படைப்புகளை மறுகண்டுபிடிப்பு செய்வதே விமர்சனம் – பாகம் 1

 

sundra-ramasamy

08.11.2001 – ஆம் நாளில் தினமணியில் அசோகமித்திரன் எழுதிய ‘பொருந்தாத அளவுக்கோல்கள்’ எனும் கட்டுரையைப் படித்த சுந்தர ராமசாமி அதே தினமணி பத்திரிகையில் மிகவும் வெளிப்படையாக அசோகமித்ரனின் அக்கட்டுரையை மறுக்கிறார். ஆனால், அவர் அத்தகைய சூழலை அணுகும் விதத்தை நாம் கவனிக்க வேண்டும்.

“தினமணியில் அசோகமித்ரன் எழுதிய ‘பொருந்தாத அளவுக்கோல்கள்’ எனும் கட்டுரையைப் படித்தேன். அவர் முன்வைத்துள்ள எந்தக் கருத்தையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மாறுப்பட்ட என் கருத்துகளை இங்கே முன் வைக்கிறேன்” என தன் கட்டுரையைத் துவங்குகிறார். இருவரும் தமிழின் மிக முக்கியமான படைப்பாளிகள். ஒருவர் படைப்பை இன்னொருவர் மறுக்கும் உரிமையும் மறுக்கப்பட்டதன் காரணங்களை முன்வைக்கும் பொறுப்பையும் பொதுவெளியைக் கலங்கடிக்காமல் கையாண்டுள்ளார்கள். இத்தனை காலம் இலக்கியம் வாசிக்கும், படைக்கும் நாம் நமது முன்னோடிகளிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டிய அனுபவம் இதுவாகத்தான் இருக்க வேண்டும் என நினைக்கிறேன். இருவரும் நினைத்திருந்தால் ஆளுக்கொரு பக்கம் நின்று இதனைத் தமிழ் வெளியில் நீண்டதொரு சர்ச்சையாக்கி அதற்குள் பலரை இழுத்துப் போட்டு, அவர் பக்கம் நால்வரை நிற்க வைத்து மோதவிட்டு, இவர் பக்கம் ஐந்துபேர் நின்று வக்காளத்து வாங்கி அக்காலக்கட்டத்தின் இலக்கிய நகர்ச்சியையே வீணடித்திருக்க முடியும்.

ஜெயமோகன் வம்புகள் நிறைந்த சூழலில் வாசிப்புக் குறைந்துவிடும் என ஒருமுறை சொல்லியிருக்கிறார். வம்புகளை விட்டு நாம் படைப்பை நோக்கி விவாதிக்கும் ஆரோக்கியமான விமர்சன முயற்சிகளுக்குள் வர வேண்டும். ஒரு படைப்பை நோக்கிய உரையாடலும் உரையாடலில் முன்வைக்கப்படும் மதிப்பீடுகளும் கறாராக இருக்க வேண்டும். அதன் அவசியத்தை நாம் மறுக்க இயலாது. ஆனால், விமர்சனத்தின் வேர் சிறந்த படைப்பை அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்க வேண்டும்; ஒரு படைப்பிலுள்ள கலைக்குறைப்பாடுகளை நோக்கி வாசக சூழலை இழுத்துச் செல்வதாக இருக்க வேண்டும். ஒரு படைப்பைத் திறந்து காட்ட வேண்டும். அதனுள் இருக்கும் தேக்கத்தைச் சுட்டிக் காட்டி இலக்கியத்தின் தீவிரத்தை உணர்த்துவதாக இருக்க வேண்டும்.

விமர்சனம் என்றால் என்ன? மலேசிய சிங்கை இலக்கிய அகராதியைப் புரட்டினால் விமர்சனம் என்பதற்குப் பாராட்டு, துதிப்பாடுதல், ஒத்திசைத்தல் என்று எழுதப்பட்டிருக்கக்கூடும். தீவிர நவீன இலக்கிய அகராதியைப் புரட்டினால் விமர்சனம் என்பதற்குத் தனிமனித தாக்குதல், முகத்திரையைக் கிழித்தல், பழிவாங்குதல், அடியோடு விரட்டியடித்தல் என்று பொருள் இருக்கலாம். நாம் கடந்து வந்த இலக்கியப் பரப்பை மீள்பார்வை செய்தால் இத்தனை காலம் நாம் விமர்சனக் கலையைக் கையாண்ட விதம் தெரிய வரும். இன்னொரு பக்கம் யாராவது நம் படைப்பை விமர்சித்தால் அதில் சூழ்ச்சி இருப்பதாகக் கருதுவதும் ஒரு வகையான சிக்கலே. எதிரி நம்மை விமர்சிப்பான்; நம் படைப்பை உதாசினப்படுத்திவிடுவான். விமர்சகன் என்பவன் நம்மை நீக்கிவிட்டு நம் படைப்பை விமர்சிப்பான்.

essay3

2008ஆம் ஆண்டில் பா.அ.சிவம் வல்லின நேர்காணலில் குறிப்பிட்ட ஒரு வார்த்தை இன்னமும் எனக்குள் இப்பொழுது கேட்டதைப் போன்றே ஒலிக்கிறது. “மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் எந்த எதிர்வினைக்கும் தயார் இல்லை”. அந்த எதிர்வினை, படைப்பை நோக்கியதாக இருந்தால் ஏன் அதற்கு அத்தகைய எதிர்ப்பைக் காட்டித் தடுக்க வேண்டும்? விமர்சனம் எத்தனை காத்திரமாக இருந்தாலும் அது படைப்பை நோக்கி அக்கறையுடனும் தேர்ந்த தேடலுடனும் இருந்தால் அதனை ஆரோக்கியமானதாகக் கருதி வழிவிட்டால் மட்டுமே இந்த நாட்டில் இலக்கியம் தேங்கிய நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு வளரும்.

விமர்சனம், இரசனை விமர்சனமாக இருந்தாலும் திறனாய்வாக இருந்தாலும் அதன் நிலைப்பாடு என்னவாக இருக்கும், அல்லது படைப்புச் சூழலுக்கு அதனால் என்ன நன்மை என்றெல்லாம் நாம் பேசலாம். ஆனால், இரண்டை மட்டும் மிக முக்கியமாகத் தவிர்க்க வேண்டும். ஒன்று, விமர்சனம் என்பதைப் பாராட்டு என நம்பியிருத்தல்; அடுத்து, கலைக்குக் கறாரான விமர்சனங்கள் இருக்கக்கூடாது என நம்புதல். அடுத்து, விமர்சிக்கும்போது படைப்பை விட்டு படைப்பாளியின் மீது பாய்தல்; அல்லது அவருடைய இயலாமைகளைக் கிண்டலடித்தல். ஓர் இலக்கியப் பரப்பில் இவை இரண்டையும் நாம் முற்றாக மறுத்தல் வேண்டும். அதனை மறுத்தப் பிறகே விமர்சனம் குறித்த உரையாடலுக்கு நம்மை நாம் தயார் செய்து கொள்ள முடியும்.

படைப்பிற்கும் விமர்சனத்திற்குமான தொடர்பு

‘பாரதியைப் புறக்கணித்த புலவர்கள் இருந்த இடம் இன்று தெரியவில்லை; ஆனால், பாரதி இன்றும் நின்று கொண்டிருக்கிறார்’

                                                                                – சுந்தர ராமசாமி

சிறந்த படைப்பின் இயல்பு காலத்தைத் தாண்டி நிற்பதாகும். அப்படைப்பின் மீது குறிப்பிட்ட ஒரு காலக்கட்டத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள், ஆய்வுகள், எதிரிவினைகள் அனைத்துமே அப்படைப்பு உருவாக்கிய அசைவுகளின் வெளிப்பாடுகள். அப்படைப்பு ஓர் உரையாடலைத் துவக்கி வைத்திருக்கலாம்; ஒரு வசவுக்கான சூழலை ஏற்படுத்தியிருக்கலாம்; எரிச்சலை உருவாக்கியிருக்கலாம்; கோபத்தைக் கிளறியிருக்கலாம்; அசூசையை ஏற்படுத்தியிருக்கலாம். படைப்பு ஒரு தருணத்தை உருவாக்குகிறது. அதில் பங்கெடுப்பவர்கள் விமர்சனம் செய்கிறார்கள்; அப்படைப்பை மறுக்கிறார்கள்; அப்படைப்பின் மீது வசையை எறிகிறார்கள்; அப்படைப்பைத் திறனாய்வு செய்கிறார்கள். இப்படி ஒரு படைப்பு சார்ந்து சமூகம் வெவ்வேறு வகையில் பங்கெடுத்துக் கொள்கிறது. ஆனால், படைப்பின் இயல்பு என்ன? அத்தருணங்களைத் தாண்டி தன்னை நிரூபித்துக் கொள்கிறதா அல்லது காலத்தால் மறக்கப்படுகிறதா? சிறந்த படைப்பின் இயல்பு கறாரான விமர்சன சூழல்களைக் கடந்து வருவதாகும். காலத்திற்கேற்ப தன் இலக்கியத் தேடல்களைப் புதுப்பித்துக் கொண்டு, வாழ்க்கை குறித்த விசாரணைகளை ஆழப்படுத்திக் கொண்டே வரும் படைப்பாளியின் கூர்மை அவன் படைப்பில் நிச்சயம் வெளிப்படும். ஒரு படைப்பே அப்படைப்பாளனின் இலக்கியத் தேடலுக்குச் சாட்சியாக வந்து நிற்கும். அதனைக் காலம் கண்டறியும்.

புதுமைப்பித்தன் பலரால் மறுக்கப்பட்டார்; புறக்கணிக்கப்பட்டார். ஆனால் அவருடைய படைப்புகள் காலத்தால் மறக்கப்படவில்லை; சுந்தர ராமசாமி அவர் இயங்கிய காலத்தில் விமர்சிக்கப்பட்டார், மறுக்கப்பட்டார். ஆனால், அதன் நிலைத்தன்மையைக் காலமே முடிவு செய்தது. அடுத்து வரக்கூடிய தலைமுறை அப்படைப்பை மறுகண்டுபிடிப்பு செய்யும். அப்படிச் செய்தால் அப்படைப்பு காலத்தையும் அக்காலத்தில் வைக்கப்பட்ட விமர்சனம், வசைகள், ஆய்வு என எல்லாவற்றையும் தாண்டி நிற்கிறது. ஒருவேளை, அடுத்து வரும் தலைமுறையும் ஒரு படைப்பை நிராகரிக்க நேர்ந்தாலோ அல்லது அதைப் பற்றிய சிறிய கவனமும்கூட காட்டவில்லையென்றாலும் அப்படைப்பின் நிலை அவ்வளவுத்தான். அவை நிரந்தரமான நிராகரிப்புக்கான அத்தனை தகுதியும் கொண்டிருப்பவை. மறுவாசிப்பிலும் தோல்வியுற்று காலத்தால் மறக்கப்படுகிறது. இப்படிப் பல படைப்புகளை உதறித் தள்ளிவிட்டு இங்கு வந்து சேர்ந்திருக்கிறோம்.

ஏன் விமர்சனம் எழுதப்படுகிறது?

pupi

விமர்சனம் என்பது ஒரு படைப்பு வாசகனுக்குள் உருவாக்கிய பாதிப்பின் விளைவு. வாசகன்/நுகர்வாளன் உணர்ந்த அவ்விளைவை எழுதிப் பார்க்கிறான்; எழுதி சொல்கிறான். அதுவே விமர்சனம் என்பது ஆரம்பக்கால நிலைப்பாடு. ஆனால், விமர்சனத்திற்கு ஒரு சமூக அக்கறை இருப்பதாகவும் அதன் பின்னர் உருவான தமிழ் இலக்கிய சூழல் கவனத்துடன் முன்வைக்கிறது. புதுமைப்பித்தனின் படைப்புலகம் ஆய்வு நூலில் புதுமைப்பித்தன் வாழ்ந்த காலத்தில் அவருடன் ஒத்துப்போன அவர் படைப்புகளை முக்கியமானதாகக் கருதியவர்கள்தான் அவருடைய படைப்புகளை விமர்சித்து எழுதியுள்ளார்கள். ஒரு படைப்பின் மீதான விமர்சனத்தை அவர்களுக்கு உவப்பில்லாதமுறையில் முன்வைத்த எவரையும் படைப்புலக ஆய்வில் சேர்த்துக்கொள்ளப்பட்டதில்லை என சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். விமர்சனம் என்பது ஒத்துப்போவது, ஏற்கனவே சொல்லப்பட்டதைத் திரும்பக் கூறுதல் என்கிற அளவிலான ஒரு புரிதல் உள்ளவரை விமர்சனம் எனப்படுவது முதுகைச் சொறிந்துவிடும் தன்னியல்பான நடவடிக்கையாக மட்டுமே புரிந்து கொள்ளப்படும்.

விமர்சனத்தின் நம்பகத்தன்மையும் இரசனை விமர்சனமும்

ஒரு படைப்பாளி வாழ்ந்து கொண்டிருக்கும் நிலத்தின் அரசியல், கலாச்சாரப் போக்கு, கல்வி நிலைப்பாடுகள், வாசிப்பின் பின்புலம், தத்துவ வரலாறு, இலக்கிய மரபு, அறிவுத்துறை முன்னேற்றம் போன்றவற்றை கொண்டே அந்நிலத்திலிருந்து எழுதப்படும் படைப்பின் கலையுணர்வுகளையும் அரசியல் வெளிப்பாடுகளையும் நிர்ணயிக்க முடியும்; அப்படி விமர்சிக்க முயல்வது ஓர் ஆய்வுத்தன்மைக்கான மொழிநடையை உருவாக்கும். இதுவே நம் விமர்சனத் தரத்தை உயர்த்தும். இரசனை விமர்சனத்தின் அடுத்தக் கட்டம்.

விமர்சனம் செய்வோரெல்லாம் ஆய்வுக் கட்டுரை எழுத சாத்தியமில்லை. அது கடுமையான உழைப்பையும் தொழில்முறை ஆய்வடக்கங்களையும் கோறக்கூடியது. ஆனால், விமர்சனம் செய்பவர்களின் விமர்சனக் கட்டுரையில் அவர்கள் கையாளும் மொழிநடை திறனாய்வுக்கான விருப்பு வெறுப்பற்ற மொழிப்பயன்பாட்டைக் கொண்டிருத்தல் ஆரோக்கியமான ஒரு முன்னெடுப்பை; உரையாடலை உருவாக்கும். அத்தகையதொரு விமர்சன மொழிக்கு பரந்தப்பட்ட வாசிப்புப்பழக்கமும், விரிவான தத்துவம், அரசியல், வரலாறு, உளவியல், இலக்கியப் பார்வையும் கொண்டிருக்க வேண்டியது அவசியமாகிறது. இல்லையெனில் அது ஆரம்பக்கட்ட இரசனை விமர்சனமாகவே நின்றுவிடும். ஆரம்பக்கட்ட இரசனை விமர்சனம் காலத்தால் நிற்காது. ஆனால், அதன் தேவையை நாம் மறுக்க இயலாது. அங்கிருந்துதான் ஒருவன் தன் விமர்சனப் பங்களிப்பைத் துவங்குகிறான். அது ஓர் உடனடி செயல்பாடு. காலம், நேரம், ஒழுங்கு என எதையுமே பொருட்படுத்தாது எழும். ஒரு சிறுகதையை வாசிக்க நேர்ந்தால், “சுந்தர ராமசாமி மாதிரி இருக்கா? அவர் மாதிரி எழுதணும்” என பிடிவாதமாக தன் வாசகப் பார்வையை முன்வைக்கும். இது மிகவும் ஆரம்பநிலையிலான விமர்சனப்போக்கு. இரசனை விமர்சனத்தின் மூலம் ஒரு படைப்பை நிரந்திரமாக மறுக்கவோ; நிறுவவோ இயலாது. இரசனை மாறுப்படக்கூடியது; நகரக்கூடியது. ஒன்று விமர்சகன் தன் வாசிப்பாழத்திலிருந்து மீண்டு தன் விமர்சன உத்தியை மேம்படுத்திக் கொண்டு நகர்கிறான். மற்றொன்று, ஒரு படைப்பாளி விமர்சனத்தையெல்லாம் கவனித்து உலக இலக்கியத்தின் நீரோட்டத்தில் தன் படைப்புகளின் நிலைகளைக் கண்டடைந்து தன் இலக்கியப் படைப்புகளைக் கூர்த்தீட்டுகிறான். இவையிரண்டும் சம்மாக வளர்ந்து முன்னகர வேண்டும். இல்லையேல் அங்கு இலக்கியம் தேங்கிவிடும்.

வையாப்புரி பிள்ளையின் மீது மிக மோசமான வசவுகளையும் தூற்றுதல்களையும் உருவாக்கிய புலவர்களின் வாரிசுகள் பின்னர் அவரை மறு ஆய்வு செய்ய வேண்டும் எனக் கூறுவதாக சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார். இதற்குக் காரணம் இரசனை காலம்தோறும் நகர்ந்து அடையும் இடம் வெவ்வேறானவை. ஆனால், இரசனையிலிருந்து ஒரு விமர்சகன் மேலெழுந்து விமர்சனத்தின் அடுத்த நிலைக்காக உழைக்க வேண்டும். அதன் முதற்கட்டம் விமர்சனத்தில் நாம் பயன்படுத்தும் மொழியிலிருந்து துவங்குகிறது. இலக்கியத்தை விமர்சிக்க முற்படும் அனைவருமே ஒட்டுமொத்த விமர்சனத்தையே தொழில்முறையிலான திறனாய்வாக எழுத முடியாது. ஆனால், திறனாய்வு முன்மொழியும் மொழியை அவர்கள் பழக முடியும்.

ஒரு படைப்பின் மீதான வாசகப் பார்வையையோ/ விமர்சனத்தையோ/ இரசனை விமர்சனத்தையோ யார் வேண்டுமென்றாலும் வைக்கலாம். அதில் குறுக்கிட எவ்வித நியாயமும் யாருக்கும் இல்லை. அது தனிமனித தாக்குதலாக மாறும்வரை ஒரு விமர்சகனை நாம் கேள்விக் கேட்க இயலாது. இரண்டாம் உலகப் போர் விட்டுச் சென்ற சூன்யத்தின் தாக்கத்தின் விளைவிருந்து மதம், கடவுள், பாவப்புண்ணியங்கள் எனப் பலவகையான சமூகம் கட்டமைத்து வைத்திருந்த அனைத்தின் மீதும் சந்தேகவாதம் பரவத் துவங்கி கலை இலக்கியங்களிலும் ஒரு தாக்கத்தை உண்டு செய்தது. ஆகவே, அப்பொழுது தோன்றிய பல விமர்சகர்கள் கடுமையாகப் படைப்புகளை மறுத்து எழுதத் துவங்கினர். நேரடிப் பிரச்சாரங்களை முன்னெடுக்கும் படைப்புகள் மீதும், மதம், சாதியம், மேட்டுக்குடித்தனமிக்க படைப்புகளின் மீதும் விமர்சனங்கள் கடுமையாகச் சாடி பேசத் துவங்கின. ஆனால், அவையாவும் தனிமனித சாடல்களின் மீது கவனம் கொள்ளாததாலே அங்கு இலக்கியம் தீவிரமாக வளர்ந்தது.

விமர்சனம் என்பது நாம் படைப்பைத் தாண்டி படைப்பாளன் மீது பாயும்போது சற்று முரணான விளைவை உண்டாக்கும். படைப்பை விமர்சிக்க எல்லாம் உரிமையும் உள்ள நமக்கு அப்படைப்பையொட்டி படைப்பாளன் மீது கிண்டல் தொனியில் விமர்சனத்தை முன்வைப்பதில் எவ்வித உரிமையும் இல்லை. அல்லது அதற்குப் பெயர் விமர்சனம் என சொல்லிக்கொள்ளத் தேவையில்லை. இது எத்தனை வலிமையான கறார்த்தனமிக்க இலக்கிய மதிப்பீடாக இருந்தாலும் நாம் பேசும் வாழ்வியலுக்கு எதிரான ஒரு சூழலை உருவாக்கிவிடுகிறது. நிற்க. படைப்பின் மீது அவரவர் இரசனை, வாசிப்பு, மொழியறிவு, உலக ஞானம், இப்படிப் பல பின்புலத்தின் அடிப்படையில் விமர்சனம் வைக்க எல்லோருக்கும் உரிமை உண்டு என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

இரசனை விமர்சனத்தின் அடுத்த நிலை

இரசனை விமர்சனத்தின் அடுத்த நிலை அவ்விமர்சனத்தை முன்வைக்கும் விமர்சகரின் இலக்கியப் பார்வையின் மீது குவிகிறது. அடுத்து, அவர் வாசித்த நூல்கள், வாசித்த இலக்கியங்கள், உலக இலக்கியங்களின் பரிச்சியம், என விரிந்த பரப்பில் வைத்துத் தீர்மானிக்கப்படுகிறது; புறந்தள்ளவும் படுகிறது. இரசனை விமர்சனத்தின் நம்பகத்தன்மையும் இதுவே. ஆனால், தமிழில் சிறந்த எழுத்தாளர்கள், சிறந்த படைப்புகள் என ஒவ்வொரு காலத்திலும் எல்லோரும் விமர்சித்து வந்துள்ளார்கள். அசோகமித்ரன், அ.முத்துலிங்கம், பிரபஞ்சன், சு.வேணுகோபால், வண்ணதாசன், ஜெயமோகன் ஆகியோரை என் மனத்திற்கு நெருக்கமான சிறுகதையாளர்கள் என என்னால் சொல்ல முடியும். இத்தகையை ஒரு கருத்தை நான் முன்வைக்க எது காரணமாக இருந்திருக்கும்? ஒன்று காலம்தோறும் இவர்களைப் பல எழுத்தாளர்கள் நல்ல இலக்கியவாதிகள் என முன்வைத்திருக்கிறார்கள். இயல்பாகவே தமிழில் வாசிக்கத் துவங்கும் ஒருவர் இதுபோன்ற இரசனை ரீதியிலான பரிந்துரைகளைக் கடந்துதான் தனக்கான ருசியை உருவகித்துக் கொள்ள முடியும். அடுத்து ஒரு வாசகனாக நான் என் தேடலை இலக்கியம் என்கிற விரிந்த பரப்பில் துரிதப்படுத்திக் கொள்ளும்போது அடையும் ஒரு புரிதல். இவையிரண்டும் தமிழில் வெளியான சிறந்த படைப்புகளை நோக்கி என்னைத் தள்ளுகிறது. அதன்பால் உருவான வாசிப்பனுபவம், இலக்கியப் புரிதல் எனக்குள் ஓர் இரசனையை உருவாக்குகிறது. அது எனக்கு வெறுமனே கிடைத்த ஒரு புரிதலன்று. அதன் பின்னணியில் இருக்கக்கூடிய வாசிப்பு சார்ந்து உழைப்பும், தேடலும், உரையாடல்களும் ஆதாரமாக இருக்கின்றன. அத்தகையதொரு இரசனையை முன்வைத்தே இன்றைய படைப்புகளின் இலக்கியப் போதாமைகளைப் பொதுவெளிக்கு வந்து சேரும் படைப்பின் மீது வைக்க நேரிடுகிறது. அதுவே இரசனை விமர்சனமாக மாறுகிறது.

dsc00081
சுந்தர ராமசாமி ஜெயமோகனின் படைப்புகளில் கலைக்குறைபாடுகள் உள்ளன எனத் தன் இலக்கியப் பார்வையைக் கொண்டு நிராகரிக்கிறார். அதே போல, ஜெயகாந்தனின் சிறுகதைகளிலும் கலைக்குறைபாடுகள் உள்ளன என மறுக்கிறார். இன்று ஜெயமோகன் இன்னொரு படைப்பாளியைச் சிறுகதையே எழுதவில்லை என மறுக்கிறார். எல்லோரும் எல்லாம் காலக்கட்டத்திலும் ஒருவரையொருவர் மறுத்த வண்ணமே இருக்கிறார்கள். இத்தகைய மறுப்புக்குக் காரணம் அவர்களிடம் உருவான இலக்கியம் சார்ந்த மதிப்பீடுகளும் இரசனைகளுமே. மேலும், அவர்களின் இரசனை என நான் சொல்வது வெறுமனே தன் விருப்பு வெறுப்பு சார்ந்து கட்டமைக்கப்பட்டவை அல்ல. மாறாக, உலக இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள் போன்றவற்றை வாசித்து, தேடலை முன்னெடுத்து இன்றைய இலக்கிய சூழல் வந்து சேர்ந்திருக்கும் ஊற்றில் தூர்வாறி ஒரு விமர்சகன் அக்கறையுடன் கண்டடையும் இடத்தையே இரசனை என வகுத்துக் கொள்ளலாம். ஆனால், அவை ஒரு நேர்மையான வாசகனால் அடுத்த நிலைக்கு அக்கறைமிக்க விமர்சனமாக முன்னெடுத்துச் செல்லப்படுகிறது.

விமர்சனத் துறையில் நாம் செல்ல வேண்டியத் தூரம் இன்னும் இருக்கிறது என நம்புபவன் நான். நான் எழுதும் பல சிறுகதைகளில் நான் கலை நிறைவை அடைந்துவிட்டேன் என்கிற நம்பிக்கை எனக்கு வந்ததில்லை. அப்படி நான் சிறந்த சிறுகதை எழுதிவிட்டேன் என்கிற எண்ணம் தோன்றிவிட்டால் அடுத்த கணமே நான் சிறுகதை பயணத்தை முடித்துவிட்டேன் என அர்த்தமாகிவிடுகிறது. நாமே நமது தேடலை முடித்துக் கொண்டோம் என அர்த்தமாகிவிடும். வாழ்க்கைக்கும் இலக்கியத்திற்குமான இடைவெளியை உடைப்பதே அப்படைப்பில் இருக்கும் அரசியல் தெளிவும் கலையுணர்வும்தான் என நினைக்கிறேன். அதனைக் கொண்டு மேலும் படைப்பைச் செதுக்கும் பணியை நாம் ஓயாமல் செய்து கொண்டே இருக்க விமர்சனம் தேவையாக இருக்கிறது. விமர்சனம் நம் படைப்புகளை உடைத்து சமூகத்தின் முன் வைக்கிறது; படைப்பை ஆராய்கிறது. விமர்சனம் ஒரு படைப்பை பொது மனிதனின் பார்வைக்குக் கொண்டு செல்கிறது. மீண்டும் மீண்டும் ஒரு படைப்பை வாசிப்பதற்கான தூண்டுதலை உருவாக்குகிறது. ஒரு பொதுவெளிக்குள் புரிதலுக்கான சாத்தியங்களைத் திறந்துவிடும் வேலையை விமர்சனம் செய்கிறது.

அத்தகையதொரு விமர்சனம் கையாளும் மொழியானது அறிவைத் தாக்கி தாக்கத்தை உண்டு செய்யும் ஒரு விமர்சனமொழியாக இருத்தல் வேண்டும். அப்படியொரு விமர்சன மொழியைத்தான் நாம் பயில வேண்டும். ஒரு கலை உலுக்கலைச் சாத்தியப்படுத்த கடுமையான மொழி படைப்பின் மீது முன்வைப்பதை மறுக்க வேண்டியதில்லை. ஆனால், அது படைப்பைத் தாண்டி படைப்பாளனைச் சிறுமைப்படுத்துவதாக இல்லாமல் இருப்பது சிறப்பு.

மலேசியாவின் விமர்சனப் போக்கு

இந்நிலையில் மலேசியாவில் விமர்சனப் போக்கு எப்படி உள்ளது என்பதை நாம் சீர்தூக்கிப் பார்ப்பது சிறப்பு. பெரும்பாலான நூல் வெளியீடுகளில் தங்களுக்கு உகந்த தன் மீது நல்ல அபிப்பிராயம் கொண்டுள்ள தான் கேட்டுக் கொண்டால் அதற்கிணங்க ஒத்துப்பாடுபவர்களையே நூல் விமர்சனத்தை முன்வைக்க அழைக்கப்படுகிறார்கள். அவர்கள் பெரும்பாலும் இலக்கியப் பின்புலமற்றவர்களாக இருப்பதும் கவனத்திற்குரியவை. அவர்கள் மேடை நாகரிகம் கருதி, ஒரு நூலையும் அதிலுள்ள படைப்புகளையும் விமர்சிக்காமல், புகழ்ந்து மட்டும் ஒருவரை மிகச் சிறந்த படைப்பாளியாக நிறுவுகிறார்கள். நூலாசிரியர்கள் அவர்களுக்குக் கிடைக்கும் அந்த மேடை பாராட்டையே காலம் முழுக்க ஒரு முகவரியாகச் சுமந்து கொள்கிறார்கள். ஒருவேளை அவர்களுடைய படைப்புகள் பொதுவில் விவாதிக்கப்படும்போது அவருக்கு மேடையில் கிடைத்த விமர்சனம் என்கிற பாணியில் அவர் மீது ஏற்றப்பட்ட பாராட்டுகளைக் கொண்டு தன்னைக் தற்காத்துக் கொள்ள முயல்கிறார். இது ஒருவகையில் அவருக்கான தேடலைச் சுருக்கிவிடும் என்றே நினைக்கிறேன். ஒவ்வொரு விமர்சகனும் ஒரு படைப்பை நோக்கி ஓர் உரையாடலைத் துவக்கி வைக்கிறான். ஒரு நுகர்வாளனாக அவன் அப்படைப்பின் மீது தனக்கு ஏற்பட்ட அனுபவங்களைச் சொற்களாக்கி விவாதிக்கிறான். ஒருவகையில் விமர்சனம் படைப்புக்கலைக்கான உந்து சக்தியாகவே கருதுகிறேன். ஆனால், விமர்சனம் என்பது பாராட்டுமட்டுமல்ல என்பதைப் படைப்பாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

மலேசியாவில் ஒரு படைப்பை விமர்சகன் அதன் இலக்கிய போதாமைகளைச் சுட்டிக்காட்டி கடுமையாக விமர்சிக்க நேர்ந்தால் என்ன ஆகும் என்று சிந்திக்கும் போது பின்வரும் விளைவுகளை பட்டியல் இடலாம்.

• முதலாவதாக அந்த விமர்சகன் படைப்பின் எதிரியாகக் கருதப்படுவான்.
• அவனுடனான உறவு துண்டிக்கப்பட்டுவிடும்.
• பதிலுக்கு அவன் மீதும் அவன் ஒழுக்கம், கல்வி தகுதி, குடும்பம், வாழ்க்கைத் தரம் என இன்னும் பலவற்றின் மீதும் எதிர் தாக்குதல் நடத்தப்படும்.
• அவன் மீது வன்முறை செலுத்தப்படலாம்.
• கடுமையான தனிமைக்குள்ளாக்கப்படுவான்.
• பொதுநிகழ்ச்சிகளில் பங்கெடுப்பதிலிருந்து புறக்கணிக்கப்படுவான்.
• அவனுடைய அலுவலகத்திற்கு அவன் மீதான புகார் கடிதங்கள் அனுப்பப்படும்.
• அவனுடைய வாழ்வாதாரத்தைப் பறிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும்.
• அவனுடைய முகநூலை ‘ஹேக்’ செய்யும் முயற்சிகள் நடக்கும்.
• அவன் மீது காவல்துறையில் புகார்கள் செய்யப்படும்.

– கே.பாலமுருகன், (28 செப்டம்பர் 2016),
– மறு ஆக்கம்: 08.10.2016

அடுத்தப் பாகத்தில் கா.நா.சு-வின் ‘விமர்சனக் கலை என்கிற நூலை முன்வைத்து மேலும் விமர்சனக் கலைக்கும் இலக்கியத்திற்குமான ஒரு சிறிய புரிதலை/உரையாடலை நோக்கிப் பயணப்படலாம்.