UPSR Star #2: Prishitha Anandan (SJKT PASIR GUDANG ,JOHOR) அவர்களும் கதாநாயகர்களே #2
மாணவர் பெயர்: பிரிஷித்தா ஆனந்தன்
பாசீர் கூடாங் தமிழ்ப்பள்ளி, ஜொகூர்
யூ.பி.எஸ்.ஆர் அடைவுநிலை: 2 A, 6 C
நேர்காணல்:
கேள்வி: வணக்கம் பிரிஷித்தா. தேர்வு முடிவுகள் எடுத்ததும் உங்கள் மனநிலை எவ்வாறு இருந்தது?
பிரிஷித்தா: வணக்கம் ஐயா. முதலில் எனக்கு மிகுந்த கவலையாக இருந்தது. அதிகமான பாடங்களில் நான் ‘சீ’எடுத்ததால் மனம் கவலையடைந்தது. இருப்பினும், தமிழ்மொழிக் கட்டுரையிலும் மலாய்மொழிக் கட்டுரையிலும் சிறந்த தேர்ச்சியைப் பெற்றது மகிழ்ச்சியாகவும் இருந்தது.
கேள்வி: தேர்வை நோக்கிய இவ்வாண்டில் நீங்கள் என்னென்ன முயற்சிகளை மேற்கொண்டீர்கள்?
பிரிஷித்தா: நான் ஆசிரியர் போதிக்கும்போது முழுக் கவனத்தையும் செலுத்துவேன். அதுவே எனக்கு வழிகாட்டியாக அமைந்திருந்தது. அடுத்து, கட்டுரை நூல்கள், நிறைய கதை புத்தகங்களும் வாசித்தேன். வாசிப்பு எனக்கு ஓரளவிற்குக் கைக்கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் வீட்டிலும் நிறைய பயிற்சிகளை மேற்கொண்டேன்.
கேள்வி: தேர்வு முடிவுகள் குறித்து உங்களுக்கு உண்டான கவலையை எப்படிப் போக்கிக் கொண்டீர்கள்?
பிரிஷித்தா: என்னுடைய ஆசிரியர்கள், பெற்றோர்கள், நண்பர்கள் அனைவரும் எனக்குக் கூறிய ஆறுதல்தான் எனக்குப் புதிய நம்பிக்கையைக் கொடுத்தது. இது முடிவல்ல ஆரம்பம் என்று மனத்திற்குள் கூறிக்கொண்டு நான் தேற்றிக் கொண்டேன்.
கேள்வி: இவ்வாண்டு யூ.பி.எஸ்.ஆர் தேர்வு உங்களுக்கு அளித்தப் படிப்பினை என்ன?
பிரிஷித்தா: நான் 8ஏ கிடைக்க வேண்டும் என்றுத்தான் நினைத்திருந்தேன். ஆனால், 2 ஏக்கள் மட்டுமே பெறமுடிந்தது. இதன் மூலம் நான் கொடுத்த உழைப்பை இன்னும் அதிகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. அதிகாலையில் எழுந்து படிப்பது, நூல் வாசிப்பை இன்னும் அதிகரிப்பது போன்ற நடவடிக்கைகளை அடுத்த ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வர வேண்டும் என்று புரிந்து கொண்டேன்.
கேள்வி: ‘ஏ’க்கள் பெற முடியாமல்போன மாணவர்களுக்கு என்ன சொல்ல விளைகிறீர்கள்?
பிரிஷித்தா: அனைத்து மலேசியத் தமிழ்ப்பள்ளி ஆறாம் ஆண்டு மாணவர்களுக்கும், இது முடிவல்ல; ஆரம்பம்தான் என்பதை நம்புங்கள். இன்னும் நிறைய படிகள் உள்ளன. அதில் முதல் படியில் நாம் இருக்கிறோம். மனம் தளராமல் அடுத்த அடியை எடுத்து வையுங்கள். ஏதாவது ஒரு படியில் நிச்சயம் சாதிப்பீர்கள். மிக்க நன்றி ஐயா.
(அவர்களும் கதாநாயகர்களே #2)
களத்தில் யாரும் தோல்வியுற்றவர்கள் அல்லர்; வெற்றி என்பது கோப்பையைத் தூக்குபவன் கையில் மட்டும் அல்ல; எதிர்த்துப் போட்டியிட்டவன் கொடுத்த கடுமையான சவாலும்கூட காரணமாக அமையலாம். ஆகவே, இங்கு யாரும் தோற்கவில்லை. வெற்றி ஒத்திவைக்கப்பட்டிருக்கிறது. உம் முயற்சியில் நீ பலனைக் கண்டாய். எழுந்து வாருங்கள், நம் பயணம் இன்னும் முடியவில்லை. உங்கள் வீட்டிலும் இதுபோன்ற தன் நன்முயற்சிகளால் நல்ல தேர்ச்சிப் பெற்ற மாணவர்கள் உள்ளார்களா? உடனே முகநூல் வாயிலாகத் தொடர்பு கொள்ளவும். அவர்களைக் கதாநாயகர்களாக மாற்ற நான் தயார். Bahasa Tamil Upsr Balamurugan, Facebook.
நேர்காணல்: ஆசிரியர் கே.பாலமுருகன்