சிறுகதை: இரக்கம்

 

“சங்கரு பையன் இறந்துட்டானாம். வாங்க போய் தலைய காட்டிட்டு வந்துடலாம்…” என்று அப்பா சொல்லும்போது முதன்முறையாக தலையைக் காட்டுதல் என்கிற வார்த்தையைக் கேட்கிறேன். தலை உடலில்தானே இருக்கிறது, பிறகு ஏன் தலையை மட்டும் தனியாகக் காட்ட வேண்டும்? புரியாத புதிருடன்  இறப்பு வீட்டிற்கு அப்பாவுடன் கிளம்பினோம்.

“நமக்கு நிறைய தடவ கடன் கொடுத்து உதவி செஞ்சிருக்காக. நல்லா இருக்காது போலைன்னா…அப்புறம் அடுத்த தடவ போய் நிக்க முடியுமா?” போய்ச்சேர ஏற்பட்ட ஒரு மணி நேர அழுப்பான பயணத்தில் அப்பா கொடுத்த சமாதானங்கள் ஏதும் மண்டைக்குள் ஏறவே இல்லை. வெய்யில் அதையும் தாண்டி கொதித்துக் கொண்டிருந்தது.

வீட்டை நெருங்கும் முன்பே ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் ஒரு பரப்பரப்பை இயல்பாகவே உருவாக்கிவிட்டிருந்தன. அதுவரை பேசிக்கொண்டிருந்த அப்பா வீட்டின் முன்வாசலை நெருங்கியதும் முகப்பாவனைகளைச் சட்டென மாற்றிக் கொண்டார். கூட்டம் வாசலை நெரித்துக் கொண்டிருந்தது. உள்ளே நுழைய அப்பா அம்மாவிடம் சமிக்ஞை காட்டினார். முனிம்மா பாசாரில் மீன்களை வாங்கும் கூட்டத்தில் சீக்கிரம் நுழையாவிட்டால் அப்பொழுதுதான் செமிலிங் மீன்பிடித்துறையிலிருந்து வந்திருக்கும் புதிய மீன்கள் கிடைக்காமல் போய்விடும். அப்பா இதேபோன்று சமிக்ஞை மட்டும்தான் காட்டுவார். அம்மா சட்டென கூட்டத்தை உடைத்து உள்ளே நுழைவார். பெண்கள் அப்படிச் செய்யும்போது யாரும் திட்டமாட்டார்கள் என அப்பாவிற்குத் தெரியும். அம்மாவுடன் அவரும் உள்ளே இலாவகமாக நுழைந்துவிடுவார். அதே சமிக்ஞைத்தான் இது.

எனினும் ஓரிரு ஆட்களை மட்டுமே ஊடுருவ முடிந்தது. கூட்டம் அலைமோதி கொள்வதிலிருந்து ஓய்வெடுத்துக்கொள்ளவே இல்லை. எல்லோரும் சதா எதையோ எக்கி எக்கிப் பார்த்துக் கொண்டிருந்தனர். என்னால் அவர்களின் இடுப்பளவைத் தாண்டி எதையும் கவனிக்க இயலவில்லை. கிடைத்த சிறிய இடைவெளியில் பிணப்பெட்டியையும் அதன் பக்கத்தில் வேட்டியணிந்த சங்கர் அண்ணனையும் மட்டுமே பார்க்க முடிந்தது. அப்பா கூட்டத்தில் திணறிக் கொண்டிருந்தார்.

சிறிது நேரத்தில் பிண ஊர்தி வந்து சேர்ந்ததும் கூட்டத்தை விலக்கிக் கொண்டு இறந்தவனின் உறவினர்கள் கூட்டம் உட்புகுந்தது. வாட்டம் சாட்டமானவர்கள் பெட்டியைத் தூக்கி அந்தரத்தில் தாலாட்டினார்கள். பிறகு சடாரென தூக்கி தோள்பட்டையில் வைத்தனர். பதினாறு வயது பையன் என்பதால் உடல் மெலிந்துதான் இருக்கும் என்று கற்பனை செய்து கொண்டேன்.

“ஏய்! சீக்கிரம் வா…” என்று அப்பா அம்மாவை இழுத்துக் கொண்டு வெளிவாசலில் பெட்டியை வைத்துத் தூக்கும் முன் செய்யும் சாங்கியங்கள் நடக்கும் இடத்திற்கு விரைந்தார். நானும் தம்பியும் உடன் சென்றோம். அம்மா தம்பியின் கையை விடவில்லை. அப்பா கொஞ்சம் வேகமாகத்தான் எங்களை இழுத்துக் கொண்டு சென்றார். சங்கர் அண்ணன் ஒரு தனியார் அமைப்பு வைத்துக் கொண்டு மக்களுக்கு உதவி வருகிறார். கோவில் நிர்வாகத்திலும் முக்கிய பதவியில் உள்ளார். ஆகவேதான் கூட்டம் மேலும் நிரம்ப துவங்கியது.

மீண்டும் அப்பாவிடமிருந்து அதே சமிக்ஞை. அம்மா தெரியாததைப் போல கூட்டத்தின் பின்னே நின்றிருந்தார். பக்கத்தில் ஆள் இருந்ததால் அப்பாவால் சத்தம் போடவும் முடியவில்லை. இதுதான் சர்ந்தப்பம் என்று அம்மா அலட்சியமாக வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார். அப்பாவின் அதட்டலுக்கும் பேச்சுக்கும் கொஞ்சமும் செவிசாய்க்காமல் இருந்த அம்மாவை முதன்முறையாகப் பார்த்தேன். சுற்றிலும் எங்களைச் சூழ்ந்திருந்த கூட்டத்தை அண்ணாந்து மளைப்புடன் பார்த்தேன்.

பானையை உடைத்து சங்கர் அண்ணன் பெட்டியை மூன்றுமுறை சுற்றியும் வந்துவிட்டார். பெட்டியை ‘கோவிந்தா கோவிந்தா’ என்று கத்திக்கொண்டே வண்டியில் ஏற்றினர். உடன் சங்கர் அண்ணனும் ஏறிக்கொண்டார். அப்பா வலது பக்கமாய் நகர்ந்து வண்டியின் முன்பக்கம் போய்விடலாம் என்று முயற்சித்தார். பிறகு, கூட்டத்தில் அவரைப் பார்க்கவும் முடியவில்லை.

சிறிது நேரத்தில் வண்டி புறப்படத் தயாரானதும் சங்கர் அண்ணனின் மனைவி சாலையில் மயங்கி விழுந்தார். அழுது வீங்கியிருந்த அவர் கண்களைக் கூட்டத்தின் சிறிய இடைவெளியில் பார்க்க முடிந்தது. ஒரு சில பெண்கள் அவரைத் தூக்கி நிறுத்தினர். தெம்பில்லாமல் சோர்ந்து கிடந்தார்.

“ம்மா… அப்பா எங்க?” எனத் தம்பி கேட்டதையும் மீறி அம்மா சங்கர் அண்ணனின் மனைவியையே பார்த்துக் கொண்டிருந்தார். அம்மாவின் கண்களிலும் கண்ணீர். துயரத்தை யாரும் சொல்லிப் புரிய வைக்க வேண்டியது இல்லை என்று தோன்றியது. சற்று நேரத்தில் அப்பா வியர்த்தவுடலுடன் வந்து சேர்ந்தார். அம்மாவிடம் புறப்படலாம் என்று செய்கை காட்டினார்.

“அவுங்கக்கிட்ட கொஞ்சம் ஆறுதல் சொல்லிட்டு வந்துருட்டா?”

“ஏன்? இப்ப நீ இந்தக் கூட்டத்துல நொழைஞ்சி அவங்கள பார்த்துற முடியுமா? கெளம்பு…”

அப்பாவின் பின்னால் எல்லோரும் பின் தொடர்ந்தோம். ஒருவேளை அப்பா என்னைத் தூக்கிப் பிடித்திருந்தால் கூட்டத்தையெல்லாம் தாண்டி சங்கர் அண்ணனுடைய பையனின் முகத்தை ஒருமுறையேனும் பார்த்திருப்பேன் எனத் தோன்றியது.

வாகனத்தில் ஏறியதிலிருந்து அப்பாவின் முகம் வாடியே இருந்தது.

“அந்தச் சங்கரு பொண்ட்டாட்டி நம்மள பார்த்தாங்களா?”

“தெரில… கவனிக்கல…”

“எவ்ளவோ கஸ்டப்பட்டும் அந்தச் சங்கருகிட்ட தலைய காட்டவே முடில…ம்ம்ம் இவ்ள தூரம் வந்துட்டு…”

வண்டியின் கரும்புகை சூழப் பயணம் தொடர்ந்தது.

 

கே.பாலமுருகன்

(2020, பிப்ரவரி மாதம் வெளிவரவிருக்கும் கனவிலிருந்து தப்பித்தவர்கள் கதை தொகுப்பிலிருந்து)