ரங்கூன் – ஒரு பர்மா அகதியின் துரோகமிக்க வாழ்வு

 

இவ்வாண்டின் மிகச் சிறந்த படைப்புகளில் இப்படம் நிச்சயமாகச் சேரும். 1980களின் இறுதியில் பர்மாவிலிருந்து பஞ்சம் பிழைக்க வந்த ‘பர்மா அகதிகளின்’ ஒரு குறுங்கதை. அகதிகளின் வாழ்வை மிகச் சொற்பமாகப் பேசிச் சென்றாலும் திரைக்கதை ஒரு பர்மா இளைஞனின் வாழ்வில் சுற்றி நிகழும் துரோகம், இழப்பு, நட்பு, வஞ்சமிக்க தருணங்கள், குற்றங்கள் என யதார்த்தப்பூர்வமாகப் பதிவாகியுள்ளது.

முதலில் பின்னணி இசை, ஒளிப்பதிவு, ஒப்பனை, கலை ஆகிய பகுதிகளைப் படத்தின் மையக்கதையோடு வைத்துச் செதுக்கிய கலைஞர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தே ஆக வேண்டும். ஒரு படத்தின் அசலான வெளிப்பாட்டுக்கு இவையாவும் எத்தனை தூரம் துல்லியமான பங்களிப்புகளைச் செய்யும் என பல படங்களுக்குப் பிறகு ‘ரங்கூன்’ படத்தில் காண்கிறேன்.

மேலும், பஞ்சம் பிழைக்க வரும் அகதிகளில் இளைஞர்களை மட்டும் தன் அரசியலுக்கும், கடத்தல்களுக்கும், குற்றவியல் காரியங்களுக்கும் பயன்படுத்தி அவர்களின் இரத்தத்தை உறிஞ்சிம் முதலாளிய அத்துமீறல்களையும் இப்படம் பதிவு செய்துள்ளது. இத்தனை சமூக பொறுப்புணர்வுமிக்க இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமிக்கு மண்னின் கலைஞன் என்றே அடையாளப்படுத்தலாம்.

கௌதம் கார்த்திக் அவர்களுக்குச் செய்யப்பட்டிருக்கும் ஒப்பனை அவரை ஒரு பர்மா அகதியாகவே கொண்டு வந்து சேர்த்துள்ளது. அவரின் தலைமுடி, தோற்றம், நிறம் என அனைத்திலும் பர்மாவின் வெய்யில் படர்ந்திருக்கிறது. சினிமா என்பது ஒரு கூட்டு முயற்சியின் விளைவு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டியுள்ளது. அதில் பணியாற்றும் ஓர் ஒப்பனை கலைஞனுக்கும் கதையின் ஆன்மா புரிந்திருக்க வேண்டும்.

– கே.பாலமுருகன்