கனவுப் பாதை: சிறுவர் மர்மத் தொடர்- பாகம் 2: ஆக்கம்-கே.பாலமுருகன்
“துளசி! துளசி! கேட்ட பிடிச்சிக்கிட்டு என்ன செய்ற?”
அத்தையின் சிறிய கை துளசியின் புறமுதுகில் பட்டதும்தான் அவளுக்குப் பிடிமானம் ஏற்பட்டது. இது கனவல்ல என்கிற நம்பிக்கை தோன்றியது. இறும்புக் கதவிலிருந்து பிடியைத் தளர்த்தி அத்தையைத் திரும்பிப் பார்த்தாள்.
எதிரே நின்று கொண்டிருந்தவர் துளசியின் அத்தை அல்ல. வேறு யாரோ ஒருவரின் முகம். அதிர்ந்து கையில் வைத்திருந்த குவளையைக் கீழே போட்டாள்.
“என்னம்மா ஏஞ்சலா? என்ன செய்ற?”
அத்தையின் குரல் மெல்ல வளர்ந்து ஒரு குகையிலிருந்து அழைப்பது போன்று எதிரொலித்து வீடு முழுவதும் பரவிக் கொண்டிருந்தது. வீட்டைச் சுற்றி படர்ந்திருந்த சுவர் மெல்ல சரிந்து இருள் மெல்ல வளர்ந்து துளசியைச் சூழ்ந்து கொண்டிருந்தது.
கையில் சட்டென ஒரு கைவிளக்கு. நேற்றைய இரவில் பார்த்த அதே பழுதடைந்துவிடலாம் என்கிற அரைத்தவிப்பில் துளசியின் கையில் இருந்தது. சுவர்கள் முழுவதுமாக மறைந்து அவள் இருள் மட்டுமே சூழ்ந்த ஒரு மண் சாலையில் நின்றிருந்தாள்.
“ஏஞ்சலா! ஏஞ்சலா…! மேகம் வருது தானானே… மழை வருது தானானே… ஏஞ்சலா தூங்கல தானானே…”
ரம்மியமான ஒரு குரல் இருள் சூழ்ந்த அப்பாதையில் ஏதோ ஒரு மூலையிலிருந்து சன்னமாகக் கேட்டுக் கொண்டிருந்தது. துளசி கைவிளக்கை மீண்டும் உள்ளங்கையில் தட்டியபோது ஏற்பட்ட குறைந்த வெளிச்சத்தில் அப்பாதையில் நடக்கத் துவங்கினாள். இனி பயந்து எங்கும் ஓட முடியாத நிலையை அவள் உணர்ந்தாள்.
இரண்டடிகள் எடுத்து வைத்து முன்னே நகரும்போது சட்டென அப்பாதையின் மண்ணுக்குள்ளிருந்து கைகள் பல மேலெழுந்து அவள் செல்ல வேண்டிய திசையைக் காட்டத் துவங்கின. கைகள் அழுகிய நிலையில் இருந்ததைக் கண்ட துளசி சட்டென அதிர்ந்து கைவிளக்கைக் கீழே போட்டாள்.
சட்டென ஒரு விழிப்பு. அவளுடைய அறையின் கட்டில் மேல் படுத்திருந்தாள். அதே இருள் எங்கும் சூழ்ந்திருந்தது. கையில் கைவிளக்கு இல்லை. எழுந்து அறையைக் கவனித்தாள். சுவரில் இருந்த படங்களில் ஆள் அடையாளம் தெரியாத சிலரின் முகங்கள். எழுந்து நிதானித்தாள். அதே நிலைக்கண்ணாடி. போய் நின்றாள் அவள் உருவம் தெரியாது என்று அவளுக்கு ஞாகபத்தில் உதித்தது.
இரண்டு அடிகள் எடுத்து வைத்து நிலைக்கண்ணாடியின் முன் போய் நின்றாள். அவளால் வேறு எதையுமே செய்ய இயலவில்லை. உடனே கதவைத் திறந்து வெளியில் ஓடிச் செல்ல மனம் நினைத்தாலும் உடல் அதற்கு ஒத்துழைக்கவில்லை. நிலைக்கண்ணாடியில் முன் நின்றே ஆக வேண்டிய ஒரு கட்டாய உந்துதல் அவளையும் மீறி அவளை இயக்கிக் கொண்டிருந்தது.
சற்று முன்பு அம்மா கொடுத்த தண்ணீர்க்குவளை அவள் கையில் இருந்ததைக் குறித்த ஞாபகம் எழுந்தாலும் உள்ளுக்குள் ஒலித்த ஒரு குரல் அவளை நிலைக்கண்ணாடியின் முன்னே வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றது.
ஆள் உயரமுள்ள நிலைக்கண்ணாடி. இவ்வறையில் பல காலங்கள் இருந்து சிதிலமடைந்த நிலையில் தூசு படிந்து வெண்மை படர்ந்து காட்சியளித்தது. எவ்வளவு முயன்றும் அவளால் அக்கண்ணாடியில் அவளுடைய உருவத்தைக் காண முடியவில்லை. சட்டென இது கனவாக இருக்கலாம் என்று அவளுக்குத் தோன்றத் துவங்கியது. நாம் கனவுக்குள்ளிருந்து எழுந்து இன்னொரு கனவுக்குள் இருக்கிறோம் என்கிற நினைவு அவளுக்குள் ஆழப்பதிந்து மனத்திற்குள் சென்று கொண்டிருந்தது. அவளை ஒரு குரல் இயக்கிக் கொண்டிருந்தது.
“புனிதா… உன் கையில இருக்கற ஒவ்வொரு வடுக்கும் அவன் பதில் சொல்லித்தான் ஆகணும்…”
மனத்தை அதிரச் செய்த சத்தமான ஒரு குரல். உள்ளிருந்து எழுந்து அறை முழுவதும் பரவியது. படிக்கட்டில் யாரோ ஆக்ரோஷத்துடன் ஓடி வருவதும் கேட்டது. அக்காலடி ஓசையில் வெறித்தனமும் கடுங்கோபமும் தென்பட்டன. துளசியின் கைகள் உதறின.
“எழுந்துரு துளசி! எழுந்துரு… இது கனவு.. இது கனவு… எழுந்துரு…”
பலம் கொண்டு கத்தினாள். குரல் அவளுக்குள்ளே அடங்கிக் கரைந்தது.
காலடி ஓசைகள் அவளுடைய அறையை நோக்கி நகர்ந்து வந்து கொண்டிருந்தன.
- தொடரும்
ஆக்கம்: கே.பாலமுருகன்
பாகம் 1-ஐ வாசிக்க: https://balamurugan.org/2020/07/05/கனவுப்-பாதை-சிறுவர்-மர்ம/