அசோகமித்ரனின் கண்ணாடி சிறுகதையை முன்வைத்து- சொல்வெளி கலந்துரையாடல்

156989925.IlwG1FBX

தமிழ் இலக்கிய சூழலில் அசோகமித்ரனின் மிகச் சிறந்த சிறுகதைகள் எனச் சொல்லப்படக்கூடிய புலி கலைஞன், பயணம் போன்ற சிறுகதைகளை வாசிக்க வாய்ப்புக் கிடைத்தபோது அசோகமித்ரனின் கதைஉலகம் தவிர்க்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட, விளிம்புநிலைக்குத் தள்ளப்பட்ட மனித மனங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடியவை என கடந்தகாலங்களில் அறிய முடிந்தது. ஆனால், சொல்வெளி கலந்துரையாடலுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட இக்கதை முற்றிலும் அகோகமித்ரனின் வேறொரு கதை உலகத்திற்குள் இட்டுச் சென்றுள்ளது என்றுத்தான் சொல்ல வேண்டும். இங்கு அசோகமித்ரன் என்ற கதைச்சொல்லி வேறொரு அதிர்வலைகளை உருவாக்குகிறார். வேறொரு மனிதர்களைக் காட்டிச் செல்கிறார்.

கதைகளின் இறுதிநிலை எது? கதைகளுக்கு இறுதிநிலைகள் இருக்க வாய்ப்பில்லை. ஒரு நல்ல கதை, கதைக்குள் ஒரு கதைக்கான இடைவெளியை விட்டுச் செல்லும். வாசகன் அதற்குள் தீராத பயணத்தில் இருப்பான். வாசகனுக்கும் கதை எழுதியவனுக்குமான பிரக்ஞை களைந்து வாசகனுக்கும் கதைக்குமான ஓர் உறவு கொண்டாடல் ஏற்படும். அப்படியொரு மனநிலை முதல் வாசிப்பில் கண்ணாடி எனக்கு ஏற்படுத்தவில்லை. நான் வாசிக்கும் ஒவ்வொரு கதைக்குள்ளும் நான் என்னைத் தேடிப் பார்க்கும்போது கொடுக்கும் விளைவு இது. நான் மனித உணர்வுகளில் ஒரு கதை பயணிக்க வேண்டும் என ஆழ்ந்து நம்புபவன். கதையின் அடுக்குகளில் மனித உணர்வுகள் வாசகனை அதன் உச்சத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டும் எனும் வாசகப் பிடிப்புள்ளவன். ஆகவே, புலி கலைஞன் போலவும், பயணம் சிறுகதை போலவும் அசோகமித்ரன் இக்கதையிலும் சத்தமான ஓர் உணர்வெழுச்சியை வைத்திருப்பார் என நினைத்து வாசிக்கும்போது அதற்கு எதிர்மறையான திசையில் கதை பயணிக்கிறது என்றுத்தான் சொல்ல வேண்டும்.

கண்ணாடி சிறுகதை அசோகமித்ரன் எப்பொழுதும் ஒரு நெருக்கடிக்குள்ளே வாழ்ந்து கழிக்கும் ஆண்களின் மன உலகை விரித்துக் காட்டுவதைப் போன்றுத்தான் இரண்டாவது வாசிப்பில் அறிய முடிகிறது. எந்த வேலையையும் நிரந்தரமாகச் செய்ய முடியாமல், வாழ்க்கையைத் திண்டாட்டத்திலேயே கழித்து முடித்த ஒரு பத்திரிகையாளர் தன் வாழ்நாளின் வயதால் விளிம்பில் நிற்கும் சூழலிலும் அலைக்கழிக்கப்படும், பொருந்தி நிற்க முடியாமல் தடுமாறும் நிலையைக் காட்டி கதை தொடங்குகிறது. அவருடைய ஆணவம் சட்டென உயிர்பெறுவதும் அதை இன்னொரு ஆண் முறியடிப்பதையும்கூட அசோகமித்ரன் கதைக்குள் காட்சிகளின் வழியாகக் காட்டுகிறார்.

ஆண்களின் உலகம் எதனுடனும் பொருந்தி நிற்க முடியாமல், திருப்தி கொள்ள முடியாமல், வாழ்நாள் முழுவதும் தனக்கான ஆணவத்தை அதிகாரத்தைத் தேடி திசையில்லாமல் அலைந்து கொண்டிருக்கும். அதுவும் வயதான ஆண்களுக்கும் பெண்களுக்குமான வாழ்வில் துணையில்லாமலும் வாழ முடிந்தவர்கள் பெண்களாக இருப்பார்கள். வீட்டில் ஒரு தனித்த பாட்டி பலநாள் உயிருடன் வாழ்வதைப் பார்த்திருப்போம். ஆனால், துணையில்லாமல் பிள்ளைகளுடன் நிம்மதியாக வாழும் ஒரு தனித்த தாத்தாவைப் பார்ப்பது அரிதாக இருக்கும்.

ஆணாதிக்க சமூகத்தில் தனக்கு அதிகாரம் உண்டு என அழுத்தமாக நம்புபவர்கள் ஆண்கள். கொடுக்கப்படவில்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட வயது வந்ததும் தன் அம்மாவை அதட்டி ஆட்கொள்வதிலிருந்து ஓர் ஆண் தனக்கான அதிகாரத்தைப் பெற்றுக் கொள்கிறான். யாரும் அவனுக்குக் கொடுக்க வேண்டியதும் இல்லை. ஆகவே, அதனைப் பிடித்து வாழ்நாள் முழுவதும் தொங்கிக் கொண்டிருக்கும் கொஞ்சம் பிசிறடித்தாலும் தடுமாறி உருக்குழைந்து போகும் மிகவும் பலவீனமான மன அஸ்திவாரத்தைக் கொண்டவர்களே ஆண்கள் என நினைக்கத் தோன்றுகிறது. அப்படியொரு திருப்தியில்லாத, வெறுமையும் அழுப்பும் நிறைந்த ஓர் ஆணின் அகவுலகத்திற்குள் இக்கதை பயணிக்கிறது. வரண்டுவிட்ட ஒரு தொழில்நுட்பம் போல, கரகரவென பாடும் ஒரு வானொலியைப் போல, தட்டினால் ஓங்கி அடித்தால் சட்டென சத்தமிட்டுவிட்டு மீண்டும் காணாமல்போகும் பழைய தொலைக்காட்சியின் ஓளியைப் போல, வரட்சிமிக்க கடைசி நம்பிக்கையை ஒற்றைக் கையில் சுமந்து திரியும் ஒரு சராசரி ஆணை இக்கதையில் அசோகமித்ரன் காட்டுகிறார்.

கொஞ்ச பேர் மட்டும் வாசிக்கும் ஒரு முக்கியமான பத்திரிகைக்கு விளம்பரம் கேட்டு ஒரு நிறுவனத்திற்குச் செல்கிறார். அவரிடம் ஒரு தீர்க்கமான புலம்பல் மட்டுமே இருக்கிறது. இருப்பினும் ஆண் தன் அதிகாரத்தை நழுவவிடமாட்டான். எதாகிலும் ஒருவகையில் தன்னை நிரூபித்துக் கொள்ள வேண்டும் எனத் துடிப்பவன். அவருக்கு அத்தனை வெறுப்பிருந்தபோதும் தன்னை விட கீழான ஒருவனை அதாவது வாடகை கார் ஓட்டுனரிடம் தன் அதிகாரத்தைக் காட்டுகிறான்.

அதேபோல இன்னொரு ஆண் இன்னொரு சூழலில் இவனிடம் அதிகாரத்தைப் பாவிக்கிறான். தன்னுடைய அதிகாரத்தின்பால் அத்தனை ஆணவம் கொண்ட அவனுடைய இருப்பு அவ்விடத்தில் தடுமாறுகிறது. அதற்காகத் தன்னையே அலைக்கழித்துக் கொள்கிறார். இத்தனை அதிகாரமிக்க, அதிகாரத்தின் நூலிழையைப் பிடித்துத் தொங்கும் ஓர் ஆணைக் காட்டுவதைப் போல, தன்னால் எந்த முடிவும் எடுக்க முடியாமல் பிறரின் நிழலில் வாழும் ஆணையும் கதையாசிரியர் காட்டுகிறார். அந்த விளம்பர நிறுவனத்தின் அதிகாரி, தனக்கு எந்த அதிகாரமும் இல்லை; அதிகாரத்தின் நிழலில் வாழும் ஒரு சராசரி எனக் காட்டி நிற்கிறார். மூடிய கதவுக்கு மேலாக ‘ஆண்கள்’ என எழுதியிருந்தது என கதை முடிகிறது. ‘ஆண்கள்’ எனத் தனித்து எழுதப்படுவது கழிவறையில்தான். ஆகவே, அசோகமித்ரன் அவ்விடத்தில் ஓர் ஆழமான விமர்சனத்தைச் சத்தமில்லாமல் வைத்துவிட்டு கதையை முடிக்கிறார். முடிந்த அவ்விடத்திலிருந்து கதை சட்டென வேறொரு திறப்பை உருவாக்குகிறது.

கதையின் அக்கடைசி வரி கதையின் அழுத்தத்தைக் கூட்டுகிறது. அது ஒட்டுமொத்த கதையைத் தாங்கி நிற்கும் வரி. கதையில் வரும் அவருக்குப் பொருந்தாத கோர்ட்டு, அவரின் நுனிவிரலையும் கடித்து கொண்டு நிற்கும் பூட்ஸ் என தலையிலிருந்து கால்வரை ஆண்களுக்கு எப்பொழுதும் எதுவுமே பொருந்தி வழிவிடுவதில்லை என்பதைக் காட்டுகிறது. எல்லாம் பருவங்களிலும் ஏதோ ஒருவகையான சிக்கலுடன் திருப்திக் கொள்ளாமல் வாழும் ஒரு ஜீவன் ஆண்களே எனச் சொல்லத் தோன்றுகிறது.

ஜூன் சொல்வெளி கலந்துரையாடலில் படைக்கப்பட்ட கட்டுரை

கே.பாலமுருகன்

சிறுகதை: மண்டெ

 

PAINTINGSimage3

லோரோங்னா ரோடு. அதுவும் லோரோங் 64ன்னா எல்லோருக்கும் ஒரு பயம் இருக்கும். நாலு வீடு பெரிய மண்டைங்களோட வீடு. எல்லாம் கஞ்சா தவுக்கே. எவனாவது படம் காட்டெ வந்தானா அவன் மோட்டரெ எரிச்சுருவாங்க. ஆள் மாட்டனா அடிச்சி தூக்கிக் காட்டுல போட்டுருவாங்க.

அதுல ஒரு மண்டையெ பாக்கத்தான் பெரிய ஆஸ்ப்பித்திரிக்கு வந்துருக்கென். ரோட்ல லாரிக்காரன் மோதிட்டு ஓடிட்டான். கஞ்சா பாவ் பண்றவனுக்கெல்லாம் இதான் கதின்னு சொல்லிட்டு பொண்டாட்டி பிள்ளைங்களும் பாக்கவே வரல. கேக்கப் போனென். வீட்டுல யாரும் இல்ல. சொந்தக்காரனுங்களும் யாரும் இல்ல. கூட்டாளிங்களுக்கும் தெரிஞ்சவனுங்களுக்கும் இருக்கறப்பல்லாம் கொடுத்துச்சி. கொடுத்து என்ன பண்ண? எல்லாம் கஞ்சா காசு. நிக்காது. பாவத்தையும் கழுவாதுன்னு லோரோங் 64ல்ல நிறைய சாபம்.

மேல, அஞ்சாம் நம்பர் வார்ட்டுல நுழைஞ்சோனே பாக்கலாம். மூஞ்சி கிழிஞ்சி அங்கங்க தைச்சிருப்பாங்க. ஒரு கால் இல்ல. எடுத்தாச்சு. டையர ஏத்திட்டானுங்க. வயிறு பொடைச்சிக்கிட்டு இருக்கும். அதுதான் அந்த லோரோங் 64 மண்டெ. ரோட்டு வாசல்லே மோட்டர நிப்பாட்டிட்டு எந்நேரமும் உட்காந்துக்கும். கூட ரெண்டு பேரு எப்பவும் இருப்பானுங்க. அந்த லோரோங்க்கு காவல் தெய்வம் மாதிரி அங்கேத்தான் எல்லாமே. பீர் போத்தல்லே குடும்பம் நடத்திட்டு விடியக்காலைல வீட்டுப் பக்கம் போகும்.

லோரோங் 64ல்ல அதுக்குன்னு ஒரு பயம் இருந்துச்சு. அதோட அப்பாவும் முன்ன அப்படித்தான். தூக்குல போட்டுட்டானுங்க. இதுவும் நாலு தடவ கேங் சண்டெ கேஸ்ல உள்ளப் போய்ட்டு வந்துருக்கு. யாரும் சொல்லித் தர்லெ. வீட்டுல ரத்தம் பாத்த வளப்பு. என்ன பண்றது?

“மண்டெ! மண்டெ! இப்ப எப்படி இருக்கு?”

மண்டைக்கிட்ட இருந்து பதிலே இல்ல. அப்படியே மல்லாக்க பாத்துக்கிட்டு மூச்சை இழுத்துப் பிடிச்சி சுவாசிச்சிக்கிட்டு இருந்துச்சி. உள்ள போய்ட்டு மீண்டும் வெளில வர்ற காத்து திணறிக்கிட்டு இருந்துச்சி. கண்ணு ரெண்டும் உள்ள போயிருச்சி. ஓரக் கட்டில். சன்னலுக்கு வெளியெ வெளிச்சம் அதோட மூஞ்சில பட்டு சுத்தம் செஞ்சிக்கிட்டு இருந்துச்சி. பச்சை உடுப்பு போட்டுருக்கு. ஆஸ்பித்திரி உடுப்பு அதுக்குப் பத்தல. பாவம். பெரிய உடம்பு, இன்னும் உப்பிருச்சி வேற. முட்டிக்குக் கீழ கொஞ்சம்தான். இல்லாத காலு மனசுல துருத்திக்கிட்டு இருந்துச்சி. போர்வையெ இழுத்து மூடிட்டேன். முட்டிக் கிழிஞ்ச ஜீன்ஸோட மண்டெய பாத்த ஞாபகம். மனசுக்கு முடிலெ.

‘ஸ்ட்ரோக்’ வரலாம்னு சொல்லிட்டாங்க. பக்கத்து படுக்கைல இருந்த மலாய்க்கார தாத்தா சொல்லிக்கிட்டு இருந்தாரு. மண்டெ மோட்டர்ல ஜம்முன்னு தெறிக்கற காட்சி மனசுல வந்துட்டு வந்துட்டுப் போய்க்கிட்டு இருந்துச்சி.

“மண்டெ? மண்டெ விளங்குதா?”

மூச்சு மட்டும் சீரா இல்லாம திணறுனுச்சி. முகத்துல உயிரெ இல்ல. வெறும் உடம்பு. அசையாத அந்த உடம்பெ ரொம்ப நேரம் பாத்துக்கிட்டே இருக்கென். மேட்டு வீட்டுல உள்ள சிவாவெ தனியாளா தூக்கிட்டு வந்து லோரோங் 64ல்ல வச்சு அடிச்சி ரோட்டுல போட்டு மூஞ்செ தேய்க்கும்போது மண்டைக்கு நிகர் மண்டைத்தான்னு பேசிக்கிட்டாங்க.

மண்டெ காடி திருட்டு, கஞ்சா, ஆளைக் கடத்துறதுன்னு மும்முரமா இருந்தப்பத்தான் இந்தப் பெரச்சன. சிகரேட் வாங்க நிப்பாட்டிருக்கு. போன் அடிச்சிருக்கு. பேசிக்கிட்டெ ரோட்டு ஓரத்துல நிண்டுருச்சி. அது லோரி ஒதுங்கர வலவு. சட்டுன்னு தெரிஞ்சிக்க முடியாது. சின்ன லோரோங்.

மண்டென்னு இருந்த பேரு ‘கஞ்சா மண்டென்னு’ மாறி எல்லாத்துக்கும் பழகிடுச்சு. ஆனா, நான் மண்டென்னுத்தான் கூப்டுவேன். அப்பா செத்துப் போனப்ப ரோட்டுல நிண்டென். மண்டெத்தான் கூட்டிப்போய் சீனன் கடையில வேல வாங்கிக் கொடுத்துச்சி. வேற ஒன்னும் தெரியாது. எடுப்பிடி வேலயும் கொஞ்சம் செஞ்சென். அப்ப்ப்ப காசு இல்லன்னு சொன்னா பாக்கேட்டுல அஞ்சு பத்து திணிக்கும். சூருல சிவந்த கண்ணு அதுக்கு. அழுந்த கண்ணு. ஆனா, மண்டெ அழுந்ததெ இல்ல. போலிஸ்ல வச்சு அடிச்சி பாதி உயிர் உடம்புல இல்ல. நெஞ்செ நிமித்திக்கிட்டு நிக்கும். பயப்படாது. ஆனா, இப்ப சொத்த உடம்பா போச்சு. காலும் இல்ல. கையும் நரம்பு பிச்சிக்கிச்சாம்.

“மண்டெ! மண்டெ! நான் பேசறது கேக்குதா?”

பதிலே இல்ல. அது போட்டுருந்த ஜீன்ஸ் மடிச்சி ஒரு பிளாஸ்டிக் பைல கட்டி வச்சிருந்தாங்க.

“யாரும் பாக்க வந்தாங்களா?”

பக்கத்து படுக்கையில இருந்தவரு இல்லைன்னு தலைய மட்டும் ஆட்டனாரு. அதுக்குமேல அங்க இருக்க பிடிக்கல. கீழ இறங்கிட்டென். மண்டெ எங்கன்னு யாரும் கேக்க மாட்டாங்கன்னு நினைக்கும்போது மனசு பிச்சிக்கிட்டுப் போலாம்னு தோணுச்சி. விருவிருன்னு நடந்தென்.

கே.பாலமுருகன்

குழந்தைகள் சினிமா: தனிமை குழந்தைகளின் எதிரி

“ஜப்பானிய சிறுவர்களுக்கும் இளைஞர்களுக்கும் விநோதமான ஒரு பழக்கம் தொடங்கியிருந்த காலக்கட்டம். ஒரு தனிமையான அறைக்குள் தன்னைச் சுயமாக அடைத்துக்கொண்டு வீட்டிலுள்ள மனிதர்களைச் சந்திக்காமல், பள்ளிக்குச் செல்ல விருப்பமில்லாமல் 9 வருடத்திற்கு மேலாக சுயவதைக்கு ஆளாகியிருந்தார்கள். இவர்களை ஜப்பானிய அரசு ‘hikikoman’ என அடையாளப்படுத்தியது.

lonely kid 2

ஒவ்வொரு வீட்டிலும் நாம் அடிக்கடி வீட்டிற்கு வெளியேயும் அல்லது வீட்டிற்குள்ளேயும் பரவலாகக் காணமுடியாத குழந்தைகள் இருக்கவே செய்கிறார்கள். உறவுக்காரர்கள் நண்பர்கள் வீடு தேடி வரும்போது அறைக்குள் சென்று கதவைச் சாத்திக்கொண்டு நம் பார்வையிலிருந்து நீங்கிவிடும் குழந்தைகளைப் பார்த்ததுண்டா? அவர்கள் எப்பொழுதும் சமூகத்திடமிருந்தும் சக மனிதர்களிடமிருந்தும் தனித்திருக்கவே விரும்புகிறார்கள். அவர்களுக்கு மிகவும் நெருக்கமான தேர்வுகள் உள்ளன. தன் அறை மேசை, அறை ஓவியங்கள், தன்னுடைய தலையணை என அவர்களின் உலகத்தைச் சுருக்கிக்கொண்டு அதிலிருந்து வெளிவராமல் நாள் முழுக்க மௌனத்தைத் தரிசித்தப்படியே தனக்குண்டான வேலையில் மூழ்கிக்கிடப்பார்கள். இதைத்தான் anti-social syndrome என்கிறார்கள். இது ஒருவகையான மன அமைப்பு பிரச்சனை என்றும் உளவியல் தீர்க்கமாக நம்புகிறது.

இதே பிரச்சனையைக் கல்வி உலகம் ‘introvert’ என அடையாளப்படுத்துகிறது. யாருடனும் பேசுவதற்கும் பழகுவதற்கும் தன்னம்பிக்கையற்ற மனநிலையைக் கொண்டிருக்கும் மாணவர்களையும் தைரியமாகக் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ள முடியாமல் தன்னைத் தானே பதுக்கிக்கொள்ளும் மாணவர்களையும் அப்படி வகைப்படுத்துவார்கள். Introvert and anti social syndrome இரண்டும் ஒரு குழந்தைக்கு மன அளவில் நோய்க்குறிகளை ஏற்படுத்தும் பிரச்சனைகளே. என் வாழ்நாளில் அப்படியொரு சமூகத் தொடர்பு முரண் கொண்ட சில நண்பர்களைச் சிறுபிராயத்தில் சந்தித்துண்டு.

முதலாவது: பேய்வீட்டில் இருந்த முகுந்தன்

நாங்கள்  கம்பத்தில் மூன்று வருடங்கள் தங்கியிருந்தபோது எங்களுக்கு எதிர்வீட்டில் ஒரு மிகப்பெரிய பேய் வீடு இருந்தது. மற்ற வீடுகளைக் காட்டிலும் இந்த வீடு பரவலான நிலத்தையும் விநோதமான வீட்டுக் கட்டுமானத்தையும் கொண்டிருந்தது. வீட்டின் முன்வாசல் இரும்பு கதவிலிருந்து அந்த வீட்டின் வாசல் கதவிற்கு சராசரி ஒரு சிறுவன் ஓடினால் போய் சேர்வதற்கு எப்படியும் இரண்டு நிமிடங்கள் ஆகிவிடும். வீடுகள் இருந்த தெருவைக் கவனிக்காதபடிக்கு வாசல் கதவு வேறு பக்கமாக அமைக்கப்பட்டிருந்த விதம் வித்தியாசமாக இருந்தது. இது போன்ற வாசலைப் பார்க்கும்போதெல்லாம் அந்த வீட்டு மனிதர்கள் யாரிடமிருந்தோ தள்ளி இருக்கவே விரும்புகிறார்கள் எனத் தோன்றும்.

முகுந்தனின் வீடும் அப்படித்தான் எங்களிடமிருந்து விலகியிருந்தது. மதியம் பள்ளி முடிந்து முகுந்தன் முன்வாசல் கதவைத் திறக்கும் சத்தம் கேட்டு வாசலுக்கு ஓடிவருவேன். புத்தகப்பையைத் தலையில் மாட்டிக்கொண்டு வீட்டை நோக்கி நடந்துகொண்டிருக்கும் அவனுடைய புறமுதுகில் விழும் என் பார்வை அதற்கு மேல் நீளாது. மறுநாள் அதிகாலையில் வீட்டிற்கு முன் வந்து நிற்கும் பேருந்தில் ஏறுவதற்கு மட்டுமே மீண்டும் வெளியே வரும் முகுந்தனின் மீது சட்டென ஆர்வம் கூடியது. அவனிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிவிட வேண்டுமென இலட்சியம் கொண்டிருந்தேன். ஆனால் ஒவ்வொருமுறையும் எனக்கும் அவனுக்கும் மத்தியில் விழுந்துகிடந்த சோம்பலான மதியத்தைத் தவிர வேறொன்றுமில்லாமல் நகர்ந்தது காலம். முகுந்தனின் அப்பா வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருந்தார். அவன் சிறுவயதாக இருக்கும்போதே அவர் சிங்கப்பூர் வேலைக்குச் சென்றுவிட்டாராம். அவனுக்கு அப்பாவை நீங்கிய வாழ்வில் சுவாரஷ்யம் இல்லாமல் போயிருக்கக்கூடும். அவனை அவன் சுருக்கிக்கொள்ள இதுவும் காரணமாக இருக்கலாம்.

காலையில் வேலைக்குப் போய்விட்டு இரவில் வீடு திரும்பும் அவனின் அம்மாவும் அவர்களுடன் இருக்கும் ஒரு தாத்தாவும் என அந்தப் பேய் வீட்டின் மனிதர்கள் மிகவும் சொற்பமானவர்களே. அவனின் அப்பா இருக்கும்போது அவருடைய நண்பர்கள் அடிக்கடி வீட்டுப் பக்கம் வருவது மாலையில் அந்தப் பெரிய இடத்தில் எல்லோரும் பூப்பந்து விளையாடுவது எனப் பேய்வீடு எப்பொழுதும் ஆள்நடமாட்டங்களுடன் பரப்பரப்பாகத்தான் இருந்திருக்கிறது. அவர் வெளிநாட்டிற்குச் சென்றவுடன் பெரிய வீடு பேய்வீடானாது. குடும்பத் தலைவர் இல்லாத வீடு எப்படி இருக்க வேண்டும் என இந்த ஆணாதிக்க சமூகம் வரையறுத்து வைத்திருப்பதைப் போலவே சிறுக சிறுக அவர்களின் வீடும் அப்படியே மாறிப்போனது. இரவு குறிப்பிட்ட நேரத்திற்குள் எல்லோரும் வீட்டுக்குள் இருக்க வேண்டும், முன்வாசல் கதவை எப்பொழுதும் சாத்தியே வைத்திருக்க வேண்டும், வெளியாட்கள் வாசலைத் தாண்டி உள்ளே வந்து பேசக்கூடாது என ஆண்கள் இல்லாத வீட்டிற்கு இப்படிப்பட்ட விதிமுறைகள் இருக்கின்றன. சமூகத்தை உற்றுக் கவனிக்கும் ஒருவன் அடையக்கூடிய புரிதல் இது.

முகுந்தனும் அவனுடைய அம்மாவும் இப்படித்தான் சமூகத்திடமிருந்து விலகியிருக்கத் துவங்கினார்கள். முகுந்தன் பள்ளி பேருந்திலிருந்து இறங்கி வீட்டிற்குள் நுழைவதற்கு முன் தன் வீட்டு நிலத்தின் மண்ணைப் பார்த்து ஏதோ பேசிக்கொண்டே போவதைக் கவனித்திருக்கிறேன். அவன் யாருடன் பேசிக்கொண்டிருக்கிறான் என அப்பொழுது தெரியாததால் அவனுக்குப் பேய்ப் பிடித்திருக்கிறது என நானும் பலரிடம் சொல்லியிருக்கிறேன். அவனுடன் பேச முடியாமல் போன என் இயலாமைக்கு நியாயம் கற்பிக்க நான் ஏற்படுத்திக்கொண்ட வதந்தி அது. தினம் அவனுடைய வருகையைத் தரிசிக்க அல்லது கவனிக்க எனக்கு ஆவல் இருந்தது.

முகுந்தன் வீட்டுக்கு வெளியில் வந்து விளையாடியதும் கிடையாது. அவனுக்கென்று எந்த விளையாட்டும் இல்லை. ஒரு கொடூரமான தனிமையை அணைத்துக்கொண்டு அவனுடைய மர்மமான அறையிலேயே அவன் மௌனித்திருக்கக்கூடும். தெருவிலிருந்து வீட்டின் எல்லை கொண்டிருக்கும் தூரம் அவனைப் பற்றி அனுமானிக்க விடாதப்படிக்குத் தடையாக இருந்தது. தூரத்தைக் கடந்து முகுந்தனை அடையாத எனது பொழுதுகள் தீர்ந்துபோக அங்கிருந்து நாங்கள் வேறொரு இடத்திற்கு மாறி வந்துவிட்டிருந்தோம். என்றாவது தனிமையில் அமர்ந்திருக்கும் யாரையாவது சந்திக்க நேர்ந்தால் முகுந்தனின் ஞாபகம் வரும்.

இரண்டாவது: மேட்டு வீட்டுக் குழந்தைகள்

lonely kid 1

கம்போங் ராஜாவில் கொஞ்ச காலம் வசிக்கும்போது எங்களின் கம்பத்திற்கு அருகாமையில் நான்கைந்து வீடுகள் ஒன்றாக மேட்டில் இருந்தன. அதை மேட்டு வீடு எனத்தான் அழைத்துப் பழகியிருந்தோம். அம்மாவிற்குப் பழக்கமான ஒரு பாட்டி அங்கு இருப்பதால் எப்பொழுதாவது அங்குச் சென்று வருவேன். அந்தப் பாட்டி பலருக்குக் கடன் கொடுத்திருப்பதால் அடிக்கடி மேட்டு வீட்டைவிட்டு கடன் வசூலிக்கவே வெளியே வருவார். அம்மா கூட்டுப் பணத்தைக் கட்டுவதற்காக அங்கே செல்லும்போது நானும் மேடேறி அவருடன் செல்வேன். அங்குள்ள நான்கு வீடுகளுமே எப்பொழுதும் இருளில்தான் கிடக்கும். பாட்டி வீட்டுக்கு வெளியிலுள்ள பெரிய நாற்காலியில் அமர்ந்துகொண்டு அவருடைய கணக்கு புத்தகத்தைச் சரிப்பார்த்துக் கொண்டிருப்பார். அவரை நான் அங்கு 5 முறை பார்த்திருக்கிறேன். ஒவ்வொருமுறையும் அவர் அந்த நாற்காலியில் அமர்ந்துகொண்டு அதே புத்தகத்தைச் சரிப்பார்த்துக்கொண்டிருப்பார். இந்தக் காட்சி என்றுமே மாறியதில்லை.

அங்குள்ள எல்லாம் வீடுகளும் நீண்ட மௌனத்தில் உறைந்திருக்கும். மனிதர்களின் அசைவே இல்லாத அமைதி. பாட்டி மட்டும் பக்கத்து வீட்டில் மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் அடிக்கடி கடன் வாங்கி வாழ்வை நகர்த்தக்கூடிய சூழல் என்பதாலும் அவர்கள் யாரும் வீட்டைவிட்டு வெளியில் வரமாட்டார்கள் எனச் சொன்னார். முன்கதவு பூட்டிக்கிடக்கும் அந்த வீட்டைப் பார்த்தேன். கதவு முழுக்க குழந்தைகளின் நகம் சுரண்டிய வடுக்கள் இருந்தன. ஒருமுறை பாட்டியைப் பார்க்க அங்குச் சென்றபோது, சன்னல் வழியாக வெளியே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சிறுமியைப் பார்த்தேன். என்னைக் கண்டதும் அவளுடைய கண்கள் அகல விரிந்தன. ஆச்சர்யமாக என்னைப் பார்த்தவள் சட்டென சன்னலைச் சாத்திவிட்டு உள்ளே போய்விட்டாள். அவளுக்குப் பின்புறத்தில் தெரிந்த அறை பயங்கர இருளில் அடைந்துகிடந்தது.

கடைசியாகப் பார்த்த அவள் பார்வையை இப்பொழுது மீண்டும் மீட்டுணரும்போது அது மனிதர்களைப் பார்த்து மிரளும் ஒரு பயத்தையும் பதற்றத்தையும் கொண்டிருந்ததை உணர முடிகிறது. அவளுடைய வீட்டின் பெரியவர்கள் தன் இருப்பைப் பாதுகாத்துக்கொள்ள வீட்டில் வளரும் குழந்தைகளை அறைக்குள்ளே வைத்திருக்கிறார்கள். அறைக்குள்ளேயே விளையாடிக்கொண்டு, படுத்துறங்கி, அறைச்சுவரில் கிறுக்கிக் கொண்டு பகலைப் பற்றியும் வெளியில் இருக்கும் உலகத்தைப் பற்றியும் எந்தக் கவலையுமில்லாமல் இருக்கிறார்கள். இப்படி வாழும் குழந்தைகள் சமூகத்திடமிருந்து நீக்கப்பட்டு வளர்க்கப்படுகிறார்கள். தூரமாக ஓடுவது பற்றியும் மனிதர்கள் எத்தனை விதமாகச் சிரிக்கிறார்கள் என்பதைப் பற்றியும் தெரியாமல் அந்த மேட்டு வீட்டுக் குழந்தைகள் இருந்திருக்கிறார்கள் எனச் சொன்னால் யாராவது நம்புவார்களா?

தாய்லாந்து சினிமா

குழந்தைகளின் வாழ்வையும் அவர்களின் அகச்சிக்கலையும் அமானுடமான முறையில் சினிமாவின் வழி பதிவு செய்து உலகக் கவனத்தை ஈர்க்கும்வகையில் செயலாற்றி வருவது தாய்லாந்து சினிமா துறையாகும். கொரியாவிற்கு அடுத்து பேய்ப்படங்களை அதன் கூர்மையான அவதானிப்புடன் தரமாக வாழ்வுடன் மிகவும் நெருக்கமாகக் கொண்டு வந்து பூதக்கண்ணாடியில் காட்டி அச்சுறுத்தும் தொழில்நுட்ப கலை வேலைப்பாடுகள் தாய்லாந்து சினிமா நுட்பங்களில் ஒன்றாகும்.

2010 ஆம் ஆண்டு ’13 beleve’ and ‘the body’ போன்ற பிரபலமான படங்களை இயக்கிய இயக்குனரின் மூன்றாவது படைப்பாக வெளிவந்த படம்தான் பேய்ப்பிடித்த அறை (haunted room). ஜப்பானில் சிறுவர்களுக்கு நிகழ்ந்த மனநோய் குறித்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இயக்கப்பட்டப் படம் இது. ஆகையால் ஜப்பானிய நிலப்பரப்பின் தாக்கமும் அங்குள்ள குழந்தைகளின் அக மன வளர்ச்சி பற்றிய குறிப்புகளும் மேற்கோளாக எடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

கதையின் மையப்பாத்திரங்கள் சொற்பமானவர்களே. ஒரு சூன்யமான வீட்டுக்குள் நடப்பதுதான் கதை. அதுவும் நாம் படத்தின் சில காட்சிகளில் மட்டுமே பார்க்க முடிந்த சிறுவனான ‘தொன்’தான் கதையின் மையம். தொலைக்காட்சி நடிகையான sinjai plengpanich கணவனைப் பிரிந்து தன் மகனுடன் வாழ்பவள். இரவில் ஆபாச சீடிக்களை விற்பனை செய்பவளாகவும் வருகிறாள். அவளுக்கு மிக நெருக்கமான நண்பன் ஒருவன் இருக்கிறான். அவனை அழைத்துக்கொண்டு தன் வீட்டிற்குச் செல்லும் மூலமே நம்மையும் இயக்குனர் அவளின் சூன்யம் அடர்ந்த வீட்டிற்குள் அழைத்துச் செல்கிறார்.

வீடு முழுக்க அமானுடமான அதிர்வு இருந்துகொண்டே இருக்கிறது. வீட்டினுள் வரும் நண்பனிடம் அறைக்குள் கடந்த 5 வருடமாக தன்னை அடைத்துக்கொண்டு உள்ளேயே இருக்கும் மகனைப் பற்றி சொல்லத் துவங்குகிறாள். அவனுக்கு இது வித்தியான ஒன்றாகத் தோன்றுகிறது. அதிர்ச்சியுடன் மாடி அறையில் கேட்கும் அவளுடைய மகனின் காலடி ஓசைகளைக் கூர்மையாகக் கேட்கிறான். அவனால் அதைப் பொருத்துக்கொள்ள முடியாமல், ‘எப்படி அவளுடைய மகன் இந்த நிலைக்கு வந்தான்’ எனக் கேட்டுக்கொண்டே இருக்கிறான். திடீரென ஒருநாள் தனக்கு வீடியோ கேம்ஸ் விளையாட வேண்டும் ஆகையால் தனிமையில் இருக்க வேண்டும் என உள்ளே நுழைந்தவன் அதன் பிறகு வெளியே வரவில்லை எனப் பதிலளிக்கிறாள். பலமுறை அவனை அங்கிருந்து வெளியாக்க அவள் செய்த முயற்சிகள் தோல்வியடைகின்றன. கூர்மையான கத்தியை கையின் நரம்பில் அழுத்திப் பிடித்துக்கொண்டு தன்னை வெளியாக்க முயன்ற அம்மாவின் செயலைத் தற்கொலை மிரட்டலின் மூலம் தடுத்துவிடுகிறான்.

அவளுக்கும் மகனுக்கும் இடையில் கடந்த 5 வருடமாக எந்த உரையாடலும் நிகழ்வதில்லை. கதவுக்கடியில் ஒரு தாளில் எழுதி வைத்தே இருவரும் பேசிக்கொள்கிறார்கள். அவனது அறை சன்னல்கள் எல்லாம் நாளிதழ்களால் மூடப்பட்டிருக்கின்றன. இருளைத் தின்று தீர்த்து 5 வருடம் உள்ளேயே கிடப்பதால் மிகவும் மூர்க்கமாக வளர்வதாகப் படத்தில் அவ்வப்போது காட்டப்படுகிறது. ஜப்பானில் இதுபோன்ற மனநோய்க்குறிகளைத் தற்கொலைக்கு வித்திடும் ஒரு பயங்கரமான மனச்சிதைவு எனச் சொல்கிறார்கள். ஜப்பானிய மரபில் தற்கொலை என்பது கௌரமான ஒன்றாகும் என வரலாற்றில் படித்ததுண்டு. தற்கொலை செய்துகொள்வதை அவர்கள் உன்னதமாகப் போற்றுகிறார்கள். போர் வீரர்கள் தன்னுடைய முதுமை காலத்தில் நோயின் வலி தாளாமல் தனது சமுராய் கத்தியிலேயே தன் உயிரை மாய்த்துக்கொண்டதுண்டு எனப் பல கதைகள் உள்ளன. ஆகையால் ஜப்பானில் கண்டறியப்பட்ட இந்தப் பழக்கமும் மனநோயும் இப்படத்தில் உக்கிரமாகவே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

மீண்டும் அவளுடைய வீட்டிற்கு வரும் அந்த நண்பன், அறையில் அடைந்து கிடக்கும் அவளுடைய மகனுடன் நட்பு கொண்டு அவனை வெளியாக்க முடியும் எனக் கூறுகிறான். அதன்படியே அவனது அறையை நோக்கி இருவரும் மாடியேறும் இடம் மிகவும் பயங்கரமானவை. ஒரு நிசப்தத்தை நோக்கி நம்மையும் நகர்த்துவது நடுக்கமாக இருக்கிறது. அவனுடைய அறையின் கதவுக்கு முன் நின்று அவனுடைய அம்மா அவனை அழைத்துப் பார்க்கிறாள். தன்னுடைய நண்பன் அவனுடன் நட்புக்கொள்ள ஆசைப்படுவதாகக் கூறுகிறாள். தன் அம்மா தன்னைக் காட்டிக்கொடுத்துவிட்டாள் எனக் கோபமடைகிறான் தொன். ஒரு துண்டு கடிதம் மட்டும் கதவுக்கடியிலிருந்து இரத்தக்கரையுடன் வருகிறது. ‘என்னை நெருங்க முயற்சிக்காதே நீ என் அம்மா இல்லை’ என அந்தத் தாளில் எழுதப்பட்டிருக்கிறது. அதைக் கண்ட அவள் கதறி அழுகிறாள். அந்தத் துண்டு கடிதத்துடன் அவனுடைய பெருவிரலும் துண்டிக்கப்பட்டு வைக்கப்பட்டிருப்பது மேலும் அதிர்ச்சியைக் கூட்டுகிறது.

சிறிது நேரத்தில் அவனுடைய அறைக்கதவு திறக்கப்படுகிறது. அவள் படியில் தவறி சரிந்துவிழ அம்மாவின் நண்பன் மட்டும் மகனிடம் மாட்டிக்கொள்கிறான். கையில் கத்தியுடன் வெளியே வரும் அவன், பாய்ந்து அம்மாவின் நண்பனின் உடலைப் பாகம் பாகமாக வெட்டுகிறான். படத்தின் இந்தக் கட்டம் மகனின் சிக்குண்ட உலகத்தையும் தனிமையும் மனச்சிதவின் உச்சத்தையும் காட்டுகிறது. இப்படிப் பல பேரைக் கொன்று அறைக்கு மேலேயுள்ள தனிப்பகுதியில் சாக்கில் கட்டிப் போட்டுவிடுகிறார்கள். அவள் வசிக்கும் வீட்டைச் சுற்றியுள்ளவர்கள் அவளது மகனைப் பற்றியும் அந்த அறையில் நிகழும் மர்ம சத்தங்களையும் நகர்வுகளையும் கேட்கத் துவங்குகிறார்கள். அவள் வீட்டுக்கு வந்து காணாமல் போனவர்களைக் காவல்துறை ஒரு பக்கம் தேடிக்கொண்டிருக்க, அவளுடைய முன்னால் கணவன் ஒருநாள் வீடு தேடி வருகிறான். படத்தில் இந்தக் கட்டம்தான் முக்கியமான திருப்பத்தைக் கொண்டிருக்கிறது. அதுவரை அவளுடைய (அம்மாவின்) பார்வையிலிருந்து காட்டப்பட்ட படம் இப்பொழுதும் மெல்ல உடைந்து நம் பக்கம் திரும்புகிறது.

உள்ளே நுழையும் கணவனைப் பார்த்து தன் மகனைத் தன்னிடமிருந்து பிரிக்க முயற்சி செய்யாதே எனக் கத்துகிறாள். அவளின் உடலைப் பிடித்து உலுக்கும் கணவன் ‘என்ன கனவுலகத்தில் இருக்கிறாயா?’ எனக் கேட்டுவிட்டு வரவேற்பறையின் கூரையில் தெரியும் ஓட்டையைப் பார்க்கிறான். உண்மை கதை மீண்டும் பின்னோக்கி செல்கிறது. சில வருடங்களுக்கு முன்னால் இதே வீடு கணவன் மனைவி சண்டையில் பிளவுற்றுக்கிடக்கிறது. எந்நேரமும் அவர்களுக்கிடையே விவாதங்களும் சண்டையும் அதிகரித்துக்கொண்டிருக்க அவளுடைய மகன் தொன் அவனை அறைக்குள்ளேயே அடைத்துக்கொள்கிறான். பெற்றோரின் கவனிப்பும் அக்கறையும் கிடைக்காமல் திடீரென ஒருநாள் இந்த முடிவுக்கு வந்து அறைக்குள் தன்னைச் சாத்திக்கொள்கிறான். அதன் பிறகு மகனை நெருங்க முடியாமல் அவள் தவிக்கிறாள். அவன் தன்னைப் பார்க்கவில்லையென்றாலும் பரவாயில்லை, ஆனால் கணவனின் நிழல்கூட அவன் மீது படக்கூடாது என எச்சரிக்கையாக இருக்கிறாள்.

ஒருநாள் இருவருக்குமிடையே கடுமையான சர்ச்சை ஏற்படுகிறது. பிரிவதற்கு முடிவெடுக்கும் அவர்கள் மகனை யார் பார்த்துக்கொள்வது என விவாதிக்கத் துவங்குகிறார்கள். பதற்றமடையும் அம்மா, தன் மகனைத் தன்னிடமே வைத்துக்கொள்வதற்காக கணவனைத் துப்பாக்கியில் சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டுகிறாள். இவர்களின் கைக்கலப்பை அறைக்குள்ளிருந்துகொண்டு ஓட்டையின் வழியாக மகன் தொன் பார்த்துக்கொண்டிருக்கிறான். வீட்டில் நிகழும் பிரச்சனைகளைப் பிள்ளைகள் இப்படித்தான் ஏதோ ஒரு மூலையில் இருந்துகொண்டு பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். துப்பாக்கியைப் பறிக்க முயலும் கணவனிடமிருந்து தப்பிக்க துப்பாக்கி முனையை அழுத்துகிறாள் அம்மா. அந்தநேரம் பார்த்து துப்பாக்கி மேற்கூரையை நோக்கி பார்க்க, குண்டு பாய்ச்சப்படுகிறது. மேல்மாடி அறையிலிருந்துகொண்டு இவையனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்த மகனின் கண்ணில் குண்டு பாய்ந்து அவன் அங்கேயே இறக்கிறான்.

படத்தில் காட்டப்படாத முதல் பாதி இதுதான். மகனின் மரணம். அதன் பிறகு மகனைக் கொன்றதற்காக அவள் மனம் சிதைகிறாள். மகன் இறந்துவிட்டதை இருவரும் மறைத்துவிடுகிறார்கள். காலம் நகர மகன் அறைக்குள்ளேயே இருக்கிறான் என அவள் நம்புவதோடு அனைவரையும் நம்ப வைப்பது கதையின் மற்றொரு பகுதி. கதையின் முதல் பாதியின் அடுக்குகளில் மர்மமாக ஒளிந்துகிடந்தது சிதைந்துவிட்ட அம்மாவின் மனப்பிரமை மட்டுமே. அதன் மூலம் அறைக்குள் அடைந்துகிடக்கும் தன் மகனை உருவகித்து நமக்கும் பிறருக்கும் அவள் குற்றவாளி அல்ல என நிருபிக்க முயல்கிறாள்.

இதில் முகத்தைக் காட்டாமல் நடித்திருக்கும் சிறுவன் தொன், அம்மாவாக நடித்திருக்கும் sinjai plengpanich இருவரும் அபாரமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். இசையும் ஒளிப்பதிவும் அறையின் மௌனத்தையும் வீட்டின் அமானுடனத்தையும் மிகக் கூர்மையாகக் காட்சிப்படுத்தி வலுவைச் சேர்த்துள்ளன.

ஜப்பானில் நிகழ்ந்த இந்தக் கொடூரங்களுக்குப் பின்னணியில் ஒரு திகில் கதையை நுழைத்துப் பார்த்து நமக்கு அச்சத்தையும் விழிப்பையும் ஏற்படுத்தியிருக்கிறார் இயக்குனர். குழந்தைகள் தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்வதன் மூலம் பெரியவர்களுக்குக் கடுமையான தண்டனைகளைத் தர முயல்கிறார்கள். வீட்டில் நிகழும் கொடுமைகளுக்கு முன் அவர்கள் நிகழ்த்தும் வன்முறையே ஜப்பானில் நடந்த இதுபோன்ற விநோதமான பழக்கங்கள்தான். அவர்களின் பொழுதுகளைச் சூன்யமாக்கும் எந்தக் காரியத்தையும் செய்யாமல் இருப்பதே அவர்களை மனரீதியில் காப்பாற்ற நாம் செய்யும் முக்கியமான பங்கு என்பதை உணர்கிறேன். ஒரு குழந்தை தன்னை ஓர் அறையில் தொடர்ந்து அடைத்துக்கொள்கிறது என்றால் அதற்கு இரண்டே காரணங்கள் மட்டுமே இருக்கக்கூடும் என்பதை நமக்குப் படம் காட்டுகிறது. Anti social syndrome or japan’s hikikoman.

குழந்தைகளின் அறைக்குள்ளிருந்து தனிமையின் சுவாசம் கேட்டுக்கொண்டிருக்கிறது. அவர்களின் வன்மமான மனநிலை சுவரில் கொடூரமாகக் கிறுக்கப்பட்டு சிதைக்கப்பட்டிருக்கும் ஓவியங்களில் தெரிகிறது. ஒழுங்கற்றுக் களைந்துகிடக்கும் அவர்களின் அறையில் எங்கோ யாருக்கும் தெரியாமல் பதுக்கி வைத்திருக்கக்கூடும் பெரியவர்களின் மீதான வெருப்பையும் கோபத்தையும்.

கே.பாலமுருகன்

(Teernthu Pogaatha venkaddigal)

துஞ்சல்: இருண்ட மனங்களுக்கிடையே அகவழிப் பயணம்

10154219_120401111688660_6989347643782688864_n

புனைவுகளைப் பற்றி பேசும்போது எனக்கு எப்பொழுதும் ஒரு தயக்கம் ஏற்படுவதுண்டு. சிறுகதைகள் சொற்களின் ஊடாக மனத்துடன் நூதனமாக உரையாடக்கூடியவை. உரையாடல் என்று சொல்வதைக் காட்டிலும் ஒரு முணுமுணுப்பு என வைத்துக் கொள்ளலாம். மனங்களில் அழுந்தி கிடக்கும் மௌனங்களுக்குத் திறவுக்கோளாக, சொல்லப்படாமல் வெகுநாள் தவித்துக் கொண்டிருந்த மன இருள்களின் மீது பாய்ச்சப்படும் வெளிச்சமாக ஒரு சிறுகதை வளர்ந்து வாசகப் பரப்பில் நிற்கிறது. அதனை எதிர்க்கொள்ளும் ஒரு வாசக மனம் தன்னுள்ளும் இருக்கும் ஏதோ ஒரு புள்ளியுடன் இணைகிறது. தன்னையும் திறக்கிறது.

ஒரு சிறுகதையின் மூலமாக ஒரு வாசகன் தன்னைக் காண்கிறான்; கதையினுள்ளே ஒரு அகவழிப் பயணத்தை மேற்கொள்கிறான். இதனை எப்படிச் செதுக்கி ஒரு அறிவார்ந்த விமர்சனமாக முன்வைப்பது எனத் தடுமாற்றமாக உள்ளது. ஆகவே, நானும் ஒரு நல்ல வாசகன்தான் என்ற தைரியத்தில் என்னைத் திறந்திவிட்ட பகுதிக்குள்ளிருந்து சு.யுவராஜனின் ‘துஞ்சல்’ சிறுகதையைப் பற்றி உரையாடுகிறேன்.

அம்மாவைத் தேடி 8 வயது தம்பியும் 10 வயது அண்ணனும் விடிவதற்கு முன்பான அரையிருளில் தோட்டத்திற்குப் புறப்படுகிறார்கள். அவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு அன்பு இல்லத்தில் தன் அம்மாவால் சேர்த்துவிடப்பட்டவர்கள். அப்பாவின் மரணத்திற்குப் பிறகு அம்மா தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறார். நன்றாக வளர்ந்துவிட்ட இவர்கள் இருவரையும் ஒருவேளை அவரால் சமாளிக்க முடியாமல் போயிருக்கலாம். அன்பு இல்லத்தில் சேர்த்துவிட்டுக் கருணையே இல்லாமல் போய்விடுகிறார். ஒரு வருடம் வந்து அவர்களைப் பார்க்கவும் இல்லை.

யுவராஜன் காட்டும் அந்த அன்பு இல்லத்திற்கும் எனக்குமே நெருங்கிய தொடர்புண்டு. நாங்கள் அவ்வன்பு இல்லம் இருந்த பகுதியில் இருந்த காலத்தில் அம்மா அங்குத்தான் காய்கறிகள் வெட்டும் வேலை செய்தார். ஒவ்வொருநாளும் காலையில் நானும் அம்மாவும் அங்குச் செல்ல பெரிய சாலையிலிருந்து இப்பொழுது இருக்கும் ஓர் ஆசிரியர் கழகத்தின் பணியாளர்கள் தங்கியிருந்த குடியிருப்பின் ஓரமோடும் காட்டு வழியாகத்தான் போய் வருவோம்.

போய்க்கொண்டிருக்கும்போதே கித்தா கொட்டைகள் வெடித்து விழும். சத்தம் கேட்டத் திசைக்கு ஓடி சட்டென கித்தா கொட்டையைப் பொறுக்கிக் கொள்வேன். அப்பயணம் ஒரு காட்டுவழிப் பயணமாக இருந்தாலும் அதன் எல்லை எங்குப் போய் முடியும் என்பது தெரிவதனாலேயே அம்மாவும் நானும் எவ்விதப் பயமும் இல்லாமல் பயணிப்போம். அம்மா ஏதும் பேசாமலே எதையாவது நினைத்துக் கொண்டே நடந்து வருவார். வாழ்க்கை அவரை மிகவும் மௌனமாக்கி வைத்திருந்த ஒரு காலக்கட்டம் அது. எதையாவது ஒரு விளையாட்டைக் கண்டுப்பிடித்து விளையாடிக் கொண்டே அந்த அன்பு இல்லத்தை அடைந்துவிடுவேன்.

அதன் பிறகு அங்குள்ள சிறுவர்களுடன் ஓடியாடி திரிவேன். சைக்கிள் போட்டி, ஊஞ்சலாட்டம், ‘ஆச்சிக்கா’ என பகல் நீளும். அப்பொழுது அங்கிருந்த சிறுவர்களுக்குத் தங்கள் வீடுகள் குறித்த ஏக்கங்கள் முகத்திலும் மனத்திலும் மீந்திருப்பதை அவர்கள் சொல்லும் கதைகளின் வழியாக அறிந்து கொள்வேன். அப்பொழுது அதனை அழுத்தமாக உணரும் மனநிலை இல்லாவிட்டாலும் இப்பொழுது வாசித்த ‘துஞ்சல்’ கதையின் வழியாக அவ்வாழ்க்கைக்குள் மீண்டும் ஒரு அகவழிப் பயணத்தை மேற்கொள்ள வாய்ப்புக் கிடைக்கிறது. அந்த அன்பு இல்லத்தைவிட்டுத் தப்பியோடிய சிறுவர்களின் கதைகளையும் பிறகாலத்தில் நாங்கள் கேள்விப்பட்டதுண்டு.

துஞ்சல் நம்முடன் பேசுவது குற்றச்சாட்டல்ல; ஒரு வாழ்க்கை. கைவிடப்பட்ட இரண்டு சிறுவர்களின் மனக்கொந்தளிப்பு. சிறியவன் அழுகையின் மூலம் அதனை வெளிப்படுத்துகிறான். பெரியவன் இறுக எழுப்பிக் கொண்ட தன்மூப்பின் வழி வெளிப்படுத்துகிறான். இரண்டுமே அம்மா என்கிற இருப்பின் தகர்க்க முடியாத வெவ்வேறு விளைவுகளே. எத்தனை ஆறுதல் சொன்னாலும், எத்தனை வியாக்கியானம் செய்தாலும், எத்தனை விவாதங்கள் செய்தாலும் அம்மா என்கிற உணர்வு; அம்மா என்கிற இருப்பு; அம்மா என்கிற தேடல் சமூகத்தின் பூர்வீகப் பழக்கமாக, அசைக்க முடியாத தேவையாக வழிவழியாகக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதனைத் துஞ்சல் ஒரு பயணமாகக் காட்டி நிற்கிறது.

இன்னொரு பக்கம் அத்தனை பூர்வீக புரிதல்களையும் உடைத்துக் கொண்டு துஞ்சல் காட்டும் அம்மா, நானும் சாதாரணப் பெண் தான் என வெளிப்படுகிறாள். அம்மா என்பதன் மீது இச்சமூகம் கட்டியெழுப்பியிருக்கும் அத்தனை பண்பாட்டுச் சுவர்களையும் தாண்டி யாருக்கும் உகந்தவையல்லாத; சமூக எரிச்சலுக்கு ஆளாகும் ஓர் எல்லைக்குள்ளிருந்து துஞ்சல் கதை காட்டும் அம்மா நிற்கிறார். ஒரு கணம் சிறுகதை அகத்தின் மன இருள்களைத் தீண்டுகிறது. இறுகக் கெட்டிப்போயிருந்த பல புரிதல்களை அசைக்கிறது. ஒரு சிறுகதை படித்து முடித்த பிறகு நம்மை ஏதாவது செய்திருக்க வேண்டும் அல்லவா? இக்கதையின் கடைசிப் பகுதி ஏற்படுத்திய அதிர்வலைகள் சாதாரணமாகத் தெரியவில்லை. இதுதான் வாழ்க்கை; இவ்வளவுத்தான் மனிதர்கள்; போங்கடா எனக் கதை முடிகிறது.

பல இடங்களில் சு.யுவராஜன் தன் அழகியல் நிரம்பிய காட்சிப்படுத்துதலின் வழியாகக் கதைவெளியை நெருக்கமாக்கிக் காட்டுகிறார். இச்சிறுகதை யுவராஜன் இவ்வருடம் எழுதியது என்பதால் அவருக்குள் இருக்கும் கதைச்சொல்லி இன்னும் கூர்மையான மனவெழுச்சியுடன் இருக்கிறான் என்பதை உணரவும் முடிந்தது.

இக்கதை மிகச் சிறந்த கதையா என எனக்குச் சொல்லத் தெரியவில்லை ஆனால், இக்கதையின் வெளிச்சம் என் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் காட்டிவிடுவதன் மூலம் என் வாசக மனத்தில் ஓர் எல்லைக்குள் சிறு அதிர்வை உண்டு செய்கிறது. வாசிக்கும் பலருக்கும் என்னைப் போல் அல்லாமல் வேறு சில திறப்புகளை; வேறு புள்ளியில் வேறொரு அனுபவத்தைக் கொடுக்கக்கூடும் என நினைக்கிறேன். இக்கதை ஓர் அகவழிப் பயணத்திற்கு நம்மைத் தயார்ப்படுத்துகிறது என்பதை மட்டும் கொஞ்சம் உரிமையுடன் சொல்லத் தோன்றுகிறது.

-கே.பாலமுருகன்

நேர்காணல்: எனது அல்ட்ராமேன் மனதில் உள்ள தீமையை எதிர்க்கும் ஆற்றலின் குறியீடு

10154219_120401111688660_6989347643782688864_n

கே.பாலமுருகன்: உங்கள் பின்புலனைப் பற்றி சொல்லுங்கள்?
சு.யுவராஜன்: அப்பா திரு.சுப்ரமணியம் அம்மா திருமதி. கண்ணகி. 4 தம்பிகள். சிறுவயதில் பாட்டி வீட்டில் வளரும் சூழல் ஏற்பட்டது. பாட்டி தாத்தா ஸ்கார்புரோ தோட்டத்தில் இருந்தனர். தாத்தா தொழிற்சங்கவாதி. நேர்மையானவர். அவரது நேர்மையால் பாட்டி இறுதிவரை தோட்டத்தில் முற்றிய மரத்தையே வெட்ட வேண்டியிருந்தது. தாத்தா நல்ல வாசகர். நாளிதழ், நூல்கள் எனப் படித்துக் கொண்டே இருப்பார். வீட்டில் ஒரு சிறு நூலகம் இருந்தது. என் மாமாமார்களும் நல்ல வாசகர்கள். நான் இராமாயணம் மகாபாரதம் போன்றவற்றை 12 வயதிற்குள் படித்தவன். 13 வயதில் தோட்டம் மூடப்பட்டு சுங்கைப்பட்டாணியில் ஒரு மலிவு வீட்டில் குடியேறினோம்.வாழ்க்கை மாற்றம் பெரிய அதிர்ச்சியாக இருந்தது. பெரும்பாலும் இந்த வயது அனுபவங்களைதான் நான் கதைகளாக எழுதியிருக்கிறேன். பிறகு மலாயாப்பல்கலைகழகத்தில் இயற்பியல் படிப்பு. பல்கலைக்கழகம் என் வாசிப்பிற்கு பெரிய தூண்டுதலாக இருந்தது. பல்கலைக்கழகத்தில் இருந்த தமிழ்நூலகம் நான் பெரிதும் நேசித்த இடம். 2003 மற்றும் 2004-இல் யூஎம் மற்றும் யூகேம்மில் நடந்த பேரவை கதைகள் போட்டியில் பரிசுகள் பெற்றேன். என்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை இதன்வழி உருவானதுதான்.

கே.பாலமுருகன்: உங்களுக்கு முதலில் சிறுகதையில் ஆர்வம் வந்தது எப்படி?
சு.யுவராஜன்: எனக்கு நிறைய எழுதுவது பிடிக்காது. எதையும் கச்சிதமாக தேவையான சொற்களை மட்டும் பயன்படுத்தவேண்டும் என்ற சிந்தனை இருந்தது. சொற்கள் மந்திரம் போன்றவை என்றே நம்புகிறேன். ஆனால் கவிதை எனக்கு வராது என்று கண்டிப்பாக தெரிந்தது. நான் எளிதில் உணர்ச்சிவசப்படுவன் அல்ல. ஆகவே சிறுகதைகள் எழுதினேன். ஆனால் சிறுகதை என்பது சின்ன கதை அல்ல என்ற தெளிவு அப்போதே இருந்தது. நான் பல்கலைக்கழகத்தில் தமிழின் முக்கியமான சிறுகதையாளர்களான புதுமைப்பித்தன், சுந்தர ராமசாமி, தி.ஜானகிராமன், ஜெயகாந்தன், வண்ணதாசன், வண்ணநிலவன், கு.அழகிரிசாமி, கந்தர்வன், அசோகமித்திரன், ஜெயமோகன் என வாசித்துத் தள்ளியிருந்தேன். ஆகவே அதன் வடிவம் பற்றி தெளிவு இருந்தது. இருப்பினும் நான் மனதிலேயே நிறைய சிந்தித்துவிட்டு தேவையானதை மட்டும் எடுத்து எழுதுபவன். ஆகவே குறைவாகவே எழுதினேன்.
கே.பாலமுருகன்: நீங்கள் எழுதிய முதல் சிறுகதைக்குப் பின்னணியில் ஏதும் சுய அனுபவம் இருக்கிறதா? அதைப் பற்றி சொல்லுங்கள்
:
சு.யுவராஜன்: நிச்சயமாக சுய அனுபவம் உண்டுதான். அப்போது பேரவை கதைகள் 17 அறிவிக்கப்பட்டிருந்தது. சிவா பெரியண்ணன் தான் இயக்குனர். என்னைக் கதை எழுதச் சொல்லித் தூண்டினார். நான் மாணவப் பிரிவிற்கு ஒரு கதையும் பொதுப் பிரிவிற்கு ஒரு கதையும் அனுப்பிபேன். ஆச்சரியமாக மாணவப் பிரிவில் முதல் பரிசும் பொதுப்பிரிவில் ஆறுதல் பரிசும் கிடைத்தது. இப்போது படித்து பார்த்தால் அவை முக்கியமான கதைகளே அல்ல எனத் தெரிகிறது. என்னுடைய சிறுகதை தொகுப்பில் அவை இடம் பெறவில்லை. எனக்கு சிறுகதை எழுத வருகிறது என்பதற்கு உத்வேகத்தை அளித்ததை தவிர அக்கதைகளுக்கு வேறு எவ்வித முக்கியத்துவமும் இல்லை.
கே.பாலமுருகன்: அல்ட்ராமேன் என்கிற தலைப்பை உங்கள் நூலுக்குத் தேர்ந்தெடுக்க எது காரணமாக அமைந்தது?
சு.யுவராஜன்: ஊதுவத்திப்பையன் என்ற கதை காணாமல் போனததால்தான் இத்தலைப்பை தேர்ந்தெடுக்க வேண்டியிருந்தது. ஊதுவத்திப் பையன் கதையை மீண்டும் நினைவிலிருந்து எழுதி பார்த்தேன். சில தருணங்கள் போனால் போனதுதான். ஆகவே அல்ட்ராமேன் கதையைத் தேர்ந்தெடுத்தேன். அல்ட்ராமேன் நம் இன்றைய சூழலின் குறியீடு. நம் மனதில் உள்ள தீமையை எதிர்க்கும் ஆற்றலின் குறியீடு. ஆனால் என்னுடைய அல்ட்ராமேன் வெற்றி பெறுபவனாக இல்லை. ஏன் தோல்வியடைகிறான் என்பதை நீங்களே கதையைப் படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள்.

 

12800129_112429995819105_6757859973807322778_n

கே.பாலமுருகன்: இத்தொகுப்பில் நீங்கள் தொகுத்திருக்கும் அச்சிறுகதைகளுக்குள் ஏதும் ஒற்றுமை உண்டா?
சு.யுவராஜன்: பொதுவாக தோட்டப்புற வாழ்வு, சிறுவர்கள், அப்பா, அம்மா என்பதெல்லாம் என் எழுத்தின் பின்னணி எனலாம். ஆனால் இவை எனக்கு ஒரு ஊடகங்கள்தான். ஒரு பறவை பறப்பதற்கு சிறகை அசைப்பது போல நமக்கு எழுத சில விஷயங்கள் தேவைப்படுகின்றன. இருப்பினும் பறத்தல்தான் பறவையின் இலக்கு என்பதுபோல வடிவமைதியும் கலை உணர்வும் கொண்ட கதைகளே என் இலக்கு. மேற்புரத்தில் சாதாரணமாக தெரியும் கதைகளின் அடிநாதம் வேறொரு உணர்வை, பார்வையை அளிக்க முயல்கின்றன. நல்ல வாசகர்கள் அதை உணர்வார்கள்.

கே.பாலமுருகன்: உங்கள் சிறுகதைகளுக்கு ஏதும் விருதுகள், பரிசுகள் கிடைத்ததுண்டா? நிச்சயம் அவையாவும் உங்களுக்கு ஒரு முகாந்திரமாக அமைந்திருக்கும் என நம்புகிறேன்.
சு.யுவராஜன்: பரிசுகள் விஷயத்தில் நான் மிக கொடுத்து வைத்தவன். நான் முதலில் எழுதிய முதல் ஐந்து கதைகளுமே பரிசு பெற்ற கதைகள்தான். அல்ட்ராமேன், தாத்தா சாமந்தி அத்தை மற்றும் ஆகிய கதைகள் முறையே யூகேஎம் பேரவை கதை போட்டி 2003, 2004 வருடங்கள் வெற்றி பெற்றன. இப்படி நடகிறது, செம்பின் களிம்பு, அப்பாவும் நெத்திவெள்ளையும் ஆகியவை யூஎம் பேரவை கதை போட்டியில் அதே வருடங்கள் வெற்றி பெற்றன. 2010 அல்ட்ராமேன் கதைக்காக “Selangor Young talent award” விருது கிடைத்தது.2004 யூகேஎம் பரிசளிப்பு விழா என் வாழ்வில் மறக்க முடியாதது. தாத்தா சாமந்தி அத்தை மற்றும் கதைக்கு முதல் பரிசு கிடைதிருந்தது. ரெ.கார்த்திகேசு அக்கதையைச் சிறப்பாகப் பாராட்டியிருந்தார். நிகழ்ச்சி முடிந்து நிறைய மாணவர்கள் நெகிழ்வுடன் அக்கதையைப் பற்றி என்னிடம் பேசினர். கையெழுத்து எல்லாம் வாங்கினர். இதெல்லாம் எனக்குப் புது அனுபவமாக இருந்தது. சிறுகதைகள் வெறும் போட்டிக்காக எழுதப்படக் கூடாதென அன்று புரிந்தது. எழுத்து பொறுப்பையும் தேடலையும் கொண்டது. அதன் பிறகு நான் போட்டிகளில் கலந்துக் கொள்வதை நிறுத்தி விட்டேன்.

கே.பாலமுருகன்: உங்கள் சிறுகதைகளை இதற்கு முன் யாரும் விமர்சித்துள்ளார்களா? அல்லது ஆய்வு செய்துள்ளார்களா? அவர்களின் நிலைபாடுகள் உங்கள் சிறுகதை சூழலைப் பாதித்துள்ளதா?
சு.யுவராஜன்: என்னுடைய அனைத்து கதைகளைப் பற்றி விரிவான விமர்சனங்களை மா.சண்முகசிவா முன்வைத்துள்ளார். மா.சண்முகசிவா எல்லோரையும் அளவிற்கு அதிகமாக பாராட்டுவார் என்று சொல்கிறார்கள். அவ்வாறு அவர் செய்வது புதியவர்களை உற்சாகப்படுத்தவே என்பதை தெளிவானவர்கள் உணர்வர். அவரிடம் தனிப்பட்ட முறையில் அவ்வளவு சீக்கிரம் பாராட்டு பெற முடியாது. சில கதைகளைத் தவிர்த்து மற்ற கதைகளைப் பற்றி மாறுபட்ட கருத்துகளைச் சொல்லியுள்ளார். நான் தகுதியுடைய விமர்சனங்களை திறந்த மனதோடு ஏற்பேன். கே.பாலமுருகன் அல்ட்ராமேன் கதையைப் பற்றி நாளிதழில் விமர்சனம் எழுதியுள்ளார். ம.நவீன் தன் பட்டப்படிப்பிற்காக என்னுடைய சில கதைகளை ஆய்வு செய்துள்ளார்.. சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி எனக்குக் கிடைத்த ஆச்சர்யமான இலக்கிய நண்பர்.

கே.பாலமுருகன்: ஊதுபத்தி பையன், சாவி போன்ற சிறுகதைகள் பெருநகர் வாழ்வின் யதார்த்தங்களிலிருந்து உதிர்க்கும் மிகவும் நெருக்கமான குரல்களாகும். அம்மாதிரியான மனிதர்களை நேரடியாக எதிர்க்கொண்டிருக்கிறீர்களா? அவர்களைக் கவனப்படுத்த என்ன காரணம்?
சு.யுவராஜன்: சிக்கலான கேள்வி. பொதுவாக சிறுகதை என்றாலே வெளிப்படையான கருத்தைச் சொல்ல வேண்டுமென பலர் நினைக்கின்றனர். வெறுமனே கருத்தைச் சொல்ல நாம் கட்டுரை எழுதி விடலாமே. நிச்சயமாக எதோ சிக்கலைக் கதைகள் சொல்லத்தான் செய்கின்றன. ஆனால் அவை கட்டுரைபோல ஒரே தளத்தில் முடிந்து போகாமல் வேறு சில உணர்வுகளையும் சொல்ல முயல்கின்றன. இது அஞ்சல் ஓட்டம் போல. நான் சிலவற்றை கலை அம்சத்தோடு எழுதி வாசகனிடம் பேட்டனாக கொடுக்கிறேன். அவன் தன் பங்கிற்கு ஓட வேண்டும். இருவரும் வெகு தூரம் ஓடினால் சொல்ல வந்த அம்சத்தைப் பற்றி ஆழமாக சிந்தித்து இருக்கிறோம் என்று புரிந்துக் கொள்ளலாம்.
கே.பாலமுருகன்: உங்களுடைய மொழி மிகவும் யதார்த்தமான மொழி என்கிற விமர்சனம் எழுந்ததை அறிவேன். இம்மொழி உங்களுக்கு உடனே வாய்த்ததா? அல்லது எழுதி எழுதி மீண்டும் எழுதி கண்டடைந்ததா?
சு.யுவராஜன்: இது பாராட்டா இல்லை திட்டா எனத் தெரியவில்லை. என் மொழி மிக எளிமையாக சரளமாக இருப்பதாக பலர் சொல்கிறார்கள். உண்மையில் நான் சாதாரண மொழியை எழுதவில்லை. அது ஒரு பாவனைதான். நான் சிறுவயதிலேயே தமிழ் இலக்கணத்தை என் மாமா தமிழ்செல்வன் அவர்களிடம் கற்றவன். தேவாரம், திருவாசகம், நாலடியார், திருமந்திரம் என நல்ல தமிழை அறிந்தவன் தான். ஆனால் வேண்டுமென்றே “பார்த்தாயா என் மொழித் திறத்தை” என எழுதுபவர்களைப் பார்த்தால் எரிச்சல்தான் வருகிறது. மொழி எவ்வாறு இருக்க வேண்டுமென்பதை ஒரு புனைவின் சூழல்தான் தீர்மானிக்கிறது. நான் அடர்த்தியான மொழியிலும் சில கதைகள் எழுதியுள்ளேன். எப்படி இருப்பினும் மொழியைத் தேவையில்லாமல் திருகுவதில் எனக்கு ஒப்புதல் இல்லை. நான் ஆரம்பம் முதலே இப்படிதான் எழுதுகிறேன். ஆனால் இப்போது இன்னும் செறிவாக எழுதுவதாக கருதுகிறேன். மற்றதை விமர்சகர்களும் வாசகர்களும் தான் சொல்ல வேண்டும்.

கே.பாலமுருகன்: அல்ரோமேன் சிறுகதைகள் சமூகத்திற்குள் என்ன மாதிரியான விளைவுகளை உருவாக்கும் என நினைக்கிறீர்கள்?
சு.யுவராஜன்: என் கதைகள் நிச்சயம் நல்ல வாசகனிடம் ஆத்மார்த்தமாக உரையாடத் தலைப்படுகின்றன. இத்தகு உரையாடல் நடக்கும் தருணங்களில் தனி மனிதனிடம் நிச்சயம் மாற்றங்கள் ஏற்படும். சமூக மாற்றம் என்பது தனி மனிதனில் இருந்து தானே தொடங்குகிறது.
கே.பாலமுருகன்: அல்ட்ரோமேன் சிறுகதை நூலின் உருவாக்கத்தின் பின்னணியில் யாரெல்லாம் இருக்கிறார்கள்? யாருக்கெல்லாம் நன்றி சொல்கிறீர்கள்?
சு.யுவராஜன்: சென்ற வருடமே வந்திருக்க வேண்டிய தொகுப்பு இது. அம்மா மிகவும் நோய்வாய்ப்பட்டிருந்தார். ஆனால், அது சாத்தியப்படுவதற்குள் அவர் தன் போராட்டத்தை நிறுத்திக் கொண்டார். நான் மிகவும் துவண்டு விட்டேன். இந்த வருடத்தின் தொடக்கத்தில் தோழி என் ஆயாசத்தை உடைத்து இதற்கான பணிகளைத் தொடங்கினார். அவருடைய தோழி பதிப்பகம் மூலமாக இந்நூலை கொண்டு வருகிறார். அப்புறம் கெடா மாநிலத்தில் உள்ள நவீன இலக்கிய சிந்தனைக் களத்தைச் சார்ந்த சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி, திரு.குமாரசாமி, நண்பர் பாலமுருகன் ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்,. வெளியீட்டிற்கு இந்த அமைப்பு ஆதரவாக உள்ளது. திருமதி பாக்கியம் அவரின் வள்ளலார் சங்கத்தின் மண்டபத்தை இலவசமாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். கோலாலும்பூருக்குச் சென்று விட்டப் பிறகும் பிறந்த மண்ணை மறக்காது முதல் நூலை சுங்கைப்பட்டாணியில் வெளியிடும் உங்கள் ஆர்வத்திற்கு என்னால் ஆன சிறு உதவி என பாக்கியம் அம்மா சொன்னப்போது நெகிழ்வாக இருந்தது. பெரும்பாலும் கே.பாலமுருகன் தான் கெடா நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கிறார். இவர்களுக்கு நன்றியெல்லாம் சொன்னால் என்னைத் திட்டுவார்கள். ஆத்மார்த்தமாக தழுவி கொள்வது மட்டுமே என்னால் இயன்றது.
கே.பாலமுருகன்: உங்களின் இச்சிறுகதை தொகுப்பு விரைவில் சுங்கைப்பட்டாணியிலும் கோலாலம்பூரிலும் வெளியிடப்படுவதாக அறிகிறேன். அதனைப் பற்றி விரிவாகச் சொல்லவும்.
சு.யுவராஜன்: சுங்கைப்பட்டாணியில் 26 மார்ச் 2016, மாலை 5 மணிக்கு முதல் வெளியீடு தாமான் பண்டார் பாருவில் உள்ள மலேசிய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்க மண்டபத்தில் நடக்கவுள்ளது. தலைமையுரையை கெடா மாநில கல்வி இலாகாவின் துணை இயக்குனர் திரு.பெ.தமிழ்செல்வன் அவர்களும் சிறப்புரையை எழுத்தாளர் மருத்துவர் மா.சண்முகசிவா அவர்களும் நூலாய்வை எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களும் வழங்க உள்ளனர். கோலாலும்பூருக்கான ஏற்பாடுகள் பூர்த்தியடைந்ததும் தகவல்களும் பிறகு வெளியிடப்படும். மேலதிக தகவல்களுக்கு தோழி: 019-2781413-இல் தொடர்பு கொள்ளலாம்.
நேர்காணல்: கே.பாலமுருகன்

சிறுகதை: அரிவாள்

2185442044_20ce21b26c_z

பாசார் முனியாண்டி கோவிலில் முனியாண்டி பிடித்திருந்த அரிவாள் காணாமல் போனதிலிருந்துதான் அவர்களுக்குப் பீதி கண்டது. அரிவாள் இல்லாத முனியாண்டி வெறும் கையுடன் இருந்தார். அதுவரை பாசார் கம்பத்தில் திமிருடன் சுற்றிக் கொண்டிருந்த சூரும் அவன் வீட்டில் செத்துக் கிடந்தான்.

முனியாண்டியை அரிவாள் இல்லாமல் பார்ப்பது எல்லோருக்கும் சங்கடமாகவும் தீட்டாகவும் தோன்றியது. மேட்டு வீட்டு சுப்பிரமணியம் மாலையில் கோவிலுக்குப் போய் விளக்கைக் கொளுத்திவிட்டு சாமி ஆடுவதையும் நிறுத்திக் கொண்டார். முனியாண்டியை மஞ்சள் துணியால் கட்டி மூடினார்கள். கோவில் வெளிச்சமில்லாமல் கிடந்தது. பாசார் கம்பத்தில் நுழைந்ததும் குறுக்குப் பாதையில் ஒரு பழைய வண்டி இருக்கும். அதுவொரு தள்ளு வண்டி. எத்தனையோ வருடத்திற்கு முன் யாரோ போட்டுவிட்டுப் போனது. கருவடைந்து திருப்பிடித்து மண்ணோடு மக்கியும் போய்விட்டது. ஒரு சில இரும்புகள் மட்டும் வெளியே பிளந்து கிடக்கும். அதற்குப் பின்னால் உள்ள முனியாண்டியை எல்லோரும் பாசார் முனியாண்டி என்றுத்தான் அழைப்பார்கள்.

கோவிலுக்குள் சுவர் இருக்காது. வெறும் தூண்கள் மட்டும்தான். அதுவும் பெரியசாமி காலத்தில் அவருடைய முயற்சியால் கட்டப்பட்டது. அதற்கும் முன் கையில் அரிவாளுடன் வெட்ட வெயிலில் கூரையில்லாமல் முனியாண்டி நின்றிருப்பார். வெய்யிலில் வெளுத்துப் போன முனியாண்டியை வருடம் ஒருமுறை சாயம் பூசி பொங்கல் தினத்தில் பூஜை செய்துவிடுவார்கள். அதுவும் பெரியசாமி குடும்பத்தினர்தான் பொறுப்பு. இப்பொழுது கொஞ்சம் வசதி வந்ததும் கோவில் இழுத்துக் கட்டப்பட்டு கூரையும் தூண்களும் கட்டப்பட்டன. பாசார் கம்பத்திற்குள் நுழைந்ததும் ஆக்ரோஷமான திமிர் பார்வையுடன் கோபத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் முனியாண்டியைக் கண்டு பயப்படாமல் இருக்க மாட்டார்கள்.

இரவில் கம்பத்தில் காய்ச்சல் வந்தவர்களுக்கு சுப்பிரமணியம்தான் சாட்டையடிப்பார். இரண்டுமுறை வலிக்காதபடி சடங்கிற்குச் சாட்டையை முனியாண்டியின் அரிவாளிலிருந்து எடுத்து காய்ச்சல் கண்டவர்களின் முதுகில் அடிப்பார். சாட்டை மாலை நேரத்தில் முனியாண்டியின் அரிவாளில் தொங்கவிடப்பட்டிருக்கும். மாலை பூஜைக்கு வரும் சுப்பிரமணியம் அதனை எடுத்து அரிவாளில் மாட்டுவார். அப்பொழுது அதற்குத் தனி சக்தி கிடைப்பதாக நம்பிக்கை.

சாட்டையின் பிடியில் கருப்புத் துணி மொத்தமாக வைத்துக் கட்டப்பட்டிருக்கும். அதன் நுனியில் ஒரு சிவப்புத் துணியும் அதில் எப்பொழுதும் திர்நீர் வாசமும் வீசும். சாட்டை முருக்கேறி விறைப்பாக இருக்கும். யாருக்காவது பேய் பிடித்துவிட்டால் முனியாண்டி கோவிலில் வைத்து சுப்பிரமணியம் சாட்டையால் அடிக்கும்போது பார்க்கும் எல்லோருக்கும் வலிக்கும். சாட்டையடி வாங்கி மயங்கி விழுந்தவர்க்குப் பேய் போனதோ இல்லையோ உயிர் பாதி போய்விட்டிருக்கும்.

கம்பீரமாகக் கையில் அரிவாளுடன் நிற்கும் முனியாண்டியின் முன் எந்தப் பேயும் பயந்தோடிவிடும் என நம்புவதால் அவரின் அரிவாளில் தொங்கவிடப்பட்டிருக்கும் சாட்டையின் மகிமை எல்லோருக்கும் தெரியும். சுப்பிரமணி அதனைக் கையில் எடுத்து விலாசும்போது முனியாண்டியாக மாறிவிடுவார். கண்கள் இரண்டையும் உருட்டிக் கொண்டும் நாக்கை வெளியில் நீட்டிக் கொண்டும் கத்துவார். அவருடைய பெருத்த கைகளிலிருந்து நரம்புகள் புடைத்துக் கொண்டு தெரியும். அப்படி அவர் சாட்டையுடன் நிற்கும்போதுதான் நிறைய பேருக்குக் காய்ச்சல் கூடி வேறு வழியில்லாமல் பெரிய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.

பாசார் முனியாண்டியின் கையில் இருக்கும் அரிவாள் கொஞ்சம் பிரசித்திப் பெற்றது. பெரியசாமியும் அவர் குடும்பத்தாரும் ஒவ்வொரு வருடம் அரிவாளை முனியாண்டியின் கையிலிருந்து உருவி அதனை எண்ணெயில் ஊற வைப்பார்கள். அரிவாளை அப்படிச் சாதாரணமாக உருவியெடுக்கவும் முடியாது. ஒரு வருடம் முனியாண்டியின் கையில் இருந்த அரிவாள். ஒரு குழந்தையின் கையிலிருந்து ஒரு பொம்மையை அத்தனை சாதாரணமாகப் பிடுங்கிவிட முடியாது. முதலில் அதற்குச் சிரிப்புக் காட்ட வேண்டும். அதன் கவனத்தைப் பொம்மையிலிருந்து வேறு பக்கம் மாற்ற வேண்டும். குழந்தை அறியாத கணத்தில் அதன் கையிலிருக்கும் பொம்மையை எடுக்க வேண்டும். பொறுமை இல்லாதவர்களால் அப்படிச் செய்ய முடியாது. முனியாண்டியின் கையிலிருக்கும் அரிவாளும் அப்படித்தான். யாரும் தொடக்கூட மாட்டார்கள். அது தலையில் இருக்கும் கிரிடத்தைப் போன்று.

பெரியசாமி அல்லது சுப்பிரமணி மட்டுமே அதை ஒரு தெய்வக் காரியமாக நினைத்து செய்வார்கள். ஓரிரு நாள் எண்ணெயில் ஊறிய கத்திக்குப் பின்னர் சாயம் பூசுவார்கள். அதன் பளபளப்பு கூடிவிடும். பின்னர், பெரியசாமியின் மகன் அரிவாளில் பட்டையை வரைவான். மூன்று கோடுகள், நடுவில் ஒரு சிவப்பு வட்டம். அரிவாள் ஜோடிகப்படுவதுகூட அன்றைய தினத்தில் பெரிய விழாவாக இருக்கும். தப்படிக்க பாசார் பையன்கள் நான்கு பேர் வந்துவிடுவார்கள். முருகேசனின் குரல் கேட்டால் பாசார் பெண்களுக்கு அருள் வந்திவிடும். அந்த அளவுக்கு கனீரென்ற குரல். தன்னுடைய குரலிலேயே உடுக்கை அடிக்கும் சக்தி முருகேசனுக்கு மட்டுமே உண்டு. முருகேசன் பாட, தப்படித் தெறிக்கும். பெரியசாமி முனியாண்டிக்குப் படையல் வைத்துவிட்டு அவரை ஆசுவாசப்படுத்திவிட்டு அரிவாளை உருவுவார். கைகள் நடுங்கும். ஒரு மாபெரும் வீரன் உறங்கிக் கொண்டிருக்கும்போது அவனுடைய இடைவாரிலிருந்து அவனுடைய கூர்மையான கத்தியை உருவும்போது உருவாகும் பயம் பெரியசாமியைத் தாக்கும். மற்ற ஆளாக இருந்தால் அதனைத் தாங்கிக் கொள்ள முடியாது. உடல் சூடேறி இறந்துவிடுவார்கள் என நம்பப்படுகிறது. ஆகையால்தான், பெரியசாமி அக்காரியத்தைச் செய்கிறார்.

அரிவாளை உருவியுடன் பாசாரில் இன்னொரு வழக்கம் உண்டு. அரிவாள் இல்லாத முனியாண்டியைக் கம்பத்தில் யாரும் பார்க்கக்கூடாது. ஆகவே, அவரை ஒரு மஞ்சள் துணியால் கட்டி மூடிவிடுவார்கள். ஒவ்வொரு வருடமும் இரண்டு நாட்கள் மட்டும் முனியாண்டி அப்படி இருப்பார். அவ்வழியே போகும் யாவரும் கோவிலைத் திரும்பிப் பார்க்கக்கூடாது. அப்படி இரண்டு நாட்கள் முனியாண்டி அரிவாள் இல்லாமல் இருக்கும் நாட்களில்தான் கம்பத்தில் திருட்டுச் சம்பவங்கள் நடப்பதும் கெட்ட கனவுகள் தோன்றுவதும் ஏற்படும். மக்கள் பீதியில் இருப்பார்கள். இப்பொழுது முனியாண்டியின் கையிருந்த அரிவாள் திடீரென காணமல் போனதும் சூரு செத்துப் போனதும் கம்பமே அதிர்ந்து போனது. எல்லோரையும் பயம் பிடித்துக் கொண்டது.

சூரு காந்திராவின் பையன். 37 வயதில் கஞ்சா கடத்தி பாசாரிலேயே பிடிப்பட்டான். பத்து வருடங்கள் கமுண்டிங் சிறையிலேயே காலத்தைத் தள்ளிவிட்டு மீண்டும் வந்தபோது பாசாரில் அவன் மீது ஒரு பயம் இருந்தது. அந்தப் பயம் அவன் சிறைக்குப் போய் வந்ததால் இல்லை. காந்திராவ் பாசாரில் செய்ததாகச் சொல்லப்படும் மூன்று மர்மக் கொலைகளை யாரும் மறக்கவில்லை. வழிவழியாக அப்பயம் எல்லோரின் மீதும் திணிக்கப்பட்டே வந்தது.

காந்திராவின் மனைவி ஓடிப்போனதும் அன்றைய இரவே அவருடைய மனைவியுடன் ஓடியவனின் அப்பாவையும் அவன் இரண்டு தம்பிகளையும் யாரோ கொலை செய்துவிட்டார்கள். வீட்டுக்குள் கழுத்தறுப்பட்டு கிடந்தவர்களின் உடல்களை இரத்த வெள்ளித்திலிருந்து மீட்டார்கள். அப்பொழுது காந்திராவ் தலைமறைவானவர்தான். இன்றுவரை அவர் வரவே இல்லை. ஆகையால்தான், அவருடைய மகன் மீது எல்லோருக்குள்ளும் ஒரு தவிர்க்க முடியாத பயம் ஒட்டிக் கொண்டிருந்தது. அவன் எங்கு இருந்தாலும் சுருட்டு வாசம் வீசிக் கொண்டே இருக்கும். சுருட்டு அவனுக்கு ஆறாவது விரல் மாதிரி உடலிலேயே இருக்கும். காதில் செருகியிருப்பான்; விரலுக்கு இடையில் வைத்திருப்பான்; புகைக்காமல் அவன் வாயில் வெறுமனே நஞ்சு கிடக்கும். அவனையும் சுருட்டையும் பிரிக்க முடியாது.

சிறையிலிருந்து சூரு வந்து ஆறு மாதமாகியும் அவனை யாரும் ஒரு கேள்வி கேட்கவில்லை. கிடைக்கும் வேலைகளைச் செய்து கொண்டு கம்பத்தில் திரிந்து கொண்டிருந்தான்.

சரசு வீட்டில் அவளுக்கும் கணவனுக்கும் சண்டை வந்த நாளில்தான் சூருவின் சுயரூபம் வெளிப்பட்டது. அன்றைய இரவில் சரசு வீட்டில் நடந்ததை வைத்து சூரு யார் எனத் தெரிந்து கொண்டார்கள்.

“ஏய் சனியனே! எவன் கூட கூத்தடிக்கறியோ அடிச்சிக்கோ. ஆனா, வீட்டுலேந்து போய்ரு. உன்ன வச்சிக்க என்னால முடியாதுடி”

சரசுடைய கணவன் இராமசாமி அவளின் முடியைக் கொத்தாகப் பிடித்து வெளியே கொண்டு வந்து போட்டான்.

“சொல்லு வேற என்ன இருக்கு? ஒரு மனசாட்சி இருக்கா உனக்கு? தினத்திக்கும் சாப்பாட்டுக்கு வழி செஞ்சேன்ல. குடிச்சிட்டு வந்து வாய்க்கு வந்த மாதிரி பேசுறீயே உங்கம்மா உன்ன எந்த நேரத்துலே பெத்தா?”

இராமசாமிக்கு அம்மாவைப் பற்றி பேசியதும் கோபம் தலைக்கேறியது. மேசையில் இருந்த மைலோ டின்னை எடுத்து வீசினான். அவ்வளவுத்தான். சரசின் புருவத்தைப் பிளந்தது. சாலையிலேயே கதறிக் கொண்டு விழுந்தாள். இராமசாமியின் வீட்டுப் பக்கத்தில் தனியாக இருந்த சூரு வெளியில் வந்தான். கட்டம் போட்ட கைலி அப்பொழுது ஆண்கள் மத்தியில் பிரபலம். சூரு வெளுத்தக் கைலியை மடுத்துவிட்டு சுருட்டைப் புகைத்துக் கொண்டிருந்தான். சரசின் அழுகையும் கதறலும் சாபமும் அவனுக்குள் ஏதோ செய்தது.

“டேய் நாயே! கட்டையிலெ போறவனே. குட்டிசோரா போய்ருவடா…என் மண்டய உடைச்சிட்டெ இல்ல…மவனே உனக்கு இருக்குடா”

இராமசாமி வெளியில் வரவே இல்லை. அவளை விலாசிவிட்டு உள்ளே போனவனின் சத்தமே இல்லை. சரசு முடியை விரித்துவிட்டு கால்களை உதறிக் கொண்டு சாபமிட்டாள். ஆக்ரோஷமான அவளுடைய குரல் உடைந்தது. சூரு கால்களை அகட்டி குத்திட்டான். சுருட்டை இன்னும் வேகமாகப் புகைத்தான். அவன் கண்கள் செத்திருந்தன. நாக்கு வரண்டிருந்தது.

“ஆம்பள நாய்ங்களா. உங்களுக்கு என்ன திமிருடா. பொம்பளையே போட்டு அடிக்கிறியெ ஆம்பளயாடா நீ?”

அன்று சரசைத் தரதரவென அவள் வீட்டுக்குள் இழுத்துக் கொண்டு போன சூரு அவள் கணவனின் காதை அறுத்துவிட்டான். சரசு சூரைக் காட்டிக்கொடுக்கவில்லை. பின்னர் அந்த வீட்டில் என்ன நடந்தது என யாருக்கும் முழுமையாகத் தெரியவில்லை. பெரியசாமியை அடித்து மலத்தொட்டியில் வைத்து முக்கினான் சூரு என சரசின் மூலம் தகவல் வெளியானதும் வதந்தியாகவே இருந்தது.

பிறகொருநாள் சரசின் கணவன் வீட்டை விட்டே ஓடிவிட்டான். தனியாக இருந்த சரசை சூரு எடுத்துக் கொண்டான் என்றும் பேசிக் கொண்டார்கள். அத்தனை நாட்கள் அமைதியாக இருந்த சூரு செய்த இந்தக் காரியத்தைக் கண்டு எல்லோரும் மேலும் பயந்தார்கள். அவனுக்குத் தனி பலம் இருப்பதாகவும் அவன் ஒரு வெறிநாய் என்றும் பேசிக்கொண்டார்கள். காந்திராவின் கொலைவெறி அவனிடம் இருப்பதாகவும் சொல்லிக் கொண்டார்கள்.

“முனியாண்டி சாமித்தாண்டா இந்தக் கம்பத்தைக் காப்பாத்தெ இந்த சூரு பையன கொன்னுட்டாரு…இல்லாட்டினா இந்த சரசை வச்சுருந்தான்லே…அவளே முனியாண்டியோட அரிவாள்ல வெட்டிக் கொன்னுட்டு ஓடிட்டா போல ஓடுகாலி…”

“சும்மா சொல்லாதீங்க சாமி. தினமும் அவளைப் போட்டு அடிச்சி சாப்பாடு கொடுக்காமல் கொடும பண்ணான் இந்த சூரு…சாமி கோவம் வரும் அவளுக்கு. அதான் முனியாண்டி அவ உடம்புல இறங்கி முடிச்சிட்டாரு”

சுப்பிரமணியும் பட்டையப்பனும் வீதியிலே கத்தி சண்டையிட்டுக் கொண்டனர். தொய்வடைந்த கிடந்த கம்பம் மெல்ல விழித்தது. பக்கத்துக் கம்பத்தில் போய் பாசார் முனியாண்டிக்கு அரிவாள் செய்து வர பெரியசாமி கிளம்பினார். அதற்கு முன் மஞ்சள் துணியால் கட்டப்பட்டிருக்கும் முனியாண்டி சாமியிடம் அனுமதி கேட்டு வரக் கோவிலுக்குச் சென்றார். கோவிலில் இருள் கவிழ்ந்திருந்த்து. பாசார் முனியாண்டியின் முகம் உயிர்ப்பில்லாமல் சோகம் கவிழ்ந்த முகத்தைப் பெரியசாமி பார்த்ததும் பதறினார்.

கோபத்தைக் கழற்றி வைத்துவிட்டு வந்த குழந்தையாய் முனியாண்டி நின்றிருந்தார். அங்கிருந்து பெரியசாமி வெளியேறும்போது சூரு வந்தால் வீசும் சுருட்டு வாசம் சட்டென சூழ்ந்து கொண்டது.

கே.பாலமுருகன்
(Malaigal.com)

சுடர் மாணவர்களுக்கான பயிற்சி நூல் வெளியீடை முன்னிட்டு ஆசிரியர், எழுத்தாளர் கே.பாலமுருகனுடன் ஒரு சந்திப்பு

12666478_581870011960569_1064063615_n

தினகரன்: வணக்கம். சுடர் என்கிற பெயர் எப்பொழுது எப்படி அடையாளம் கண்டீர்கள்?

கே.பாலமுருகன்: திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்த பெயர் அல்ல சுடர். தமிழ்ப்பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் இலவசமாக ஓர் எளிமையான பயிற்சி நூல் தயாரித்து வழங்க வேண்டும் எனத் திட்டமிட்டிருந்தேன். ஆண்டு முழுவதும் பல தமிழ்ப்பள்ளிகளுக்குப் பயணித்த அனுபவத்தினூடாக ஒவ்வொரு மாணவர்களுக்குள்ளும் ஒரு தேடல் எப்பொழுதும் சுடர் விட்டுக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. அவர்களின் கேள்விகளும் ஆர்வமுமே அதனைப் பிரதிபலித்தது. ஆகையால், சுடர் என்ற ஒரு சொல் எனக்குள் இருந்து வெளிப்பட்டது.

தினகரன்: ஏன் சுடர் நூலை இலவசமாக வழங்கினீர்கள்?

கே.பாலமுருகன்: உள்அரசியலே இல்லாமல் முழுக்க சுடர் பயிற்சி நூலை இலவசமாகப் பல பள்ளிகளுக்கு வழங்கினேன். பல மாணவர்கள், ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள், பெற்றோர்கள், யூ.பி.எஸ்.ஆர் இறுதிநேரப் பயிற்சிக்கு அந்நூல் பங்களிப்பு செய்ததைத் தெரிவித்திருந்தார்கள். எல்லா மாணவர்களுக்கும் பயிற்சி நூல்களை வாங்கும் சக்தி இல்லை. அதனால்தான் முதலில் அத்திட்டம் உதித்தது.

தினகரன்: சுடர் மற்ற பயிற்சி நூல்களுக்குப் போட்டியாக இருக்கிறதா?

கே.பாலமுருகன்: யாரும் யாருக்கும் போட்டியில்லை என்பது உண்மை. நான் ஒரு பயிற்சி நூலை எழுதும்போது இது யாருகெல்லாம் போட்டியாகும் என்ற தயக்கத்தில் சூழ்ந்து கொண்டால், எந்தவொரு முயற்சியையும் முன்னெடுக்க முடியாது. இந்த நூல் எனக்குப் போட்டி; அந்த நூல் எனக்குப் போட்டி எனச் சொல்வதே ஒரு வகையான பிதற்றல்தான். ஆரோக்கியமான சூழல் என்பது மனமுவந்து பிறர் கேட்கும்போது தன் வெளியீட்டை விற்பதற்காகப் பிற நூல்களை இழிவாகப் பேசுவதை விடவேண்டும். அத்தகைய மனநிலையுடன் எதைச் செய்தாலும் அது தனக்குத் தானே தீங்கு விளைவித்துக் கொள்வதாகப் போய்விடும். ஆகையால், விற்பனையில் இருக்கும் மற்ற நூல்களைக் குறை சொல்வதை விட்டுவிட்டு நம் நூலை எப்படி மேலும் தரமாகக் கொண்டு வர முடியும் என்பதைப் பற்றியே நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன்.

தினகரன்: விரைவில் வெளியிடப்படவிருக்கும் சுடர் கருத்துணர்தல் நூலைப் பற்றி சொல்லுங்கள்.

கே.பாலமுருகன்: ஆண்டு 1 முதல் ஆண்டு 6 வரை கல்வி அமைச்சின் பாடநூலைத் துணையாகக் கொண்டு நாட்டு நடப்பு, தமிழறிஞர்கள், அறிவியல், வரலாறு, உள்நாட்டுக் கலைஞர்கள் எனப் பல கோணங்களில் மாணவர்களின் கற்றல் தரங்களை வளர்ப்பதற்காக மிகுந்த கவனத்துடன் இந்நூல் உருவாக்கப்பட்டிருக்கிறது. மொத்த ஐந்து முழுமையான பயிற்றிகளும், 120க்கும் மேற்பட்ட பல்வகை தூண்டல் பகுதிகளுடன் கேள்விகளும், அதற்கேற்ற விடைகள் இணைப்புடனும் இந்தப் பயிற்சி நூல் தயாராகியுள்ளது. முந்தைய குறைகளைக் கவனமாகக் களைந்து, புதிய பொலிவுடன் உருவாக்கப்பட்ட நூல் இது. நிச்சயம் 4,5,& 6 ஆம் ஆண்டு மாணவர்களை யூ.பி.எஸ்.ஆர் சோதனையை நோக்கி சிறப்பாகத் தயார்ப்படுத்தும்.

தினகரன்: சுடர் கருத்துணர்தல் நூலிலேயே மாணவர்கள் பயிற்சிகள் செய்ய முடியுமா?

கே.பாலமுருகன்: ஆமாம். அதற்குத்தானே பயிற்சி நூல் என்கிறோம். பயிற்சி நூலில் பயிற்சி செய்யாமல் வேறெங்கு செய்வது? அதற்குரிய இடத்தைக் கச்சிதமாக நூலிலேயே தயார் செய்துள்ளோம். விடைகளும் இணைக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பயிற்சியைச் செய்துவிட்டு விடையைச் சரிப்பார்த்துக் கொள்ளலாம்.

 

தினகரன்: இந்த நூலின் விலை நியாயமானதாக இருக்குமா?

கே.பாலமுருகன்: சேவை என்கிற பெயரில் குறைந்த சென்க்கு நூலை அச்சிட்டுவிட்டு அண்டா விலைக்கு எதையும் விற்கும் நோக்கம் சுடர் பதிப்பகத்திற்கு இல்லை. மாணவர்களால் செலுத்த முடிந்த தொகையைக் கவனத்தில் கொண்டே இப்பயிற்சி நூல் தயாரிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு விலைக்குப் பின்னே நூல் எழுதியவரின் உழைப்பு, நூலை விற்கக் கொண்டு போகும் விற்பனையாளர்களின் உழைப்பு, நூலைத் தன் சொந்த பணம் போட்டு அச்சிட்டவர்களின் உழைப்பு எனப் பலரின் உழைப்புகள் அடங்கியுள்ளது. ஒரு நூலில் விலையை வெறுமனே நூலின் விலையாக மட்டுமே பார்க்க இயலாது.

தினகரன்: இப்பயிற்சி நூலை வாங்க விரும்புபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

கே.பாலமுருகன்: சுடர் பதிப்பகத்தை நாடி பள்ளி மாணவர்களுக்கான பிரதிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். சுடர் பதிப்பகமே விற்பனை உரிமையைப் பெற்றுள்ளது. நான் எந்தப் பயிற்சி நூலையும் நேரடியாக விற்பனை செய்யவில்லை. ஆகவே, அவர்களைத் தொடர்புக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.( சுடர் பதிப்பகம்: 0162525436)

தினகரன்: சுடர் கட்டுரை நூல் வெற்றியை அடுத்து மாணவர்களுக்கு மீண்டும் இலவச நூல் வெளியாக்கும் திட்டமுண்டா?

கே.பாலமுருகன்: நிச்சயம் சுடர் ஒவ்வொரு வருடமும் இலவசமாக வெளியிடப்பட்டு ஏழை மாணவர்களுக்கும், சிறிய பள்ளிகளுக்கும் இலவசமாக அனுப்பி வைக்கப்படும். இப்பணியை நான் தொடர்ந்து செய்வேன். நானும் தமிழ்ப்பள்ளியின் ஓர் அங்கம்தான்.

தினகரன்: சுடர் கருத்துணர்தல் பற்றி பொதுவான விளக்கம் என்ன?

கே.பாலமுருகன்: பாடநூலில் வரையறுக்கப்பட்டுள்ள இலக்கணம், செய்யுளும் மொழியணிகளும் அடிப்படையிலான புறவயக் கேள்விகளும், பல்வகை தூண்டல் பகுதிகளின் அடிப்படையிலான அகவயக் கேள்விகளும் அடங்கியதுதான் கருத்துணர்தல் பகுதியாகும். சிந்திக்கும் திறனையும் நினைவுக்கூறும் ஆற்றலையும் இப்பகுதியில் வளர்க்க முடியும். அதனைக் கருத்தில் கொண்டு, கவிஞர் அமரர் பா.அ.சிவம், கவிஞர் அமரர் காரைக்கிழார், தமிழறிஞர் அமரர் ஐயா சீனி நைனா முகம்மது என தமிழ்த்துறையில் சாதித்தவர்களையும், அதே போல விளையாட்டுத் துறையும், கலைத்துறையிலும் சாதித்த என்றும் நினைவில் நிலைத்திருக்கும் மலேசிய இந்தியர்களின் வாழ்க்கையைத் தூண்டல் பகுதிகளாகக் கொண்டு கேள்விகள் அமைத்துள்ளேன். அதே போல நாட்டு நடப்பை ஆராயும் வகையில், டிங்கிக் காய்ச்சல், மருத்துவ ஆலோசனைகள், மாணவர் முழுக்கம், மக்கள் தொலைக்காட்சி, என பொது அறிவு சார்ந்த தூண்டல் பகுதிகளை அடிப்படையாகக் கொண்ட கேள்விகளும், சிறுவர்களை மையமாகக் கொண்டிருக்கும் சிறுகதைகளும், இரண்டு முக்கியமான நாடகங்களும் இப்பயிற்சி நூலில் இடம்பெற செய்துள்ளேன்.

தினகரன்: உங்களின் நன்முயற்சியான சுடர் கருத்துணர்தல் பயிற்சி நூல் மாணவர்களுக்குச் சிறப்பான வழிகாட்டுதலை வழங்கி உங்களுக்கும் பெருமை சேர்க்கும் என எதிர்ப்பார்க்கிறேன். நன்றி.

 

தாரை தப்பட்டை: ஓங்கி ஒலிக்க முடியாத அடித்தட்டு கலை

 

12650908_10208769576055375_3734414514512719569_n

100% பாலாவின் வழக்கமான படம். கொஞ்சமும் தன் பாணியைக் காலத்திற்கேற்ப உருமாற்றிக் கொள்ளாத பிடிவாதமான படைப்பாளியின் அரதபழமையான கதை. குரூரமான மனித வதை எல்லோருக்கும் உளவியல் ரீதியில் ஏற்புடையதல்ல என்பதாலேயே தாரை தப்பட்டை மக்கள் மத்தியில் கவனம் பெறவில்லை.

கரக்காட்டக்காரர்களின் விளிம்புநிலை வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பது ஆறுதல். இத்தனை கொடூரமான மனிதர்களை பாலாவினால் மட்டுமே காட்ட முடியும் என நினைக்கிறேன்.

மையக் கதை, தன்னையே காதலித்து வாழ்ந்த கரக்காட்டக்கார சூராவளியை ஒரு அயோக்கியனுக்குத் திருமணம் செய்து வைத்த பிறகு அவள் வாழ்க்கை சிதைக்கப்படுகிறது. கதாநாயகன் இறுதியில் வழக்கமான ஆக்ரோஷத்துடன் தீயவர்களைக் கொடூரமாகக் கொலை செய்கிறார். கிருஷ்ணர் நகராசூரனை அழிப்பதைப் போல; இராமர் இராவணனை அழிப்பதைப் போல். தீயவர்களை அழிப்பதில் புராணக் காலத்து முறையைத்தான் சில படங்கள் பின்பற்றி வருகின்றன. அதில் பாலாவும் விதிவிலக்கு அல்ல.

ஆறுதல்: இளையராஜாவின் நிதர்சனமான இசை. வறண்டுபோன அடித்தட்டு இசைக்கலைஞர்களின் சன்னமான அழுகையை இளையராஜாவின் இசையில் கேட்க முடிந்தது.

பலம்: வழக்கமான வெட்கம், அச்சம் போன்ற இழிவுகள் திணிக்கப்படாமல் ஆணுக்கு நிகரான கதாப்பாத்திரத்தை வரலக்ஷ்மி ஏற்றுள்ளார். படத்தின் முதல் பாதியில் கதையைத் தூக்கி நிறுத்துவதே அவர்தான். இரத்தமும் சதையுமாக வலிமையுடன் கரக்காட்டம் ஆடி வியக்க வைக்கிறார். சபாஷ் வரலக்‌ஷ்மி.

கே.பாலமுருகன்

விசாரணை – குரலற்ற மனிதர்களின் மீதான வன்முறை

Visaranai-–-The-investigation-unveiling-on-Feb-5

மிக நீண்ட இடைவேளிக்குப் பிறகு மனத்தை அதிரவைத்த திரைப்படம். நம் மனத்தை ஒரு படம் உலுக்க முடிந்தால் அதைப் படம் என்பதா அல்லது நிஜம் என்பதா? அதிகாரம் எளிய மனிதர்களை உடல்/உள ரீதியில் வதை செய்யும் ஒவ்வொரு காட்சியும் மிரட்டுகிறது. வெற்றி மாறன் தமிழ் சினிமாவின் மாபெரும் கதைச்சொல்லி என்பதில் சந்தேகம் இல்லை. திரையரங்கைவிட்டு ஒரு பெரிய கூட்டமே சத்தமில்லாமல் கனத்த மனத்துடன் வெளியே வந்ததை என் வாழ்நாளில் இன்று மட்டுமே அனுபவித்தேன்.

ஈவிரக்கமற்ற அமைப்பு தன் காலுக்கடியில் எத்தனையோ குரலற்ற குரல்வலைகளை மிதித்துக் கொண்டிருக்கும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களைப் பதிவு செய்ததில் வெற்றி மாறனின் குழுவிற்கும் இப்படத்தைத் தயாரித்த நடிகர் தனுஷ்க்கும் நிச்சயம் தமிழ்ச்சமூகம் வாழ்த்தைத் தெரிவிக்க வேண்டும். மிகைக்காகச் சொல்லவில்லை, ஆழ்மனம்வரை சென்று இப்படம் நமக்குள் இருக்கும் மனிதாபிமானத்தைக் கிளறுகிறது. ஒருவனின் உடலை ஆள்வதும் அவனுடைய மூளையை ஆள்வதும் அவனுடைய சுதந்திரத்தை ஆள்வதும் மூன்றுமே வன்முறைத்தான். யாருடைய சுதந்திரத்தையும் வாழ்வாதாரத்தையும் அதிகாரம் செலுத்த எந்தத் தரப்புக்கும் எந்தத் தனி மனிதனுக்கும் உரிமை இல்லை. ஆனால், அந்த உரிமை மீறப்படுவதுதான் சட்டத்தைக் காக்க வேண்டிய அமைப்புகளே அதிகாரத்திற்கு விலை போவதற்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

பிழைப்பு தேடி நாடு விட்டு நாடு போய் எளீய வேலைகளைச் செய்து வாழும் தமிழர்களின் மீது எல்லாம் அமைப்புகளும், அதிகாரங்களும் அரசும் வன்முறையைக் கட்டவிழ்த்துவிடவே முற்படுகின்றன. தமிழன் என்றால் குற்றவாளியாக மட்டுமே இருக்கத் தகுதியுடையவனைப் போல அடித்தட்டு மனிதர்களைப் பொம்மைப் போல கையாளும் காவல்துறையின் அடாவடித்தனத்தை இப்படம் மிகவும் துணிச்சலுடன் பதிவு செய்துள்ளது. ஒரு தேசத்தில் அத்தேசத்தின் அரசு சார்புடைய அமைப்பான காவல்துறையின் மறுபக்கத்தை இத்தனை சுதந்திரமாகப் படம் செய்ய முடியும் என்றால் அந்நாடு கலைக்குக் கொடுக்கும் சுதந்திரம் கவனிக்கத்தக்கவையாகும். மலேசியாவிலெல்லாம் இத்தனை துணிச்சலுடன் படம் எடுத்துவிட முடியாது. கருத்து சுதந்திரம் என்பது இங்கு வரையறுப்பட்டவையாகும்.

dhanush-vettrimaran-to-unleash-visaranai-tomorrow

எம். சந்திரகுமார் அவர்களின் ‘லாக்கப்’ என்ற நாவலிலிருந்து தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தின் முதல் பாதி சந்திரகுமாரின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவமாகும். இப்படத்தின் இரண்டாம் பாதி வெற்றி மாறனின் கதையாகும். இருவரும் தாங்கள் மிகச் சிறந்த கதைச்சொல்லிகள் என்பதை நிரூபித்துள்ளார்கள். முதல் பாதியிலிருந்து இருந்த பரப்பரப்பு இரண்டாம் பாதியில் மேலும் கூடுவதுதான் திரைக்கதையின் பலம். பாடல் காட்சிகள் இல்லை; கதாநாயகி அலட்டல் இல்லை; கதாநாயகத்துவம் இல்லை; எரிச்சல் ஊட்டும் பன்ச் வசனங்கள் இல்லை. இது படமே இல்லை; நிஜம்; நிஜத்தின் அப்பட்டமான உருவாக்கம்.

ஆடுகளம் படத்தைவிட ஒரு படி மேலேறி நிற்கும் இப்படத்திற்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பத்து வயதிற்குக் குறைவான சிறுவர்களை இப்படத்திற்கு அழைத்துப் போக வேண்டாம் என இயக்குனரே கேட்டுக்கொண்டுள்ளார்.

இப்படத்தைத் திரையரங்குகளில் பாருங்கள். நமது கெட்டித்தட்டிப் போன மனசாட்சியை ஒரு கணம் அசைத்து மௌனமாக்குகிறது.

– கே.பாலமுருகன்

நான் முக்கியமானதாகக் கருதும் 2015ஆம் ஆண்டின் மிகச் சிறந்த தமிழ்ப்படங்கள்- பாகம் 1

சினிமாவில் நான் எதையும் சாதிக்கப் போவதில்லை. அது என் துறையும் கிடையாது. ஆனால், நான் தீவிரமான சினிமா இரசிகன். சினிமாவில் முக்கியமான கூறுகளான, இசை, ஒளிப்பதிவு, ஒலி, வர்ணம், வசனம், திரைக்கதை, கதை, இயக்கம், பின்னணி இசை என பலவற்றை கூர்ந்து கவனிக்கும் பயிற்சியை உலக சினிமாக்களின் வழியும் சினிமா சார்ந்த நூல்களின் வழியும் பழகிக் கொண்டேன். ஒரு சினிமாவை அதன் கலாச்சாரப் பின்னணியோடும் அந்நாட்டின் அரசியல் சூழலோடும், கலை வெளிபாடுகளுடனும் இணைத்துப் புரிந்து கொள்ளும் விமர்சிக்கும் நிலையே சினிமாவில் நான் கண்டைடைந்த இடம். என் இரசனை பலருக்குப் பொருந்தாமலும் போகக்கூடும். அதைப் பற்றி பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தொடர்ந்து நல்ல சினிமாக்களைப் பற்றி உரையாடிக் கொண்டுத்தான் இருக்கிறேன். அவ்வரிசையில் 2015ஆம் ஆண்டில் வெளிவந்த மொத்தம் 197 தமிழ்ப்படங்களில் தீவிரமான/ ஒரு சில சிறப்பம்சங்களால் கவனிக்கப்பட்ட 16 சினிமாக்களின் பெயர்களை முதலில் மீட்டுணர்வோம். இப்படங்களில் ஏதேனும் சிலவற்றை நீங்கள் இன்னும் பார்க்கவில்லை என்றால் உடனே பார்த்து மகிழுங்கள்; சிந்தியுங்கள்.

இந்த வரிசை தரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது அல்ல: படங்கள் வெளியான மாத அடிப்படையில் வரிசைப்படுத்தியுள்ளேன்.

  1. எனக்குள் ஒருவன்மார்ச் 6

Enakkul-Oruvan_B (1)

சித்தார்த் நடித்திருந்த இப்படத்தை பிரசாத் இயக்கியிருந்தார். கிறிஸ்த்தப்பர் நோலனின்  ‘இன்செப்ஷன்’ படத்தைப் போன்று மனித கனவுகளை வித்தியாசமான திரைக்கதையின் வழி படம் சொல்கிறது. வித்தியாசம் என்றாலே பெரும்பாலும் வழக்கமான தமிழ் சினிமா இரசிகர்களின் கவனத்தை ஈர்க்காது என்பது ஒரு சாபக்கேடு. ஆகையால், இப்படம் திரையரங்குகளில் அதிக நாள் ஓடவில்லை; மக்களின் கவனத்தையும் பெறவில்லை. பெரும்பாலான பேரும் அதன் திரைக்கதை நகர்ச்சி குழப்பத்தை உண்டாக்குவதாகச் சொல்லிக் கேட்டேன். ஆனால், முற்றிலும் ஒரு நல்ல முயற்சி என்பதில் சந்தேகமில்லை. திரைக்கதையில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இப்படம் வெற்றி படமாக அமைந்திருக்கும்.

 

  1. ராஜ தந்திரம்மார்ச் 13

12-1426156476-rajathanthiramreview

புதுமுக இயக்கங்களை நம்பி அமித் இயக்கிய இப்படம் 2015ஆம் ஆண்டின் சிறந்த முயற்சி என்றே பாராட்டலாம். நாம் நினைக்கும் சமூக ஒழுக்கக் கட்டுப்பாடுகள் ஏதும் இல்லாமல் இருக்கும் மூன்று திருடர்களைப் பற்றிய கதையாகும். திரைக்கதை நகர்ச்சி சமரசமின்றி இருந்தாலும் எங்கேயும் சோர்வூட்டாமல் உருவாக்கப்பட்டிருந்தது. வீரா கதாநாயகனாக நடித்திருந்தார். இவர் கௌதம் இயக்கத்தில் நடுநிசி நாய்கள் எனும் படத்தில் நடித்தவர். கதைக்குப் பொருந்தி வெளிப்பட்டுள்ளார்.

 

  1. சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறதுஏப்ரல் 10

Chennai-Ungalai-Anbudan-Varaverkirathu

போபி சிம்ஹா நடிப்பில் மருது பாண்டியன் இயக்கிய இப்படம் மிகவும் கவனத்திற்குரிய படமாகும். அது கையாண்டுள்ள கதைக்களம் கவனிக்கப்படாத மென்ஷன் வாசிகளின் துயரங்கள் ஆகும். படுக்க இடமில்லாமல் இரவு முழுவதும் அலையும் ஓர் இளைஞனின் வாழ்க்கைக்குள்ளிருந்து எழும் குரல். அவ்வகையில் கடந்தாண்டின் கணமான கதையுடன் வெளிவந்த படமாக இப்படத்தைக் கருதுகிறேன்.

 

  1. உத்தம வில்லன்மே 2

Actor Kamal Haasan in Uttama Villain Movie Stills

கமல் நடித்திருந்த இப்படத்தை ரமேஸ் அரவிந்த் இயக்கியிருந்தார். 2015ஆம் ஆண்டில் வெளிவந்த படங்களில் நல்ல கதையம்சம் கொண்டிருந்தாலும் வெற்றிபெறாத படங்களில் ஒன்றாகப் போய்விட்டது. சாவை எதிர்க்கொள்ளும் கலைஞனின் இறுதி நாட்கள்தான் படம். இப்படமும் பலருக்குப் புரியவில்லை எனத் தெரிவித்திருந்தார்கள். அப்படிப் புரியாமல் போகும் அளவுக்குத் திரைக்கதையிலும் குழப்பங்கள் இல்லை. கமல் இப்படத்தில் நடிகனாகவே வந்துள்ளார். மரணத்தைப் பற்றி கடந்தாண்டில் தத்துவப்பூர்வமாக விவாதித்த ஒரு யதார்த்த சினிமா ‘உத்தம வில்லன்’ ஆகும்.

 

  1. 36 வயதினிலேமே 15

36-Vayathinile-songs

ரோஷன் இயக்கத்தில் ஜோதிகா பல வருடங்களுக்குப் பிறகு முதன்மைக் கதைப்பாத்திரத்தை ஏற்று நடித்தப் படமாகும். அவருடைய வருகைக்காவே படம் நன்றாக ஓடியது எனலாம். கணமான கதையாக இல்லாவிட்டாலும் 36 வயதை எட்டும் பெண்கள் மீது சமூகம் கொண்டிருக்கும் பழமைவாதங்களையும், குடும்பங்களில் வைத்து ஒடுக்கப்பட்டு திறமைகள் வெளிப்படாமல் முடங்கிப் போன பெண்களின் எழுச்சிக் குரலாகவும் இப்படம் இருந்ததால் அதன் முயற்சியைப் பாராட்டியே எனது திவீர சினிமாவின் பட்டியலில் சேர்க்கிறேன். சந்தோஷ் நாராயணின் இசை இப்படத்திற்கு மிகுந்த பலம் என்றே சொல்லலாம். தமிழ் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் இசை அது.

 

  1. காக்கா முட்டைஜூன் 5

kakka-muttai-movie-poster_142744642300

எம் மணிகண்டன் இயக்கத்தில் விக்னேஷ், ரமேஷ் என்கிற இரண்டு சிறுவர்கள் நடித்துப் பல விருதுகளை வென்ற படமாகும். உலகமயமாக்கல் எப்படி அடித்தட்டு மக்களின் வாழ்விடங்களையும் அவர்களின் மூளைகளையும் பாதிக்கிறது என்பதுதான் இப்படத்தின் கதையாகும். படம் சொல்லப்பட்ட விசயங்களில் கொஞ்சம் மிகையதார்த்தங்கள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதையும் கதைக்களமும் கமர்சியல் சினிமாக்கள் கண்டுக்கொள்ளாதவையாகும். ஆனாலும், காக்கா முட்டை ஆபத்தான அரசியல் பின்புலம் கொண்ட படமும் ஆகும். அதைப் பற்றி விரிவாகப் பேசலாம்தான். இருப்பினும், பல இடங்களில் காக்கா முட்டை மிக முக்கியமான படமாக நிற்கிறது.

 

  1. இன்று நேற்று நாளைஜூன் 19

Indru-Netru-Naalai2

ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு நடித்திருந்த இப்படம் இவ்வாண்டில் தமிழ் இரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் காலம் குறித்த பிரக்ஞையையும் பல அற்புதமான தருணங்களையும் உருவாக்கிவிட்டது என்றே சொல்லலாம். சலிப்பூட்டாத அதன் திரைக்கதையின் பலத்தாலே இப்படம் மக்கள் மனத்தில் சீக்கிரமே இடம் பிடித்தது. விஷ்ணுவின் நடிப்பும் கருணாவின் இயல்பான நகைச்சுவையும் திகில்கள் நிறைந்த திரைக்கதையும், அதன் ஊடாக நகரும் காலத்தைத் தாண்டி வாழ முடியாத சிக்கல்களையும் மிகச் சிறப்பாக வெளிப்படுத்திய படமாகும். இதைக் கமர்சியல் சினிமா என ஒதுக்கிவிடலாமா அல்லது தீவிர சினிமா என்று அடையாளப்படுத்தலாமா என்கிற குழப்பத்தினூடாகவே இப்பட்டியலில் இந்தப் படத்தையும் இணைக்கிறேன்.

 

  1. பாபநாசம்ஜூலை 3

Papanasam2

ஜீத்து ஜோசப் என்கிற மலையாள இயக்குனரின் படம். தமிழில் மீண்டும் அவராலே எடுக்கப்பட்டது. கமல் தவிர வேறு யார் நடித்திருந்தாலும் மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்திருக்கக்கூடிய அத்தனை பலமான கதையும் திரைக்கதையும் கொண்ட படமாகும். என்னைப் பொறுத்தவரை இப்படத்தின் கதாநாயகன் கமல் அல்ல; ஜித்து ஜோசப் தான். ஒரு குடும்பம் தன் கௌரத்தைக் காப்பாற்றிக் கொள்ள எத்தனை ஆபத்தான முறையில் செயல்பட்டு கடைசிவரை பிடிவாதமாகத் தன் குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்கிறது என்பதுதான் கதையாகும். ஆனால், அதனைத் திரைக்கதையாக்கிய விதம் அற்புதமான உழைப்பு. மக்களின் ஏகோபித்த வரவேற்பைப் பெற்ற படமாகத் திகழ்ந்தது.

தொடரும்

கே.பாலமுருகன்

Ola Bola- மலேசிய வரலாற்றின் குரல்

2v112jd

‘ஹரிமாவ் மலாயா’ எனக் கம்பீரமாக அழைக்கப்பட்ட மலேசியக் காற்பந்து குழுவிலுள்ள விளையாட்டாளர்களின் மனப்போராட்டங்களையும், ஈகோ போரையும், குடும்ப சிக்கல்களையும், குழுவில் நடந்த மனக் கசப்புகளையும், தியாகங்களையும் 1980களின் பின்னணியில் வைத்து ஓர் அழுத்தமான திரைக்கதையுடன் ‘ஓலா போலா’ படைக்கப்பட்டுள்ளது. 1963ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மலேசியக் காற்பந்து குழுவின் எழுச்சி காலம் என 1980-களைச் சொல்லலாம். மலேசியக் காற்பந்து விளையாட்டாளர் மொக்தார் ஆசியாவின் சிறந்த காற்பந்து வீரர் எனும் புகழைப் பெற்று முன்னிலையில் இருந்த காலம். அப்பொழுது ஆசியாவிலேயே 175 கோல்கள் அடித்து முன்னிலையில் இருந்தது மொக்தார் ஆகும். அவர் அணிந்திருந்த ஜேர்சியின் எண் 10. இப்படத்தில் மொக்தாரின் பெயர் சம்சூல் என மாற்றப்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில் ‘spidermen’  ஆறுமுகமும் சிறந்த கோல் கீப்பராக அங்கீகரிக்கப்பட்டு மலேசியாவின் தலை சிறந்த விளையாட்டாளராகத் திகழ்ந்தார். அவரின் பெயர் இப்படத்தில் முத்துவாக மாற்றப்பட்டுள்ளது. டிசம்பர் 1988ஆம் ஆண்டில் மரணமடைந்த மலேசிய விளையாட்டாளர் ஆறுமுகம்தான் மலேசியா மோஸ்கோவ் ஒலிம்பிக் தேர்வு சுற்றில் சிறப்பான வெற்றியைப் பதிவு செய்யக் காரணமாக இருந்துள்ளார். அத்தருணத்தை ‘ஓலா போலா’ படம் உணர்ச்சிகளின் கோர்வையாக மெய்சிலிர்க்கும் வகையில் பதிவு செய்துள்ளது.

7f_mymoviesnottomissjan08

1980 ஆம் ஆண்டில் மோஸ்கோவ், ரஷ்யாவில் நடக்கவிருக்கும் காற்பந்து ஒலிம்பிக் போட்டிக்கான தேர்வு சுற்றில், புருனாய், இந்தோனேசியா என பல நாடுகளைத் தோற்கடித்து இறுதியில் தென்கொரியாவைச் சந்தித்து விளையாடிக் கொண்டிருக்கும்போது, மலேசியா மோஸ்கோ ஒலிம்பிக்கில் கலந்துகொள்ளப் போவதில்லை என செய்தி விளையாட்டாளர்களுக்கு வந்து சேர்கிறது. ஆப்கானிஸ்தானில்  அத்துமீறி நுழைந்து ஆக்கிரமிப்பைச் செய்து கொண்டிருந்த ரஷ்யாவின் செயலைக் கண்டிக்கும் வகையில் உலகத்தின் 62 நாடுகள் அவ்வருட ஒலிம்பிக் போட்டியிலிருந்து விலகிக் கொண்டது. அதில் மலேசியாவும் ஒன்றாகும். அச்செய்தியைக் கேட்டதும் அதுவரை உயிரைக் கொடுத்து விளையாடிக் கொண்டிருந்த அனைத்து விளையாட்டாளர்களும் தங்களுக்குக் கிடைக்கப் போகும் வாய்ப்பு அர்த்தமற்றது என உணர்ந்து கண்ணீர் வடிக்கிறார்கள். ‘first half’- க்குப் பிறகு அடுத்த சுற்றில் மீண்டும் அரங்கத்தில் என்ன நடந்தது என்பதுதான் ‘ஓலா போலா’வின் உச்சம்.

image

மூவின மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்த ஒரு காலத்தை இப்படத்தின் இயக்குனர் காற்பந்தின் மூலம் பதிவு செய்துள்ளார். ஆறுமுகம், மொக்தார், சோ சின் அவ்ன் என மூவினத்தைச் சேர்ந்த விளையாட்டாளர்களும் அன்றைய தேசிய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள். இன மேலாண்மை அற்ற ஒரு காலம் மலேசியாவில் மூவின மக்களையும் ஒருவரைவொருவர் காழ்ப்புணர்ச்சி இல்லாமல் சார்ந்திருக்க வைத்திருந்ததை இயக்குனர் Chiu வரலாற்றின் ஒரு குரலாகப் பதிவு செய்திருக்கிறார். இக்கதையைத் தேர்வு செய்ததற்காகவே இயக்குனரைப் பாராட்டலாம். காலம் சார்ந்த உழைப்பும், கலை வேலைப்பாடுகளும், நடிகர்களின் தேர்வும், அவர்களுக்கு அளிக்கப்பட்ட காற்பந்து அடிப்படை பயிற்சியும், இடத்தேர்வும், சலிப்பூட்டாத திரைக்கதையும் என ஒட்டுமொத்தமாக ‘ஓலா போலா’ மலேசியாவின் 21ஆம் நூற்றாண்டின் திரைப்பட வளர்ச்சியை அறிவிக்கிறது. இதுவொரு மும்மொழிப் படம் என்றும் சொல்லிக்கொள்ளலாம். இப்படியொரு படத்தை இயக்கியதற்கு மூவின மக்களையும் திரையரங்கத்திற்கு வரவழைப்பதற்கான ஓர் உத்தியாகவும் இருக்கலாம். ஆனால், தான் ஒரு மலேசிய இயக்குனர் என தன்னுடைய பொறுப்புணர்வை ஒரு கலையின் மூலம் அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் வரும் மூவினம் சார்ந்த கிளைக்கதைகள் அனைத்தும் கதைக்கு இடையூறாக இல்லாமல் இணைந்து நகர்ந்து மையப்புள்ளிக்கு வருவதுதான் திரைக்கதையின் பலம். காற்பந்து நிகழ்ச்சி அறிவிப்பாளராக வரும் ரஹ்மான், அவருடைய கனவுகள், அவருடைய குடும்பம் எனும் கிளைக்கதையும் கதையோடு ஒட்டி வருகிறது. அத்துனை சாதூர்யமாக வெவ்வேறு கலாச்சார அடையாளங்கள் உடைய இனங்களின் மன உணர்வுகளைச் சேதப்படுத்தாமல் தான் எடுத்துக் கொண்ட வரலாற்றின் ஒரு சம்பவத்திற்குப் பின்னால் கோர்த்து Chiu ஒரு படமாக தந்துள்ளார்.

Syabash Ola bola. Malaysian Movie. Proud of you.

கே.பாலமுருகன்

தைப்பூசம் – அதிர்ச்சி தகவல்கள்

குறிப்பு: ஒரு வருடத்தில் தைப்பூசத்தில் மட்டும் மொத்தம் 5 மில்லியன் லீட்டர் பால் சாக்கடையில் கலக்குவதாகத் தகவல் சொல்கிறது.

 

  1. வெடிகுண்டும் குண்டு வெடியும்

தொடர்ந்து இரண்டு நாட்களாகத் தைப்பூசத் திருத்தலங்களில் வெடிகுண்டு போடப்போவதாக பல தரப்புகளிலிருந்து தகவல்கள் வந்திருப்பதாக வாட்சாப் மூலம் செய்தி பரவிக் கொண்டிருக்கிறது. அது இருக்கட்டும், ஆனால், தைப்பூசத்திற்குத் தங்களின் நேர்த்திக் கடன்களைச் செலுத்த செல்பவர்களும் அவர்களுடன் செல்பவர்களும் அல்லது தைப்பூசத்திற்குச் செல்லும் பொதுமக்களும் முதலில் தயவு செய்து குப்பைகளைக் கீழே போடாதீர்கள். அவர்கள் வெடிகுண்டு போடுவது இருக்கட்டும், ஆனால், அதைவிட மோசம் தைப்பூசத்தில் பொதுசாலைகளையும் பொதுமக்கள் புலங்கும் இடங்களையும் குப்பைக் கூளங்களாக மாற்றிவிடுவது.

taipusam

நாம் கோவிலுக்கு அப்பால் உபயோகிக்கும் மற்ற பொது இடங்களும் சாலையும் இனவேறுபாடற்ற பொதுமக்களுக்குரியது. அவையாவும் மூன்று நாட்களில் குப்பைகள் போட்டு அலங்கோலமாக்கப்படுகின்றன. தைப்பூசத்தின் காவடி படங்களையும் பக்த பெருமக்களின் படங்களையும் நாளிதழில் பார்த்து இரசிக்கும் நாம் என்றாவது தைப்பூசம் முடிந்த நான்காவது நாளில் கோவில் வளாகத்தையும் தைப்பூச ஊர்வலங்கள் நடந்த வளாகத்தையும் பார்த்ததுண்டா? இனி வெடிகுண்டு அவ்விடத்தில் போடத் தேவையிருக்காது. அதன் தோற்றமே ஏற்கனவே வெடிகுண்டு போட்டு சிதைந்து சின்னாம்பின்னமாய் ஆனதைப் போலத்தான் காட்சியளிக்கும். மற்ற இனத்தவர்கள் இதனைப் பார்வையிடும்போது நம் மீதான அபிமானங்கள் பாதிக்கப்படும் என்பதும் உண்மையே. ஆகையால், தயவு செய்து நீங்களோ உங்கள் வீட்டைச் சேர்ந்தவர்களோ குப்பைகளைக் கீழே வீசும் போது ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள், சாலை என்பது உங்கள் சொத்து அல்ல; பொதுமக்களின் உபயோகத்திற்குரியது. அதனைச் சேதப்படுத்துவது என்பது நம் நடுவீட்டைச் சேதப்படுத்துவதற்குச் சமம்.

 

  1. போதைப்பொருள் விநியோகம்

 

அடுத்து, தைப்பூசத்தில் போதைப்பொருள் கைமாற்றம், விநியோகம் நடக்கவிருப்பதாகத் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. போதைப்பொருள் விநியோகம் இருக்கட்டும், உங்கள் வீட்டுப் பெண்களைப் போதைப்பொருள்/மதுபானம் எடுத்துவிட்டு வந்து தைப்பூசத்தில் பக்தி வெள்ளத்தில் மூழ்கிக் கிடக்கும் ஆண்களிடமிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அவர்கள் ஆபத்தானவர்கள் என்பதை நீங்கள் அறியாமலே அவர்களின் பாலியல் சேட்டைகளுக்கும் கிண்டல் கேலிகளுக்கும் உங்கள் வீட்டு பெண்களையும் சிறுமிகளையும் பலியாக்கிவிடாதீர்கள். வீட்டு ஆண்களுக்கு இதெல்லாம் தெரிவதில்லை. நீங்கள் வீர மீசையை முறுக்கிக் கொண்டு முன் நடக்க உங்கள் வீட்டுப் பெண்கள் பாதுகாப்பில்லாமல் இதுபோன்ற மதுபான அடிமைகளின் உரசலுக்குப் பலியாகிக் கூட்டத்தில் மாட்டி நசுக்கப்பட்டு வந்து கொண்டிருப்பார்கள். உங்களிடம் கேட்டால் ‘கூட்டம்னா அப்படித்தான் இருக்கும்’ என்று வீரவசனம் பேசுவதில் குறைச்சல் இல்லாமல் நிற்பீர்கள்

தைப்பூசத்திற்கு வரும் எல்லாம் ஆண்களும் அப்படியில்லை என்றாலும் யாருக்கும் இதுபோன்ற சந்தர்ப்பங்களை உருவாக்காமல் நீங்கள் கவனமாகக் கூட்டத்தைக் கையாள வேண்டும். கூட்டம் அதிகப்படி நெரிசலுக்குள்ளாகும்போது கொஞ்சம் நேரம் ஒதுங்கி காத்திருந்துவிட்டுப் போகலாம். பல ஆண்டுகள் அதே திருத்தலங்களுக்குப் போய்வரும் அனுபவத்துடன் உங்களால் எதையும் முன் அனுமானம் செய்ய முடியும். கிண்டல் கேலி செய்து பெண்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துவதற்கென்று ஒரு கூட்டம் எப்பொழுதும் இலவச சேவையில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்களின் நன்னடத்தையும் நம்மையறிமால் இரசிக்கும்படி இருக்கும். அருகே சென்று பார்த்தால் ‘டாஸ் மார்க்’ வாசம் வீசும். அதை உணர்ந்து அவர்களிடமிருந்து விலகி நீங்கள் மேலும் பாதுகாப்பாக இருக்க முடியும்.

  1. தீவிரவாதிகளின் நடமாட்டம்

தீவிரவாதிகளின் நடமாட்டம் தைப்பூசத்தில் இருக்கப் போவதாகத் தகவல் பரவி வருகிறது. இனிமேல்தான் தீவிரவாதிகள் வர வேண்டுமா என்ன? பழித்தீர்த்தல் என்கிற அடிப்படையில் தைப்பூசங்களில் நடக்காத வெட்டுக் குத்தா? கொலையா? இதுவரைக்கும் கணக்கெடுத்தாலும் பல தைப்பூசங்களில் பல சண்டை சச்சரவுகள் கொலைகள் நடந்துள்ளன. தைப்பூசத்தில் தன் வீரத்தைக் காட்டச் சொல்லி முருக பெருமான் கந்தப் புராணத்தில் சொல்லியிருக்க வாய்ப்பில்லாத போது ஏன் தமிழ்ச்சமூகம் இதுபோன்ற விசயங்களுக்கு எதிர்வினை ஆற்றுவதில்லை? இதை ஒரு பெருமையாகக் கருதி இரசிக்கிறார்களோ?

“பார்டா என் வீட்டு ஆம்பளையா… என்னமா குடிச்சிட்டு ஆடுறாரு? என்ன ஒரு பக்தி?”

இப்படிப் பெருமைப்பட வாயைப் பிளந்து கொண்டு நிற்பீர்களோ?

“என் பாய் ப்ராண்டு பாரு காவடியெ அப்படியே தரையிலெ தேய்க்கும் அழகே அழகு”

அப்படியென்று இளம் பெண்கள் கூட்டம் இரசிக்க வேண்டும் என நம்ம அண்ணன் காவடியைக் கொண்டு தமிழ் சினிமா பாடலுக்குப் போடுவாரு பாருங்க ஒரு குத்து நடனம். யப்பாப்பா…என்ன பக்தி? திருவாசகத்திலும் திருமந்திரத்திலும் பக்திக்கான விளக்கம் அப்படித்தான் இருக்கிறதோ? சரி விடுங்கப்பா. காவடி தூக்கித் தன் காணிக்கையைச் செலுத்துவதில் தவறில்லை. ஆனால், அதில் ஒரு பக்தி மட்டுமே இருக்க வேண்டுமே தவிர ஆடம்பரமும் ஆர்பாட்டமும் அல்ல.

அதே போல குண்டர் கும்பல் சண்டைகள் நடக்கும் இடமாகத் தைப்பூசம் பல வருடங்களுக்கு முன்பிலிருந்து மாறி வருவதையும் அறிகிறோம். காவலில் இருக்கும் காவல்துறையினரின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தன் பழியைத் தீர்த்துக் கொள்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களிடமிருந்து பாதுகாப்பாக இருங்கள். இதுதான் தீவிரவாதம் எனக் கருதுகிறேன். தீவிரவாதிகளை விடுங்கள்; நீங்கள் கொஞ்சம் தீவிரமாக உங்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துங்கள். சந்தேகப்படும்படி எதையாவது பார்த்தால் உடனே காவல்துறைக்குத் தொடர்புக் கொள்ளுங்கள்.

தைப்பூசத்தின் மீது விழும் கட்டுக்கதைகளையும் அதிர்ச்சியான தகவல்களையும் விட்டுத்தள்ளுங்கள். முதலில் நாமே சீர்குழைத்து வைத்திருக்கும் தைப்பூசத்தை மாற்றியமைத்துக் கூட்ட நெரிசலுக்குப் பலியாகி மனமும் உடலும் பாதிக்கும் சம்பவங்களுக்கு இடமளிக்காமல் அமைதியுடன் தைப்பூசத்தைக் கொண்டாடுங்கள்.

யாரோ வேற்று இனத்தவர் ஒருவர் பத்துமலையில் இருக்கும் உயரமான முருகன் சிலையைப் பார்த்து இது தேவைதானா எனக் கேட்டதற்கு நமக்கெல்லாம் கோபம் வந்ததைப் போல, தைப்பூசத்தில் இனத்தையே அவமானப்படுத்தும் சம்பவங்கள் நடந்தால் அதற்கும் கோபப்படுங்கள். உங்களின் கோபம் பிறரை மாற்றக்கூடும்.

பின்குறிப்பு: இதுவரை தைப்பூசங்களில் நடந்த கொலைகளின் எண்ணிக்கை: வருடம் 1999 – 2015/ 21 கொலைகள், ஒரு கை வெட்டு)

கே.பாலமுருகன்

உலக சினிமா தொடர் 2: ஸ்பானிஷ் சினிமா: ஒரு தீ மூட்டியும் ஒரு சவப்பெட்டியும்

buried2010

ஒவ்வொரு வருடங்களும் தூரத் தேசங்களுக்கு வேலைக்குப் போகும் ஏராளமான மனிதர்களில் யாரெனும் ஒருவரைத் தற்செயலாக எங்காவது பார்த்துப் பேசியிருக்கிறீர்களா? விட்டு வந்த நிலம் குறித்த கவலைகளும் ஏக்கங்களும் நிறைந்த கண்களைத் தரிசிக்கக்கூடும். மனைவி மக்களைப் பிரிந்து வருடக் கணக்கில் ஊர் திரும்பாமலேயே கிடைக்கும் இடத்தில் பெரிய எதிர்ப்பார்ப்புகள் ஏதுமின்றி உலகமெங்கும் பல தொழிலாளிகள், பஞ்சம் பிழைக்க வந்தவர்கள் சிதறிக் கிடக்கிறார்கள். அது போன்றவர்களின் மன உளைச்சலையும் பரிதவிப்பையும் நேரில் காட்சிகளாகக் கொடுத்து நம்மை வியப்பிலும் பயத்திலும் ஆழ்த்தும் படம் தான் ‘Buried’.

ஒரு தீ மூட்டி, ஒரு கைவிளக்கு, ஒரு கைத்தொலைபேசி, ஒரு கத்தி மட்டும் கொடுக்கப்பட்டு 6 அடியிலுள்ள பாலைவன மண்ணுக்கு அடியில் சவப்பெட்டியில் உயிருடன் புதைக்கப்பட்டு 90 நிமிடங்கள் எந்த இடத்தில் யாரால் புதைக்கப்பட்டிருக்கிறோம் எனத் தெரியாமல் குறுகலான ஓர் இடத்தில் வெளி உலகமே தெரியாமல் அடைக்கப்பட்டிருந்தால் உங்கள் மனநிலை எப்படி இருக்கும்?  Rodrigo cortes இயக்கத்தில் வெளியான உயிருடன் புதைத்தல்எனும் ஸ்பானிஷ் சினிமா திரைப்பட உலகத்திற்கே பெரிய சவாலை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படி ஒரு மனதை உலுக்கும் பயங்கரத்தைப் படம் முழுக்கக் காட்டி அதிர்ச்சியையும் பீதியையும் ஏற்படுத்திய சினிமாவை நாம் பார்த்திருக்க வாய்ப்பில்லை எனக் கருதுகிறேன்.

பெரும்வெளியில் நிகழும் எந்தவகையான குரூரமாகவும் இக்கட்டான சூழலாக இருந்தாலும் அதன் காத்திரம் அத்தனை அழுத்தமாக நமக்குள் பாயாது, பெரும்வெளியின் மற்ற மற்ற விசயங்கள் நம் கவனத்தை ஆங்காங்கே பிடுங்கிக்கொள்ள வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தப் படத்தில் நம் கவனம் மேலும் மேலும் ஒரே இடத்திற்குள்ளே காத்திரமாக அழுத்தப்படுகிறது. எங்கேயும் தப்பித்து ஓடாமல் நம் பார்வை ஒரு சிறிய பெட்டிக்குள் வைத்து அடைக்கப்படுகிறது. மேலும் படம் முழுவதையும் தொடர்ந்து எந்தச் சலனமும் மனக்கொந்தளிப்பும் இல்லாமல் திடமாகப் பார்ப்பதென்பது தனிநபரின் மன அமைப்பைப் பொருத்ததே. சில கட்டங்களுக்குப் பிறகு எங்கோ ஒரு சவப்பெட்டிக்குள் சிக்கிகொண்ட சூழலை நிதர்சனமாக நம்மால் உணரப்படவும் வாய்ப்புண்டு. அப்படி உணரப்படுகையில் அந்தச் சவப்பெட்டிக்குள் கதைநாயகனுக்குப் பதிலாகத் தவிப்பு மனநிலையின் உச்சத்தில் நீங்கள் திணறிக்கொண்டிருப்பீர்கள். இதுதான் இந்த ஸ்பானிஷ் திரைப்படம் கொடுக்கும் பயங்கரமான அனுபவம். சவப்பெட்டிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டிருக்கும் மையக்கதைப்பாத்திரம் மட்டுமே படத்தில் நடித்திருக்கிறார். படம் 5 நிமிடம் இருளில் காட்சிகளின்றி வெறும் ஓசையை மட்டும் குறிப்புகளாக் காட்டியவாறு தொடங்குகிறது. யாரோ ஒருவர் கரகரத்தப்படியே இருமிக் கொண்டிருக்கிறார்.

அவருடைய கைவிரல்கள் எதையோ தேடி சுரண்டும் ஓசையும் தொடர்ந்து 5 நிமிடங்களுக்குக் கேட்கும். இதுவே இறுக்கத்தை உண்டாக்கும் முதல்நிலை. சிறிது நேரத்திற்குப் பிறகு ஒரு தீ முட்டி கொளுத்தப்பட்டதும் அங்கு பாவ்ல் படுத்துக்கிடக்கிறான். தீம்மூட்டியிலிருந்து சட்டென கிளம்பிய ஒளி சுற்றிலும் பரவி அவன் எங்கு கிடக்கிறான் என்பதைத் தேடுகிறது. கொஞ்ச நேரத்திலேயே பாவ்லும் நாமும் அவன் ஒரு சவப்பெட்டியில் அடைக்கப்பட்டுக் கிடக்கிறான் என்பதை உணரமுடிகிறது. ஈராக் தீவிரவாதி கும்பல் ஒன்றால் தாக்கப்பட்ட பிறகு மயக்கமுறும் பாவ்ல், இப்பொழுது இந்தச் சவப்பெட்டிக்குள்ளிருந்துதான் விழித்தெழுகிறான்.

அந்தச் சவப்பெட்டியின் தோற்றம் மிகவும் மிரட்டலான அமைப்பைக் கொண்டிருப்பதோடு கடுமையான பயத்தையும் அளிக்கும் வகையில் இருக்கும். அவனுடைய கால் விரல்களைக் கடந்து மேலும் 10செ.மீட்டர் நீளமும், அவன் கைகளை உயர்த்தினால் மணிக்கட்டு இடமும் வலமும் உள்ள பக்கவாட்டுப் பலகையை மோதும் அளவிற்கான உயரமும் கொண்ட அந்தச் சவப்பெட்டியில் அவன் சிக்கிக் கொண்டு அடையும் பரித்தவிப்பும் பதற்றமும் சீக்கிரமே பார்வையாளனுக்குள் படர்ந்து சென்று அவனையும் சலனமடைய செய்கிறது. இருளும் மங்கிய மஞ்சள் ஒளியும்,

கைத்தொலைப்பேசியிலிருந்து வெளிப்படும் நீல வர்ணமும் என படத்தில் பாவிக்கப்பட்டிருக்கும் ஒளி அனைத்தும் அந்தச் சவப்பெட்டிக்குள் பாவ்ல் பயன்படுத்தும் கருவிகளிலிருந்தே வருகிறது. முதலில் ஒரு தீ மூட்டியைக் கண்டடைந்து அதைப் படம் முழுக்கச் சவப்பெட்டிக்குள் அடர்ந்து கிடக்கும் இருளைத் தவிர்ப்பதற்காகப் பயன்படுத்துகிறான். அதன் பிறகு கைவிளக்கு அவனுக்குக் கிடைக்கிறது. அதனைப் பலம் கொண்டு தட்டி உதறினால்தான் ஒளியைக் கக்குகிறது. வசதியே இல்லாத சவப்பெட்டிக்குள் இடம் பற்றாக்குறை அவனுக்குத் தொடர்ந்து சிரமத்தையும் நெருக்கடியையும் ஏற்படுத்திக் கொண்டே இருக்கிறது. அவனுடன் சேர்ந்து நாமும் சவப்பெட்டிக்குள் சிக்குண்ட நம் உடலைச் சரிப்படுத்திக் கொண்டே இருப்போம். படம் முடிவடையும்வரை தீராத ஒரு அசௌளகரிகமான சூழலில் ஆழ்ந்திருக்க வாய்ப்புண்டு.

buried-movie

இந்தப் படத்தில் மேலும் கூடுதலான இறுக்கம் என்னவென்றால், படம் தொடங்கி கடைசிவரை நாம் பாவ்ல் சிக்குண்டு கிடக்கும் அந்தச் சவப்பெட்டியிலிருந்து வெளியேறாமல் அங்கேயே அவனுடனே நம்மை முடித்துக் கொள்வோம் என்கிற வித்தியாசமான அனுபவம்தான். எப்படியும் படத்தின் கேமரா அந்தச் சவப்பெட்டிக்குள்ளிருந்து மீண்டு வெளியே நகர்ந்து போகாதா என்கிற எதிர்ப்பார்ப்பு, கடைசிவரை நிறைவேறாமல் மணல் மூடி இருளின் பிடியில் கரைந்து முடிகிறது. பாவ்ல் என்கிற அமெரிக்க பிரஜை, ஈராக்கில் பார வண்டி ஓட்டுனராகப் பணிப்புரிந்து வருகிறான். ஒரு தீவிரவாதி கும்பலால் அமெரிக்க இராணுவ வீரன் எனச் சந்தேகிக்கப்பட்டு, தாக்கப்படுகிறான். பிறகு அவனை அங்குள்ள பாலைவனத்தில் ஆறு அடியில் குழி தோண்டி ஒரு சவப்பெட்டிக்குள் அடைத்து உயிருடன் புதைத்துவிடுகிறார்கள். அவன் அங்கிருந்து கொண்டு 90 நிமிடம் வரை மட்டுமே சுவாசிக்க முடியும்.

ஆகையால் அவனை வைத்து அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பணம் கேட்டுப் பெறுவதற்கான திட்டத்தை நடத்துவதற்குச் சவப்பெட்டியில் கிடக்கும் பாவ்லுக்கு 9 மணிவரையே அவகாசம் கொடுக்கப்படுகிறது. அதற்கேற்ப அவன் வெளி உலகத்துடன் குறிப்பாக அமெரிக்க அரசாங்கத்துடன் தொடர்புக்கொள்ள ஒரு கைத்தொலைபேசியும் சவப்பெட்டிக்குள் வைக்கப்படுகிறது. கைப்பேசியைக் கொண்டு அவன் அவனுடைய வேலை தொடர்புள்ள மேலாதிகரிக்கும், குற்றப்புலன் விசாரனை அலுவலகத்திற்கும் அவன் மனைவிக்கும் நண்பர்களுக்குமென தொடர்ந்து அழைத்துக் கொண்டேயிருக்கிறான். அவர்களின் குரல்கள் மட்டும் கைப்பேசியின் வழியாகச் சவப்பெட்டிக்குள் ஒலிக்கிறது. அவர்களுடன் அவன் பலத்தரப்பட்ட மனநிலையில் விவாதிக்கிறான், திட்டுகிறான், மனஇறுக்கத்தை வெளியேற்றுகிறான், துன்பப்படுகிறான், சோர்வடைகிறான் என இவையனைத்தையும் குரலின் ஒலிகளிலே சில சமயங்களில் காட்டுவது படத்தின் மையத்தை மேலும் அடர்த்தியாக்குகிறது.

தொலைப்பேசியில் ஒலிக்கும் யாருடைய குரலின் வழியாவது அந்தச் சவப்பெட்டி கொடுக்கும் பயத்திலிருந்து நீங்கி தப்பித்துக்கொள்ளலாம் எனக்கூட எனக்குத் தோன்றியது. முற்றிலும் வெளிஉலகம் குறித்த அனைத்துவிதமான பிரக்ஞையிலிருந்தும் துண்டிக்கப்பட்டு மண்ணுக்குள் கிடக்கும் மனிதனும் சவப்பெட்டியும் நமக்கான சராசரி மனோபாவத்தைத் தகர்த்து எடுத்துவிட்டு, அதனுடைய பயங்கரமான ஒரு களத்திற்குள் இறக்கி வேடிக்கை பார்க்கிறது படம். இந்தப் படம் வெறும் சவப்பெட்டிக்குள் 90 நிமிடங்கள் நிகழும் ஒற்றைக்காட்சிதன்மையுடைய தொகுப்பாக மட்டுமே பார்க்க முடியாது. ஒட்டுமொத்த ஈராக் நிலப்பரப்பில் பாதுகாப்பில்லாத அமெரிக்கத் தொழிலாளர்களின் வாழ்வையும் காட்டி, 11 செப்டம்பருக்குப் பிறகு ஈராக்கில் அதிவேகமாக வளர்ந்த தீவிரவாத இயக்கங்களின் அமெரிக்க எதிர்ப்புணர்வையும் படம் ஆழ்ந்து தொடுகிறது. ஒரு பார வண்டி ஓட்டுனரான பாவ்ல் சந்தேகத்தின் பெயரில் அமெரிக்க இராணுவப்படையைச் சேர்ந்தவன் எனக் கருதப்பட்டு தாக்கப்படுகிறான். தாக்கப்பட்டு அங்குள்ள தீவிரவாத கும்பல்களால் பிடிப்படும் அமெரிக்க இராணுவர்களின் தலையை அவர்கள் அறுத்து அதை வீடியோ படம் எடுத்து அனுப்புவது வழக்கமான பயங்கரவாத வன்முறை செயலாகும்.

ஆனால் இப்படம் மேலும் ஈராக்கில் நிகழும் இன்னொரு கொடூரத்தைக் காட்டுவது ஆச்சர்யமாக இருக்கிறது. பிடிக்கப்பட்ட பாவ்ல் ஒரு சவப்பெட்டிக்குள் அடைக்கப்பட்டு பாலைவனத்தில் உயிருடன் புதைக்கப்படுகிறான். ஒரு கொலையைவிட, இப்படி உயிருடன் புதைப்பது மனதைப் பாதிக்கக்கூடிய வன்மையான செயலாகும்.  அந்த வன்மையான தண்டனையை முன்வைத்துதான் படம் நீள்கிறது. ஆகையால் படத்தின் பின்னணியில் பயங்கரவாத செயலும் அதைக் கொண்டு உருவாகி வளர்ந்திருக்கும் தீவிரவாத இயக்கங்களின் அரசியலையும் புரிந்துகொள்ள முடிகிறது. இது ஒரு வெறுமனே உருவாக்கப்பட்ட திகில் படமா எனக் கேட்கக்கூடும். ஆனால் முற்றிலும் மறுக்க வேண்டிய ஒரு மாற்றுப் பார்வையை தனக்குள் வைத்துக்கொண்டு தீவிரவாதத்தையும் எதிர்ப்பு அரசியலையும் வித்தியாசமான முறையில் துணிச்சலாகக் கையாண்டிருக்கும் மிக முக்கியமான படமாகவே இதைக் கருதுகிறேன். இப்படத்தின் இயக்குனரான ரோட்ரிகோ தனது 16ஆவது வயதிலேயே முதல் குறும்படத்தின்(Super 8) மூலம் உலகிற்கு அறிமுகமானவர். மேலும் பல விருதுகளைப் பெற்று ஸ்பானிஷ் திரைஉலகத்தில் தனித்த சினிமா அடையாளத்தை ஏற்படுத்தியவரும்கூட. மேலும் பாவ்ல் எதிர்நோக்கும் தொலைப்பேசி உரையாடல்களில் அமெரிக்க அரசாங்கம் அவனைப் புறக்கணிப்பது குறித்தும் அவன் மீதான அக்கறையின்மையைப் பல கட்டங்களில் ஒரு சில அதிகாரிகளின் வழியாகக் காட்டுவதன் மூலமும், அரசின் அலட்சியத்தையும் படம் வெளிப்படுத்துகிறது. ஒரு சாதரண தனிமனிதனின் உயிர் எந்தவகையிலும் முக்கியமில்லை என்பதன் உண்மையை இங்கு நம்மால் உணர முடியும்.

 

இறுதியில் அரசாங்கப் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரியின் அக்கறையினாலேயே அவனைக் காப்பாற்றக்கூடிய குழு ஒன்று அங்கு வந்து சேர்வதாகத் தொலைப்பேசியின் வழியாக அவனுக்குத் தெரிவிக்கப்படுகிறது. அந்த உரையாடலில் நமக்கும் ஒருவித நம்பிக்கையும் தப்பிக்கப்போகும் உணர்வும் வெளிப்படும். உன்னை நெருங்கிவிட்டோம், நீ இருக்கும் இடம் கண்டுப்பிடித்தாகிவிட்டது, இன்னும் கொஞ்ச நேரம் சில வினாடிகள் மட்டும் பொருத்துக் கொள்என அந்த அதிகாரி தொடர்ந்து பேசிக்கொண்டிருக்க, சவப்பெட்டிக்குள் சிறுக சிறுக மணலும் நிரம்பிக் கொண்டிருக்கும். மெல்ல இருள் பரவ, தொலைப்பேசியில் சவப்பெட்டி ஒன்று தூக்கப்படுவது போன்ற ஓசையும் கேட்கும். ஆனால் பாவ்ல் இருக்கக்கூடிய அந்தச் சவப்பெட்டியில் சிறு அசைவும் தென்படாது. சிறிது நேரத்திற்குப் பிறகு பாவ்லின் சவப்பெட்டி முழுவதும் மணல் நிரப்பப்பட்டு, நம் காட்சிக்குள்ளிருந்து விலகுகிறது. இருள் மூடிய திரைக்குப் பின்னணியில் அந்த அதிகாரியின் குரல் ஒலிக்கிறது,“மன்னித்துவிடு பாவ்ல். இது வேறு ஒரு சவப்பெட்டிஎன்பதோடு படம் முடிகிறது. பாவ்ல் மட்டுமல்ல, இதற்கு முன்பு இப்படி நிறைய பேர் உயிருடன் புதைக்கப்பட்டுச் சாகடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது.

 

பாவ்லுடன் நம்முடைய மனநிலையும் செத்துவிட்ட ஒரு சூன்யத்தைத் தழுவும்போது, “இப்படிப்பட்ட படமா?” என இறுக்கத்துடன் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடையக்கூடும். தொடர்ந்து 3 நாட்களுக்கு அந்த ஸ்பானிஷ் படம் கொடுத்த அனுபவத்திலிருந்து என்னால் மீளவே முடியவில்லை.

கே.பாலமுருகன்

 

மலைகள் இதழுக்கான நேர்காணல்: என் படைப்புகளில் நான் அலைந்து திரிகிறேன்

படிக்க வேண்டியதற்கும் படைக்க வேண்டியதற்கும் மத்தியில் இருக்கும் இடைவேளியைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன்.

 

கேள்வி: உங்களைப் பற்றி அறிமுகம் செய்து கொள்ள முடியுமா?

கே.பாலமுருகன்: நான் ஓர் எழுத்தாளன். ஆசிரியரும்கூட. எனது கே.பாலமுருகன் வலைத்தளத்தில் என்னைப் பற்றி தேவையான அறிமுகம் உண்டு. இப்படி எல்லாம் நேர்காணல்களிலும் என்னைப் பற்றி நான் கிளி பிள்ளை போல ஒப்புவிப்புவதில் சோம்பேறித்தனமாக இருப்பதால் வலைத்தளத்தின் முகவரியை இணைக்கிறேன். (https://balamurugan.org). உங்களையும் சேர்த்து இந்தத் தமிழ்ச்சமூகத்தின் தேடல்கள் மீது எனக்கு எப்பொழுதுமே நம்பிக்கை உள்ளது.

11013627_10206475526265564_5597640436356437146_n

கேள்வி: இலக்கியத்தில் அடுத்த திட்டங்கள் ஏதும்?

கே.பாலமுருகன்: கொஞ்சமான சோம்பேறித்தனம் இருக்கிறது. அதனை விரைவில் களைந்தால் மட்டுமே மேலும் தமிழ் இலக்கியத்திற்குச் சில காரியங்களைச் செய்ய முடியும் என நினைக்கிறேன். இப்போதைக்குக் களம் இதழை ஒரு தீவிரமான போக்குடன் தொடர்ந்து வருடத்திற்கு நான்கு இதழையாவது கொண்டு வரத் திட்டம் உண்டு. அதனையடுத்து சிறுவர் மர்ம நாவலை பத்து பாகங்களாக எழுதவும் தீர்க்கமான முடிவுண்டு. மற்றதைக் காலம் தீர்மானம் செய்யும். அதிகமான நடவடிக்களைப் போட்டு என்னையே ஏமாற்றிக் கொள்ளாமல், என்னால் செய்ய முடியும் என நம்புகிற இந்த இரு திட்டங்களுடன் இருக்கிறேன்.

கேள்வி: களம் அடுத்த இதழ் வெளிவரவில்லையே, என்னவாயிற்று?

கே.பாலமுருகன்: களம் இதழ் மூன்று நண்பர்களின் முயற்சியில் தொடங்கியதாகும். முதலாவதாக இதில் யாரும் யாருக்கு மேலும் இல்லை. ஆசிரியர், துணை ஆசிரியர் என்ற பதவிகள் எல்லாம் இல்லை. ஆசிரியர் குழு மட்டுமே உண்டு. நான், எழுத்தாளர் அ.பாண்டியன், சு.தினகரன் மூவரும் சேர்ந்து முதல் இதழை வெளியிட்டோம். 1000 பிரதிகளைச் சுலபமாகக் கொண்டு போக முடிந்தது. நாங்கள் நம்பும் இலக்கியத்திற்கான தீவிரத்தை வேண்டுமென்றே குறைத்துக் கொண்டு நடுநிலை இதழாகக் கொண்டு வர முயற்சித்தோம். இதனைச் செய்ததற்குக் காரணம் ஜனரஞ்சகமான இலக்கியத்திலிருந்து தீவிர இலக்கியத்தை நோக்கி முன்னகர ஒரு நடுநிலை சூழல் வேண்டும் எனத் தோன்றியது. தமிழ்நாட்டில் சுஜாதாவைப் போல. ஆனால், என்னவோ மனம் அதில் ஒட்டவில்லை. காலம் முழுவதும் தீவிர இலக்கியத்தை முன்னெடுக்கவே விரும்பும் மனநிலை மட்டுமே வாய்த்துள்ளதால் களம் இதழை மீண்டும் செம்மைப்படுத்துகிறோம்.

கேள்வி: அப்படியென்றால் அடுத்த களம் இதழ் தயாராகவுள்ளதா?

கே.பாலமுருகன்: களம் இதழைச் சிறுகதை சிறப்பிதழாகக் கொண்டு வரும் முயற்சியில் இருக்கிறோம். அதற்காக நாட்டில் எழுதி வரும் சில படைப்பாளிகளை அணுகியுள்ளோம். அதற்கான வேலைகள் முடுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அநங்கம் சிற்றிதழைச் சிறுகதை சிறப்பிதழாகக் கொண்ட வந்தபோது மிகுந்த கவனம் கிடைத்தது. சிங்கை மூத்த படைப்பாளி இராமக்.கண்ணபிரான் அவர்களின் பேட்டியும் இடம்பெறவிருக்கின்றது.

கேள்வி: இலக்கியத்தில் இப்பொழுது என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: மிகவும் அமைதியாகக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். சிறுவர் இலக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். தொய்வடைந்துவிட்ட நீரோட்டத்தின் அடைப்புகளை விடுவிக்க முதலில் இந்நாட்டின் சிறுவர்களின் மனங்களில் இலக்கியத்திற்கான தீவிரத்தைக் கூட்ட வேண்டும். அதன் பாய்ச்சல் வருங்காலத்தில் தேக்கங்களை அடித்துச் செல்லும். மேலும் என்ன செய்து கொண்டிருக்கிறேன் எனக் கேட்டால் எதையோ செய்து கிழித்து சாதித்துவிட்ட நினைப்பில் பேசுபவர்களின் ஆர்பாட்டங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். படிக்க வேண்டியதற்கும் படைக்க வேண்டியதற்கும் மத்தியில் இருக்கும் இடைவேளியைக் கவனித்துக் கொண்டிருக்கிறேன். என் கவனம் முழுவதும் நான் கண்காணிக்கும் நிதானத்தின் மீதே இருக்கிறது. ஓர் ஊற்றுக்காகக் காத்திருக்கிறேன்.

கேள்வி: இலக்கிய சர்ச்சைகள் ஏதிலும் மாட்டியதுண்டா?

கே.பாலமுருகன்: இலக்கிய சர்ச்சை என நான் முடிவு செய்யாதவரை மற்றவைகளை நான் அப்படிக் கருதுவதில்லை. இதற்குமுன் நான் சம்பந்தப்பட்ட எந்தச் சர்ச்சைகளும் கடைசியில் இலக்கிய விவாதமாக முடிந்ததில்லை. நாம் சொல்ல வரும் கருத்தின் மீது சிலருக்கு ஏற்படும் முரணே அதனைச் சர்ச்சையாக மாற்றுகிறது. ஆனால், அக்கருத்தின் மீது தனது அறிவதிகாரத்தைச் செலுத்த முனைபவர்களுடன் ஏற்படுவது வாய்ச்சண்டை மட்டுமே. வாய்ச்சண்டைகள் வசைகளுக்கு இடமளித்து சுயப் பகமைகளை மட்டுமே கக்கிச் செல்கின்றன. ஆகையால், இதுவரை எந்த இலக்கிய சர்ச்சைகளிலும் சிக்கியதில்லை. ஆனால், இலக்கியக் குழுக்களால் அதிகம் வசைப்பாடப்பட்டுள்ளேன். இங்கு அதற்குப் பஞ்சமில்லை. அமைதியாக படைப்பூக்கம் பெறுபவர்களைவிட கூச்சலிட்டு தன் பெருமைகளைப் பேசிக் கொள்பவர்களே அதிகம் என்பதால் இலக்கிய சர்ச்சை சாத்தியமா என்பதே சந்தேகம்தான். சுருக்கமாகச் சொல்வதென்றால் தற்போதைய இலக்கிய சண்டை என்பது மாமியார் மருமகள் சண்டையைப் போல மலிவாகிவிட்டது.

கேள்வி: தற்பொழுது மலேசிய இலக்கியத்தின் மீது உங்கள் நிலைபாடு?

கே.பாலமுருகன்: ஆசிரியர் பயிற்சிக் கழகங்களில் தற்போது எழுதிவரும் இளம் படைப்பாளிகளை உரையாற்றவும் இலக்கியப் பயிற்சி அளிக்கவும் வாய்ப்பை வழங்குவதைக்கூட நான் ஆரோக்கியமான முன்னேற்றமாகப் பார்க்கிறேன். இது கல்வி அமைச்சு வரை விரிய வேண்டும். சமூகத்தை நேரடியாகத் தொடர்பு கொள்வது கல்வி அமைப்பே. அறிவையும் அனுபவத்தையும் கல்வியின் வழியாகப் பெற முடியும் என்றும் அதற்கான அதிகாரப்பூர்வ அமைப்பாகக் கல்வி அமைச்சுதான் என்றும் கருதப்படுகிறது. கல்வி அமைச்சின் பாடநூல் பகுதியும், கலைத்திட்டப் பிரிவும், தேர்வு வாரியமும் நவீன இலக்கியத்தை உள்வாங்கிக் கொண்டு இலக்கியத்தையும் சிந்தனைத்துறையையும் முன்னெடுத்தால், அப்பொழுதே நான் எதிர்ப்பார்க்கும் மாற்றம் சாத்தியம். அதுவரை சில முயற்சிகள் மட்டுமே பொதுவில் தொடரும். அதற்கான விளைவுகளை இப்பொழுது கணிக்க இயலாது.

கேள்வி: மலேசியத் தமிழ் இலக்கியத்தில் உங்கள் இடம் எது?

கே.பாலமுருகன்: எந்த இடமும் இல்லை. அப்படி இருந்தாலும் அதனை எதிர்காலமே முடிவு செய்யும். இப்போதைக்குப் படைக்கிறேன். அதனால் உயிருடன் இருக்கிறேன். என் படைப்புகளினூடாக அலைந்து திரிகிறேன். அது என்னை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. இதை மலேசிய இலக்கியத்தின் ஒரு துரும்பு என்றுகூட சொல்லிக்கொள்ளலாம், பிரச்சனையில்லை.

கேள்வி: இப்போது எழுதிக் கொண்டிருக்கும் படைப்பாளர்களுக்கு என்ன சொல்ல நினைக்கிறீர்கள்?

கே.பாலமுருகன்: நான் எதைச் சொல்லி யார் கேட்டுவிடப் போகிறார்கள்? கூச்சலிட்டுக் கொண்டே இருக்க வேண்டியதுதான். அதைத்தான் பலர் இன்று செய்து கொண்டிருக்கிறார்கள். சேர்ந்து இயங்க நான் தயார். யார் மேலும் நின்று கொண்டு சர்வதிகாரம் செய்ய நினைக்கவில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என நினைக்கின்ற கணமே குருபீடத்தில் ஏறி அமர்ந்து கொண்டு இருமாப்புக் கொள்ள வைத்துவிடுகிறது. ஆகையால் அதனைத் தவிர்த்து வருகிறேன். என் படைப்புகளின் வழி சமூகத்துடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன். இது எந்த வகையிலான தாக்கங்களை உருவாக்குகிறது என வாசகர்கள்தான் சொல்ல வேண்டும்.

கேள்வி: சிறுகதைகளில் ஆர்வம் அதிகமா அல்லது கவிதையா?

கே.பாலமுருகன்: சிறுகதையே எனது எப்பொழுதுமான தேர்வு. கவிதை மொழியுடன் நான் விளையாட நினைக்கும் போதெல்லாம் எழுதுவது. பலமுறை நான் மொழியிடம் தோல்வி கண்டுள்ளேன். சில சமயங்களில் நல்ல கவிதைகள் தோன்றியதுண்டு. சிறுகதைகளும் அப்படியே. சொல்லத் தகுந்த நல்ல கதைகளும் எழுதியுள்ளேன். விரைவில் எனது சிறுகதை தொகுப்பு ஒன்றைக் கொண்டு வர முயற்சித்து வருகிறேன். இதற்கு முன் வல்லினம் பதிப்பகத்தில் ஒரு சிறுகதை நூலும், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூலம் ஒரு நாவலும், சுடர் பதிப்பகம் மூலம் மூன்று நாவல்களும் பிரசுரித்துள்ளேன்.

கேள்வி: மலேசிய சிறுகதை சூழல் பற்றி சொல்ல இயலுமா?

கே.பாலமுருகன்: பத்திரிகைகளில் வரும் சிறுகதைகளை மட்டும் வைத்துக் கொண்டு மலேசிய சிறுகதை சூழலை விமர்சிக்க இயலாது. ஆனால், பெரும்பாலும் அப்படித்தான் தீர்மானிக்கவும் படுகிறது. அவை ஒரு காலக்கட்டத்தின் சிறுகதை தொடர்ச்சியை உள்ளடக்கியதாகக் கருத முடியாது. தனித்தனியாகச் சில நல்ல கதைகள் எப்பொழுதும் எழுதப்பட்டே வருகின்றன. தன் வாசிப்பின் ஆழம் பொறுத்தே ஒரு படைப்பாளியின் சிறுகதையின் ஆழமும் நேர்த்திப் பெறுகிறது. மேலும், வாழ்க்கை அனுபவமும் இதில் முக்கியமானதாகக் கருதுகிறேன். கற்பனையைவிட சுய அனுபவங்களே சிறுகதைகளில் எடுப்படுகின்றன எனத் தோன்றுகிறது. அந்தச் சுய அனுபவம் எப்படிச் சமூகத்துடன் உரையாடுகிறது; தன்னைப் பொறுத்திக் கொள்கிறது என்பதும் முக்கியம். அவ்வகையில் நாட்டில் நான் எப்பொழுதும் முக்கியமான சிறுகதை எழுத்தாளர்கள் எனக் கருதுவது சு.யுவராஜன், கோ.புண்ணியவான், சீ.முத்துசாமி, அமரர் எம்.ஏ.இளஞ்செல்வன், அ.பாண்டியன், மகேந்திரன் நவமணி, மீராவாணி, முனிஸ்வரன் குமார், கங்காதுரை மேலும் சிலர் ஆகும். என் வாசிப்பு நிலையிலேயே இவர்கள் நல்ல சிறுகதைகளைப் படைத்துள்ளார்கள் எனக் கருதுகிறேன். சு.யுவராஜனின் சிறுகதை மொழி எந்தச் சாயலும் இல்லாதது. தன் தீவிரமான வாசிப்பின் வழி அவர் அவருக்கான மொழியைக் கண்டடைந்தார். மனத்திற்கு நெருக்கமாக வந்து கிசுகிசுக்கும் மொழியைப் போன்றது. இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். புதிய பார்வை நாளிதழில் தொடர்ந்து மலேசிய சிங்கப்பூர் சிறுகதைகளை அடையாளங்கண்டு கட்டுரை எழுதி வருகிறேன். 24 வாரங்களுக்கு அது தொடரும். இது எதிர்காலத்தில் மலேசிய சிறுகதைகளைப் பற்றி ஒரு மேலோட்டமான பார்வையை உருவாக்கலாம்.

கேள்வி: மலேசியக் கவிதைகளும் இதே நிலைதானா?

கே.பாலமுருகன்: எனக்குப் பிடித்தமான கவிஞர்களைப் பற்றி சொல்ல விரும்புகிறேன். மலேசியாவில் மக்கள் தொகையில் 90% கவிஞர்கள் இருப்பதால் யாரைப் பற்றி சொல்வதென்று தெரியாததால், அமரர் பா.அ.சிவம், யோகி, பூங்குழலி, சு.தினகரன், நவீன், தோழி, மணிமொழி, போன்றவர்களின் கவிதைகளே நான் வாசித்ததில் மிகவும் முக்கியமானதாகத் தோன்றுகின்றன. யோகியும் மணிமொழியும் பா.அ.சிவமும் நல்ல கவிதைக்கான ஊற்றுள்ளவர்கள். பா.அ.சிவத்தின் இழப்பு மிகவும் வருத்தமிக்கது. அவருடைய கவிதைகள் பற்றி மௌனம் இதழில் எழுதியிருக்கிறேன். அநங்கம் இதழ் நடத்தியபோது பல கவிதைகளும் அனுப்பியிருக்கிறார். என்னைக் கவர்ந்த கவிஞரில் பா.அ.சிவமே தனித்த இடத்தில் நிலைக்கிறார். மணிமொழி மேலும் தொடர்ந்து கவிதைகள் எழுதினால் தனி கவனத்தைப் பெறுவார் என நினைக்கிறேன். யோகியின் யட்சி கவிதை தொகுப்பிற்காகக் காத்திருக்கிறேன். பூங்குழலியின் கவிதைகள் பற்றி இரண்டுமுறை விமர்சித்து எழுதியிருக்கிறேன். இலங்கை கவிஞர் ரியாஸ் குரானா, சிங்கை கவிஞர் எம்.கே குமார் அவர்களின் கவிதை நூல்களுக்கு முன்னுரையும் எழுதியிருக்கிறேன். என் வாசிப்பு நிலையிலிருந்தே மலேசியக் கவிதை முயற்சிகளைக் கவனித்தும் மதிப்பிட்டும் வருகிறேன். இப்பணி மேலும் தொடரும்.

கேள்வி: உங்களை மலேசிய இலக்கிய ஆளுமை எனச் சொல்லலாமா?

கே.பாலமுருகன்: அதையெப்படி நானே சொல்லிக் கொள்வது? காலம்தான் அதற்கும் பதில். ஒருமுறை தொலைப்பேசி உரையாடலில் டாக்டர் மா.சண்முகசிவா நீங்கள் ஆளுமை ஆவதற்கான பயணத்தில் இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டார். அதனை அப்படியே நம்புகிறேன். அவ்வளவுத்தான்.

கேள்வி: மூத்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களுடன் உங்களுக்கு ஏதும் பகைமையா?

கே.பாலமுருகன்: வேடிக்கையாக இருக்கிறது உங்கள் கேள்வி. நான் யாருடனும் பகைமை பாராட்டுவதில்லை. எனக்குப் பிடிக்கவில்லை என்றால் நான் விலகிக் கொள்வேன். பிடிக்கவில்லை என்று விலகிய பின்னரும் தூற்றிக் கொண்டிருந்தால் நஷ்டம் எனக்கில்லை என நம்புவதால் நான் யாரிடமும் பகைமையை வளர்த்துக் கொள்வதில்லை. ரெ.கார்த்திகேசு ஐயாவை நான் மலேசியாவின் மிக முக்கியமான சிறுகதை திறனாய்வாளராக மதிக்கின்றேன். அவருடைய பல கருத்துகளில் எனக்கு முரண்பாடும் உண்டு. ஆனால், இலக்கிய சூழலில் முரண்கள்தானே பலரை முன்னகர்த்தியுள்ளன. அதில் சிக்கல் இல்லை. இன்றளவும் அழைத்தால் என்னுடன் அவர் பேசுவார், காரணம் எங்களுக்கு மத்தியில் எந்தப் பகைமையும் இல்லை.

கேள்வி: நாவல் ஏதும் எழுத திட்டமுண்டா?

கே.பாலமுருகன்: இரண்டு முக்கியமான நாவல்கள் என் மனத்தில் இருக்கின்றன. விரைவில் அதனை எழுதினால் மலேசிய இந்தியர்களின் வாழ்வில் குற்றவாளிகளாகக் கருதப்பட்டு ஒதுக்கப்பட்ட மனிதர்களைப் பற்றி பதிவு செய்ததாக இருக்கும். அதற்கான சந்தர்ப்பமும் மொழியும் கிட்டும்வரை காத்திருக்கிறேன்.

நேர்காணல்: குமாரி தீபா/ நன்றி: மலைகள்.காம்