குறுங்கதை: காலன்
முனியாண்டி தாத்தாவிற்குப் பாதி வாய் திறந்து மீண்டும் மூடியபடி இருந்தது. சிரமப்பட்டு மூச்சை இழுத்தார். மருத்துவமனையில் ஒரு வாரம் வைத்திருந்து இனி பிழைக்க மாட்டார் என வீட்டிற்குக் கொண்டு போகச் சொல்லிவிட்டனர். அவர் நாற்பது ஆண்டுகள் உழைத்துக் கட்டிய வீட்டின் வரவேற்பறையில் ஒரு சிறிய கட்டிலைப் போட்டனர். அவரை அதில் படுக்க வைத்து வாசல் கதவைத் திறந்து வைத்தனர். உயிர் போனால் வாசல்வழி வெளியேற வேண்டுமென ஓர் ஏற்பாடு.
“மனுசன் இவ்ள பெரிய வீட்டக் கட்டி கடைசி வரைக்கும் கால் நீட்டி உக்காந்து சுகத்தக் கண்டானா?”
முனியாண்டியின் வயதை ஒத்த நண்பரான மணியத்திற்கு மரணப் பயம் தொற்றிக் கொண்டது. வீட்டிலுள்ளவர்களுக்குச் சமாதானம் சொல்வதைப் போல தன்னைத் தானே சாந்தப்படுத்தினார்.
முனியாண்டியின் கண்கள் வாசலை நோக்கின. நேரமானதும் ஒரு சில நெருங்கிய சொந்தங்கள் வந்து முகத்தை உற்றுக் கவனிப்பதை முனியாண்டி அசூசையாக உணர்ந்தார். அவர்களின் பார்வையில் இருக்கும் கழிவிரக்கம் பயத்தை உண்டாக்கியது. சற்று நேரத்தில் அவன் வந்து வாசலில் நின்றான். கறுத்த உருவம். முகம் சரியாகத் தெரியவில்லை. அவன் இன்னும் அருகில் வந்தால் முகத்தை அடையாளம் கண்டு கொள்ளலாம் என நினைத்தார். நினைப்பதை அவரால் வார்த்தைகளாகக் கோர்க்க இயலவில்லை. நினைப்பு நினைப்பாக அவருக்குள் உழன்று கொண்டிருந்தது.
அவனுடைய வருகைக்குப் பின்னரே முனியாண்டியின் உடல் சிலிர்த்து உதறிக் கொண்டிருந்தது. குரல் புலம்புவது போல் கேட்டது.
இப்பொழுது அவன் முனியாண்டியை மூர்க்கமாகப் பார்க்கத் தொடங்கினான். எந்நேரத்திலும் தன் மீது பாய்ந்து உயிரை எடுக்கக்கூடும் என முனியாண்டி கற்பனை செய்தார். அவன் குனிந்து முட்டிகாலிட்டு முன்னகர்ந்து வந்தான். இப்பொழுது அவனுடைய கண்களை நன்றாகப் பார்க்க முடிந்தது. மிகவும் நெருக்கமான கண்கள் அவை. தினமும் பார்த்துப் புழங்கிய கண்கள். நெருக்கமாக வந்ததும் அது தன்னுடைய கண்கள்தான் என உணர்ந்தார். அவன் முனியாண்டியைப் போலவே இருந்தான். முனியாண்டிக்கு இருபது வயதிருக்கும்போது எப்படி இருந்திருப்பாரோ அதே தோற்றம்.
மற்றவர்களைப் போல அவனும் முனியாண்டியின் முகத்தை நெருங்கி வந்து மரண வாடையை நுகர்ந்தான். முனியாண்டி கண்களிலே கெஞ்சினார். கண்ணீர் துளி பெருகி வழிந்துவிடாமல் கண்களுக்குள்ளே பளபளத்துக் கொண்டிருந்தது. கைகளைக் கூப்பி வணங்க முடியவில்லை. கண்கள் வணங்கி தவித்தன.
வந்தவன் முனியாண்டியின் கன்னத்தில் முத்தமிட்டு நெஞ்சோடு அனைத்துக் கொண்டான். அவனுடைய உடலின் கதகதப்பு முனியாண்டிக்கு அவ்வளவு ஆறுதலாக மாறியது. தன் வயதைக் கடந்து பின்னோக்கி நகர்ந்தது நினைவு. கால்கள் சிறுத்து கைகள் சுருங்கி வீட்டின் தரையில் எச்சில் வடிய தவழ்கிறார். எல்லாம் பின்னகர்கின்றன. உலக நினைவுகள் இழந்து தன்னுணர்வு கரைந்து ஒரு தொட்டிலில் தன் பெருவிரலைக் கடித்தபடியே ஆடிக் கொண்டிருக்கிறார்.
முனியாண்டியின் உயிர் போவதற்கு முன்பாக கண்ணீர் வடிந்து கன்னத்தில் சரிந்ததாகப் பேசிக் கொண்டனர்.
-கே.பாலமுருகன்