‘மரங்கொத்தியின் இசை’ சினிமா விமர்சன நூலை முன்வைத்து எழுத்தாளர் கே.பாலமுருகனுடன் நேர்காணல்

  • நேர்காணல்: பாண்டித்துரை, சிங்கப்பூர்

மோக்லி பதிப்பகத்தின் வாயிலாக லஷ்மி சரவணக்குமார் அவர்களின் முயற்சியில் இம்மாதம் வெளிவரவிருக்கும் மலேசிய எழுத்தாளர், சினிமா விமர்சகர் கே.பாலமுருகனின் மரங்கொத்தியின் இசை எனும் சினிமா விமர்சன நூலை முன்வைத்து இந்நேர்காணல் எடுக்கப்பட்டது.

  1. சிறுகதை, கவிதையிலிருந்து விலகி சினிமா சார்ந்த இந்தப் பத்திகள் எழுவதற்கான நோக்கம் என்ன?

கே.பாலமுருகன்: இலக்கியம் படைக்கத் துவங்கும் முன்பே 2004ஆம் ஆண்டுகளில் உலக சினிமாக்களால் ஈர்க்கப்பட்டிருந்தேன். கலை சார்ந்த சினிமாக்களை முதலில் பார்க்கத் துவங்கி அங்கிருந்து வாழ்க்கையின் மீதான என்னுடைய பார்வையும் மாறியிருந்தது. அந்த அனுபவத்தோடுதான் இலக்கியம் வாசிக்க வந்தேன்; படைக்கவும் தொடங்கினேன். ஆகையால், சினிமா ஒரு துவக்கப்புள்ளி என்பதால் அதனை நோக்கியே விரல்கள் அசைகின்றன. நண்பர்களின் தூண்டுதலால் ஜப்பானிய இயக்குனர் அகிரா குரோசவாவின் ‘ரஷ்மோன்’ தான் நான் முதலில் பார்த்த உலக சினிமாவாகும். அங்கிருந்து வாழ்வைத் தரிசிக்கும் மகத்தான ஓர் அகத்தூண்டல் என்னுள் ஊற்றெடுக்கத் துவங்கியது. அந்த ஊற்றைத் தாங்கிப் பிடித்து வடிக்கால் அமைத்துக் கொடுத்தது இலக்கியம் என்றே சொல்லலாம்.

 

2.மரங்கொத்தியின் இசையில் உள்ள கட்டுரைகள் திரையரங்கில் / பெய்டு இணையதளத்தில் பார்த்த திரைப்படங்களா?

கே.பாலமுருகன்: பெரும்பாலான படங்களை நான் திரையரங்கில் பார்க்கவே விருப்பப்படுவேன். திரையரங்கம் கொடுக்கும் அனுபவம் வேறானதாக இருந்தது. இத்தொகுப்பில் உள்ள பல உலக சினிமாக்கள் திரையரங்கில் வெளிவரவில்லை என்பதால் கடை கடையாக உலக சினிமாக்களைத் தேடி அலைந்த காலக்கட்டத்தில் நானே சேகரித்துக் கொண்டதாகும். இப்பொழுதும் அந்தப் பழக்கம் உண்டு. என்னுடைய சேகரிப்பில் குறைந்தது உலகின் பல மொழிகளில் இயக்கப்பட்ட அறுபதிற்கும் மேற்பட்ட முக்கியமான திரைப்படங்கள் உள்ளன. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஒளிப்பதிவாளர், எழுத்தாளர் செழியன் அவர்கள் சிங்கை வந்திருந்தபோது சில உலக சினிமாக்களை அவரிடமிருந்து பெற்றுக் கொண்டேன்.

 

3.நீங்கள் குறிப்பிட்டுள்ள தமிழ்த்திரைப்படங்கள் சமகாலத்தில் வெளிவந்த படங்களாக இருக்கிறதே?

கே.பாலமுருகன்: இத்தொகுப்பில் உத்தம வில்லன், காக்கா முட்டை, சாட்டை, யுத்தம் செய் போன்ற சில குறிப்பிட்ட படங்களைப் பற்றியே எழுதியுள்ளேன். சமகாலத்தில் பெருநகர் வாழ்க்கையினூடாக எழுந்து நிற்கும் சிக்கல்களை மையப்படுத்திய சினிமாக்களை மட்டுமே கவனப்படுத்தியுள்ளேன். இன்னும் விசாரணை போன்ற படங்களையும் அடுத்த நூலில் கவனிக்கலாம் என்றிருக்கிறேன். நான் தமிழில் தேர்ந்தெடுத்திருக்கும் இவ்வனைத்து படங்களும் கல்வி, கலை, வாழ்வியல், சமூகவியல் என பலத்தரப்பட்ட கோணங்களில் முன்வைத்து பேசப்பட வேண்டிய முக்கியமான திரைப்படங்களாகும்.

 

4. வெண்ணிற இரவுகள் தமிழகத் திரைப்படங்களிலிருந்து எப்படி அடையாளப்படுத்தபட்டுள்ளது?

 கே.பாலமுருகன்: பிரகாஷ் ராஜாராம் இயக்கிய ‘வெண்ணிற இரவுகள்’ மலேசியத் தமிழ் சினிமாச்சூழலின் புதிய துவக்கம் என்றே சொல்லலாம். மலேசிய வாழ்வின் ஆழத்தைக் கவனிக்கும் விமர்சன அணுகுமுறை இருக்கும் படைப்பாளிகளால்தான் மலேசியத்தனமிக்க படைப்பைக் கொடுக்க முடியும். அவ்வகையில் மலேசிய வாழ்க்கையைக் காட்ட முனையும் போக்கில் எந்தத் தமிழ்நாட்டு சாயலும் இல்லாமல் படைக்கப்பட்ட நேர்மையான படைப்பாகவே ‘வெண்ணிற இரவுகள்’ புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது.

5.கவனம் பெறக்கூடிய மலேசிய முழு நீளத் திரைப்பட ஆக்கம் தொடர்ந்து நடைபெறுகிறாதா?

கே.பாலமுருகன்: மலேசிய சினிமா என்கிறபோது மலாய், சீன, தமிழ் சினிமாவோடு இணைத்துதான் அதன் வருகையையும் அடைவையும் ஒப்பிட்டே பேச வேண்டியுள்ளது. இதுபோன்று தொடர்ந்து மலேசியாவில் சீன, மலாய் என வருடத்திற்கு இருபது படங்களுக்கு மேலாக வெளிவருகின்றன. குறிப்பாக விழா காலங்களில்தான் இப்படங்கள் திரைக்கு வருகின்றன.

 

6.மலேசிய தமிழத் திரைப்படங்களுக்கான உலகளாவிய சினிமா  பார்வையாளர்களிடம் எந்த அளவில் வரவேற்ப்பு     உள்ளது?

 கே.பாலமுருகன்: யஸ்மின் அமாட், அமீர் போன்றவர்கள் மலாய் சினிமாவின் ஆளுமைகளாக அறியப்பட்டதோடு அவர்களின் படங்கள் உலகத் திரைப்பட விழாக்களில் கவனமும் பெற்றுள்ளன. யஸ்மின் அமாட் அவர்களின் திரைப்படமான செப்பேட் 2009ஆம் ஆண்டிலேயே உலகத் திரைப்பட விழாக்களில் சிறப்பான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. அமீர் அவர்களின் ‘கடைசி கம்யூனிஸ்ட்’ என்கிற ஆவணப்படம் மலேசியாவில் தடை செய்யப்பட்டாலும் உலகப் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது என்றே சொல்ல வேண்டும். அதே போல சீன சினிமாக்களும் தொழில்நுட்ப ரீதியிலும் கதைத் தேர்வுகளிலும் பல மாற்றங்களை அடைந்துள்ளது என்றே சொல்லலாம். 2015ஆம் ஆண்டில் வெளிவந்த ‘The journey’ திரைப்படம் மலேசிய சினிமா வசூலில் புதிய சாதனையை செய்துள்ளது. பொதுமக்களின் கவனத்தை அதிகமாக ஈர்த்ததோடு மாபெரும் வெற்றியும் அடைந்திருக்கிறது. சீனக் கலாச்சார வாழ்வைக் காட்டியிருப்பதோடு அதனை உடைத்து மீறி வெளிப்பட முடியும் என்ற சாத்தியத்தையும் படம் பேசுகிறது. அதே இயக்குனரின் ‘ஓலா போலா’ திரைப்படமும் தேசிய ரீதியில் ஒற்றுமையைக் கட்டியெழுப்பிய மலேசியப் படமாகக் கடந்தாண்டு கொண்டாடப்பட்டது. மேலும், சஞ்சய் பெருமாள் இயக்கத்தில் வெளிவந்த ‘ஜகாட்’ திரைப்படமும் திரையாக்க ரீதியில் மலேசியச் சினிமா துறையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. இப்படி மிகவும் சொற்பமான படங்களே தரமாக இயக்கப்பட்ட முழு நீளப் படங்கள் என சொல்லலாம்.

 

6.தமிழக சினிமா குறித்து பலரும் அறிமுகப்படுத்தியிருக்கும் போது நீங்கள்  கூடுதலாக மலேசியா, சிங்கப்பூர், இலங்கை சினிமா குறித்து எழுதியிருக்கலாமே?

கே.பாலமுருகன்: இத்தொகுப்பை உலக சினிமா தொடராகவே வெளியீடத் திட்டமிட்டிருந்தேன். ஸ்பானிஷ், ஈராக், மலேசியா, இந்தியா என இத்தொகுப்பில் என் இரசனையை ஒத்திருந்த சில படங்களை முன்வைத்து புதிய உரையாடல்களைத் துவக்கி வைத்துள்ளேன். இதுவரை மலேசியாவில் கவனித்தக்கதாக விமர்சிக்கப்பட்ட பல சினிமாக்களுக்கு முழு நீள விமர்சனம் எழுதியிருக்கிறேன். குறிப்பாக, யஸ்மின் அமாட், சஞ்சய், பிரகாஷ், கார்த்திக் எனப் பலரின் திரைப்படங்கள் குறித்து விரிவான விமர்சனங்கள் எழுதியிருக்கிறேன். அவையனைத்தையும் மலேசியத் திரை விமர்சன நூலாகத் தொகுக்கலாம் என்கிற திட்டம் இருக்கிறது. இலங்கை, சிங்கப்பூர் திரைப்படங்களைத் தேடிக் கொண்டிருக்கிறேன். விரைவில் அதனைச் சேகரித்து வெவ்வேறு காலக்கட்டங்களில் அதன் விமர்சனங்களை எழுதும் எண்ணமும் உண்டு.

 

7.இந்தப் புத்தகம் மலேசிய சினிமாச் சூழலில் கவனிக்கப்படுமா / பேசப்படுமா?

கே.பாலமுருகன்: மலேசியாவில் முக்கியமான திரைப்பட இயக்குனர்கள் குறிப்பாக இளைஞர்கள் இலக்கியத்தைப் பொருட்படுத்தக்கூடியவர்களாகவே இருக்கிறார்கள். அவர்களுடன் நல்ல நட்பும் உண்டு. ஆகவே, அவர்களின் மத்தியில் இத்தொகுப்பு நிச்சயம் கவனம் பெறும் என நினைக்கிறேன். மேலும், என் சினிமா விமர்சனங்களுக்கென்று ஒரு சிறிய வாசகர் கூட்டம் உண்டு. என்னிடம் விமர்சனம் கேட்டுவிட்டு படம் பார்க்கச் செல்லும் இனிய நண்பர்கள் இருக்கவே செய்கிறார்கள். உலக சினிமா பார்வையுடைய என் இரசனையின் மீது அவர்களுக்கு நம்பிக்கை உண்டு.

 

8.தொடந்து உலக சினிமா குறித்து எழுதிக்கொண்டிருக்கும் உங்களை மலேசிய சினிமா சூழலில் இணைந்து பணியாற்ற அழைக்கிறார்களா?

 கே.பாலமுருகன்: அப்படியொரு வாய்ப்பு அமைந்ததில்லை. ஆனால், சில இயக்குனர்கள் என் சினிமா விமர்சனங்களைக் கவனப்படுத்தி பேசியதுண்டு. சஞ்சய், பிரகாஷ், ஷான் போன்ற இளம் இயக்குனர்கள் அவர்களின் திரைப்படங்கள் குறித்த விமர்சனங்களை எழுதக் கேட்டதும் உண்டு. சினிமாவில் என் இடம் அவ்வளவுத்தான். நான் அடிப்படையில் புனைவெழுத்தாளன். ஆகவே, நான் சினிமாவைப் பொறுத்தவரை விமர்சகனாகவே இருக்க விரும்புகிறேன்.

 

9.இந்தப்புத்தகத்தை பதிப்பத்தார் தெரிவு செய்ததன் காரணம்? மோக்லி பதிப்பத்தின் மூலம் வெளியிடுவதால் வாசகர்களைச் சென்றடையலாமா?

கே.பாலமுருகன்: நண்பர் லஷ்மி சரவணக்குமார் அவர்களின் பதிப்பகமே இத்தொகுப்பைக் கொண்டு வருகின்றது. லக்ஷ்மி மலேசிய இலக்கிய நண்பர்களோடு நல்ல நட்பில் இருக்கிறார். அவருடைய இலக்கிய முன்னெடுப்புகள் மீது மிகுந்த நம்பிக்கையும் ஆர்வமும் உள்ளன. மேலும், மொக்லி பதிப்பகத்தின் வாயிலாக பல வாசகர்களைச் சென்றடையக்கூடிய திட்டங்களையும் அவர் கொண்டிருக்கிறார்.