடம் முக்கியமானதாகிறது. அவன் உருவாக்கி வைத்திருக்கும் கனவு யாரினாலும் அறியப்பட முடியாமல் போய்விடுவது எத்தனை பெரிய இழப்பு? இன்று பலருடைய கனவுகளை நாம் மதிப்பதேயில்லை. பலருடைய கனவுகள் அதிகார வர்க்கத்தால் மிதிக்கவும்படுகின்றன. அப்பு கையில் இருந்த அத்தவளை மண்ணுக்குள் குதித்து மறைகிறது. கனவு அவ்விடத்தில் களைந்துவிடுகிறது. மீண்டும் அடுத்த கனவிற்காக உடனே உறக்கம் வந்துவிடுகிறது. அவ்வரிகளைப் படிக்கும்போது அச்சம் கூடுகிறது. ஒரு கனவு அழிந்தால் இன்னொரு கனவுக்கு மட்டுமே இவ்வாழ்க்கை நம்மைப் பழக்கப்படுத்தி வைத்திருக்கிறது. கனவுகள் அழிக்கப்படுவது தெரியாமல் நாமும் அடுத்த கனவு காணத் தயாராகும் இயந்திரம் போல ஆகிவிட்டோம் என்கிற அச்ச உணர்வை இக்கதைக் கொஞ்சம்கூட காத்திரமில்லாமல் எளிய வார்த்தை மாயங்களின் வழியாக மிக முக்கியமான அரசியலை முன்னிறுத்திச் செல்கிறது.
விந்தையிலும் விந்தை
ஒரு சிறுகதை பற்பல பாதைகளின் வழியாக அடைந்திருக்கும் எல்லையை எந்தப் பாதையினூடாக நாம் சென்றடைய போகிறோம் என்கிற ஆச்சர்யம் வாசகனாலே அறிந்து கொள்ள முடியாத அதிசயமாகும். ஒருவேளை அப்புவின் கனவில் நான் கண்டது இதுவாக மட்டும் இருக்காது. ஏதோ ஒரு கதவை நான் திறக்காமல்கூட போயிருக்கலாம். ஆனால், அக்கதவும் இன்னொரு வாசகனால் திறக்கப்பட வாய்ப்புண்டு. அப்பொழுது இக்கதையின் இன்னொரு முகம் கண்டுபிடிக்கப்படலாம். அத்தகையதொரு மாயத் தளத்தில் இக்கதையை ராம் சாமர்த்தியமாகப் புனைந்துள்ளார். கதைக்குள் கனவு மட்டுமே ஒரு நூழிலையில் பயணிக்கிறது. அதனைப் பிடித்துக் கொண்டு கதைக்குள் பயணிக்கும் நமக்கும் ஒரு கனவு வருகிறது. அக்கனவிலிருந்து இன்னொரு மாயக் கரத்தைப் பற்றி ஒரு வெள்ளை யானையின் பின்னால் போகக்கூடும்.
கதையின் மற்ற கூறுகள்
சிறுகதையின் மொழி, ராம் சந்தருக்கு மிகவும் அதிசயமாக வாய்த்திருக்கிறது. அவருடைய வேறு சில சிறுகதைகளையும் வாசிக்க நேர்ந்தால் மட்டுமே உறுதியான ஒரு புரிதலுக்குள் வர முடியும் என நினைக்கிறேன். குழந்தையின் கையில் கிடைத்திருக்கும் களிமண்ணைப் போல அதன் வழியாகப் பல உருவங்களை இயற்றியபடியே செல்லும் வித்தையான மொழியை இக்கதையில் கையாண்டுள்ளார். மாய யதார்த்தவாதக் கதைகளில் இத்தகைய குறியீட்டு மொழிகளே இலாவகமாகக் கதைக்கு உயிரளிக்கக்கூடியதாக இருக்கும். எம்.ஜி சுரேஷ் அவர்களின் சில சிறுகதைகளில் இத்தகைய மொழிக்கூறுகளையும் வாசித்திருக்கலாம். அவருடைய ‘கனவுலகவாசியின் நனவுலகக் குறிப்புகள் முதலான சிறுகதைத் தொகுப்பும்’ என்கிற நாவலில் இத்தகைய மொழியை முழுக்க வாசிக்க நேர்ந்த அனுபவத்தால் ராமின் மொழியைச் சுலபமாக உள்வாங்கிக் கொள்ள முடிந்தது. ஆனாலும், இத்தகைய பூடகமான மொழி கொஞ்சம் பிசகினாலும் இறுக்கமாகிவிடும். அதனுள் ஒரு பொதுவாசகனால் நுழைந்து அனுபவிக்க முடியாமல் போய்விடும். ராம் அதனைக் கச்சிதமாகவே பாவித்துள்ளார். இருண்ட மொழி என்று சொல்ல முடியாத அளவிற்கு ஆங்காங்கே கொஞ்சம் வெளிச்சத்தையும் பரப்பியுள்ளார். அதுவேகூட அவருடைய மொழியைக் கொஞ்சம் பலவீனமாக்குவதையும் தவிர்க்க முடியவில்லை. பெரும்பாலும் மாய யதார்த்தவாத/ குறியீடுகளின் வழியாகக் கதைக்களத்தை உருவாக்கி நகர்த்திச் செல்லும் கதைகளுக்கே உரிய மொழிநடை இச்சிறுகதையில் ஓரளவிற்கு மட்டுமே கைக்கூடியுள்ளது.
தன் கதைக்குள் ஒரு கனவை வைத்து அதனுள் வேறொரு கதையை வைக்கும் உத்தி இச்சிறுகதைக்குச் சிறப்பாக அமைந்தாலும் இது யாருக்காகச் சொல்லப்பட்ட கதை என்பதில் குழப்பம் வராமலில்லை. இக்கதையின் மையத்தில் நிழலாடும் இறுக்கங்களை உடைக்கும்போது ராம் மிகுந்த உழைப்பைக் கொடுத்துள்ளார். அதனால்தான் என்னவோ சிறுகதை சிறுவர்களுக்குச் சொல்லப்படுவதைப் போன்ற ஓர் எளிய தோற்றத்தையும் கொண்டிருக்கிறது. ஒரு சமூகத்தின் மிகுந்த வலியைச் சுமந்திருப்பதைப் போன்று கணத்தைக் கொண்டுள்ள சிறுகதை, அதன் கூறுமுறையில் எதையோ இழந்திருப்பதைப் போல ஒரு மாயயையும் உருவாக்காமலில்லை என்றே தோன்றுகிறது. இதனை ஒரு தேர்ந்த வாசக மனநிலையிலிருந்தே பதிவு செய்கிறேன். ராம் இச்சிறுகதையை மேலும் ஆழமாக்கியிருக்க முடியும் என்றும் அதனை மொழியிலும் சிறுகதை கூறுமுறையிலும் கூடுதல் கவனத்தைத் திரட்டும்போது அதற்கான வழியை அவராலேயே கண்டடைய முடியும் என்றும் தோன்றுகிறது.
குறியீடுகளை மொழிப்பெயர்ப்பது
இச்சிறுகதையை வாசிக்கும் பொதுவாசகர்கள் பலரும் கவனச் சிதறலுக்கு ஆளாகி மையத்தைத் தேடி அலைந்து களைத்து மீண்டும் மறுவாசிப்பு செய்து குறியீடுகளை உடைத்து ஒரு உருவகத்தை அடையும் உழைப்பிற்குள்ளாகுவார்கள். அல்லது மறுவாசிப்பு செய்யாமல் கிடைத்ததைக் கொண்டு தனக்கான ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்வார்கள். அல்லது புரியவில்லை என ஒதுக்கிவிட்டு இது நிஜ உலகைப் பற்றி பேசவில்லை எனப் புறந்தள்ளியும் விடுவார்கள். நிஜ உலகிற்கும் கதைக்கும் நடுவே ராம் ஒரு பாலத்தைப் புதைத்திருக்கிறார். அதனைக் கண்டையை நாம் தடுமாறுவோம் என்கிற தயக்கத்தில் அவரே ஆங்காங்கே வெளிச்சத்தை மெல்ல பரப்பியுள்ளார். இதுபோன்ற கதைகளுக்கே உரிய உழைப்பை அக்கதை வாசகனிடமிருந்து கோரியே தீரும். அதனைப் பற்றி எழுத்தாளன் கவலைப்படத் தேவையில்லை.
வெள்ளை யானை, யானையில் வருபவர், விந்தையான மிருகங்கள், தவளை, கனவுகள் என இக்கதையில் வரும் யாவுமே வெருமனே வரவில்லை. அவை யாவும் குறியீடு என்பதனை ஒரு வாசகன் புரிந்துகொள்ள அவனுக்கு பரந்த வாசிப்பே அவசியம் என நினைக்கிறேன். அதனைப் பற்றி ராம் இக்கதையில் பட்டிருக்கும் அக்கொஞ்சம் கவலைக்கூட அடுத்தமுறை வேண்டாம் என்றே நினைக்கிறேன். குறியீடுகளின் வழியாகப் பயணிக்கும் கதைகளைத் தேர்ந்தெடுக்கும்போதே இது வாசகனுக்குப் புரியாமல் போய்விடுமோ என்கிற தயக்கத்தையும் ஓர் எழுத்தாளன் துறந்துவிட்டால்தான் இவ்வடிவத்திற்கு ஏற்ற சிறுகதை, அதனுடைய கூறுமுறை, அதனுடைய மொழி என்கிற அளவில் ஒரு சிறந்த படைப்பை வழங்கிட முடியும்.
அப்புவின் கனவு இதுபோன்ற ஒரு கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்து குழந்தைகளின் ஆக்கம் தொலையும் துர்நிகழ்வுகளையும் அதே போல காலம் காலமாகக் கனவுகள் கண்டு பின்னர் மறைந்து, பின்னர் மீண்டும் கனவுகள் காண மட்டுமே வந்து சேரும் அடுத்த தலைமுறை என சில நாடுகளில் வாழும் சிறுபான்மை சமூகத்தின் அவலங்களைச் சொல்ல முனைந்துள்ளது. அதனைக் கொஞ்சும் மொழியில் மிகவும் அழகியல் நிரம்பிய வார்த்தைகளில் அடுக்கிக் காட்டியுள்ளதே இக்கதையின் சிறப்பும்கூட என்று சொல்லலாம்.
இச்சிறுகதை வெறுமனே ஒரே வாசிப்பில் கடந்து விட முடியாத ஒரே காரணத்திற்காக ராமைப் பாராட்டியே ஆக வேண்டும். ராமின் மாயக் கரத்திலிருந்து இன்னும் பல சிறுகதைகளை எதிர்ப்பார்க்கிறேன். அது மாய யதார்த்தவாத கதையாக இருந்தாலும், யதார்த்தக் கதையாக இருந்தாலும், சிங்கப்பூரின் புதிய கதைச் சொல் முறைகள் ராமின் படைப்புகளிலிருந்து இனி வரும் என நம்பலாம்.
- கே.பாலமுருகன்