குறுங்கதை: எழுத்தாளனின் கதை – 1

பெருநகர் ஒன்றில் ஓர் எழுத்தாளர் இருந்தார். இரவெல்லாம் சிரமப்பட்டுக் கற்பனையை உலுக்கியெடுத்துக் கதையெழுதுவார். பிறகு, காலையில் அதைப் பிரதி எடுத்துக் கொண்டு விநாயகர் கோவில் சாலையிலும் பங்சார் புத்தகக் கடைக்குச் செல்லும் பாதையிலும் நின்று கொள்வார்.

இரண்டு இடங்களுக்கும் செல்வதற்கான கால நேரத்தை வரையறுத்துக் கொண்டார். அவரை அங்குப் பார்க்காத ஆள்களே இருக்க மாட்டார்கள். தினமும் போவோர் வருவோரிடம் பிரதியெடுத்த தன் கதையைக் கொடுத்துக் கொண்டிருப்பார். சிலர் கோவிலின் உள்ளே உட்காரும் நேரத்தில் படித்துப் பார்த்துவிட்டு ‘ஹென்பேக்கில்’ வைத்துக் கொள்வார்கள். சிலர் சாப்பாடுக் கடையின் மேசைகளில் தெரிந்தே மறந்துவிட்டுப் போய்விடுவார்கள். அப்படிக் கைவிடப்பட்ட கதையைச் சாப்பாட்டுக் கடையைச் சுத்தம் செய்பவர் மேசையில் சிந்தியிருக்கும் சாம்பார், சட்டினியைத் துடைக்கப் பயன்படுத்துவார்.

நாளடைவில் எழுத்தாளர் கதையைக் கொடுக்கும்போது அவற்றை வாங்கிக் கொள்ளாமல் முறைத்துப் பார்க்கவும் திட்டவும் செய்தார்கள். காலை 8.00 மணிக்கு அவசரமாய் வேலைக்குச் செல்பவர்கள் சிலசமயங்களில் அவரை எட்டி உதைத்தனர். தான் விழுந்ததைவிட தன் கதைகள் விழுந்ததை எண்ணி எழுத்தாளர் வருத்தமடைந்தார். அவற்றை குழந்தையைப் போல் அள்ளி உள்ளங்கையில் வைத்துக் கொண்டு படிந்திருக்கும் தூசுகளை ஊதுவார்.

இனி கதைகளைத் தாளில் பிரிண்ட் எடுத்து வர வேண்டாமென முடிவெடுத்த எழுத்தாளர் அவர் மட்டும் வந்து அந்தந்த சாலைகளில் நிற்கத் துவங்கினார். கதை எழுதப்பட்ட தாள்கள் இல்லாமல் வெறுங்கையுடன் நின்றிருந்த எழுத்தாளரைப் பார்த்த வழிபோக்கர்கள் நிம்மதி அடைந்தனர். சிலர் அவருக்குக் கைக்கொடுத்துப் பாராட்டினர். சிலர் இப்பொழுது தேறிவிட்டீர்கள் போல என்று நலம் விசாரித்துச் சென்றனர்.

-கே.பாலமுருகன்