கனவுப் பாதை சிறுவர் மர்மத் தொடர்- பாகம் 3: by K.Balamurugan

“துளசி! துளசி! என்ன யோசன?”

அம்மா அருகில் அமர்ந்திருந்தார். தொலைக்காட்சியில் ‘Upin Ipin’ ஓடிக் கொண்டிருந்தது. அவ்விரட்டைச் சிறுவர்கள் தாத்தாவுடன் தோட்டத்திற்குச் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் காட்சி. துளசியால் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை உணர இயலவில்லை. மேசையின் மீதிருந்த குவளையைக் கவனித்தாள். பாதி குடித்து அப்படியே இருந்த தேநீரில் மெல்லிய அசைவு தெரிந்தது.

“மா… நான் இப்ப என்ன செஞ்சிக்கிட்டு இருந்தன்? தூங்கனனா?”

துளசியின் அம்மா அவளை மேலும் கீழுமாகப் பார்த்துவிட்டுக் கையில் வைத்திருந்த தொலைக்காட்சி தூர இயக்கியை மேசையின் மீது வைத்தாள்.

“என்ன ஆச்சு உனக்கு? டீவி பார்த்துக்கிட்டு இருந்த… நீ எப்ப தூங்கனா? என்ன தூக்கக் கலக்கமா?”

அம்மா எழுந்து சமையலறைக்குச் செல்ல முயற்சித்தாள். சடாரென அம்மாவின் கைகளைப் பற்றி அமரும்படி இழுத்தவளை அம்மா செல்ல முறைப்புடன் பார்த்தாள்.

“மா… எனக்கு ஏதேதோ கனவு வருதுமா… என்னானு தெரில…”

“என்ன துளசி? என்ன கனவு?”

அம்மாவின் கண்கள் சுருங்கின. புருவங்கள் உயர்ந்தன. துளசிக்குப் படப்படப்பு அதிகரித்தது.

“மா… ஏதோ ஒரு இருட்டுப் பாதை… அப்புறம் என் ரூம்பு… அங்க யாரோ படிக்கட்டுல வராங்க… அப்புறம் திரும்பியும் இங்க வந்துர்றன்மா…”

துளசியின் வார்த்தைகள் தடுமாறி விழுந்தன.

“துளசி… கனவுலாம் கெட்டது நல்லது இப்படி நெறைய இருக்கு. நம்ம எது ஆகக்கூடாதுனு நெனைக்கறோமோ… அது கனவுல நடக்கும். அதான் ஆழ்மனசோட வித்த… நீ பேய் வரக்கூடாதுனு நெனைச்சின்னா நம்ம ஆழ்மனசு பேய வரவச்சு நம்ம பயத்த போக்க முயற்சி பண்ணும்…”

அம்மாவின் வார்த்தைகள் துளசிக்கு மெல்ல ஆதரவளிக்கத் துவங்கின.

“அப்படின்னா… நான் தூங்கும்போதுதான கனவு காணனும்? ஆனா… எனக்கு சும்மா இருக்கும்போதெல்லாம் அந்தக் கனவு வருதுமா…”

அம்மா சமைக்க வேண்டும் என்கிற தவிப்பில் இருந்ததால் சட்டென நாற்காலியை விட்டு எழுந்தார்.

“துளசி! போய் சாமி ரூம்புல பாபாவ தொட்டுக் கும்புட்டுட்டு திருநீர் எடுத்துப் பூசிக்கோ. ஒன்னும் வராது… புரியுதா…?”

அம்மா சமையலறைக்குச் சென்றும் யாரோ பக்கத்தில் உட்கார்ந்திருப்பதைப் போன்றே ஒரு பிரமை அவளுக்குள் உண்டானது. நீங்காத ஓர் உடல் சூடு அவளுக்கருகில் அவள் மெல்ல உணரத் துவங்கினாள். அடுத்த கணம் கனவுக்குள் போய்விடுவோம் என்று அஞ்சியவள் உடனே நாற்காலியை விட்டு எழுந்து சாமி அறைக்குள் நுழைந்தாள். எதிரில் இருந்த நடராஜா சிலையை உற்று நோக்கினாள்.

“காலம் ஆடும் தாண்டவத்திலே

நீயும் நானும் பகடை காய்கள் ஆனோம்…”

அப்பா முன்பு அடிக்கடி உச்சரித்து சில சமயங்களில் பொருந்தாத ஒரு ராகத்தில் பாடும் வரிகள் அவளுக்கு நினைவிற்குள் எட்டியது. பாபா படத்திற்குக் கீழிருந்த திருநீரை எடுத்து நெற்றியில் பூசும்போது கண்களை மூடினாள்.

மீண்டும் திறக்கும்போது சுற்றிலும் காட்டு மரங்கள் சூழ்ந்திருந்தன. கைகளில் இருந்த திருநீர் மறைந்து இப்பொழுதே அதே பழமையான கைவிளக்கை ஏந்திக் கொண்டிருந்தாள். மனத்தில் எழுந்த பயத்தை மெல்ல அடக்கினாள்.

“நம்ம பயந்தம்னா இந்தக் கனவுலேந்து எழுந்துருவோம்… இதுலேந்து எழுந்து இன்னொரு கனவுக்குள்ள போய்ருவோம்… அங்க யாரோ அறைய நெருங்கி வந்துக்கிட்டு இருக்காங்க… நான் பயப்படக்கூடாது… நான் பயப்படக்கூடாது…” மனத்தில் உறுதியுடன் மேலெழுந்து வந்த பயத்தையும் அதிர்ச்சியையும் அடக்கிக் கொண்டே சுற்றிலும் பார்த்தாள்.

அத்தனை உண்மையுடன் இருள் சூழ்ந்த இரப்பர் காடு. இதைக் கனவென்றால் யாரும் நம்பமாட்டார்கள். கனவென்பது உறங்கும்போது வரும் என்பதே ஏதோ கற்பனை என்பதைப் போல துளசி உணர்ந்தாள். தூரத்தில் விளக்கு எரிந்து கொண்டிருக்கும் ஒரு கொட்டகையும் அதனருகே ஒரு சிறிய கம்பத்து வீடும் துளசிக்கு நன்றாகத் தெரிந்தது. எப்படியும் இங்கிருந்து 200 மீட்டர் நடக்க வேண்டும். வழிநெடுக இருளும் புதைக்குழிகளும் இருக்கலாம் என்பதைப் போல அப்பாதை பயமுறுத்திக் கொண்டிருந்தது.

“இது பொய் இல்ல. எனக்கு இது என்னான்னு தெரியணும். இன்னிக்கே தெரியணும்… பாபா… என்ன கொண்டு போங்க…” கண்களை மூடினால் கனவிலிருந்து வெளியேறிவிடுவோம் என்று பயந்து கண்களை மூடாமலேயே தெய்வத்தை மனத்தில் நிலைநிறுத்திக் கொண்டாள் துளசி.

எரியத் தவித்துக் கொண்டிருந்த கைவிளக்கின் மங்கிய வெளிச்சத்தில் அப்பாதையில் நடக்கத் துவங்கினாள். இரப்பர் மரங்களுக்கு இடையிடையே வளர்ந்திருந்த காட்டு மரங்களின் வேர்கள் தடித்து பாதைக்கு மேலே துருத்திக் கொண்டிருந்தன. கவனமின்றி நடந்தாள் இடறி விழ நேரிடும். விழுந்தால் பயம் சூழும். பயம் கொண்டால் கனவிலிருந்து வெளியேறிவிடுவோம். துளசி நம்பிக்கையைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டாள்.

மரவேர்கள் பாம்பைப் போல நெளிந்து ஊர்வதைப் போல தென்பட்டது. ஒவ்வொரு அடியையும் கவனத்துடன் எடுத்து வைத்தவள் சேற்றில் கால் வைத்தாள். முட்டிவரை அவளுடைய வலது காலை இழுத்துக் கொண்டது. காலை எடுக்க முயன்றாள். இருளில் எதையுமே பார்க்க இயலவில்லை. கைவிளக்கின் ஒளியால் அவளுக்கு எந்தப் பயனும் இல்லை. தடுமாறியவள் அப்படியே தரையில் அமர்ந்தாள்.

இப்பொழுது அவளுடைய காலைச் சேற்றுக்குள்ளிருந்து ஒரு கை மெல்ல பற்றுகிறது. துளசி பயத்தால் அதிர்கிறாள். சட்டென ஒரு விழிப்பு. இருள் சூழ்ந்த அவளுடைய அறை. அதே நிலைக்கண்ணாடி. எழுந்து நிதானிக்க முயல்கிறாள். அறைக்கதவை உடைத்துக் கொண்டு ஓர் உருவம் உள்ளே நுழைகிறது.

-தொடரும்

ஆக்கம்: கே.பாலமுருகன்

(Fantasy series inspired by Inception)

பாகம் 1-ஐ வாசிக்க: https://balamurugan.org/2020/07/05/கனவுப்-பாதை-சிறுவர்-மர்ம/

பாகம் 2-ஐ வாசிக்க: https://balamurugan.org/2020/07/07/கனவுப்-பாதை-சிறுவர்-மர்ம-2/