குற்றம் கடிதல்: ஒரு மன்னிப்பின் முன்னே மண்டியிடுதல்

201509221241228976_tamil-new-movie-in-kutram-kadital-preview_SECVPF

‘குற்றமே பகையாக மாறலாம்’ என்கிற தெளிவான கருத்துடன் சமூகத்தை நோக்கி விரிகிற குற்றம் கடிதல் படம் பள்ளிக்கூடங்களில் இழைக்கப்படும் குற்றங்களுக்கான மையப்புள்ளியைத் தேடி விரிவாக முனைந்துள்ளது என்றே சொல்லலாம். தற்கால சூழலில் இயங்கி வரும் பள்ளிக்கூடங்கள் என்பது அடுத்த தலைமுறை சந்ததியை உருவாக்கி வெளியே அனுப்பும் தொழிற்சாலை என்பதைப் போல பல தமிழ் சினிமாக்கள் காட்ட முனைந்திருக்கின்றன. டோனி, சாட்டை, நண்பன் போன்ற படங்களைக் குறிப்பிட்டு சொல்லலாம். ஆனால், குற்றம் கடிதல் எவ்வித மாற்றுக் கருத்தையோ அல்லது எதிர்ப்பையோ விளம்பரப்படுத்தவில்லை. நேராகப் பள்ளிக்கூடத்தில் நுழைந்து வகுப்பறையில் ஓர் ஆசிரியரும் மாணவனும் சந்திக்கும் புள்ளியில் குற்றம் எப்படி இழைக்கப்படுகிறது என்பதைக் காட்டிவிட்டு நகர்கிறது.

ஒரு சினிமா உருவாவதன் பின்னணியிலுள்ள நிகழ்வு, புனைவு என இவ்விரண்டையும் ஆய்வாளர் அ.ராமசாமி ‘ஒளிநிழல் உலகம்’ எனும் தன் சினிமா கட்டுரை நூலில் விரிவாக்க் குறிப்பிட்டுள்ளார். நான் அதனை விமர்சனப்பூர்வமான பார்வையுடன் அணுகி பார்க்கிறேன். எல்லா சினிமாக்களும் ஒரு நிகழ்வை மையப்படுத்தி புனைவொன்றை உருவாக்குகிறது. புனைவு அப்படத்தின் நிகவோடு ஒட்டியும் அல்லது ஒட்டாமலும் போக வாய்ப்புண்டு. நிகழ்வு என்பது சமூகத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவையாக இருக்க அதனைச் சுற்றி புனைவுகள் கட்டியெழுப்பப்படுகின்றன. ஆகவே, ஒரு திரைப்படத்தின் மையமான நிகழ்வும் அதன் தொடர்ச்சியான புனைவுகளும் ஒரு படத்தை உண்மைக்கு மிக நெருக்கத்தில் கொண்டு போய் வைப்பதாக இருக்க வேண்டும் என அ.ராமசாமி குறிப்பிடுகிறார்.
நிகழ்வும் புனைவும்

குற்றம் கடிதல் படம் உருவாக்க முனையும் நிகழ்வு என்பது ஓர் ஆசிரியர் அடித்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்த மாணவனின் பாலியல் தொடர்பான அறியாமையைச் சகித்துக் கொள்ள முடியாமல் அறைந்துவிடுகிறார். இச்சம்பவம்தான் படத்தின் நிகழ்வு. இதனையொட்டியே கதை மேற்கொண்டு நகர்கிறது. மொத்த படத்தையுமே தொய்வின்றி பரப்பரப்புடன் நகர்த்த இயக்குனர் அந்த வகுப்பறை நிகழ்வை உருவாக்குகிறார். குற்றம் கடிதல் படத்தின் புனைவு என்றால் மெர்லின் குற்றம் இழைத்தவுடன் நிகழ்வு நடந்த இடத்திலிருந்து துரத்தியடிக்கப்படுகிறாள்; அம்மாணவனின் தாயிடமிருந்தும் அவனுடைய சமூக மக்களின் கோபத்திலிருந்தும் தப்பித்து ஓடுகிறாள் என்பதே ஆகும். பிரம்மா படத்தின் மூலம் சொல்ல நினைத்த கருத்துடன் மற்ற அனைத்து சம்பவங்களும் மையத்தைவிட்டு விலகாமல் ஈடு கொடுத்துக் கதையை முன்னெடுத்துச் சென்றிருக்கின்றன.

இப்படத்தில் மெர்லின் எனும் ஆசிரியர் குற்றம் இழைப்பதற்குக் காரணமாக இருப்பது பள்ளிக்கூடங்களில் கவனப்படுத்தப்படாமல் இருக்கும் பாலியல் குறித்தான புரிதலின்மையே ஆகும் என இயக்குனர் சமூகத்தின் முன் குற்றச்சாற்றாக வைக்கிறார். இக்கருத்தைத் தாங்கிக் கொண்டே படம் மெர்லின் அம்மாணவனை அறையும் சம்பவத்தை உருவாக்குகிறது. அது வெறும் தண்டனை மட்டுமல்ல. வகுப்பறைகளில் எத்தனையோ தண்டனைகள் இன்று வழக்கத்தில் இருக்கின்றன. நாற்காலியின் மீது ஏறி நிற்க வைத்தல், தரையில் முட்டியிடப் பணித்தல், புத்தகத்தைத் தலையில் கவிழ்த்து நிற்க வைத்தல், திடலைச் சுற்றி ஓட வைத்தல், அறைதல், பிரம்பால் அடித்தல், காதைப் பிடித்துத் திருகுதல் எனச் சொல்லிக் கொண்டே போகலாம். ஆனால், இத்தண்டனைகளின் பின்னணியில் பெரிதாக ஒன்றும் இருக்காது. அதுவொரு சம்பவமாகக் கடந்து சென்றுவிடும். வீட்டுப்பாடங்கள் செய்யாமைக்கான ஒரு தண்டனை அவ்வளவே. ஆனால், குற்றம் கடிதல் படத்தில் மெர்லின் வழங்கும் தண்டனைக்குப் பின்னணியாக இருப்பது ஓர் ஆசிரியரும் மாணவனும் பாலியல் தொடர்பான புரிதலில் வேறுப்பட்டு நிற்பதுதான்.

படம் முன்னெடுக்கும் விவாதம்

2015ஆம் ஆண்ற்கான சிறந்த படம் என்கிற தேசிய விருதை வென்ற ‘குற்றம் கடிதல்’ பாலியல் கல்வி எனும் ஒரு மைய இழையை பிடித்துக் கொண்டு இச்சமூகத்தின் எளிய மனிதர்களாய் இருக்கும் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் கல்வியையும் விவாதித்துள்ளது. தற்போது வெளிவரும் பெரும்பான்மையான சினிமா எதையும் விவாதிப்பதில்லை. ஆனால், எல்லாவற்றையும் விமர்சிக்கவும் தீர்ப்பு வழங்கவும் தயாராக இருக்கின்றன. குற்றம் கடிதல் கல்வி உலகை விவாதிக்க முயல்கிறது. படம் முடிவடையும்போது தீர்ப்பை நம் கையில் விட்டுச் செல்கிறது. சமூகத்தையும் கல்வியையும் விமர்சிக்கவும் விவாதிக்கவும் ஒரு பார்வையாளனை அப்படம் தயார் மட்டுமே படுத்துகிறது. அதற்கான அனுபவத்தை அப்படத்திலிருந்து அவன் பெறுகிறான். ஒரு சினிமா தன் பார்வையாளனுடன் கொள்ளும் உறவு அவனுக்குத் தொடர்ந்து சிந்திக்கவும் முடிவு எடுக்கவும் ஓர் இடைவெளியை விடுவதாக இருக்க வேண்டும். மூன்று மணி நேரம் அவனுடைய மூளையைக் கழற்றி வைத்துவிட்டு அடிமையாக்கும் நிலைக்கு ஆளாக்கக்கூடாது. இன்று மாஸ் கதாநாயகர்களின் படம் தன் பார்வையாளனைச் சிந்திக்க விடுவதில்லை. அவனுக்கு எது மகிழ்ச்சி; அவனுக்கு எது தேவை என்பதை அப்படமே முடிவு செய்து தீர்ப்பை மட்டும் வழங்குகிறது.

குற்றம் கடிதல் நம்மை விவாதிக்கத் தூண்டும் சினிமா. வழக்கமான சினிமாத்தனங்களைத் திணித்து நம்மை முடக்காமல் ஓர் அறிவார்ந்த நிலையில் விவாதிக்க வேண்டிய ஒன்றை உடைத்து எளிமையாக்கி பாமரனும் சிந்திக்க வழிவிடுகிறது. இத்தன்மைக்காகவே அப்படத்திற்குத் தேசிய விருது கொடுத்தமைக்கு மகிழ்கிறேன். கதையோட்டத்தில் வெளிப்படும் சின்ன விசயம்கூட பார்வையாளனுக்குப் புரிந்துவிட வேண்டுமென்று எளிமையான காட்சிப்படுத்துதலின் வழி அல்லது வசனங்களின் வழி கதையை நகர்த்தியுள்ளார்கள்.

இரண்டு வகையான விவாதங்களைப் படம் தூண்டிவிடுகிறது. அவை இரண்டும் நவீன சமூகம் கருத்தில் கொள்ள வேண்டியதாகும். ஒன்று இதுவரை தமிழ் சினிமா அதிகம் கவனப்படுத்தத் தவறிய பாலியல் கல்வி குறித்தான ஒரு கருத்தாடல். பாலியல் சிக்கல்கள் பற்றி தமிழ் சினிமா விவாதித்தைவிட பாலியல் தொடர்பான அபத்தான தீண்டல்களை முன்னெடுத்ததுதான் அதிகமாகும். பெண்ணுடலை ஒரு மலிவான நுகர்வுப்பொருளாகக் காட்டியே பழக்கப்பட்ட தமிழ் சினிமா பாலியல் தொடர்பான சிக்கல்கள்களையும் அதன் தொடர்ச்சியான உடல் சார்ந்த வன்முறைகளை ஆங்காங்கே சில படங்களில் கவனப்படுத்தியுள்ளது. வழக்கு எண் 18/9, நான் மகான் அல்ல, பருத்தி வீரன் போன்ற சில படங்களில் பாலியல் தொடர்பான சிக்கல்கள் ஓரளவிற்குக் கவனமாகக் கதைக்குள் மறைத்து வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

குற்றம் கடிதல் அதனை நேரடியான விவாதமாகக் கதைக்குள் புகுத்துகிறது. மெர்லின் தன் திருமணம் முடிந்து பள்ளிக்கு வருகிறார். அப்பொழுது பள்ளியின் ஆசிரியர் அறையில் அமர்ந்திருக்கும் ஆசிரியர்களுக்கிடையே பாலியல் கல்வி ஆரம்பப்பள்ளியில் அவசியமா என்கிற விவாதம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஒரு பெண் ஆசிரியர் ஆசிரியர்களாகிய நாம்தான் பாலியல் கல்வியை முறையான போதனையின் மூலம் மாணவர்களிடம் கொண்டு போக முடியும் என வாதிடுகிறார். ஆனால், பள்ளியில் பணியாற்றும் மூத்த ஆசிரியர் பாலியல் கல்வி இப்பொழுது அவர்களுக்கு அநாவசியம் என மறுக்கிறார். பிஞ்சியிலேயே பழுத்துவிடும் இவர்களுக்குப் பாலியலை நாமே சொல்லிக் கொடுத்தால் அபத்தமாகிவிடும் என முறையிடுகிறார். அதற்குப் பிறகு படம் சட்டென கதைக்குள் நுழைந்து நகர்கிறது. பள்ளியில் நடந்த பாலியல் தொடர்பான அவ்விவாதங்கள் கதைக்குள் ஒரு சாதாரண சம்பவமாக மட்டுமே வந்தாலும் தொடர்ந்து கதைக்கு வலுக்கொடுத்து முன்னகர்த்துகிறது. ஒரு பார்வையாளன் அதனைப் பொருட்டாகக் கருதிவிடாமல் போய்விடக்கூடாது என்பதற்காகவே தெளிவாகப் படத்தின் தொடக்கத்திலேயே ஆசிரியர்கள் பாலியல் கல்வியின் தேவை குறித்துப் பேசுவதைப் போன்ற காட்சியை இயக்குனர் படமாக்கியுள்ளார்.

வகுப்பறையில் நடந்த சமபவம்

ஆசிரியர் மெர்லினிடம் மாணவி ஒருத்தி செழியன் வகுப்பு மாணவிக்குப் பிறந்தநாள் வாழ்த்தைச் சொல்லி முத்தம் கொடுத்துவிட்டதாகப் புகார் கூறுகிறாள். அதனைக் கேட்ட மெர்லின் செழியனை அழைத்து அப்படியெல்லாம் பெண்களுக்கு முத்தம் கொடுக்கக் கூடாது என அறிவுரைக்கிறார். ஆனால், செழியன் உங்களுக்குப் பிறந்தநாள் என்றாலும் நான் முத்தம் கொடுப்பேனே எனச் சொல்கிறான். செழியன் அப்படிக் கூறியதும் வகுப்பிலுள்ள மொத்த மாணவர்களும் சிரிக்கிறார்கள். முத்தம் அத்தனை ஆபாசமானதா? அல்லது ஓர் ஆசிரியருக்கு முத்தம் கொடுப்பேன் என மாணவன் ஒருவன் சொல்தற்குப் பின்னணியில் என்ன அபத்தம் இருந்துவிடப் போகிறது?

எல்லாமே புரியாமை, அல்லது புரிதலில் உள்ள சிக்கல் என்றே அடையாளப்படுத்த வேண்டும். உடனே கோபப்பட்டு மெர்லின் செழியனை அறைய ஏற்கனவே தலையில் பிரச்சனை இருந்த செழியன் மயங்கி சுயநினைவை இழக்கின்றான். அதன் பிறகு மெர்லின் குற்றவாளியாகக் கதைக்குள் நிறுத்தப்படுகிறாள். அவள் அறைந்ததால்தான் அவன் சுயநினைவை இழந்தான் என்பது உண்மை இல்லை என நிரூபிக்கப்பட்ட போதும் மெர்லின் தானாகவே வந்து ஒரு மாணவனைத் தண்டிப்பது குற்றம் என ஒப்புக் கொள்கிறார். ஆனால், மெர்லினின் அந்தக் கடைசி காட்சி வசனம், படம் முன்னெடுக்க நினைத்த ஆழமான கருத்தை விட்டு சட்டென விலகி நிற்க வைக்கிறது. பாலியல் தொடர்பான புரிதலில் வகுப்பறையில் ஏற்பட்ட சிக்கல்தான் குற்றம் கடிதல் தனக்குள் வைத்திருக்கும் கல்வி உலகம் கவனிக்க வேண்டிய கருத்தாடலாகும். ஆனால், மொத்த உழைப்பையும் போட்டு நகர்ந்த படம் இறுதி காட்சியில் ஓர் ஆசிரியருக்குத் தாய்மை வேண்டும்; மாணவர்களை அடிக்கக்கூடாது என்கிற வழக்கமான அறிவுறுத்தலுக்கு இடைவெளிவிட்டுச் செல்வதாக நான் நினைக்கிறேன்.

ஒரு பொது பார்வையாளன் பாலியல் தொடர்பான கல்வி ஒரு மாணவனுக்கு அவசியம் என இப்படத்தின் மூலம் புரிந்து கொள்ள அக்கடைசி காட்சி இடையூறாக இருப்பதாக உணரப்பட்டாலும் குற்றம் கடிதல் இக்காலக்கட்டத்தின் அவசியமான சினிமாவாகும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. செழியனை அடித்த பிறகு அங்கிருந்து பள்ளித்தலைமை ஆசிரியரால் வெளியூருக்கு அனுப்பப்படும் மெர்லின் தான் செய்த குற்றத்தை நேருக்கு நேர் சந்திக்கத் தயாராகிறார். சட்டென பேருந்துலிருந்து இறங்கி அவளும் அவளுடைய கணவனும் லாரியில் ஏறி மீண்டும் செழியன் சேர்க்கப்பட்டிருக்கும் மருத்துவமனைக்கு வருகிறார்கள். அதுவரை தகித்துக் கொண்டிருந்த செழியனின் அம்மாவின் ஆழ்ந்த சோகமும் கோபமும் மெர்லினின் குற்ற உணர்ச்சியும் பயமும் இக்காட்சியில் ஒன்றுக்கொன்று சந்திக்கின்றன. அங்கொரு ஆர்பாட்டமும் தண்டித்தலும் நடக்கப் போகிறது என அழுத்தமான அனுமானங்களை உருவாக்கும் அக்காட்சி அதற்கு நேர்மறையாக நின்று மெர்லின் செழியனின் தாயின் மடியில் விழுந்து அழுவதாக முடிகிறது. சத்தமில்லாமல் ஒரு மன்னிப்பு அங்கே நடந்துவிடுகிறது. புரியாமைலிருந்து மீண்டு வந்து செழியன் கொடுப்பதாகச் சொன்ன முத்தத்திற்குப் பின்னணியில் உள்ள தாயுணர்வை மெர்லின் கண்டடைகிறாள்.

தான் இழைத்துவிட்ட குற்றத்திலிருந்து தப்பிக்க நினைப்பதும் ஓட நினைப்பதும் நமக்கே பாதமாகிவிடும். குற்றத்தைத் தைரியமாகச் சந்திப்பதும் மன்னிப்பின் முன்னே மண்டியிடுதலும் மனிதாபிமானத்தை உருவாக்குகிறது. குற்றம் கடிதல் படம் பல எளிய மனிதர்களின் கதை. அவர்களுடன் பயணித்து மானுடத்திற்குத் தேவையான பல கருத்துகளைச் சிந்திக்க வைக்கிறது.

  • கே.பாலமுருகன்

(நன்றி: அம்ருதா டிசம்பர்)