சீ.முத்துசாமி சிறுகதைகளில் குறியீட்டு மொழி ஓர் ஆய்வு

இலக்கியம் என்பது மொழியின் ஊடாக நிகழ்த்தப்படும் கலையாகும். மொழியே பிரதானமாக இருந்து இலக்கியப் படைப்புகளுக்கு வெளிப்பாட்டு தளத்தை உருவாக்குகிறது. மொழி என்பது காட்சிகளின், பொருள்களின், செயல் வடிவங்களின் பிரதிநிதியாக குறியீட்டு ஒழுங்குகளால் கட்டமைக்கப்பட்டுள்ளன. சொல் என்பதே ஒரு பொருளைக் குறிக்கும் பொருட்டு உருவானதே. பின்னர், அப்பொருள் சார்ந்து செயல் வடிவங்களுக்குரிய சொற்கள் பிறந்தன என்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன். அதே மொழியைக் கொண்டுத்தான் மனிதன் தன் உணர்வுகளை நூதனமான முறையில் படைப்பிலக்கியத் திறன்களோடு இலக்கியமாகப் படைக்கத் துவங்கினான்.

அத்தகைய மொழியைக் கொண்டு புனையப்படும் இலக்கியம் அம்மொழியை எப்படிக் கையாள்கிறது என்பதைப் பற்றியும் அவற்றினூடாகக் குறியீட்டு மொழி எப்படி இலக்கியத்தில் உருவாகின்றன என்பதையும் இந்த ஆய்வில் சீ.முத்துசாமி, ரெ.கார்த்திகேசு ஆகிய இரண்டு மலேசியப் படைப்பாளிகளின் சிறுகதைகளை முன்வைத்து அலசியுள்ளேன்.

குறியீட்டு மொழி

குறியீட்டு மொழி என்றால் என்ன? மொழியில் குறியீடுகளாக வந்தமைவதையே நாம் குறியீட்டு மொழி என்கிறோம். ஒன்றைக் குறிக்கும் சொல், வேறொன்றின் பிரதிநிதியாக மொழிக்குள் வரும்போது அவை புதிய அர்த்தங்களைப் பெற்று இலக்கியத்தில் மீமொழிக்கான தரத்தை அடைகின்றன. சமையலறை கலைச்சொல்லாக மட்டுமே இருந்த தீயை அறிவுக்கு நிகரான பொருளுடன் பாரதி புதிய அர்த்தத்தைக் கொடுத்துத் தன் கவிதையில் புனையும்போது தீ என்கிற சொல் மீமொழி தரத்தைப் பெற்று மரபார்ந்த பொருளிலிருந்து இலக்கியத்திற்கான குறியீட்டு மொழியாக மாறுகிறது. அத்தகைய வகையில் பல எழுத்தாளர்களால் மீண்டும் மீண்டும் மறுகண்டுப்பிடிப்பு செய்யப்பட்ட பல சொற்கள் இன்று இலக்கியங்களில் குறியீட்டு மொழிகளாகப் பாவிக்கப்பட்டு வருகின்றன.

இலக்கியம் மீமொழியில் இயற்றப்படுகின்றது என்பதில் பாரதி தெளிவாக இருந்தார். ஒரு மொழியில் ஒரு சொல் வழங்குகின்ற மரபான பொருளைப் புரிந்து வைத்திருப்பதன் மூலம் மட்டுமே அம்மொழியில் இயற்றப்படும் ஓர் இலக்கியப் பிரதியை அத்தனை சாதாரணமாகப் புரிந்து கொள்ள முடியும் எனச் சொல்ல இயலாது. அம்மொழியில் தொடர்ந்து இயற்றப்படும் இலக்கியங்களை ஆராய்வதன் மூலம் அம்மொழியின் இலக்கியத்தில் கையாளப்பட்டிருக்கும் மீமொழியைக் கண்டறிந்து அதனையொட்டி விவாதிப்பதன் மூலம் குறியீட்டு மொழியின் பங்களிப்பை ஆழமாகப் புரிந்து கொள்ள முடியும். அக்குறியீட்டு மொழிகளுடன் பழக்கமாவதன் மூலமே அம்மொழியில் எழுதப்படும் இலக்கியப் படைப்புகளை மேலும் நுண்மையாகக் கருத்துணர்ந்து கொள்ள முடியும்.

 

தொடர்புடைய ஆய்வுகள்

மீமொழி தொடர்பான ஆய்வுக் கட்டுரையை இதற்கு முன் எழுத்தாளரும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் நெறியாளருமான திரு.ஜெயமோகன் அவர்களே தமிழில் தெளிவாக எழுதியுள்ளார். அவர் மகாகவி பாரதியை முன்வைத்து மீமொழிக்கான பயன்கள் பற்றி எழுதியுள்ளார். அடுத்ததாக தமிழ்ச்சூழலில் படிமக் கவிஞர் எனச் சொல்லப்படும் பிரமிள் அவர்களின் சில கட்டுரைகளில் கவிதையில் குறியீடு தொடர்பான சில விளக்கங்களை அளித்திருக்கிறார். அதேபோல தென்காசி கவிஞர் கலாப்பிரியா அவர்களும் குறியீடு தொடர்பான சில கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

தரவுகள் சேகரிப்பு

ஜூன் 2012ஆம் ஆண்டில் முதல் பதிப்பாக வெளிவந்த சீ.முத்துசாமி அவர்களின் ‘அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்’ எனும் சிறுகதை நூலையும், ரெ.கார்த்திகேசு அவர்களின் ஜனவரி 2011ஆம் ஆண்டில் வெளிவந்த ‘நீர் மேல் எழுத்து’ எனும் சிறுகதை நூலையையும் இவ்வாய்க்கான தரவுகளாகப் பாவித்துள்ளேன்.

 

செயலாக்கம்

குறியீட்டு மொழியைப் பற்றி அறிந்து கொள்ளாமல் அல்லது அம்மொழியுடன் பழக்கப்படாமல் ஒருவன் இலக்கியத்திற்கான மொழியைக் கண்டடைவதில் சிரமத்தை எதிர்க்கொள்வான் என்பதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

அன்று எனக்குள் இருந்த பறவை பறந்து சென்றது

என்கிற ஒரு வரியில் மற்ற அனைத்து சொற்களையும்விட பறவை எனும் சொல்லை மட்டும் கூர்ந்து அலச வேண்டியுள்ளது. தமிழ்மொழியில் நன்கு புலமை பெற்ற ஒருவர் அதெப்படி ஒரு மனிதனுக்குள் பறவை குடியிருக்க முடியும்? அதெப்படி அது நம் உடலுக்குள்ளிருந்து வெளியேறி பறக்க முடியும் என்கிற கேள்விகளை எழுப்பக்கூடும். நான் முன்பே கூறியதைப் போல ஒரு மொழியில் ஒரு சொல் பூர்வீகமாக வழங்கும் பொருளை மட்டும் கொண்டு அம்மொழியில் இயற்றப்படும் இலக்கியத்தின் ஆழ்பொருளைப் புரிந்து கொள்வது கடினமாகும்.

தமிழ் படைப்புகளில் இதுவரை பறவை என்கிற சொல் எப்படியெல்லாம் கையாளப்பட்டுள்ளது என்பதை ஒரு வாசகன் உற்றாராய வேண்டியுள்ளது. அவற்றை அவனுடைய வாசிப்பின் வழியே நன்குணர முடியும். அடுத்ததாக அக்குறிப்பிட்ட படைப்பில் அச்சொல் எத்தகைய அழுத்தத்தை வழங்குகிறது என்பதை மறுவாசிப்பில் கண்டறிய வேண்டும். தொடர்ந்து இரண்டையும் தொடர்புப்படுத்தி பறவை எனும் சொல்லில் மறைந்து கிடக்கும் பொருளைத் திறந்து காட்ட வேண்டும். இது ஒவ்வொருவருக்கும் அவர்களுடைய புரிதல் நிலையைக் கொண்டு மாறுப்படக்கூடும்.

சொல் பொருள் காலம்/சூழல்
பறவை சுதந்திரம் புதுக்கவிதைகள் தோன்றிய காலக்கட்டம்
பறவை விடுதலை உணர்வு புதுக்கவிதைகளின் மறுமலர்ச்சி

காலக்கட்டம்

பறவை அடிமைத்தனம் நவீன கவிதைகளின் காலக்கட்டம்

 

  • மேற்கண்ட அட்டவனையின்படி ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரே சொல் பற்பல பொருள்களுடன் கவிதைகளில் புனையப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. ஒரு சொல்லை அக்கவிஞன் தேர்ந்தெடுத்து அதனைக் கவிதையில் முக்கியமான சொல்லாக/ குறியீடாக மாற்றுவதற்கு அக்காலக்கட்டத்தின் சூழலும் ஒரு காரணமாக அமைகின்றது. நாடு சுதந்திரம் அடைந்தும் சாதி, மதம், முதலாளியக் கொடுமைகள் இருந்த காலத்தில் சுதந்திரத் தாகத்தைப் புதுக்கவிதைகள் கொண்டாடின. அப்பொழுது பறவை எனும் சொல்லாக இருந்தாலும் அதைச் சுதந்திரத் தாகத்துடன் ஒரு கவிஞன் தன் கவிதைக்குள் பாவிப்பான். காலச்சூழலுக்கேற்ப ஒரு சொல் தான் கொண்டிருந்த ஒரு குறியீட்டை உதறித் தள்ளிவிட்டு இன்னொரு குறியீட்டைப் பெறுகின்றது. நவீன சூழலில் பறவை என்றால் தனக்குள் அடிமைப்பட்டுக் கிடக்கும் மனிதனின் மனத்தினைக் குறிப்பதாகச் சில கவிதைகளில் வாசிக்க நேர்கிறது. மன அகமி எனச் சொல்லக்கூடிய தனிமை, மன உளைச்சல், தாழ்வு மனப்பான்மை என மேலும் அகத்தை நோக்கி விரியக்கூடிய தன்னைத் தானே விசாரிக்கக்கூடிய நவீன இலக்கியத்தில் பறவை எனும் சொல் தன்னைத் தானே அல்லது தன் மனத்திற்குள் அடைப்பட்டுக் கிடக்கும் இன்னொரு தன்னைக் குறிக்கும் சொல்லாகப் பாவிக்கப்படுவதைக் கவனிக்க முடிகிறது.

 

அத்தனைகாலம் தேக்கி வைத்திருந்த

எனது மூளையில் முடங்கிக் கிடந்த

எல்லாவற்றையும் திறந்துவிட நேர்ந்தது.

அன்று எனக்குள் இருந்த பறவை பறந்து சென்றது

 

  • சல்மா தினேசுவரி, 2009

 

இக்கவிதையை முழுமையாகப் படிக்கும்போது பறவை எனும் சொல்லில் கவிஞன் காலமாற்றத்திற்கேற்ப புதிய பொருளைப் புதைக்கிறான் என்றே சொல்ல வேண்டும். அத்தனைகாலம் தன் அகத்தில் சிக்கிக் கிடந்த தன்னை ஒரு பறவையாகக் கருதுகிறான். அன்று அவற்றிலிருந்து அவனுக்கு விடுதலை கிடைத்திருப்பதைப் பறவை பறந்து சென்றது என்கிறான் என ஒரு புரிதலை உருவாக்கிக் கொள்ள முடிகிறது.

          ‘எல்லா பறவைகளின் நிழலிலும் ஒரு காகம் இருக்கிறது

  • கலாப்பிரியா

 

தலைப்பு: அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும் (சீ.முத்துசாமி)

1970களில் மலேசிய இலக்கியத்தில் தடம் பதித்து தமிழின் மிக முக்கியமான பரிசுகளையும் விருதுகளையும் பெற்று மலேசிய இலக்கிய உலகிற்குப் பெருமை சேர்த்தவர் ‘மண் புழுக்கள்’ நாவலின் எழுத்தாளர் சீ.முத்துசாமி. மலேசிய நவீன இலக்கியத்தின் உந்துகோல் என்றே சொல்லலாம். அவருடைய சிறுகதை நூலைக் கொண்டு சீ.முத்துசாமி குறியீட்டு மொழியைக் கையாண்டிருக்கும் விதத்தைக் காணலாம்.

குறியீட்டு மொழிப் பட்டியல் 1

சிறுகதை: வழித்துணை

சொல்/வாக்கியம் பொருள்
இருளைப் போர்த்திப் படுத்து தூங்கும் மலைப்பாம்பாய் மலைப்பாம்பாய் எனும் சொல் இரவில் நீண்டு கிடக்கும் சாலையைக் குறிக்கப் பயன்படுத்தியுள்ளார்.
இரவின் கண்ணீர் துளிகள் இச்சொற்றொடர் முழுவதுமாக விடிந்தும் இன்னும் அகலாமல் இருக்கும் சிறிய இருளைக் குறிக்கிறது.
நிறைமாத கர்ப்பிணியின் செழுமை முழு நிலாவைக் குறிக்கிறார்

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 2

சிறுகதை: வனத்தின் குரல்

சொல்/வாக்கியம் பொருள்
இரயிலின் தாலாட்டில் தாலாட்டு என்பது இரயில் நகரும்போது ஏற்படும் அசைவை/ஆட்டத்தைக் குறிக்கிறது.
கோழித் தூக்கம் கணநிமிடத் தூக்கத்தைக் காட்டுகிறது.
பூமி பச்சை நிறத்தைப் பூசிக் கொண்டு… புற்களைக் காட்டுகிறது
வயல்வெளிகள் பூப்பெய்திய குதூகலத்தில்… இச்சொற்றொடரில் பூப்பெய்திய எனும் சொல் விளைந்த பயிர்களின் நிலையைக் குறிக்கிறது.
பறவை காற்றில் மிதந்து போனது பறத்தல் நிலையை இப்படிக் காட்டுகிறார்
காடு தொலைத்த நினைவுக்கூட இல்லாமல்… இக்கூற்றில் காடு என்பதை மனவளத்தைக் குறிக்கிறார்.
வனப்பிரளயம் மனப்போராட்டம்

 

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 3

சிறுகதை: தூண்டில் மீன்கள்

 

சொல்/வாக்கியம் பொருள்
மனச்சுவர்கள் சுவர் எனும் சொல் இவ்விடத்தில் மனத்தில் உள்ள தடைகள் எனலாம்.
எங்கள் வருகையைப் பொருட்படுத்தாமல் வேற்றுக்கிரகத்தில் இருந்த… வேற்றுக்கிரகம் என்பது அவர் வேறொரு சிந்தனையில் இருப்பதைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 4

சிறுகதை: அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும்

 

சொல்/வாக்கியம் பொருள்
உறுமலுடன் சீறிப்பாய்ந்து உள்வந்து நின்றது கார். இவ்விடத்தில் உறுமல் என்பது காரின் ஒலியையும் சீறிப்பாய்ந்து என்ற சொல் வேகமாக உள்ளே நுழைவதையும் குறிக்கிறது,
தாக்குதலின் முதல் குண்டு அவளிடமிருந்து வெளிப்பட்டது. தாக்குதல் என்பது சண்டையையும், குண்டு என்பது கடுங்கோபத்தில் உச்சரிக்கப்படும் வார்த்தைகளையும் குறிக்கின்றன.
ஒருவாரமாய் மந்திர உச்சாடனமாய், வீட்டில் விரவி மனப்பாடம் ஆகியிருந்த… மந்திர உச்சாடனம்: விடாமல் கிடைத்த திட்டையும், மனப்பாடம் என்பது மனத்தில் அவ்வார்த்தைகள் பதிந்திருப்பதையும் குறிக்கிறது.
காறி உமிழும் சடங்கு சடங்கு என்பது வீட்டில் வழக்கமாக நடக்கும் சண்டையைக் குறிக்கிறது.
கால்களில் அசுரப் பசி கால்களின் வேகத்தைக் காட்டுகிறது.
தலையில் மத யானை இவ்விடத்தில் மத யானை என்பது தலைக்கணத்தைக் குறிக்கிறது.

 

 

தலைப்பு: நீர் மேல் எழுத்து (ரெ.கார்த்திகேசு)

மலேசியாவின் மூத்தப் படைப்பாளியாகத் திகழ்ந்த அமரர் முனைவர் ரெ.கார்த்திகேசு அவர்கள் நல்ல விமர்சகராகவும் அறிவியல் புனைக்கதைகளில் தேர்ந்தவராகவும் அறியப்பட்டவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தகைவராவும் பதவி வகித்துள்ளார். அறிவியல் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிய இவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட நூல்கள் இயற்றியுள்ளார்.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 5

சிறுகதை: ஆக்கலும் அழித்தலும்

 

சொல்/வாக்கியம் பொருள்
இலக்கியக் குடுமிப்பிடி குடுமிப்பிடி என்பது வம்பு அல்லது விவாதங்களைக் காட்டுகிறது.
கலவரம் இக்கதை கலவரம் என்ற சொல்லை மனத்தில் நடக்கும் போராட்டம் எனக் குறிப்பிடுகிறது.
அழுகையின் சுருதி கூடியது சுருதி என்ற சொல் சத்தம் எனப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
வறண்டுபோன அந்திம காலம் அந்திம காலம் என்பது வயது முதிர்ந்த நிலையைக் காட்டுகிறது.
இதுதான் தினசரி நியதி நியதி என்பது அன்றாடக் கடமை என்பதைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 6

சிறுகதை: மல்லியும் மழையும்

சொல்/வாக்கியம் பொருள்
மொட்டையாக வேண்டாம் எனச் சொல்லியாயிற்று. மொட்டை எனும் சொல் இங்கு சுருக்கமாக என்பதைக் குறிக்கிறது.
அவளுடைய சுறுசுறுப்பைப் பார்க்கும்போது உடலில் அணு உலை இருக்கலாம் என… இச்சொல் உடலில் இருக்கும் அதீதமான சக்தியைக் குறிக்கிறது.
மகிழ்ச்சியான விசயங்களை மட்டும் வடிகட்டிக் காட்டும் சித்திரங்கள் வடிகட்டி என்பது குறிப்பிட்டு எனப் பொருள் கொள்ளலாம்.
வானம் விசையைத் தட்டியதும்… விசை என்பது இவ்விடத்தில் மழையைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 7

சிறுகதை: என் வயிற்றில் ஓர் எலி

 

சொல்/வாக்கியம் பொருள்
காலம் நினைவிலிருந்து எல்லாவற்றையும் துடைத்துப் போட்டிருந்தது. துடைத்தல் என்பது இவ்விடத்தில் மறத்தல் என்பதைக் குறிக்கிறது.
வயிற்றில் உள்ள எலிக்குத் தீனி போட்டார். இவ்வரியில் தீனி என்பது மருந்தைக் குறிக்கிறது. எலி என்பது சதா துன்புறுத்தும் நோயைக் குறிக்கிறது.

 

குறியீட்டு மொழிப் பட்டியல் 8

சிறுகதை: மௌனமாய்

 

சொல்/வாக்கியம் பொருள்
அழுகை பொங்கி நின்றது… பொங்கி என்பது வரப்போகும் அழுகையைக் குறிக்கிறது.
அவளுடைய வார்த்தைகள் மூச்சிரைத்தன. மூச்சிரைத்தன என்பது தடுமாறியதைக் காட்டுகிறது.
மனத்தில் உஷ்ணம் தாளாத வெய்யில் உஷ்ணம் தாளாத வெய்யில் என்பது மனத்தில் உள்ள கோபத்தைக் காட்டுகிறது.

 

ஒப்பீடு

இரண்டு எழுத்தாளர்களும் வயத்தால் மூத்தவர்கள் என்பதால் அவர்களின் சொற்கள் அவர்களின் புறச்சூழல் அனுபவங்களிலிருந்து பெறப்பட்டுள்ளதை மதிப்பிட முடிகிறது. இருவரின் வாழ்க்கையின் பின்னணியையும் ஆராயும்போது அவர்களின் இலக்கியத்திற்கான குறியீட்டு மொழிகளை அவர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவத்திலிருந்தே பெற்றிருக்கிறார்கள் எனத் தெரிய வருகிறது.

சீ.முத்துசாமி தோட்டப்புறப் பின்னணியில் வாழ்ந்தவர் என்பதாலும் அவருடைய பெரும்பாலான கதைகளில் தோட்டப்புறச் சூழல்களே பிரதானமாக வெளிப்படுவதாலும் பெரும்பாலான அவருடைய கதைகளில் அவர் பயன்படுத்தியிருக்கும் குறியீட்டு மொழிகள் இயற்கை சார்ந்ததாகவே இருக்கின்றன. மனத்தையும், எண்ணங்களையும் கூட அவர் கதைகளில் ஓர் இயற்கையின் குறியீடாகவே வந்து நிற்கின்றன.

ஆனால், ரெ.கார்த்திகேசு அவர்கள் அறிவியல் துறையில் முதுகலை முடித்தவர், மேலும் அறிவியல் துறையில் பேராசிரியராகப் பணியாற்றியுள்ளார். ஆகவே, அவருடைய பெரும்பாலான கதைகளில் குறியீட்டு மொழியாக அறிவியல் கலைச்சொற்கள் புது அர்த்தம் பெற்று வந்திருப்பதை அதிகமாகக் காண முடிகிறது. துடைத்தல், பொங்கி, அணு உலை என அவருடைய கதைகளில் வேறொன்றின் குறியீடாக வரும் பெரும்பாலான சொற்கள் அவர் தன்னுடைய அனுபவமிக்க அறிவியல் துறையிலிருந்தே எடுக்கிறார் எனப் புலப்படுகிறது.

ஆகவே, ஒரு குறியீட்டு மொழி என்பது இலக்கியப் படைப்புகளில் இயந்து வர அந்தக் குறிப்பிட்ட எழுத்தாளரின் பின்புலம், அனுபவம், ஈடுபாடு சார்ந்தே முடிவு செய்யப்படுகிறது. ஒரு துறையில் இருக்கும் சொல்லை இலக்கியத்திற்குள் கொண்டு வந்து புதிய பொருளுடன் பயன்படுத்த அவரவரின் பின்புலமும் முக்கியப் பங்கை வகிக்கிறது. ஜெயமோகன் தரிசனம் என்கிற சொல்லைத் தன் சிறுகதையில் பாவிக்கிறார். தரிசனம் என்பது ஆன்மீகச் சொல்லிலிருந்து சிறுகதைக்குள் வேறொரு பொழிவுடன் கொண்டு வரப்படுகிறது என்று அர்த்தப்படும். கடவுளின் தரிசனம் என்றிருந்த சொல் வாழ்க்கையின் தரிசனமாக இலக்கியத்திற்குள் கொண்டு வரப்படுகிறது. இலக்கிய வெளியில் கதைக்களத்தின் கூர்மையை மேலும் ஆழமாக்கிக் காட்டவும், சூழ்நிலையை வேறொரு மொழியில் சொல்லி வளப்படுத்தவும் குறியீட்டு மொழிகள் உதவுகின்றன என்பதைச் சீ.முத்துசாமி கதைகளிலும் ரெ.கார்த்திகேசுவின் கதைகளிலும் பார்க்க முடிகிறது.

  • ஆக்கம்: கே.பாலமுருகன்
  • UPSI, பல்கலைக்கழகத்தில் நடந்த மொழியியல் உலக மாநாட்டில் வாசிக்கப்பட்ட கட்டுரை

 

 

மேற்கோள் நூல் பட்டியல்

  • சீ.முத்துசாமி. (2012). அம்மாவின் கொடிக்கயிறும் எனது காளிங்க நர்த்தனமும். சென்னை, சிவா பதிப்பகம்.
  • ரெ.கார்த்திகேசு. (2011). நீர் மேல் எழுத்து. கோலாலம்பூர், உமா பதிப்பகம்.
  • ஜெயமோகன் அகப்பக்கம்: நவீனக் கவிதைகள் ஏன் புரிவதில்லை? : http://www.jeyamohan.in/8156#.WMuBTG996M9

சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை

2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என பகல் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் மழையுடன் சபரிநாதன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைவிட இளையவரான சபரிநாதனை அவர் வீட்டில் வைத்து நான், செல்மா, யவனிகா, கோணங்கி என நால்வரும் சந்தித்தோம். அப்பொழுது கோணங்கி மிகவும் உற்சாகத்துடன் சபரிநாதனின் ‘களம் – காலம் – ஆட்டம்’ எனும் கவிதை நூலைக் கொடுத்தார்.

இலக்கியத்தின் மீதான நாட்டம் காரணமாக மூன்றுமுறை தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் வீடு வீடாகத் தேடி அலைந்தவன் நான். என் விடுமுறை காலம் மிகவும் குறுகியதுதான். ஆனாலும், மலேசியாவிலிருந்து தனியாகப் புறப்பட்டு 30க்கும் மேலான எழுத்தாளர்களை அவர்கள் ஊரிலேயே சென்று சந்தித்துள்ளேன். அதே துடிப்புடன் சபரிநாதனை அப்பொழுது பார்க்க நேர்ந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவருடன் தொடர்பில்லை என்றாலும் அன்று ஒரு தம்பி கிடைத்தான் என்ற மனநிலையுடன் தான் அந்த மழைநாளை நினைவுக்கூர்ந்துவிட முடிகிறது.

சபரிநாதனின் கவிதையில் இருக்கும் சொற்பிரயோகம் மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தக்கூடியது. அம்மாச்சி தன் கால்களின் மீது என்னைக் குப்புறப்போட்டுக் கதை சொல்லத் துவங்கும் அந்த நாட்களைச் சட்டென மனத்தில் ஊர்ந்திடச் செய்யும் அளவிற்கு அக்கவிதை தொகுப்பில் சில கவிதைகளைக் குறிப்பிடலாம். அவை கதையைப் போன்று ஒலிக்கும் கவிதைகள்.

காலத்தைக் கடத்திக் கொண்டு வரும் சொற்கள் அவை. அச்சொற்கள் அனைத்தையும் திரட்டி ஒரு காலத்தை உண்டு செய்யும் வித்தை சபரிநாதனின் கவிதைகளால் முடிகிறது. ஒரு பகற்கனவில் தோன்றும் நித்தியமற்ற உடைந்து சிதறி பின் கூடிநிற்கும் நடையாய் சபரிநாதன் தனக்கென ஒரு களத்தைக் கவிதையில் உருவாக்குகிறார்.

எனினும்

அப்பா எப்பொழுதுமே நம்ப முடியாதவராக இருந்தார்

வரும்போது திண்பண்டங்கள் குறிப்பாக ஓமப்பொடியும்

கடுப்பட்டிமிட்டாயும் வாங்கி வருபவராகவும்

மார்க் அட்டைகளோடு போகும்போது

சாமியாடியாக மாறுபவராகவும்

 

என அப்பாவைப் பற்றி சித்திரம் அவரின் மொத்த வாழ்வின் மிச்சங்களையும் எச்சங்களையும் ஊடுபாய்ந்து சொல்லிச் செல்லும் இடத்தில் அகநோக்குடைய கவிதைகளாக அவை பிரவாகமெடுத்துக் கொள்கின்றன. இதுபோன்று வாழ்வையும், திணையேக்கங்களையும், உறவுகளையும் அகநோக்குடன் மீட்டுணர்ந்து சொல்ல நேர்கிற இடங்களில் அவருடைய மொழி தன் கால்களை நீட்டி வழிக்கொடுத்து மிக நெருக்கத்துடன் கட்டியணைக்கிறது. சபரிநாதன் தன் காலத்தின் அனைத்து வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்வதற்கான சூட்சமம் இதுவே எனக் கருதுகிறேன். முதலில் ஒரு கவிஞன் அகநிலையிலிருந்து பேசக்கூடியவனாக இருந்தால் மட்டுமே கவிதை கூர்மைப்பெறும். நுணுக்கமான சொல்லாடல்களை அடையும். பாடுப்பொருள்களை உருவாக்கிக் கொண்டு வாழ்க்கைக்கு வெளியிலிருந்து கூவும் போக்கு சபரிநாதன் கவிதைகளில் இல்லை.

தமிழ் சூழலில் நிச்சயம் சபரிநாதனின் கவிதைகள் தனித்த இடம் பெறும். மேலும் அவருக்கு குமரகுருபரன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள் சபரி.

  • கே.பாலமுருகன்

ஜெயமோகன் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம்- 2017

கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் கடந்த 2 ஜூன் தொடங்கி 4 ஜூன் வரை கூலிம் சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யம் மலைச்சாரல் ஆசிரமத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களும் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.  நவீன இலக்கியக் களம் நண்பர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலக்கியம், ஆன்மீகம், தத்துவம்,உளவியல், வாசிப்பு என்கிற வகையில் தொடர்ந்து கலந்துரையாடல், சந்திப்புகள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். அவ்வரிசையில் இவ்வாண்டும் நவீன இலக்கிய முகாம் இரண்டாவது முறையாகக் கூலிம் கெடாவில் நடைபெற்றுள்ளது. 91 பங்கேற்பாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.

 

முதல் நாள் முகாமில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் நவீன தமிழ் சிறுகதைகள் பற்றி உரையாற்றினார். ஒரு சிறுகதைக்குரிய வடிவ ரீதியிலான கட்டமைப்புகள் தொடர்பாகவும் உலகின் சிறந்த சிறுகதைகளைக் கூறி அதன்வழி ஒரு சிறுகதை முடிவெனும் இடத்தில் எப்படி வாசக உள்ளீட்டை ஏற்படுத்துகிறது என விரிவான முறையில் பேசினார். முதல் அமர்வே வந்திருந்த வாசகர்கள், பங்கேற்பாளர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும். அடுத்த அமர்வில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்கள் சங்க இலக்கியத்தில் வாழ்வியல் கூறுகள் எனும் தலைப்பில் பேசினார். நாஞ்சில் வட்டார வாழ்வியலை முழுவதுமாக உள்வாங்கிக் கொண்டு எழுத்துலகத்திற்குள் வந்த நாஞ்சில் நாடன் அவர்கள் சங்க இலக்கியத்தில் நன்கு தேர்ச்சியுடைய பேச்சாளராகவும் இருந்தார். வாழ்க்கையோடு மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தக்கூடிய வகையில் உரையாற்றினார்.

 

 

மாலை 7.00 மணிக்குப் பொது அமர்வு நடத்தப்பட்டது. கூலிம் வட்டார நண்பர்கள், எழுத்தாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் இப்பொது அமர்வில் கலந்து கொண்டனர். எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் இலக்கியத்தின் பயன் மதிப்பு தொடர்பாக உரையாற்றினார். ஏன் இலக்கியம் அவசியம் என்கிற வகையில் அவருடைய பேச்சு அமைந்திருந்தது. இலக்கியத்தின் பயன் குறித்து தமிழ் சூழலில் மட்டும்தான் கேள்விகள் எழுந்த வண்ணமே இருப்பதாகவும், மற்ற மொழியிலோ இத்தகைய கேள்விகளுக்கு எந்த எழுத்தாளரும் பதில் சொன்னதாகத் தெரியவில்லை எனக் கூறித்தான் அவருடைய மிகவும் ஆழமான உரையைத் தொடர்ந்தார்.  இரவில் ஈரோடு கிருஷ்ணன் அவர்கள் இலக்கிய அவதாணிப்புகள் என்கிற தலைப்பில் கூர்ந்த கவனிப்பு, விவரிப்பு சிறுகதைகளில் எத்தனை அவசியம் என அவருடைய வாசிப்பனுபவத்தை முன்வைத்து பேசினார்.

 

மறுநாள் காலையில் இந்தியப் பண்பாட்டு சித்திரம் என்கிற தலைப்பில் ஜெயமோகன் அவர்களின் நண்பர் ராஜமாணிக்கம் அவர்கள் உரையாற்றினார். சிற்பக் கலைகள் பற்றிய விரிவான தேடலும் ஆய்வும் உள்ளடங்கிய பேச்சாக அமைந்திருந்தது. அதனைத் தொடர்ந்து தமிழின் இலக்கியமும் ஆன்மீக சிந்தனைமரபும் என்கிற தலைப்பில் மீண்டும் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் விரிவாகவும் தத்துவார்த்தமாகவும் இரண்டிற்கும் உள்ள தொடர்புகளையொட்டி பேசினார். பின்னர் காலை 11.30க்கு நாஞ்சில் நாடன் அவர்கள் நாட்டார் வாழ்வியல் உறவுகளும் உணவுகளும் என்கிற தலைப்பில் பேசினார். இவ்வமர்வு அனைவரையும் அவர்களின் தோட்டப்புற வாழ்க்கைக்குத் திரும்ப கொண்டு சென்றுவிட்டது எனப் பல பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.

      

அன்றைய இரவில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்கள் தமிழின் சிறந்த நாவல்கள் பற்றி உரையாற்றினார். முதலில் எது நாவல் என விளக்கிப் பேசும்போது பல கோணங்களில் நாவலை அணுகிப் பார்க்கும் திறனைப் பங்கேற்பாளர்கள் மத்தியில் உருவாக்கினார் என்றே சொல்ல வேண்டும். மேலும், தமிழில் அறியப்பட்டிருக்கும் முக்கியமான சில நாவல்கள் பற்றியும் பேசினார். இம்முகாமின் வழி பலவிதமான விவாதங்களினாலும் குழப்பங்களினாலும் வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் எழுத்துக்கும் மத்தியில் விழுந்து கிடந்த இடைவெளி குறைக்கப்பட்டது என்றே சொல்ல வேண்டும்.

இம்முகாம் நவீன இலக்கியக் களத்தின் இரண்டாவது முயற்சி என்பதால் ஆரம்பத்திலிருந்தே இம்முகாம் குறித்த கலந்துரையாடல்கள், சந்திப்புகள், திட்டமிடல் நடந்து கொண்டே இருந்தன. பிரம்மாநந்த சுவாமி அவர்களின் வழிகாட்டலாலும் மலேசியாவில் இலக்கியத்திற்கு ஒரு களமாக இருந்து செயல்பட்டும் வருவதாலும் இம்முகாம் வெற்றி பெற்றது என்றே சொல்லலாம்.

 

(குறிப்பு: முகாமில் பேசப்பட்ட உரைகள் விரைவில் காணொளி வடிவத்திலும் எழுத்து வடிவத்திலும் இத்தலத்தில் பகிரப்படும்)

எழுத்து: கே.பாலமுருகன்

நவீன இலக்கிய முகாம் 2: சில புகைப்படங்கள்

 

 

 

   

சிறுகதை முடிவு – ஒரு பார்வை- முடிவென்பது முடிந்து தொடங்கும் வித்தை.

(சிங்கப்பூர் சிறுகதை பயிலரங்கில் ‘ஸ்கைப்’ உரையாடலின் வழி படைக்கப்பட்ட கட்டுரை- இடம்: சிங்கை நூலகம்)

ஒரு சிறுகதை முடிந்த பிறகுத்தான் தொடங்குகிறது என்பார்கள். ஒரு சிறுகதையின் மொத்த அழுத்தமும் அதன் முடிவில்தான் இருக்கிறது. கதைக்குள் நுழையும் வாசகன் எதிர்க்கொள்ளும் மாபெரும் திறப்பு அக்கதையின் முடிவில் வைப்பதன் மூலமே அக்கதையைக் காலம் முழுவதும் அவன் மனத்தில் சுமந்து திரிய வாய்ப்புண்டு.

சிறுகதையின் முடிவென்றால் சிறுகதையை முடிப்பதல்ல. இன்றைய பலரும் சிறுகதையின் முடிவு என்பதை ஆகக் கடைசியான முற்றுப் புள்ளி என நினைக்கிறார்கள். எழுத்திலிருந்து அகத்தில் நுழையும் பயணமே சிறுகதையின் முடிவாகும். தாளிலிருந்து நம் மனத்தில் ஆழங்களை நோக்கிப் பாய்வதுதான் சிறுகதையின் முடிவாகும். சிறுகதையின் முடிவு எப்படி அமைந்திருக்க வேண்டும் என சற்று விரிவாகப் பேசலாம்.

முடிவென்பது திருப்புமுனை

18ஆம் நூற்றாண்டிலேயே சிறுகதையின் முடிவு எதிர்ப்பாராத வண்ணம் திருப்புமுனையுடன் அமைந்திருக்க வேண்டும் என ரஷ்ய இலக்கியத்தில் வலியுறுத்தியதாகக் குறிப்புகள் உள்ளன. ஒரு சிறுகதையின் முடிவை முன்பே வாசகன் ஊகித்துவிட்டான் என்றால் அதுவொரு மோசமான வாசக அனுபவமாக முடிந்துவிடும். சிறுகதையின் வழியாக வாசகன் செய்யும் உள்ளொளி பயணத்தில் சிறுகதையின் முடிவில் அவன் எதிர்ப்பாராத ஒரு புள்ளியில் கதை சென்று நிற்குமாயின் அக்கதை அவனுடைய மனத்தை வென்றுவிடும். இன்றளவும் பல சிறுகதைகள் பேசப்படுவதற்கு முக்கியமான காரணம் திருப்புமுனையான முடிவுகள்தான்.

அகப்பயணம்

ஒரு நல்ல சிறுகதை தாளோடு நின்றுவிடாமல் வாசிக்கும் அகங்களை நோக்கிப் பயணிக்கச் செய்யும் என்பார்கள். அத்தகையதொரு அனுபவத்தை அல்லது திறப்பைத் தரவல்லதுதான் சிறுகதையின் முடிவாகும். சிறுகதைக்கான முடிவை எழுத நினைக்கும் ஒவ்வொரு எழுத்தாளனும் இதனைக் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளது. இன்று பல சிறுகதைகள் மக்கள் மத்தியில் இடம்பெறாமல் போனதற்குக் காரணம் அக்கதையின் முடிவுகள் செயற்கையாகவும் கதையின் ஓட்டத்திற்கு ஒவ்வாமலும் போனதால்தான் என நினைக்கிறேன். பலர் சிறுகதையை எங்கு முடிப்பதென தெரியாமல் தடுமாறியதன் விளைவுகள்தான் முடிவுகள் வெறும் முற்றுப்புள்ளிகளாக, அதற்கு மேல் வார்த்தைகளை வார்க்க முடியாமல் நின்றுவிடுகிறது. அப்படிப்பட்ட நிறுத்தலை நாம் முடிவென்று கொள்ள முடியாது. வாழாத ஒரு வாழ்வை ஒரு சிறுகதைக்குள் வாழத் துவங்கும் வாசகனின் மனத்தில் அனுபவத்தை விரித்தெடுக்க ஒரு தருணத்தை உண்டு செய்வதுதான் சிறுகதை முடிவின் தலையாய வேலையாகும்.

முடிவென்பது வாசல்

எல்லோரும் முடிவு என்பதை ஒரு தீர்வு என நினைக்க முற்படுகிறார்கள். சிறுகதைக்கான தீர்வை மட்டும் தந்துவிட்டு விலகிக் கொள்வதல்ல முடிவு. முடிவென்பது இன்னொரு வாசல் என நாம் முதலில் நம்ப வேண்டும். கதவை இழுத்து மூடிவிட்டுச் செல்வதல்ல சிறுகதையின் முடிவு. ஒரு சிறுகதையின் உச்சக்கணத்திற்கு வந்து சேரும் வாசகன் அதற்குமேல் இன்னொரு வாசலுக்குள் நுழைய துவங்கும் சிரிய இடைவெளியே முடிவு. அதை நுட்பமான கைத்தேர்ந்த எழுத்தாளர்களின் முடிவுகளில் நம்மால் உணர முடிவும்.

 

அசோகமித்ரனின்பயணம் சிறுகதையின் முடிவு இன்னமும் வாசிக்கையில் மனத்தை அதிரச் செய்கின்றது. கதை முழுவதும் பேசப்படும் ஆன்மீகம், ஞானம் என அனைத்தையும் விட்டு இன்னொரு தளத்திற்கு நகரும் ஒரு வித்தியாசமான முடிவாகும். வாழ்வெனும் மிக நெருக்கமான ஒன்றை மனத்திற்கு அருகாமையில் கொண்டு வந்து மனத்தை அசைத்துப் பார்க்கும் முடிவாக அமைந்திருக்கும். ஒரு குருவும் அவருடைய சீடரும் காட்டுவழிப் பயணத்தின்போது நிகழும் கதை. அசோகமித்ரனின் இச்சிறுகதை வாழ்வின் கடைசி தருணம்வரை நியதிகளை எதிர்த்துப் போராடும் மனித குணங்களின் இயல்பை ஆன்மீகத்தையும் தத்துவங்களையும் தாண்டி இதுதான் வாழ்க்கை எனும் இன்னொரு தளத்தில் வாசகனைக் கதை கொண்டு வந்து நிறுத்துகிறது.

இக்கதையில் இப்படியொரு திறப்பை அவன் எதிர்ப்பார்த்திருக்க வாய்ப்பில்லை. இதுதான் நான் சொன்ன வாசல். சட்டென திறந்து அவனை வேறொரு தளத்திற்கு இட்டுச் செல்லும் வித்தையைச் செய்ய வல்லதுதான் சிறுகதையின் முடிவாகும். ஆன்மீகத் தளத்திலிருந்து வாழ்வெனும் மெய்யை நோக்கிப் பயணமாகும் சிறுகதையின் முடிவது.

ஒரு முடிவு பல புரிதல்கள்

மேலும், சிறுகதையின் முடிவென்பது படிக்கும் அனைவருக்கும் ஒரேவகையான புரிதலை மட்டுமே கொடுக்கிறது என்றால் அது மிகவும் சாதாரணமான முடிவாக மட்டுமே இருக்கத் தகுதியுடையதாகும். முடிவென்பது வாசித்தலில் கிளைவிட வேண்டும். வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் பன்மையான புரிதல்களை வழங்கவ்வல்லதாக அமைக்க வேண்டும். வாசலைத் திறப்பது மட்டுமே முடிவின் வேலை. எப்படி, எங்கே பயணிக்க வேண்டும் என்பது வாசகனின் தேர்வாக இருக்க வேண்டும். கதவை அடைக்காமல் திறந்துவிடும் வேலையை மட்டும் முடிவு செய்யுமானால் எங்கே பயணிக்க வேண்டும் எனும் தேர்வு வாசகனுடையதாக மாறும். ஆனால், இன்றைய பலர் சிறுகதையின் முடிவில் தீர்ப்பை மட்டுமே வழங்குகிறார்கள். அதற்கு மேல் வாசகனை நகர விடாமல் முடிவில் அவனைக் கட்டிவிடுகிறார்கள். சிறுகதையில் இப்படிப்பட்ட முடிவுகள் மிகவும் கொடுமையான அனுபவமாகும். வாசகன் எதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் என வழிகாட்டுவதுதான் சிறுகதையின் முடிவு எனப் பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தீக்குச்சியின் உரசலின்போது தெறிக்கும் சிறிய ஒளியில் தென்படும் வாசல்தான் முடிவு. அதற்குமேல் பயணத்தை முடிவு செய்வது வாசகனாகும். நான் முன்பே சொன்ன அசோகமித்ரனின் ‘பயணம்’ சிறுகதையின் முடிவைப் பலரும் பலவகையில் விவாதித்துள்ளார்கள் என்பதுதான் அக்கதையின் முடிவு வழங்கும் பன்முகப்பட்ட அனுபவமாகும். சிறுகதையின் முடிவென்பது வாசகனுக்கு மிகுந்த இடைவெளியையும் அதற்குமேல் தாண்டிச் செல்வதற்குரிய சுதந்திரத்தையும் வழங்கும் ஆற்றலை சிறுகதையின் முடிவு மேற்கொள்ள வேண்டும்.

நின்றுவிடுவதல்ல முடிவு; முடிந்துவிடுவதல்ல முடிவு; முற்றுப்புள்ளி அல்ல முடிவு. முடிவு என்பது தொடக்கம். முடிந்து தொடங்கும் வித்தை.

கே.பாலமுருகன்

 

யார் கொலையாளி – பாகம் 1

கொல்லப்பட்டவனைப் பற்றிய விவரங்கள்:

இறந்தவன் பெயர்: வினோத்

இடம்: தாமான் கெனாரி

கொல்லப்பட்டவைக்கான காரணம்: தெரியவில்லை

கொல்லப்பட்ட விதம்:

கத்தியால் முகம் கீறப்பட்டுள்ளது. முகத்தில் மட்டும் 13 வெட்டுக் காயங்கள். கழுத்தில் ஆழமான வெட்டில் உயிர் போயிருக்கிறது. அவனுடைய சமையலறையில் கிடந்தான்.

கொலை கண்டறியப்பட்ட நேரம்: 21 மார்ச் 2016, காலை மணி 9.15க்கு

கொலை செய்யப்பட்ட நாள்: கண்டறியப்பட்ட நாளிலிருந்து இரண்டு நாளுக்கு முன்பு, இரவில் கொலை செய்யப்பட்டிருக்கலாம்.

கொல்லப்பட்டவனின் சில விவரங்கள்:

ஒரு தொழிற்சாலையில் மேற்பார்வையாளராக வேலை செய்கிறான். கடந்த ஐந்து வருடங்களாக இங்குத் தனியாகத்தான் தங்கியுள்ளான். அம்மா, அப்பா எல்லாம் ஜோகூரில் உள்ளார்கள். உடன் பிறந்தவர்கள் யாரும் இல்லை. வயது 26.

காவல்துறை இரண்டு வாரங்கள் தொடர் விசாரணையை மேற்கொண்டது.

 

வினோத் பற்றிய முதலில் காவல் நிலையத்தில் தகவல் கூறிய அவனுடைய நண்பன் முத்துவின் வாக்குமூலம்:

முத்து:

எப்பொழுதும் இரவில் நாங்கள் சந்திப்போம். இரவில் வெளி சாப்பாடுதான் என்பதால் நானும் அவனும் ஒன்றாகத்தான் சாப்பிட வெளியில் போவோம். அன்றைய இரவு அவனுக்குத் தொலைப்பேசியில் அழைத்தேன். காய்ச்சலாக இருந்ததால் என்னால் அங்கு வர இயலாது, என்னை வந்து ஏற்றிக் கொள்ள அவனுக்கு விடாமல் அழைத்தேன். பதிலே இல்லை. அசதியில் அப்படியே படுத்துறங்கிவிட்டேன். மறுநாளும் அவனுக்கு அழைத்தேன். அதே போல பதில் இல்லை என்றதும் எனக்குச் சந்தேகம் வந்துவிட்டது. நேராக வேலை முடிந்து வீட்டிற்குச் சென்றேன். வெளி விளக்கு அணையாமல் அப்படியே எரிந்து கொண்டிருந்தது. மோட்டாரின் ஹார்ன் அடித்தும் அழைத்தும் பார்த்தேன், அவனிடமிருந்து பதில் இல்லை. அவனோடு தொழிற்சாலையில் வேலை செய்யும் சிலருக்கு உடனே அழைப்பேசியின் மூலம் தொடர்பு கொண்டேன். அவன் அன்று வேலைக்கு வரவில்லை என்றும் நேற்றைய தினம் கூட ஏதோ அவசரம் என பாதியிலேயே தொழிற்சாலையிலிருந்து வெளியேறிவிட்டதாகத் தெரிவித்தார்கள்.

எனக்கு மேலும் அதிர்ச்சியாக இருந்தது. சொல்லாமல் எங்குப் போயிருப்பான் என்ன பிரச்சனை என எனக்கு விளங்கவில்லை. ஒருநாள் பொறுத்துப் பார்க்கலாம் என இருந்துவிட்டேன். மறுநாள் காலையில் மீண்டும் அவனுடைய அழைப்பேசிக்கு அழைத்தேன். கைப்பேசி அடைந்திருந்தது. மெல்ல தயங்கி அவனுடைய பெற்றோருக்குத் தொடர்பு கொண்டேன். அவர்கள் முதலில் பயந்துவிட்டார்கள்; பின்னர் எப்படியொ சமாளித்துவிட்டு உடனே காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். அவனுக்கு எதிரிகள் என்று யாரும் இருந்ததாகத் தெரியவில்லை.

ஆனால், அவனுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் இருந்தது. அவருடன் கடந்த வருடத்திலேயே கொஞ்சம் பிரச்சனையாகி விலகிவிட்டதாக என்னிடம் இரண்டுமுறை சொல்லியிருக்கிறான். அவள் பணம் கேட்டு அடிக்கடி தொந்தரவு செய்வதாக அவன் எப்பொழுதும் என்னிடம் சொல்வான். காதலில் உண்மை இல்லை என்றும் வருத்தப்பட்டுள்ளான். மேலும், அவன் வீட்டுப் பக்கத்து வீட்டுக்காரர் அவனுடன் இரண்டுமுறை சண்டை போட்டுள்ளார். வினோத்திற்குக் குடிக்கும் பழக்கம் உண்டு. ஆகவே, ஒருமுறை குடித்துவிட்டு அவர் வீட்டுக்குப் போய் சத்தம் போட்டதால் அந்த வீட்டுக் காரருக்கும் அவனுக்கும் கொஞ்சம் சிக்கல் இருக்கலாம் என நினைக்கிறேன். அவர் கொஞ்சம் கோபக்காரர். அவருடைய மனைவியைக்கூட அடித்துத் துன்புறுத்துவார் எனக் கேள்விப்பட்டுள்ளேன். காலையில் எழுந்து வீட்டின் முன் நின்று கொண்டு சொந்தமாகப் பேசிக் கொண்டிருப்பதை நான் பார்த்துள்ளேன். அவரையும் விசாரிப்பது நல்லது என நினைக்கிறேன்.

 

வினோத் அண்டை வீட்டாரின் வாக்குமூலம்:

வினோத் ஒரு நல்ல பையன். வீட்டில் உதவியென்றால் அடிக்கடி செய்வான். நாங்களும் அவ்வப்போது அவனுக்கு உணவு சமைத்துக் கொடுப்போம். விழாக்காலங்கள் அவன் ஜொகூருக்குப் போகவில்லை என்றால் எங்கள் வீட்டில்தான் இருப்பான். வீட்டில் நானும் என் மனைவியும் என் கடைசிப் பையன் மட்டும்தான் உள்ளோம். ஆகவே, அவன் இருந்த்து எங்களுக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருக்கும்.

நான் வழக்கமாக இரவில் சீக்கிரம் உறங்கிவிடுவேன். அன்று சலி மருந்து குடித்துவிட்டு பாதி மயக்கத்தில் இருந்தேன். வீட்டில் எல்லோரும் தூங்கிவிட்டார்கள். வழக்கமாக வினோத் வேலை முடிந்து ஆறு மணிகெல்லாம் வீட்டிற்கு வந்துவிடுவான். அன்று அவன் வரவே இல்லை. பாதி மயக்கத்தில் இருக்கும்போது அவனுடைய மோட்டார் சத்தம் மட்டும்தான் கேட்டது. அப்பொழுது மணி 9.00 இருக்கும். பிறகு கொஞ்ச நேரத்தில் நான் தூங்கிவிட்டேன். ஒன்றும் தெரியவில்லை. அதற்கு முந்தைய நாள் மட்டும் ஒரு ‘சாகா’ கருப்பு வர்ணம் கொண்ட கார் வெகுநேரம் அவன் வீட்டுக்கு கொஞ்சம் தள்ளி நின்றிருந்தது.

எனக்கு அவனுடைய நெருங்கிய நண்பன் முத்துவின் மீது கொஞ்சம் சந்தேகம் உண்டு. எப்பொழுதும் இவனிடம் பணம் கடன் கேட்டு தொல்லை கொடுப்பான். வினோத்தும் பணம் கொடுத்ததாகச் சொல்லியுள்ளான். அவனுக்கும் இவனுக்கும் பணம் தொடர்பாகச் சில நாள் பிரச்சனைகளும் வந்திருக்கின்றன. என்னிடமே வினோத் ஒருநாள் முத்துவினால் பிரச்சனையாக உள்ளது என்றும் சொல்லியிருக்கிறான். ஒரு வாரத்திற்கு முன் முத்துவிற்கும் வினோத்திற்கும் வீட்டின் முன்னே சண்டை. முத்துவைப் பிடித்து வெளியே தள்ளிவிட்டான். கொஞ்சம் வாய் சண்டையும் இருந்தது. அதன் பிறகு மீண்டும் முத்து வரப் போகத்தான் இருந்தான்.

 

சந்தேகத்திற்குரிய தடயம் 1: வினோத்தின் மோட்டார் வீட்டில் இல்லை, ஆனால் அவன் மோட்டாரில்தான் வீடு திரும்பியுள்ளான்.

சந்தேகத்திற்குரிய தடயம் 2: அவன் கொலை செய்யப்படுவதற்கு முந்தைய நாள் ஒரு கருப்பு நிற ‘சாகா’ கார் அவன் வீட்டின் முன் அல்லது கொஞ்சம் தள்ளி வெகுநேரம் காத்திருந்துள்ளது.

சந்தேகத்திற்குரிய தடயம் 3: வேலையிலிருந்து பாதியில் வெளியேறிய வினோத் இரவுவரை எங்குப் போயிருப்பான்?

சந்தேகத்திற்குரிய தடயம் 3: வினோத்திற்கு ஒரு பெண்ணுடனான தொடர்பு. அப்பெண்ணைப் பற்றிய தகவல்கள் இல்லை. வினோத் தொலைப்பேசியில் உரையாடிய எண்களில் அந்தப் பெண்ணைப் பற்றிய விவரங்களும் கிடைக்கப்படவில்லை.

சந்தேகத்திற்குரிய தடயம் 4: அவனுக்கு வேறு வகையிலான எதிரிகள் கிடையாது என்பதைக் காவல்துறை விசாரணையில் உறுதிப்படுத்தியுள்ளது.

 

தொழிற்சாலையில் வேலை செய்யும் வினோத்தின் நண்பன் முரளிதரனின் வாக்குமூலம்:

அன்று அவன் கொஞ்சம் பதற்றமாக இருந்தான். என்னிடம்கூட சரியாகப் பேசவில்லை. யாரிடமோ இரண்டு மூன்றுமுறை தொலைப்பேசியில் பேசிக் கொண்டிருந்தான். பிறகு வெளியேறிவன் தான். அன்று அவன் வழக்கத்திற்கு மாறாக்க் கொஞ்சம் வேறு மாதிரி தென்பட்டான். நானும் ஏதும் கேட்டுக் கொள்ளவில்லை. ஆனால், தொழிற்சாலையில் ஒரு வங்காளதேசியுடன் அவனுக்குப் பிரச்சனை இருந்தது. பலமுறை அதனால் அவர்களுக்கு வாக்குவாதங்கள் நடந்துள்ளன. வினோத் அவனை அடிக்கவும்கூட நினைத்துள்ளான். என்னிடமே வினோத் பலமுறை அந்த வங்காளத்தேசியை ஆள் வைத்து அடிக்கப் போவதாகவும் கூறியுள்ளான். அந்த வங்காளத்தேசி புத்த நம்பிக்கை உள்ளவன். அவன் செய்திருப்பான் என்றும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், சில நாட்களுக்கு முன்பிலிருந்து அந்த வங்காளத்தேசி வேலைக்கு வருவதும் இல்லை.

 

வினோத்தின் பின் வீட்டில் குடியிருக்கும் ரொசாலி முகமட் அவர்களின் வாக்குமூலம்:

 

மணி 9.40க்கு மேல் இருக்கும் என நினைக்கிறேன். எப்பொழுதும் அவனுடைய அறை விளக்கு மட்டும்தான் எரிந்து கொண்டிருக்கும். அன்று அவனுடைய சமையல் அறை விளக்கு மட்டும் வெகுநேரம் எரிந்து கொண்டிருந்தது. ஆனால், என்னால் நிச்சயமாகச் சொல்ல முடியும், அவன் மட்டும் இல்லை, என்னால் வேறொரு உருவத்தின் நிழலையும் அன்று பார்க்க முடிந்தது. மற்றப்படி நான் எதையும் சந்தேகிக்கவில்லை. உடனே உறங்க சென்றுவிட்டேன்.

 

கொலை தொடர்பான சில குறிப்புகள்:

***குறிப்பு: வினோத்துடன் வேலை செய்து கொண்டிருந்த அந்த வங்காளத்தேசியைக் காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கின்றனர். கொலை நடப்பதற்கு முந்தைய நாள் அவன் கள்ளத்தனமாக இங்குக் குடியேறியிருப்பதால் ஏதோ காவல்துறை சிக்கல் தொடர்பாகத் தலைமறைவாகிவிட்டதாகச் சிலர் கூறியுள்ளனர்.

*** கொலை நடப்பதற்கு முந்தைய நாள் வினோத்தின் அழைப்பேசிக்கு வந்த அனைத்து எண்களும் ‘விபரமில்லாத Private எண்களாகும்.

*** வினோத்தின் வீட்டில் மோட்டார் இல்லாததை அவனுடைய நண்பன் முத்து கடைசிவரை போலிஸ் வாக்குமூலத்தில் தெரிவிக்கவில்லை.

*** வினோத் இறப்பதற்கு முந்தைய நாள் இரவில் அவனுக்கொரு கனவு வருகிறது. அவன் ஒரு குளத்தில் குளித்துக் கொண்டிருக்கிறான். தாமரை பூக்கள் மிதந்து கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு பூக்களும் அவன் உள்ளத்தில் குதுகலத்தை உண்டாக்குகின்றன. மொத்தமாக அனைத்துப் பூக்களும் அவனை நெருங்கி வருகின்றன. அவனைச் சுற்றி மோதுகின்றன. மூச்சுத் திணறல் எடுக்கவே அவன் குளத்திலிருந்து எழுந்து ஓடுகிறான். தாமரைகள் சட்டென பாம்புகளாக மாறி அவனைத் துரத்துகின்றன.

 

யார் கொலையாளி?

 

சந்தேக நபர் 1: வங்காளதேசி

சந்தேக நபர் 2: பழைய ‘மர்ம’ காதலி

சந்தேக நபர் 3: பக்கத்து வீட்டுக்காரர்

சந்தேக நபர் 4: வினோத் நண்பன் முத்து

சந்தேக நபர் 5: ‘சாகா’ வகை கார்

உங்கள் நியாயங்களை/வாதங்களை முன்வைத்து யார் கொலை செய்திருக்கலாம் என்பதை முடிவு செய்யுங்கள்.

 

ஆக்கம்: கே.பாலமுருகன்

விமர்சன யுகத்தில் வாழ்கிறோம்- தொடர் 5 : படைப்பும் விமர்சனமும் வளர்வது வாசிப்பிலேயே)

 

பெரும்பான்மையானவர்களுக்கு எதற்கு வாசிக்க வேண்டும் என்கிற கேள்வி காலம் முழுவதும் நாவின் நுனியிலும் மனத்தின் ஆழத்திலும் தொக்கிக் கிடக்கிறது. விமர்சனம் என்பதன் அவசியத்தைப் பேசிக் கொண்டிருக்கும் நாம் வாசிப்பின் தேவையை முன்வைப்பதன் மூலம் விமர்சனத்தை மேலும் கூர்மையாக்க முடியும் என்பதையும் அறிந்து கொள்ள வேண்டியதாகிறது. விமர்சிப்பவர்களுக்கு இரண்டு முக்கியமான காரணங்கள் உள்ளன. ஒன்று, படைப்பைச் செம்மைப்படுத்த வேண்டும் என்பதும் மற்றொன்று வாசகர்களின் புரிதலுக்குள் புதிய சாத்தியபாடுகளைத் திறந்துவிடுவதற்கும் ஆகும். இவையிரண்டு நோக்கமும் இணையும் புள்ளியிலிருந்து ஓர் இலக்கிய உச்சம் தோன்றுகிறது. படைப்பும் விமர்சனமும் சேர்ந்து வளர்ந்தால் மட்டுமே அங்கு வாசிப்பின் தேவை முக்கியமானதாகின்றது.

ஏன் வாசிக்க வேண்டும்?

இக்கேள்வியை யார் கேட்டாலும் உடனே எனக்கு இன்னொரு கேள்வி மனத்தில் உதிக்கும். ஏன் சுவாசிக்க வேண்டும்? உயிர்வாழ்வதற்கான ஓர் அனுபவமே சுவாசிப்பு என ஓஷோ சொல்வதைப் போல இலக்கியம் என்பது வாழ்க்கையை அனுபவமாக ஆக்க முயலும் கலையாகும். வாசிப்பின் வழி வாழ்க்கையை அனுபவப்பூர்வமாக உணரும் ஒரு வாய்ப்பை வாசகன் பெற்றுக் கொண்டே இருக்கிறான். அதற்கான சாத்தியங்களை உள்ளடக்கிப் பெற்றிருப்பதுதான் நல்ல இலக்கியமும்கூட. விமர்சனமும் இதனை முன்வைத்தே தன் தேடுதல் வேட்டையைத் துவங்குகிறது.

பாரதி உலக இலக்கியங்களின் எல்லையற்ற வெளிகளுக்குள் இருந்து  எழுதி கொண்டிருந்தனாலேயே தமிழின் முதல் நவீன படைப்பாளன் என தன் படைப்புகளினூடே அறியப்படுகிறார். உலக இலக்கியம் என ஒன்று எப்பொழுது சாத்தியமானது? அத்தகைய புரிதல் பாரதிக்கு எப்பொழுது எழுந்தது? 18ஆம் நூற்றாண்டில் உலகத்தின் எல்லைகள் உடைந்து, எல்லை கோட்பாடற்ற உலகவெளி ஒன்று உருவான காலத்தில், மெல்ல மெல்ல காலணியாதிக்கம் பெருகத் துவங்கியது. அப்பொழுதுதான் மொழிப்பெயர்ப்பு இலக்கியங்கள் பரவின. அதன் வழியே உலக இலக்கியம் என்கிற சிந்தனை வளர்ந்தது. அமெரிக்கக் குடிமகனுக்கும் இந்தியக் குடிமகனுக்கும் வாழ்வில் நிகழும் அனுபவங்கள் இலக்கியங்களின் வழி அறிந்துகொள்ள வாய்ப்புகள் பெருகின.

அனுபவங்கள் என்பது ஒரு வட்டத்திலிருந்து சுழன்று பெரும்திரளாகி எல்லைகளைத் தாண்டி வர ஆரம்பித்தன. இவற்றால் இரண்டு நுட்பமான செயல்முறைகள் பலரால் கற்றுக்கொள்ளப்பட்டன. ஒன்று நம் சொந்த வாழ்க்கையை எப்படி இலக்கியத்தில் அனுபவப்பூர்வமான கலையாக்குவது என்பதையும் ஒரு பொதுவான வாழ்க்கை அனுபவம் எத்தகைய பாதிப்புகளைக் கொடுக்கும் எனும் கற்றலையும் உலக இலக்கியத்தின் வருகைக்குப் பிறகு எல்லோரின் பிரக்ஞைக்குள்ளும் படிந்தன. இந்தச் சிந்தனையோடு பாரதி பலவிதமான அடைப்புகளை உடைத்துக் கொண்டு எழுதியதால் மட்டுமே அவருடைய படைப்புகள் இன்றும் காலத்தைத் தாண்டி நிற்கும் படைப்பாகப் போற்றப்படுகின்றன.

இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் எத்தனை படைப்பாளிகள் ஒரு நல்ல வாசகர்களாக இருக்கிறார்கள் என்பதை அவர்களின் படைப்புகளே காட்டிக் கொடுக்கும். கூர்மையான விமர்சனத்தின் வழியே அவற்றை அறிய முடியும். உலக இலக்கிய வாசிப்பு நம் அனுபவத்தை விரிவாக்குகிறது. வாசிப்பினூடாக, வாழ்ந்து அறியும் வாழ்க்கை அனுபவத்தைவிட வாசித்தறிந்து கொள்ளும் வாழ்க்கை அனுபவம் பெருகுகிறது; மேலும் நம் கலைப்பார்வையை வடிவமைக்கிறது.

நமது விரிந்தப்பட்ட வாசிப்பு என்பது வாழ்க்கையின் மீது வைக்கப்படும் ஒரு பூதக்கண்ணாடியைப் போன்று நுட்பமான மன அலசலை உண்டாக்குகிறது. வாசிப்பு, இருட்டறைக்குள் சட்டென நம் கையில் அகப்படும் கைவிளக்காகிறது. நாமே அதனை இயக்கி நமக்கு வேண்டியதைத் தேடிக்கொள்ளும் அனுபவப்பூர்வமான கலையைக் கற்றுக் கொடுக்கிறது. ஆகவே, வாசிப்பின் தேவையை அறிந்துகொண்ட சமூகத்தில் படைக்கப்படும் படைப்புகளின் மீது வைக்கப்படும் விமர்சனமும் விமர்சகர்களும் நல்ல வாசகரகளாக இருக்க வேண்டியக் கட்டாயம் நேர்கிறது. குறிப்பாக, விமர்சகர்கள் உலக இலக்கிய வாசிப்பில் தன்னை ஈடுபடுத்தியவர்களாக இருக்க வேண்டிய அவசியமும் கருத்தில் கொள்ள வேண்டும். வாசிப்பு, படைப்பையும் வளர்க்கும்; விமர்சன அறிவையும் கூர்மைப்படுத்தும்.

 

  • கே.பாலமுருகன்

மொழிச் சிக்கலும் பன்முகச் சூழலும்

 

‘மொழி என்பது ஒரு தொடர்புக் கருவி மட்டுமல்ல; மனிதர்களுக்கிடையே ஓர் உளவியல் சமாதானத்தை வழங்கக்கூடியதும் ஆகும்’

ஆரம்பக் கல்வியை முடித்துவிட்டு இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் நம் இந்திய மாணவர்கள் எதிர்க்கொள்ளும் மிகப்பெரிய சிக்கல் பன்முகச் சூழலுக்குள் பொருந்திப் போக முடியாமையே ஆகும். சீன, மலாய் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுடன் உறவாடி, நட்பை ஏற்படுத்திக் கொள்ள நம் இந்திய மாணவர்களுக்குப் பெரும் தடையாக இருப்பது மொழிக் குறித்த சிக்கலே. மிகச் சிறிய வயதிலே அவர்கள் பன்முக சூழலுக்குள் மொழி ரீதியிலான சிக்கலை எதிர்க்கொண்டு விலகி தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். எந்தவொரு நட்பும் உறவும் மொழியைக் கொண்டு வெறும் தகவல்களையும் கட்டளைகளையும் மட்டும் பகிர்ந்துகொண்டு வளம் பெற முடியாது. ஒரு மொழியின் வழியாகத் தன் உணர்வுகளையும் கருத்துகளையும் வெளிப்படுத்தக்கூடிய ஆற்றல் பெற்றிருந்தாலே பன்முகச் சூழலின் கவனத்தைப் பெற முடியும்.

மலாய்மொழியில் அல்லது ஆங்கில மொழியில் உரையாட முடியாத அல்லது உரையாடத் தயங்கும் நம் மாணவர்கள் முதலில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்கிறார்கள். இதன் வழி தன் நட்பு வட்டத்தை இந்திய மாணவர்களுக்கே பாதுகாப்பாகக் கட்டமைத்துச் சுருக்கியும் கொள்கிறார்கள். பிறகு, இவ்விடைவேளி இனம் சார்ந்த அதீத உணர்வை வலுப்படுத்துகிறது. மொழிச் சிக்கலுள்ள மாணவர்கள் அவர்கள் யாருடன் உரையாடி உறவை உருவாக்கிக் கொள்ள முடியவில்லையோ அவர்களைத் தன் எதிரிகளாகக் கற்பித்துக் கொள்கிறார்கள். இதுவே, பின்னாளில் அவர்களுக்குள் இருக்கும் சிறு உளவியல் வேறுபாடுகளுக்கான வடிக்காலை உருவாக்க இயலாமல் வெடித்துச் சிதறுகிறது.

ஒரு மொழியின் வழி நம் உணர்வுகளையும் நியாயங்களையும் முன்வைத்துவிட முடியும் என்றாலே வெவ்வேறு இனத்தைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் ஓர் உளவியல் சார்ந்த புரிதலை உருவாக்கிக் கொள்ள முடியும். அவ்வுளவியல் நிலைபாடுகளே அவர்களைத் தொடர்ந்து உரையாடுவதற்கான ஒரு சமாதானத்தையும் வாய்ப்பையும் வழங்கிவிடுகிறது. ஆகவே, இடைநிலைப்பள்ளிகளில் நம் மாணவர்கள் அங்கு அவர்கள் சந்திக்கும் முதன்முறையான பன்முகச் சூழலை எதிர்க்கொண்டு சமாளித்து அங்கிருந்து வெற்றிப் பெற்று வெளியேற வேண்டுமென்றால் அவர்களுக்கு மொழிச் சிக்கலே இருக்கக்கூடாது.

இப்பிரச்சனையைக் களைய ஆரம்பப்பள்ளிகள் தமிழ், மலாய், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் மாணவர்கள் திறம்படப் பேசும் திறனை வளர்க்க முன்வர வேண்டும். தமிழ் அறவாரியம் ஆறாம் ஆண்டு முடிந்ததும் 21 நாட்கள் மொழி சார்ந்த பயிலறங்குகளை நடத்துவது ஒருவகையில் மிக முக்கியமான முயற்சியாகும். அப்பயிலரங்கில் அவர்கள் மலாய் மொழியில் பேசிப் பழகுகிறார்கள்; படைப்புகளை ஒப்புவிக்கிறார்கள். பாராட்டத்தக்க ஒரு பயிலரங்கம் என்றாலும் இதுபோன்ற பன்மொழிப் பயிற்சிகளை முதலாம் ஆண்டிலிருந்தே பள்ளிகள் துரிதப்படுத்த வேண்டும் என நினைக்கிறேன்.

21ஆம் நூற்றாண்டின் மாணவன் ஒரு மொழிக்கு மேல் தெரிந்து வைத்திருப்பது மிக முக்கியமாகும். அதனைப் பெற்றோர்களும் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். தன் மகனுக்கு/மகளுக்குத் தாய்மொழியில் இருக்கும் தொடர்பாற்றல் ஏன் பிறமொழிகளில்/ பன்முக மொழிகளில் இல்லை என்பதை அவர்கள் கவனப்படுத்த வேண்டும். எனக்குத் தெரிந்து கம்பத்தில் வாழும் பல ஏழை மாணவர்கள் மலாய்மொழியில் அத்தனை சிறப்பாகவும் இயல்பாகவும் பேசுவதைக் கண்டிருக்கிறேன். அப்பயிற்சியை அவர்கள் பயிரலங்கத்திலோ அல்லது பிரத்தியேக வகுப்புகளிலோ பெறவில்லை; மாற்றாக தன் அன்றாட வாழ்விலிருந்து வாழும் சூழலிலிருந்து பெற்றிருக்கிறார்கள்.

வசதிமிக்க அல்லது கெட்டிக்கார மாணவர்கள் எத்தனையோ பேர் மலாய்மொழியில் பிறருடன் இயல்பாகத் தொடர்புக்கொள்ள தயங்குவதை நாம் கண்டிருக்கக்கூடும். இச்சிக்கலை நாம் ஆரம்பப்பள்ளியிலேயே கவனித்துக் களைய வேண்டும். இல்லையேல் நாம் உருவாக்கி அனுப்பும் கெட்டிக்கார மாணவர்கள்கூட மொழிச் சிக்கலால் இடைநிலைப்பள்ளிகளில் தொடர்புத்திறனற்று தனிமைப்பட்டு வாழ நேரிடும். இத்தனிமை மிகவும் ஆபத்தானது என்று முன்பே குறிப்பிட்டிருந்தேன்.

ஆரம்பப்பள்ளிகளில் நாம் ஏற்கனவே நடைமுறையில் இருந்த சில திட்டங்களை மீண்டும் துரிதப்படுத்தி புதுப்பித்து அமல்படுத்தினாலே ஒரு பன்முகத் திறன் கொண்ட மாணவனை உருவாக்கிவிட முடியும் என்பதில் சந்தேகமில்லை. ஒரு குழந்தை சிந்திக்கத் துவங்குவது தன் தாய்மொழியில்தான் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால், அக்குழந்தை வளர்ந்து வந்து நிற்கப் போகும் நிலம் பன்முகக் கலாச்சாரம் கொண்டவை என்பதில் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தாய்மொழி மீதான அன்பும் பற்றும் வளத்துடன் இருக்க, நாம் வாழும் நிலத்தின் இன்னபிற மொழிகளிலும் ஆற்றல் பெற்றிருப்பது அவசியமாகும்.

சில திட்டங்கள்:

  1. மொழி வாரங்கள் – அவ்வாரம் மலாய்மொழி வாரம் என்றால் அனைத்து மாணவர்களும் தன் நண்பர்களிடமும் ஆசிரியர்களிடமும் பள்ளி ஊழியர்களிடமும் மலாய் மொழியில்தான் உரையாட முடியும்; கருத்துகளை வெளிப்படுத்த முடியும்.
  2. மலாய்மொழிப் போதிக்கும் ஆசிரியர் தன்னிடம் மாணவர்கள் மலாய்மொழியிலேயே உரையாட வழிவகுக்க வேண்டும்.
  3. மலாய் நாவல்கள்/ மலாய் சிறுகதைகளை வாசித்து அதைப் பற்றி மலாய் மொழியிலேயே பேசத் தூண்டலாம். (இதற்குப் பரிசுகளையும் வழங்கினால் மாணவர்கள் ஆர்வத்துடன் இருப்பர்)
  4. தினம் ஒரு தகவல் – தினமும் ஒரு மாணவனைத் தேர்ந்தெடுத்து அவனிடம் ஒரு தகவலைக் கூறி அதை மலாய்மொழியில் வகுப்பில் கூறப் பணித்தல். (ஒரு நெருக்கடி வரும்பொழுது எப்படியும் மாணவர்கள் பேச முயல்வார்கள்)

 

இப்படி இன்னும் பல திட்டங்களைப் பற்றி நாம் சிந்தித்து அதனைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். பெற்றோர்கள் வீட்டிலும் மெகாத் தொடர்களைப் பார்ப்பதை நிறுத்திவிட்டு மலாய், தமிழ் ஆங்கிலச் செய்திகளைப் பார்க்க உங்கள் பிள்ளைகளைத் தூண்ட வேண்டும்.

 

  • கே.பாலமுருகன்

விமர்சனத்திற்கும் பின் நவீனத்துவத்திற்குமிடையே உள்ள தொடர்பின் அவசியங்கள் – (தொடர் 4)

அடுத்தத் தொடரில் இலக்கியத்தின் மொழிப்பயன்பாடு குறித்து உரையாடுவதற்கு முன்பாக

பின்நவீனம் என்றால் என்ன என்கிற தேடலைவிட பின்நவீனம் என்றால் இதுதான், இவ்வளவுத்தான் என்கிற அவசரமான முன்முடிவுகள் மலேசியச் சிந்தனைப்பரப்பில் நிலைத்துவிட்டது. நவீனத்துவத்தின் விளைவுகளால் உருவான ‘அதிகார மையங்கள்’, மெல்ல கண்டடையப்பட்ட பின் உருவான சிந்தனைமுறை என்கிற அளவில் பின்நவீனம் பற்றிய ஒரு தீவிரமான கலந்துரையாடல்கூட இங்குப் பரவலாக நிகழவில்லை என்பதுதான் நிதர்சனம்.

அவ்வகையில் விமர்சனம் பற்றி நாம் அக்கறையுடன் உரையாடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் விமர்சனமுறையில் பின்நவீன சிந்தனை மிகவும் அவசியம் என்றே நினைக்கிறேன். கடந்த சில வருடங்களுக்கு முன் (2009ஆம் ஆண்டு) இங்கு உருவான பின்நவீன சர்ச்சையில் நானும் ஈடுப்பட்டிருந்தேன். ஆனால், அப்போதைய சூழலில் விவாதிக்க வேண்டும் என்கிற துடிப்பில் மட்டுமே ஆழ்ந்திருக்க நேர்ந்தது. அதன் பிறகு பின்நவீனம் குறித்த தீவிர வாசிப்பை மேற்கொண்டு கூடுதலான புரிதல் உருவான சமயங்களில் விவாதத்தில் ஆர்வமின்றி போயிற்று.

ஆகவே, விமர்சன சூழலுக்குப் பின்நவீனத்துவம் தொடர்பான சிந்தனை விரிவாக்கம் தேவைப்படும் பொருட்டு இங்குக் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

 

எப்படி வெகு எளிமையாகப் பின்நவீனத்துவ சிந்தனையைப் புரிந்து கொள்ள முடியும்?

எடுத்துக்காட்டாகத் தாத்தா குடும்பத்தில் செய்து வரும் ஒரு பழக்கத்தை அப்பா எந்தக் கேள்வியும் எழுப்பாமல் செய்து வருகிறார் என வைத்துக் கொள்வோம். அவரிடம் கேட்டால் எந்தப் பதிலும் இருக்காது. எனக்கு முன் இருந்தவர்கள் செய்தார்கள்; ஆகவே, நானும் செய்கிறேன் என்கிற ஒரு பழமை போக்குத் தெரியும். ஏற்கனவே சமூகத்தில் கட்டமைக்கப்பட்டதை எவ்வித மாற்றமும் செய்யாமல் பின்பற்றுவதைக் காலத்திற்கேற்ற சிந்தனை புழக்கமற்ற ‘பழமைவாதம்’ எனச் சிந்தனையாளர்கள் குறிப்பிடுகிறார்கள். அதையே, அப்பாவின் தம்பி தன் குடும்பத்தில் நவீன முறையில் அப்பழக்கத்தைப் பின்பற்றுகிறார் என்றால் அதை நவீனத்துவம் எனச் சொல்லலாம்.

 

தாத்தா அம்மை நோய் வந்தால் வேப்பிளையை வாசலில் கட்ட வேண்டும் ஒரு சிந்தனை கட்டமைக்கப்படுகிறது.
அப்பா அம்மை நோய் வந்தால் வேப்பிளையை வாசலில் கட்ட வேண்டும் எனச் சொல்கிறார். பின்பற்றப்படுதன்வழி அதுவொரு மரபாகின்றது.
சிற்றப்பா தன் வீட்டின் வாசலிலேயே ஒரு வேப்பிளை மரத்தை நடுகிறார். காலத்திற்கேற்ற முடிவுநவீனத்துவம்
நான் ஏன் வேப்பிளையை வாசலில் கட்ட வேண்டும் எனக் கேள்வி எழுப்புகிறேன். அதன் பதில்களை விவாதிக்கிறேன். தாத்தாவின் மரபியலை மறுக்காமல்; அதே சமயம் அதை அப்படியே ஏற்காமல் அதைப் பற்றிய ஓர் உரையாடலை உருவாக்குகிறேன். பின்நவீனத்துவம்சிந்தனை மாற்றம்

 

 

மேற்கண்ட பட்டியலைக் கொண்டு பின்நவீனத்துவத்தை அளவிடவோ அல்லது உரையாடவோ முடியாது என்பது தெரிந்ததுதான். ஆயினும், எளிய புரிதலுக்கு இதனைப் பகிர்ந்துள்ளேன். ஏற்கனவே கட்டமைக்கப்பட்ட மரபுகளைக் கேள்வி எழுப்பி அதைப் பற்றிய காலத்திற்கேற்ற புதிய சிந்தனையை அல்லது உரையாடலைத் துவக்கி வைக்கத் தூண்டும் வேலையைத்தான் பின்நவீனம் செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

எதுவொன்று விடுதலை, புரட்சி, மாற்றம் என்கிறப் பெயரில் ஒடுக்கும் அதிகாரங்களாக மாறுகிறதோ அதைத்தான் பின்நவீனத்துவம் மறுக்கிறதே தவிர மரபை முற்றிலுமாக மறுக்கும் குணம் பின்நவீனத்துவச் சிந்தனைக்கு இல்லை என்பதை முதலில் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆகவேதான், பௌத்த சிந்தனைக்கும் பின்நவீனத்துவத்திற்கும் பலவகைகளில் தத்துவார்த்த ஒற்றுமைகள் தோன்றுவதை உணர முடிகிறது. பௌத்தம் விடுதலைக்கான வாசல் ஆகாயத்தில் இல்லை; உன் உள்ளத்தில்தான் இருக்கிறது என்கிறது. அதையே பின்நவீனத்துவம் விடுதலை என்பதைக் கூட்டாகச் சேர்ந்து உருவாக்க முடியாது; முதலில் விடுதலை என்பது தனிமனிதனிடமிருந்து அவனைக் கட்டமைத்து வைத்திருக்கும் அடக்குமுறைகளையும் பழமைவாதங்களையும் நோக்கி உரையாடுவதன் வழி உருவாக வேண்டும் என்கிறது.

நவீனத்துவம் அனைத்தையுமே ஒரு நிறுவனமாக மாற்றி வைக்கிறது. விடுதலை, புரட்சி, பெண்ணியம், இலக்கியம், அரசியல், பண்பாடு என அனைத்தையுமே நவீனத்துவம் ஒரு குழுவாக/நிறுவனமாக அமைக்கிறது. பின்னர், அக்குழுவிற்கு, அவ்வமைப்பிற்குப் பொறுப்பேற்க ஓர் அதிகாரப் போராட்டத்தையும் உருவாக்கிவிடுகிறது. அதன்வழி மீண்டும் யாருக்குப் பதவி, யார் தலைவர் என்கிற மரபார்ந்த பழமைக்குள்ளே சிக்கி தன் முன்னெடுப்புகளைத் தொலைக்கின்றன. இதிலிருந்து மாறுப்பட்டு அதிகாரமாகும் நிறுவனமாகும் நவீனத்துவத்தின் அனைத்து விளைவுகளுக்கும் எதிராகப் பின்நவீனத்துவம் புதிய சிந்தனையைத் தோற்றுவிக்கிறது.

இலக்கியத்தை முன்வைத்து உருவாக வேண்டிய பின்நவீனத்துவ விமர்ன நிலை

எப்படி ஒரு சிறுகதையை அல்லது இலக்கியப் பிரதியைப் பின்நவீனத்துவ சிந்தனைமுறை கொண்டு விமர்சிக்க முடியும் என்பதைக் கவனிக்கலாம்.

“……..அப்பா அதட்டியதும் உடனே அம்மா அறைக்குள் நுழைந்தார். அதன் பிறகு அவரிடமிருந்து எந்தப் பேச்சும் இல்லை. அப்பாவின் எந்த முடிவுக்கும் பொறுப்பான குடும்பத் தலைவியாக அம்மா ஆமோதித்துவிடுவார்.”

ஒரு சிறுகதையில் மேற்கண்ட வரியை வாசிக்கும் ஒரு வாசகனுக்கு மூன்று நிலையிலான விமர்சன உணர்வு ஏற்பட வாய்ப்புண்டு.

ஆமாம், அப்பாத்தான் குடும்பத் தலைவர். சரியான கூற்று. ஏற்கனவே உள்ள ஆணாதிக்கத்தை ஏற்கும் பழமைவாத உணர்வு.
ஏன் அப்பாத்தான் முடிவெடுக்க வேண்டுமா? அம்மாவும் சேர்ந்து முடிவெடுக்கக்கூடாதா? இக்கூற்றைக் கொஞ்சம் வடிவமைக்க வேண்டும். நவீனத்துவ சிந்தனை –மரபைக் கொஞ்சம் வடிவமைத்துக் கொள்கிறது.
குடும்பங்களில் அதிகார சக்தியாக இருப்பது அப்பாத்தான். இது ஓர் ஆணாதிக்க சிந்தனையை வழியுறுத்தும் வரி என்பதால் இதனைக் கதையிலிருந்து முற்றிலுமாகத் தவிர்த்தல் வேண்டும். பின்நவீன விமர்சனப் பார்வை.

 

இதில் ஒரு வாசகன் எந்த நிலையிலிருந்து ஒரு சிறுகதையையும் அல்லது இலக்கியப் பிரதியையும் அணுகி தன் சிந்தனையையும் கருத்தையும் முன்வைக்கப் போகிறான் என்பதை ஆலோசித்துப் பார்க்க வேண்டும். இப்பகிர்வு வாசகனுக்குள் இலக்கியப் பிரதியைத் தாண்டிய பின் உருவாக வேண்டிய விமர்னப் போக்கின் மீது ஏற்பட வேண்டிய மாற்றங்கள் பற்றிய ஒரு பார்வை மட்டுமே.

பின்நவீனத்துவம் என்கிற சொல் எதிரான ஒரு மனோநிலையை உருவாக்கிவிட்ட சூழலில் அது குறித்து இதைவிட இன்னும் ஆழமாக உரையாட வேண்டியுள்ளது. ‘சொப்பனசுந்தரியை யார் வைத்திருந்தார் எனக் கவலைப்படுவதை நிறுத்திவிட்டு’ நம்மை ஆட்கொண்டிருக்கும் வெள்ளைத்தான் அழகு, உயர்வு என்பதைப் போன்ற வெள்ளைமைய சிந்தனையிலிருந்தும், மேற்குல அறிவாளிகள்தான் சிறந்தவர்கள் என்கிற பின்காலனிய அடிமைப்புத்தியிலிருந்தும் விலகி நம் பண்பாட்டுக்குள்ளிருந்து நம் இலக்கியங்களுக்குள்ளிருந்து புதிய திறப்புகளை/புரிதல்களை நோக்கி சிந்திக்கத் துவங்க வேண்டும் என்கிற ஒரு நெருக்குதலை மட்டுமே பின்நவீன விமர்சனப் போக்கு வழங்குகிறது.

ஒரு பிரதியை வாசிக்கும்போது நாம் நமக்குள்ளே கேள்விக்கேட்டுக் கொள்ள வேண்டியது, இப்பிரதி ஏற்கனவே பலரால் சொல்லிச் சொல்லி சலித்த பழமையையே மீண்டும் பேசுகிறதா அல்லது அப்பழமைகள் குறித்து, மரபுகள் குறித்து விசாரணையை முன்வைக்கிறதா, மறுகண்டுபிடிப்பு செய்கிறதா என்பதுதான். அத்தகைய நிலையில் ஒரு வாசகனாக ஒரு வினர்சகனாக நாம் முன்னகர்ந்து வந்துள்ளோம் என்பதை அறிவிக்க முடியும்.

  • கே.பாலமுருகன்

(தொடரும்)

விமர்சன யுகத்தில் வாழ்கிறோம் (தொடர்- 3) ‘வாசிப்பில்லாத படைப்பாளிகளின் படைப்புகளில் எப்பொழுதும் ஒரு சாயம் வெளுத்துப் போகக் காத்திருக்கும்’

critics-600x400

ஏன் விமர்சிக்க வேண்டும்? விமர்சனம் என்றால் என்ன? அதனுடைய பாதிப்புகள் என்ன? விமர்சனத்திற்குரிய மொழி எப்படி இருக்க வேண்டும்? எனக் கடந்த கட்டுரைகளில் கவனித்துவிட்டாயிற்று. சங்க இலக்கியம் தொடங்கி இன்றையநாள் எழுதப்படும் நவீனத்துவ இலக்கியம்வரை அனைத்துமே விமர்சனங்களின் ஊடே முன்னகர்ந்து வந்திருக்கிறன. மேலைநாட்டு இலக்கியம், செவ்விலக்கியம், நாட்டுப்புற இலக்கியம், பின்நவீன இலக்கியம், உலக இலக்கியம், மரபிலக்கியம், சிறுவர் இலக்கியம் என இலக்கியத்தின் கிளைகள் வளர்ந்தோங்கி நிற்கும் ஒரு காலக்கட்டத்தைத் தாண்டி இன்று அவையாவற்றையும் மீள்வாசிப்பு செய்து விமர்சிக்கும் விமர்சன சார்ந்து உரையாடும் ஒரு விமர்சன யுகத்தில் இருக்கிறோம். விமர்சனமின்றி ஒரு கலை ஏற்கப்பட்டிருந்தால் அக்கலை எப்பொழுதோ இறந்து போயிருக்கும். கலையின் இயல்பு துளிர்ப்பது என்றால் விமர்சனத்தின் பாங்கு அத்துளிர்ப்பினை ஊடறுத்துக் கத்திரித்து களையெடுத்து அதனைச் செம்மைப்படுத்துவது போன்றாகும்.

2017ஆம் ஆண்டு விமர்சனக் கலைக்குரிய வாசல்களைத் திறந்துவிடும் என நம்புகிறேன். ‘கடை விரித்தேன்;கொள்வார் இல்லை’ என்பார்கள். வாசகன் மிக முக்கியமானவன். வாசிப்பு ரீதியில் நாம் அடைந்த முதிர்ச்சியையும் அனுபவத்தையும் பரிசோதித்துக் கொள்ள நமக்கான ஓரே களம் விமர்சனம்தான். ஒரு வாசகனால் முன்னெடுக்கப்பட வேண்டிய கலை விமர்சனம் ஆகும். எழுத்தாளரே இன்னொரு எழுத்தாளரை விமர்சித்துக் கொள்ளும் ஒரு நிலையைத் தாண்டி வாசகன் விமர்சனத்திற்குரிய மொழியனுபவத்தையும் படைப்பிலக்கிய பார்வை நுணுக்கங்களையும் பெற்று இலக்கியத்தை நகர்த்தும் ஒரு நிலைக்கு வளர வேண்டும். எழுத்தாளனைவிட வாசகன் மிகவும் விசுவாசமானவன். ஓர் எழுத்தாளன் இன்னொரு எழுத்தாளனின் படைப்பை வாசிக்க நேர்கையில் இருக்கும் பாகுபாட்டுணர்வு, திறமையான வாசகனிடம் இருக்க வாய்ப்பில்லை. அவன் ஒரு தராசில் படைப்பை வைத்துவிட்டு இன்னொரு தராசில் தன் வாசிப்பனுபவத்தை வைக்கிறான்.

 

விமர்சன நுணுக்கத்தை எப்படிப் பெறுவது?

எப்படி ஒரு வாசகன் விமர்சிக்கும் நுணுக்கங்களைப் பெற முடியும் என ஓர் ஆரம்பநிலை வாசகனிடம் கேள்விகள் இருக்க வாய்ப்புண்டு. ‘அருமை’, ‘சூப்பர்’, ‘அருமையான கதை’ என்கிற முகநூல் சொல்லாடல்களைத் தாண்டி வர தொடர்வாசிப்பே ஒருவனைத் தேர்ந்த வாசகனாக மாற்றுகிறது. விமர்சனம் தொடர்பான நூல்களை வாசிக்கும்போது அவரவர் பார்வையில் எப்படியெல்லாம் விமர்சிக்கலாம் என்கிற ஒரு கருத்தினையையும் பெற்றுக் கொள்ள முடியும். இக்கட்டுரை அத்தகைய சில விசயங்களை மட்டும் அறிமுகப்படுத்த விளைகிறது.

விமர்சிக்கும்போது ஒரு வாசகன் கருத்தில் கொள்ள வேண்டியவற்றுள் சில:

  • ஒரு சிறுகதை முன்வைக்கும் கருப்பொருள்/ சிக்கல்/ வாழ்க்கை/ அனுபவம் ஆகியவற்றை கூர்ந்து கவனித்தல் வேண்டும்.
  • மொழிப்பயன்பாட்டை விசாரணை செய்ய வேண்டும்.
  • பாத்திர வார்ப்பு

அறிமுகநிலையில் இவை மூன்றினை கருத்தில் கொண்டு மீள்வாசிப்பு செய்யும்போது துரிதமான ஒரு விமர்சனப் பார்வையை ஒரு வாசகன் பெற முடியும் என நினைக்கிறேன். இம்மூன்றினையும் மூலையில் பொறுத்திக் கொண்டு வாசிக்கத் தொடங்குவதைவிட மறுவாசிப்பில் விமர்சன நோக்குடன் அப்படைப்பை அணுகும்போது மட்டுமே விமர்சினத்திற்கான முனைப்பு தோன்றும். அதனை ஒருங்கிணைத்து புறவொழுங்குடன் எழுதிடவும் துணைப்புரியும்.

mw-bd501_sm10th_20130531161626_mg

சிறுகதைக்குரிய கருப்பொருள்/கருத்து/அனுபவம் ஆகியவற்றை ஆராய்தல்

பெரும்பாலும் இன்றைய நவீன சிறுகதைகள் கருப்பொருளைத் தாங்கி படைக்கப்படுவதில்லை. ஒரு தருணத்திற்குள் ஒரு நிகழ்விற்குள் யதார்த்தமாக அவையாவும் புதையுண்டு இருப்பதை ஒரு வாசகனோ விமர்சகனோ கண்டுபிடித்து சமூகத்துடன் உரையாடுகிறான். ஒரு படைப்பு விட்டுச் செல்லும் இடைவேளிக்கும் அவ்விடைவேளியின் ஊடாக ஒரு விமர்சகன் கண்டறியும் நுட்பமான தேடலும்தான் இலக்கிய நுண்ணுணர்வை உண்டாக்குகிறது. ஆகவே, இன்றைய நவீன சிறுகதை குறித்தத் தொடர் உரையாடலுக்கு விமர்சனத்தின் பங்கு எத்தனை அவசியம் என அறிய முடியும்.

காலம் கடந்தும் நிற்கும் படைப்புகள்; காலாவதியாகி நிற்கும் படைப்புகள்; சமக்காலத்தில் நிற்கும் படைப்புகள்; காலம் கடந்தவைகளை சமக்காலத் தராசில் வைக்கும் படைப்புகள் எனப் படைப்பிலக்கியம் முன்வைக்கும் கருப்பொருள்கள்/கருத்தியல் ஆகியவற்றை நான்கு வகையிலும் பிரித்தறிந்து விவாதிக்கலாம். அதனைத் தொடர்புப்படுத்தியே ஒரு வாசகன்/விமர்சகன் மேற்கொண்டு ஒரு படைப்பை ஆராய முடியும்.

 

  1. காலம் கடந்தும் நிற்கும் படைப்புகள்

 

வண்ணநிலவன் எழுதிய ‘எஸ்தர்’ சிறுகதையை இன்று வாசித்தாலும் பழமையானதாகத் தெரியாது. அத்தகைய உணர்வை அப்படைப்பு வழங்காது. பஞ்சம் காரணமாகப் பிழைப்புத் தேடிப் போகும் ஒரு குடும்பம் அவ்வீட்டில் உடன்வர இயலாத நிலையில் இருக்கும் ஒரு பாட்டியைக் கருணை கொலை செய்கிறது. இதுதான் அச்சிறுகதை முன்வைக்கும் வாழ்க்கை. பஞ்சத்தின் விளைவுகளில் ஒன்றாக அச்சிறுகதை ‘விட்டுச் செல்வதன்’ பின்னால் இருக்கும் குரூரங்களைக் காட்சிப்படுத்துகிறது. ஆயினும், இக்காலம் சந்திக்கும் அக/புற சிக்கல்கள் வேறானவை. காலம் நகர்ந்து வேறு சூழலுக்குள் வந்துவிட்டது. ‘எஸ்தர்’ சிறுகதையை இப்போதைய உலகத்தில் இருக்கும்; நவீன பிரச்சனைகளின் வீச்சில் பழக்கம்கொண்ட மனத்துடன் வாசிக்க நேரும் ஒரு வாசகனுக்கு அவை உறுத்தாத ஒரு படைப்பிலக்கிய அனுபவத்தைத் தரும்.

அச்சிறுகதையின் தேர்ந்த ‘படைப்பிலக்கிய உச்சம்தான்’ எத்தனை காலம் கடந்தாலும் அப்படைப்பைத் தாங்கிக் கொண்டிருக்கிறது என்பதை உணர முடியும். வாழ்வின் தீராத எப்பொழுதும் இசைத்துக் கொண்டிருக்கும் திகட்டாத இசை அவை. இத்தகைய திகட்டாத ஒரு சிறுகதை உருவாவதற்கு மொழியும் ஒரு பெரும் பங்களிப்பைச் செய்கிறது என்றே சொல்ல வேண்டும். இவையாவும் நாம் வாசிக்கத் துவங்கும் முன்பே படைக்கப்பட்டவை/ நம் காலத்திற்கு முந்தியவை என்பதை உணர வேண்டும். அப்படைப்பு உருவாக்கப்பட்ட அக்காலத்தின் தேவையையும் இலக்கிய சூழலையும் பொருட்படுத்தியே அப்படைப்பை ஒரு வாசகன்/விமர்சகன் உற்றாராய முடியும். 1980களில் எழுதப்பட்ட ஒரு சிறுகதையை 2020ஆம் ஆண்டில் வைத்து இதுவெல்லாம் ஒரு சிறுகதையாக முடியுமா? இப்பொழுது எழுதப்படும் எஸ்.செந்தில்குமாரின் சிறுகதையைப் போல இருக்கிறதா அல்லது சு.யுவராஜன் சிறுகதையைப் போல இருக்கிறதா என விமர்சிக்க முயலும்போது நாம் நினைக்கும் விமர்சன ஒழுங்கு உடைந்துவிடுகிறது. ஆகவே, ஒரு படைப்பு எழுதப்பட்ட காலத்தை வாசகன் கருத்தில் கொள்வது அவசியம்.

vannanilavan-sisulthan1

  1. காலாவதியாகி நிற்கும் படைப்புகள்

இதுபோன்ற படைப்புகள் நிற்கும் எனச் சொல்வதைவிட கரைந்து காணாமல் போய்விடும் என்றுத்தான் சொல்ல வேண்டும். முன்பிருப்பவர்கள் சொன்னதையே அவர்கள் சொல்லியப் பாணியிலேயே படைப்பாக்குவது அப்படைப்பிற்கு மிகுந்த பலவீனமானதாகும். இதனைப் பரந்தப்பட்ட வாசிப்புள்ள வாசகன் கண்டறிந்துவிடுவான். வெகு இயல்பாக இச்சிறுகதை எந்தச் சாயலில் உள்ளது என்பதைச் சுட்டிக் காட்டிவிடுவான்.

ஆகவேதான், எழுத்தாளர் வல்லிக்கண்ணன், சுந்தர ராமசாமி ஆகியோர்கள் எப்பொழுதும் தன் நேர்காணலில் சொல்லும் விடயத்தை சகப் படைப்பாளிகள் கவனத்தில் கொண்டு வர வேண்டும். ‘வாசிப்பில்லாத படைப்பாளிகளின் படைப்புகளில் எப்பொழுதும் ஒரு சாயம் வெளுத்துப் போகக் காத்திருக்கும்’. சொன்னதையே திரும்பச் சொல்லல் என்பதைக்கூட சில சமயங்களில் அதன் தேவை குறித்து அனுமதித்துக் கொள்ளலாம். ஆனால், சொன்ன விசயத்தை, அவை சொல்லப்பட்ட விதத்திலேயே திரும்பச் சொல்லல் என்பது படைப்பிலக்கியம் பொறுத்தமட்டில் மிக மோசமானவை என்பதை வாசகன் எப்பொழுதும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதுபோன்ற படைப்புகளை அவன் நிராகரிக்கவும் துணிய வேண்டும்.

  1. சமக்காலத்தில் நிற்கும் படைப்புகள்

 

‘நான் இப்பொழுதும் இறங்கும் ஆறு’ என்கிற சேரனின் ஒரு கவிதை இவ்வேளையில் ஞாபகத்திற்கு வருகிறது. இருத்தலியல் தொடர்பான நல்ல உதாரண வரி. கண்ணாடியைப் போன்று சமக்காலத்தைப் பிரதிபலிக்கும் வகையிலான இலக்கியங்கள் மிக முக்கியமானவையாகும். நவீன காலத்தினைப் பதிவு செய்யும், நவீன சமூகத்தின் அக/புறச் சிக்கல்களை உரையாடும் இலக்கியங்களை ஒரு வாசகன் அடையாளம் காண முடியும். ஒரு சமூகம் பத்து வருடத்திற்கு முன் எதிர்க்கொண்ட பிரச்சனைகளும் தற்சமயம் எதிர்க்கொள்ளும் சிக்கல்களும் நிச்சயம் பலவகைகளில் மாறுப்பட்டு வந்திருந்திருக்கும். அதனைப் பதிவு செய்வதில், கொண்டு வந்து விவாதிப்பதில் இலக்கியத்திற்கும் பங்குண்டு.

‘நினைவேக்கம்’, ‘பிரிவேக்கம்’ ஆகிய அகம் சார்ந்த பிராந்திய உணர்வுகளின் வெளிப்பாட்டில் பதியப்படும் இலக்கியங்கள் பெரும்பாலும் சமக்காலத்தினைப் பொருட்படுத்தத் தவறிவிடும். இதனை ஒரு வாசகன் நன்கு உணர்ந்து வாசிப்பை மேற்கொள்ள வேண்டும். ஒரு படைப்பிற்குச் சமக்கால வாழ்வைப் பதிவு செய்வதில் அக்கறை இருத்தல் வேண்டும் என்பதனை ஒரு விமர்சகன் நன்குணர்ந்து தன்னுடைய வாசிப்பின் வழி மதிப்பிடுதல் முக்கியமாகும்.

 

  1. காலம் கடந்தவைகளை மீட்டெடுத்துப் பேசும் படைப்புகள்

 

ஒரு சில படைப்புகள் காலம் தாண்டிய பிரச்சனைகளை/ வாழ்க்கையை மீட்டுக் கொண்டு வந்து உரையாடும் தன்மைமிக்கவையாகும். ஆனால், அவை முன்பு சொல்லப்பட்ட விதத்திலிருந்து மாறுப்பட்டு அப்படைப்பாளரால் வேறுவகையில்/ வேறு உத்தியில் ‘utilization’ செய்யப்படுகிறது. இதனை ஒரு வாசகன்/விமர்சகன் நன்கு உற்றாராய வேண்டியுள்ளது. உடனே ஒரு படைப்பு பழையது என மறுக்கும் முன்பு அப்படைப்பு சொல்ல விழையும் கருப்பொருள் மீண்டும் சொல்லப்படுவதற்கான அவசியத்தையும், அவை சொல்லப்பட்டிருக்கும் விதத்தையும் கருத்தில் கொண்டு மதிப்பீடு செய்ய வேண்டும் என நினைக்கிறேன்.

அடுத்தக் கட்டுரையில், மொழிப் பயன்பாடு தொடர்பாக விரிவாக உரையாடலாம். விமர்சனம் சட்டென உதிர்க்கும் கலை அல்ல. வாசிப்பின் ஆழம் பொருட்டு உருவாகும் சுவை.

death-of-socrates-ab

 

பொதுப்புத்தி தளத்திலிருந்து தத்துவார்த்த விசாரணைக்கு உயர்த்தப்படாத யாவும் சிறந்த சிந்தனையாகாது என சாக்ரட்டீஸின் கூற்றை மீட்டுருவாக்கம் செய்கிறேன். பொதுபுத்தி தளங்களில் நிறுவப்படும் வாழ்க்கையைத் தத்துவார்த்த விசாரணைக்குள் ஆழ்த்தாத எதுவுமே சிறந்த படைப்பாகாது; அதனைக் கண்டறிய முயலாத வாசிப்பும், சிறந்த வாசிப்பாகாது என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொண்டு விமர்சனம் பற்றி உரையாட வேண்டியுள்ளது.

  • கே.பாலமுருகன்

 

இலக்கியம், விமர்சனம் மற்றும் இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்கும் இடையிலான தொடர்பும் முரணும் – 2

0004367-90

‘ஒரு படைப்பின்  உண்மையை நோக்கி விவாதிப்பதுதான் விமர்சனம்’ – கா.நா.சு

 

இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்குமான ஓர் அத்தியாவசிய புரிதல் உருவாகியே ஆக வேண்டிய ஒரு காலக்கட்டத்தில் இருக்கிறோம். புதிதாகத் தமிழ் இலக்கியத்தை வாசிக்கத் துவங்கும் வாசகனை நோக்கியே கறாராக விவாதிக்க வேண்டிய சூழலில் விமர்சனம் குறித்த என்னுடைய இரண்டாவது கட்டுரையை எழுதுகிறேன். எழுத்தாளர் ஜெயமோகன் சிங்கை இலக்கியம் குறித்து எழுப்பிய கடுமையான விமர்சனங்களின் (என்பதைவிட சமரசமற்ற விமர்சனம் என்றே சொல்லலாம்) தொடர்ச்சியாக விமர்சனத்தின் நிலைப்பாடுகள் குறித்த விவாதம், கலந்துரையாடல்கள், கட்டுரைகள் அதிகமாகிக் கொண்டிருக்கிறன. விமர்சனம் என்பது மிகையுணர்ச்சியுடன் ஒரு படைப்பைப் புகழ்ந்து பேசுவது என்று மட்டுமே நினைத்துக்கொண்டிருக்கும் மனங்களிலிருக்கும் புராதன எண்ணங்களைக் களையெடுத்தல் வேண்டும்.

விமர்சனக் கலை

ஒரு தனித்த படைப்பு அல்லது ஒரு தனிமனித அகத்தின் வெளிப்பாட்டிலிருந்து உதித்து அதற்கான ஒரு கலைவடிவத்தைக் கண்டடைந்து சமூகத்தை நோக்கி வெளிப்படும் படைப்பு சமூகத்தின் மதிப்பீடுகளுக்குள்ளாகின்றது. அச்சமூகம் என்பது மிக மரபான பண்பாட்டு நிறுவனம். நுகர்வு கலாச்சாரத்தின் இயக்க நியாயங்களுடன் செயல்படும் சமூகம் என்கிற அந்நிறுவனம் கூட்டாக இயங்கும்போது, அதன் இயங்குத் தளத்திற்கு வந்து சேரும் அனைத்தையும் தராசில் வைக்கும். அதுவே மதிப்பீட்டிற்கான நிலையை அடைகிறது. வாழ்க்கையின் இயக்கத்தையும் அது சார்ந்து வெளிப்படும் கலைகளையும் அளக்கவும், சுவைக்கவும், நிறுக்கவும் சமூகம் மதிப்பீடு என்கிற ஓர் அளவுக்கோலை உருவாக்கி வைத்திருக்கிறது.

பின்னர் உருவான அறிவுத்தளம் அதனை விமர்சனம் எனக் கண்டறிந்தது. பிறகு, கல்வி உலகம் அதனைத் திறனாய்வு என வகுத்துக் கொண்டது. தற்சமயம் விமர்சனம் என்பதை ஒரு நுகர்வு வெளிப்பாடாகப் புரிந்து கொள்ள இயலாது. சமூகமும் கல்வி உலகமும், விமர்சனம் குறித்து ஏற்கனவே உருவகித்து வைத்திருக்கும் அத்தனை விளக்கங்களிலிருந்தும் அதனைத் தாண்டியும் விமர்சனம் என்பதை மறுகண்டுபிடிப்பு செய்ய வேண்டியுள்ளது.

இலக்கியம்

காலம் ஒவ்வொரு கணமும் மாறிக் கொண்டே இருக்கிறது. காலம் அளக்க முடியாத ஒன்று. காலத்தை அளக்க மனித வாழ்க்கையும் பண்பாட்டு மாற்றங்களையும் ஆராய வேண்டியுள்ளது. கால மாற்றத்தைப் புரிந்து கொள்ள வாழ்க்கையைக் கூர்ந்து கவனிக்க வேண்டியிருக்கிறது. காலம் மாறும்போது வாழ்க்கையும் அதற்கு நிகராக மாறுகிறது. கால மாற்றத்தை வாழ்க்கையினுடாகவே கணிக்க முடியும் என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆகவே, இலக்கியம் என்பது காலமாற்றத்திற்குள்ளாகும் வாழ்க்கையும் அதனூடாக மாறும் மதிப்பீடுகளினால் எழும் முரண்களையும் பதிவு செய்தலே ஆகும் என அவர் குறிப்பிடுகிறார். இலக்கியம் என்பதன் மீதான கட்டியெழுப்பப்பட்டிருக்கும் அத்தனை இலட்சியவாத அந்தஸ்த்துகளுக்கு எதிரான ஒரு புரிதல் இது. அதன் ஒருமையிலிருந்து பிரியும் எத்தனையோ கிளைகளுக்குள் இலக்கியம் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட முடியும்.

என் தாத்தா காலத்திலிருந்த உலகம் என் அப்பா காலத்திற்கு மாறும்போது பண்பாட்டு, அரசியல், சமூகம், கல்வி, மதிப்பீடு ஆகிய பற்பல மாற்றங்களை எதிர்க்கொள்கிறது. அதன் புதிய திறப்புகளினால் உருவாகும் அகவெழுச்சி, முரண் உணர்வுகள், உறவு சிக்கல்கள் என இன்னும் பலவற்றினூடாக இலக்கியம் ‘பதிக்கும் தடமாக’ மாறி செயல்படுகிறது. இலக்கியம் என்பதை வரலாற்றைப் பதித்தல் எனச் சொல்லிக் கேட்டிருப்போம். எது வரலாறு? இப்பொழுதிருக்கும் காலத்திற்கு முந்தைய காலத்தைத்தான் வரலாறு என்கிறோம். இப்பொழுது நடப்பது வரலாறு இல்லை. ஆனால், காலம் மாறும்போது இக்கணம் வரலாறாகிறது. ஆகவே, கால மாற்றத்தைப் பதிவு செய்தல் என்பதே இலக்கியத்தின் இயல்பு.

இலக்கியம் என்பது மனித உணர்ச்சிகளின் உச்சக்கணங்கள்தானே? என்று சில தீவிர விமர்சகர்கள் சொல்லியும் கேட்டிருப்போம். காலம் மாறும்போது உருவாகும் வாழ்க்கை, அரசியல், சமூகம், குடும்பம், கல்வி ஆகிய மாற்றங்கள் மதிப்பீடுகளை மாற்றுகிறது. மதிப்பீடுகளின் மாற்றங்களினால் மனித மனம் உணர்ச்சிக் கொந்தளிப்புக்குள்ளாகின்றது. அவ்வுணர்ச்சியின் ஆழத்தைப் பற்றி பேசும் வடிவமும் இலக்கியம்தான். ஆனால், அதற்குண்டான ஆதாரமாக இருப்பது மாறிக் கொண்டே இருக்கும் காலமாகும். ‘காலமாகி நிற்கும் அனைத்தைப் பற்றியும் பேசும் ஒரு மகத்தான கலைத்தான் நாவல்’ என ஜெயமோகன் சொல்வதையே ஒட்டுமொத்த இலக்கியத்திற்குமான புரிதலாக ஏற்றுக் கொள்ளலாம்.

இலக்கிய விமர்சனம்

விமர்சனக் கலை என்பதை நுகர்வு கலாச்சாரத்தை வளர்த்தெடுத்த சமூகம் பின்னாளில் கண்டுபிடித்த ‘கலைகளை அளக்கும் ஓர் அளவுக்கோல்’ எனப் புரிந்து கொண்டோம். ஆனால், அதன் கட்டாயம் என்ன? ஏன் விமர்சிக்கிறோம்? சமூக இயங்குத் தளத்தில் அதன் செயற்பாடு ஒரு சமூகத்தாலேயே நிர்ணயிக்கப்படுகிறது. சமூகத்தை நோக்கி விரியும் எதையுமே விமர்சிக்க வேண்டும் என்கிற கடப்பாடு சமூகத்தின் நுகர்வுத்தளத்தில் நிச்சயப்பட்டுள்ளது. ஆகவே, ஒரு தனிமனிதனை ஏன் விமர்சிக்கிறாய் எனக் கேட்கும் உரிமை நமக்கில்லை. அவனும் இந்தச் சமூக நியாயத்திலிருந்து செயல்படுகிறான். அதனால் விமர்சிக்கவும் செய்கிறான். ஆனால், இது விமர்சனத்தைப் பற்றிய ஓர் ஆரம்பநிலை புரிதல்.

விமர்சனம் சமூக அக்கறைமிக்கது; சமூகத்தை இயக்கவல்ல கலைகளை விமர்சித்து அதன் தரத்தைத் தீர்மானிக்கும் நிலைப்பாட்டைக் கொண்டிருப்பது என்று பின்னாளில் விமர்சனம் குறித்த அனுபவம் விரித்துக்கொள்ளப்பட்டது என்றே சொல்ல வேண்டும். கா.நா.சு இலக்கிய விமர்சனத்தின் அவசியம் அதன் கூர்மையான விவாதத்திலிருந்து துவங்குகிறது என்கிறார். ‘ஒரு படைப்பின்  உண்மையை நோக்கி விவாதிப்பதுதான் விமர்சனம்’ என்கிறார். இப்படியே விமர்சனம் மீதான புரிதல் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் கால மாற்றத்திற்கேற்ப விரிவாக்கிக் கொள்ளப்பட்டது.

காலம் மட்டும் மாறவில்லை என்றால் எந்தப் படைப்பையும் நம்மால் அளக்க முடியாமல் போய்விடும் நிலை ஏற்படும். கல்கி காலமொன்று இருந்ததானாலேயே, ஜெயகாந்தன் காலப்படைப்புகளின் திறப்புகளைப் பற்றி பேச முடிகிறது. புதுமைப்பித்தனையும் இப்பொழுது எழுதிக் கொண்டிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணனையும் புரிந்து கொண்டு விமர்சிக்க கால மாற்றம்தான் உதவுகிறது. கல்கியின் காலமும் புதுமைப்பித்தனின் காலமும் ஒன்றல்ல. அதே போல புதுமைப்பித்தனின் காலமும் எஸ்.ராவின் காலவும் ஒன்றல்ல. விமர்சனத்திற்கு/ ஒப்பீட்டு மதிப்பீடுகள் செய்வதற்குரிய எளிய வசதியை உருவாக்கித் தருவது கால மாற்றம்தான். கால மாற்றத்தைப் புறத்தில் வைத்துப் பார்க்கும் பழக்கம் இருக்கும்வரை நான் சொல்ல வரும் இவ்விடயத்தை உட்புகுத்திப் புரிந்து கொள்ளல் கடினம்தான்.

pupi

 

அதே போல சுயப்படைப்புகளாயினும் காலமாற்றத்திற்கேற்பவே விமர்சித்துக் கொள்ள முடிகிறது. நான் ஐந்து வருடங்களுக்கு முன் எழுதிய சிறுகதைகளையும் அதன் மொழியையும் இப்பொழுது விமர்சிக்க கால மாற்றம்தான் உதவுகிறது. ஆனால், வாசிப்பின் ஆழம் நிகழாதவரை காலம் மாறினாலும் நம் புரிதல் மாறமல் நின்றுவிடும் அபாயமும் உண்டு.

இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்குமான முரண்கள்

கலை என்பது வெளிப்பாட்டுத் தன்மை மிக்கது. அதில், இலக்கியம் பதிவு செய்யும் தன்மை கொண்டது. மொழிகளின் ஊடாகப் பயணிப்பவை. அதனாலேயே அதிகமான வாசகப் பங்கேற்பைக் கோருபவை ஆகும். விமர்சனம் அப்பதிவுகளை ஆராய்ந்து விவாதிக்கிறது. படைப்பினுள் ஒளிந்திருக்கும் உண்மைகளைச் சமூகப் பார்வைக்குக் கொண்டு வருகிறது. ஒரு படைப்புப் பதிவு செய்யத் தவறியதைக் கண்டறிந்து கொண்டு வந்து நிறுத்தும் தன்மை உடையது விமர்சனம்.

  1. படைப்பிற்குக் கடவுளாகுதல்

படைப்பை விதைக்கும் எழுத்தாளன் அப்படைப்பு முளைத்துத் துளிர்விடும் கணங்களில், சூரிய ஒளியை யாசித்து வெளிப்படும் கணங்களில், அதற்கு வேலியிட்டுப் பாதுகாக்க முனைகிறான். சமூகம் அதை நோக்கித் திரண்டு வருகையில் முற்றுகையிட்டு உரிமை கொண்டாடுகிறான். அதில் பூக்கும் ஒரு பூவை அளக்க முனைபவர்களின் மீது கோபம் கொள்கிறான்; முளைத்து மரமாகும் அப்படைப்பிற்குத் தான் கடவுளாக மாறி நிற்கின்றான். இன்றைய பல எழுத்தாளர்களின் மனநிலை இதுதான். விமர்சனத்தை எதிர்க்கொள்ள முடியாமை. முளைத்து வெளியில் தலையை நீட்டி விட்டாலே அது பொது விமர்சனத்திற்குரியது என்கிற எதார்த்தத்தை உணர மறுக்கிறார்கள். ஆகையால், இதுபோன்ற மனமுடைய படைப்பாளர்களினாலேயே இலக்கியத்திற்கும் விமர்சனத்திற்கும் இடையேயான உறவில் சிக்கல் உண்டாகின்றது.

 

  1. பொன்னாடைகளைப் போல போர்த்தப்படும் விமர்சனத்தின் போலி முகம்

பின்னாளில் விமர்சனம் என்பது நூல் வெளியீடுகளில் பயிற்சியற்ற விமர்சகரால் மொன்னையாக்கப்பட்டது. விமர்னத்திற்கென போலி முகம் இக்காலத்தில்தான் உருவானது. விமர்சனம் என்றால் பாராட்டுவது என்கிற ஒரு புரிதல் சமூகத்தில் பரவலாக அறியப்பட்டிருந்தது. நிகழ்ச்சிக்கு வரவழைக்கப்படும் விமர்சகர்கள் கிளி பிள்ளைப் போல பாராட்டுவதை மட்டுமே வழக்கமாக்கிக் கொண்டார்கள். பல நூல் வெளியீடுகளில் இதுவொரு சடங்காகப் பின்பற்றப்பட்டது.

1980களில் கூலிமில் நடந்த ஒரு இலக்கியக் கூட்டத்தில் சிங்கை இளங்கோவன் தன் விமர்சனக் கட்டுரையைப் படைத்தது குறித்து இன்றளவும் யாரேனும் ஒருவர் நினைவுப்படுத்திக் கொண்டே இருப்பதற்குக் காரணம் அன்று வழக்கத்தில் இருந்த விமர்சன சடங்கிற்கு எதிரான அவர் வழங்கிய விமர்சனப் போக்குத்தான் காரணம்.

கறாரான விமர்சனத்தை முன்வைக்கும் ஒருவன் விரோதியாகப் பாவிக்கப்படுவதற்கும் நூல் வெளியீடுகளில் உருவான இத்தகைய போலியான விமர்சனப் புரிதல்தான் முக்கியமான காரணமாகும். பாராட்டுதல் என்பது வேறு. விமர்சனத்தில் பாராட்டு என்பது ஒரு சிறிய பங்களிப்பு மட்டுமே. விமர்சனத்தின் உச்சமான செயற்பாடு புகழ்வதல்ல.

  • தொடரும்

 

கே.பாலமுருகன்

நூலாய்வு: உலகின் ஒரே அலைவரிசை/ நாட்டுப்புறப்பாடல்கள் – முத்தம்மாள் பழனிசாமி

muthammal

நாட்டுப்புற இலக்கியமும் பாடல்களும்

உலகம் முழுக்கவும் நாட்டுப்புற இலக்கியங்கள் வெவ்வேறான வடிவங்களில் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குச் சொல்லப்பட்டும் கற்பிக்கப்பட்டும் வருகின்றன. லத்தின் அமெரிக்கா நாட்டுப்புற கதைகள், பிரன்ச் நாட்டுப்புறக்கதைகள், வியாட்நாம், என ஒவ்வொரு சமூகமும் நாட்டுப்புற வாழ்வோடு பிணைந்திருக்கின்றன. பாடலும் கதையும்தான் நாட்டுப்புற இலக்கியத்தின் உச்சமான கலை வடிவமாகக் கருதப்படுகின்றன. முதுகுடி மக்களின் வாழ்வும் நிலப்பரப்பும் கதைகளாலும் பாடல்களாலும் ஆனவை.

நாட்டுப்புறப்பாடல் என்றால் என்ன?

நாட்டுப்புறம் எனச் சொல்லக்கூடிய கிராமமும் கிராமியம் சார்ந்த இடங்களிலும் பாடப்படும்/பாடப்பட்ட பாடல்களை நாட்டுப்புறப்பாடல் என்கிறோம். இந்த நாட்டுப்புறப்பாடல்கள் எங்கு, எவரால் எப்பொழுது பாடப்பட்டது என்பதற்கான தெளிவான குறிப்புகள் கிடையாது. ஒவ்வொரு தலைமுறையும் அவற்றை எல்லாம் தான் வாழ்ந்த சமூகத்தின் அடையாளமாக நினைவுகளின் வழி சேகரித்தே வந்துள்ளது. காடு கழனிகளிலும், தோட்ட வயல்களிலும், நிலத்தை உழும்போதும், ஏற்றம் இறைக்கும் போதும், நாற்று நடும் போதும், கதிர் அறுக்கும் போதும் நாட்டுப்புற மக்களால் பாடப்பட்டு அவர்களின் வாழ்வோடு இணைந்திருக்கின்றன நாட்டுப்புறப் பாடல்கள். தாலாட்டில் தொடங்கும் பாடல்கள் ஒப்பாரிவரை நீடித்து முடிவடைகிறது.

முத்தம்மாள் பழனிசாமியின் ஆய்வும் நூலும்

சுய முன்னேற்றத்திற்காகவும், பட்டப்படிப்பை முடிப்பதற்காகவும் மேற்கொள்ளப்படும் ஆய்வை, புத்தகமாக்கி விருதுகளைப் பெற்றுச் செல்பவர்களும், தன் மொண்ணையான பேச்சுகளின் மூலம் தன் பதவிக்கும் இருப்புக்கும் ஏற்ப தன் அறிவை வளர்த்துக்கொள்ளாமல் சோம்பி போய்க்கிடக்கும் கல்வியாளர்களும் எங்கும் நிரம்பியிருக்கும் ஒரு காலக்கட்டத்தில், எவ்வித சுயநலமும் எதிர்பார்ப்புமின்றி தன் சுயமான உழைப்பின் மூலம் ஆய்வை மேற்கொண்டு  திருமதி முத்தம்மாள் பழனிசாமி உருவாக்கியதுதான் இந்த நாட்டுப்புறப்பாடலில் என் பயணம் எனும் புத்தகம்.

நாட்டுப்புறப் பாடல்கள் பெரும்பாலும் வாய்மொழியாக இருந்தமையால் அதனைச் சேகரிப்பதிலும் பதிவு செய்வதிலும் கூடுதல் உழைப்பு தேவைப்படுகிறது.பெரும்பான்மையான நாட்டுப்புறப்பாடல்கள் பதிவு செய்யப்படாததாலும் சமூகத்தின் முதுகுடிகள் மறைந்துவிட்டதாலும், அவைத் தொகுக்கப்படாமல் அழிந்துவிட்டன.

ஆனால் கொங்கு வேளாலர் சமூகத்தைச் சேர்ந்த முத்தம்மாள் பழனிசாமி அவர்கள், அந்தச் சமூகத்தைச் சார்ந்த நாட்டுப்புறப்பாடல்களையும் அந்த வட்டார வழக்கில் பாடப்பட்ட பாடல்களையும் அதனுடன் ஒலிக்கும் வரலாற்றுப் பதிவுகளையும் மிகவும் நேர்மையாக ஆவணப்படுத்தியுள்ளார். அதுவும் அவர் இந்த ஆய்வைச் செய்யும்போது அவருக்கு 70 வயதையும் கடந்திருக்கும் என நினைக்கிறேன். இதுதான் எந்த ஆய்வையும் இதுவரை மேற்கொள்ளாத இளைஞனான என்னையும் ஆச்சர்யப்படுத்தியது. சமூகத்தை ஆவணப்படுத்துவதில் ஆய்வுக்கும் பயணத்திற்கும் உள்ள மகத்துவத்தை தன் நூல்களின் வழி உணர்த்தியவர் நூலாசிரியர் திருமதி முத்தம்மாள் அவர்கள். அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விசயம் தான் சார்ந்த சமூகத்தின் வரலாற்றையும் இலக்கியத்தையும் ஆவணப்படுத்துவதில் அவருக்கிருக்கும் ஆர்வமும் தீவிரமும்தான். ஆனால் அவர் இந்த ஆய்வைச் செய்வதன் வழி தன்னைச் சார்ந்த சமூகத்தின் இனக்குழு மக்களின் பாடல்களை மீட்பதன் மூலம் சாதியத்தையும் சாதியம் சார்ந்த பிரக்ஞையையும் உருவாக்குகிறார் என எடுத்துக்கொள்ள முடியாது.

உலகப் பொதுவிற்கென பங்காற்றும் அளவிற்கு முத்தாம்மாள் தன் ஆளுமையை முன்னெடுப்பபது என்பது அவருக்கு விரயத்தைக் கொடுக்க நேரிடும். மேலும் அது கடுமையான ஒரு உழைப்பைச் சார்ந்த செயல்பாடும்கூட. ஆகவே தான் வளர்ந்து உணர்ந்த ஒரு சமூகத்தின் வரலாற்றை மீட்டெடுக்க வேண்டும் என முத்தம்மாள் முயற்சித்தது சாதி குறித்த பெருமிதமாக இருப்பினும், அதில் நேர்மையும் உழைப்பும் இருக்கவே செய்கின்றன.

பயணத்தின் மீது எப்பொழுதும் எனக்கு நம்பிக்கை உண்டு. பயணம் பலத்தரப்பட்ட மனிதர்களையும் அவர்களின் வாழ்வையும் நமக்கு அறிமுகப்படுத்தும். பல ஆளுமைகள் பயணம் செய்து தன்னை ஒரு அடையாளமாக நிறுவியுள்ளார்கள். ஒரு பயணத்தால் மட்டுமே அது சாத்தியப்படும் என்பதை நிறுபித்துள்ளார் முத்தம்மாள். அகிரா குரோசாவா சொன்னது போல, உலகத்தின் எங்கோ ஒரு கோடியில் இருக்கும் ஒரு மனிதன் நம்முடன் பகிர்ந்துகொள்ள ஏதோ ஒன்றை வைத்திருப்பான். பயணம் அவனைச் சென்றடைய ஒரே பாதையாகும். முத்தம்மாள் மேற்கொண்ட பயணங்கள் அவரால் ஒரு வரலாற்று வடிவத்தைத் திரட்டி நூலாகப் பிரசுரிக்க முடிந்திருக்கிறது.

ஒவ்வொரு தனி சமூகமும் ஒவ்வொரு காலக்கட்டத்தில் தன் துயரங்களையும் இடர்களையும் சுகத்துக்கங்களையும் பாடல்களின் வழியே வெளிப்படுத்திக் கடந்துள்ளார்கள் என்பதை இந்த நூலை வாசிக்கும்போது புரிந்துகொள்ள முடிகிறது. மீனவர்களின் வாழ்வென்பது நாட்டுப்புறப்பாடல்களாம் ஆங்காங்கே நிரப்பட்ட வெளியாகும். இதுபோல பாடல்களின் வழி கடல் கொடுக்கும் தனிமையையும் பெரும் மௌனத்தையும் கடப்பதற்கான புலனை அவர்கள் பெற்றிருந்தார்கள். சிறு வயதில் சுங்கைப்பட்டாணி பகுதியிலுள்ள மலாய் மீனவப்பகுதிகளுக்குச் சென்ற அனுபவங்கள் உண்டு. முன்பு அந்த சிறுநகரத்தின் ஒரு பகுதி மீனவர்களின் பகுதியாக இருந்தது. இப்பொழுது அவர்களைச் சார்ந்த ஒரு ஆட்கள் கூட அங்கு இல்லை. அவர்களில் கொஞ்சம் வயதான மீனவர்கள் படகில் ஏறி ஏதோ பழைய மலாய்ப்பாடலைப் பாடிக்கொண்டே தன் ஆற்றுப்பயணத்தைத் தொடங்குவார்கள். எல்லாம் சமூகத்திலும் மீனவர்களின் வாழ்வில் பாடல் ஒரு அங்கமாக இருந்திருக்கிறது.

முத்தம்மாள் அவர்கள் நாட்டுப்புறப்பாடல்களைத் தொகுக்கும் முன்பு அவருக்கும் அவரின் சின்னம்மாளுக்கும் ஏற்படும் சந்திப்பு மிக முக்கியமானது. எங்கோ விட்டுப்போன ஒன்றை அவர் அந்த இடத்தில் அந்தச் சந்திப்பில் கண்டடைகிறார். மனித துயரத்திற்கும் பாடலுக்கும் உள்ள நெருக்கமான உறவை முத்தம்மாள் அவர்களின் சின்னம்மாவின் இருப்பின் வழி வெளிப்படுகிறது. சிறு வயதிலேயே திருமணம் செய்துகொண்டு சஞ்சி கூலியாக மலாயா வந்துவிட்ட சின்னம்மாளைச் சந்திக்கும்போது, தன் துயரத்தின் அடர்த்தியை அவர் தன்னையறியாமல் “அத்தை மகனிருக்க அழகான நாடிருக்க” எனும் ஒலிக்கும் பாடலாகப் பாடி வெளிப்படுத்துகிறார். மேலும் அவர்தான் பல நாட்டுப்புறப்பாடல்களைப் பாடிக்காட்டி முத்தம்மாளுக்கு உதவி செய்துள்ளார்.

பிறப்பு முதல் இறப்புவரை பாடலோடு தன் வாழ்வை இணைப்பதன் மூலம் மனித சமூகம் ஒரு முக்கியமான அலைவரிசையை உருவாக்குகிறது. அது காலத்திற்கும் புதையுண்டு, மறைந்து, முதுகுடிகளுடன் கரைந்து, மீண்டும் யாரோ ஒருவரின் குரலின் வழி மீட்டெடுக்கப்படும் ஒரு வரலாறு என்றே கருதுகிறேன். அத்தகைய உணர்வைக் கொடுத்த இந்த நூல் இந்தக் காலக்கட்டத்திற்கு மிகவும் அவசியமானது.

முத்தம்மாள் இந்த நூலைத் தொகுப்பதற்காக யாரையெல்லாம் சந்தித்தார் என்பது முக்கியமானது:

  1. 1935இல் இந்தியாவிலிருந்து மலாயாவிற்கு வந்தவரான 88 வயது நிரம்பிய திருமதி மாரியம்மாள் கருப்பண்ணன்.
  2. 1953-இல் மலேசியாவில் இருந்து வந்த குமரசாமி என்பவரை திருமணம் செய்து கொண்டு பால்வெட்டு தொழிலாளியாக இருந்த 74 வயது நிரம்பிய திருமதி தாயாத்தாள் குமரசாமி.
  3. 1957இல் மலாயாவுக்கு வந்து பல வருடங்கள் பால்வெட்டு தொழிலாளியாக வேலை செய்து இன்னமும் சித்தியவான் தோட்டத்திலேயே வாழ்ந்து வரும் திருமதி தேவாத்தாள்.
  4. சூழ்நிலைக்கு தகுந்த மாதிரி பலத்தரப்பட்ட பாடல்களைப் பாடுவதி தேர்ச்சி பெற்ற திருமதி அருக்காணி.
  5. தமிழ்நாட்டிலிருந்து இங்கு வந்து பத்து வருடமாக வீட்டு வேலை செய்து கொண்டிருக்கும் திருமதி ராஜாமணி.

இவர்கள் அனைவரும் இந்த நாட்டுப்புறப்பாடல் நூலின் தொகுப்பிற்கு திருமதி முத்தம்மாள் அவர்களுக்குப் பெரிதும் துணைப்புரிந்துள்ளனர். இந்த நூல் பல பாகங்களாக நாட்டுப்புறப்பாடலின் வகைகளுக்கேற்ப மிக நேர்த்தியாகத் தொகுக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் நூலாசிரியர் பல முக்கியமான பாடல்களை வழங்கியுள்ளார். தாலாட்டுப்பாடல்கள், ஒப்பாரிப் பாடல்கள், குழந்தைகள் விளையாட்டுப்பாடல்கள், வண்ணான் வண்ணாத்தி பாடல்கள், தோட்டக்காட்டுப் பாடல்கள், விழாக்காலங்களில் பாடப்படும் பாடல்கள் என புத்தகம் எல்லாம்விதமான பாடல்களையும் பதிவு செய்திருக்கிறது.

  1. தாலாட்டுப்பாடல்கள்

மலேசியாவில் ஆயா கொட்டகையில் பிள்ளைகளை உறங்க வைக்க தோட்டங்களில் ஏதோ சில ஆயாக்கள் தாலாட்டுப் பாடல்களைப் பாடியதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். முத்தம்மாள் இந்த நூலில் ஒரு சில தாலாட்டுப்பாடல்களைப் பதிவு செய்துள்ளார். பெரும்பாலும் அவருடைய உறவினர்கள் பாடியதை மீட்டுணர்ந்தே தாலாட்டுப் பாடல்களை எழுதியுள்ளார்.

bookreview2

பெண்ணின் முதல் மகப்பேறு தாய்வீட்டில்தான் நடக்கும். இது மனநலம் உடல் நலம் கருதி மரபு வழியாக சமூகத்தில் உருவான ஒரு பழக்கமாகும். மகப்பேறு காலம் முடிந்து தாய் வீட்டை விட்டு கணவன் வீடு செல்லும் முறை பொண்ணுக்கு தாய் மாமன் ஆச்சி மாட்டைத் தருவார். மகள் வீட்டுக் குழந்தை ஆரோக்கியமாக வளர தாய் வீட்டுச் சீதனமாக மாமன் தரும் ஆச்சி மாட்டுக்கு ஒரு தாலாட்டுப் போன்ற பாடலை முத்தம்மால் இணைத்துள்ளார்.

உன் மாமன் கொடுத்தாச்சி கண்ணே

மலையேறி மேய்ந்து வரும் அதை

ஓடித் திருப்பையிலே உனக்கு

ஒருகால் சிலம்புதிரும்

சிலம்போ சிலம்பு என உன் மாமன்

சீமையெல்லாம் தேடி வாரார்

 

உன் மாமனுட கொல்லையிலே

மானு வந்து மேயுதடா- அதை

மறித்துத் திருப்பையிலே உனக்கு

மறுகால் சிலம்புதிரும்

சிலம்போ சிலம்பு என உன் மாமன்

சீமையெல்லாம் தேடி வாரார்

இப்படியா அப்பாடல் மாமன் கொடுத்தனுப்பிய தாய் வீட்டு சீதனமான ஆச்சி மாட்டைப் பற்றியே பாடப்பட்டுள்ளது. மேலும் தனக்குச் சொந்தமான தன் வீட்டில் குழந்தைகளுக்காக தன் அம்மா பாடிய சில பாடல்களையும் இங்குப் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. முத்தம்மாள் அவர்கள் வெள்ளைக்காரரைத் திருமணம் செய்து கொண்டதால், அவருடைய அம்மா தன் பேரனுக்கு வெள்ளைக்காரர்கள் மீது வெறுப்பைக் காட்டுவது போல தாலாட்டுப் பாடல் பாடியிருப்பதாக முத்தம்மாள் இன்னொரு பாடலையும் இங்கே பதிவு செய்துள்ளார்.

“டூ டூ வெள்ளைக்காரன்

துப்பாக்கி வெள்ளைக்காரன்

மாடு தின்னும் வெள்ளைக்காரன்

மாயமாய் போவானாம்”

எனும் அப்பாடல் வெள்ளையர்களின் காலனிய ஆதிக்கத்தை எதிர்த்து வெளிப்படும் வெறுப்பாகவே பதிவாகியுள்ளது. இது நாட்டுப்புறப்பாடல் எனச் சொல்வதில் தயக்கம் இருக்கிறது. காரணம் காலனிய ஆதிக்கத்திற்குப் பிறகு சமூகம் தனது பண்டைய அடையாளத்தை இழந்து புதிய அரசியல் நிலப்பரப்பிற்கு ஆளாகிறது. அந்தக் காலக்கட்டத்தில் பாடப்படுவதை எப்படி நாட்டுப்புறம் என அடையாளப்படுத்த முடியும்?

 

  1. விளையாட்டுப் பாடல்கள்

இந்த வகையான பாடல்கள், குழந்தைகளுக்கு விளையாட்டுக் காட்டுவதற்குப் பாட்டிமார்கள் பாடும் பாடலை விளையாட்டுப் பாடலாகத் தொகுத்துள்ளார் முத்தம்மாள். மேலும் குழந்தைகளின் சுட்டித்தனங்களைக் கண்டு அவர்களைக் கொஞ்சுவதற்காகப் பாடப்பட்ட பாடல்களும் இடம்பெற்றுள்ளன. சிறுவர்கள் விளையாடும் போது பாடும் பாடல்களும் நாட்டுப்புற விளையாட்டுப் பாடல்கள் என சில வகைமாதிரிகளை இந்தப் புத்தகத்தில் தொகுத்துள்ளார்.

  • 5 கல் விளையாட்டு
  • கல்வி விளையாட்டு
  • கண்பொத்தி விளையாட்டு
  • தட்டாமலை சுற்றுதல் என அனைத்து விளையாட்டுக்களுக்கும் ஒரு பாடலை அறிமுகப்படுத்துகிறார்.

நாட்டுப்புறச் சூழலில் இந்த விளையாட்டுகளெல்லாம் இருந்திருக்குமா என்பதே கேள்வியாக இருக்க, இருப்பினும் நம் அடுத்த தலைமுறைகளுக்கு இதுபோல விளையாட்டின் மூலம் பாடல்களை அறிமுகப்படுத்த இயலும் என நினைக்கிறேன்.

நொண்டியடித்து விளையாடும்போது பாடப்படும் பாடல்:

நொண்டி நொண்டி நொடிச்சுக்கோ

வெல்லம் தாரேன் கடிச்சிக்கோ

துள்ளித் துள்ளி ஓடிக்கோ

கொள்ளுத் தரேன் கொறிச்சுக்கோ

எட்டி எட்டி குதிச்சுக்கோ

சட்டி தாரேன் கவிழ்த்துக்கோ

பிடிச்சுக்கோ – பிடிச்சுக்கோ

 

  1. கிராமியப் பாடல்கள்

நாட்டுப்புறப்பாடல்கள் பிரதிபலிக்க முயல்வதே கிராமியம் சார்ந்த வாழ்வைத்தான். ஆகவே கிராமியத்தைக் கொண்டாடக்கூடிய பாடல்கள் அதிகமாகவே புகுத்தப்பட்டுள்ளன. கிராமத்தில் ஆடு மேய்க்கும் பெண்கள் பாடும் பாடல்கள், கிராமத்து வண்டிப்பாடல்கள், வயலில் பாடப்படும் பாடல்கள், கும்மிப் பாட்டு, கரகப்பாட்டு, குமரிப் பெண்கள் மாமன்மார்களைக் கேலி செய்து பாடும் பாட்டு என கிராமிய வாழ்வை ஒவ்வொரு பகுதியாகப் பிரித்து தனித்துக் கொண்டாடக்கூடிய பாடல்கள் அப்பொழுதிலிருந்தே பாடப்பட்டு வருகின்றன.

சமூகத்தில் எப்பொழுதும் ஒழுக்க மீறலுக்குத் தண்டனைகளும் உபதேசங்களும் புறக்கணிப்புகளும் தாரளமாகவே இருப்பது வழக்கமாகும். ஆனால் கிராமிய வாழ்வியலில் ஒழுக்க மீறல்களுக்கான தண்டனைகள் கடுமையானதாகவும் மதத்தின் புனிதம் கெடாமலிருக்கும்படி கடவுளின் பெயரில் தண்டனைகளை வழங்குவதும் எனக் கேள்விப்பட்டிருக்கிறோம். முத்தம்மாள் பழனிசாமி இந்தப் புத்தகத்தில் நமக்கு அறிமுகபடுத்தும் ஒழுக்க மீறலுக்கான தண்டனை மிகுந்த நகைச்சுவையுடன் சொல்லப்பட்டிருக்கிறது.

ஒரு கிராமத்தில் வாழ்ந்து வந்த வண்ணானும் வண்ணாத்தியும் தினமும் துணிகளைத் துவைப்பதற்காக ஆற்றங்கரைக்குச் செல்வதுண்டு. வண்ணாத்திக்கும் அங்கு ஆடு மேய்க்க வரும் இடையனுக்கும் கள்ளக் காதல் இருக்கிறது. ஆகையால் அவள் தினமும் இடையனுக்குச் சமைத்து அதை வைக்க, வண்ணானுக்குத் தெரியாமல் இடையன் அதைச் சாப்பிட்டுவிடுவான். இந்தச் செயல் வண்ணானுக்குத் தெரிந்ததும் அவன் கொடுக்கும் தண்டனையில் உள்ளம் தெளிந்து திருந்திவிடுவதாக அப்பாடல் மூன்று கட்டங்களாகப் பாடப்படுகிறது.

இடையனுக்குச் சமைத்த உணவை வைத்துவிட்டு, அவன் அறிந்துகொள்ளும்படி வண்ணாத்தி இப்படிப் பாடுகிறாள்:

ஆக்கி அரிச்சி வச்சேன் ஆஹூம்

அட்டாவியில் எடுத்து வச்சேன் ஆஹூம்

பருப்பைக் கடைந்து வச்சேன் ஆஹூம்

பசு நெய்யை எடுத்து வச்சேன் ஆஹூம்

 

அதைக் கேட்ட இடையனும் குறிப்பறிந்து அவள் ஆக்கி வைத்த உணவை ஒளிந்து நின்று சாப்பிட்டுவிடுகிறான். இப்படிப் பல நாட்களாக நடக்கும் கள்ளக்காதலை வண்ணான் ஒருநாள் அறிந்துகொள்கிறான். இடையனுக்குப் பாடம் புகட்ட எண்ணி, வண்ணாத்தி சமைத்த வைத்த உணவைச் சாப்பிட்டுவிட்டு, அதில் தன் மலத்தைக் கழித்து வைக்கிறான்.

மலத்தைக் கழித்து வைத்துவிட்டு ஆற்றில் துணி துவைத்துக்கொண்டே வண்ணான் இப்படிப் பாடுகிறான்:

சாடை அறிஞ்சிகிட்டேன் ஆஹூம்

சாணத்தைப் போட்டு வச்சேன் ஆஹூம்

நானும் தெளிந்துவிட்டேன் ஆஹூம்

நரகலையே போட்டு வச்சேன் ஆஹூம்

அவசரத்தில் அங்கு வந்து சேரும் இடையன் பானையிலுள்ள வண்ணானின் மலத்தைத் தின்றுவிடுகிறான். தின்றுவிட்டு புத்தித் தெளிந்துபோன இடையன் பதிலுக்குப் பாடுகிறான்:

வகையாக மாட்டிக்கிட்டேன் கூவே கூவே

வண்ணானின் மலத்தைத் தின்னேன் கூவே கூவே

புத்தி தெளிந்ததடா கூவே கூவே

பொண்ணாசை விட்டதடா கூவே கூவே

மேலும் இது போன்ற பாடல்கள் அரவாணிகளின் வாழ்வு, சோகம் என அவர்களின் உலகைச் சொல்வதாகவும் பாடப்பட்டுள்ளன. நாட்டுப்புறப்பாடல்கள் வெறும் கொண்டாட்டங்களை மட்டும் முன்னெடுக்கவில்லை, வாழ்வின் அடித்தட்டு மக்களின் துயரப்பட்ட வாழ்வையும் பாடிக்காட்டும் களமாக இருந்திருக்கிறது என இம்மாதிரியான பாடல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

 

  1. பால்காட்டுப் பாடல்கள்

இந்தியாவிலிருந்து தோட்டக்காட்டில் வேலை செய்வதற்காகக் கொண்டு வரப்பட்ட மக்களுடைய துயரத்தையும் வலியையும் வாழ்வையும் சொல்வதாக இந்த வகை பாடல்கள் தொகுக்கப்பட்டுள்ளன. மேலும் இந்தப் பால்காட்டுப் பாடல்களைப் பாடியவர்கள் பெண்கள்தான் அதிகம். பால்வெட்டுத் தொழிலின் போதும், வெளிக்காட்டு வேலையின் போதும், பெண்கள் அனுபவிக்கும் துன்பத்தை அவர்கள் பாடலாகப் பாடுவது போலவே முத்தம்மாள் கொடுத்துள்ளார்.

கங்கானிமார்களின் சர்வதிகார முறைக்கு ஆளாகிச் சுரண்டபட்ட பெண்கள் ஏராளம். அவர்களின் இயலாமைக்கு ஒரு விலை வைத்திருக்கும் கங்கானிமார்களான அதிகாரத்தின் இடைத்தரகர்களாகச் செயல்பட்டவர்களின் மீதான கோபத்தை வெறுப்பை முழுக்கவும் பாடலின்வழி வெளிப்படுத்தியவர்கள் பால்காட்டில் வேலை செய்த பெண்களே. மேலும் கள்ளுக்கடை பாடல்கள், தோட்டக்காட்டுப்பாடல்கள் என தோட்டப்புறம் சார்ந்த அனைத்தையும் இந்தத் தொகுப்பில் காண முடிகிறது.

 

பால்காட்டுப் பாடல் 2

காலையில் வந்துட்டாண்டி

கருப்புச் சட்டைக் கங்காணி

 

 

கே.பாலமுருகன், 2011

நெருக்கடிகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனப்பக்குவத்தை வழங்குவதே வேதாந்தம்

14522790_1394778983873387_3796922250364742790_n-2

சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி அவர்களின் வேதாந்த உரைகள் அடங்கிய தனியன் நூலை முன்வைத்து

வாழும் காலத்தில் மனித மனம் வாழ்வியல் தொடர்பான பற்பல கேள்விகளால் அல்லல்படுகிறது. ஒவ்வொரு கேள்வியும் நம்மை வாழ்நாள் முழுவதும் எங்கேங்கோ இழுத்துச் செல்கின்றது. பதில்களின் ஊடாக ஞானக்கீற்று பெறத் தேடித் தேடி களைத்துப்போய் கிடைத்ததைப் பதிலாக்கிக் கொண்டு திரும்புவதுதான் இன்றைய பெரும்பாலோரின் அனுபவம். பதில் யாரிடமிருந்து பெற்றோம் என்கிற ஒன்றே நம்மைத் திருபதிப்படுத்திவிடுகிறது; அல்லது காலம் முழுவதும் மெச்சிக் கொள்ள ஒரு சமாதானத்தை வழங்கிவிடுகிறது.

அறிதலைச் சாத்தியப்படுத்த பலவகைகள் உண்டு. அவற்றுள் ஒன்று தர்க்கம் செய்து அறிவது. அதனையே தத்துவத்தின் செயல்பாடு என்கிறார்கள். தத்துவம் என்பதன் உள்பொருள் தர்க்கம் செய்து ஒன்றை அறிந்து கொள்வது. இது அனைத்துத் துறைகளிலும் சாத்தியம். வாழ்க்கையை அறிந்து கொள்ள நமக்குள் பெருக்கெடுக்கும் கேள்விகளின் பின்னால் நாம் ஓடுகிறோமே தவிர அதனைத் தத்துவ தளமாக மாற்றிக் கொள்வதில்லை; அதனைத் தர்க்கம் செய்வதில்லை.

ஆகவே, நம் கேள்விகளைக் கொண்டு நிறைய பேர் ஆங்காங்கே மடத்தை அமைத்து குருக்களாக உட்கார்ந்துவிட்டார்கள்; எது என் கர்மவினை? நான் செய்த பாவம் என்ன? என் முற்பிறவி என்ன? ஏன் இத்தனை சிரமத்தை எதிர்நோக்குகிறேன்? என்கிற நம் கேள்விகளை முதலீடாகக் கொண்டு பல மத நிறுவனங்கள் வணிகத்தில் தழைத்தோங்கிவிட்டன. நம் கேள்விகளைக் கொண்டு பல நூல்கள் இயற்றப்பட்டுவிட்டன. ஆனால், கேள்விகள் கேள்விகளாகவே தலைமுறை தலைமுறையாக அலைந்து கொண்டிருக்கின்றன.

என் தாத்தாவின் கேள்விகளுக்குக் கிடைத்த பதில் என் அப்பாவைத் திருபதிப்படுத்தவில்லை, ஆகவே அவரும் கேள்விகளோடு அலைந்தார். அவருக்குக் கிடைத்த பதில்கள் என்னை எப்பொழுதுமே திருப்திப்படுத்தியது இல்லை. ஆகவே, எனது இளமை பருவத்திலும் நான் கிருத்துவம், புத்தம், கிருஷ்ணர் என அலைந்தேன். இப்பொழுது எனக்கும் பதில் கிடைத்ததா எனத் தெரியவில்லை. ஆனால், பயங்கரமான அயர்வு ஏற்பட்ட கணம் நான் ஏதோ ஒரு புரிதலுடன் காரியங்கள் ஆற்ற வாழ்க்கைக்குள் திரும்பி வந்துவிட்டேன். என்றாவது என் மகன் கேட்கும்போது, அவனுக்கும் என்னைப் போல கேள்விகள் எழும்போது எனக்குக் கிடைத்த பதிலையே அவனுக்குச் சொல்வேன். அவன் அதில் திருப்தி அடையவேண்டும் என்பதற்காக அல்ல; எல்லோரும் தேடித் தேடிக் களைத்தவர்கள் எனும் ஓர் உண்மையை உணர்த்துவதற்காக. எப்படியிருப்பினும் நாம் நடைமுறைக்குள் வாழ்வதற்குத் திரும்ப வேண்டியுள்ளது. இதுவொரு நிம்மதியற்ற அகப்போராட்டம்.

தன் வாழ்நாளில் கொக்களித்துப் பெருகும் துயரங்களின்போதும் இடையூறாமல் துரத்தும் பிரச்சனைகளின் முடிவில்லா அலைக்கழிப்புகளின்போதும் மனம் சட்டென கேள்விகளால் சூழ்ந்து கொள்கிறது; கேள்விக்கு விடையில்லாமல் மறைந்தும்விடுகிறது. இத்தகு மனித மனங்களின் விடையில்லா கேள்விகளின் இடைவேளிக்குள் நுழைவதுதான் மதம், உளவியல், தத்துவம், ஆன்மீகம், இலக்கியம் ஆகியவற்றின் முதன்மையான செயல்பாடு. இவையனைத்திற்குமான கவனம் இதுபோன்ற அடிப்படை கேள்விகளின் வழியே உருவாகியது. வாழ்வைச் சிந்தித்தல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தன்னிடமிருந்தே பிறந்திருக்கின்றன. தனக்கு ஏன் இத்துயரங்கள்? தான் ஏன் வேதனைப்பட வேண்டும்? தனக்கு எதற்கு இந்தப் பிறப்பு என கேள்விகளின் நீட்சி அபூர்வமானவை. ஆனால், இதற்கான பதில்கள் காலச்சூழலுக்கும், உரைப்பான் குறித்த ஞானம்பொருட்டும் இப்படிப் பற்பல நியாங்களுக்குட்பட்டது. ஆகக் கடைசியான கேள்வி, உன் கேள்விகளுக்குப் பதில் கிடைத்ததா என்பதே தவிர உன் கேள்விக்கேற்ற பதில் கிடைத்ததா என்பதில் இல்லை. அதை அத்தனை உறுதியாகச் சொல்லவும் தெரியவில்லை.

gita-2

 

நீங்கள் கீதை படித்திருக்கிறீர்களா? நீங்கள் வேதம் கற்றிருக்கிறீர்களா? நீங்கள் பைபிள் படித்திருக்கிறீர்களா? நீங்கள் அதைப் படித்திருக்கிறீர்களா? நீங்கள் இதைப் படித்திருக்கிறீர்களா? எனக் கேட்டுக் கொண்டே போகலாம். நாம் எல்லாவற்றையும் படித்திருக்கலாம். நம்முடைய தேடல் நம்முடைய வாழ்க்கைக்குள்ளிருந்து எழுந்த கேள்விகள்பால் உருவானது. அக்கேள்விகளுக்குத் தீனி போடுவதற்காகத் தொடர்ந்து தேடுகிறோம். குருமார்களிடம் செல்கிறோம், நூல்கள் வாசிக்கிறோம். ஒரு நாள் மிகப்பெரிய அயர்ச்சி; சோர்வு தோன்றும். ஏன் இதைத் தேடி வந்தோம் என்கிற சலிப்புத் தட்டும். ‘ப்ராய்ட்’ செயலூக்கத்தைப் பற்றி விவரிக்கும்போது செயல்களுக்கு இரண்டு பக்கங்கள் இருப்பதாகக் குறிப்பிடுகிறார். ஒன்று பிரக்ஞை. அக்கணம் அச்செயல்கள் மீது படிந்திருக்கும். ஆனால், சட்டென ஆழ்மனம் விழித்தெழும்போது அச்செயல்கள் மீது வெறுப்புணர்வைக் காட்டத் துவங்கும். பின்னர் நமக்கு இயல்பாகவே சோர்வுமனம் தோன்றும். இப்படிப் பலர் அனுபவப்பட்டிருக்கலாம். ஆழ்மனம் பற்றி வேதாந்தமும் பிராய்ட்டும் சொல்வதைப் போல அது மிக நீண்ட பதிவுகள் கொண்டது. பிரக்ஞை இக்கணம் தோன்றுவது; அதற்குக் கடந்தகால பதிவுகள் அநாவசியம். இதனால்தான் ஆழ்மனத்திற்கும் பிரக்ஞைக்கும் முரண்பாடுகள் தோன்றிய வண்ணமே இருக்கும். சட்டென செயலில் மனம் ஒட்டாமல், மனம் என்னவோ செய்கிறது எனப் புலம்பத் துவங்கிவிடுவோம்.

இத்துடன் நம் தேடல் போதும் என நாம் முடித்துக் கொள்வது நமக்குக் கிடைத்த பதில்களினால் அல்ல. நம் உயிருக்குள் உருவாகிய ஒருவகையான ஆழ்மனத் தூண்டல்; அல்லது சோர்வு. கிடைத்தவரை அதுதான் தனக்கான பதில் என அதனைத் தூக்கிக் கொண்டு வாழ்க்கைக்குள் சமாதானம் ஆகிவிடுகிறோம்; அதையே ஜெயமோகன் கடவுளைத் தேடி அடையமுடியாமல் போன இடங்களில் மதம் தனக்கான பாதையை வகுத்துக் கொள்கிறது என்கிறார்.

பல மதக்குருக்களிடம் சென்று கற்று ஏதோ ஒரு வயதில் அதன்மேல் ஈர்ப்புக் கொண்டு எனக்கு என் கேள்விகளுக்கான விடை கிடைத்துவிட்டது என்கிற நம்பிக்கையில் திளைத்து பிறகு மீண்டும் கேள்விகள் எழ, மீண்டும் வேறு இடம் நோக்கி ஓடிய பற்பல அனுபவங்கள் எனக்குண்டு. இதுபோன்று பலரும் கடந்து வந்திருப்போம். ஏன் இத்தனை அலைச்சல்? உனக்கு ஏன் பதில் தெரிய வேண்டும்? நீதான் பதில். உனக்குள்ளே பதில் உண்டு. நீ வாழும் வாழ்க்கையும் நீ வாழ்ந்த வாழ்க்கையும்தான் உன் எதிர்காலத்தையும் உன் பலனையும் தீர்மானிக்கிறது, அதைக் கண்டு ஏன் மிரள்கிறாய்? அதைக் கண்டு ஏன் தடுமாறுகிறாய்? எனத் தோளில் தட்டி உரையாடுகிறது சுவாமி பிரம்மாநந்த சரஸ்வதி அவர்களின் வேதாந்த உரைகள் அடங்கிய ‘தனியன்’ நூல்.

 

asramam-5

இந்தத் ‘தனியன்’ நூல் தொடர் உரையாடல் எதையும் சாத்தியப்படுத்தும்; ஓயாமல் அலையடிக்கும் மனத்தைக் கொஞ்சம் அமைதிப்படுத்தும் என்று நம்புகிறேன். ‘தனியன்’ நூலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு கட்டுரைகள் குறித்தும் தொடர்ந்து உரையாடுவதற்கான வாசல் திறந்துவிடப்பட்டுள்ளது. பலநாள்களுக்குப் பிறகு ஆன்மீகம் குறித்த எனக்குள் இருக்கும் அந்தத் தனியனை இந்த நூல் தட்டியெழுப்பியுள்ளது என்பேன். ஏதோ ஒரு சமாதானத்தில் உறைந்துகிடந்த பல கேள்விகளை இந்த நூல் மீட்டுக் கொண்டு வந்திருக்கிறது. பதிலைத் தேடுவதைவிட கேள்விகள் குறித்து உரையாடுவதே ஆகச் சிறந்த செயல்பாடு எனத் தனியன் உணர்த்தியுள்ளது. கேள்விகளின் சாரங்களைத் தொகுத்துப் பார்க்க தனியன் நூல் எனக்கொரு வாய்ப்பை அளித்துள்ளது. இதுவே சர்வ பூரணம் எனச் சொல்ல மாட்டேன். மனித மனம் அத்தனை எளிதில் சமாதானம் ஆகிவிடாது.

புத்தர் அதனால்தான் மனசாட்சியைப் பற்றி முற்றிலும் துறக்க வேண்டும் என்கிறார். பிரக்ஞை மட்டுமே போதும். நீ இப்பொழுது இருக்கிறாய் என்கிற பிரக்ஞை மட்டுமே போதும். மனசாட்சி உன்னை நிம்மதியாக வாழவிடாது. உன்னைத் துரத்திக் கொண்டே இருக்கும். ஆனால், அப்படி வாழ நேர்ந்தால் உலகம் நம்மை மனசாட்சி இல்லாதவன் என இகழ்ந்து பேசும் அல்லவா?

‘நெருக்கடிகளை எதிர்கொண்டு சமாளிக்கும் மனப்பக்குவத்தை வழங்குவதே வேதாந்தம்’ என சுவாமி தன் தனியன் நூலில் தெளிவாகக் குறிப்பிடுகிறார். நெருக்கடிகளை விட்டு உன்னால் தப்பிக்க முடியாது; ஆகவே, அதனை எதிர்க்கொண்டுதான் ஆக வேண்டும் என்கிற ஒரு பக்குவத்திற்கு வர உன்னை நீ புரிந்து கொள்ள வேண்டும் என்கிறது வேதாந்தம்.

வேதாந்தம் நம்முடைய பூர்வீகமான கேள்விகளுக்குப் பதில்களைத் தந்து நம்மை ஆற்றுப்படுத்தும் என எனக்குத் தோன்றவில்லை. ஆனால், அது நம்மை யார் என்று நமக்கு உணர வைக்கும். உலகில் தோன்றிய மற்ற அனைத்து நூல்களும் அதனைத்தானே செய்கிறது எனப் பலரும் சொல்லிக் கேட்டிருப்போம்? எடுத்துக்காட்டாக, திருக்குறள், ஆத்திசூடி, மூதுரை எல்லாம் மனித சிந்தனைக்கான திறவுக்கோல் என்றெல்லாம் சொல்லலாம்.

ஆனால், அவையாவும் என்னால் அற நூல்களாக மட்டுமே சிந்திக்க முடிகிறது. அற நூல்களின் மிக ஆதாரமான செயல்பாடு நம்மிடையே நம்பிக்கைகளை விதைப்பதுதான். நம்மை ஆசுவாசப்படுத்தி இலட்சியவாத சிந்தனைகளை நமக்குள் விதைக்கும் வேலையைத்தான் அவை செய்கின்றன. திருக்குறள் ஒருவகையில் சிறந்த அற நூலாகவே நான் கருதுகிறேன். திருக்குறளின் தொனி வாழ்க்கைக்குள்ளும் வாழ்க்கைக்கு அப்பாலும் தொடரும் விடையில்லா நம் கேள்விகளின் முன்னே பதிலாக மாறுவது அல்ல; கேள்விகளுக்கு அப்பால் இப்பொழுதிருக்கும் உலகை நோக்கி நடைப்போட புத்திப் புகட்டும் இருப்பாக மாறுவது. இதனைச் செய்; இது நடக்கும். இதனைச் செய்யாதே இது நடக்கும். என உபதேசத் தளத்தில் மிகப் பாரம்பரியமான நிலைத்தன்மையுடன் நின்று கொண்டு வாழ்க்கையை நோக்கி நம் அறிதலுக்கு வழிகாட்டுகின்றது.

28-1385645154-buddha3434-600-jpg

வேதாந்தம் அதைச் செய்யவில்லை என்பதானாலே அதன் உரைப்புகள் நம்மைத் திருப்திப்படுத்த வாய்ப்பே இல்லை. நீ எத்தனை தூரம் ஓடினாலும் பிரச்சனைகள் வரும் என்கிறது வேதாந்தம். நீ என்ன தலைக்கீழ் நின்றாலும் உனக்கு வயதாகும் என்கிறது. ஆகையால், அதனைக் கண்டு மிரளாதே. சில முயற்சிகள் உன்னை முன்னேற்றும்; சில முயற்சிகள் உன்னை வீழித்திவிடவும் செய்யும். அது ஏன் எனக் கேட்டு நேரத்தை விரையமாக்காதே. காரியத்தைத் தொடர்ந்து செய்வதற்கான அத்தனை உரிமையும் அதிகாரமும் உனக்குண்டு. ஆகவே, பலனைப் பற்றி கற்பனை கொள்ளாமல் உன் செயலைத் தொடர்ந்து செய் என்கிறது வேதாந்தம் என சுவாமி தனியன் நூலில் குறிப்பிடுகிறார்.

சதா காலமும் பற்பல கேள்விகள் நமக்குள் உறங்காமல் தகித்துக் கொண்டே இருக்கின்றன. அது மனித வாழ்வில் மிக இயல்பு. வேதாந்தம் அக்கேள்விகளைப் புரிந்து கொள்ளும் ஓர் உரையாடலை நமக்குள் தொடக்கி வைக்கக்கூடும். தனியன் அதற்கான ஒரு சந்தர்ப்பத்தை இத்தமிழ்ச்சூழலில் உருவாக்கிவிட்டுள்ளது.

வேதாந்தம் முழுமுதற் கடவுள் என்கிற சிந்தனையைப் பற்றி பேசி நம்மை மண்டியிட வைப்பதில்லை. வேதாந்தம் நம்மை நோக்கி உரையாடுகின்றன. உன்னை நீ உற்று நோக்கு; உள்கடந்து போய் பார்’ எனத் தேடலில் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்கும் நம்மை உள்முகமாகத் திரும்பிப் பார்க்கச் சொல்கிறது என என்னளவில் தோன்றுகிறது. இதையே முழுமுற்றிலுமான புரிதல் என என்னால் ஊர்ஜிதப்படுத்த இயலவில்லை. ஆனால், தனியனைப் படித்து முடிக்கும்போது என்னை உரையாடலுக்கு அந்நூல் தயார்ப்படுத்தியதை முற்றிலுமாக உணர முடிந்தது.

உண்மையான சுதந்திரம் என்பது உன் சுயத்திடமிருந்து நீ பெறுவதே ஆகும் என புத்தர் உறுதியாகச் சொல்கிறார். இதையே வேதாந்தம் உன்னை வாழவிடாமல்; எந்தக் கர்மத்தையும் செய்யவிடாமல் தொடர்ந்து அலைக்கழித்துக் கொண்டிருக்கும் உன் கேள்விகளிடமிருந்து உன்னை விடுவித்துக் கொள்ளும் ஓர் அறிவுத் தெளிவை நோக்கி செல்வதே சுதந்திரம் என்கிறது.

  • கே.பாலமுருகன்

இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம்: றியாஸ் குரானாவின் கவிதைகள்

 

essay2a

றியாஸ் குரானா – அறிமுகம்

தொடக்ககாலக்கட்டத்தில் இலங்கையில் உருவான முதலாளி – பாட்டாளி எனும் இலக்கிய செயற்பாடுகளுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தின் வழி தமிழ் தேசியம் எனும் கட்டமைப்பு போர் காரணமாக அங்கு உருவானது. இந்த மாற்றத்தின்போது பெரும்பான்மையான முஸ்லிம் இலக்கியவாதிகளின் பங்களிப்புகளும் தமிழ் இலக்கியத்துக்கான செயல்பாடுகளும் கவனிக்கப்படாமல் போனது. அவர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டார்கள். ஆகையால் தமிழ் தேசிய உருவாக்கத்தில் ஒரு கவிஞனாக தனது நிலைப்பாட்டையும் படைப்பையும் நிருபீக்க தொடர்ந்து பலர் போராட வேண்டிய சூழல் அங்கு இருந்ததையும் வெளிப்படுத்தியுள்ளார். தனது பின்நவீன எழுத்தின் மூலம் அவர்கள் ஒடுக்கப்பட்டதன் அரசியலை மீட்டுணர்ந்து எழுதியதில் றியாஸ் குரானாவிற்கு முக்கியமான பங்குண்டு. முஸ்லிம் இலக்கியவாதிகளின் மீது நடந்தேறிய ஒதுக்கப்படல் எனும் செய்லபாட்டின் மீது எதிர்ப்பேச்சை மிகவும் துல்லியமாகத் தொடக்கி வைத்துள்ளார் றியாஸ்.

மாற்றுப்பிரதி எனும் வலைத்தலத்தில் எழுதி வரும் றியாஸ்வின் ‘நாவல் ஒன்றின் மூன்றாம் பதிப்பு’ எனும் கவிதைகள் தொகுப்பு சில வருடங்களுக்கு முன் பிரசுரமானது குறிப்பிடத்தக்கது.  எழுத்துச் சூழலில் எப்பொழுதும் தொடர் விவாதப் பேச்சு இருந்தாக வேண்டும் என இலங்கை இலக்கிய சூழல், அதிலுள்ள முஸ்லிம்களின் பங்களிப்பு என தனது உரையாடலைத் தீவிரமாகத் தொடர்ந்து பதித்து வருகிறார். பின்நவீனம் குறித்த எழுச்சியை அதற்குள்ளிருக்கும் மாற்றுத்தளங்களை எழுத்துச் சூழலில் அறிமுகப்படுத்த பற்பல உரையாடல்களையும் கட்டுரைகளையும் எழுதி வருகிறார்.

 

றியாஸ் அவர்களின் கவிதை நூலிற்கு நான் எழுதிய முன்னுரை

 

novel-ondrin-1-800x800

 

“நான் கவிதை சொல்லி, கவிஞனில்லை”- றியாஸ் குரானா

ஒரு கவிதையைக் கொல்ல முடியுமா? அல்லது கவிதை என நாம் நம்பிக்கொண்டிருக்கும் ஒரு வெளியை வேரறுத்து புதிய கதைப்பரப்பை அதற்குள் நுழைக்க முடியுமா எனக் கேட்டால், அந்தக் கேள்வி சமக்காலத்துக் கவிதையைப் புரிந்துகொள்வதற்கான ஒரு முறைமையாக இருக்கும் என நினைக்கிறேன். மேற்கண்ட கேள்விகளுக்கான பதிலைத் தேட முயன்ற நான் அதை றியாஸ் கவிதைகளுக்குள் கண்டடைந்திருப்பதாக ஒரு குற்றசாட்டை முன்வைக்கிறேன். கவிதைக்கு ஒரு கூட்டுப் புரிதலை நோக்கிய ஒரு களம் அவசியம் தேவைப்படும் எனச் சொல்வதற்கில்லை. ஒரு கவிதை இன்று பல்வேறு சமயங்களில் பலவகைகளில் புரிந்துகொள்ளப்படுகின்றது. மனதின் அந்தரங்கமான மொழித்தான் கவிதை எனச் சொல்லப்படுகிறது. அந்தரங்கமான ஒன்று ஒரு மனிதனின் ஆழ்மனதுடன் பேசும் உரையாடலை எப்படிப் பொதுவிற்குக் கொண்டு வந்து கலந்தாலோசிப்பது? அல்லது விவரமாகக் கருத்துரைப்பது? இதுவே இக்காலக்கட்டத்தின் கவிதையை நோக்கி நாம் முன்வைக்கும் சவாலாகக்கூட இருக்கலாம்.

றியாஸ் தன் எழுத்தில் குறிப்பிட்டிருப்பது போல விமர்சனம் என ஒன்றை கவிதைக்குள் நுழைக்க முற்படும்போது அது மிகவும் வன்முறைமிக்க ஒரு பகுத்தறிவாக மாறுவதாக உணர்கிறேன். தன் புரிதலில் மிகவும் வசதியான ஒரு பகுதியை ஏற்றுக்கொண்டு அதைத் தரமிக்கதாகவும், தனக்கு புரியாததை அல்லது கவிதை எனும் ஒரு பரப்பிலிருந்து மீறல் செய்திருக்கும் எல்லாவற்றையும் தரமில்லாதவை எனவும் முடிவு செய்யும் பகுத்தறிவின் செயல்பாடு குறித்து றியாஸ் கொண்டிருக்கும் சிந்தனை மிக முக்கியமானதாகும். விமர்சனம் என்கிற பெயரில் தட்டையான பகுத்தறிவு சார்ந்து நாம் உருவாக்கும் மதிப்பீடு இலக்கியத்தைக் கொல்கிறது என்பதுதான் றியாஸ் குரானாவின் வாக்குமூலம். சார்புடைய விமர்சனங்களின் மூலம் மிகவும் அழுத்தமாக உருவாக்கப்படுவது இலக்கியத்தை அழிக்கும் அதனுடைய நிச்சயமற்ற வெளியைச் சிதைக்கும் ஒரு மதிப்பீட்டு முறையைத்தான் எனப் புரிந்துகொள்ள முடிகிறது. அப்படியென்றால் இலக்கியத்திற்கான விமர்சனம் எது? மதிப்பீட்டின் நேர்மையை எப்படி அடையாளம் காண்பது?

ஆகையால் அந்த எல்லாம்வகையான சிக்கல்களை நன்குணர்ந்த பிறகே சமீபத்தில் றியாஸ் குரானாவின் கவிதைகளை மொத்தமாக வாசிக்க முற்பட்டேன். கவிதை ஒழுங்கமைதியுடன் இருத்தல் அவசியம் எனப் பேசப்படும் ஒரு காலக்கட்டத்தில் மீண்டும் மீண்டும் கவிதையின் மீது வரையறைகளையும் கட்டுப்பாடுகளும் பிரக்ஞைக்கு உட்பட்டும் பிரக்ஞைக்கு அப்பாற்பட்டும் திணிக்கப்பட்டும் நுழைக்கப்பட்டும் வருவதைக் கவனிக்க முடிகிறது. ஒழுங்குகளைப் பற்றி கவனப்படுத்தாமல் தன் கவிதைக்குள் ஒரு மாற்றுவெளியை அவர் நிறுவ முயல்கிறார் எனத் தோன்றுகிறது. கவிதை என்பதை ஒவ்வொரு காலக்கட்டத்திலும், வடிவ ரீதியிலும், கருத்தாக்க ரீதியிலும், பேசுப்பொருள் ரீதியிலும், சிந்தனை/புத்தாக்கச் சிந்தனை ரீதியிலும், அரசியல் ரீதியிலும் மதிப்பிட்டு வகைப்படுத்தி வரும் ஒரே வேலையைத்தான் விமர்சகர்கள் செய்து வருகிறார்கள். விமர்சகர்களுக்கு ரியாஸ் கவிதை மாதிரியான ஒன்றில் வேலை இல்லை என்றே நினைக்கிறேன். இப்பொழுதே இது விமர்சனம் அல்ல, நான் விமர்சகனும் அல்ல எனச் சொல்லிவிட்டு விடுப்பட வேண்டியிருக்கிறது.

எனக்கு வாசிக்கக் கிடைத்த அவருடைய கவிதைகளின் ஒரு வாசகனாக இனி தொடர்கிறேன். வாசிப்பைப் பற்றி குறிப்பிடும் ரியாஸ், அவை பிரதியினூடாக எல்லாம் புலன்களையும் விரிவாக்கி, மொழிக்குள் கரைந்துகிடக்கும் குறிப்பீடுகளை, குறியீடுகளை உடைத்து அதன் தன்மைகளைப் புரிந்துகொள்ள பயன்படக்கூடியது. கவிதைக்குள் இருக்கும் எல்லாம் மொழிதலையும் குறிப்பீடுகளையும் அம்பலப்படுத்திவிட்டு கவிதையை நிர்வாணமாக்கும் அடுத்த கணமே அது செத்து வீழ்வதாக நினைக்கிறேன். அப்படியொரு கொலைகளைத்தான் றியாஸ் செய்கிறாரோ எனக்கூட தோன்றுகிறது. இது தற்காலிகமான ஒரு வாசகப் பரப்பாக இருந்து எழுதி முடித்தவுடன் களைந்து போகவும் வாய்ப்பிருக்கிறது. கவிதை அல்லது கவிதையை உணர்வது என்பது எத்தனை ஆபத்தான செயல் அல்லது விபரீதமான முயற்சி? ஆகையால் வாசக வசதிக்காக அவருடைய கவிதைகளை மூன்று வகையாகப் பிரித்தறிய முற்படுகிறேன்.

 

  1. கவிதையின் மையமற்ற பேச்சு

நான் வாசித்ததில் றியாஸ் குரானாவின் கவிதைகளில் மையம் இல்லாதது போல உணர்கிறேன். நவீன கவிதைகளில் மையம் இருப்பதில்லை. ஆனால் எந்த வகையான கவிதையாக இருந்தாலும் அதை வாசிக்க முயலும் மனம் முதலில் அதனுடைய வேரை அல்லது மையத்தை நோக்கித்தான் அலைகிறது. இதற்கு முன் தமிழில் எழுதப்பட்ட பல நவீன கவிதையை விமர்சிக்க முயன்ற பல விமர்சகர்கள் மையமே இல்லாவிட்டாலும் அதனை உருவாக்கி கவிதையை நோக்கி ஒரு கதையாடலைத் தொடக்கி வைத்திருக்கிறார்கள். இது தமிழில் விமர்சனம் சார்ந்து உருவான ஒரு மாயை. மையத்தைத் தகர்த்துவிட்டு, அதன் பிறகு அதற்குள் எந்த வடிவத்தையும், கருத்தாக்கங்களையும், வாழ்வையும், அரசியலையும் கண்டடைய முடியாது எனும் தீர்க்கமான பயிற்சிக்கும் நம்பிக்கைகளுக்கும் ஆளான விமர்சகர்கள் படைப்பைத் தங்கள் வசதிக்கு மறுபுனைவு செய்யத் துவங்கிவிட்டிருக்கக்கூடும். அந்தக் கணமே அது விமர்சனமாக இல்லாமல் ஒரு பகுத்தறிவின் செயல்பாடாக மாறிவிடுகிறது. அதன் பிறகு உருவாவதை நாம் மதிப்பீடு எனச் சொன்னாலும், அது ஒரு சார்புடைய புரிதல் மட்டுமே.

புதுக்கவிதையை விமர்சித்துப் பழகி போன ஒரு விமர்சகன் நவீன கவிதையை எதிர்க்கொள்ளும்போது, அதற்குள் பாடுபொருளையும், கருப்பொருளையும், அங்கதம், வடிவம் என வரிசையாகத் தேடிக்கொண்டிருப்பது போன்ற ஒரு அபத்தம்தான் ரியாஸ் கவிதைகளில் மையத்தைத் தேடி அலைவது. அவர் கவிதையைத் தொடங்கிய மறுகணமே சட்டென அதிலிருக்கும் மையத்தை உடைப்பதாகப் படுகிறது. அவருடன் சமீபத்தில் கலந்துரையாடுகையில், “ வாசகர்களை நேரடியாகத் தொடர்புப்படுத்துவது எனது கவிதையின் வேலை, அதுமட்டுமல்லாமல் நான் ஒரு கவிதை சொல்லி கவிஞனில்லை” என அறிவிப்பு செய்தார்.

“தனது கவிதைக்குள்

என்னை அழைத்துச் செல்ல

அவன் விரும்பியிருக்க வேண்டும்

சொற்களைத் திறந்தபோது

எதையுமே காணவில்லை.

பலமுறை இப்படித்தான் நிகழ்ந்துள்ளது

என்னைக் கூட்டிச்

செல்லும்போது மட்டும்

கவிதைக்குள் எல்லாமே

அழிந்துவிடுவதாகச் சொன்னான்”

 

றியாஸ் தொடர்ந்து கவிதையின் மையத்தை இப்படி வெளிப்படையான பேச்சின் மூலம் அழிக்க முற்படுவதன் சாயலே மேற்கண்ட அவருடைய வரிகள். அநேகமாக அவர் கவிதையில் நிகழும் மரபார்ந்த கொலைகளைச் சுட்டிக் காட்டும் ஒரு வெளிப்படையான பேச்சுக்குத்தான் இப்படிக் கவிதைகளைத் தயார் செய்கிறாரோ எனக்கூட தோன்றுகிறது. மரபார்ந்த முறையில் கவிதையைத் தெய்வீகமானதாகக் காட்ட முயலும் தமிழ் சூழலின் வேடிக்கையான மனநிலையைக் கேலி செய்கிறது ரியாஸ் அவர்களின் கவிதை மாதிரிகள். அவை முழுக்க சமக்காலத்திய மனசாட்சிக்கு உட்பட்டவை என்பதைத் தொடர்ந்து நிறுபனம் செய்வதற்காகவே அவர் கவிதைக்குள் கவிதை பற்றிய உரையாடலைத் தொடக்கி வைக்கிறார். அதன் மீது தொடர்ந்து கட்டியெழுப்பப்படும் புனிதங்களை உடைத்து கவிதையை எல்லோருக்குமானதாக ஆக்குகிறார்.

download-44

கவிதை இறுக்கமானவை, அவை மௌனம் நிரம்பியவை, அவற்றை அத்துனை எளிதில் புரிந்துகொள்ள முடியாது, அவை தமிழின் பல்லாண்டு மரபுடையவை எனத் தொடர்ந்து கவிதை அடைந்து வரும் தூரத்தை நேரடியாக உடைக்க எல்லாம் வகையிலுமான எத்தனங்களை அவர் செய்திருக்கிறார். கவிதையின் வடிவத்தை எல்லையற்ற வகையில் விரித்துக் காட்டுகிறார். காலம் காலமாகப் பாவிக்கப்பட்டு வந்த கவிதையின் மீதான இறுக்கங்களை மீறுவதற்கு ஒரே வழி அதற்கு முரணான எல்லாம்வகையான களைத்தலையும் செய்வதே ஆகும்.

 

  1. சொற்களைத் திறப்பது – engineering the words

ஒரு சொல்லின் வரலாறு என்ன? தமிழில் இன்று உபயோகிக்கப்படும் சொற்களின் வயது என்ன? அது நெடுங்காலம் பயணம் செய்து வந்திருக்கிறது. அப்படிப்பட்ட சொல்லுக்குள் படிந்திருப்பது ஒரே மாதிரியான குறிப்பீட்டு முறையாகவோ அல்லது ஒரு அடுக்குகளோ எனத் தோன்றவில்லை. ஒரு சொல் தனக்குள் வைத்திருக்கும் ஆழங்கள் பலநெடுங்காலத்தில் பலரால் உருவாக்கப்பட்டவை. ஆனால் ஒரு சொல் 10 வருடத்திற்கு முன் பாவிக்கப்பட்ட மாதிரியே அதன் கட்டுக்குலையாமல் பாதுகாக்கப்பட்டு இன்றும் பாவிக்கப்படுவதைவிட ஒரு கொடூரம் இல்லையென்றே நினைக்கிறேன். இதைப் பிரக்ஞையற்று பலரும் செய்து வருவதை ரியாஸ் தன் கவிதைகளில் நேரடியாகவே சாடுகிறார். கவிதையை கவிதைக்கு எதிராகப் புனைந்து காட்டி அதற்குள் இருக்கும் சொற்களைக் கவிதைக்கு வெளியே மிதக்கவிடுவதே புதிய முயற்சியாகக் கருதுகிறேன். அப்படியொரு முயற்சியின் வழியே அவரின் கவிதைகள் நமக்கு வந்து சேர்கின்றன.

“சொற்களைப் பூட்டிய அவன்

சாவியைத் தராமலே போய்விட்டான்.

ஆத்திரத்தில் சொற்களை உடைத்தேன்.

உள்ளே கவிதைகள் மாத்திரம்தான் இருந்தன.

பொய்யென்றால் சொற்களை உடைத்துப் பாருங்கள்”

சொற்களைப் பூட்டுவது என்ற ஒரு வன்முறை எங்கும் நிகழ்த்தப்பட்டு வந்திருப்பதை மீட்டுணரச் செய்யும் கூர்மையான வரிகளை ரியாஸ் தமிழ் சூழலுக்குக் கொடுத்துள்ளார். கவிதை படைத்தவன் கவிதைக்குள் இருக்கும் சொற்களைப் பூட்டுவது என்பது இரண்டு வகைகளில் புரிந்துகொள்ளலாம். இது ஒரு கவித்துவமான வரி, அழகியல் நிரம்பியவை என சிலாகித்துவிட்டு நகரக்கூடிய தன்மை உடையவை அல்ல. சொற்களைப் பூட்டுவது என்பது தான் எழுதிய கவிதையின் ஒவ்வொரு சொல்லும் அதனுடைய பாங்கை மிக நேர்த்தியாகச் செய்வதற்குப் படைத்தவன் விதிக்கும் தண்டனைத்தான் அது. அதனுடைய பொருளைவிட்டு அது நகராதபடிக்குக் காலம் முழுக்க எப்பொழுது வாசித்தாலும் அதே பொருளைச் சுமந்து நிற்கும் மிகக் கொடூரமான தண்டனை. இதை ஒரு வகையில் கவிதையைச் சொற்களைக் கொண்டு நெய்வது எனக்கூட சொல்லலாம். நூலை இறுக்குவதன் மூலம் ஒரு வடிவம் கிடைக்கிறது. சொற்களை இணைத்து கோர்த்து அதை இறுக்கமாக்குவதன் மூலம் கவிதை கிடைக்கிறது எனப் பலர் செய்யும் வன்முறையை, ரியாஸ் தன் கவிதையில் அம்பலப்படுத்துகிறார்.

 

“சொற்களுக்குள் நெடுநேரம்

கவிதையை அடைத்து வைக்க

முடியாது” என்றேன்.

 

நாம் உருவாக்க நினைக்கும் கவிதையை அல்லது கருத்தை படைப்பதற்குச் சொற்களைப் பலியாக்கும் முறையை மிகக் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். சொல் தேர்வு என்பதை மிகவும் பிரக்ஞையுடன் செய்பவர்கள் தனது கவிதைக்குள் அவற்றை கருத்தறிந்து புகுத்துகிறார்கள். சொற்கள் தனக்களிப்பட்ட இடத்தில் போய் அமர்ந்துகொள்கின்றன. அதன் பிறகு அந்தச் சொற்கள் அங்கேயே தேங்கிவிடுகின்றன. சொல்லப்போனால் அவை அப்பொழுதே அங்கு வைத்து புதைக்கப்படுகின்றன. அதன் பிறகு அவை இடம் மாறுவதும் அல்ல, தன்னைப் புரட்டிக் கொள்வதும் அல்ல, உருமாற்றிக்கொள்வதும் அல்ல. சொற்களைக் கவிதைக்குள் இத்தனை வறட்சி மிகுந்த நிலைமையில் உபயோகிக்க கவிஞர்களுக்கு என்ன நேர்ந்தது?

 

கவிதையையும் சொற்களையும் கொல்கிறவர்களைக் கொல்லும் வேலையைத்தான் ரியாஸ் குரானாவின் கவிதைகள் செய்வதாக நினைக்கிறேன். அதனால்தான் தன்னை இலக்கியத்தைக் கொல்பவனின் சாட்சியம் என அடையாளப்படுத்திக்கொள்கிறாரா?

 

“பெரும்பாலும்

அந்தப் பறவை எதுவென்று

நீங்கள் ஊகித்திருப்பீர்கள்

இல்லையெனில் இனியும் ஊகிப்பதற்கான

அவகாசம் உங்களுக்கில்லை

வாசிப்பதை நிறுத்திவிட்டு

தயவு செய்து போய்விடுங்கள்

 

இது, ஓய்வெடுப்பதற்காக அந்தப் பறவை

கவிதைக்குள் வருகின்ற நேரம்”- றியாஸ்

 

ஒரு சொல்லைத் தொடும்போது நம் உடல் சிலிர்க்கக்கூடும். அல்லது மனம் அதிரக்கூடும். எத்துனைப் பழமையானவையாக இருந்தாலும் அது வந்து சேர்ந்திருக்கின்ற இந்த நூற்றாண்டின் எல்லாம் பொலிவுகளையும் துடிப்பையும் தனக்குள் சேமித்துக்கொள்கின்றன. இது எத்தனை கவிஞர்களுக்கு தெரியும்? தெரிய வேண்டிய அவசியமும் இல்லை. “யாரும் கவிதையைப் பெற்றெடுப்பதில்லை” என அவரே சொல்கிறார். பிரக்ஞையும் கவிதையைச் செய்பவர்கள்கூட சொற்களுக்கு அளிக்கும் வரம் ஒரு கூண்டுக்குள் அடைத்து வைக்க முயல்வதே ஆகும். கவிதைக்கு வெளியே எப்படிச் சொற்கள் மிகச் சுதந்திரமாகப் பயணிக்கக்கூடியதோ அதற்கு மாற்றாகப் பலரின் நெடுங்கவிதைகளுக்குள் சொற்கள் பிடித்து வைக்கப்பட்டிருக்கின்றன.

 

றியாஸ் தனது கவிதைகளுக்குள் சொற்களை அடைத்து வைக்கவும் இல்லை, அல்லது தான் பயன்படுத்திய சொற்களுக்குள் கவிதையையும் ஒளித்து வைக்கவில்லை. இவையனைத்தையும் மீறி சொற்களுக்காகக் கவிதையோ அல்லது கவிதைக்காகச் சொற்களையோ அவர் தேர்ந்தெடுக்கவும் இல்லை என்றே தோன்றுகிறது. மலை மீது தங்கிச் செல்லும் பனி போல சொற்கள் சட்டென கரைந்துவிடுகின்றன அல்லது திடீரென கவிதை காணாமல் போய்விடுகிறது. இதுதான் ரியாஸ் குரானாவின் கவிதையை வாசிக்கும் வாசகன் அடையும் எல்லை, விரக்தி அல்லது புரிதல். கவிதைக்கு வெளியில் சொற்களை அனுப்பிவிடுவதும் சொற்களுக்குள் வைத்த கவிதையை உடனே அவிழ்த்துவிடுவதும் அவருக்குக் கைவந்திருக்கிறது. ஒருவேளை இப்படிப் பேசுவதே அல்லது ஒரு கவிதையை இப்படிப் புரிந்து கொள்வதே விநோதமாக இருக்கக்கூடும். இது ரியாஸ் குரானாவின் கவிதையைப் புரிந்துகொள்ள நான் உருவாக்கிய மதிப்பீட்டு அரசியல். இதனைக் கடந்தும் நீங்கள் அவருடைய கவிதையை அடையலாம். வெளியே தூக்கியெறியப்பட்டால் நான் பொருப்பல்ல.

 

கே.பாலமுருகன்

பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு 2016 ஒரு பார்வை : 21ஆம் நூற்றாண்டு சவால்களை எதிர்கொள்ளும் மலேசியத் தமிழ்க்கல்வியின் 200 ஆண்டுகளின் பயணம்.

banner1

20 – 23 அக்டோபர் 2016ஆம் நாட்களில் ஏய்ம்ஸ்ட் கெடா அறிவியல் பல்கலைக்கழகத்தில் கல்வி அமைச்சு ஏற்பாட்டில் மலேசிய வடமாநிலத் தமிழாசிரியர்களுக்கான பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு சிறப்பாக நடந்தேறியது. இது என்னுடைய ஐந்தாவது மாநாட்டு அனுபவம் ஆகும். ஏற்கனவே இரண்டுமுறை கட்டுரை வாசித்துள்ளேன். இது மூன்றாவது முறையாகக் கட்டுரையைப் படைத்துள்ளேன். கெடா மாநில மொழித்துறை துணை இயக்குனர் திரு.பெ.தமிழ்செல்வன் அவர்களால் தகவல் வழங்கப்பட்டு ஏழு பேரின் கட்டுரைகள் மாநாட்டுக் குழுவால் ஏற்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவில் தமிழ்க்கல்வி தொடங்கப்பட்டு 200 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இந்த மாநாடு தமிழ்க்கல்வியுடன் நேரடித் தொடர்பில் இருக்கும் தமிழ்ப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, தேசியப் பள்ளியில் தமிழ்ப் போதிக்கும் ஆசிரியர்களின் திறனை வளர்ப்பதற்காகக் கல்வி அமைச்சால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. 1816ஆம் ஆண்டு பினாங்கு ‘ஃப்ரி’ பள்ளியில் தொடங்கப்பட்டு இன்றுவரை பற்பல மாற்றங்களை உள்வாங்கிக் கொண்டு மலேசியத் தமிழ்க்கல்வி முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதனை நினைவுக்கூர்ந்து கொண்டாடும் வகையில் மலேசியாவில் பலவகையான நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், சந்திப்புகள் நடந்த வண்ணமே இருந்தன. அதன் நிறைவாக இந்த மாநாடு நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்து கொண்டு கட்டுரை படைத்ததோடு மட்டுமல்லாமல் மற்ற அமர்வுகளிலும் கலந்து கொண்ட அனுபவத்தைக் கொண்டு இக்கட்டுரையை எழுதியுள்ளேன். அதனைச் சில பகுதிகளாகப் பிரித்துக் கருத்துரைத்தால் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளாத பொதுமக்களுக்குப் பயனாக இருக்கும் என நம்புகிறேன்.

  1. மாநாட்டு அதிகாரப்பூர்வ இணையத்தளம்

இந்த மாநாட்டுக்கென சிறப்பு இணையத்தளம் ஒன்றினை மாநாட்டில் ஆசிரியர் சற்குணன் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டன. இதுவே இந்த மாநாட்டின் தரத்தை மேம்படுத்திக் காட்டுகிறது. கீழ்க்கண்ட அந்த இணையத்தளத்தில் மாநாட்டில் படைக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளையும் பொதுமக்கள் வாசிக்கலாம்.

http://tamilkalvi.my/

 

14797432_10211157274506344_776900704_n

  1. மாநாட்டுக் கட்டுரைகளின் தரம்

இந்த மாநாட்டின் கருப்பொருள் 21 ஆம் நூற்றாண்டில் தமிழ்க்கல்வி என்பதால் மாநாட்டில் படைக்கப்பட்ட அனைத்து கட்டுரைகளையுமே மாநாட்டு ஏற்பாட்டுக் குழு மிகவும் கவனத்துடன் தேர்ந்தெடுத்துள்ளனர். பலரின் கட்டுரைகள் நிராகரிக்கப்பட்டதே மாநாட்டின் தீவிரமான போக்கைக் காட்டுகிறது. முன்பு நடத்தப்பட்டு சில மாநாடுகளில் எந்தத் தலைப்பில் கட்டுரை அனுப்பினாலும் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதி வழங்கப்பட்டதை அறிய முடிகிறது. அது மாநாட்டில் பங்கேற்க அதிகப் பேருக்கு வாய்ப்பு வழங்கியதாகப் பெருமை கொள்ள முடியுமே தவிர மாநாட்டின் கருப்பொருளை உயிர்ப்பிக்க இயலாது. அவ்வகையில், கட்டுரை தேர்வுகளில் மிகவும் கறாராக இருந்து கருப்பொருளுக்கு உகந்த கட்டுரைகளை மட்டும் தேர்ந்தெடுத்த கலைத்திட்ட மேம்பாட்டுப் பிரிவு தமிழ்ப்பிரிவு இயக்குனர் திரு.நா.இராமநாதன் அவர்களுக்கு வாழ்த்துகள்.

 

  1. மாநாட்டு நிகழ்ச்சிகள் ஒருங்கிணைப்பு

 

conference-logo-e1476709921766

குறித்த நேரத்தில் அனைத்து அமர்வுகளும் ஒருங்கிணைக்கப்பட்ட விதத்தைப் பாராட்டியே ஆக வேண்டும். எந்த அமர்வுகளிலும் நேரம் வீணாகவில்லை. அமர்வுகளுக்கு நெறியாளர்களாக அமர்த்தப்பட்டவர்கள் அனைவரும் நேர்த்தியாகவும் வழங்கப்பட்ட நேரத்திற்குள்ளாகவும் அமர்வுகளை வழிநடத்தினர். அதே போல மாநாட்டுத் திறப்புவிழாவும் நிறைவு விழாவும் காலம் தாமதமின்றி மிக ஒழுங்குடன் நடத்தப்பட்டது கூடுதல் மகிழ்ச்சியாகும். மாநாட்டிற்கு வருகையளித்த கல்வி அமைச்சர், துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் ஆகியோர் குறிப்பிட்ட நேரத்திற்குள் மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்பான உரையாற்றியதும் மாநாட்டின் நேர்த்தியின் சிறப்பைக் காட்டுகிறது. இது கலந்து கொண்ட பேராளர்களுக்குப் பெரும் திருப்தியை அளித்தது. அவ்வகையில் மாநாட்டின் தலைவர் திரு.வே.இளஞ்செழியன் அவர்களுக்கும் அவர்தம் செயல்குழு உறுப்பினர்களுக்கும் மாநாட்டுப் பேராளர்கள் சார்பில் நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

  1. மாநாட்டு மலர், நற்சான்றிதழ் & நிகழ்ச்சி மலர்

இதுவரை மற்ற மாநாடுகளில் பார்க்காத சிறப்பு மாநாட்டு மலரும், மாநாட்டுக் கட்டுரை படைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நற்சான்றிதழும் தரமானதாக அமைந்திருந்தன. மிகவும் கவனத்துடன் வடிவமைக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்துக் கட்டுரைகளும் அச்சேற்றப்பட்டிருந்தன. மாநாட்டு நிகழ்ச்சி மலர் ஏய்ம்ஸ்ட் வரைப்படம், தமிழ்க்கல்வியின் வரலாற்றுக் கட்டுரை என நிறைவான ஒரு தயாரிப்பாகும். அச்சு வேலைக்குப் பொறுப்பாக இருந்த மலேசியப் பாடநூல் தமிழ்ப்பிரிவு தலைவர் திரு.தமிழ்செல்வன் பெருமாள் அவர்களுக்குப் பாராட்டுகள். வடிவமைப்பும் கவரும் வண்ணம் இருந்தது கூடுதல் பலம்.

  1. கட்டுரைப் படைப்பாளர்களுக்கு வழங்கப்பட்ட நேரம்

 

????????????????????????????????????

பற்பல சிரமங்களுக்குக்கிடையே உழைப்பை முதலீடாக வைத்துக் கட்டுரை தயாரித்த படைப்பாளர்களுக்கு இந்த மாநாட்டில் 30 நிமிடங்கள் வழங்கப்பட்டிருந்தன. கேள்வி பதில் அங்கமும் சிறப்பான விளைப்பயனை அளித்தது. அனைத்துப் படைப்பாளர்களும் குறிப்பிட்ட நேரத்தில் நிறைவாகக் கட்டுரையைப் படைத்தது சிறப்பானதாகும்.

 

  1. மாநாட்டில் கட்டுரைப் படைத்தவர்கள் பெரும்பகுதியினர் இளைஞர்களே

பலவகையில் நிறைவான ஒரு மாநாடாக அமைந்திருந்த பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு மேலும் ஒரு புதிய திருப்புமுனையாக அதிகமான இளைஞர்கள் கட்டுரையாளர்களாகப் பங்கெடுக்கும் ஒரு வழியை வகுத்திருக்கிறது. தமிழ்க்கல்வியை நிலைநிறுத்த இளைஞர்களின் பங்களிப்பை இந்த மாநாடு ஒரு முகாந்திரமாக அமைத்துவிட்டிருப்பதாக  பலரும்  குறிப்பிட்டுப் பேசினார்கள்.

தமிழ்க்கல்வி இனி வரும் 21ஆம் நூற்றாண்டின் சவால்களைச் சமாளித்து மேலும் பல்லாண்டுகள் மலேசியாவில் தடம் பதிக்கும் வகையில் ஒரு பெருந்திறப்பையும் ஆர்வத்தையும் சிந்தனையையும் இந்தப் பன்னாட்டுத் தமிழாசிரியர் மாநாடு ஏற்படுத்தி வெற்றிக் கண்டுள்ளது. மேலும், இந்த மாநாட்டிற்குப் பொறுப்பு வகித்தவர்களான தேர்வு வாரியத்தின் தமிழ்ப்பிரிவு தலைவர் திரு.சந்திரகுரு வெற்றியப்பன், முனைவர் மோகனதாஸ் இராமசாமி, கலைத்திட்ட மேம்பாட்டுத் தமிழ்ப்பிரிவின் தலைவர் திரு.நா.இராமநாதன், பாடநூல் தமிழ்ப்பிரிவு தலைவர் திரு.பெ.தமிழ்செல்வன், திருமதி சந்திரகலா ஐயப்பன், முனைவர் சாமிக்கண்ணு ஜெபமணி மேலும் பலர் தலைமைத்துவமிக்க கல்வியாளர்கள் என்பதானாலே இந்த மாநாட்டைச் சிறப்பாக அமைத்து வழிநடத்தியுள்ளார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும். இனி வரும் அடுத்த தலைமுறைக்குத் தமிழ்க்கல்வியைப் புதிய பொழிவுடன் கொண்டு போய் சேர்ப்பதில் அனைவருக்கும் பங்குண்டு என்பதையே இந்த மாநாடு உணர்த்தியது.

 

தமிழ்மொழித் திறமிகு ஆசிரியர்

கே.பாலமுருகன்

படைப்புகளை மறுகண்டுபிடிப்பு செய்வதே விமர்சனம் – பாகம் 1

 

sundra-ramasamy

08.11.2001 – ஆம் நாளில் தினமணியில் அசோகமித்திரன் எழுதிய ‘பொருந்தாத அளவுக்கோல்கள்’ எனும் கட்டுரையைப் படித்த சுந்தர ராமசாமி அதே தினமணி பத்திரிகையில் மிகவும் வெளிப்படையாக அசோகமித்ரனின் அக்கட்டுரையை மறுக்கிறார். ஆனால், அவர் அத்தகைய சூழலை அணுகும் விதத்தை நாம் கவனிக்க வேண்டும்.

“தினமணியில் அசோகமித்ரன் எழுதிய ‘பொருந்தாத அளவுக்கோல்கள்’ எனும் கட்டுரையைப் படித்தேன். அவர் முன்வைத்துள்ள எந்தக் கருத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாறுப்பட்ட என் கருத்துகளை இங்கே முன் வைக்கிறேன்” என தன் கட்டுரையைத் துவங்குகிறார். இருவரும் தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள். ஒருவர் படைப்பை இன்னொருவர் மறுக்கும் உரிமையும் மறுக்கப்பட்டதன் காரணங்களை முன்வைக்கும் பொறுப்பையும் பொதுவெளியைக் கலங்கடிக்காமல் கையாண்டுள்ளார்கள். இத்தனை காலம் இலக்கியம் வாசிக்கும், படைக்கும் நாம் நமது முன்னோடிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய அனுபவம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இருவரும் நினைத்திருந்தால் ஆளுக்கொரு பக்கம் நின்று இதனைத் தமிழ் வெளியில் நீண்டதொரு சர்ச்சையாக்கி அதற்குள் பலரை இழுத்துப் போட்டு, அவர் பக்கம் நால்வரை நிற்க வைத்து மோதவிட்டு, இவர் பக்கம் ஐந்துபேர் நின்று வக்காளத்து வாங்கி அக்காலக்கட்டத்தின் இலக்கிய நகர்ச்சியையே வீணடித்திருக்க முடியும்.

ஜெயமோகன் வம்புகள் நிறைந்த சூழலில் வாசிப்புக் குறைந்துவிடும் என ஒருமுறை சொல்லியிருக்கிறார். வம்புகளை விட்டு நாம் படைப்பை நோக்கி விவாதிக்கும் ஆரோக்கியமான விமர்சன முயற்சிகளுக்குள் வர வேண்டும். ஒரு படைப்பை நோக்கிய உரையாடலும் உரையாடலில் முன்வைக்கப்படும் மதிப்பீடுகளும் கறாராக இருக்க வேண்டும். அதன் அவசியத்தை நாம் மறுக்க இயலாது. ஆனால், விமர்சனத்தின் வேர் சிறந்த படைப்பை அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்க வேண்டும்; ஒரு படைப்பிலுள்ள கலைக்குறைப்பாடுகளை நோக்கி வாசக சூழலை இழுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். ஒரு படைப்பைத் திறந்து காட்ட வேண்டும். அதனுள் இருக்கும் தேக்கத்தைச் சுட்டிக் காட்டி இலக்கியத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.

விமர்சனம் என்றால் என்ன? மலேசிய சிங்கை இலக்கிய அகராதியைப் புரட்டினால் விமர்சனம் என்பதற்குப் பாராட்டு, துதிப்பாடுதல், ஒத்திசைத்தல் என்று எழுதப்பட்டிருக்கக்கூடும். தீவிர நவீன இலக்கிய அகராதியைப் புரட்டினால் விமர்சனம் என்பதற்குத் தனிமனித தாக்குதல், முகத்திரையைக் கிழித்தல், பழிவாங்குதல், அடியோடு விரட்டியடித்தல் என்று பொருள் இருக்கலாம். நாம் கடந்து வந்த இலக்கியப் பரப்பை மீள்பார்வை செய்தால் இத்தனை காலம் நாம் விமர்சனக் கலையைக் கையாண்ட விதம் தெரிய வரும். இன்னொரு பக்கம் யாராவது நம் படைப்பை விமர்சித்தால் அதில் சூழ்ச்சி இருப்பதாகக் கருதுவதும் ஒரு வகையான சிக்கலே. எதிரி நம்மை விமர்சிப்பான்; நம் படைப்பை உதாசினப்படுத்திவிடுவான். விமர்சகன் என்பவன் நம்மை நீக்கிவிட்டு நம் படைப்பை விமர்சிப்பான்.

essay3

2008ஆம் ஆண்டில் பா.அ.சிவம் வல்லின நேர்காணலில் குறிப்பிட்ட ஒரு வார்த்தை இன்னமும் எனக்குள் இப்பொழுது கேட்டதைப் போன்றே ஒலிக்கிறது. “மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் எந்த எதிர்வினைக்கும் தயார் இல்லை”. அந்த எதிர்வினை, படைப்பை நோக்கியதாக இருந்தால் ஏன் அதற்கு அத்தகைய எதிர்ப்பைக் காட்டித் தடுக்க வேண்டும்? விமர்சனம் எத்தனை காத்திரமாக இருந்தாலும் அது படைப்பை நோக்கி அக்கறையுடனும் தேர்ந்த தேடலுடனும் இருந்தால் அதனை ஆரோக்கியமானதாகக் கருதி வழிவிட்டால் மட்டுமே இந்த நாட்டில் இலக்கியம் தேங்கிய நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு வளரும்.

விமர்சனம், இரசனை விமர்சனமாக இருந்தாலும் திறனாய்வாக இருந்தாலும் அதன் நிலைப்பாடு என்னவாக இருக்கும், அல்லது படைப்புச் சூழலுக்கு அதனால் என்ன நன்மை என்றெல்லாம் நாம் பேசலாம். ஆனால், இரண்டை மட்டும் மிக முக்கியமாகத் தவிர்க்க வேண்டும். ஒன்று, விமர்சனம் என்பதைப் பாராட்டு என நம்பியிருத்தல்; அடுத்து, கலைக்குக் கறாரான விமர்சனங்கள் இருக்கக்கூடாது என நம்புதல். அடுத்து, விமர்சிக்கும்போது படைப்பை விட்டு படைப்பாளியின் மீது பாய்தல்; அல்லது அவருடைய இயலாமைகளைக் கிண்டலடித்தல். ஓர் இலக்கியப் பரப்பில் இவை இரண்டையும் நாம் முற்றாக மறுத்தல் வேண்டும். அதனை மறுத்தப் பிறகே விமர்சனம் குறித்த உரையாடலுக்கு நம்மை நாம் தயார் செய்து கொள்ள முடியும்.

படைப்பிற்கும் விமர்சனத்திற்குமான தொடர்பு

‘பாரதியைப் புறக்கணித்த புலவர்கள் இருந்த இடம் இன்று தெரியவில்லை; ஆனால், பாரதி இன்றும் நின்று கொண்டிருக்கிறார்’

                                                                                – சுந்தர ராமசாமி

சிறந்த படைப்பின் இயல்பு காலத்தைத் தாண்டி நிற்பதாகும். அப்படைப்பின் மீது குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், ஆய்வுகள், எதிரிவினைகள் அனைத்துமே அப்படைப்பு உருவாக்கிய அசைவுகளின் வெளிப்பாடுகள். அப்படைப்பு ஓர் உரையாடலைத் துவக்கி வைத்திருக்கலாம்; ஒரு வசவுக்கான சூழலை ஏற்படுத்தியிருக்கலாம்; எரிச்சலை உருவாக்கியிருக்கலாம்; கோபத்தைக் கிளறியிருக்கலாம்; அசூசையை ஏற்படுத்தியிருக்கலாம். படைப்பு ஒரு தருணத்தை உருவாக்குகிறது. அதில் பங்கெடுப்பவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்; அப்படைப்பை மறுக்கிறார்கள்; அப்படைப்பின் மீது வசையை எறிகிறார்கள்; அப்படைப்பைத் திறனாய்வு செய்கிறார்கள். இப்படி ஒரு படைப்பு சார்ந்து சமூகம் வெவ்வேறு வகையில் பங்கெடுத்துக் கொள்கிறது. ஆனால், படைப்பின் இயல்பு என்ன? அத்தருணங்களைத் தாண்டி தன்னை நிரூபித்துக் கொள்கிறதா அல்லது காலத்தால் மறக்கப்படுகிறதா? சிறந்த படைப்பின் இயல்பு கறாரான விமர்சன சூழல்களைக் கடந்து வருவதாகும். காலத்திற்கேற்ப தன் இலக்கியத் தேடல்களைப் புதுப்பித்துக் கொண்டு, வாழ்க்கை குறித்த விசாரணைகளை ஆழப்படுத்திக் கொண்டே வரும் படைப்பாளியின் கூர்மை அவன் படைப்பில் நிச்சயம் வெளிப்படும். ஒரு படைப்பே அப்படைப்பாளனின் இலக்கியத் தேடலுக்குச் சாட்சியாக வந்து நிற்கும். அதனைக் காலம் கண்டறியும்.

புதுமைப்பித்தன் பலரால் மறுக்கப்பட்டார்; புறக்கணிக்கப்பட்டார். ஆனால் அவருடைய படைப்புகள் காலத்தால் மறக்கப்படவில்லை; சுந்தர ராமசாமி அவர் இயங்கிய காலத்தில் விமர்சிக்கப்பட்டார், மறுக்கப்பட்டார். ஆனால், அதன் நிலைத்தன்மையைக் காலமே முடிவு செய்தது. அடுத்து வரக்கூடிய தலைமுறை அப்படைப்பை மறுகண்டுபிடிப்பு செய்யும். அப்படிச் செய்தால் அப்படைப்பு காலத்தையும் அக்காலத்தில் வைக்கப்பட்ட விமர்சனம், வசைகள், ஆய்வு என எல்லாவற்றையும் தாண்டி நிற்கிறது. ஒருவேளை, அடுத்து வரும் தலைமுறையும் ஒரு படைப்பை நிராகரிக்க நேர்ந்தாலோ அல்லது அதைப் பற்றிய சிறிய கவனமும்கூட காட்டவில்லையென்றாலும் அப்படைப்பின் நிலை அவ்வளவுத்தான். அவை நிரந்தரமான நிராகரிப்புக்கான அத்தனை தகுதியும் கொண்டிருப்பவை. மறுவாசிப்பிலும் தோல்வியுற்று காலத்தால் மறக்கப்படுகிறது. இப்படிப் பல படைப்புகளை உதறித் தள்ளிவிட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.

ஏன் விமர்சனம் எழுதப்படுகிறது?

pupi

விமர்சனம் என்பது ஒரு படைப்பு வாசகனுக்குள் உருவாக்கிய பாதிப்பின் விளைவு. வாசகன்/நுகர்வாளன் உணர்ந்த அவ்விளைவை எழுதிப் பார்க்கிறான்; எழுதி சொல்கிறான். அதுவே விமர்சனம் என்பது ஆரம்பக்கால நிலைப்பாடு. ஆனால், விமர்சனத்திற்கு ஒரு சமூக அக்கறை இருப்பதாகவும் அதன் பின்னர் உருவான தமிழ் இலக்கிய சூழல் கவனத்துடன் முன்வைக்கிறது. புதுமைப்பித்தனின் படைப்புலகம் ஆய்வு நூலில் புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தில் அவருடன் ஒத்துப்போன அவர் படைப்புகளை முக்கியமானதாகக் கருதியவர்கள்தான் அவருடைய படைப்புகளை விமர்சித்து எழுதியுள்ளார்கள். ஒரு படைப்பின் மீதான விமர்சனத்தை அவர்களுக்கு உவப்பில்லாதமுறையில் முன்வைத்த எவரையும் படைப்புலக ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டதில்லை என சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். விமர்சனம் என்பது ஒத்துப்போவது, ஏற்கனவே சொல்லப்பட்டதைத் திரும்பக் கூறுதல் என்கிற அளவிலான ஒரு புரிதல் உள்ளவரை விமர்சனம் எனப்படுவது முதுகைச் சொறிந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கையாக மட்டுமே புரிந்து கொள்ளப்படும்.

விமர்சனத்தின் நம்பகத்தன்மையும் இரசனை விமர்சனமும்

ஒரு படைப்பாளி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்தின் அரசியல், கலாச்சாரப் போக்கு, கல்வி நிலைப்பாடுகள், வாசிப்பின் பின்புலம், தத்துவ வரலாறு, இலக்கிய மரபு, அறிவுத்துறை முன்னேற்றம் போன்றவற்றை கொண்டே அந்நிலத்திலிருந்து எழுதப்படும் படைப்பின் கலையுணர்வுகளையும் அரசியல் வெளிப்பாடுகளையும் நிர்ணயிக்க முடியும்; அப்படி விமர்சிக்க முயல்வது ஓர் ஆய்வுத்தன்மைக்கான மொழிநடையை உருவாக்கும். இதுவே நம் விமர்சனத் தரத்தை உயர்த்தும். இரசனை விமர்சனத்தின் அடுத்தக் கட்டம்.

விமர்சனம் செய்வோரெல்லாம் ஆய்வுக் கட்டுரை எழுத சாத்தியமில்லை. அது கடுமையான உழைப்பையும் தொழில்முறை ஆய்வடக்கங்களையும் கோறக்கூடியது. ஆனால், விமர்சனம் செய்பவர்களின் விமர்சனக் கட்டுரையில் அவர்கள் கையாளும் மொழிநடை திறனாய்வுக்கான விருப்பு வெறுப்பற்ற மொழிப்பயன்பாட்டைக் கொண்டிருத்தல் ஆரோக்கியமான ஒரு முன்னெடுப்பை; உரையாடலை உருவாக்கும். அத்தகையதொரு விமர்சன மொழிக்கு பரந்தப்பட்ட வாசிப்புப்பழக்கமும், விரிவான தத்துவம், அரசியல், வரலாறு, உளவியல், இலக்கியப் பார்வையும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில் அது ஆரம்பக்கட்ட இரசனை விமர்சனமாகவே நின்றுவிடும். ஆரம்பக்கட்ட இரசனை விமர்சனம் காலத்தால் நிற்காது. ஆனால், அதன் தேவையை நாம் மறுக்க இயலாது. அங்கிருந்துதான் ஒருவன் தன் விமர்சனப் பங்களிப்பைத் துவங்குகிறான். அது ஓர் உடனடி செயல்பாடு. காலம், நேரம், ஒழுங்கு என எதையுமே பொருட்படுத்தாது எழும். ஒரு சிறுகதையை வாசிக்க நேர்ந்தால், “சுந்தர ராமசாமி மாதிரி இருக்கா? அவர் மாதிரி எழுதணும்” என பிடிவாதமாக தன் வாசகப் பார்வையை முன்வைக்கும். இது மிகவும் ஆரம்பநிலையிலான விமர்சனப்போக்கு. இரசனை விமர்சனத்தின் மூலம் ஒரு படைப்பை நிரந்திரமாக மறுக்கவோ; நிறுவவோ இயலாது. இரசனை மாறுப்படக்கூடியது; நகரக்கூடியது. ஒன்று விமர்சகன் தன் வாசிப்பாழத்திலிருந்து மீண்டு தன் விமர்சன உத்தியை மேம்படுத்திக் கொண்டு நகர்கிறான். மற்றொன்று, ஒரு படைப்பாளி விமர்சனத்தையெல்லாம் கவனித்து உலக இலக்கியத்தின் நீரோட்டத்தில் தன் படைப்புகளின் நிலைகளைக் கண்டடைந்து தன் இலக்கியப் படைப்புகளைக் கூர்த்தீட்டுகிறான். இவையிரண்டும் சம்மாக வளர்ந்து முன்னகர வேண்டும். இல்லையேல் அங்கு இலக்கியம் தேங்கிவிடும்.

வையாப்புரி பிள்ளையின் மீது மிக மோசமான வசவுகளையும் தூற்றுதல்களையும் உருவாக்கிய புலவர்களின் வாரிசுகள் பின்னர் அவரை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறுவதாக சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம் இரசனை காலம்தோறும் நகர்ந்து அடையும் இடம் வெவ்வேறானவை. ஆனால், இரசனையிலிருந்து ஒரு விமர்சகன் மேலெழுந்து விமர்சனத்தின் அடுத்த நிலைக்காக உழைக்க வேண்டும். அதன் முதற்கட்டம் விமர்சனத்தில் நாம் பயன்படுத்தும் மொழியிலிருந்து துவங்குகிறது. இலக்கியத்தை விமர்சிக்க முற்படும் அனைவருமே ஒட்டுமொத்த விமர்சனத்தையே தொழில்முறையிலான திறனாய்வாக எழுத முடியாது. ஆனால், திறனாய்வு முன்மொழியும் மொழியை அவர்கள் பழக முடியும்.

ஒரு படைப்பின் மீதான வாசகப் பார்வையையோ/ விமர்சனத்தையோ/ இரசனை விமர்சனத்தையோ யார் வேண்டுமென்றாலும் வைக்கலாம். அதில் குறுக்கிட எவ்வித நியாயமும் யாருக்கும் இல்லை. அது தனிமனித தாக்குதலாக மாறும்வரை ஒரு விமர்சகனை நாம் கேள்விக் கேட்க இயலாது. இரண்டாம் உலகப் போர் விட்டுச் சென்ற சூன்யத்தின் தாக்கத்தின் விளைவிருந்து மதம், கடவுள், பாவப்புண்ணியங்கள் எனப் பலவகையான சமூகம் கட்டமைத்து வைத்திருந்த அனைத்தின் மீதும் சந்தேகவாதம் பரவத் துவங்கி கலை இலக்கியங்களிலும் ஒரு தாக்கத்தை உண்டு செய்தது. ஆகவே, அப்பொழுது தோன்றிய பல விமர்சகர்கள் கடுமையாகப் படைப்புகளை மறுத்து எழுதத் துவங்கினர். நேரடிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் படைப்புகள் மீதும், மதம், சாதியம், மேட்டுக்குடித்தனமிக்க படைப்புகளின் மீதும் விமர்சனங்கள் கடுமையாகச் சாடி பேசத் துவங்கின. ஆனால், அவையாவும் தனிமனித சாடல்களின் மீது கவனம் கொள்ளாததாலே அங்கு இலக்கியம் தீவிரமாக வளர்ந்தது.

விமர்சனம் என்பது நாம் படைப்பைத் தாண்டி படைப்பாளன் மீது பாயும்போது சற்று முரணான விளைவை உண்டாக்கும். படைப்பை விமர்சிக்க எல்லாம் உரிமையும் உள்ள நமக்கு அப்படைப்பையொட்டி படைப்பாளன் மீது கிண்டல் தொனியில் விமர்சனத்தை முன்வைப்பதில் எவ்வித உரிமையும் இல்லை. அல்லது அதற்குப் பெயர் விமர்சனம் என சொல்லிக்கொள்ளத் தேவையில்லை. இது எத்தனை வலிமையான கறார்த்தனமிக்க இலக்கிய மதிப்பீடாக இருந்தாலும் நாம் பேசும் வாழ்வியலுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்கிவிடுகிறது. நிற்க. படைப்பின் மீது அவரவர் இரசனை, வாசிப்பு, மொழியறிவு, உலக ஞானம், இப்படிப் பல பின்புலத்தின் அடிப்படையில் விமர்சனம் வைக்க எல்லோருக்கும் உரிமை உண்டு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இரசனை விமர்சனத்தின் அடுத்த நிலை

இரசனை விமர்சனத்தின் அடுத்த நிலை அவ்விமர்சனத்தை முன்வைக்கும் விமர்சகரின் இலக்கியப் பார்வையின் மீது குவிகிறது. அடுத்து, அவர் வாசித்த நூல்கள், வாசித்த இலக்கியங்கள், உலக இலக்கியங்களின் பரிச்சியம், என விரிந்த பரப்பில் வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது; புறந்தள்ளவும் படுகிறது. இரசனை விமர்சனத்தின் நம்பகத்தன்மையும் இதுவே. ஆனால், தமிழில் சிறந்த எழுத்தாளர்கள், சிறந்த படைப்புகள் என ஒவ்வொரு காலத்திலும் எல்லோரும் விமர்சித்து வந்துள்ளார்கள். அசோகமித்ரன், அ.முத்துலிங்கம், பிரபஞ்சன், சு.வேணுகோபால், வண்ணதாசன், ஜெயமோகன் ஆகியோரை என் மனத்திற்கு நெருக்கமான சிறுகதையாளர்கள் என என்னால் சொல்ல முடியும். இத்தகையை ஒரு கருத்தை நான் முன்வைக்க எது காரணமாக இருந்திருக்கும்? ஒன்று காலம்தோறும் இவர்களைப் பல எழுத்தாளர்கள் நல்ல இலக்கியவாதிகள் என முன்வைத்திருக்கிறார்கள். இயல்பாகவே தமிழில் வாசிக்கத் துவங்கும் ஒருவர் இதுபோன்ற இரசனை ரீதியிலான பரிந்துரைகளைக் கடந்துதான் தனக்கான ருசியை உருவகித்துக் கொள்ள முடியும். அடுத்து ஒரு வாசகனாக நான் என் தேடலை இலக்கியம் என்கிற விரிந்த பரப்பில் துரிதப்படுத்திக் கொள்ளும்போது அடையும் ஒரு புரிதல். இவையிரண்டும் தமிழில் வெளியான சிறந்த படைப்புகளை நோக்கி என்னைத் தள்ளுகிறது. அதன்பால் உருவான வாசிப்பனுபவம், இலக்கியப் புரிதல் எனக்குள் ஓர் இரசனையை உருவாக்குகிறது. அது எனக்கு வெறுமனே கிடைத்த ஒரு புரிதலன்று. அதன் பின்னணியில் இருக்கக்கூடிய வாசிப்பு சார்ந்து உழைப்பும், தேடலும், உரையாடல்களும் ஆதாரமாக இருக்கின்றன. அத்தகையதொரு இரசனையை முன்வைத்தே இன்றைய படைப்புகளின் இலக்கியப் போதாமைகளைப் பொதுவெளிக்கு வந்து சேரும் படைப்பின் மீது வைக்க நேரிடுகிறது. அதுவே இரசனை விமர்சனமாக மாறுகிறது.

dsc00081
சுந்தர ராமசாமி ஜெயமோகனின் படைப்புகளில் கலைக்குறைபாடுகள் உள்ளன எனத் தன் இலக்கியப் பார்வையைக் கொண்டு நிராகரிக்கிறார். அதே போல, ஜெயகாந்தனின் சிறுகதைகளிலும் கலைக்குறைபாடுகள் உள்ளன என மறுக்கிறார். இன்று ஜெயமோகன் இன்னொரு படைப்பாளியைச் சிறுகதையே எழுதவில்லை என மறுக்கிறார். எல்லோரும் எல்லாம் காலக்கட்டத்திலும் ஒருவரையொருவர் மறுத்த வண்ணமே இருக்கிறார்கள். இத்தகைய மறுப்புக்குக் காரணம் அவர்களிடம் உருவான இலக்கியம் சார்ந்த மதிப்பீடுகளும் இரசனைகளுமே. மேலும், அவர்களின் இரசனை என நான் சொல்வது வெறுமனே தன் விருப்பு வெறுப்பு சார்ந்து கட்டமைக்கப்பட்டவை அல்ல. மாறாக, உலக இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் போன்றவற்றை வாசித்து, தேடலை முன்னெடுத்து இன்றைய இலக்கிய சூழல் வந்து சேர்ந்திருக்கும் ஊற்றில் தூர்வாறி ஒரு விமர்சகன் அக்கறையுடன் கண்டடையும் இடத்தையே இரசனை என வகுத்துக் கொள்ளலாம். ஆனால், அவை ஒரு நேர்மையான வாசகனால் அடுத்த நிலைக்கு அக்கறைமிக்க விமர்சனமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

விமர்சனத் துறையில் நாம் செல்ல வேண்டியத் தூரம் இன்னும் இருக்கிறது என நம்புபவன் நான். நான் எழுதும் பல சிறுகதைகளில் நான் கலை நிறைவை அடைந்துவிட்டேன் என்கிற நம்பிக்கை எனக்கு வந்ததில்லை. அப்படி நான் சிறந்த சிறுகதை எழுதிவிட்டேன் என்கிற எண்ணம் தோன்றிவிட்டால் அடுத்த கணமே நான் சிறுகதை பயணத்தை முடித்துவிட்டேன் என அர்த்தமாகிவிடுகிறது. நாமே நமது தேடலை முடித்துக் கொண்டோம் என அர்த்தமாகிவிடும். வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்குமான இடைவெளியை உடைப்பதே அப்படைப்பில் இருக்கும் அரசியல் தெளிவும் கலையுணர்வும்தான் என நினைக்கிறேன். அதனைக் கொண்டு மேலும் படைப்பைச் செதுக்கும் பணியை நாம் ஓயாமல் செய்து கொண்டே இருக்க விமர்சனம் தேவையாக இருக்கிறது. விமர்சனம் நம் படைப்புகளை உடைத்து சமூகத்தின் முன் வைக்கிறது; படைப்பை ஆராய்கிறது. விமர்சனம் ஒரு படைப்பை பொது மனிதனின் பார்வைக்குக் கொண்டு செல்கிறது. மீண்டும் மீண்டும் ஒரு படைப்பை வாசிப்பதற்கான தூண்டுதலை உருவாக்குகிறது. ஒரு பொதுவெளிக்குள் புரிதலுக்கான சாத்தியங்களைத் திறந்துவிடும் வேலையை விமர்சனம் செய்கிறது.

அத்தகையதொரு விமர்சனம் கையாளும் மொழியானது அறிவைத் தாக்கி தாக்கத்தை உண்டு செய்யும் ஒரு விமர்சனமொழியாக இருத்தல் வேண்டும். அப்படியொரு விமர்சன மொழியைத்தான் நாம் பயில வேண்டும். ஒரு கலை உலுக்கலைச் சாத்தியப்படுத்த கடுமையான மொழி படைப்பின் மீது முன்வைப்பதை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், அது படைப்பைத் தாண்டி படைப்பாளனைச் சிறுமைப்படுத்துவதாக இல்லாமல் இருப்பது சிறப்பு.

மலேசியாவின் விமர்சனப் போக்கு

இந்நிலையில் மலேசியாவில் விமர்சனப் போக்கு எப்படி உள்ளது என்பதை நாம் சீர்தூக்கிப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நூல் வெளியீடுகளில் தங்களுக்கு உகந்த தன் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ள தான் கேட்டுக் கொண்டால் அதற்கிணங்க ஒத்துப்பாடுபவர்களையே நூல் விமர்சனத்தை முன்வைக்க அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இலக்கியப் பின்புலமற்றவர்களாக இருப்பதும் கவனத்திற்குரியவை. அவர்கள் மேடை நாகரிகம் கருதி, ஒரு நூலையும் அதிலுள்ள படைப்புகளையும் விமர்சிக்காமல், புகழ்ந்து மட்டும் ஒருவரை மிகச் சிறந்த படைப்பாளியாக நிறுவுகிறார்கள். நூலாசிரியர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் அந்த மேடை பாராட்டையே காலம் முழுக்க ஒரு முகவரியாகச் சுமந்து கொள்கிறார்கள். ஒருவேளை அவர்களுடைய படைப்புகள் பொதுவில் விவாதிக்கப்படும்போது அவருக்கு மேடையில் கிடைத்த விமர்சனம் என்கிற பாணியில் அவர் மீது ஏற்றப்பட்ட பாராட்டுகளைக் கொண்டு தன்னைக் தற்காத்துக் கொள்ள முயல்கிறார். இது ஒருவகையில் அவருக்கான தேடலைச் சுருக்கிவிடும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு விமர்சகனும் ஒரு படைப்பை நோக்கி ஓர் உரையாடலைத் துவக்கி வைக்கிறான். ஒரு நுகர்வாளனாக அவன் அப்படைப்பின் மீது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொற்களாக்கி விவாதிக்கிறான். ஒருவகையில் விமர்சனம் படைப்புக்கலைக்கான உந்து சக்தியாகவே கருதுகிறேன். ஆனால், விமர்சனம் என்பது பாராட்டுமட்டுமல்ல என்பதைப் படைப்பாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மலேசியாவில் ஒரு படைப்பை விமர்சகன் அதன் இலக்கிய போதாமைகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சிக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்று சிந்திக்கும் போது பின்வரும் விளைவுகளை பட்டியல் இடலாம்.

• முதலாவதாக அந்த விமர்சகன் படைப்பின் எதிரியாகக் கருதப்படுவான்.
• அவனுடனான உறவு துண்டிக்கப்பட்டுவிடும்.
• பதிலுக்கு அவன் மீதும் அவன் ஒழுக்கம், கல்வி தகுதி, குடும்பம், வாழ்க்கைத் தரம் என இன்னும் பலவற்றின் மீதும் எதிர் தாக்குதல் நடத்தப்படும்.
• அவன் மீது வன்முறை செலுத்தப்படலாம்.
• கடுமையான தனிமைக்குள்ளாக்கப்படுவான்.
• பொதுநிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதிலிருந்து புறக்கணிக்கப்படுவான்.
• அவனுடைய அலுவலகத்திற்கு அவன் மீதான புகார் கடிதங்கள் அனுப்பப்படும்.
• அவனுடைய வாழ்வாதாரத்தைப் பறிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.
• அவனுடைய முகநூலை ‘ஹேக்’ செய்யும் முயற்சிகள் நடக்கும்.
• அவன் மீது காவல்துறையில் புகார்கள் செய்யப்படும்.

– கே.பாலமுருகன், (28 செப்டம்பர் 2016),
– மறு ஆக்கம்: 08.10.2016

அடுத்தப் பாகத்தில் கா.நா.சு-வின் ‘விமர்சனக் கலை என்கிற நூலை முன்வைத்து மேலும் விமர்சனக் கலைக்கும் இலக்கியத்திற்குமான ஒரு சிறிய புரிதலை/உரையாடலை நோக்கிப் பயணப்படலாம்.