சிறுகதை: நீர்ப்பாசி
குறிப்பு: இச்சிறுகதை உளவியல் சார்ந்து எழுதப்பட்டது. 17 வயதிற்கு மேற்பட்டோர் மட்டுமே வாசிக்கலாம். சிறுவர்களுக்குப் பெரியவர்கள் வாசித்து கதையின் உள்ளார்ந்த விவாதங்கள்/போக்குகள் பற்றி எடுத்துரைக்கலாம். ஆனால், நிச்சயமாக சிறார்களிடம் நீங்கள் பேச வேண்டிய ஒன்றுத்தான்.
“பாத்ரூம்க்கு அனுமதி கேட்டா கொடுக்காமலா போய்ருவேன்? யேன்டா சிலுவார்லே போன?”
தனக்கோடிக்கு ஹென்ரி வாத்தியார் கேட்டது காதில் விழவேயில்லை. வெயில் படும்படி வகுப்பிற்கு வெளியில் நின்று கொண்டே திடலுக்கு அப்பால் தெரியும் வாழைமரக்கூட்டங்களையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“பெரிய வாழ மரம்தான் உங்கப்பா கணேசன்… பக்கத்துல கொஞ்சம் கட்டயா இருக்கே அதான் உங்கம்மா… கீழ ஒன்னு ரொம்ப கட்டயா இருக்கே அது உன் தங்கச்சி… இன்னொன்னு பாரு இப்பத்தான் முளையுது அது உன் கடைசி தம்பி…”
“அப்ப நான் எங்க?”
“நீதான் உஸ் பேய போயிருப்பியே…”
காலையில் யமுனா சொல்லிச் சிரித்த வார்த்தைகளை அசைப்போட்டுக் கொண்டிருந்தான். வாழைமரங்கள் சில பள்ளியின் வேலிக்கு வெளியே கம்பிகளை உரசியவாறு தழைத்து வளர்ந்து செழிப்புடன் காணப்பட்டன. வாழைமரத்தில் ஒரு நூலைக் கட்டி இன்னொரு நுனியை நம் பெருவிரலில் கட்டிக் கையில் முகக்கண்ணாடியை வைத்துக் கொண்டு படுத்தால் சரியாக 12.00 மணிக்குக் கண்ணாடியில் பேய் தோன்றும் என்று காளியம்மா அக்காள் கம்பத்துப் பிள்ளைகளிடம் சொன்னதைத் தனக்கோடி நினைத்துப் பார்த்தான். வீட்டுக்குப் பக்கத்திலுள்ள வாழைமரத்தில் அதனைப் பலமுறை செய்தும் பார்த்தான். அம்மாவிடம் முதுகில் பளார் என்று அடி விழுந்ததே தவிர எந்தப் பேயும் வரவில்லை.
வாழைமரங்கள் சூழ்ந்த கம்பம் அது. பெரிய நிலப்பரப்பில் சீனர்களுடைய இரண்டு வாழைத்தோப்புகளுக்கும் இன்னும் எலுமிச்சை, டுரியான் என்று பல தோப்புகளுக்கும் உகந்த இடமாகவும் திகழ்ந்தது. குரூண் சிறுநகரத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டர் ஒற்றையடிப் பாதையில் செல்ல வேண்டும். தூரத்திலிருந்து வாழைத்தோப்புகள் சலசலப்பதைக் காணலாம். ஒரு பச்சைக் காடு அசைந்தாடுவதைப் போல இருக்கும். தனக்கோடியின் வீட்டின் எதிரில் உள்ள வாழைத்தோப்புத்தான் அவனுக்கு எப்பொழுதும் புகலிடம் என்றே சொல்லலாம். பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்று எதிரில் இருக்கும் வாழைத்தோப்பில் நுழைந்து உள்ளே இருக்கும் குளத்தில் நீந்தலாம் என்று காத்திருப்பான்.
“வாழத்தோப்புக்கு மட்டும் போய்டாத… மலாய்க்காரப் பேய் அங்கத்தான் அண்டுமாம்…ஹன்த்து பொந்தியானாக்…”
வகுப்பு தோழி யமுனா தன் இரண்டு கண்களையும் விரித்துக் கூறியதைத் தனக்கோடி நகைச்சுவையாகப் பார்த்தான். இதே யமுனாதான் கடந்த வாரம் தனக்கோடி தன் பென்சிலைத் திருடிவிட்டான் என்று அவனை ஹென்ரி வாத்தியாரிடம் மாட்டிவிட்டாள். பெரும்பாலும் வகுப்பில் காணாமல்போகும் அத்தனை பொருள்களுக்கும் தனக்கோடித்தான் பொறுப்பு. தேடிக் கண்டடைய முடியவில்லை என்றால் எல்லோரும் இணைந்து கைக்காட்டுவதும் தனக்கோடியைத்தான்.
“செக்கு! உஸ்ஸ்ஸூ” என்று தனக்கோடி ஒரு நாளில் ஐந்து முறையாவது கழிப்பறைக்கு அனுமதி கேட்டு வந்துவிடுவான். அதுவும் ஆசிரியர்களை நெருங்கி அனுமதி கேட்காமல் அப்படியே எழுந்து “உஸ்ஸூ!” என்று கத்துவான். முதலில் ஆசிரியர்கள் திட்டி மிரட்டினாலும் பின்னாளில் அது நகைப்பை மட்டுமே உருவாக்கியது.
அன்று சர்வினும் விமலும் ஓய்வு நேரத்தில் அவனைக் கழிப்பறைக்கு அழைத்துச் சென்று அடித்துவிட்டு “இங்கயே இரு உஸ்ஸு!” என்று உள்ளேயே பூட்டிவிட்டார்கள். இதுவும் தனக்கோடிக்கு வழக்கமான ஒன்றுதான். தனக்கோடி கருப்பாக இருப்பான். உதடுகள், கைகளில் சில பகுதிகள் மட்டும் வைட்டமின் குறைவு காரணத்தால் தோல் நோயாகி வெண்மை படர்ந்திருக்கும். இப்பிரச்சனை அவனுக்குச் சிறுவயதிலிருந்து உள்ளது. அதனாலேயே அவனை ஒரு கேலிப் பொருளாக வகுப்பில் வைத்திருக்கிறார்கள்.
“ரோபர்ட் வரான் பாரு…”
“கருப்பு ரோபர்ட் ஜிங்குச்சா…உஸ்ஸுக்காரன் ஜிங்குச்சா!”
“அவன பார்த்தாலே வெளுக்கணும் போல இருக்கு…”
குறிப்பாக விமலிடம் அடிக்கடி உதை வாங்கிவிட்டு வகுப்பிற்குள் வந்தவுடன் அது ஒரு சாகசம் போல பெருமிதமாக சிரித்துக் கொண்டே உட்காருவான். மற்ற நண்பர்கள் அதனைக் கண்டு சிரிப்பார்கள். ஆசிரியர் வகுப்பில் இல்லாத நேரங்களில் தனக்கோடி எழுந்து வரிகள் விளங்காத பாடலைப் பாடிக் கொண்டே ஆடுவான். அல்லது எல்லோரிடமும் சென்று வாழைத்தோப்பு கதையைச் சொல்ல முயல்வான். பாதி பேர் அதனைக் கவனிக்க மாட்டார்கள். அப்பொழுதும் விமல்தான் அவனைப் பின்னால் உதைப்பான்.
கழிப்பறை முழுவதும் சிறுநீர் வாடை பெருகி பரவியது. தனக்கோடிக்கு அதுவொரு பொருட்டே இல்லாமல் உள்ளே அமர்ந்திருந்தான். சில மாதங்களாக அவனுக்கு அவ்வாடை பழகிபோன ஒன்று. ஐந்தாம் ஆண்டு மாணவன் ஒருவன் வந்து தனக்கோடி பூட்டப்பட்டு இருந்த கழிப்பறை கதவைத் திறந்துவிட்டான். உள்ளே வாழைத்தோப்பு குளத்தில் நீந்துவதைப் போல இரண்டு கைகளையும் வெறுமனே அசைத்துக் கொண்டு அமர்ந்திருந்தான். அவன் நினைவெல்லாம் அக்குளத்தில் இறங்கி இன்னொரு உலகத்திற்குள் நுழைய வேண்டும் என்பதே. தனக்கோடி நீச்சலிலும் கெட்டிக்காரன். மழைக்காலத்தில்கூட குளத்தில் முங்கி உள்நீச்சலடித்து மறுமுனையில் எழுவான்.
வாழைக்கன்றுகள் நடும் முன்பே அங்கிருந்த குளம் அது. நீர்ப்பாய்ச்சலுக்காக அதையே பயன்படுத்திக் கொண்டார்கள். வெயில் காலத்தில் மட்டும் சற்று வற்றிப் போய் நீர்ப்பாசி பரவிவிடும். அதன் பிறகு சீன முதலாளி மேலும் சில அடிகளுக்குத் தூர்வாறி விட்டதால் அப்பிரச்சனையும் இல்லை. வாழைத்தோப்பிற்குப் பக்கத்தில் இருக்கும் எலுமிச்சை தோட்டத்திற்கும் தண்ணீர் இதிலிருந்துதான் இயந்திரம் வழியாகத் திறந்துவிடப்படும். தேவராஜன் மாமாதான் வாழைத்தோப்பைப் பார்த்துக் கொள்வார். வாழைமரங்கள் அதிக சூட்டில் வளராமல் போய்விடும் என்பதால் வெயில் காலங்களில் மண்ணை ஈரப்படுத்தியப்படியே இருக்க வேண்டும். இயந்திரத்தை முடுக்கிவிட்டால் நெகிழிக் குழாய் வழியாக குளத்து நீர் பத்திகளுக்குகிடையில் செல்லும் நீண்ட நெகிழியின் வாயிலாக ஒவ்வொரு ஐந்தடிக்கும் குழாயில் இருக்கும் சிறு ஓட்டையின் வாயிலாக மரத்திற்குத் தேவையான அளவு கணிசமாக சேர்ந்துவிடும். மோட்டரைத் திறந்துவிட்ட பின் தேவராஜன் மாமா இன்னும் சில வேளையாள்கள் அதனைக் கண்கானிக்கவும் சுற்றிலும் நடந்து பரிசோதிப்பார்கள். குழாயில் வெடிப்புகள் இருந்தால் உடனே சரிசெய்துவிட வேண்டும். சில சமயம் தனக்கோடியும் மாமாவிற்கு உதவுவதற்காக பத்தி நெடுக ஓர் ஓட்டம் ஓடி குழாயைப் பரிசோதித்துவிட்டு வருவான்.
தேவராஜன் தனக்கோடியின் தூரத்து உறவு என்பதால் அவனுக்கு எந்நேரமும் வாழைத்தோப்பில் நுழைந்து திரிய அனுமதியுமுண்டு. முதலாளி இரண்டு வாரத்திற்கு ஒருமுறை வருவான். அந்நேரத்தில் கடமை மாறாத காவலாளியைப் போல தேவராஜன் பாவனைக் காட்ட வேண்டி தனக்கோடியைத் தோப்பின் பக்கம் சேர்க்க மாட்டார். தேவராஜன் உள்ளேயுள்ள மாமரத்தோடு இணைத்து ஒரு சிறிய கொட்டாய் போல கட்டிக் கொண்டார். ஒரு பழைய ‘பேட்டரி’ வானொலி உள்ளே எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும். அவருடைய வீடு கம்பத்துக்கு வெளியில் ஆறு கிலோ மீட்டர் தாண்டி இருப்பதால் பெரும்பாலும் இங்கேயே தோப்பிலோ அல்லது பள்ளிப் பாதுகாவலர் ஐயாவு வீட்டிலேயோ தங்கிக் கொள்வார். காலையில் தோப்பிற்கு வேலைக்கு வரும் அல்போன்சாவின் தம்பியும் சுராய்டா அக்காவும் இன்னும் சிலரையும் கண்காணித்துக் கொள்வார். சுராய்டா அக்கா முக்காடுக்கு மேல் ஒரு துணியைக் கட்டிக்கொண்டால் அத்துடன் வேலையில் இறங்கிவிடுவார். அல்போன்சா தம்பியும் இன்னும் சிலரும் நெகிழிப் பையால் சுற்றப்படாத வாழைத்தார்களைக் கட்டப் போய்விடுவார்கள். தேவராஜன் சுருட்டைப் புகைத்துக் கொண்டே வேவு பார்ப்பார். இன்னும் ஒரு மாதத்தில் வாழைத்தாரை அறுக்கும் காலம் வந்துவிடும் என்பதால் மேலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இல்லையென்றால் வேலிக்கம்பிகளை அறுத்து உள்ளே வந்து பழத்தைத் திருட ஒரு கூட்டம் தயாராகவே இருக்கும்.
“கொடுத்ததெல்லாம் கொடுத்தார் யாருக்காக கொடுத்தார்… ஒருத்தருக்கா கொடுத்தார்…” என்று எம்.ஜி.ஆர் பாடலைப் பாடிக் கொண்டு தேவராஜன் தோப்பிற்கும் ஐயாவு வீட்டிற்கும் சென்று வந்து கொண்டிருப்பார். அவருக்கு வேண்டியது ஒரு போத்தல் மதுபானம் மட்டும்தான். அதை யார் கொடுத்தாலும் அங்குச் சென்று உலக அரசியல் தொடங்கி உள்ளூர் குடும்பச் சண்டைகள் வரை அனைத்தையும் கக்கிவிட்டு உடன் இருப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்திவிட்டு வந்துவிடுவார். தேவராஜன் மாமாவைப் பேசவிட்டு மகிழ்வதில் ஐயாவு கெட்டிக்காரன். அவன் பொழுதைக் கழிக்க ஒரு போத்தல் மதுபானம் செலவு செய்தால் போதும். தேவராஜனுக்கு உறவெல்லாம் இல்லை. அப்பா மட்டும்தான். அவரும் அவனுடைய தம்பியுடன் கோலாலம்பூர் போய்விட்டார். வீட்டில் இருந்தாலும் பகலெல்லாம் சுவரை வெறித்துத் தொலைய வேண்டும் என்பதால் தோப்பு வேலைக்கு வந்துவிட்டார்.
போதையில் பகலெல்லாம் கொட்டாயின் பலகை இடுக்கிலிருந்து கோடுகள் போட்டு விளையாட்டுக் காட்டும் வெளிச்சத்திற்கும் அதனூடாக உலாவும் போதை கலந்த உறக்கத்திற்கும் தூரத்தில் கேட்கும் வாழையிலைகளின் உரசல் இசைக்கும் நடுவில் மிதந்து கொண்டிருப்பார். இரவில் வானொலியில் பாடலைக் கேட்டுக் கொண்டே நட்சத்திரங்கள் மின்னும் வானத்தைப் பார்த்துக் கொண்டே தோப்பில் உலா வருவார். வேலியின் வலதுபக்கம் ஓடும் சிறு ஓடையின் நீர் சத்தம் சன்னமாகக் கேட்கும். சிலசமயம் இரவில் குளத்தில் வந்து அசையும் நிலவைப் பார்த்துக் கொண்டே தன் பக்கத்தில் இந்நேரம் யாராவது இருந்தால் பரவாயில்லை என்று சிந்தித்துக் கொண்டே குளத்தினருகே தூங்கியும் விடுவார்.
பெரிய கன்று சிறிய கன்று எனப் பிரிக்கப்பட்ட வாழைத்தோப்பு என்பதால் குளத்திற்கு வலப்பக்கம் மரங்கள் உயர்ந்தும் இடப்பக்கம் குட்டை மரங்களும் வரிசைக் கட்டி நிற்கும். குளத்தில் குளித்துக் கொண்டே தூரத்தில் தெரியும் டுரியான் தோப்பையும் அதனைத் தாண்டி விரிந்து படரும் ஜெராய் தொடரையும் இரசிக்க முடியும். தனக்கோடி அக்குளத்தில் முங்கி முங்கி எழுந்து வாயில் தண்ணீரைச் சேகரித்து ஜெராய் மலையைப் பார்த்துத் துப்புவான்.
“ஒருநாளு அந்தக் குளம் ஒன்ன உள்ள இழுத்துரும் பாத்துக்கோ… வெளையாடாதெ…”
தேவராஜன் மாமா பலமுறை எச்சரித்தும் அவனுக்குப் பழகிபோன குளம் அது. குளத்தினோரம் மண்டியிருக்கும் நீர்ப்பாசியைக் கைகளில் நிதானமாக களைத்து உள்ளே பார்ப்பான். தாமரை செடிகளின் தண்டுகள் நடனமாடிக் கொண்டிருக்க உள்ளே ஆழத்தில் இருளும் அசைந்து கொண்டிருக்கும். அவனைப் பொறுத்தவரை அதுவொரு சாகசமான செயல்.
தனக்கோடி அன்று பள்ளி முடிந்ததும் வாழைத்தோப்பில் நுழைந்து குளத்தைப் பார்த்துவிட்டு மாமா கொட்டாய்க்குள் ஒலிக்கும் பாடலையும் கேட்டுவிட்டு குளத்தின் ஓரங்களை மூடியிருக்கும் நீர்ப்பாசியின் மீது கல்லெறிந்து விட்டு அங்கிருந்த சாக்கடையில் சிறுநீர் கழித்துவிட்டு வீட்டிற்குள் சென்றான். குளம் இருக்கிறதா என்று பரிசோதிக்க வரும் அதிகாரியைப் போன்ற பாவனையுடன் உள்ளே போய்விட்டு வந்தான். வாழைத்தோப்பில் இருக்கும் குளிர்ச்சி அவனது மாலைக்கு இதம் சேர்க்கும். அம்மா வைத்த மீன் கறி வறட்சியில் இருந்தது. தேடித் தேடி வெறும் கறி மட்டும்தான் இருந்தது. உள்ளேயிருந்த வெண்டைக்காயை மீன் போல பாவித்து உறிஞ்சி சமாளித்துக் கொண்டான்.
4.30க்கு மேல் வாழைத்தோப்பில் நுழைந்தால் ஒரு சுற்று வந்து பின்னர் குளத்தில் குதித்துவிடலாம். மாமா அங்கே இருக்கும் தைரியத்தில் வீட்டிலிருந்தும் அழைப்புகளோ எச்சரிப்புளோ வராது.
“டேய்! தனக்கோடி. எங்கடா போய் தொலைஞ்சிட்ட?”
“டேய்…! போனவன் இன்னும் ஆள் வரல பாத்தீயா…?”
அம்மாவின் எச்சரிக்கை மணி ஒலிக்காத வாழ்க்கை தனக்கோடிக்குக் கோடிச் சுகம். மேட்டிலுள்ள டுரியான் தோப்பிற்கு விளையாடச் சென்றால் சிலசமயம் தேடிக் கொண்டே வந்துவிடுவார். கையில் மூங்கில் குச்சியும் இருக்கும் என்பதுதான் தனக்கோடிக்குப் பயம். அதனாலேயே அவன் டுரியான் தோப்பிற்குப் போவதைக் குறைத்துக் கொண்டான். அதுவும் கடந்த வருடம் அங்கு நடந்த ஒரு கொலைச் சம்பவத்திற்குப் பிறகு அந்தப் பக்கம் யாருமே போவதில்லை. தோப்பில் வேலை செய்து கொண்டிருந்த சீனன் ஒருவனின் மரணம் எல்லோரையும் பயத்தில் ஆழ்த்தியது. மண்டையில் உண்டான தாக்குதலில் ஒரு பக்கம் ஓடு உடைந்தே விட்டது.
தனக்கோடி குளத்தில் குளிக்கும்போது அந்தச் சீனனின் கைகள் உள்ளேயிருந்த அவனுடைய கால்களைப் பற்றுவதாக அவனே கற்பனை செய்து பயந்தும் கொள்வான். பயந்து வேகமாக நீந்திக் கரைக்கேறி மீண்டும் உள்ளே குதித்து விளையாடுவான். நீர்ப்பாசி மூடியிருக்கும் இடத்தில் அச்சீனன் பதுங்கி தனக்கோடிக்காகக் காத்திருப்பதாக நினைத்துக் கொண்டு அவ்விடத்தை நோக்கி நீந்தி பின்னர் தப்பித்ததாகக் கரையேறி கத்துவான். அவனோடு விளையாட யாருமற்ற தனிமைக்குள் அவன் பல கதாபாத்திரங்களை உற்பத்தி செய்து கொண்டான்.
குளத்தில் இன்றும் வாழும் டுரியான் தோப்பில் கொலை செய்யப்பட்டச் சீனன், வாழைத்தோப்பில் ஒளிந்திருக்கும் இராணுவ வீரர்கள், அவர்களை ‘அஸ்கார் மேன்’ என்று அவனே பெயரும் வைத்துள்ளான். அடுத்து, கட்டொழுங்குஆசிரியர் சோமசுந்தர். அவரும் இந்த வாழைத்தோப்பில்தான் கடந்த பல மாதங்களாக ஒளிந்துள்ளார். அவரோடு விமல், சர்வீன் என்று சிலரும் வாழைத்தோப்பில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தனக்கோடி அவர்களைத் தினம் தினம் துரத்தி துரத்தி அடித்து விளையாடுவான். மூச்சிரைக்க ஓடிவந்துவிட்டால் உடனே சிறுநீர் வந்துவிடும். அதற்குமேல் அடக்கினாலும் அவனையறிமால் கழித்துவிடுவான்.
தனக்கோடிக்கு சோமசுந்தர் ஆசிரியர் என்றால் மிகுந்த பயம். மற்ற ஆசிரியர்கள் காட்டிலும் அவர் எப்பொழுதுமே இறுக்கமான முகத்துடனும் பாவனையுடனும் இருப்பதைப் போன்றே தனக்கோடி சித்தரித்துக் கொண்டான். ஒவ்வொரு வகுப்பாக உலா வரும்போது தனக்கோடியின் வகுப்பிற்கு வந்ததும் அவனை எழுந்து நிற்கச் சொல்லி அவன் மீதான புகார்களை ஆசிரியர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு அவனை அவருடைய அறைக்கு அழைத்துச் சென்று நிற்க வைத்துவிடுவார். தனக்கோடி அன்று ஓய்வு நேரம் வரை வெறுமனே நின்றிருப்பான். அதுதான் அவனுக்கு மிகக் கடுமையான தண்டனையாக இருக்கும். அதைவிட அவனுக்கு அவசரமாக வந்து முட்டி நிற்கும் சிறுநீர் சிக்கல் வாட்டிவிடும். ஒருமுறை தாங்க முடியாமல் காற்சட்டையிலேயே கழித்து விட்டான். “சொல்லத் தெரியாதா!” என்று அதற்கும் சேர்த்து அடி விழுந்ததுதான் மிச்சம். ஓய்வு மணி அடித்ததும் சோமசுந்தர் ஆசிரியரைப் பரிதாபத்துடன் பார்ப்பான். “என்னடா? பாத்ரூமா? அதெப்படிடா உனக்கு மட்டும் சும்மா சும்மா வருது?” என்று அதட்டினார்.
“உனக்கு இதுதான் லாஸ்ட் வார்னீங்!” என்று அத்துடன் பலமுறை சொல்லப்பட்ட அதே வசனத்துடன் மீண்டும் வெளியே அனுப்பிவிடுவார். பதிலுக்குத் தனக்கோடி வாழைத்தோப்பில் வைத்து அவரைப் பலமுறை சுட்டிருக்கிறான். பத்திகளுக்கு இடையே ஓடவிட்டுப் பின்னால் நின்று சுட்டு மகிழ்ந்துள்ளான். தனக்கோடியின் வாழைத்தோப்பில் சோமசுந்தர் ஓடாத ஓட்டமில்லை. பயந்து வாழைமரங்களுக்கிடையே ஒளிந்து அலறுவதைப் போலவும் தனக்கோடி நினைத்துக் கொள்வான்.
“டேய் கிறுக்குப் பையலே… சும்மா ஒண்டியா பேசிக்கிட்டு இருக்கான் பாரு…”
தனக்கோடியின் அப்பா கணேசன் வேலை முடிந்து அப்பாதையில்தான் வீட்டிற்கு வருவார். மோட்டாரை வாழைத்தோப்பிற்குள் நுழையும் பாதையில் நிறுத்திவிட்டுக் கத்துவார். அப்பொழுது தனக்கோடி குளத்திலோ அல்லது மாமா கொட்டாயின் அருகிலோ பாய்ந்து யாருமில்லாத யாருடனோ சண்டை போட்டுக் கொண்டிருப்பான்.
“டேய் தனக்கோடி… வாழமரம் ஒரு முற தாரெ தள்ளிக் கொடுத்துட்டு அப்புறம் செத்துப் போயிரும்… ஆனா… கீழ விதைச்சிட்டுத்தான் சாவும்… அது வந்து பெறகு அடுத்த தாரெ தள்ளும்…உங்கப்பா குடும்பத்த பார்த்துக்கிட்டாரு… அப்புறம் நீ… இந்த மாதிரி தோப்பு வச்சு பொழைச்சுக்கோ…”
தனக்கோடியைக் கொட்டாய் வரை இழுத்து வந்து தேவராஜன் பக்கத்தில் அமரவைத்துப் பேசத் துவங்கும்போதெல்லாம் தனக்கோடி நெளிவான். குளம் அவனை வா வா என்று அழைக்கும்போது தேவராஜன் மீண்டும் வாழைமரங்களைக் காட்டியப்படியே பேசத் துவங்குவார். அதில் பாதி அவனுக்குப் புரியாது.
“பெரிய தோப்பு மொதலாளி ஆனோனே மாமாவுக்கு வேலக் கொடுப்பியாடா?” என்று அவன் முதுகைத் தடவிக் கொடுப்பார். தனக்கோடி “உஸ்ஸூ!” என்று தோப்புப் பக்கம் ஓடுவான். “டேய் வாழமரத்து மேல பேஞ்சிராதெ. செத்த நீ…!!!” என்று அவர் பதிலுக்குக் கத்துவதையும் வாழைமரங்கள் கேட்டுச் சலித்துப் போயிருக்கும்.
அன்று கணேசன் வந்து பார்க்கும்போது தோப்பில் தனக்கோடியின் சத்தமே இல்லை. வீட்டிற்குள் வந்தவர் குளித்துவிட்டு மீண்டும் வெளியே வந்து பார்த்தார். தூரத்தில் பாடல் சத்தம் மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தது. எப்படியும் தனக்கோடி வீட்டிற்கு வந்துவிடும் நேரம்தான். கணேசன் வரும்போதோ அல்லது வந்து சில நிமிடங்களிலோ அவன் ஓடி வந்துவிடுவான். டுரியான் தோப்பில் ஒளிந்துகொள்ள சூரியன் தயாராகிக் கொண்டிருந்தது. வாசலில் திசைக்கொன்றாய் சிதறிக் கிடந்த ஜப்பான் சிலிப்பரைத் தேடி அணிந்து கொண்டு வாழைத்தோப்பில் நுழைந்தார்.
கொட்டாயில் வானொலி மட்டும்தான் ஓடிக் கொண்டிருந்தது. வேறு யாரும் அங்கில்லை. குளத்தைப் பார்த்தார். குளித்தெழுந்த சலனமும் இல்லை. தண்ணீரின் மேற்பரப்பு நிதானத்துடன் இருந்தது. குளத்தினோரம் வளர்ந்திருந்த தாமரை செடிகள் சில நசுங்கி ஒடுங்கியிருந்தன. தனக்கோடி அந்தக் கரை முனையிலிருந்து சறுக்கி விளையாடியதன் விளைவாக இருக்கக்கூடும்.
“டேய் தனக்கோடி? எங்கடா இருக்க? எங்காவது ஒன்னுக்கு இருக்கப் போய்ட்டானா?”
கணேசன் பலம் கொண்டு கத்தினார். எரிச்சலும் பயமும் ஒன்றர அவருடைய குரலில் கலந்திருந்தன.
“இந்தப் பயன அடிச்சி துவச்சா என்ன? எங்கயாவது மேஞ்சிக்கிட்டுத்தான் இருக்கான்…” கணேசனுக்கு அழுத்தம் தாளமுடியவில்லை. ஐந்து ஏக்கர் பரப்பிலான தோப்பு அது. எங்கிருந்து துவங்கி எங்குப் போய்த்தேடுவது என்கிற குழப்பத்துடன் நின்றிருந்தார்.
“இந்தத் தேவா எங்கப் போய்ட்டாக…? அவரயும் காணோம்…”
தனக்கோடியின் அம்மா பார்வதிக்குக் கேட்கும்படி கத்தினார். அவர் வீட்டிலிருக்கும் கடைக்குட்டிக்குச் சோறு ஊட்டிக் கொண்டிருந்தார். ஷாலினி பள்ளியில் கொடுத்த பாடத்தைச் செய்து கொண்டிருந்தாள். நாளை வகுப்பிற்கு வெளியே நின்று அவமானப்பட அவள் தயாராக இல்லை.
“ஷாலு! உங்கப்பா கத்தறாரு. என்னானு பாரு…”
ஷாலினி வாசல்வரை வந்து இருண்டு கொண்டிருக்கும் தோப்பைப் பார்த்தாள். அப்பா தூரத்தில் உலாவிக் கொண்டிருப்பதைப் போல தெரிந்தது. மாமரத்தின் மேலே பொருத்தப்பட்டிருந்த மின்கலன் விளக்கு எரியத் துவங்கியிருந்தது. வாழையிலைகள் காற்றில் இன்னமும் அடங்காமல் படப்படத்துக் கொண்டிருக்கும் காட்சிகளைத் துல்லியமாக விளக்கு வெளிச்சம் பரவிய இடத்தில் மட்டும் நன்றாகக் கவனிக்க முடிந்தது.
“மா… அப்பா தோப்புல அண்ணன தேடிக்கிட்டு இருக்காரு…” என்று கத்தினாள். சாப்பிட்டுக் கொண்டிருந்த தம்பி அலறி வாயில் அதக்கி வைத்திருந்த ஒரு பிடி சோற்றை அப்படியே வெளியே துப்பினான்.
“யேன்டி…உயிரா போச்சு? இப்படிக் கத்தற? இந்தா இவனுக்கு ஊட்டு…”
பார்வதி வெளியில் வந்து நின்றார். மூச்சிரைத்தது.
“போய்ட்டானா? அங்க டுரியான் தோப்புக்குப் போய்ருப்பானோ? இல்ல எங்காச்சாம் அல்லுருல பேய்ஞ்சிக்கிட்டு இருப்பாங்க… அது என்ன பெரச்சனன்னு தெரில… வீட்டுலயும் ஒரே மூத்தர வாடெ…”
அவள் கத்தியது கணேசனின் காதில் விழவில்லை. தோப்பை ஆழ்ந்து நோக்கினாள். ஒன்றும் தெரியவில்லை என்பதால் மீண்டும் ஏதோ முனகிக் கொண்டே உள்ளே போய்விட்டாள். சிலசமயங்களில் இப்படி நடக்கும். நேரமாகியும் விளையாட்டில் ஆழ்ந்துபோன தனக்கோடியை அடுத்து கணேசன் அடித்து இழுத்து வருவார் என்று அவளுக்குத் தெரியும். வந்ததும் அவளிடமும் இரண்டடி முதுகில் வாங்கி நெளிந்து கொண்டு மூலையில் போய் ஒடுங்கிக் கொள்வான்.
சில மாதங்களாக வாழைத்தோப்பில் விளையாடிவிட்டு வருவதால் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதில்லை. இப்பொழுது மீண்டும் துவங்கிவிட்டான் என்று அவளுக்கு எரிச்சல் கூடியது. கணேசன் நீண்டு தெரியும் ஒவ்வொரு பத்தியாகக் கவனித்தார். மக்கிய வாழைத்தண்டுகள் சில சரிந்து கிடந்தன. தூரத்திலிருந்து பார்த்தால் யாரோ படுத்துக் கிடப்பதைப் போன்றும் தோற்றமளிக்கும். கணேசன் கடைசி பத்தி வரை செல்ல வேண்டுமென்றால் நேரமெடுக்கும். என்ன செய்வதென்று தெரியாமல் மீண்டும் கத்தினார். பதிலேதும் இல்லாமல் ஒரு காகம் மட்டும் கரைவது எங்கோ தூரத்தில் கேட்டது. வாழைமரங்களுக்கிடையே வளர்ந்திருந்த புதருக்குள்ளிருந்து தேரைகள் எகிறிப் பாய்ந்து எங்கோ போய்க் கொண்டிருந்தன. விளக்கு வெளிச்சத்தில் அவற்றின் உடல் மின்னுவதும் தெரிந்தது. வண்டுகளின் இரைச்சல் மெல்ல பெருகத் துவங்கியது.
குளத்தைப் பார்த்து கடைசி வீட்டு நாய் விடாமல் குரைத்துக் கொண்டிருந்தது. இருளில் அதன் கண்கள் மின்னுவதும் கணேசனுக்கு அச்சத்தைக் கூட்டியது. கணேசன் பதறிக் கொண்டு வீட்டிற்கு ஓடினார்.
“அடியே… அவன் காணம்டி. இவ்வளவு நேரத்துக்கு வராம இருக்க மாட்டான்… நீ இந்தத் தேவாக்குப் போன போடு… வாழத்தோப்புல பாம்புங்க வேற ரொம்ப…”
கணேசனின் பதற்றம் பார்வதிக்கும் ஒட்டிக் கொண்டது. கைப்பேசியைத் தேடி தேவராஜனுக்கு அழைத்துப் பார்த்தார். அழைப்பிற்கு யாரும் பதிலளிக்கவே இல்லை.
“ங்கெ… யாரும் எடுக்க மாட்டறாங்க…”
கணேசன் கைவிளக்கை எடுத்துக் கொண்டு மீண்டும் வாழைத்தோப்பில் நுழைந்தார். இருள் பரவி மூடியிருந்த வாழைத்தோப்பில் காற்றின் ஓலமும் வாழையிலைகளின் சலசலப்பும் பெருகிக் கொண்டிருந்தன. மனத்தில் படப்படப்பு. கைவிளக்கை எதிரில் காட்டியவாறு தோப்பின் பின்பக்க வேலிவரை சென்றார். அதற்கடுத்து செம்பனை காடு. வேலியைத் தாண்டி குதித்து அங்கெல்லாம் தனக்கோடி சென்றிருக்க மாட்டான் என்று உறுதியாக நம்பினார். பின் கதவு மக்கியத் தகறத்துடன் வேலிக் கம்பியோடு இழுத்துப் பூட்டப்பட்டிருந்தது.
வேலியோரம் கைவிளக்கைக் கொண்டு அலசினார். தூரத்தில் வேலியின் கோடியில் யாரோ தரையில் படுத்துக் கிடப்பது தெரிந்தது. மக்கிய வாழைத்தண்டாக இருக்குமோ என்கிற சந்தேகத்துடன் அருகில் சென்று பார்த்தார். தேவராஜன் தரையில் விழுந்து கிடந்தார். கணேசன் பதறியவாறு முகத்தைக் கவனித்தார். வலது நெற்றியில் பொத்தல். இரத்தம் பெருகி வழிந்து முகத்தை மறைத்துக் காய்ந்திருந்தது. கணேசன் அப்படியே தரையிலேயே உட்கார்ந்துவிட்டார். வாழையிலைகளின் அசைவுகள் ஒன்று திரண்டு ஓர் ஓலத்தை உற்பத்தி செய்து கொண்டிருந்தது. மீண்டும் எழுந்து கணேசன் வீட்டுப் பக்கம் ஓடினார்.
“ஐயோ போச்சே… பையன எவன் கொன்னு எங்க போட்டிருக்கான்னு தெரியலயே…” என்று மார்பில் அடித்துக் கொண்டு வீட்டிற்கு ஓடினார். கைவிளக்கில் இருந்து படர்ந்த ஒளி அங்குமிங்குமாகச் சிதறின. குழாயில் பட்டுக் கால் இடறியதால் பாதி தூரத்தில் கைவிளக்கும் நழுவி எங்கோ விழுந்தோடி மறைந்தது. கணேசனுக்கு அதை எடுக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. மண் மிருதுவாக இருந்ததால் கால்கள் புதைந்து சேற்றை வாரி இறைத்தது. காலில் அணிந்திருந்த ஜப்பான் சிலிப்பரும் எங்கோ தவறவிட்டிருந்தார்.
“அடியே! நம்ம பிள்ளயே எவனோ கொன்னுட்டான் போல…” என்று கணேசனின் குரல் உடைந்து சிதற உள்ளே வந்தார்.
தனக்கோடி அம்மாவின் முன் நின்றிருந்தான். சட்டையெல்லாம் சேறாக இருந்தது. கால்களில் இரத்தக் காயம். கணேசன் அப்படியே ஸ்தம்பித்து நின்றார்.
“பையன் எதையோ பார்த்துப் பயந்துருக்கான் போலங்க… ஒன்னும் கேக்காதீங்க…”
பார்வதி அவரைக் கட்டுப்படுத்தினார்.
“அங்க தேவராஜன் செத்துக் கிடக்காறான்டி… அந்த டுரியான் தோப்புல நடந்த மாதிரி எவனோ கொல…”
பார்வதி அவரின் வாயைப் பொத்தியவாறு, “டேய் நீ போய் மொத குளிடா…” என்று தனக்கோடியை விரட்டினாள். தனக்கோடியின் முகத்தில் இருந்த கலவரம் மெல்ல விலக அங்கிருந்து நகர்ந்தான். உள்ளே சென்று முதலில் சிறுநீர் கழித்துவிட்டு தொட்டியில் இருக்கும் நீரை அள்ளி உடலில் ஊற்றினான். பெருவிரலில் இருந்த காயத்தைத் தடவிப் பார்த்தான். சிறிய வெட்டுக் காயம். விரல்களின் இடுக்கில் ஒட்டிக் கொண்டிருந்த நீர்ப்பாசியை எடுத்து உதறிவிட்டு மீண்டும் நீரை உடலில் ஊற்றினான். உடலின் மொத்த உறுப்புகளும் சில்லிட்டன. மெதுவாக தொட்டியில் இறங்கி முங்கினான். அம்மாவிற்குத் தெரியாமல் இப்படிச் சில சமயம் செய்வதுண்டு. வேகமாக நீந்தினாலோ அல்லது தண்ணீர் மேற்பரப்பை ஓங்கி அடித்தாலோ அம்மாவிற்குக் கேட்டுவிடும் என்கிற பயத்தில் மெதுவாக உள்நீச்சல் செய்து முங்கி முங்கி எழுந்து மீண்டும் தொட்டியிலிருந்து வெளியேறினான்.
உடலைத் துவட்டிவிட்டு பின்கட்டிலுள்ள கொடியில் காய்ந்து கொண்டிருந்த அவனுடைய அரைக்கால் சிலுவாரை எடுத்து அணிந்து கொண்டு சாப்பாட்டுக் கூடையைத் திறந்தான். அதே மீனில்லாத மீன் கறிதான். பசி என்பதால் வேறு வழியில்லாமல் சோற்றைப் போட்டுச் சாப்பிடத் துவங்கினான். வெளியில் ஆளரவமும் கூச்சலும் கேட்டுக் கொண்டிருந்தது. அதனூடே அம்மாவின் அழுகை சத்தமும் மலாய்க்காரர்களின் உரையாடல்களும் கேட்டுக் கொண்டிருந்தன. தனக்கோடி சாப்பிட்டு விட்டு அறைக்குள் சென்றான். ஷாலினியும் தம்பியும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். தம்பி தனக்கோடியைப் பார்த்ததும் கையில் வைத்திருந்த விளையாட்டுப் பொருளை அவன் மீது ஓங்கியடித்தான். இதை அவன் வழக்கமாக செய்வதுதான். பலமில்லாத வீசல் என்பதால் அப்பொருள் தனக்கோடியை நெருங்கும் முன்பே கீழே விழுந்தது.
“அண்ண! தேவராஜன் மாமாவ யாரோ சாவடிச்சிட்டாங்களாம். நீ அங்க தோப்புலத்தான இருந்த பாத்தீயா?”
தனக்கோடி புருவத்தை உயர்த்தி உதடுகளில் ஆள்காட்டி விரலைக் குவித்து ஷாலினியிடம் சத்தம் போடாதே என்று சைகை காட்டினான். பின்னர், மீண்டும் ஷாலினியிடம் வந்து “அஸ்கார் மேன்ஸ் தோப்புல இருக்காங்க தெரியுமா?” என்றான்.
“என்ன அஸ்கார் மேன்ஸா? யாரது?”
“ஷ்ஷ்ஷ்ஷ்! சத்தமா சொல்லாத. அவுங்க உள்ள வந்துடுவாங்க… தோப்புல ஒளிஞ்சிருக்காங்க…”
ஷாலினி தனக்கோடி சொன்னதைக் கேட்டதும் குதுகலமானாள். கட்டிலின் விளிம்பில் அமர்ந்த தனக்கோடியை நெருங்கிச் சென்றாள்.
“அண்ண… எனக்குச் சொல்லுண்ண…”
அதுவரை அவனை எப்பொழுதும் கடிந்து தள்ளும் ஷாலினி வாழைத்தோப்பு கதையைக் கேட்க ஆவலானாள். தனக்கோடி இல்லாத மீசையை நீவிவிட்டவாறே, “ஆ!ஆ! அதுவொரு பயங்கரமான கத…வாழத்தோப்பு வாழத்தோப்பு மட்டும் இல்ல. அதுக்குள்ள கெட்டவங்க இருக்காங்க…” என்று குரலை மாற்றிப் பேசினான்.
“ஐயோ! பேய் இருக்கா?” ஷாலினியின் முகம் மாறியது. பேய்க் கதையைக் கேட்கும் தொனிக்கு அவள் மாறியிருந்தாள். சட்டென கதவைத் திறந்து அம்மா உள்ளே வந்தார். அவர் கண்கள் அழுது வீங்கியிருந்தன. பதற்றத்துடன் இருந்தாள்.
“டேய் கட்டையல போறவன… தோப்பு பக்கம் போனன்னு யாருகிட்டயும் சொல்லிடாதெ. நீ அந்தப் பக்கம் போகலன்னு சொல்லிட்டோம்… அப்புறம் போலிஸ் கூட்டிட்டுப் போய் தேவ இல்லாத கேள்விங்கள கேக்கும்… புரியுதா? ஸ்கூல்லகூட சொல்லிடாத…” என்று சொல்லிவிட்டு மீண்டும் அம்மா வெளியில் போனார்.
“இந்தக் கஞ்சாக்கார பையனுங்களோட வேலண்ணே… இவனுங்க அந்நியாயம் தாங்கல…போன தடவயும் அவனுங்கத்தான் செஞ்சிருக்கணும்…” வெளியில் கம்பத்து தலைவர் அல்போன்சா வந்து அங்குக் கூடியிருந்த கூட்டத்தில் சத்தமாகக் கத்தினார். அவர் குரலில் கோபம் தெறித்தது.
“அண்ணெ! நீ சொல்லு… அங்கத் தோப்புல பேய் இருக்கா?”
தனக்கோடி ஷாலினி அப்படிக் கேட்டதும் மேலும் பூரிப்பானான். அவள் இதுவரை அவனிடம் இப்படி நெருங்கி எதையும் கேட்டதில்லை. பக்கத்தில் படுத்தாலே உதைத்துக் கட்டிலிருந்து தள்ளிவிடும் தங்கை இப்பொழுது தனக்கோடியின் ஒரு சுவாரஷ்யமான கதைக்குத் தயாராக இருந்தாள்.
“அந்த அஸ்கார் மேன்ஸ் ஒரு மூனு பேரு உள்ள ஒளிஞ்சிருக்காங்க… அப்படியே துப்பாக்கிய வச்சிக்கிட்டு தோப்புல சுத்துவாங்க. நான் அன்னாடம் உள்ள போய் அவங்கள சுடுவன் தெரியுமா?”
ஷாலினி சட்டென நிமிர்ந்து உட்கார்ந்து அவனைச் சந்தேகத்துடன் பார்த்தாள். “யாரு நீ சுடுவ? ஓ உன்கிட்ட துப்பாக்கி இருக்கா…? பொய் உடாத சொல்லிட்டன்… உண்மைய மட்டும் சொல்லு…”
அதற்குள் அப்பா உள்ளே வந்து தனக்கோடியை ஓங்கி ஓர் அறைவிட்டார். தனக்கோடி சுருண்டு நிற்க வைக்கப்பட்டிருந்த பாயில் விழுந்து சரிந்தான். பாயில் அதீதமான சிறுநீர் வாடை. பழைய அலமாரி அவன் மோதியதும் அதிர்ந்து ஒரு கதவு திறந்து கொண்டது.
“அறிவு இருக்கா? எத்தன தடவ சொல்றோம் காட்டுக்குள்ள போவாத… தோப்புக்குள்ள போவாதன்னு. வந்தவனுங்க தேவாவுக்குப் பதிலா உன்ன சாவடிச்சிருந்தா?”
தனக்கோடி அறை விழுந்த இடத்தை வேகமாகத் தடவிக் கொடுத்துவிட்டு மூலையில் போய் சுருங்கினான். கண்கள் இருண்டிருந்தன.
“இனிமே அந்தத் தோப்புப் பக்கம் போய் பாரு… செத்தடா நீ!” என்று கண்களைப் பெரிதாக்கி கணேசன் அதட்டிவிட்டு வெளியேறினார். தனக்கோடி அழவில்லை. இதுபோன்று இதைவிடவும் கொடூரமான அடி உதைகளை வாங்கி உடல் மரத்துப் போயிருந்தது. அப்பா சென்று மறைந்ததும் மீண்டும் எழுந்து ஷாலினியிடம் வந்தான்.
“நீ நம்பறியா இல்லயா?”
“எத? நீ துப்பாக்கில சுடறதயா…? போடா…” என்று கிண்டலுடன் கேட்டாள்.
“இரு என் துப்பாக்கிய காட்டறன்…” என்று மெதுவாகக் கதவைத் திறந்து பின்பக்கமாக வெளியேறி வீட்டிற்குப் பக்கத்தில் இருக்கும் பழைய கோழிக் கூண்டினோரம் சென்றுவிட்டுக் கையில் எதையோ கொண்டு வந்தான். ஒரு பழைய துணியில் சுற்றப்பட்டிருந்தது.
“என்னண்ணே இது? துப்பாக்கியா?” என்று ஷாலினி வாயைப் பிளந்தாள். தனக்கோடி உள்ளிருந்து கொக்கி போல நுனியில் ஒரு பக்கம் கூர்மையாக இருக்கும் இரும்பை வெளியில் எடுத்தான்.
“இது துப்பாக்கியா? இது இரும்பு…அள்ளி விடற…”
“ஏய்… இதுதான் என் துப்பாக்கி. உள்ள தோப்புல கிடைச்சது…”
“யேன் ரத்தமா இருக்கு?”
“அந்தக் குளத்துல ஒரு சீனன் இருக்கான். பாசிக்குள்ள ஒளிஞ்சிருக்கான். அவன் தான் தேவா மாமாவெ கொல்லச் சொன்னான்… அதான் நான் அவரெ மண்டையில சுட்டுட்டன்…” இரும்பின் கூர் நுனி பக்கம் கொத்துவதைப் போல காட்டி, சுட்ட விதத்தைச் சிரித்துக் கொண்டே கூறினான்.
“யேன் அந்தச் சீனன் தேவா மாமவெ கொல்லச் சொன்னான்?”
“ஷ்ஷ்ஷ்! தேவா மாமா கெட்டவரு…சும்மா சும்மா கொட்டாய்க்குள்ள பாட்டு கேட்க வான்னு உள்ள கூட்டிட்டுப் போய்டுவாரு… தெரியுமா?”
ஷாலினி ஆச்சரியத்துடன், “என்ன பாட்டு?” என்றாள்.
“ஷ்ஷ்ஷ்! அது இரகசியம். உள்ள பாவர் ரேஞ்சர்ஸ்கிட்ட சொல்லிருக்கன்… பயமா இருக்கும்…அப்புறம் மாமா தோப்புக்குள்ள விடலன்னா நான் எப்படி கொளத்துல குளிக்கறது…அஸ்கார்மேன்ஸ்கூட சண்டெ போடறது…”
ஷாலினி அவன் தலையில் கொட்டிவிட்டுக் கடிந்து கொள்வதைப் போல முகத்தைத் திருப்பினாள். அவனுடைய காற்சட்டை நனைந்து நீர் ஒரு சிறு ஓடையைப் போல கோட்டை உருவாக்கிக் கொண்டே வழிந்து கொண்டிருந்ததும் தெரியாமல் இருட்டில் மின்னும் கண்களோடு உட்கார்ந்திருந்தான்.
-கே.பாலமுருகன்